05 மார்ச் 2017

உத்தமதானபுரம்   சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், தஞ்சை சமஸ்தானத்தை ஆண்ட அரசருக்கு ஒரு ஆசை.

    முடிந்த அளவிற்கு நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை.

     பரிவாரங்களுடன் புறப்பட்டார்.

     இயற்கைக் காட்சிகளைக் கண்ணாரக் கண்டு ரசித்தார்.

     புனிதத் தலங்களை எல்லாம் தரிசித்தார்.

     மனதில் மகிழ்வுடனும், தெய்வங்களை வழிபட்ட மன  நிறைவுடனும், தஞ்சைக்குத் திரும்பும் வழியில், சிறிது ஓய்வெடுக்க, ஓரிடத்தில் கூடாரம் அமைத்துத் தங்கினார்.

     மரங்கள் அடர்ந்த சூழல். குளிர் தென்றல் காற்று வீசும் காலம்.


     மனம் மகிழ்ந்த அரசர், வெற்றிலைப் பாக்கினை எடுத்து, அளவோடு சுண்ணாம்பும் சேர்த்து, மெதுவாய் மென்று சுவைக்கத் தொடங்கினார்.

     மன்னரின் வருகை அறிந்து, அக்கம் பக்கத்துப் பெரிய மனிதர்கள் எல்லாம், ஒருவர் பின் ஒருவராக வந்து மரியாதை செலுத்தினர்.

     உள்ளூர் பெயரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதுதான், அன்று ஏகாதசி என்பது மன்னருக்குத் தெரிய வந்தது.

     இன்று ஏகாதசியா?

   மன்னர் அதிர்ந்து போனார்.

   ஏகாதசியன்று மதியம் ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருப்பவர் மன்னர்.

    தஞ்சை அரண்மனையாக இருந்தால், ஒவ்வொரு நாள் காலையிலும், அரண்மனைச் சோதிடர், அன்றைய திதி, நட்சத்திரம் என்று ஒவ்வொன்றாக பஞ்சாங்கத்தில் இருந்து வாசித்துக் கூறுவார்.

     இப்பயணத்தின்போது சோதிடர் வராததால், ஏகாதசியை அறியாமல் இருந்துவிட்டார் மன்னர்.

    விரதத்திற்கு பங்கம் வந்துவிட்டதே.

    தெய்வ குற்றம் நேர்ந்துவிட்டதே

    இப்பாவத்தை எப்படிப் போக்குவோன்

    மன்னர் கலங்கித்தான் போனார்.

    ஊர் பெரியவர்களையும், வயது முதிர்ந்த அந்தணர்களையும் அழைத்தார்.

    ஏகாதசி விரத பங்கம் நேர்ந்துவிட்டது.

    மாபெரும் பாவம் செய்துவிட்டேன்.

    இதிலிருந்து மீள வழி கூறுங்கள் என மன்றாடினார்.

    ஒரு அக்கிரகாரத்தை உருவாக்கி, வீடுகளைக் கட்டி, வீடுகளோடு நிலங்களையும், அந்தணர்களுக்குத் தானம் செய்வீர்களேயானால், இந்தப் பாவம் விலகும், நன்மை பிறக்கும் என்றனர் அந்தணர்கள்.

    இவ்வளவுதானா? இதோ இந்த இடத்திலேயே, ஒரு அக்கிரகாரத்தை உருவாக்குகிறேன்.

   48 வீடுகள் கட்டப் பெற்றன. 24 கிணறுகள் வெட்டப் பெற்றன.

   சுற்றுப்புற பகுதிகளில் இருந்து 48 அந்தணர் குடும்பங்களை அழைத்து வரச் செய்து, வீடுகளைத் தானமாக வழங்கினார்.

   ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12 மா நன்செய் நிலங்களையும், புன் செய் நிலங்களையும் தானமாக வழங்கினார்.

    48 குடும்பங்கள் வாழ்வு பெற்றன.

    மன்னரின் பாவம் மறைந்து போயிற்று.

    உத்தமமான தானமாக, இந்தத் தானம் வழங்கப் பெற்றமையால், புதிதாய் தோன்றிய இப்பகுதி, உத்தமதான புரம் என அழைக்கப்படலாயிற்று.

    பிற்காலத்தில் இந்த 48 குடும்பங்களில் ஒரு குடும்பத்தில் இருந்துதான், அந்த தமிழன்னையின் தவப் புதல்வர் தோன்றினார்.

    ஆழிப் பேரலைகள் அடுக்கடுக்காய் சீறி எழுந்து, ஒரு முறையல்ல, இரு முறை, எண்ணிலடங்காத் தமிழ்ப் பனுவல்களை, உலகின் எம் மொழியும் பெற்றிடாத, ஈடு இணையற்ற இலக்கியங்களை கொள்ளை கொண்டு போன போனதும், மக்களின் அறியாமையினால், ஏடுகளை கறையான் அரித்துத் தின்று ஏப்பம் விட்டதும், ஏடுகளில் உள்ள எழுத்தின் பெருமையறியாத மாக்கள் பலர், போகி என்னும் பெயரில் நெருப்பில் இட்டுச் சாம்பலாக்கியதும், ஆற்றில் மிதக்க விட்டு அழித்ததும், தமிழ் மொழியின் வேதனை மிகு வரலாறாகும்.

     ஒரு மன்னர், ஒரே ஒரு வேளை, வெற்றிலைப் பாக்குச் சுவைத்ததால் உதயம் பெற்ற, இவ்வூரில், உத்தமதான புரத்தில் தோன்றிய, ஒரு மனிதர், ஒரு மாமனிதர், தமிழ் நாடெங்கும் நடையாய் நடந்து, அலையாய் அலைந்து, மிச்சம் இருந்த ஏடுகளை எல்லாம், தாய் போல் மீட்டு, ஏட்டில் இருந்ததை எல்லாம் அச்சில் ஏற்றி, உலகை வலம் வரச் செய்த பெருமைக்கு உரியவர்.


தமிழ்த் தாத்தா
மகாமகோபாத்யாய
உ.வே.சாமிநாதய்யர்.

---
   
      கடந்த 17.12.2016 சனிக் கிழமை காலை, 11.00 மணியளவில், தமிழ்த் தாத்தா அவர்கள், மழலையாய் பிறந்த, குழந்தையாய் தவழ்ந்த மண்ணில், சிறுவனாய் தத்தித் தத்தி நடைபயின்ற மண்ணில், புண்ணிய மண்ணில், உடலும் உள்ளமும் சிலிர்க்க நின்று கொண்டிருக்கிறோம்.

    நானும் எனது நண்பர் திரு க.பால்ராஜ் அவர்களும்.


இதோ தமிழ்த் தாத்தா வாழ்ந்த இல்லம்.

    புத்தம் புதிய கட்டிடம்.

    தரைத் தளத்தில் நினைவு இல்லம். முதல் தளத்தில் அரசு நூலகம்.

    கட்டிடத்தைக் கண்டவுடன், மனதில் முதன் முதலில் வேதனைதான் வந்து அமர்ந்தது.

    உ.வே.சா அவர்கள் வாழ்ந்த இல்லத்தை, அவர் வாழ்ந்த காலத்தில் இருந்தது போலவே அல்லவா பாதுகாத்திருக்க வேண்டும், அப்படியே அல்லவா பழுது நீக்கிப் பழைய உருவிலேயே அல்லவா புதுப்பித்திருக்க வேண்டும்.

    அப்பொழுதுதானே, அவ்வீட்டின் பழமையும், உ.வே.சா வாழ்ந்த சூழுலும், வளர்ந்த விதமும் பார்ப்போர் உள்ளத்தில் பதிவும்.

    உள்ளத்தில் வருத்தம் பெருகிய போதிலும், இம் மண், தமிழ்த் தாத்தா காலடி பட்ட மண், இக்காற்று தமிழ்த் தாத்தா சுவாசித்த காற்று என்ற எண்ணம் நெஞ்சத்தை நெகிழ்வுறச் செய்தது.

    தமிழ்க் காற்றைச் சுவாசித்தபடி, கனவில் நடப்பது போல் நடந்தோம்.

    உ.வே.சா இல்லத்தின் கதவு பூட்டியிருந்தது.

    ஆனால் முதல் தளத்தின் கதவு திறந்திருந்தது.

     மெல்லப் படிகளில் ஏறினோம்.

     முதல் தளத்தில் அரசு நூலகம்.

     நூலகரைத் தவிர யாருமில்லை.

     நூலகரை அணுகினோம்.

     அய்யா, நாங்கள் உ.வே.சா அவர்களின் இல்லத்தைக் காண வேண்டும் என்ற பெரு ஆவலில் வந்தோம். ஆனால் பூட்டியிருக்கிறதே என்றோம்.

     நூலகர் சிரித்த முகத்துடன் பதிலளித்தார்.

     கவலை வேண்டாம். என்னிடம் சாவி இருக்கிறது. தங்களைப் போன்று வருவோர்களுக்காக, நானே சாவியைப் பெற்று வைத்திருக்கிறேன். நீங்களே திறந்து பாருங்கள் என்றார்.

     சொர்க்கத்தின் திறவுகோலையே பெற்றார்போல் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி.
    

திறவுகோலைப் பெற்றுக் கொண்டு, கீழிறங்கி, கதவுகளைத் திறந்து உள் நுழைந்தோம்.

     ஒரு நீண்ட பெரிய அரங்கு.

     அரங்கின் இறுதியில் சுவற்றினை ஒட்டியவாறு, கரங்களில் சுவடிகளை ஏந்தியபடி உ.வே.சா அவர்களின் திரு உருவம்.

      
மெல்ல நெருங்கி அவர் முகத்தையே உற்றுப் பார்க்கிறோம்.

       அறிவுக் களை ததும்பும் முகம்.

       தமிழைப் பொழியும் கண்கள்.

       திடீரென்று கண் விழித்து, நம்மைப் பார்த்து, பழமையானச் சுவடிகள் ஏதேனும் கொணடு வந்திருக்கிறீர்களா? என்று கேட்டாலும் கேட்பார், என்று நம்மை நம்பவைக்கும் அளவிற்கு நேர்த்தியான வடிவமைப்பு.

       உடலும் உள்ளமும் சிலிர்க்க, தமித்தாயின் தலைமகனின் முகத்தினையே பார்த்தபடி நிற்கின்றோம்.


      


தமிழ்த் தாத்தா பதிப்பித்த நூல்கள், பழமையான படங்கள்., நம்மை அவர் வாழ்ந்த காலத்திற்கே, கரம் பற்றி அழைத்துச் செல்கின்றன.

        நேரம் கரைவதே தெரியாமல், நின்று கொண்டிருக்கிறோம்.

        மெல்ல சுய நினைவு வரவே, உ.வே.சா நினைவு இல்லத்தின் கதவுகளைத் தாழிட்டு, திறவுகோலை, நூலகரிடம் ஒப்படைத்து விட்டு, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து விட்டுப் புறப்பட்டோம்.

       


திரு நடராசன்.

        உத்தமதானபுரம் அரசு நூலகத்தின் நூலகர்.

        சிரித்த முகத்துடன், திறவுகாலை வழங்கி, மனம் திறந்து பேசியது கேட்ட கேள்விகளுக்கு எல்லாம், முகம் கோணாது, புன்னகையுடன் பதிலளித்தது, வியப்பைத்தான் வாரி வழங்கியது.

        தமிழ்த் தாத்தா நினைவு இல்லத்திற்குப், பொருத்தமான, போற்றுதலுக்கு உரிய நூலகர்.


38 கருத்துகள்:

 1. "உ.வே.சா அவர்கள் வாழ்ந்த இல்லத்தை, அவர் வாழ்ந்த காலத்தில் இருந்தது போலவே அல்லவா பாதுகாத்திருக்க வேண்டும்" - முதலில் நினைவு இல்லப் படத்தைப் பார்த்தவுடனேயே தோன்றிய எண்ணம். அப்படி பழைய வடிவிலேயே புதுப்பித்திருந்தால்தான், காலச்சூழலைக் கண்முன் கொண்டுவரும். அல்லிக்கேணியில், பாரதியார் வீட்டைப் பழமை மாறாதவண்ணம் வைத்துள்ளார்கள். உள்ளே சென்றவுடன் (அந்த முற்றத்தைப் பார்த்தவுடன்) அந்தக் காலச்சூழல் நினைவுக்கு வரும்.

  தமிழுக்காக வாழ்ந்த பெரியோரின் இல்லத்துக்குச் சென்றுவந்தது மகிழ்ச்சி. அவருடைய (உ.வே.சா) வெளியீடுகள் அந்த நூலகத்தில் இருக்கின்றனவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam05 மார்ச், 2017
   திரு நெல்லைத் தமிழன், உவேசா அவர்களின் புத்தகங்கள் அவர் பெயரில் அமைந்திருக்கும் நூலகத்தில் சென்னை திருவான்மியூர்/பெசன்ட் நகர் (இரண்டு இடங்களில் எதுனு சரியாத் தெரியலை! அநேகமா பெசன்ட் நகர்னு நினைவு, கலாக்ஷேத்திரா செல்லும் வழினும் சொல்வாங்க) கிடைக்கின்றன.

   நீக்கு
 2. தாங்கள் சொல்லும் விதமே ஒரு பிரமிப்பு தருகிறது ஐயா...

  பதிலளிநீக்கு
 3. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் உழைப்பையும் விடா முயற்சியையும் நினைத்துப் பார்க்கும் பொழுதே மிக மிக பிரமிப்பாக இருக்கிறது. அவருடைய நினைவு இல்லத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை தங்களுடையப் பதிவு ஏற்படுத்திவிட்டது. நன்றி,

  பதிலளிநீக்கு
 4. சிலிர்ப்பான அனுபவம்.

  அறிவுக் கலை = அறிவுக்களை

  தம சுற்றிக்கொண்டே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. அருமையான அனுபவம். உங்களுக்கு கிடைத்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. நல்ல பதிவு.
  ஆசிரியரான தாங்கள் இதுபோன்ற மாமனிதர்கள் வாழ்ந்த இடங்கள் ,அவர்களது படைப்புகள்
  போன்றவற்றை இது போன்று அறிமுகப்படுத்துவதுடன் ஒவ்வொரு நாள் வகுப்பு ஆரம்பிக்குமுன்
  சில நிமிடங்கள் மாணவர்களுக்கு தெரியப்படுத்தலாம்.
  வாய்ப்பும் வசதியும் கிடைத்தால் சில மாணவ மணிகளை அங்கெல்லாம் அழைத்துச்சென்று வரலாம்.
  வாழ்த்துக்கள் கரந்தையாரே.

  பதிலளிநீக்கு
 7. அருமையான பதிவு.
  உ.வே.சா அவர்கள் இல்லத்தை கண்டு தரிசினம் செய்தோம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 8. தமிழ் வாழ்ந்த இல்லத்தை தரிசித்தேன்.. மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 9. //உ.வே.சா அவர்கள் வாழ்ந்த இல்லத்தை, அவர் வாழ்ந்த காலத்தில் இருந்தது போலவே அல்லவா பாதுகாத்திருக்க வேண்டும், அப்படியே அல்லவா பழுது நீக்கிப் பழைய உருவிலேயே அல்லவா புதுப்பித்திருக்க வேண்டும்.//

  பழமையைப் போற்றிப் பாதுகாப்பதில் நம்மவர்க்கு ஈடுபாடு இல்லை. உவேசா அவர்களின் சென்னை இல்லமான "தியாகராஜ விலாசம்" முற்றிலும் இடிக்கப்பட்டு விட்டது! மக்களுக்குக் கொஞ்சமானும் வருத்தம் இருந்திருந்தால் இடிக்க விட்டிருக்க மாட்டார்கள்! :( அருமை தெரியாத மனிதர்களாகி விட்டோம்! என்ன செய்யலாம்! :(

  பதிலளிநீக்கு
 10. திரு நெல்லைத் தமிழன், உவேசா அவர்களின் புத்தகங்கள் அவர் பெயரில் அமைந்திருக்கும் நூலகத்தில் சென்னை திருவான்மியூர்/பெசன்ட் நகர் (இரண்டு இடங்களில் எதுனு சரியாத் தெரியலை! அநேகமா பெசன்ட் நகர்னு நினைவு, கலாக்ஷேத்திரா செல்லும் வழினும் சொல்வாங்க) கிடைக்கின்றன.

  பதிலளிநீக்கு
 11. உ.வே.சா அவர்கள் வாழ்ந்த ( பிறந்த அல்ல) பழைய வீட்டை பலமுறை
  நான் பார்த்துள்ளேன். அவர் பிறந்த ஊர் சூரியமூலை ,அவரது தாயார் தலைப்பிரசவத்திற்காக தனது தாயார்வீட்டிற்கு சென்றபோது அங்குதான் பிறந்தார்
  இது பலருக்கு தெரியாத ஒன்று .இருப்பினும் அவரது தந்தை ஊரான
  உத்தமதானபுரம் வே.சாமிநாத ஐயர் என்பதே மரபு

  பதிலளிநீக்கு
 12. அன்புடன் பாவலர் தஞ்சை தர்மராசன்

  பதிலளிநீக்கு
 13. நண்பரே! உத்தமதானபுரத்திற்குச் சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது. உ.வே.சா எழுதிய என் சரித்திரம் என்னும் அவரது வாழ்க்கை வரலாற்று நூலை அனைவரும் படிக்க வேண்டும்.
  சென்னை திருவான்மியூர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

  பதிலளிநீக்கு
 14. எட்டயபுரத்தையும் சிறுடல்பட்டியையும் பார்த்திருக்கிறேன். நீங்கள் உத்தமதானபுரத்தைப் பார்த்திருக்கிரீர்கள். ஆகா, நான் மூன்று இடங்களையும் தரிசித்துவிட்டேன். உ.வெ.சா. மாதிரியான மனிதர்களும் நமக்கு முன்னே வாழ்ந்தார்கள் என்பதே, நாம் எப்படி வாழவேண்டும் என்பதற்கு இலட்சியமான அளவுகோலாக இருக்கிறது. நாம் போகவேண்டிய இடமும் செய்யவேண்டிய காரியங்களும் மிக அதிகம் பாக்கி உள்ளன.....
  -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

  பதிலளிநீக்கு
 15. உத்தமதானபுரம் தோன்றிய வரலாற்றை இப்போது தான் தெரிந்து கொண்டேன். உத்தமதானபுரம் எங்கிருக்கிறது, எப்படி அங்கு செல்ல வேன்டும் போன்ற விபரங்களை எழுதவில்லையே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், பாபநாசம் பேரூந்துநிலையம், பாபநாசம் தாலுக்கா அலுவலகம் வழியாகச் சென்று, வலது பக்கம் திரும்பி,புகை வண்டிக்கான இருப்புப் பாதையினைக் கடந்த, சிறிது தொலைவில் இடப்புறம் திரும்பிப் பயணித்தால், மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிற்றூர் உத்தமதானபுரம்.
   வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி சகோதரியாரே

   நீக்கு
  2. என் கேள்விக்கு பதில் சொல்லியமைக்கு அன்பு நன்றி!

   நீக்கு
 16. மிகவும் அருமையான பகிர்வு ஐயா...
  பகிர்வை ஆரம்பித்து நகர்த்தும் விதத்தில் தங்களை அடித்துக் கொள்ள முடியாது....
  அருமை... அருமை...

  பதிலளிநீக்கு
 17. அருமையான வரலாறு
  பெருமையுடன் பகிரும்
  தங்களின் முயற்சி
  தமிழ்த் தாத்தா
  மகாமகோபாத்யாய
  உ.வே.சாமிநாதய்யர்.

  தமிழை வாழ வைத்த
  பெரியோரைப் போற்றுவோம்!

  பதிலளிநீக்கு
 18. தமிழ்த்தாத்தா இருந்த இடத்தில் உங்களைக் கண்டு மகிழ்ச்சி. ஓர் அரிய பகிர்வு.

  பதிலளிநீக்கு
 19. மிக நல்ல பதிவு. ஒரு நண்பர் எழுதியிருப்பதைப் போல உ.வே.சா பிறந்த ஊர் ஆடுதுறைக்கு அருகிலுள்ள சூரியமூலை கிராமம். தந்தையின் ஊர் என்பதால் பாடங்களில் உத்தமதானபுரம் என்று எழுதுகிறார்கள். சமீபத்தில் திருவையாறு பாரதி இயக்கத்தினர் அங்கு சென்றிருந்தோம். நாங்கள் வந்திருப்பதை அறிந்து எதிர் வீட்டுக்காரர் வந்து நூலகத்தின் கதவைத் திறந்து விட்டார். நீங்கள் எழுதியுள்ளதைப் போல உ.வே.சா.வின் இல்லம் பழமை மாறாமல் காப்பாற்றி நினைவகமாக மாற்றியிருக்க வேண்டும். திருவையாற்றிலும் ஸ்ரீதியாகராஜர் இல்லம் இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட போதும் எதிர்ப்பு எழுந்தது. அவர் நூலகத்தை மேலும் விரிவு படுத்தவும், ஆய்வுக்காக பயன்படும்படி அமைத்தால் நல்லது. இந்த நினைவு இல்லம் திறப்பு விழாவிற்குச் சென்றிருந்தோம். அதில் பேசிய ஒரு அமைச்சர். உ.வேசாமிநாத ஐயர் என்பதற்கு பதில் வ.வே.சு.ஐயர் என்றே கடசி வரை குறிப்பிட்டது ஒரு சலசலப்பை உண்டாக்கியதை நினைவுகூர்கிறேன். நல்ல பயனுள்ள பதிவுகளைத் தரும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று பேசுபவர் நடுவில் உண்மையிலேயே தமிழுக்காக வாழ்ந்தவர் உவெ சா என்பது குறிப்பிடத்தக்கது பகிர்வுக்கு நன்றி சார்

  பதிலளிநீக்கு
 21. அரியவற்றை அறிய தொகுத்தளித்தமை அருமை.

  பதிலளிநீக்கு
 22. உத்தமதானபுரம் வந்த வரலாறு அந்த கால பிராமணீய ஆதிக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது !உ வே சா வரலாறு அவருடைய தமிழ்ப் பற்றை வெளிச்சம் போட்டு காட்டுகிறது :)

  பதிலளிநீக்கு
 23. அருமையான பகிர்வு ஐயா...

  உத்தமதானபுரத்தை அறிந்து கொண்டேன்...

  தமிழ்த் தாத்தா வாழ்ந்த இல்லத்தையும் தங்கள் வாயிலாக ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 24. நெகிழ்ச்சியான விடயம் நண்பரே
  த.ம.6

  பதிலளிநீக்கு
 25. உத்தமதானபுரம்,உத்தமமானபுரம்
  தமிழ் தாத்தா இன்னும் வாழ்ந்து
  கொண்டிருக்கிறார்,வாழ்க அவர் புகழ்/

  பதிலளிநீக்கு
 26. வணக்கம்
  ஐயா
  அறிய முடியாத கவலை மிக சிறப்பாக தொகுத்து தந்தமைக்கு நன்றி ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 27. நல்ல பதிவு.
  மிக்க நன்றி பதிவுக்கு.
  தமிழ் மணம்.7
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 28. தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் நினைவு இல்லம் கண்டு வந்து, சிறப்பாக எழுதியமைக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 29. மிக மிக அருமையான அனுபவம்11 அதை இங்குப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி.
  இணையப் பிரச்சனை இருந்ததால் வர இயலவில்லை...இப்போதுதான் வர இயன்றது நண்பரே/சகோ!

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு