31 மார்ச் 2016

இந்தியாவின் மகள்


    

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கின்படி, 24.60 கோடி இந்தியக் குடும்பங்களில், 67 சதவீத மக்கள் மட்டுமே மின்சாரம் பெறுகின்றனர். மீதி 33 சதவீத மக்கள் மண்ணென்ணெய் விளக்கில்தான் இரவில் வெளிச்சம் பெறுகின்றனர்.

     இந்தியாவின் மின் சக்தியின் தேவை, நாள் தோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

      நாம் என்ன செய்யப் போகிறோம்

      இதை எப்படி எதிர்கொள்வது?

      வருங்கால சந்ததிகளுக்கு, ஒளிமயமான எதிர்காலத்திற்கு என்ன வழி செய்யப் போகிறோம்?


---

    

மோனிகா, இந்த ஃபிலிம்ல உனக்கு நல்ல ரோல். உன் சிஸ்டர ஒரு ரவுடிக் கும்பல் ரேப் பண்ணிடுறாங்க. ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணியும் காப்பாத்த முடியாம செத்துப் போயிடுறா.

      நீ காலேஜ் படிப்பை ட்ராப் பண்ணிட்டு, இந்தியா பூரா போயி விழிப்புணர்வு செய்ற. நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்குது.

      எல்லா விவரமும் புள்ளி விவரமா சொல்லுற. பேச்சுல ஒளி வீசுது.

      இந்தியாவிலேய புது தில்லியில்தான் அதிக கற்பழிப்பு நடக்கிறத, பத்திரிக்கை தந்த புள்ளி விவரத்தை ஆதாரமா வெச்சுப் பேசுற.

       அந்தச் சமயத்துல  தலை நகர்லயும் ஆட்சி மாற்றம் நடக்கிறது.

        புதுசா வந்திருக்கிற கட்சியின் தலைவர் நல்ல இளைஞர்.

        அவரிடம் என் தங்கைபோல பல்லாயிரக் கணக்கான இளம் பெண்கள், இந்தப் புது தில்லியில் தினந்தோறும், ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படுறாங்க.

         இந்த விசயத்தை எப்படி கையாளப் போறிங்கன்னு? எப்படி அணுகப் போறிங்கன்னு? கேட்கறீங்க.

        இந்தச் செய்தி பேப்பர்ல வருது.

        எதிர்கட்சியில இருக்குறவஙக, பாதிக்கப்பட்ட உன்னை அணுகுறாங்க. பாலிடிக்ஸ் பண்ணப் பாக்குறாங்க.

        இந்தச் சமயத்துல, நீயும் புதிதாக வந்திருக்கிற கட்சியின் தலைவரும் சந்திக்கிறீங்க. இரண்டு பேரும் சேர்ந்து ஒரு புதுமையான வழியைக் கண்டு பிடிக்கிறீங்க.

       அதுக்கு மக்கள் மத்தியில ஏகோபித்த ஆதரவு கிடைக்குது.

       நீங்கள் கண்டுபிடித்த புதுமையான வழியை நடை முறைப் படுத்தியதால், நாட்டில் ஒழுக்கம் வளர்ந்து, பிறகு நாட்டில் கற்பழிப்புச் சம்பவமே தலை தூக்கவில்லை.

      இந்த ஃபிலிம் உனக்குப் பெருமை சேர்க்கும் என்கிறார் டைரக்டர்.

    சரி, புதிய கட்சியின் தலைவரும், நானும் சேர்ந்து கண்டுபிடிக்கிற அந்த வழி என்ன?

---
   
      நண்பர்களே, முற்றிலும் வெவ்வேறான இரண்டு பிரச்சினைகளை ஒருங்கிணைத்து, தீர்வு காண முயன்றிருக்கிறார் எனது அருமை நண்பர்.

     பிரச்சினைகள் வெவ்வேறாயினும், இரண்டுமே இருள் பற்றியதுதான்.

     ஒன்று புற இருள். நாடு நகரங்கள் எல்லாம் மின் பற்றாக்குறையால், இருளில் மூழ்கித் தவிப்பதை, தவிர்ப்பதற்கான வழியை ஆராய்கிறது இவரது நூல்.

      மற்றொன்று அகத்தின் இருள். மனித மனங்களின் இருட்டுப் பக்கம். மனிதர்கள் என்பதையும் மறந்து விலங்கினும் கீழாய், பாலியல் சுரண்டலில், பாலியல் வன் கொடுமையில் இறங்குவதற்குக் காரணம், மனம்தானே, வக்கிர எண்ணங்கள் வளர்ந்து, நிறைந்திருக்கும் இருட்டு மனம் தானே காரணம்.

      மனிதனின் இந்த அக இருளைப் போக், சுடர் தரும் தீபத்தை ஏற்றி வைக்க முயல்கிறது இவரது நூல்.

      இது இவரது முதல் நூல்.

      எனது வியப்பே இங்குதான் தொடங்குகிறது.

      முதன் முதலாய் நூல் வெளியிட விரும்பும் பலரும தேர்ந்தெடுப்பது கவிதை நூலாகத்தான் இருக்கும். அதுவும் புதுக் கவிதையாகத்தான் இருக்கும்.

      இவரோ கவிதையின் பக்கம் செல்லவில்லை.

     கவிதை இல்லை எனில், பொரும்பாலோரின் அடுத்த பயணம் காதலை நோக்கியதாகத்தான் இருக்கும்.

       இவர் காதலை நோக்கியும் பயணிக்கவில்லை.

       தன் முதல் நாவலிலேயே, தீர்வு காண இயலாமல், நாடே தவிக்கும் இரு முக்கிய பிரச்சினைகளைத் தன் நாவலின் மையக் கருவாக்கி, தீர்வு காண முயன்றிருக்கிறார்.

         இதற்காகவே இவரைப் பாராட்ட வேண்டும்.

         நான் சிறு வயதில் இருந்தே கதைகளைப் படித்து, நேசித்து, சுவாசமாய் சுவாசித்து வளர்ந்தவன்.

       நான் அறிந்தவரை கதை என்றால் ஒரு நாயகன், ஒரு நாயகி, ஒரு பிரச்சினை, ஒன்றோ இரண்டோ வில்லன்கள், போராட்டம், எதிர்பாரா திருப்பங்கள், முடிவில் சுபம்.

         நண்பர், நாவலின் இந்த அடிப்படைச் சமன்பாட்டை, முற்றிலுமாய் வெடி வைத்துத் தகர்த்து, தனித் திசையில் தன் நாவலைக் கொண்டு சென்றிருக்கிறார்.

       இவரது கதையில் எதிர்மறை எண்ணம் கொண்ட கதாபாத்திரங்கள் இல்லவே இல்லை. அனைவருமே சமூக நலன் விரும்பிகள், நட்பு போற்றுபவர்கள்.

      திரைத் துறையினைச் சார்ந்தவர்கள் அனைவரையுமே, உள்ளத்தால் உயர்ந்தோராக உயர்த்தி, எத்துறையாயினும், நன்மையும் தீமையும் துறை சார்ந்தது அல்ல, அத்துறையில் இருக்கும் மனிதர்களைச் சார்ந்ததே என்பதை, முகத்தில் அறைந்தார்போல, தெள்ளத் தெளிவாய் புரிய வைக்கிறார்.

     எனது வீட்டு நூலகத்தில், சற்றேரக்குறைய 500 ஆங்கில நாவல்கள் உள்ளன. இந்நூல்களின் முதல் பக்கத்திலும், பின் அட்டையிலும், அப்புத்தகம் பற்றிய, பல்வேறு இதழ்களின் கருத்துக்கள் மற்றும் புகழ் பெற்ற பல்வேறு எழுத்தாளர்களின் பாராட்டு வரிகள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.

       ஒரு ஆங்கில நாவலின் சிறப்பைக் குறிப்பிட, வெளி நாட்டவர் பயன் படுத்தும் வார்த்தை ஒன்றுண்டு.

Page Turner

       புத்தகத்தின முதல் பக்கத்தில் கண்களை ஓட விட்டோமானால், ஒரு சில பக்கங்களிலேயே, நாவலின் எழுத்து நடை, நம் மனதை விடாப்பிடியாய் பிடித்துக் கொள்ள வேண்டும்.

       அடுத்தப் பக்கம், அடுத்தப் பக்கம் என கதை விரைவாய், வேகமாய் விறுவிறுப்பாய், நமது கண்களையும், மனதையும் ஒரு சேர, கடைசிப் பக்கம் வரை விடாப் பிடியாய் இழுத்துச் செல்ல வேண்டும்.

இதுதான்
Page Turner

       நண்பரின் கதையினைப் படிக்கத் தொடங்கிய நான், படித்து முடித்துவிட்டுத்தான் கீழே வைத்தேன்.

Page Turner


இ ந் தி யா வி ன்  ம க ள்

       நண்பர்களே, கல்யாண அவசரத்தில் மாப்பிள்ளையை மறந்ததுபோல், ஒரு முக்கியமான செய்தியைச் சொல்ல மறந்து விட்டேன். புத்தகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே சென்றவன், புத்தகத்தை எழுதிய நண்பரைப் பற்றிச் சொல்ல மறந்து விட்டேன்.

இவர் தஞ்சையைச் சார்ந்தவர்.
அதுவும்
கரந்தையைச் சார்ந்தவர்.

என்னிலும் இளையவர்.

நான் படித்தப் பள்ளியில்,
எனக்குப் பிறகு,
சில ஆண்டுகள் கழித்துப் படித்தவர்.

கரந்தையில் பிறந்து, கரந்தையில் படித்து
தற்பொழுது
முப்பையில் வசித்து வருபவர்.



சிறந்த மேடை பேச்சாளர்.
மும்பைத் தமிழ்ச் சங்கப் பணிகளில்
ஆர்வமுடன் செல்பட்டு வருபவர்.

மும்பையின்
ஒவ்வோர் தமிழர் இல்லங்களையும் அலங்கரிக்கும்,
நாட்காட்டியான
கால நிர்ணய்
தமிழ்ப் பதிப்பின் ஆசிரியர்.

மும்பை இரா.சரவணன்.

வாழ்த்துக்கள் நண்பரே.


தங்களின் எழுத்துலகப் பயணம் மென்மேலும் தொடர,
உச்சத்தைத் தொட
வாழ்த்துக்கள் நண்பரே.



இந்தியாவின் மகள்
 நூல் கிடைக்குமிடம்

அப்பர் புத்தக நிலையம், தஞ்சை  மற்றும் முரசு புத்தக நிலையம், தஞ்சை
விலை.ரூ.250.