18 மார்ச் 2016

பங்களா கொட்டா
     அது ஒரு தனி உலகம். பூமிப் பந்தில், இந்திய வரைபடத்தில், தனியே புள்ளி வைத்துக் காட்ட அவசியப்படாத ஊர்.

     வேலங்குடி.

     அன்றைய கீழத் தஞ்சை மாவட்டம்.

     இன்றைய திருவாரூர் மாவட்டம்.

     மேலே அண்ணாந்து சூரியனைப் பார்த்து சரியாக மணி சொல்லும் மனிதர்கள். வேட்டி துண்டைத் தாண்டி, மேல் சட்டை போடுவதையே ஆடம்பரமாக நினைப்பவர்கள்.

     மரம், சொடி, கொடிகளைத் தாண்டி, மண்ணோடும் மாடுகளோடும் பிழைப்பவர்கள். அது வயலுக்கு உரமாக சாணமும், சாம்பலும், எருவும் தழையும் கலந்து போட்ட காலம்.

      இயந்திரங்கள் இல்லாத இயற்கையோடு கலந்த விவசாயம். பருவம் தவறாமல் மழையும், பனியும் செய்து விவசாயம் செழித்திருந்த நாட்கள் ….

     நண்பர்களே, நமது பதிவுலக நண்பர், இப்படித்தான் தொடங்குகிறார் கதையை.

     இது இவருக்கு முதல் நாவலாம்.

     நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது.

    ஒரு தேர்ந்த எழுத்தாளரின், கிராமிய மணம் வீசும் எழுத்து நடை. கிராமத்துத் தெருக்களில், புகுதி படிந்த மண்ணில், நெஞ்சில் ஈரம் மிகுந்த மனிதர்களோடு, தோளில் கைபோட்டபடி, நடைபோடும் ஓர் உணர்வு.

       அமெரிக்க மண்ணில் காலடி பதித்து, வருடங்கள் பலப் பல கடந்துவிட்ட போதிலும், தன் சொந்த மண்ணின் மொழியை, சொந்த கிராமத்து மண்ணின் நறுமனம் வீசும் மொழியை, தன்னுள் உயிர்ப்போடு, அடைகாத்து, இவர் போற்றிப் புரந்து வருவது புரிகிறது.

பங்களா கொட்டா.

    ஒரு மாபெரும் கனவை நனவாக்கிடத் துடித்துத் துடித்து, அதற்காகத் தன் வாழ்க்கையினையே அடகு வைப்பவனின் கதை.

நகமும் சதையுமாய் இருந்த உறவுகள் கூட பங்காளியாகும் போது, கோர்ட் கேசு என அலைந்து கொண்டிருப்பதை தினமும் பார்க்கிறார். எவ்வளவோ குடும்பப் பிரச்சனைகளுக்குப் பொண்ணும், மண்ணுமே அடிநாதமாய் இருப்பதென்பதே நிதர்சனம்.

      இன்றைய வாழ்வியலை, இன்றைய வாழ்வியல் யதார்த்தத்தை நூலின் ஒவ்வொரு பக்கமும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.


ஒவ்வொரு ஷெட்யூல்தாரரும் விவசாயம் செய்ய, ஒருவருக்கொருவர் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ள தண்ணீர் விட வேண்டியது. ஜல பாகத்தை எந்த காரணத்தைக் கொண்டும் தடுக்கவோ, மறைக்கவோ கூடாது.

       பெரியவரின் உயிர் பிரிந்தபின், உயிர் பெற்ற உயிலின் வாசகங்கள் நம்மை நெகிழச் செய்கின்றன.

    வயலினைப் பிரித்துக் கொடுத்த போதும், வாய்க்கால் வழி வழிந்தோடும் நீரைப் பொதுவில் வைக்கும் பாங்கு நம்மை வியப்படையச் செய்கிறது.

       நாவலின் ஒவ்வொரு பக்கமும், தெளிந்த நீரோடை போல், தங்கு தடையின்றி, இயல்பாக, வெகு இயல்பாக நகர்ந்தோடுகிறது.

எதற்காக வாழறோம் என்னும் கேள்வியையே பல பேர் கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் எத்தனை பேருக்கு பதில் தெரியும்….. லட்சியமில்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? அது இல்லாமல் மனிதனாகப் பிறந்ததற்கே அர்த்தம் இல்லையே.

     இலட்சியத்தோடு வாழும் ஒரு மனிதனின் கதை.

பங்களா கொட்டா.

     உயிர்ப்பின்மையோடு இயங்கும் உலகில், விவேகத்தோடும், முதிர்ச்சியோடும், தன் சுயத்தை தக்க வைத்துக் கொள்ளப் போராடும் ஒரு மனிதனின் கதை.

பங்களா கொட்டா.

   இதை எழுதியர் யார் தெரியுமா?

   நமது நண்பர்.

   வலைப் பூவில் வலம் வருபவர்.

நானும் என் முன்னோர்களும் நூறாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த வாழ்க்கையின் மௌன சாட்சி எங்கள் கிராமம்.

அந்த கிராமம் என் கண் முன்னே மாறிக் கொண்டிருக்கிறது.

வெகுவேகமாய் நகரமயமான இலட்சக் கணக்கான இந்திய கிராமங்களில் எங்கள் கிராமமும் ஒன்று என்று சொல்லிக் கொள்வதில், எனக்குப் பெருமை ஒனறுமில்லை.

நகரமயமாதல் என்னும் சூறாவளியில் சிக்கி, கிராமங்கள் தன் சுய அடையாளங்களை இழந்து, சிதிலங்களுடன் இன்று உள்ளன.

அங்கே வாழ்ந்த மனிதர்களின் தடயங்கள் முற்றிலும் அழிந்துவிடும் முன், கொஞ்சமேனும் மிச்சம் இருக்கும், கிராமிய மணம் காற்றில் கரைந்து போகும் முன், அந்த நினைவுகள் நிறமிழந்து போகும்முன், என் இழந்த வாழ்க்கையை மீட்டெடுக்கும் முயற்சி இந்நூல்.

     இவ்வாறுதான் தன் முதல் நாவலை அறிமுகப் படுத்துகிறார் இவர்.


இவர்தான்

   சுட்டெரிக்கும் வெயிலில் நாள் முழுதும் அலைந்து, களைத்து வீடு திரும்பும் பொழுது, ஒரு குவளை குளிர்ச்சியான மோர் குடித்தால் எப்படியிருக்கும், அப்படி ஒரு மன நிறைவைத் தருகிறது இவரது நூல்.பங்களா கொட்டா.

படித்துப் பாருங்கள் நண்பர்களே.

       அன்பு நண்பர் ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள், ஒரு அன்பு வேண்டுகோள்.

      மீதமிருக்கும் கிராமத்து நினைவுகளை எல்லாம், நினைவிருக்கும் பொழுதே, நேரமிருக்கும் பொழுதெல்லாம், கொஞ்சம் கொஞ்சமாய், வெள்ளைத் தாளில் இறக்கி வையுங்கள்.

அடுத்தமுறை தமிழகம் வரும்பொழுது.
திரு ஆரூர் வரும் பொழுது
எழுத்துக்களைச் சுமந்த தாட்கள்
புத்தகமாய் பிரசவிக்கட்டும்.
நினைவுப் பெட்டகமாய் மலரட்டும்.


வெளியீடு
அகநாழிகை பதிப்பகம்,
26,ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு -613001.
அலைபேசி 99 94 54 10 10

விற்பனை உரிமை
டீஸ்கவரி பேலஸ்,
கே.கே.நகர் ( மேற்கு) சென்னை-78
தொலைபேசி 044 – 6515 7525, அலைபேசி 99 40 44 66 50


விலை ரூ.13075 கருத்துகள்:

 1. நல்ல பகிர்வு.மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 2. விவரித்த விதம் வழக்கம் போல் ரசனை...

  அன்பு நண்பர் ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
 3. உங்கள் பார்வை படும் போது கல்லும் கனியாகிறது..

  நல்ல தூண்டல்...

  பதிலளிநீக்கு
 4. உங்கள் பார்வை படும் போது கல்லும் கனியாகிறது..

  நல்ல தூண்டல்...

  பதிலளிநீக்கு
 5. ஐயா, நீங்கள் சொல்லும்போதே சுகமாக இருக்கிறது! படிக்கத் துடிக்கிறது நெஞ்சம்!
  உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 6. நாவலின் தலைப்பும, படங்களும், உங்களது விமர்சனமும் இந்த நூலை வாங்கும் ஆர்வத்தை தூண்டி விட்டன. நன்றி!

  பதிலளிநீக்கு
 7. கிராமத்து மண்வாசனையோடான புதினங்களின் வரவுகளின் குறைவுகள் இவர்போன்ற படைப்பாளிகளால் நிறைவு பெற வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் தங்களின் எண்ணம் நிறைவேறும் ஐயா
   நன்றி

   நீக்கு
 8. தங்களது நடையில் விவரித்த விதம் அழகு நண்பரே
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 9. ஆருரின் தேர் அழகை கண்டேன் ,ஆரூர் பாஸ்கரின் எழுத்து நடையில் :)

  பதிலளிநீக்கு
 10. நல்ல பகிர்வு.மிக்க நன்றி. உங்கள் பார்வை படும் போது கல்லும் கனியாகிறது..

  பதிலளிநீக்கு
 11. நல்லதோர் நூல் அறிமுகம். நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 12. அருமையான விமர்சனம். ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. இனிய நடையில் நல்லதொரு நூலின் அறிமுகம்..

  அழகு.. அருமை!..

  பதிலளிநீக்கு
 14. அருமையான அறிமுகம்
  சிறந்த பகிர்வு

  பதிலளிநீக்கு
 15. அருமையான விமரிசனம் நாவல் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
 16. இந்த நூல் எப்படி இருந்தாலும் அதுபற்றி நீங்கள் சொல்லிச் செல்லும் விதம் நன்று வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. நல்ல நூல் விமர்சனம்...
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. திரு .ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்.....
  அருமையான அறிமுகம்

  பதிலளிநீக்கு
 19. அருமையான நூல் விமர்சனம் படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது.
  நூல் ஆசிரியருக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. தமிழ்மணம் வேலை செய்யவில்லை ஓட்டளிக்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தற்பொழுதெல்லாம் தமிழ் மணம் சுற்றிக் கொண்டேஇருக்கிறது சகோதரியாரே
   ஏனென்று தெரியவில்லை

   நீக்கு
 21. நூலாசிரியருக்கு பாராட்டுகள். நல்ல ஒரு நூலைப் பற்றிய பகிர்வுக்காக தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 22. சுட்டெரிக்கும் வெயிலில் அலைந்து திரிந்து வீடு திரும்பும் போது ஒரு குவளை நீர்மோர் அருந்துவது போல நாவல் இருக்கிறது என்று அருமையாக கிராமிய நாவலை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். படிக்கத் தூண்டும் நூல் அறிமுகம். பங்களா கொட்டா என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. இது கிராமத்து வழக்கு என்று நினைக்கிறேன். தெரிவித்தால் மகிழ்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'பங்களா கொட்டா' என்பது 'பங்களா கொட்டகை' என்பதன் பேச்சுவழக்கு

   நீக்கு
  2. எங்களூரில் கொட்டகையைக் கொட்டாய் என்று கூறுவார்கள். கிராமிய பண்பாட்டு விழுமியங்களை ஆவணப்படுத்தும் முயற்சியாக உங்கள் புத்தகம் அமைந்திருக்கிறது என்பது சகோதரர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள் அறிமுகத்திலிருந்து தெரிகிறது. அவசியம் உங்கள் நூலை வாசித்து என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வேன்.உங்கள் பதிலுக்கு என் அன்பான நன்றி!

   நீக்கு
 23. வணக்கம், மிக அருமையான நூல் அறிமுகம் செய்த நண்பர் கரந்தை ஜெயக்குமாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  இழந்த சொர்கம் என்பது போல இன்றைய தலைமுறை கிராமிய மற்றும் பண்பாட்டு விழுமியங்களை இழந்து விட்டது. இந்த சூழலில், முந்தைய தலைமுறையின் செழுமையையும், வளங்களையும், மக்களின் வாழ்வியலையும் நிறுவுவது எழுத்தாளர்களின் கடைமையாகிறது. அதில் எனது சிறு முயற்சி இது.

  நாவல் படைப்பு என்பது மிக அதிக உழைப்பு தேவைப்படும் ஓரு பணியாக இருக்கிறது. ஆனாலும் உங்கள் அன்பு வேண்டுகோளின்படி ஏதோ ஓரு வடிவத்தில் அதை கடத்த முயற்சி செய்கிறேன்.

  பதிவைப் படித்து பின்னூட்டமிட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி. புத்தகத்தின் பேஸ்புக் தளத்தையும் பார்வையிடுங்கள்

  https://www.facebook.com/bunglawkotta/

  எனது தளம்
  http://aarurbass.blogspot.com/

  பதிலளிநீக்கு
 24. அருமையான பகிர்வு. நன்றி.

  பதிலளிநீக்கு
 25. நண்பர் ஆரூர் பாஸ்கர் அவர்களின் பங்களா கொட்டா நூலறிமுகம் வெகு சிறப்பு. அவசியம் வாசிக்கத்தூண்டும் வண்ணம் சிறப்பான அறிமுகம். நன்றி ஐயா. பங்களா கொட்டா என்பதன் பொருள் என்னவாக இருக்கும் என்று நானும் யோசித்திருந்தேன். கன்னட வார்த்தையாக இருக்குமோ என்றுகூட நினைத்தேன். கலையரசி அக்காவின் வாயிலாக என் சந்தேகமும் தீர்ந்துபோனது. கிராமிய வாழ்வினை ஆவணப்படுத்தியதொரு அற்புத முயற்சிக்காக நூலாசிரியருக்கு இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 26. அருமையான நூல் விமர்சனம். நாவலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி விட்டுள்ளீர்கள். நூலை அறிமுகம் செய்த தங்களுக்கும் நூலாசிரியர் ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
  த ம 7

  பதிலளிநீக்கு
 27. அருமையான அறிமுகம்
  நிச்சயம் வாங்கிப் படித்துவிடுவேன்
  இன்னமும் கிராமத்து நினைவுகளோடு
  காங்கிரீட் காடுகளில் வாழ்வோருக்கு
  இது போன்ற நாவல்கள்தானே
  இளைப்பாறுதல் தருகின்றன.

  பதிலளிநீக்கு
 28. படிக்க தூண்டும் அழகிய விமர்சனம் ...அருமை

  பதிலளிநீக்கு
 29. தங்கள் நடையே தனிதான்,, படிக்கனும்,

  பதிலளிநீக்கு
 30. இருவருக்கும் இனிய வாழ்த்து.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 31. நல்ல நூலை அறிமுகம் செய்துள்ளீர்கள்.நிச்சயம் படிப்பேன்

  பதிலளிநீக்கு
 32. புத்தகத்தை வரவழைத்து படித்து விடுகிறேன்/

  பதிலளிநீக்கு
 33. அருமையான விமர்சனம். நல்ல நூல் அறிமுகம். நண்பர் ஆரூர்பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 34. அருமையான விமர்சனம். ந்ல்லதொரு நூல் அறிமுகம். நண்பர் ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 35. மிகவும் பெறுமதியான விபரம். பதிவாக்கியமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு