28 மார்ச் 2017

குறள் கொடுத்தவர்


  

   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன் தோன்றி, இன்றும் பொய்யா மொழி என்றும், தமிழ் மறை என்றும், உலகப் பொது மறை என்றும் பலப்பலவாகப் போற்றப்படும் நூல் திருக்குறள்.

   பைபிளுக்கு அடுத்தபடியாக, அதிக எண்ணிக்கையிலான உலக மொழிகளில், மொழி மாற்றம் செய்யப்பெற்ற பெருமைமிகு நூலும் திருக்குறளே.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக.

     கற்க வேண்டிய நூல்களை, கசடின்றி, முழுமையாய் கற்று, அதன் வழி நட என நமக்கு நல் வழிகாட்டும் திருக்குறளை, பள்ளி மாணவ, மாணவியர் உள்ளத்தில் பசுமரத்ததாணி போல் பதிய வைக்க வேண்டுமல்லவா?


    நாளைய உலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள், மாணவர்கள்தானே.

    ஒரு காலத்தில் பத்தாம் வகுப்புப் பாடத் திட்டத்தில் நூறு குறள்கள் இருந்தன, அதுவும் தனியொரு நூலாய் இருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா?

     நம்பித்தான் ஆக வேண்டும்.

     பத்தாம் வகுப்பில் நூறு குறள்கள், ஒன்பதாம் வகுப்பில் 90 குறள்கள், எட்டாம் வகுப்பில் 80 குறள்கள், ஏழாம் வகுப்பில் 70 குறள்கள், ஆறாம் வகுப்பில் 60 குறள்கள்.

      ஒவ்வொரு வகுப்பிலும் தனிப்பாடமாய், தனிப் புத்தகமாய் திருக்குறள்.

      நம்புவீர்களா?

     ஆனால் இன்று பத்தாம் வகுப்பில் 40 குறள்கள், ஒன்பதாம் வகுப்பில் பருவத்திற்கு பத்து குறள்கள், ஆறு, ஏழு, மற்றும் எட்டாம் வகுப்புகளில், வகுப்பிற்கு இருபதே இருபது குறள்கள்.


       திருக்குறள் படிப்பதற்கல்ல.

       அதன் வழி நடப்பதற்கு.

திருக்குறளுக்குக் கோயில் எழுப்பி, அறம்., பொருள், இன்பம் என்னும் முப்பாலுக்கும், மூன்று சிறு குன்றுகளை, தெய்வமாக, கருவறையில் அமரவைத்து, மூன்று குன்றுகளுக்கு முன், இரண்டு காலடித் தடங்களை அமைத்து, குறள் என்பது படிப்பதற்கு மட்டுமல்ல, படித்தபின் அதன் வழி நடப்பதற்கு என அறிவுறுத்துவார் திருவள்ளுவர் தவச்சாலையின் நிறுவுனர் தமிழ்க் கடல் புலவர் இரா. இளங்குமரனார் ஐயா அவர்கள்.

       வாழ வழிகாட்டும் திருக்குறளை, வாழ்வியல் பாதையில், நம் கரம் பற்றி, அழைத்துச் செல்லும திருக்குறளை மேலும், மேலும படிக்க, படித்தபின் அதன் வழி தவழ, எழுந்து நடக்க, நம் மாணவர்களுக்கு நல் வாய்ப்பினை வழங்கிட வேண்டுமல்லவா.

        ஏக்கப் பெருமூச்சுதான் வருகிறது.

         அது அந்தக் காலம்.

         திருக்குறளை தனியொரு நூலாய் புகுத்தியவர் ஒரு முதல்வர்.

          நம் முதல்வர்.

         இவரது ஆட்சிக்கு முன்பும் சரி, இவரது ஆட்சிக்குப் பின்பும் சரி, இதுநாள் வரை, திருக்குறள் தனிப்பாடமாக இல்லை, இல்லை, இல்லவே இல்லை.

        நண்பர்களே, இவர் யார் தெரியுமா?

       இவர்தான் முதன் முதலில், திருச்சியில், மாவட்ட அளவில், தமிழை ஆட்சி மொழியாகப் புகுத்தியவர்.

       மகாகவி பாரதியின் பாடல்களை நாட்டுடமை ஆக்கியவர்.

       முதன் முதலாய், கம்பனுக்கும், பாரதிக்கும் அரசு விழா எடுத்தவர்.

       தமிழ்க் கவிதையினையும், தமிழ்க் கவிஞர்களையும், பெருமை படுத்திட, ஆஸ்தான கவிஞர் என்ற பதவியை முதன் முதலில் ஏற்படுத்தியவர்.

       இனி எல்லாத் தமிழ் நாட்டுக் கோயில்களிலும், இறைவன் இறைவியின் திருப்பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக மாறவேண்டும், மாற்றப்பட வேண்டும் என்று முதன் முதலாய் ஆணையிட்டவர்.

        மறக்கடிக்கப் பட்டிருந்த அந்த தெய்வங்களின், தமிழ்ப் பெயர்களை, தகுதி மிக்க தமிழறிஞர்களைக் கொண்டு மீட்டெடுத்து, கோயில்களின், முன் வாசலில் பெரும் எழுத்துக்களில் எழுத வைத்தவர்.

       திருவிழா விளம்பரங்கள், துண்டறிக்கைகள் போன்ற கோவில் தொடர்பான அனைத்துப் பயன்பாட்டிலும தமிழே இடம் பெற வேண்டும் என அரசாணைப் பிறப்பித்தவர்.

               ஆனால் இன்று, தமிழ்ப் பெயர்களை எல்லாம், வட மொழிக்கு மாற்றிக் கொண்டே இருக்கிறோம். வேதனை.

         இந்திய மொழிகளுள் முதன் முதலாய், தமிழில் பத்துத் தொகுதிகளாக, கலைக் களஞ்சியம் வெளி வந்ததும் இவரால்தான், இவரது ஆட்சியில்தான்.


இவர்தான்
நம் பெருமைமிகு தமிழ் நாட்டின்
முன்னாள் முதலமைச்சர்


ஓமந்தூரார்

ஓ.பி.ராமசாமி ரெட்டியார்

ஓமந்தூரார், பெரிய வளைவு, ராமசாமி ரெட்டியார்.

ஓமந்தூராரின் நினைவினைப் போற்றுவோம்.

      26 கருத்துகள்:

 1. இதுவரை அறியாத செய்தி.குறளின் மாண்பை உணர்த்தும் பதிவு

  பதிலளிநீக்கு
 2. நல்ல செய்திகளை அளித்த இனிய பதிவு..

  பதிலளிநீக்கு
 3. முதல்வர்களின் முதலவர் பட்டம் முற்றிலும் பொருத்தமே :)

  பதிலளிநீக்கு
 4. நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் காமத்துப் பாலிலிருந்து மிக மிக அழகான கருத்துகளும், நிகழ்வுகளும் இருப்பது பற்றி இளைஞர் குழு ஒன்று மிக அழகாகப் பேசியது. அதைக் கேட்டதிலிருந்து எனக்கொரு நினைவு: தமிழாசிரியர்கள் காமத்துப் பால் பற்றி ஏதும் பேசியதாக என் மாணவப் பருவத்தில் நினைவில்லை. ஒரு வேளை அவை பற்றியும் பேசியிருந்தால் அதுவும் ஒரு அழகிய கவிதைத் தொகுப்பாகப் பலராலும் பார்க்கப்பட்டிருக்கலாம்; இன்னும் அதன் வீச்சு அகலமாக இருந்திருக்கலாம்.
  இனிப்பு சேரக்கப்பட்ட மருந்து போல், காமத்துப் பாலோடு மற்ற இரு பால்களும் மக்களுக்கு இன்னும் அதிகமாக, எளிதாகப் போய்ச் சேர்ந்திருக்குமோ என்று எனக்கு அன்று தோன்றியது.
  பேருந்துகளில் உள்ள குறள்கள் பொது அறிவைப் போதிக்கின்றன. நடு நடுவே காதலும் சேர்ந்து வந்திருந்தால் இன்னும் அது அதிகமாக மக்களிடையே சென்று சேர்ந்திருக்கும் என்பது என் கருத்து.
  சரியோ … தவறோ..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தருமி அய்யாவின் கருத்தை வழிமொழிகிறேன்.

   நீக்கு
 5. நூறு குறள்களாவது பத்தாம் வகுப்பில் இருந்து போதிக்கப்படவேண்டும் என்பதே என் வேண்டுகோள். நூறு குறள் என்றால் 200 வரிகள் தான். பெரிய சுமையில்லை. இதைச் செய்ய ஏன் கலைஞர் ஆட்சியில் முயற்சி எடுக்கவில்லை? தமிழ் தமிழ் என்று என்று பேசும் இவர்கள் தமிழுக்காக என்ன தான் செய்தார்கள்?

  பதிலளிநீக்கு
 6. நல்ல பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. சிறுவயதில் 100 குறள்கள் மனப்பாடம் செய்து பள்ளியில் ஒப்பித்தது நினைவுக்கு வருகிறது.

  அந்நாள் முதல்வர்கள் போல இனி வருவார்களா..

  தம +1

  பதிலளிநீக்கு
 8. வியக்கத்தகு விந்தை மனிதர் என்றும் மாணவர்கள் மனதில் நிற்க கூடியவர்

  பதிலளிநீக்கு
 9. தமிழ்மறையாம் திருக்குறளுக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் முதல்வர்களுக்கு முதல்வராம் ஓமாந்தூரார் ஆற்றியுள்ள அரும்பணி என்றென்றும் கல்லில் எழுத்தாக நிலைத்திருக்கும். அகழ்ந்தளித்த தங்களைப் பாராட்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 10. ஒரு சந்தேகம் ஓமந்தூராரின் தாய் மொழி தமிழா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புலவர் இராமாநுசம்29 மார்ச், 2017
   உத்தமர் ஓமந்தூராரின் தாய் மொழி தெலுங்கு!இருந்தாலும் அவரின் தமிழ் பற்றை.பின் வந்த, தமிழைச் சொல்லி ஆட்சிக்கு
   வந்த திராவிட இயக்க ஆட்சிகள் தமிழை வளர வாழவைக்க முயலால் அழிக்கவே செய்தன! இன்னும் செய்து கொண்டு இருக்கின்றன! உண்மை இதுதான்

   நீக்கு
 11. ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் கடிதத்துடன் : தணிகையின் பார்வையில் தலையாய குறள்கள் 100 என்ற ஒரு அரிய நூலை மரங்கள்: இலையாக பழமாக விறகாக மழையாக....நீங்கள் என்பது போன்ற சில புதுக் கவிதைகளுடன், பட்டுக்கோட்டையின் ...எல்லாந்தான் படிச்சீங்க என்ன பண்ணிக் கிழிச்சீங்க என்ற பாடலுடன் எனது முன்னுரையுடன் ரூ.2.50க்கு 2005ல் ஒரு கையளவு நூலை வெளியிட்டு ஆயிரக்கணக்கான விதைகளாக எல்லாப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் பள்ளி பள்ளியாக ஏறிச் சென்று விநியோகித்தேன் என்பது உங்கள் பதிவை படித்த போது எனக்கு நினைவில் வந்த செய்தி....நன்றி வணக்கம். பணியும் தொண்டும் தொடர வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. நான் படித்தபோது நான்கு அதிகாரங்கள் இருந்ததாக நினைப்பு . என்னைக் கேட்டால்ரைம்ஸ் மாதிரி நர்சரி லெவலிலிருந்தே ஆரம்பிக்கலாம்

  பதிலளிநீக்கு
 13. உத்தமர் ஓமந்தூராரின் தாய் மொழி தெலுங்கு!இருந்தாலும் அவரின் தமிழ் பற்றை.பின் வந்த, தமிழைச் சொல்லி ஆட்சிக்கு
  வந்த திராவிட இயக்க ஆட்சிகள் தமிழை வளர வாழவைக்க முயலால் அழிக்கவே செய்தன! இன்னும் செய்து கொண்டு இருக்கின்றன! உண்மை இதுதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஐயா!தங்களின் தய்மொழியும் தெலுங்குதானே.தமிழில் கவி மழை அல்லவா பொழிந்து கொண்டிருக்கிறீர்கள்.தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களை விட பிறருக்கே தமிழ்மீது அதிகமாக பற்று இருப்பதை காண முடிகிறது.எனது தாய்மொழ்யும் தமிழ் அல்ல.

   நீக்கு
 14. ஓமந்தூராரின் ஒப்பற்றப் பணியை எடுத்துரைத்த பாங்கு அருமை.
  நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக, அறம் பொருள் முழுவதும் பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்க்க அரசு முடிவு செய்துள்ளது.

  பதிலளிநீக்கு
 15. ஓமந்தூரரர் குறித்து அற்புதமான தகவல்கள்
  வாழ்த்துகள்
  தம

  பதிலளிநீக்கு
 16. வாக்குப் பட்டை எங்கே ?

  பதிலளிநீக்கு
 17. அருமையான தகவல்கள்....அய்யா...

  பதிலளிநீக்கு
 18. தமிழால் வளார்ந்தவர்களைவிட
  ஓமந்தூராரின் தமிழ் சேவை
  பிரமிப்பூட்டுகிறது
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 19. ஓமந்தூரார் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் அவர்களைப் போல, ஒருவர் இருந்தால் போதும் உலகெங்கும் தமிழ் மலருமே!
  அவரது நினைவைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ஐயா!
  "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிடவுள்ளேன்.
  தங்கள் கரந்தை தமிழ் சங்கமூடாகத் தாங்களும் தங்கள் நண்பர்களுமாக அதற்கான கட்டுரைகளை ஆக்கி அனுப்பமுடியுமா?
  முழு விரிப்புமறிய
  https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு