25 மார்ச் 2016

மது விலக்கு நாயகர்
     ஆண்டு 1947, மார்ச் 23.

      தேர்தலில் வெற்றி பெற்று, மக்களின் மகத்தான ஆதரவுடன், அம்மனிதர் பிரதம மந்திரியாக பொறுப்பேற்ற நாள். நாட்டின் வரலாற்றில் ஒரு பொன்னாள்.

     பதவி ஏற்றவுடன் கட்சிக்காரர்களை அழைத்தார். உத்தரவு போட்டார்.

    பாராட்டு விழாக்கள் கூடாது, கூடவே கூடாது.


   அப்படியும் தொண்டர்களும், கட்சிக்காரர்களும் அழைக்கத்தான் செய்தார்கள்.

நான் அரசாங்கத்தை நடத்துவதா? இல்லை இம்மாதிரிக் கூட்டங்களில் கலந்து பேசிக்கொண்டே இருப்பதா? திடமாக மறுத்தார்.

       ஒரு முறை உயர் நீதி மன்ற நீதிபதியைக் கூட சந்திக்க மறுத்தார்.

    சந்திப்பதற்காக எழுதிக் கொடுத்த அனுமதிச் சீட்டில், சந்திக்க விரும்புவதன் காரணம் என்ற இடம் நிரப்பப் படாமலேயே இருந்தது. அதனால் தவறான சிபாரிசுக்காக வருகிறார் என முடிவு செய்து, அவரைச் சந்திக்க மறுத்தேன். அமைச்சர்களும் நீதிபதிகளும் மற்றவர் கடமைகளில் குறுக்கிடாமல் இருந்தால்தானே, அரசு இயந்திரம் செம்மையாக, நேர்மையாக இயங்கும்.

      மக்களுடைய நன்மைக்காகத்தான் நாம் பதவியில் இருக்கிறோம். பெரிய மனிதர்களுக்கும், நமக்கு வேண்டியவர்களுக்கும் சலுகை காட்டுவதற்கு அல்ல.

     எத்துனை நேர்மையான மனிதர்.

     இவர் பிரதம மந்திரியாக பொறுப்பேற்பதற்கு முன்னமே, ஒரு திடமான முடிவில் இருந்தார்.

மது விலக்கு.

     மது விலக்கினை அமல் படுத்தியாக வேண்டும்.

     மதுவின் பிடியில் இருந்து, நாட்டு மக்களை, போதையின் கரம் பற்றித் தள்ளாடும் இளைஞர்களை மீட்டே ஆக வேண்டும்.

     மதுவில்லா தேசமாக மாற்றிக் காட்டியே ஆக வேண்டும்.

      இப்படிப்பட்ட உயரிய மனிதர், மக்களின் மகத்தான ஆதரவுடன், பிரதம மந்திரியாகவும் ஆகிவிட்டார். பிறகென்ன.

      25 மாவட்டங்களைக் கொண்ட நாட்டில், எட்டு மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்கு, பெயரளவில் இருந்த காலம் அது.

      குடிகாரர்கள் மதுவைத் தேடி, மற்ற மாவட்டங்களுக்கு நடையாய் நடந்து, தள்ளாடியபடி, திரும்பிக் கொண்டிருந்த காலம் அது.

25 மாவட்டங்களிலும் மது விலக்கு.
இன்று முதல் அமல் படுத்தப் படுகிறது.

      அரசு அதிகாரிகள் எவ்வளவோ எடுத்துரைத்தனர். பூரண மதுவிலக்கு சாத்தியமல்ல. குடிகாரர்களைத் திருத்த முடியாது. அவர்களின் மனதை மாற்ற முடியாது.

     முயன்றால் முடியாதது இல்லை. இனி ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு சிற்றூரிலும், சிற்றூரின் ஒவ்வொரு தெருவிலும், மதுவின் வாடை கூட வீசக் கூடாது.

   கண்டிப்பாய் உத்தரவு போட்டார்.

    அன்றே தேயிலைக் கழகத்தாரை அழைத்தார். கலந்து பேசினார். அடுத்த நாள் அடுத்த அறிவிப்பு வந்தது.

    இனி அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு, அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து ஊர்களிலும், அனைத்து சிற்றூர்களிலும், நாட்டின் ஒவ்வொரு தெருக்களிலும் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தேநீர் இலவசம்.

     ஊரெங்கும் தேநீர் கடைகள் திறக்கப் பட்டன. விரும்பும் மக்கள், ஒரு நாளைக்கு எத்துனை முறை வேண்டுமானாலும், இலவசமாகவே தேநீர் அருந்தலாம்.

மதுவை மனம் நாடுகிறதா?
வா, வா, வந்து தேநீர் குடி. எவ்வளவு வேண்டுமானாலும் குடி.

     நண்பர்களே, எப்படி இந்தத் திட்டம். குடிப் பழக்கத்திற்கு மாற்றாக, தேநீர் பருகும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.

     அனேகமாக இதுதான், இந்நாட்டின் முதல் இலவசத் திட்டமாக இருக்கும்.

    எத்துனை பயனுள்ள, பொருள் பொதிந்த இலவசத் திட்டம்.

    இது மட்டுமல்ல, மது அருந்துவதைக் கைவிடுவதால், ஏற்படும் பயன்கள் பற்றி ஊர் தோறும் நாடகங்கள், கதாகாலேட்சபங்கள், பஜனைகள் நடத்தப் பெற்றன.

      இதற்கே வியக்கிறீர்களே இன்னும் இருக்கிறது.

      சடுகுடு, பிள்ளையார் பாண்டு, கிளித் தட்டு, தெருக் கூத்து முதலிய கிராமிய விளையாட்டுக்களும், கலைகளும் கிராமப்புற மேம்பாட்டு அலுவலர்கள் மூலமாக கிராமம் தோறும் மீண்டும் உயிர்பிக்கப் பெற்றன.

      மக்கள் மதுவை மறந்தனர்.

     உடல் நலனில் தேறினர்.

      குடும்பமே உயர்வென்று போற்றத் தொடங்கினார்.

      குடும்பங்கள் செழித்தன. நாடு தழைத்தது.

     நண்பர்களே, படிக்கப் படிக்க மெய் சிலிர்க்கிறது அல்லவா, வாசிக்க வாசிக்க நெஞ்சம் நெகிழ்கிறது அல்லவா, நினைக்க நினைக்க மனம் ஆனந்தக் கூத்தாடுகிறது அல்லவா.

     இதைச் சாதித்துக் காட்டிய பிரதம மந்திரி எந்த நாட்டைச் சார்ந்தவர் தெரியுமா?

     நமது நாட்டைச் சார்ந்தவர்.

     என்ன என்ன, நமது நாட்டைச் சார்ந்தவரா?

     நமது நாடேதான். இம் மாமனிதர் அரியனை ஏரிய காலத்தில், அதாவது, நமது நாட்டு விடுதலைக்கு முன், மாநில முதல்வர்களை பிரதம மந்திரி என்றுதான் அழைத்தார்கள்.

     நம் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர்தான், மத்தியில் ஆள்பவரை பிரதம மந்திரி என்றும், மாநிலத்தை ஆள்பவரை பிரிமியர் என்றும் அழைக்கத் தொடங்கினார்கள்.

     1950 ஆம் ஆண்டு சனவரி 26 இல், அரசியல் நிர்ணய சபை, நிறைவேற்றிய சுதந்திர இந்தியாவின், அரசியல் அமைப்புச் சட்டப்படி, இந்த பிரிமியர்கள், முதலமைச்சர்கள் ஆனார்கள்.

     நமக்குத் தெரிந்த செய்திதான் இது. ஆனாலும் நம்மில் பலர் மறந்து போன செய்தி.

     அப்படியானால், அடுத்த கேள்வி, நம் முன்னே தோன்றுகிறது அல்லவா? நாட்டின் பிரதம மந்திரி இல்லை என்றால், இவர் மாநிலத்தின் பிரதம மந்திரி அல்லவா?

      ஆம், அப்படியானால், எந்த மாநிலத்தின் பிரதம மந்திரி இவர்.

     சொல்லட்டுமா? சொன்னால் நம்புவீர்களா?

      நம்பித்தான் ஆக வேண்டும்.

     ஏனெனில் இது வரலாற்றின் பக்கங்களில் உளி கொண்டு, செதுக்கப் பெற்ற உண்மை.

      ஒரு முறை மூச்சை, இழுத்து விட்டுக் கொள்ளுங்கள்.

இவர், நம்
சென்னை மாகாணத்தின்
பிரதம மந்திரி

ஆம்
சென்னை இராஜதானியின்
பிரிமியர்

நம் பெருமைமிகு தமிழ் நாட்டின்
முதலமைச்சர்


இவர்தான்

ஓமந்தூரார்

ஓ.பி.ராமசாமி ரெட்டியார்

ஓமந்தூரார், பெரிய வளைவு, ராமசாமி ரெட்டியார்.

ஓமந்தூராரின் நினைவினைப் போற்றுவோம்.70 கருத்துகள்:

 1. நல்ல அறிமுகம் நண்பரே..உங்கள் வரிகளில் ..
  எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் நம் தலைவர்கள்..
  எங்கே தொலைத்தோம்....?

  கூட்டணி பேர நேரங்களில் உங்கள் பதிவு., வைரமாய் இருக்கிறது..

  நன்றிகளும்,,வாழ்த்துகளும்..

  பதிலளிநீக்கு
 2. “வரலாற்றின் பக்கங்களில் உளி கொண்டு, செதுக்கப் பெற்ற உண்மை” ஆம் அழகான தமிழ்கொண்டு நீங்கள் செதுக்கித் தந்த வரலாற்று உண்மையை நம் இளைஞர்களுக்கு உரத்துச் சொல்ல வேண்டும். இவர்களின் வரலாறு பாடமாகவேண்டும். த.ம.2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஐயா இவர்களை இக்கால மாணவர்கள் அறிய மாட்டார்கள்
   நன்றி ஐயா

   நீக்கு
 3. நல்ல தகவல். இந்தக் காலத்தில் இப்படி யார் இருக்கிறார்கள்? ஹ்ம்ம்!
  தம +1

  பதிலளிநீக்கு
 4. பிரமிப்பான அரிய விடயம் நண்பரே ஆச்சர்யமாக இருக்கின்றது நம்ம மனம் மறுக்கின்றது
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
 5. மனித மேதையை எண்ணியவன்...
  இப்"போதை"ய நிலை கண்டு
  வருந்துகிறேன்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய நிலை வருத்தத்திற்கு உரியதுதான் நண்பரே

   நீக்கு
 6. ஓமந்தூரார் பற்றி இன்னொரு அறியத் தகவலும் இருக்கிறது. ஒருமுறை அவர் குடும்பத்துடன் ரயிலில் இரவுப் பயணம் மேற்கொண்டார். நள்ளிரவு 12 மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதகரிடம் சென்று இன்று முதல் என் மகனுக்கு 13 வயது தொடங்குகிறது. அரை டிக்கெட்தான் எடுத்திருக்கிறேன். 13 வயதுக்கு முழு டிக்கெட் கொடுங்கள் என்று கூறி மீதி அரை டிக்கெட்டை வாங்கினார். இன்றைய அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால்..
  அருமையான பதிவு நண்பரே!
  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வியப்பிற்குரிய செய்தி நண்பரே
   இதுபோன்ற நேர்மையான மனிதர்களை இன்று பார்க்க முடியுமா
   நன்றி நண்பரே

   நீக்கு
 7. அவர்கள் உதாரண புருசர்கள்!!

  பதிலளிநீக்கு
 8. புதிய தகவல் ஐயா.பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. புதிய தகவல் ஐயா.பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான மாமனிதரைப் பற்றி எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி. செய்திகளை அறியும்போது வியப்பாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 11. எவ்வளவு உயர்ந்த மனிதர்!! பகிர்வுக்கு நன்றி அண்ணா

  பதிலளிநீக்கு
 12. சமூக அக்கறையுள்ள அத்தகு மாமனிதர்கள் இனி எப்போது உருவாவார்கள்?

  பதிலளிநீக்கு
 13. ஓமாந்தூரார் தமிழகத்தின் அன்றைய முதல்வராக இருந்தார் என்பதே இன்று நிறையபேருக்கு தெரியாது. அவரைப் பற்றிய தகவல் தொகுப்பை தந்து பலருக்கும் தெரியப்படுத்தியமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. நல்ல மனிதர்களைப் பற்றி அதிகம் தெரியவில்லை ,பாசாங்குத் தலைவர்கள் தான் அதிகம் பேசப்படுகின்றனர் ,என்ன வினோதம் இது ?

  பதிலளிநீக்கு
 15. இதுபோன்ற நல்ல தலைவரைகளை பள்ளி பாடத்திட்டத்தில் கொண்டு வரவேண்டும். இன்றைய இளைய சமூதாயம் அறிவது போல் செய்யலாம்.

  உங்களிடம் கல்வி பயிலும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் .

  பதிலளிநீக்கு
 16. தருக்கித் திரிவோர் மத்தியில் தகைமையாளர் ஒருவரை
  அடையாளங் காட்டியதுடன் -

  அரிய செய்திகளை அழகாகச் சொல்லிற்று இன்றைய பதிவு..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 17. ஒருகால கட்டத்தில் பலருக்கும் மதுஎன்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தது. அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகாதோர் பலர் இருந்தனர்/ பிறகுதான் அரசு கஜானாவை நிரப்பவும் அதிலிருந்து சுருட்டவும் மது விலக்கு விலக்கப் பட்டது.இன்றைய தலைவர்களுக்கும் அன்றைய தலைவர்களுக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகப்பெரிய வித்தியாசம் ஏற்பட்டு விட்டதே ஐயா
   நன்றி

   நீக்கு
 18. அன்றைய அரசியல் நாட்டுமக்களுக்கானதாய் இருந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 19. இவரைக் குறித்து அறிந்திருக்கிறேன் ஐயா. உங்கள் பதிவும் அருமையாக இருக்கிறது. அனைவருக்கும் தெரியாத ஒரு செய்தியைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 20. ஓமந்தூரார் நினைவூட்டலை
  இனிவரும் முதலமைச்சர்கள்
  பின்பற்றினால்
  மது விலக்கு
  நடைமுறைக்கு வந்தால்
  தமிழ்நாடு மட்டுமல்ல
  உலகமே
  முன்னேறும் ஐயா!

  மதுவை வழங்கி
  நாட்டைக் கெடுப்போரை
  மக்கள் தான்
  ஒதுக்கி வைக்க வேண்டும்!

  பதிலளிநீக்கு
 21. ஓமாந்தூரார் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன் மதுவிலக்கு -இதுவரை அறியாத விஷயம் .பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. அருமையான பகிர்வு. நன்றி

  பதிலளிநீக்கு
 23. எத்தகைய தலைவர் ..மக்கள் நலம் பேணும் பெருமான் ...


  ஆனால் இன்று...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய நிலை வேதனைதான் சகோதரியாரே
   நன்றி

   நீக்கு
 24. நல்லதொரு பகிர்வு. நன்றி.

  பதிலளிநீக்கு
 25. சிறப்பான பதிவு ஒருமுறை தமிழக முதலமைச்சர்கள் பட்டியலைப் பார்த்தபோது ஓமந்தூரார் பற்றி அறிந்தேன். அவரைப் பற்றிய தகவல்களை விரிவாக தந்தமைக்கு நன்றி. புதிய தலைமை செயலகமாக செயல்படுவதற்காக கட்டப்பட கட்டிடம் அமைந்துள்ள இடம் ஓமந்தூரர் வளாகம் . முன்பு அதன் பெயர் அரசினர் தோட்டம்

  பதிலளிநீக்கு
 26. ஓமந்தூரார் குறித்து மீண்டும் எழுதுங்கள் தோழர்

  பதிலளிநீக்கு
 27. அற்புதமான மனிதரைப் பற்றிய அருமையான சித்திரம்...மிக்க நன்றி அய்யா
  சஸ்பென்ஸ் வைத்து அறிமுகப்படுத்தும் உங்கள் உத்தி எப்போதும் அபாரம். காலத்தே முன்வைக்கப்படும் முக்கிய விவாதப் பொருள்.

  எஸ் வி வேணுகோபாலன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மிகுந்த மகிழ்வினை அளிக்கிறது
   நன்றி ஐயா

   நீக்கு
 28. மறக்க முடியாத மாமனிதர் அவர். காலத்தால் வெளியிடப்பட்ட பதிவு.

  பதிலளிநீக்கு
 29. நீண்ட நாளைக்கு முன்பே இவரைப்பற்றி எழுத வேண்டும் என்று இருந்தேன் சகோ,
  அருமையான மனிதர், நல்லவரைப் பற்றிய பகிர்வு தங்கள் நடையில் அருமை,

  பதிலளிநீக்கு
 30. நண்பரே வாழ்த்துக்கள் ! இப்படிப்பட்ட நேர்மையான தலைவர்கள் இன்று யார் என காண்பது கடினம் !

  பிரதி பலன் பாராமல், சமுதாய பணி செய்பவரை காண்பதரிது !

  சித்தையன் சிவக்குமார், மதுரை !

  பதிலளிநீக்கு
 31. உத்தமர் ஓமந்தூரார் பற்றிய பதிவு உங்களுக்கே உரிய முறையில் பதிவிட்டது அருமை!

  பதிலளிநீக்கு
 32. நினைவினைப் போற்றுவோம்.
  மிக்க நன்றி
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 33. அடுக்கடுக்காய் செய்தியை விரித்து,தாங்கள் சொல்லிய விதமும்,செய்தியும் அருமை!

  பதிலளிநீக்கு
 34. பச்சை மரத்தில் ஆணி அறைந்தார்போன்ற பதிவு. தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தவர்கள், இருப்பவர்கள், இருக்க நினைப்பவர்கள் அனைவருக்கும் ஒரு பிரதியை அனுப்பி வைக்கலாம். -இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
 35. அரிய செய்தியை அருமையாகச் சொன்னீர்கள் .வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 36. அருமையான தகவல். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.

  பதிலளிநீக்கு
 37. மிக அருமையான பதிவு நண்பரே! அருமையான தகவலை மிக அழகாகத் தந்துள்ளீர்கள். இன்றையா அரசியல்வாதிகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்...இங்கு பதிந்தமைக்கு வாழ்த்துகள்.

  ஓமந்தூர் பற்றி நாங்கள் முதலில் அறிந்தது பதிவர் நம்பள்கி அவர்கள் தளத்தில். அவர் இவரைப் பற்றி எழுதியிருந்தார். மதுவிலக்கை முதலில் முழுமையாகக் கொண்டுவந்தவர் இவரே என்பதையும் நம்பள்கி எழுதியிருந்தார்.

  ஓமந்தூர் மிகவும் நேர்மையானவர். தன் மகனின் வயது 13 என்று அதுவும் பிரயாணத்தின் போது நடு இரவு ஆனதும் 13 ஆனது என்று சொல்லி வாங்கிய அரைடிக்கெட்டைக் கொடுத்துவிட்டு முழு டிக்கெட்டிற்க்கன பணம் கொடுத்துப் பெற்றவர். இப்போது உள்ளவர்களைப் பாருங்கள்...நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான்..

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு