11 மார்ச் 2017

தமனா
     அன்பும் கருணையும், பெரும் மலைகளையே புரட்டிப்போட வல்லவை. குறுக்கே நிற்கும் தடைக் கற்களை உடைத்துத் தவிடுபொடி ஆக்குங்கள். அங்கு ஓர் அழகான பூங்காவை அமையுங்கள். அங்கு அனைத்து வண்ணங்களிலும் பூக்கள் பூத்துக் குலுங்கட்டும்.

    

         சியாமா சோனா.

     ராஜஸ்தான் மாநிலத்தில், மிகவும் செல்வச் செழிப்பானக் குடும்பத்தில் பிறந்தவர். 

      நன்கு படித்தவர்.

     புதுதில்லியில், ஒரு பள்ளியில் ஆசிரியர்.

     ஏராளமானக் கனவுகளோடும், எதிர்கால இலட்சியங்களோடும், ஒரு இராணுவ அதிகாரியைக் கரம் பற்றினார்.

     வாழ்வும் இனிமையாகவே நகர்ந்தது.

     சியாமா கருவுற்றார்.

     குழந்தை வயிற்றில் வளர வளர, சியாமாவின் ஆசைகளும் வளர்ந்து கொண்டே சென்றன.


     மகனோ அல்லது மகளோ, என்னில் இருந்து, ஒரு புதிய உயிர் கை, கால் முளைத்து வெளியே வரப்போகிறது. அம்மா என்று அன்பொழுக என்னை அழைக்கப் போகிறது.

      அந்நாள் விரைவில் வாராதா என்று எண்ணி எண்ணி ஏங்கினார்.

      அந்நாளும் வந்தது.

      பெண் குழந்தை.

     பெண் குழந்தை என்றால், கொள்ளை அழகோடு, ஒரு பெண் குழந்தை.

     சியாமாவிற்குத் தன் மழலையைக் கொஞ்ச, சீராட்ட, தாலாட்ட, ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் போதவில்லை.

     குழந்தையின் முகத்தினைப் பார்த்துப் பார்த்து மயங்கினார்.

     மழலையின் அழகில் சொக்கிப் போனார்.

     தமனா.

     தன் அன்பு மகளுக்கு, தன் ஆசை மகளுக்குத் தமனா எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

    தமனா.

    நாட்கள் மெல்ல மெல்ல நகர்ந்தன.

    மாதங்கள் ஒவ்வொன்றாய் மாற, மாற, தமனாவிடமும் சிறிது சிறிதாய் பெரு மாற்றங்கள் மெல்ல மெல்லத் தலைகாட்டத் தொடங்கின.

    அம்மா.

     இந்த இன்பச் சொல்லைத், தன் மழலையின் பிஞ்சு உதடுகள் உச்சரிக்கும் அழகைக் காண, தேனினும் இனிய அந்த, அற்புத இராகத்தைத் தன் காதுகளாள் கேட்டுக் குளிர, எத்துனை எத்துனை கனவு கண்டிருப்பார் சியாமா.

    அம்மா

    அந்த அற்புதச் சொல்லை, அம் மழலை உச்சரிக்கவே இல்லை.

     துவண்டு போனார் சியாமா.

     பேசும் சக்தி இல்லையோ?

     வேதனையில் துடித்துப் போனார்.

     பல நாட்கள், பல இரவுகள், தூங்காமல், ஒரு நொடி கூட, கண் துஞ்சாமல், தமனா, தமனா என அன்பொழுக அழைத்தும், குழந்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

     காதுகளுக்குக் கேட்கும் சக்தி இல்லையோ?

     துடி துடித்துப் போனார்.

     தமனா தன் தாயை, நேருக்கு நேராய் பார்க்கக் கூட மறுக்கும் மழலையாய், தனிமை விரும்பியாய் வளர்ந்தாள்.

      ஆசையோடு கொஞ்சுவதற்குத் தூக்கினால், திமிறிக் கொண்டு விலகினாள்.

      தமனா நடக்க மறுத்தாள், பேச மறுத்தாள், உணவினை விழுங்கக் கூட மறுத்தாள்.

      என்ன ஆயிற்று தமனா உனக்கு?

      கேள்வி கேட்டுக் கேட்டு அசந்து போனார் சியாமா.

      அழுது அழுது கண்கள் வறண்டு போனார்.

      தன் கனவுக் கோட்டை, தன் கற்பனைக் கோட்டை, தன் இலட்சியக் கோட்டை, வெடி வைத்தாற்போல், அடியோடு தகர்ந்து போய்விட்டதை, சியாமாவால் தாங்க முடியவில்லை.

      என்ன ஆயிற்று தமனா உனக்கு?

      ஏன் இப்படி இருக்கிறாய்?

      விரக்தியில் நொந்து போனார்.

      விரக்தி, மெல்ல மெல்ல உச்சம் தொட, கடும் கோபம் கொண்டு, வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நெறுக்கினார்.

      என்ன ஆயிற்று என் மகளுக்கு?

      வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் உடைய உடைய, கோபம் மெல்ல தணிந்தது.

       விரக்தி மெல்ல விலகியது.

       மெதுவாய், சமநிலைக்கு வந்து நிதானமாய் யோசித்தார்.

        என் குழந்தைக்கு என்ன பிரச்சினை?

        என்ன ஆயிற்று என் தமனாவிற்கு?

        மருத்துவர்களை அணுகினார்.

        பின்னர்தான் தெரிந்தது.

        ஆயிரத்தில் மூன்று அல்லது நான்கு குழந்தைகளைத் தாக்குகின்ற, கொடு நோய், தமனாவிடம் தஞ்சம் புகுந்திருப்பது புரிந்தது.

         பெருமூளை வாதம்.

         ஆ ட் டி ச ம்.

      ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள, நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறையாடு.

      ஆட்டிசம்

      இந்திய மக்கள் தொகையில், ஆட்டிசத்தால் பாதிக்கப் பட்டக் குழந்தைகளின் எண்ணிக்கை, ஓராயிரம் ஈராயிரம் அல்ல, முழுதாய் இருபது இலட்சம்.

      பிறந்த குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வளர்ச்சி இருக்கும்.

      தாயின் முகம் பார்ப்பது

      சிரிப்பது

      பேசுவது

      ஆ ட் டி ச ம்

      சில குழந்தைகள் பேசத் தெரியாமல் இருப்பார்கள்.

      சிலர் சிரிக்காமலே இருப்பார்கள்

      ஒரே இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள்

      பேசவே மாட்டார்கள்

      பேசினால், பேசியதையேத் திரும்பத் திரும்ப பேசுவார்கள்

      தனித்தே இருப்பார்கள்

      மற்ற குழந்தைகளோடு சேரவே மாட்டார்கள்

       ஒரு பொருளையோ, ஒரு நபரையோ, விரல் நீட்டி, சுட்டிக் காட்டக் கூட இயலாதவர்களாய் இருப்பார்கள்.

       தூங்க மாட்டார்கள்

       கட்டுப்பட மாட்டார்கள்

       ஆட்டிசம்

       தமனா, கருவறையிலிருந்து வெளிவரும் பொழுதே, ஆட்டிசத்தையும் உடன் அழைத்து வந்து விட்டாள்,

       என்ன செய்வது?

       எப்படி மீட்டெடுப்பது?

       தாயாக மட்டுமே தவித்த சியாமா, மெல்ல மெல்ல மீண்டு வந்தார்.

       தான் தாய் மட்டும்தானா?

       ஆசிரியரும் அல்லவா?

        ஆண்டுதோறும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து, அவர்களுக்கு வாழ வழி காட்டும் ஆசிரியரும் அல்லவா?

         என் மாணவன் ஒருவனுக்கு, இந்தப் பிரச்சினை வந்தால், என்ன செய்வேன்?

        யோசித்தார்.

        தாயாக, எண்ணி எண்ணித் துவண்டவர், ஆசிரியராய் மீண்டெழுந்து வந்தார்.

      என்ன செய்ய வேண்டும்?

       மருத்துவர்களைக் கேள்விகளால் துளைத்தெடுத்தார்.

       மருத்துவ நூல்களைத் தேடித் தேடி படித்தார்.

       முடிவில் தெளிந்தார்.

       ஆட்டிசம் என்பது நோயல்ல

         அது ஒருவகை மன நிலை.

        இம் மனநிலையால் பாதிக்கப் பட்டக் குழந்தைகள், பல குறைபாடுகளுடன் காணப்பட்டாலும், அவர்களிடமும், ஏதேனும் ஒரு அதீதத் திறமை நிச்சயம், ஒளிந்து இருக்கும், நமக்குத் தெரியாமல் மறைந்து இருக்கும்.

       ஆட்டிசத்தால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுடன், அதிக நேரத்தைச் செலவிடுவதன் மூலம், அவர்களுள் ஒளிந்திருக்கும், மறைந்திருக்கும் திறமையினை அறியலாம்.

       பின் மெல்ல மெல்ல இவர்களைப் பழக்கலாம்.

       பேசும் பயிற்சி, பழகும் பயிற்சி என அயராமல் பயிற்சி அளித்து, இவர்களது குறைகளை ஓரளவேனும் போக்கலாம்.

        தாயே, ஆசிரியரும் ஆனார்.

       சியாமா ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தையும், தமனாவுடன் செலவிட்டார்.

       மெல்ல மெல்ல தமனாவைப் புரிந்து கொண்டார்.

       அதைவிட மெல்ல மெல்ல, தமனாவும் தன் தாயைப் புரிந்து கொண்டாள்.

       தமனாவின் வயதும் மெல்ல மெல்ல ஏறியது.

       பள்ளியில் சேர்த்தாக வேண்டுமே?

       சியாமா ஒவ்வொரு பள்ளியாய் ஏறி, ஏறி இறங்கினார்.

        ஒரு பள்ளி கூட, தமனாவை, மாணவியாய் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

         தான் ஆசிரியையாகப் பணியாற்றிய பள்ளி கூட, தன் மகளை ஏற்க மறுத்த நிலை கண்டு, சியாமா கொதித்துத்தான் போனார்.

         செல்வத்திற்குப் பஞ்சமில்லை, செல்வாக்கிற்குக் கொஞ்சமும் குறைவில்லை.

          இருந்தும், தனக்கே இந்நிலை என்றால், வாழ்வில் நலிந்த நிலையில், வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் பெற்றோருக்கு, இப்படியோர் பிள்ளை பிறக்குமானால், அம் மழலையின் நிலைதான் என்ன?

      அதன் எதிர்காலம்தான் என்ன?

      நினைக்க நினைக்க நெஞ்சம் கொதித்தது.

      எதற்காக மற்றவர்களிடம் கெஞ்ச வேண்டும்.

      ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தவர், ஒரு முடிவிற்கு வந்தவராய் துணிந்து இறங்கினார்.

       தன் மகளின் பெயரிலேயே ஒரு அமைப்பினை நிறுவினார்.


Tamana Association

      பின், தன் மகளின் பெயரிலேயே ஒரு சிறப்புப் பள்ளியைத் தொடங்கினார்.


தமனா சிறப்புப் பள்ளி

Tamana Special School

    1992 ஆம் ஆண்டு, இப்பள்ளியைத் திறந்து வைத்தவர் இளவரசி டயனா.

     இதனைத் தொடர்ந்து ஒரு தொழிற் பயிற்சி மையம்.

2003 இல் மேலும் ஒரு பள்ளி

தமனா நம்பிக்கை பள்ளி


Tamana School of Hope

இந்தியாவில் பத்து சதவீத மக்கள் மூளை வளர்ச்சி தொடர்பான நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களுடைய சிறப்புத் தேவைகளை கவனித்துக் கொள்ள, நம் அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எங்களுடைய முயற்சிகளுக்கு தேவையான பணத்தைத் திரட்ட, நாங்கள் வெகுவாக அல்லலுற்றோம்.

அரசு எங்களுக்கு உதவியிருந்தால், இப்படிப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையில், ஒரு பெரும் தாக்கத்தை எங்களால் ஏற்படுத்தியிருக்க முடியும்.

     2003 இல் தமனா நம்பிக்கைப் பள்ளியின் துவக்க விழாவின்போது, சியாமாவிடமிருந்து வெளிப்பட்ட, வேதனைமிகு வார்த்தைகள்தான் இவை.

     அரசு பணத்தைத் தரவில்லையே தவிர, சியாமாவிற்கு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை வாரி வாரி வழங்கியது.


சியாமாவின் தளரா முயற்சியை
தன்னலமற்ற தியாகத்தை, தொண்டு உள்ளத்தை உணர்ந்து
தமனா சிறப்புப் பள்ளியைத்
திறந்து வைத்தவர்
யார் தெரியுமா?

அன்பும் கருணையும் பெரும் மலைகளையே புரட்டிப்போட வல்லவை. குறுக்கே நிற்கும் தடைக் கற்களை உடைத்து தவிடுபொடி ஆக்குங்கள். அங்கு ஓர் அழகான பூங்காவை அமையுங்கள். அங்கு அனைத்து வண்ணங்களிலும் பூக்கள் பூத்துக் குலுங்கட்டும்.

மூளைத் திறனில் குறைபாடு கொணட குழந்தைகளையும், மற்றக் குழந்தைகளைப் போலவே, அன்புடன் சீராட்டி, அவர்களுக்கும் கல்வி கொடுத்தால், அவர்கள் வருங்கால நட்சத்திரங்களாக மலர்வர், வாழ்க்கையில் விண்ணளாவப் பறப்பர்.


முன்னாள் குடியரசுத் தலைவர்
எந்நாளும் இளைஞர்களின் எழுச்சி நாயகர்
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

சியாமா போற்றுதலுக்கு உரியவர்
போற்றுவோம்
தன்னலமற்றத் தொண்டு தொடர வாழ்த்துவோம்.

-------------


தமனா பேசுகிறார்- கேளுங்களேன்


நன்றி
இணையத்தில் கிடைத்த நேர்காணல்


தமனா என்னும் இப்பதிவினைப் படித்த திரு எஸ்.வி.வேணுகோபாலன் ஐயா அவர்கள், ஆட்டிசம் பற்றிய தனது கட்டுரை ஒன்றினை அனுப்பியுள்ளார்கள்.
ஆட்டிசம் பற்றி விரிவானத் தகவல்களை அறிய ஐயா அவர்களின் கட்டுரை பேருதவி புரியும்.
ஐயா அவர்களின் கட்டுரையினை, தங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகின்றேன்
நன்றி ஐயா


இந்தக் கட்டுரை புதிய ஆசிரியன்: மே\ 2013ல் வெளிவந்தது...

எஸ் வி வி 

ஆட்டிசம் : தன் முனைப்புக் குறைபாடு 


குறைபாடுகளை மீறிக் 
குழந்தைகளை நேசிக்கப் பழகுவோம் 

எஸ் வி வேணுகோபாலன் அந்தக் குழந்தைக்கு நான்கு வயது. இன்னும் பேசவில்லை. கையில் உள்ள புத்தகத்தில் ஒரு படத்தைக் காட்டி "ஆப்பிள், ஆப்பிள்" என்று அதன் அம்மா கத்துகிறாள்....அந்தக் குழந்தை, "ஆமாம். இது ஆப்பிள்..எனக்குத் தெரியும்" என்று சொல்லத் துடிக்கிறது...ஆனால் வாய் திறந்து அதைச் சொல்ல முடியாமல், சொல்ல இயலவில்லை என்பதையும் தெரிவிக்கத் தெரியாமல் உள்ளூர தத்தளிக்கிறது....தனது மகன் பெரிய விஞ்ஞானியாக, நியோரோ மருத்துவனாக வருவான் என்று கொஞ்சிச் சீராட்டி வளர்த்த குழந்தை 'ஏன் இப்படி இருக்கிறது என்று அவருக்கு எடுத்துச் சொல்லக் கூட யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. மருத்துவ உலகமே கூட ஆட்டிசம் என்றால் என்ன என்று அதிகம் அறிந்திராத காலம் அது

கிருஷ்ணா நாராயணன் தான் நான்கு வயதில் எப்படி இருந்தோம், அடுத்தடுத்து எப்படி சுற்றி இருக்கும் சமூகத்தால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானோம், சாதாரண பள்ளிகள் எப்படி தன்னை நிராகரித்தன....என்றெல்லாம் தமக்கு 23 வயதான பிறகு இந்த உலகுக்கே திரும்ப எடுத்துச் சொல்லும் திறம் பெற்றார். விவரிக்க இயலாத அளவு பொறுமையும், நம்பிக்கையும்,போராட்ட உணர்வும் மிக்க தமது பெற்றோர்,தமக்கு உதவிய மருத்துவர்கள், குறிப்பாக ஆயுர்வேத மருத்துவம் இவற்றுக்குத் தாம் கடமைப் பட்டிருப்போம் என்று அவரே தமது சொந்தக் கதையை, "வீணாக்கப்பட்ட திறமைகள்: ஆட்டிசம் பாதிப்புள்ள ஒருவரின் மன ஓட்டங்கள்" என்ற தலைப்பில் (Wasted Talent; Musings of an Autisticஒரு நூலாக வெளியிட்டும் இருக்கிறார்.

அது சரி, ஆட்டிசம் என்றால் என்ன...


அண்மையில் பாரதி புத்தகாலய வெளியீடாக வந்திருக்கும் "ஆட்டிசம்: சில புரிதல்கள்" என்ற தமது எளிய நூலில், யெஸ் பாலபாரதி சொற்களில் சொல்வதானால், ஆட்டிசம் என்பது ஒரு தன்முனைப்புக் குறைபாடு. பொதுவான குழந்தைகள் போல இருக்க இயலாத தன்மை அதன் வெளிப்பாடுகளில் தெரியும். ஒதுங்கி இருப்பது, பொருட்களைப் பொருத்தமில்லாமல் பற்றிக் கொள்வது, கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது, மற்ற குழந்தைகளோடு கலந்து பழக, விளையாட ஆர்வம் அற்று இருப்பது, அச்சம், ஆபத்து போன்றவற்றை உணராதிருப்பது, வழக்கமான கற்பித்தல் முறையில் ஈடுபாடு காட்டாதது, வலியை உணராதிருப்பது, கைகளைத் தட்டிக் குதிப்பது போன்ற வித்தியாசமான நடவடிக்கைகள், பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பார்க்காமல் இருப்பது, சில போது காத்து கேளாதது போல் இருத்தல், காரணமற்ற சிரிப்பு, அதீதமான பதட்டம், அல்லது அதீதமான மந்தம், சில செயல்களைச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல் இல்லாமல் இருப்பது....என பலவிதங்களில் ஆட்டிசத்தின் பாதிப்பு வெளிப்படுகிறது

வம்சாவழியாக ஒருவேளை இந்த பிரச்சனைகள் ஏற்படக் கூடும் அல்லது பிறவியில் இப்படி தோன்றுகிறது. கண்ணாடி நியூரான்கள் என்ற மூளை செல்கள் அமைப்பில் ஏற்படும் குறைபாடு காரணமாகத் தான் சமூக புரிதல் அற்ற, வலிகள் தெரியாத தன்மை நேருகிறது என்று ஒரு கருத்தும் முன்வைக்கப் படுகிறது. பிறந்தவுடன் இந்தக் குறைபாட்டை அறிய இயலாது.சியல் ஆண்டுகள் பிறகே உணர முடிகிறது.

ஒரு குழந்தை பிறக்கும் விதத்தில் இருந்து அதன் வளர்ச்சிப் போக்குக்கான இயல்பான படி நிலைகளுக்கு மைல் கற்கள் என்ற அளவீடு வைத்திருக்கின்றனர். பிறந்த குழந்தை அழுகிறதா என்பதில் இருந்து அது தவழ்வது, குப்புறப் படுப்பது, தளர்நடை போடுவது, பேச்சு வருவது....என செல்கிறது இந்த அளவுகோல்கள். குறிப்பிட்ட மாதத்தில், வருடத்தில் இன்னதின்னது நிகழாது காலம் கடக்கும்போது குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அது சாதாரண பிரச்சனை தானா, கவலைப் படவேண்டியதில்லையா அல்லது, கவனம் செலுத்தவேண்டிய குறைபாடு ஏதேனும் உள்ளதா என்பதை உரிய ஆலோசனை தருபவரிடம் கேட்டறிய வேண்டியிருக்கிறது

தனது குழந்தைக்கு என்ன பிரச்சனை என்று அமெரிக்க மருத்துவர்களுக்கே சொல்லத் தெரிந்திருக்கவில்லை என்கிறார் நாம் மேலே பார்த்த கிருஷ்ணாவின் தாய். யெஸ் பாலபாரதி அவர்களது அனுபவமும் அதே தான். அவ்வளவு ஏன், பாலபாரதியின் நூலை வெளியிட்ட மருத்துவர் தேவகி அவர்கள், தானே மருத்துவராக இருந்தும் தனது மகனுக்கு ஆட்டிசம் பிரச்சனை இருப்பது தனக்கும் தெரியவில்லை, மருத்துவ உலகமும் அது பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை என்றார். தான் மருத்துவக் கல்வி பயிலும்போது, செரிபிரல் பால்சி உள்ளிட்ட விஷயங்கள் தான் கற்றபோதிலும்ஆட்டிசம் என்பது பாட திட்டத்திலேயே இருக்கவில்லை என்ற அவர், தற்போது சேர்த்திருக்கப் பட்டிருப்பதாகவும் சொன்னார்

இந்தியாவில் இருபது லட்சம் குழந்தைகள் ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்கள் என சில ஆண்டுகள் வரையிலும் சொல்லப்பட்டு வந்ததாகவும், 2013ல் 88க்கு 1 குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது, அனால் சரியான புள்ளிவிவரங்கள் இல்லை என்றும் பாலபாரதி தமது நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஆட்டிசம் குறித்த போதிய விழிப்புணர்வு அரசின் தரப்பிலோ, சமூக அளவிலோ, பெற்றோர் மத்தியிலோ இல்லாதிருப்பது இப்படியான விஷயத்தை எப்படி அணுகுவது, சிகிச்சை முறைகள் என்னென்ன போன்றவை குறித்த விஷயங்களையும் பரவலாக அறிய முடியாதபடி வைத்திருக்கிறது. அண்மையில், ஆட்டிசம் குறித்து ஹரிதாஸ் என்ற திரைப்படத்தை எடுத்த இயக்குனர் ஜி என் ஆர் குமாரவேல், அதன் அடுத்த கட்ட பிரச்சனைகளை முன்வைத்து இரண்டாம் பாகமாக இன்னொரு படம் எடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார். பாலபாரதியின் நூல் வெளியீட்டில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் டி கே ரங்கராஜன், அந்த நூலை இந்தியில் மொழியாக்கம் செய்யவேண்டும் என்றும் மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டது முக்கியமான விஷயம். இது தனிப்பட்ட பெற்றோர் பிரச்சனை அல்ல, சமூகத்தின் பிரச்சனை என்றார் அவர்

என் குழந்தை மற்ற குழந்தைகள் போல இல்லை என்ற ஒற்றைப் பரிமாண புரிதல், பெற்றோரின் உள்ளத்தை உடைத்துப் போடுகிறது. மிகுந்த மனக்கசப்பும், வெறுப்பும், குழந்தையின் எதிர்காலம் குறித்த அச்சமும், பொதுவெளியில் அவமதிப்பை உணர்வதான  பதட்டமும் அவர்களை அலைக்கழிக்கிறது. நாட்கணக்கில் குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு செய்வதறியாது அழுது தீர்த்தவர்கள் இருக்கின்றனர். மருத்துவர் தேவகி, ஒரு கட்டத்தில் பெங்களூரு நிமான்ஸ் (National Institute of Mental Health and Neurosciences) மருத்துவமனைக்குச் சென்று அங்குதான் ஆட்டிச பாதிப்பு என்பதறிந்து அதிர்ச்சி அடைந்ததைக் குறிப்பிட்டார். தன்னை உளவியல் படிப்பு படிக்குமாறு நிமான்ஸ் மருத்துவர் சொல்லவும் தான் எதற்கு அதைப் படிக்க வேண்டும் என்று வெகுண்டதாகவும் தனது குழந்தையின் வளர்ச்சிப் போக்கை உணர்ந்து உதவுவதற்கு அது மிகவும் பயன்படும் என்று அவர் சொன்னபிறகு, அழுகையை நிறுத்தி, உண்மையை ஏற்றுக் கொண்டு எம் எஸ் சி சைகாலஜி படித்துமுடித்ததையும், தனது குழந்தை சச்சின் பிரச்சனைகளை உணர்ந்து வழிகாட்ட அது பேருதவி புரிவதையும் தேவகி உணர்ச்சிகர குரலில் அந்த நூல் வெளியீட்டு விழாவில் பதிவு செய்தார்

ஒரு தாய்க்கும், குழந்தைக்குமான புரிதலே இத்தனை சிக்கல்களை உள்ளடக்கியதாயிருக்கும் எனில் சமூகம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? அப்படியான ஆக்கபூர்வமான புரிதலோ, அணுகுமுறைகளோ இல்லை என்பது தான் இத்தகைய குறைபாடுகள் உடைய குழந்தைகளுக்கு உரிய இடம் மறுக்கப் படுவதும் அவர்கள் புறக்கணிக்கப்படுவதும் நேர்வதில் கொண்டுவிடுகிறது

ஆட்டிசம் என்பது நோய் அல்ல அது ஒரு குறைபாடு, சர்க்கரை பிரச்சனை எப்படி ஒரு நோய் இல்லையோ அப்படியே தான் என்று விளக்குகிறார் எஸ் பாலபாரதி. ஆனால், பொதுவெளியில் எதையும் ஒப்பிட்டுப் பார்த்தே பழகியிருக்கும் சமூகத்திற்கோ  அப்படி எடுத்துக் கொண்டு செல்ல முடிவதில்லை. ஒரு முனையில் அனுதாபப் பார்வை, இன்னொரு முனையில் எரிச்சல் அல்லது நிராகரிப்பு, சாதாரணமாகப் பார்க்கவோ பழகவோ தெரியாத மனிதர்கள் தங்களது குறைபாடுகளுக்குத்  தாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பாகாத குழந்தைகளை எத்தனை தூரம் அவமதிப்பு செய்கின்றனர் என்பதை விளக்க முடியாது. சக உயிர்கள் பால் அன்பும் நேயமும் பரவும் பார்வையை நாம் படரவிடும் போது இந்தப் பூவுலகம் இன்னும் எத்தனை நறுமணமிக்க நந்தவனமாய்த் தோன்றும்!

புலனுறுப்புகளின் செயல்பாடுகள் என்று வருகிறபோது, பார்த்தல், கேட்டல், முகர்தல், தொடு உணர்ச்சி உட்பட ஆட்டிச பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு அந்தந்த செய்கைகளை பகுத்து உணர்வதில், உள்வாங்குவதில், பொருள்படுத்திக் கொள்வதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. இதில் எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான முறையில் பாதிப்புற்று இருப்பார்கள் என்று கொள்ள முடியாது. அப்படியான விஷயங்களில், மிகுந்த புரிதலோடு தொடர்ச்சியான முறையில் பொருள்கள், சித்திரங்கள், முப்பரிமாண வடிவத்தில் இருப்பவை, கருவிகள், குளிர்ச்சி, வெப்பம், போன்றவற்றை அவர்களுக்கு கற்பித்தல் தேவைப்படுகிறது.

வழக்கமான கற்பித்தல் முறையில் ஈடுபாடு இல்லாதிருக்கும் குழந்தைகளை எப்படி படிப்பில் ஈடுபாடு கொள்ள வைப்பது. நேரடி பார்வையைத் தவிர்த்துப் பேசும் குழந்தை ஒன்றைப் புரிந்து கொள்கிறதா இல்லையா என்பதை எப்படி அறிவது? முதலில் குழந்தையைத் தன் பால் எப்படி ஈர்ப்பது? ஆட்டிச பாதிப்பில் இருக்கும் ஒரு குழந்தையோடு பயிற்சியில் ஈடுபட்ட அனுபவத்தை, ப்ரீத்தா என்ற சிறப்புக் குழந்தைகள் பயிற்சியாளர் ஓர் ஆய்வறிக்கையில் விளக்கி இருக்கிறார். நடனச் செய்கை பயிற்சி எனப்படும் தெரபி முறையை அவர் கையாண்டு பார்த்து அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றிருக்கிறார். அந்தக் குழந்தை எப்போதும் ஒரு பிசாசு, சாத்தான் என்ற உருவத்தையே சொல்லிச் சொல்லி வரைந்து கொண்டிருக்குமாம். சிறப்பு ஆசிரியரோடு கலந்து பழகவும் எளிதில் முன்வரவில்லை. ப்ரீத்தா மெல்ல அந்தக் குழந்தையின் விளையாட்டு முறைகள், குரல் ஒலிகள், இவற்றின் மூலம் படிப்படியாக அந்தச் சிறுவனின் உலகிற்குள் நுழைந்தார். தெரபி ஓரளவுக்கு முன்னேறிய ஒரு நாளில், அந்தச் சிறுவன் ஒரு திருத்தமான படம் வரைந்து கொண்டிருந்தானாம். படத்தில் இருப்பது யார் என்று இவர் கேட்டபோது, இந்த முறை பதில், பிசாசு என்று வரவில்லையாம். அது நான் தான் என்றானாம். தான் அடைந்த இன்ப அதிர்ச்சிக்கு அளவில்லை என்கிறார் ப்ரீத்தா.

பொறுமையும், நம்பிக்கையும், விவேகமிக்க அணுகுமுறையும், பாராட்டு மொழிகளும், சறுக்கல்களை வருடிக் கொடுத்து மீண்டும் எழுந்து முன்னேற முடியும் என்ற ஊக்கமூட்டலும் நிறைந்திருக்கும் ஓர் ஆக்கபூர்வமான வெளியில் ஆட்டிசம் பாதிப்புற்ற குழந்தைகள் இதமான முறையில் எத்தனையோ சாதனை மைல் கற்களை நாட்டுக் கொண்டே செல்வார்கள்.'அவர்களுக்கு சாதாரண குழந்தைகள் பயிலும் பள்ளிகளிலேயே இடம் தரப்படவேண்டும். கடுமையான முறையில் அவர்களை நடத்திவிடக் கூடாது 

அவர்களுக்கான   பக்குவமான உணவு முறையையும் கூட ஆய்வாளர்கள் பரிந்துரை செய்கின்றனர். பத்தியமும், ஒவ்வாமையும் என்ற தலைப்பில் யெஸ் பாலபாரதி தமது நூலில் இதுபற்றி விவாதிக்கும்போது, ஆட்டிச பாதிப்பு என்பதால் பாதிப்புற்ற குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரியான முறையில் நடந்து கொள்வார்கள் என்று சொல்ல முடியாது, ஒவ்வொருவரின் பிரச்சனைகளும் வேறு வேறானவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறார். தகுந்த மருத்துவர்களின் ஆலோசனையை பரிசீலித்து, தத்தம் குழந்தைக்கு ஏற்ற உணவுப்பழக்கம், நடைமுறைகள் ஆகியவற்றைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்

ஆட்டிசம்: சில புரிதல்கள் என்ற இந்த நூலைக் குறித்த எனது பிரதிபலிப்புகளை வாசித்த அரபு நாடு ஒன்றில் வசிக்கும் தமிழரான  பொறியாளர் விசுவநாதன், தாம் பணியாற்றிவரும்  நாட்டில் ஆட்டிசம் பாதிப்புற்ற குழந்தைகளின் பெற்றோரோடு மற்றவர்கள் அவ்வப்பொழுது சங்கமிக்கும் ஓர் அருமையான நிகழ்வு நடப்பதாகவும், அவர்களுக்கான பிரத்தியேக மின்னஞ்சல் தொடர்புக் குழு ஒன்று கடவுள் வழங்கிய சிறப்புக் குழந்தைகள் தலைப்பில் இயங்குவதாகவும் பதில் அஞ்சல் அனுப்பி இருந்தார். நீதியரசர் பிரபா ஸ்ரீதேவன் அவர்கள், அண்மையில் ஆட்டிச தினத்தன்று தினமணி ஏட்டில் எழுதியிருந்த கட்டுரையில், சமூகம் கூடுதல் பொறுப்பு எடுத்துக் கொள்ளும்போது இப்படியான குழந்தைகளின் பெற்றோர் அவர்களுக்குத் தேவையான உதவிகளை உரிய நேரத்தில் வழங்கி உந்துதல்களை ஏற்படுத்த முடியும் என்கிறார்

தமது குழந்தைக்கு இசையில் நாட்டம் இருக்கிறது என்பதைக் கண்டுணர்ந்த பின்னும், இசை ஆசிரியர்கள் விரும்பாததால் தொடர்ச்சியான பயிற்சியை வழங்க முடியவில்லை என்று வருத்தத்தோடு பேசிய மருத்துவர் தேவகி, தமது மகன் சச்சின் சிறந்த முறையில் டிரம்ஸ் வாசிக்கும் கலைஞன் என்கிறார். கிருஷ்ணா நாரயாணன் திறமைகளை அவரது பெற்றோர் ஒரு போராட்டமாகவே முன்னெடுத்ததில், தனது 23ம் வயதில் அவரையே புத்தகம் எழுத வைக்கும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.

நமது திரைப்படங்களில் இயல்பான சிரிப்புக் காட்சிகளுக்குப் பஞ்சம் வருகிற போதெல்லாம், உடல் ஊனத்தையும், அரவாணிகளையும், மன நலம் குன்றியவர்களையும் பகடி செய்து கேவலமான முறையில் 'காமெடி' சேர்க்கும் அவலத்தைப் பார்க்கிறோம். தாங்கள் மோசமான மனிதர்களாக நடந்து கொண்டு, நியாயமாக நடப்பவர்களை உளவியல் நோயாளிகளாக அட்டை ஒட்டி மருத்துவமனையில் சித்திரவதைக்கு ஆட்படுத்துவதை ருஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செக்காவ் அவர்களின் ஆறாவது வார்டு என்ற அற்புதமான நாவல் சமூகத்திற்குப் பாடமாகவே எடுத்துச் சொன்னது

தாங்கள் உணர்வதை, சிந்திப்பதை, புரிந்து கொள்வதை, பேச விரும்புவதை வெளிப்படுத்தும் வழியறியாத குறைபாடு உள்ள ஆட்டிசக் குழந்தைகளுக்கும் இந்தப் புவியில் ஓர் இடம் உண்டு. பெரிய சாதனை படைத்த பல மனிதர்களுக்கு ஒரு விதமான ஆட்டிசக் குறைபாடு இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. அறிவியலாளர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சர் ஐசக் நியூட்டன், ஏன் சம கால இயல்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகின்ஸ் உள்பட ஏதோ ஒருவிதத்தில் கற்பதில்,செய்கைகளில் குறைபாடு உள்ளவர்களே என்பதைச் சொல்லும்போது, சாதனை படைக்கத் தான் வேண்டும் என்பதில்லையே, சாதாரண மனிதர்களுக்கான சம மரியாதை வழங்கினாலே போதுமே என்றும் சொல்லத் தோன்றுகிறது

கிருஷ்ணா நாராயணன் சிறுவயதில் லிப்டில் செல்லும் போது தனது பதட்டத்தைத் தணித்துக் கொள்ளக் கைகளை நீட்டி விரல்களை விரித்து உற்று நோக்கியதை லிப்ட் ஆபரேட்டர் ஏளனமாகப் பார்த்துச் சிரித்ததை அவர் இன்றும் மறக்கவில்லை. யெஸ்.பாலபாரதி, தமது மகன் தனக்கு ஆட்டிசம் குறித்த தேடலைத் தூண்டியதைப் பெருமையாக எடுத்துக் கொண்டு இணையத்தில் தொடராக எழுதி, நண்பர்கள் அதன் தாக்கத்தில் பின்னூட்டம் போட்ட செய்திகளையும் தொகுத்து, செறிவான புத்தகத்தை இந்த சமூகத்திற்கே வழங்கியிருக்கிறார். கிருஷ்ணாவின் தாய்,ஜலஜா நாரயாணன் தான் எதிர்கொண்ட சிரமங்களை, "ஒரு தாயின் உள்ளத்தில் இருந்து..." (From A mother's heart: a journal of survival, challenges and hope) என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக்கி இருக்கிறார். மருத்துவர் தேவகி, தனது மகன் சச்சின் வாசித்த ட்ரம்ஸ் இசையை இணையத்தின் யூ டியூபில் சேர்த்துப் பெருமை தேடித் தந்திருக்கிறார்

ஆட்டிசம்: சில புரிதல்கள் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் ஏராளமான ஆட்டிச பாதிப்புற்ற குழந்தைகள் உற்சாகக் குரல் ஒலியெழுப்பி சுதந்திரமாக இங்கும் அங்கும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர். எல்லாவற்றையும்விட, நிகழ்ச்சியின் நிறைவில், தேசிய கீதம் அறிவிக்கப் பட்டபோது, சச்சின் மேடைக்கு அழைக்கப்பட்டதும், அருகே தனது தாய் மருத்துவர் தேவகி அடியெடுத்துக் கொடுக்க, சுருதியும், லயமும், தாளமும், பிசகாத இனிய குரலில் அவர் பாடியதை மிக அருகே சென்று கேட்ட சிலிர்க்கும் அனுபவத்தை என்னால் மறக்க முடியாது.

தன்முனைப்புக் குறைபாடு குழந்தைகளுக்கு இருக்கலாம். அதை எதிர்கொள்ளும் வகையில் அவர்களை அணுகவும், அவர்களுக்கு உதவவும், தேவையான வழிவகைகளைச் செய்யவும் முனைப்புக் குறைபாடோடு ஒரு சமூகம் இருப்பதை மன்னிக்க முடியாது. அரசும், மருத்துவ உலகமும், உளவியல் நிபுணர்களும் மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமூகமும் குறைபாடுகளைக் கடந்து குழந்தைகளை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த உலகம் பல வண்ணங்களால் ஆனது, பல சுவைகளால் நிரம்பியது. பல வித இசைக் கருவிகளின் இனிமை நிறைந்தது. அதைக் கொண்டாடும் மனம் தான் வேண்டும் யாவருக்கும்.

******************


32 கருத்துகள்:

 1. பிரமிக்க வைத்த, என்னை கலங்க வைத்த விடயம் சகோ சியாமளாவை கண்டால் தொழுவேன்.

  பதிலளிநீக்கு
 2. மிகப் பெரிய விஷயம்..

  சியாமளா அவர்களின் சிறப்பான தொண்டு தொடர வாழ்த்துவோம்..

  பதிலளிநீக்கு
 3. நாம் பெற்ற பிள்ளைக்கு
  இப்படி என்றால்
  எப்படி இருந்திருக்கும் - அந்த
  தமனாவைப் பெற்ற தாய்
  சியாமா
  எத்தனை அர்ப்பணிப்புகளைச் செய்து
  இத்தனை பயன்மிக்க பணி செய்கின்றார்
  இறைவா - அவருக்கு
  நீண்ட ஆயுளை வழங்கு!

  பதிலளிநீக்கு
 4. பாராட்டுதலுக்குரியது. கில்லர்ஜியின் உணர்வைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

  சியாமா அவர்கள் செல்வச் செழிப்புள்ள பின்னணி என்பதாலும், அதற்கான மனநிலை இருந்ததாலும் இது சாத்தியமாயிற்று. இதுவும் ஒரு தொண்டுதான்.

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. ....சியாமா அவர்களின் சிறந்த மனதிற்கு பாராட்டுகள் பல....

  பதிலளிநீக்கு
 7. பாராட்ட வேண்டிய பெண்மணி சியாமா! இவர் படித்தவர், நல்ல பண பின்புலமும் இருந்ததால் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் இருந்தத்லும் இப்பெரிய சேவையைச் செய்ய முடிந்தது. ஆனால் நம் நாட்டில் இக்குறைபாடு ஏழை மக்களிடம், இதைப் பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாத நிலை உடைய குடும்பத்துக் குழந்தைகள், இக்குறைபாட்டை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்கும்வம் இல்லாத பெற்றோரின் குழந்தைகள் பலர் உள்ளனர். எனவே விழிப்புணர்வு என்பது மிக மிகத் தேவை மட்டுமல்ல ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும்.

  அருமையான பதிவு!

  பதிலளிநீக்கு
 8. போற்றப்பட வேண்டியவர்.

  பதிலளிநீக்கு
 9. பிரமிக்க வைக்கும் விஷயம்...
  வாழ்த்துவோம்..

  பதிலளிநீக்கு
 10. குழந்தையின் நோய் கண்டு துவண்டு போகாமல், மகளை இந்தளவுக்கு ஆளாக்கிய சியாமா போற்றுதலுக்குரியவர். தெரியாத செய்திகளைத் தெரிந்து கொண்டேன். நன்றி சகோதரரே!

  பதிலளிநீக்கு
 11. நல்ல பதிவு.
  மனநிலை குறையுடைய குழந்தைகளை வளர்ப்பது மிகப்பெரிய தியாகம்தான் .ஆனால் அப்படிப்பட்ட குழந்தையைப் பெற்ற தாய் என்ன பாடு பட்டிருப்பாள்.
  ஏன் இப்படிப்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன என்று ஆராய்ந்தால் சில உண்மைகள் தெரியவரும்.கணவன் மனைவியரிடையே ஏற்படும் (பெண்ணின் ஆரம்ப கர்ப்ப காலத்தில் )மனக்கசப்புகள்,வேதனைகள் வெளியில் சொல்லமுடியாத சில உணர்வுகளின் தாக்கமே என்று சொல்லுகிறார்கள்.
  பெண் ஒருவள் ஐம்புலன்களும் ஒருங்கிணைந்து ஒரு ஆணின் விந்தணுக்களை ஏற்பதுவும் பின்னர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கரு வளர்வதும் பத்து மாதங்கள் அவள் காணும் கனவுகளும் நினைவுகளும் கரு வளர்ச்சியில் மிகப்பெரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
  மொத்தத்தில் போற்றப்படவேண்டிய தாய்.

  பதிலளிநீக்கு
 12. இந்த மாதிரி மனநிலை உள்ளவர்கள் பற்றிய அறிவு சிறிதும் இல்லாமல் அவதிப்படும் மன உளைச்சல் படும் சிலரை எனக்குத் தெரியும் என்பதிவு ஒன்றில் கூட எழுதி இருக்கிறேன்விழிப்புணர்ச்சி தேவை வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 13. அறியப்பட வேண்டிய 'தமனா'வைப் பற்றி அருமையாய் அறிமுகம் செய்து இருக்கிறீர்கள் !ஆட்டிசத்தின் தாய் சியாமளா என்றால் மிகையாகாது !

  பதிலளிநீக்கு
 14. சியாமா அவர்களின் தொண்டு சிறக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. போற்றப்பட வேண்டியவர்....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 16. நெக்குருக வைக்கும் நிகழ்வு/

  பதிலளிநீக்கு
 17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 18. ஆட்டிசம் என்று தனிப் பெயரிட்டாலும், மக்களில் பலர் இன்னும் அவர்களை 'மனநிலை பாதிக்கப்பட்டோர்' என்னும் வகைக்குள்ளேயே அடக்கிவைத்து, சமயங்களில் 'பைத்தியம்' என்றும் அசிங்கப்படுத்துவதை எவ்வளவோ பெற்றோர்கள் இரத்தக் கண்ணீருடன் சகித்துக்கொள்ளவேண்டி இருப்பதை கண்டிருக்கிறேன். ஒரு முக்கிய அறிவிப்பு: சென்னையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இது பற்றிய BEd படிப்பு உள்ளது. அதில் பயில்வதற்கு ஒரே தகுதி: உங்கள் குழந்தை ஆட்டிசக் குழந்தையாக இருக்கவேண்டும். எனது நண்பர் ஒருவரின் மனைவி இவ்வாறு பயின்று ஆய்வறிக்கை எழுதும்போது என்னால் இயன்ற கருத்துக்களையும் நூல்பட்டியலையும் எடுத்துக் கொடுத்து உதவினேன். மற்றவகையில் BEd பயில்வதற்கு ஆசிரிய அனுபவம் இல்லாதவர்களுக்கு அனுமதியில்லை. இந்த படிப்பானது Special Children பற்றியது படிப்பு என்பதால், ஆட்டிசக் குழந்தை உள்ள எந்தப் பட்டதாரியும் சேரலாம்.
  (2) எனது நண்பரின் நண்பரும் இத்துறையில் மிகுந்த ஆராய்ச்சி செய்தவரும் நியூயார்க் கொலம்பிய பல்கலையின் மருத்துவமனையில் பணியாற்றுபவருமான டாக்டர் ஆலிவர் சேக்ஸ் (Dr Oliver Sacks) இதுபற்றி ஒரு முக்கியமான புத்தகம் எழுதியிருக்கிறார். (அவரின் ஏராளமான நூல்களில் இது ஒன்று.) படித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் படித்துமுடிப்பேன். அது பற்றிய பதிவை என் தளத்தில் விரைவில் வெளியிடுவேன். பலருக்கும் பயன்படலாம். (3) முக்கியமான விஷயம், ஆட்டிசம் என்பது, நமக்குத் தெரியாத எதோ ஒன்றோ பலவோ ஆனா திறமைகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் ஓர் மனிதனின் இயல்பு நிலையாகும். அது என்ன திறமை என்பதை கண்டுபிடிப்பதே நம் முன்னுள்ள சவால்.

  -நல்ல கட்டுரைக்கு நன்றி நண்பரே! --செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  பதிலளிநீக்கு
 19. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, ஒரு அவசியமான, இன்றைக்கு மிகவும் தேவையான பதிவினை அருமையாக பதிவிட்டு, ஆட்டிசம் உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு ஒரு மன பாரத்தை இறக்கி வைத்து விட்டீர்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 20. மிக நல்ல பதிவு இது தோழர்
  அற்புதமான் செய்திகள்
  வகுப்பறையில் மாணவர்களிடம் பகிர வேண்டிய செய்திகள்தாம்
  பாப்போம் நேரம் கிடைக்கிறதா என..

  பதிலளிநீக்கு
 21. போற்றப்பட வேண்டியவர் நல்ல குணம் கொண்டவர்

  பதிலளிநீக்கு
 22. கண்கள் கலங்க படித்தேன்!எதையும் எடுத்து எழுதும் தங்கள் முறையே சிறப்பானது!

  பதிலளிநீக்கு
 23. //ஒட்டு மொத்த சமூகமும் குறைபாடுகளைக் கடந்து குழந்தைகளை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த உலகம் பல வண்ணங்களால் ஆனது, பல சுவைகளால் நிரம்பியது. பல வித இசைக் கருவிகளின் இனிமை நிறைந்தது. அதைக் கொண்டாடும் மனம் தான் வேண்டும் யாவருக்கும்.//
  அருமை.
  படித்து முடித்தவுடன் கண்கலங்குவதை மறைக்க முடியவில்லை.
  சியாமளா அவர்களை வணங்க வேண்டும், போற்ற வேண்டும்.

  திரு. வேணுகோபாலன் அவர்கள் கட்டுரையும் அருமை.
  திரு , பாலபாரதி அவர்கள் ஆட்டிசத்தைப்பற்றி சொல்லி இருக்கும் பகிர்வும் தேவையான ஒன்று.
  உங்கள் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 24. நல்ல பகிர்வு.
  Tamil manam - 6

  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 25. ஆட்டிசம் என்னும் மனநிலை குறித்து அறியாதோரும் அறிந்துகொள்ள உதவும் அருமையான பதிவு. இது குறித்த போதுமான தெளிவும் அறிவும் இல்லாமையால்தான் பலரும் அவர்களைக் கேலிபேசி வருகிறார்கள். தங்கள் குழந்தைக்கு இப்படியொரு பிரச்சனை என்றால் துவண்டுவிடாமல் தன்னம்பிக்கையோடு அடுத்த அடி எடுத்துவைத்து குழந்தையை முன்னேற்ற பெற்றோர்க்கு நல்லதொரு வழிகாட்டியான தாயார் சியாமா அவர்களுக்கு வந்தனம். ஆட்டிசம் குறித்து வேணுகோபாலன் அவர்களின் கட்டுரை தெளிவான புரிதலைத் தருகிறது. நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 26. தோழர் சியாமா வின் செயல் கண்டு வியக்கிறேன். மனசார பாராட்டுகிறேன். நாமும் நம்மால் இயன்ற சேவை தனை செய்யலாமே.....

  பதிலளிநீக்கு
 27. // ஆட்டிசம் என்பது நோயல்ல அது ஒருவகை மன நிலை.//

  என்று சுருக்கமாக இருந்தாலும் விளக்கமாகவும், தமனாவின் தாய் சியாமா பட்ட வேதனையை அவரன்றி வேறு யாரும் உணரமுடியாது என்பதனையும் ஆதங்கத்தோடு எழுதியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 28. இந்தியாவில் பத்து சதவீத மக்கள் மூளை வளர்ச்சி தொடர்பான நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  இது உண்மையில் அதிர்ச்சித் தரும் தகவலாகும்.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு