18 ஜனவரி 2016

சிங்கை நேசன்




காரிருள் அகத்தில் நல்ல
  கதிரொளி நீதான், இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
  பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினை நாட்ட இந்த
   உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்சிற்பிறந்த
   பத்திரிக்கைப் பெண்ணே

என இதழ்களின் பெருமையினைப் பாடுவார் புரட்சிக் கவி பாரதிதாசன்.

      இருளில் மூழ்கிக் கிடக்கும் மனிதர்களுக்கு அறிவு ஒளியினை ஏற்றிவைக்கும் தன்மை வாய்ந்தவை இதழ்களாகும்.

      மக்களின் உணர்வினை அறிந்து, அதனை வெளியிடுவது இதழ்களின் நோக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். மற்றொன்று மக்களிடம் உணர்வுப் பூர்வமான எண்ணங்களை உருவாக்க வேண்டும். மூன்றாவதாக பொது மக்களிடம் இருக்கும் குறைகளையும் துணிச்சலாக எடுத்துரைக்க வேண்டும்.


      மகாத்மா காந்தி தனது சுய சரிதையில், இதழ்களின் நோக்கம் இவ்வாறாகத்தான் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

      நண்பர்களே, இன்று தினசரி இதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என மிகப் பெரும் எண்ணிக்கையில் இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன.

      ஆனால் முதன் முதலாக உலகில், இதழ் அச்சேறியது எப்பொழுது தெரியுமா?

      1609 ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஸ்ட்ராஸ் பெர்க் நகரில் இருந்து வெளி வந்த உறவு என்னும் இதழே, உலகின் முதல் அச்சு இதழாகும்.

      1622 இல் இங்கிலாந்தின் முதன் இதழான தி வீக்லி தோற்றம் பெற்றது.

      இந்தியாவைப் பொறுத்தவரை 1780 ஆம் ஆண்டுதான் முதல் இதழ் வெளி வந்தது. வங்காள கெஜட் என்பது இதன் பெயராகும்.

       தமிழைப் பொறுத்தவரை 1831 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மேகஸின் என்னும் இதழே தமிழின் முதல் இதழாகும்.

       இக்கருத்தில் மாறுபடுவோரும் உண்டு. 1812 ஆம் ஆண்டே தமிழில் மாத தினச் சரிதை என்னும் இதழ் வெளி வந்து விட்டது என்று கூறுகிறார் திரு அ.மா.சாமி அவர்கள்.

        தமிழ் இதழ்கள் தமிழகத்தில் மட்டும் தோற்றம் பெறவில்லை. தமிழர்கள் இப் பூமிப் பந்தில் எங்கெல்லாம் வசித்தார்களோ, அங்கெல்லாம் தமிழ் இதழ்கள் மெல்ல, மெல்ல தோற்றம் பெறலாயின.

         இவ்வாறு தோற்றம் பெற்ற இதழ்களுள் முக்கியமானது சிங்கை நேசன் இதழாகும்.

சிங்கை நேசன்

     சிங்கப்பூரின் மிக முக்கிய இதழாகத் திகழ்ந்த பெருமை இவ்விதழுக்கு உண்டு.

     27.6.1887 முதல் 23.6.1890 வரை மூன்றாண்டுகள் மட்டுமே, இவ்வார இதழ வெளிவந்த போதிலும், இவ்விதழ் சாதித்த சாதனைகள் ஏராளம், ஏராளம்.

     சிங்கை நேசன் என்னும் பெயருக்குக் கீழே, ஓர் திருக்குறள்.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு

    இதுமட்டுமல்ல, வாசகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க, தலையங்கத்திலேயே, இக் குறளுக்கானப் பொருளும், இக்குறளின் சிறப்பும் இலக்கிய நயம்பட எடுத்துரைக்கப் பட்டுள்ளது.

    சிங்கப்பூரிலே தமிழ் பாஷை பேசும் பல சாதியார் அனேகர் இருந்தும், மற்றைச் சாதியாரைப் போல், நாம் ஒரு பத்திரிக்கை யில்லாதிருப்பது ஏன்?

    முன்னர் பத்திரிக்கைகள் வெளிப்பட்டும் மடிந்து போயின. ஆகவே இதுவும் அப்படித்தான் என்று சிலர் எண்ணுவார்கள். அவை மடிந்து போனதற்குக் காரணம், நம்முடைய விளம்பரத்தில் வெளிப்படுத்தி இருக்கிறோம்.

       இம்முறை பொது நன்மைக்குரிய விஷயங்களைப் பற்றிப் பிரசுரிக்கிறோமே யொழிய, தனித் தனி ஆட்களை இகழ்ந்தும், வீண் காரியங்கள் வெளிப்படுத்தப் படா.

       படித்தவர்களும், படியாதவர்களும் வாசிக்க விளங்கத் தக்க பாஷையில் எழுதி வருவோம்.

        எழுதிவரும் காரியங்கள், எவர்களையும் பிரியப் படுத்தவும், எழுப்பி விடவும் முயற்சி பன்னவும், சோம்பலினின்று விழிக்கவும் செய்யவே கூடியளவு பிரயாசப் படுவோம்.

       இதுவே சிங்கை நேசனின் நோக்கமாகும்.

       திருக்குறள், தலையங்கம், கடவுள் வாழ்த்து, சிங்கப்பூர் செய்திகள், இந்தியச் செய்திகள், இலங்கைச் செய்திகள், உலகச் செய்திகள், தந்திச் சமாச்சாரம், சமாச்சாரத் திரட்டு, விளம்பரங்கள், மார்க்கெட் சரக்கு விலை, நூலறிமுகம், பேங் நாணயம், கடிதம் போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாக சிங்கை நேசன், சிங்கப்பூரை வலம் வந்திருக்கிறது.

     சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்னரே நூலறிமுகம் என்னும் பகுதியை அறிமுகப்படுத்திய விதம் வியப்பளிக்கிறது.

      நண்பர்களே, இத்தகு பெருமை வாய்ந்த இதழினை, 130 ஆண்டுகளுக்கு முன்னமே வெளிக் கொணர்ந்தவர் யார் தெரியுமா?

சி.கு.மகுதூம் சாயபு

     இவர் இதழாசிரியர் மட்டுமல்ல, கவிஞர், கட்டுரை ஆசிரியர், பக்தி எழுத்தாளர், இலக்கிய ஈடுபாடு உடையவர், அங்கதச் சுவை நிரம்பியவர், இறை பற்று மிகுந்தவர் எனப் பன்முக ஆளுமை கொண்டவராக இருந்திருக்கிறார்.

      இதுமட்டுமல்ல 1872 லேயே தீனோதய வேந்திரசாலை என்னும் பெரும் அச்சகத்தை நிறுவி, அதனைத் திறம்பட நடத்தியும் வந்திருக்கிறார்.

அச்சினைக் கோர்வை செய்தவருள் மகுதூம்சாகிபு
வச்சிரக்கரத்தை நோக்கி வளம்பெரு மெடிட்டர்மார்கள்
அச்சமுற்ற டைந்தாரென்னில் ஆர்நிகர் கூடம்போல
மெச்சினேனின்னை நோக்கிமேன் சலாமுமக் குண்டாமால்

என மகுதூம் சாயபுவின் பெருமையினைப் போற்றுவார் செவத்த மரைக்காயர்.

     நண்பர்களே, நீங்க புருவம் உயர்த்தி வியப்பதும், உங்கள் மனதின் எண்ண ஓட்டமும் புரிகிறது.

   என்னடா இவன் திடீரென்று, சிங்கப்பூரின், சிங்கை நேசன் பற்றியும், அதன் நிறுவனர் மகுதூம் சாயபு அவர்களைப் பற்றியும் பேசுகுகிறானே, என யோசிப்பது புரிகிறது.


சி.கு.மகுதூம் சாயபுவும்
சிங்கை நேசனும் – ஓர்  ஆய்வு

என்னும் உன்னத நூல் ஒன்றினை, எனது சகோதரியின் கணவரிடமிருந்து, எனது அத்தானிடமிருந்து பெற்றேன்.

     


எனது அத்தான் புலவர் ப.திருநாவுக்கரசு அவர்கள், பல்லாண்டுகள் சிங்கப்பூரில் தமிழாசிரியராகத் திறம்படப் பணியாற்றியவர்.

       இவர் தமிழாசிரியர் மட்டுமல்ல, சிறந்த கவிஞர், செம்மை வாய்ந்த ஓவியர், சீரிய எழுத்தாளர், இராமலிங்க அடிகளாரின் நெறிகளைத் தன் வாழ்வியல் நெறிகளாகப் போற்றி வாழ்பவர், இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒப்பற்ற மனித நேயப் பண்பாளர்.

      

இவரது நெருங்கிய நண்பரான, சிங்கப்பூர் தமிழாசிரியர் முனைவர் கோட்டி திருமுருகானந்தம் அவர்களின் அயரா, தளரா உழைப்பின் பயனாய் இந்நூல் வெளி வந்துள்ளது.

        முனைவர் கோட்டி திருமுருகானந்தம் அவர்கள், தமிழகத்தின் செஞ்சிக்கு அருகில் உள்ள, பெருவளூர் என்னும் கிராமத்தைச் சார்ந்தவர்.

         தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் சென்று பணியாற்றும், தமிழாசிரியர்களுள் தனித் தன்மை வாய்ந்தவர்.

         தனக்குரிய கடமையான கற்றல் கற்பித்தல் பணியினை நிறைவேற்றுவதுடன், தீர்ந்தது தனது கடமை என்று முடங்காமல், சிங்கப்பூர் தமிழ் இலக்கிய ஆய்வில் நாட்டம் கொண்டு ஒல்லும் வகையான் எல்லாம் ஓயாது பல நூலகங்களின், நூற் கடலில் மூழ்கி, சிங்கப்பூர் இலக்கிய ஆய்வுக் களத்திற்குப் புதிய புதிய செய்திகளைத் திரட்டிச் சேர்த்தவர்.

       சிங்கப்பூர் தமிழ்க் கவிதைகள் ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்.

          சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூல் ஒன்றினையும் வெளியிட்டு, அதன் வாயிலாக, சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தின் தொன்மையை 1868 ஆம் ஆண்டிற்கு உரியதாக ஆதாரங்களுடன் நிரூபித்து ஆவணப் படுத்தியவர்.

        
சிங்கப்பூர் அமைச்சரிடமிருந்து இலக்கிய விருது பெறுகிறார் முனைவர் கோட்டி திருமுருகானந்தம்
இதுமட்டுமல்ல, சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாற்று அறிஞர்களே அறிந்திராத, கால ஓட்டத்தில் மறைந்து போன, 13 நூல்கள் பற்றிய விவரங்களை, அதன் அழிவில் இருந்து மீட்டு வெளிக் கொணர்ந்தவர்.

        பல்லாண்டுகளாக யார் கண்ணிலும் படாமல், சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் பேழைகளில், நுண் படச் சுருளாய் உறங்கிக் கொண்டிருந்த, சிங்கை நேசன் இதழ்களை, இன்று இவ்வுலகு முழுவதும் அறிந்திட, அறிந்து போற்றிட, மீண்டும் உலாவ விட்டிருக்கிறார்.

        இந்நூலினைப் படிக்கப் படிக்க, இது ஓர் ஆய்வு நூல் என்ற எண்ணமே, நம் உள்ளத்தில் இருந்து மறைந்து போய் விடும் அளவிற்கு, இந்நூலின் ஒவ்வொரு பக்கமும், நாவல் போல் நம்மை ஈர்க்கிறது.

          இந்நூலினை முழுமையாய் படித்து முடித்த பிறகு, நூற்றாண்டுகளுக்கு முன்னமே, சிங்கை நேசனின் சீரிய பணி, நம்மைப் பெருமை அடையச் செய்கிறது.

          ஆயினும் சிங்கை நேசனின் இதயத் துடிப்பாய், சுவாசக் காற்றாய் விளங்கிய மகுதூம் சாயபு அவர்களின் பரம்பரையே, உலகின் கண்களில் இருந்து, முற்றாய் மறைந்து போய் விட்டார்கள், காற்றோடு காற்றாய் கரைந்து போய்விட்டார்கள் என்பதை அறியும் போது, உள்ளம் கலங்கத்தான் செய்கிறது.

        மகுதூம் சாயபுவிற்கு பெண் குழந்தை பிறந்த செய்தியினை சிங்கை நேசன் இதழே தெரிவிக்கிறது.

சிங்கை நேசா, உன் எஜமானும், என் மாணாக்கனுமாகிய ஸ்ரீ சி.கு.மகுதூம் சாயபுக்கு 1889 வரு பிப்ரவரி மீ 12ந் திகதிக்குச் சரியான, ஜிஜரி வரு ஜமாத்தில் லாகர் மீ 11ந் செவ்வாய்க் கிழமை, காலை மணி 5 அளவில், ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்ததைக் கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷமானேன். அந்த பௌத்திரியும், புத்திரியும், புத்திரி புருஷராகிய ஸ்ரீ சாயபுவும், சகல சம்பத்துடனே நீடூழி காலம் வாழக் கடவுள் கிருபை செய்வாராக என சி.ந.சதாசிவ பண்டிதர் வாழ்த்தியுள்ளார்.

        சாயபுவிற்கு குழந்தைப் பிறந்திருக்கிறது, அவரது வம்சம் தழைத்திருக்கிறது என்பது தெரிந்தாலும், அவரது வாரிசுகள் இன்று எங்கிருக்கிறார்கள் என்பது யாரும் அறியாத செய்தியாகவே தொடர்கிறது.

        பல்வேறு தரவுகளின் மூலம், மகுதூம் சாயபுவின் பூர்வீகம், தமிழகத்தின் பொறையாறு என்பதனை, இந்நூலாசிரியர் திறம்பட நிரூபித்திருக்கிறார்.

        பொறையாறு சென்றும் ஊர் முழுதும் அலைந்து அலைந்து, அலசியிருக்கிறார். ஒரு முறை தனியாகவும், மறுமுறை எனது அத்தானுடனும், சென்று பொறையாறையே சல்லடை போட்டுச் சலித்திருக்கிறார்.

       ஆயினும் மகுதூம் சாயபுவின் வாரிசுகளைக் கண்டு பிடிக்க இயலவில்லை. காற்றோடு காற்றாக கலந்து போய்விட்டார்கள். இவ்வுலகின் பார்வையில் இருந்தே மறைந்து போய்விட்டார்கள்.

       மகுதூம் சாயபுவின் வாரிசுகள் மறைந்து போனாலும், முனைவர் கோட்டி திருமுருகானந்தம் அவர்களின் உன்னத உழைப்பால், மகுதூம் சாயபுவும், அவர் போற்றி வளர்த்த சிங்கை நேசனும், இன்று மீண்டெழுந்து, தமிழைப் போலவே, தலை நிமிர்ந்து கம்பீரமாய் நிற்கின்றார்கள்.

         தமிழ்கூறு நல்லுலகம், மகுதூம் சாயபுவின் பெருமையினையும், சிங்கை நேசனின் அயராத் தொண்டுகளையும், முனைவர் கோட்டி திருமுருகானந்தம் அவர்களின் தன்னலமற்ற சேவையினையும், இப்புவி சுழலும் காலம் வரை, உரத்து முழங்கிக் கொண்டே இருக்கும் என்பது உறுதி.

மகுதூம் சாயபு அவர்களைப்  போற்றுவோம்
முனைவர் கோட்டி திருமுருகானந்தம் அவர்களை வாழ்த்துவோம்.


சி.கு.மகதூம் சாயபுவும்
சிங்கை நேசனும் – ஓர் ஆய்வு
வெளியீடு
சமூக வளர்ச்சி மற்றும்ஆராய்ச்சி நிறுவனம்,
505, வேளச்சேரி முதன்மைச் சாலை,
தாம்பரம் கிழக்கு,
சென்னை – 59

விலை ரூ.590

முனைவர் கோட்டி திருமுருகானந்தம்,
Block 703, Yishun Avenue 5, # 07 – 250,
Singapore 760 703

Email: thiru560@hotmail.com