06 ஜனவரி 2016

இப்படிக்கு... கண்ணம்மா




ஆண்டு 2003. இரவு 11.00 மணி. தஞ்சாவூர், கரந்தையில் இருந்து அந்த வேன் புறப்படுகிறது.

    கரந்தைக் கடைத் தெருவில் வீற்றிருக்கும், மீனாட்சி அம்மனை வழிபட்டு, வேனின் நான்கு சக்கரங்களுக்குக் கீழேயும், எழும்பிச்சைப் பழங்களை வைத்து, வேனுக்குச் சூடம் ஏற்றி, தீப ஆராதனை செய்து, ஒரு சிதற் தேங்காயினையும் உடைத்து விட்டு, அனைவரும் வேனில் ஏறிப் புறப்பட்டனர்.

     மொத்தம் 12 பேர். அனைவருமே இருபது அல்லது இருபத்தியோரு வயது நிரம்பிய இளைஞர்கள்.


     வயதில் சிறியவர்கள் ஆனாலும், திருப்பதி சென்று வந்தால், வாழ்வில் திருப்பம் நிகழும், வாழ்வு வளம் பெறும் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன், திருப்பதி நோக்கிப் பயணிக்கிறார்கள்.

     வேன் செல்லச் செல்ல, நேரம் ஆக ஆக, அனைவரின் கண்களும் அவர்களை அறியாமலே ஓய்வெடுக்கத் தொடங்குகிறன.

      இருக்கையில் சாய்ந்தவாறு தூங்கத் தொடங்குகிறார்கள். ஒரு இளைஞன் மட்டும், அருகில் இருந்த நண்பனின் மடியில் தலை வைத்து, சிறிய இடத்திற்குள் கூனிக் குறுகி படுத்து உறங்குகிறார்.

      நாள் முழுக்கப் பணியாற்றிய அசதி. ஆம் இந்த இளைஞன் மட்டும் பணியில் இருப்பவர். அரசுப் பேருந்தில் நடத்துநர் பணி.

     ஓட்டுநராய் இருந்த இவரது தந்தை, தன் பணிக் காலத்திலேயே இறந்து போனதால், கருணை அடிப்படையில், நடத்துநர் பணியினைப் பெற்றவர்.

   இவருக்கு இரு சகோதரிகள். சிறு வயதிலேயே பணிக்குச் சென்று, சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைத்து, சொந்தமாய் ஒரு சிறு வீடும் கட்டியுள்ள பொறுப்பான இளைஞர்.

      இவர், நண்பரின் மடி மீது தலைவைத்து அசந்து உறங்க, வேன் இருளைக் கிளித்துக் கொண்டு பறக்கிறது.

      அதிகாலை 3.00 மணி. வேன் கடலூரை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

      சாலையில் இடது புறத்தில், ஓர் லாரி நிற்கிறது. பின்புற விளக்குகள் எதையும் எரிய விடாமல், இருளோடு இருளாய் ஓர் லாரி.

      வேனை அதிவேகமாக ஓட்டி வந்த ஓட்டுநர், மிக மிக அருகில் வந்ததும்தான் கவனிக்கிறார், இருளில் யானை போல் நிற்கின்ற லாரியை.

     வேகமாய் வண்டியை வலது புறம் திருப்புகிறார். இன்னும் 200 அடித் தொலைவிற்குமேல் இருக்கிறது வலது புறம் திரும்பி விடலாம், என்று எண்ணி வேகமாய் வலது புறம் திருப்புகிறார்.

     எதிர் திசையில் வேகமாய், அதிவேகமாய் ஓர் பேருந்து.

     பேருந்தில் நேருக்கு நேராய் மோதிவிடக் கூடாதே என்ற பயத்தில், ஓட்டுநரின் கரங்கள், தன்னிச்சையாய், வேனை மீண்டும் இடது புறம் திருப்புகின்றன.

     ஒரு நொடி, ஒரே நொடி, ஒரே நொடிதான், சாலையில் இடதுபுறம் நின்றிருந்த லாரியின் மீது, வேன் அதிவேகத்தில் மோதுகிறது.

     வேனில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. பயங்கர சத்தம். வேனில் இருந்த இளைஞர்கள் வேனுக்குள்ளேயே தூக்கி வீசப்படுகிறார்கள்.

     ஓட்டுநருக்கு இடது புறம் அமர்ந்து வந்த, இருபது வயதே நிரம்பிய ரமேஷ் என்னும் இளைஞர், உடல் நசுங்கி அங்கேயே, அப்பொழுதே இறந்து போனார்.

     மற்ற இளைஞர்களுக்கு கை, கால், முகம் என பலத்த காயம்.

     வேனில் நண்பனின் மடி மீது, தலை வைத்துப் படுத்து உறங்கியபடி வந்தாரல்லவா ஓர் இளைஞர், அவர் படுத்த வாக்கிலேயே தூக்கி வீசப்பட்டார்.
உடலெங்கும் பலத்த அடி.

     குறிப்பாக, அவரது முதுகின், தண்டுவடத்தின் டி5 மற்றும் டி6 என்னும் இரண்டு எலும்புகள் சுத்தமாய் நொறுங்கிப் போயின.

---

இப்படிக்கு..... கண்ணம்மா

    வித்தியாசமான நாவல் முயற்சி. சமூகத்தின் பல பின்புறங்களில் இருந்தும் சென்னைக்கு வந்து, தனித்து வாழும் நண்பர்களின் கதை.

     சம்பத், சந்துரு, திலக், சேகர், பிரபா என ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது.

     தஞ்சை வட்டாரத்தில் இருந்து ஐ.டி., வேலைக்கு வந்து சேரும் சம்பத். லாட்ஜ் நடத்தும் தந்தைக்கு மகனாக இஞ்சினியர் சந்துரு.

     பெருவிவசாயியின் மகனாய் பிறந்து, திரைப்பட ஆசையில், சென்னைக்கு வந்து சேர்ந்த திலக்.

    சிறு வயதில் பெற்றோரிடமிருந்து காணாமல் போய், கூர் நோக்கு இல்லம் மற்றும் வளர்ப்புப் பெற்றோர்களால் ஆளாகி, வேலைக்கு வந்து சேரும் பிரபா. இவர்களோடு அண்ணன், அண்ணியிடம் கோபம் கொண்டு பிரிந்து வந்து, விட்டேத்தியாக வேலையின்றித் திரியும் சேகர்.

    இவர்கள் எல்லோருமாக, எல்லோருக்குமாக வாழும் வீடு இன்குடில்.

     இவர்களைச் சுற்றிச் சுழலும் கதை.

     குறிப்பாக சம்பத்.

     துடிப்பான சம்பத். வசதியான சம்பத். இரு சகோதரிகள் அயல் நாட்டில், வசதியாய் வாழ, தந்தையும் தாயும் தஞ்சையில்.
    

சம்பத்திற்காகத் தாயும், தந்தையும் ஒரு பெண் பார்க்க, சம்பத்தோ முகநூலில் தன் காதலியைக் கண்டுபிடிக்கும் அற்புதமான, நெகிழ்வான தருணங்களால், விரைகிறது கதை.

ஹாய் உங்கள் கவிதை அட்புதம்.

     முகநூலில் தான் எழுதியிருந்த கவிதையைப் பாராட்டி, வந்த வாழ்த்துச் செய்தியை சம்பத் இயல்பாகத்தான் கடந்தான்.

      இருப்பினும், அட்புதம் என்று குறிப்பிட்டிருந்த பதம், எழுத்துப் பிழை என்று கடக்க விடாமல், அவனைத் திருப்பியது.

      வாழ்த்தியவரின் பெயரைப் பார்த்தான். டிலோனி டிலக்ஸி.

      ஆணா? பெண்ணா?

      அனுப்பியவரின் ப்ரொஃபைலைப் பார்த்தான்.

      பெண்.

      அதுவும் இலங்கையில் இருந்து.

      இப்படித்தான் தொடர்பு தொடங்கியது.



வெளியே மழை
உள்ளே நனைகிறேன்

லைக் வந்து விழுந்தது.

மழை பேசுகிறது
அது விழுந்து சிதறும்
பொருளின் துணைகொண்டு...

லைக் வந்து விழுந்தது.

வானம் பொழிந்தது
மழையையா ...?
நீரையா ....?

லைக் வரவில்லை. ஆனால் பதில் வந்தது

வானம்
பொழிந்தது
மழை நீரைத்தான்.

இப்படித்தான் தொடர்ந்தது. விளைவு....

உறங்க மறுத்து
உயிர்ப்புடன் உலவுகிறது
கண்கள்

என எழுதினான். சிறிது நேரம் யோசித்து, பின்னால்

நானே அறிந்திடாத
ரகசியம்தான்
என் கனவு

என மற்றொரு பதிவும் எழுதினான்.
பதிவும் தொடர்ந்தது, காதலும் வளர்ந்தது.

    கணினி வழி காதல் வளர்ந்த போது, ஒரு நாள், உன் மொபைல் நம்பர் குடேன் என்று செய்தி அனுப்பினான்.

நம்பர் வந்தது.

     கணினி போய், அலைபேசியில், குரலும் மனமும் கலந்து, காதல் தழைத்தோங்கியது.

     உன் படத்தை அனுப்பேன் என்றான். மின்னஞ்சலில் வந்த படம், நெஞ்சில் ஒட்டிக் கொண்டது.

   ஒரு நாள் டிலோனி சொன்னாள்,

   என்னோட கிறிஸ்டியன் நேம்தான், டிலோனி டிலக்ஸி. இந்த பேர் வீட்ல உள்ளவங்களைத் தவிர, வேற யாருக்கும் தெரியாது, பட் என்னோட பெயர் கண்ணம்மா. இதுதான் எல்லோரும் கூப்பிடும் பெயர்.

கண்ணம்மா, கண்ணம்மா, கண்ணம்மா

உள்ளம் உருகித்தான் போனான் சம்பத்.

---

     சம்பத்திற்கு கண்ணம்மாவிற்கு முன்னே, மனதில் ஒரு காதல் இருந்தது. ஆனால் அது பெண்மேல் அல்ல. பொருளின் மீது. ஒரு வண்டியின் மீது.

      டூ வீலர் வாங்கினா, யமஹா ஆர்.எக்ஸ். 100 தான் வாங்கனும். அதிலும் மெரூன் கலர்தான் வேண்டுமென, அந்த வண்டியின் மீது தீராத காதல்.

     தஞ்சையில் பள்ளியில் படிக்கும் போதே, தொடங்கிய காதல் இது.

     பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரி வாழ்க்கையும் முடிந்து, வண்டி வாங்குவதற்கான நேரம் வந்த பொழுது, அந்த மாடல் வண்டி நிறுத்தப் பட்டே பல வருடங்களாகி விட்டது.

     ஆனாலும் அந்த வண்டிதான் வேண்டும் என்றான் சம்பத்.

     எனவே ஒரு பழைய வண்டியைத்தான் வாங்கினான்.

      என் வண்டி, எனக்குப் பிடித்த வண்டி.
      

அன்றும் வழக்கம் போலத்தான், அலுவலகப் பணி முடிந்து, அதே யமஹாவில் கிளம்பினான்.

      வண்டியின் வேக முள் அறுபதுக்கும் எண்பதுக்குமாக ஆடிக் கொண்டிருந்தது. ஒரு பைக் ரேஸரைப் போலத்தான் வண்டியை ஓட்டினான்.

     சாலையின் இடது ஓரத்தில் நின்று கொண்டிருந்த, ஒரு காரின் கதவு திடீரென திறந்ததும், பேயடித்ததைப் போல் கண்கள் இருட்டிக் கொண்டது.

      வண்டியின் வேகத்தைக் குறைத்ததும், பிரேக்கை சட்டென மிதித்ததும் கூட தன்னிச்சையாகத்தான் நிகழ்ந்தது.

      இருந்தும் கூட, திடீரென்று திறக்கப்பட்ட காரின் கதவில் மோதி, டூ வீலரோடு சறுக்கிக் கொண்டே சென்றான். சறுக்கிக் கொண்டே சென்றவன் சாலையின் ஓரத்தில் இருந்த நடைப் பாதையில் மோதி விழுந்தான்.

     மோதிய வேகத்தில், காரின் கதவு, காரில இருந்து கழன்று, கரகரவென சுழன்றபடி, ரோட்டில் தேய்ந்து கொண்டே போய், விழுந்து கிடந்த சம்பத்தின் முதுகில் பலமாய் மோதி ஓய்வெடுத்தது.

     தலைக் கவசம் அவனது முகத்தை விட்டு விலகாமல் இருந்தது. மண்டையில் அடியில்லை என்றாலும்கூட அதிர்ச்சியில் உறைந்து போனான்.

     அவனைச் சுற்றிலும் எக்கச்சக்கமான கூட்டம். அவனது மொபைல் உட்பட, இன்னும பல பொருட்கள் அங்கும் இங்குமாய சிதறிக் கிடந்தன.

     கௌபாய் தொப்பியும், கூலிங் கிளாசும், டீ சர்ட்டுமாக குப்பை பொறுக்கும் ஒருவன், கீழே கிடந்த சம்பத்தின் மொபைலை எடுத்துப் பார்த்து, தன் பையில் போட்டுக் கொண்டு, எதுவுமோ நடக்காதது போல் சர்வசாதாரணமாக தன் நடையைத் தொடர்ந்தான்.

       சில நாட்கள் கடந்த நிலையில், சம்பத் மருத்துவ மனையில்தான் கண் விழித்தான்.

       சம்பத் கண் விழத்தபோது, அந்த அதிர்ச்சிச் செய்தி, அவனுக்காகவே காத்திருந்தது.

      முதுகு எலும்பின், டி5 மற்றும் டி6, அதாவது தொராசிக் 5 மற்றும் 6 என்ற எழும்புகள் சுத்தமாக நொறுங்கிப் போய்விட்டன.

       நொறுங்கிய எலும்புகள் ஒன்றொடு ஒன்று உரசி, மூளையில் இருந்து கிளம்பி, உடலின் அத்தனை பாகங்களையும் கட்டுப் படுத்தும் நரம்பை துண்டித்து விட்டன.

       எனவே சம்பத்தின் நெஞ்சு எலும்புகளுக்குக் கீழ் உள்ள பகுதி, செயலிழந்து விட்டிருந்தது. உணர்ச்சியற்ற இடுப்பு, உணர்வற்ற கால்கள்.

       இனி வாழ்வு முழுவதும் படுக்கையில்தான்.

---

      மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விட்டான் சம்பத். வீட்டின் ஓர் அறையில், கட்டிலே உலகமாகிப் போனது.

       சில நாட்கள் கடந்த நிலையில், கட்டிலில் படுத்திருந்த சம்பத், யாரோ தன்னை உற்று நோக்குவதை உணர்ந்து, தலையைத் திருப்பினான்.

      அடுத்த நொடி சிலையானான்.

      அவன் கண்ட காட்சியை அவனால் நம்பவே முடியவில்லை.

      கனவா, நினைவா.

      கணகளைக் கசக்கித்தான் பார்த்தான்.

      எதிரில் கண்ட காட்சி விலக மறுத்தது, கனவாய் கலைய மறுத்தது.

      மெல்ல மெல்ல அவன் மூளை சொன்னது, நீ காணும் காட்சி உண்மைதான்.

       எதிரில் கண்ணம்மா.

       இலங்கை கண்ணம்மா.

       சம்பத்தின் காதல் கண்ணம்மா.

       அமைதி, அமைதி அறையெங்கும் அமைதி.

       பேரமைதி சூழ்ந்து கொண்டிருந்தது சம்பத்தின் அறையை.

       பின் மெல்ல மெல்ல, கண்ணம்மாவின் கண்ணீர் தளும்பும் சத்தம், அந்த அறையை சிறிது சிறிதாய் நிரப்பத் தொடங்கியது.

       உண்மையில் கண்ணம்மாவுக்கும், சம்பத்துக்கும் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லைதான், தேவைப்படவும் இல்லைதான்.

     சத்தங்களற்ற வார்த்தைகளாலேயே, கணினியில் பேசிக் கொண்டவர்களுக்கு, வார்த்தைகளற்ற இந்த தருணம் ரொம்பவே துயரமாகத்தான் இருந்தது.

       மௌனமும் கண்ணீரும் வெளிப்படுத்திவிட முடியாத உணர்வை, வார்த்தைகள் கொண்டா பேசிவிட முடியும்.

        பின் மெதுவாய், நிதானமாய், தெளிவாய் கண்ணம்மாள் பேசினாள்.

எந்தச் சூழ்நிலையிலும், கைவிட மாட்டன் எண்டு நீங்கள் சொன்னீங்கள் தானே?

ஆமா ......ஆனா ..... இப்ப எப்டி.... என்னால்.....

நானும் எந்தச் சூழ்நிலையிலும் உங்களைக் கைவிட மாட்டன்.

      இருவரும் திருமணம் புரிந்து கொண்டனர்.

       செயற்றைக் கருவூட்டல் முறையில் கண்ணம்மாள் கருவுற்றார்.

     ஒன்றல்ல இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள்.
     இரட்டைக் குழந்தைகள். ஒரு ஆண். ஒரு பெண்.

      நிலாந்தன், நிறைநிலா

இப்படிக்கு ... கண்ணம்மா.

      நண்பர்களே, நூலைப் படித்து முடித்து வெகு நேரமாகிவும், புத்தகத்தை மூடத் தோன்றாத மனநிலையில் நான்.

---

      கடந்த 19.12.2015 சனிக் கிழமை மாலை, தஞ்சாவூர், பெசண்ட் அரங்கில்,





இப்படிக்கு ... கண்ணம்மா

நூல் வெளியீட்டு விழா.

     நண்பர் ராஜன் என்னை அழைத்திருந்தார்.

     அன்று பள்ளி அலுவல் நாள். சிறப்புப் பயிற்சி வகுப்புகள் முடிந்து, பள்ளியில் இருந்து கிளம்பவே மாலை 6.30 மணி ஆகிவிட்டது.

    நூல் வெளியீட்டு விழாவைச் சுத்தமாய் மறந்தே போனேன்.

    திங்கட்கிழமைதான் நினைவிற்கு வந்தது. அது முதல் மனதில் ஓர் உறுத்தல். மறந்து போனோமே என்ற வருத்தம்.

       நூலினை எழுதிய சிவக்குமார், கரந்தையில் வசிப்பவர். நாங்கள் கரந்தையில் வசித்த பொழுது, எங்களது வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் வசித்தவர்.

       சிவக்குமாரைப் பார்த்தே ஆக வேண்டும், பாராட்டியே ஆகவேண்டும், நூலினை வாங்கிப் படித்தே ஆக வேண்டும் என மனம் பரபரத்தது.

      சிவக்குமாரை அலைபேசியில் அழைத்தேன்.

      தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அருகில், தனது அக்கா வீட்டில் இருப்பதாகக் கூறினார்.

      இப்பொழுது நாங்கள் இருக்கும் வீட்டிற்கு அருகில், மிக அருகில்.

      உடனே புறப்பட்டு சிவக்குமாரின் சகோதரி வீட்டிற்குச் சென்றேன்.

      என்னை வரவேற்ற சிவக்குமாரின் சகோதரி, ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார்.

      அந்த அறையில், ஓர் நாற்காலியில், சிரித்த முகத்துடன் சிவக்குமார்.

      நெஞ்சுக் கூட்டிற்கும் கீழே, முழுமையாய் செயழ் இழந்த, உணர்விழந்த உடலுடன், சிவக்குமார் என்னை வரவேற்றார்.

       கடந்த 12 ஆண்டுகளாக, பாதி உடல் செயல் இழந்த நிலையிலும்,
பல வேடிக்கை மனிதரைப் போல்
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
என்று, வீறு கொண்ட மன உறுதியுடன் வாழ்ந்து வரும் சிவக்குமார்.

    சிறு வயதிலேயே தந்தையை இழந்த சிவக்குமார்.

    அரசுப் பேருந்தில் நடத்துநராய் பணியேற்று, தன் சகோதரிகளைத் தந்தைபோல் காத்து, கரையேற்றிய சிவக்குமார்.

      திருப்பதி ஏழு மலையானைத் தரிசிக்கப் புறப்பட்டு, பாதி வழியிலேயே, ஏழுமலையானுக்குத் தன் பாதி உடலையே காணிக்கையாய் கொடுத்த சிவக்குமார்.

       ஏழுமலையானே கைவிட்ட போதும், கலங்காத சிவக்குமார்.

      உடல் சோர்ந்து போய்விட்ட போதிலும், உள்ளத்தைத் தளரவிடாமல், கடந்த மூன்று வருடங்களாக, எழுதி, எழுதி, இழைத்து, இழைத்து உருவாக்கிய நூல்தான்,

இப்படிக்கு ... கண்ணம்மா

       என்னைப் பார்த்து, முகம் முழுவதும், அன்றலர்ந்த மலர் போல் சிரித்தபடி வரவேற்கிறார் சிவக்குமார்.
       

என்னால்தான் சிரிக்க முடியவில்லை.

        கரம் பற்றி அருகில் அமர்ந்தேன்.

        பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.

தான் வாழ நினைத்த வாழ்க்கையை, தான் கனவு கண்ட வாழ்க்கையை, எழுத்தால் எழுதி, மனதை நிரப்பிக் கொண்டாரோ.


ஒவ்வொரு வருடமாக என் வாழ்வை வாழ்கிறேன்
எதிர்காலத்தை நோக்கி, தளராத இதயத்துடன்
பரபரப்பின்றி, இலட்சியத்தை விட்டு அகலாமல்
மறைந்து போனவற்றிற்காகப் புலம்பாமல்

கடந்த காலத்தின் பயத்தில் பின்னடையாமல்
எதிர்காலம் அதை மறைக்கலாம் ஆனால் முழுமையான
சந்தோஷமான இதயத்துடன் இறுதியை அடையும்
இளமையிலும் முதுமையிலும் சந்தோஷத்துடன் பயணமாகும்.

எனவே வழி மலைமேல் ஏறட்டும், இறங்கட்டும்
கரடு முரடாக, வழுவழுப்பாக இருக்கட்டும்
பயணம் சந்தோஷமாக இருக்கும்
சிறுவனாக நான் தேடியதை, இன்றும் தேடுவேன்
எனக்கு வயதாகும், ஆனால், வாழ்வின் துடிப்பை இழக்க மாட்டேன்.
                                                    ஹென்றி வான் டைக்.



முடிவிலி வெளியீடு,                       நண்பர் திரு சிவக்குமார்,
கரந்தை,                                                      அலைபேசி 99 94 38 49 41
தஞ்சாவூர் -2 

விலை ரூ.200