24 மே 2013

கரந்தை மலர் 10


----- கடந்த வாரம் ------
கல்யாண மகால் சத்திரத்தின் சார்பில் 1881 ஆம் ஆண்டு வேத பாடசாலை ஒன்று தொடங்கப் பெற்றது. இங்கு வடமொழி கற்கும் மாணவர்களுக்கு விடுதி மற்றும் உணவு வசதிகள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப் பட்டன. இந்த வேத பாடசாலையால் பயனடைந்தவர்கள் பிராமணர்கள் மட்டும்தான் என்பதனைச் சொல்லத் தேவையில்லை.
இந்நிலையில் 1916 ஆம் ஆண்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் பெயரில் நீதிக் கட்சித் தோன்றியது.
---------------------
நீதிக் கட்சி 


     ஆங்கில ஆட்சி தென்னாட்டில் நிலை பெற்றபோது பிராமணரல்லாதாரே முதன் முதலில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். கிழக்கு இந்தியக் கம்பெனியார் தென்னாட்டில் வர்த்தகச் சாலைகளை அமைத்தபோது, அவர்களிடம் முதன் முதல் பழகியவர்கள் பிராமணர் அல்லாதாரே. துபாஷ்களாகவும், தரகர்களாகவும் ஆங்கில வர்த்தகர்களின் நட்பைப் பெற்ற பிராமணரல்லாதாருக்கு நாட்டிலே செல்வாக்கு பெருகலாயிற்று. வர்த்தகர்களாயிருந்த ஆங்கிலேயரின் தேச நிர்வாகத்தில் பிராமணரல்லாதாரே நிருவாகப் பணியில் அமர்த்தப் பட்டனர். பிராமணரல்லாதார் இயல்பாகவே நிருவாகத் திறமை உடையவராகையினால் ஆங்கிலேயரின் நன்மதிப்பைப் பெற்றனர்.

     ஆங்கிலேயர்களை மிலேச்சர்கள் என்றும், ஆங்கிலம் மிலேச்ச மொழி என்றும் கருதி ஒதுங்கி இருந்த பிராமணர்கள், அரசியலில் பிராமணரல்லாதார் ஆதிக்கமும், சமூக வாழ்வில் மதிப்பும் பெற்று வருவது கண்டு, மேற்கொண்டு ஒதுங்கியிருந்தால் தமது சமூகம் வீழ்ச்சி அடைவது உறுதி என்பதை உணர்ந்தனர்.

         எனவே ஆங்கிலம் கற்கவும், ஆங்கிலேயர் நட்பைப் பெறவும் அவர்கள் முன்வந்தனர். சென்னை அரசாங்க ராஜாங்கக் கல்லூரிக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அடிகோலப்பட்டது முதல், பிராமணர்கள் ஆங்கிலப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபடலாயினர். ஓதுதலையும், ஓதுவித்தலையும் குலத் தொழிலாகக் கொண்ட பிராமணர்கள் ஆங்கிலக் கல்விப் பயிற்சியில் வெகு விரைவாக முன்னேற்றமடைந்ததால், அரசும் அவர்களுக்குப் பல சலுகைகளை காட்டத் தொடங்கியது. அதுமுதல் அரசியல் துறைகளிலும், பொது வாழ்விலும் பிராமண ஆதிக்கம் பெருகலாயிற்று.

        அன்னி பெசண்ட் அம்மையார் அவர்கள் சுய ஆட்சி இயக்கத்தைத் தொடங்கி, இம்மாநிலத்தில் பாரப்பணர்களின் நிரந்தர ஆதிக்கத்திற்கு அடிக்கல் நாட்டுவதை உணர்ந்து, அம்முயற்சியை முறியடிப்பதற்காக, சென்னையில் வாழ்ந்த சிந்தனைச் சிற்பி பேரறிவாளர் சர் பி.தியாகராயச் செட்டியர் அவர்கள், நாட்டு மக்களைப் பார்த்து, பார்ப்பணீயத்துக்குப் பலியாகாதே, மதத்திலே அவன் தரகு வேண்டாம்,. கல்வியிலே அவன் போதனை வேண்டாம், சமுதாயத்திலே அவன் உயர்வுக்கு உழைக்காதே, அரசியலிலே அவன் சூழ்ச்சிக்கு இரையாகாதே, திராவிட வீரனே, விழி, எழு, நட, உன் நாட்டை உனதாக்கு என்று கூவியழைத்தபோது, அதற்கு நாடெங்கிலும் இருந்து நல்லதொரு எதிரொலி எழும்பியது.

     அன்று முதல் தியாகராயரின் உருவம் தென்னாட்டில் புரட்சியின் அறிகுறியாகிவிட்டது. அவர் சென்ற இடமெல்லாம் பார்ப்பணரல்லாத மக்கள் அலைகடலென அணிவகுத்து நின்றனர். இந்தப் பெரியாருக்கு உறுதுணையாக டாக்டர் டி.எம்.நாயர் நின்றார். இவர் கேரளத்திலே பார்ப்பணர்கள் பிறருக்குச் செய்யும் கொடுமைகளைக் கண்டு மனம் புழுங்கி, தன்னுடைய வலிமை மிகுந்த பேனாவினால், கருத்தாழத்தாலும், காரண காரியத்தாலும் படிக்கப் படிக்கத் தெவிட்டாத கட்டுரைகளை, ஆங்கிலேயரே வியந்து பாராட்டும் வகையில், ஆங்கிலத்திலேயே எழுதும் வல்லமை படைத்தவர்.

     மாநிலம் முழுவதிலும் இருந்து பார்ப்பணர் அல்லாதார் 1916 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20 ஆம் நாள் சென்னையில் திரண்டனர். தங்கள் பிரச்சினைகளைப் பறைசாற்றச் செய்தித் தாட்கள் தொடங்குவது என்றும், தங்கள் நலம் பேண, புதிதாக ஓர் அரசியல் கட்சியைத் தொடங்குவது என்றும் முடிவு செய்தனர். இதன் விளைவாக அன்றே செய்தித் தாட்களை நடத்திட, தென்னிந்திய மக்கள் பேரவை என்ற அமைப்பும், அரசியல் இயக்கமாக தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற இயக்கமும் தொடங்கப் பெற்றது.

     சர் பி..தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி. நடேச முதலியார், கே.வி.ரெட்டி, சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், ஏ.இராமலிங்க முதலியார், பனகல் அரசர் பி.ராமராய நிங்கர், பொப்பிலி அரசர்,  பி.டி.ராஜன், சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், தமிழவேள் உமாமகேசுவரனார், செட்டி நாட்டரசர் முத்தையா செட்டியார், ஏ.பி.பாத்ரோ, எம்.சி.ராஜா, முகமது உஸ்மான் ஆகியோர் இப்புதிய கட்சியின் முன்ன்னித் தலைவர்களாவர்.




(நண்பர்களே, இன்று சென்னையில் தி.நகர் என்று சுருக்கமாகவும் , செல்லமாகவும் அழைக்கப்படும் தியாகராய நகர் என்பது சர் பி.தியாகராசயர் பெயராலும், சென்னை நடேசன் சாலை என்பது டாக்டர் சி.நடேச முதலியார் அவர்களின் பெயராலும், பனகல் பாரக் என்பது பனகல் அரசர் பி.ராமராய நிங்கர் பெயராலும், பாத்ரோ சாலை என்பது ஏ.பி.பாத்ரோ அவர்கள் பெயராலும், உஸ்மான் சாலை என்பது முகமத உஸ்மான் அவர்கள் பெயராலும் அழைக்கப்படுவதே, இப்பெரியோர்களின் தன்னலமற்ற சீரிய சேவையினைப் நன்குணர்த்தும்)

நீதிக் கட்சியின் குறிக்கோள்

     பார்ப்பணர் அல்லாதார் அனைவரின் நலமும், வளமுமே இதன் முதல் குறிக்கோள். மதச் சார்பின்மையே இதன் முக்கிய கோட்பாடு. அனைத்து மத்த்தினரிடையேயும் சகோதரத்துவத்தினை வளர்த்தல், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஒன்றாலேயே வாழ்வு பெற முடியும் என்பதே இக் கட்சியின் நம்பிக்கையாகும்.

      தென்னிந்தியராகவும், 21 வயது நிரம்பியவர்களாகவும், முக்கியமாக பார்ப்பணர் அல்லாதவர்களாகவும் இருக்கும் அனைவரும், இவ்வியக்கத்தில உறுப்பினராகத் தகுதி உரையவர்கள் ஆவாரகள்.

இதழ்கள்

     இவ்வியக்கத்தின் கொள்கைகளை எடுத்துச் செல்ல திராவிடன் என்னும் தமிழ்ச் செய்தித் தாளும், ஆந்திர பிரகாசனி என்னும் தெலுங்கு செய்தித் தாளும், ஜஸ்டிஸ் என்னும் ஆங்கிலச் செய்தித் தாளும் தொடங்கப் பெற்றது.



      இவ்வியக்கத்தின் பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று இருந்த போதிலும், ஜஸ்டிஸ் என்னும் இதழினை இவ்வியக்கத்தின் சார்பாக வெளியிட்டு வந்தமையால், இவ்வியக்கம் ஜஸ்டிஸ் கட்சி (நீதிக் கட்சி)  என்னும் பெயராலேயே அழைக்கப் படலாயிற்று.

முதல் பொதுத் தேர்தல்

     1919 ஆம் வருடத்திய இந்திய சீர்திருத்தச் சட்டப்படி அமைக்கப்படும் மாகாண, மத்திய சட்டசபைகளுக்கு 1920 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது.

     இதனைத் தொடர்ந்து, 22.2.1920 இல் தஞ்சையில் நீதிக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அக்கூட்டத்திற்குத் தலைமையேற்ற உமாமகேசுவரனார் அவர்கள், பார்ப்பணர் அல்லாதாரின் தொகைக்கு ஏற்ப, சட்ட மன்றத்தில் இந்துக்களுக்கு உரிய தொகுதிகளில் 66 விழுக்காடு வழங்கப்படல் வேண்டும், அதுபோன்றே அரசு நியமனங்களும் நடைபெற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தார்.

     நீதிக் கட்சியினைச் சார்ந்த தலைவர்கள் அனைவருமே வகுப்புவாரி பிரதிநிதித்துவமே இந்தியப் பிரச்சினைகளின் உயிர்நாடி என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.

      வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கை ஆங்கிலேயர்களால் ஒப்புக் கொள்ளப் பட்டதாயினும், பிராமணர் அல்லாதார் அதிக எண்ணிக்கையில் இருந்ததினால், அவர்களுக்கு தனித் தொகுதிகள் வழங்கப்படவில்லை. சட்ட சபையில் சில இடங்கள் மட்டுமே ஒதுக்கி வைக்கப் பெற்றன.

     1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் நாள் சென்னையிலும், மாகாணங்களிலும் தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 6 ஆம் நாள் முதல் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கின. நீதிக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

     நீதிக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கவர்னர் லார்டு வில்லிங்டன், நீதிக் கட்சித் தலைவரான தியாகராய செட்டியரை ஆட்சி அமைக்கும்படி அழைப்பு விடுத்தார்.

தியாகராயரின் தியாகம்

     தேர்தல் நேரத்தில், தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள், நீதிக் கட்சியினரை, ஆங்கிலேயருக்கு வால் பிடிப்பவர்கள் என்றும், ஆங்கிலேயர்களின் பூட்சு காலை நக்குபவர்கள் என்றும் பழி தூற்றினர்.

    இதன் காரணமாக, ஆளுநரின் அழைப்பினை ஏற்று ஆட்சி அமைக்க மறுத்த தியாகராயர், நாங்கள் பதவி நாட்டமற்ற, தொண்டு மனப்பான்மை மட்டுமே உள்ளவர்கள் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டும் விதமாக, சென்னை ஆளுநருக்கு ஓர் கடிதம் எழுதினார்.

     இந்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லை என்னும்படி, அரசியல் ஞானமற்ற பாமர மக்களைத் தட்டியெழுப்பிய பாவத்துக்காக என்னையும், அகால மரணமடைந்த என்னருமைச் சக தலைவர் டாக்டர் டி.எம்.நாயரையும், வெள்ளையன் வால் பிடிப்பவர்கள் என்றும், வெள்ளையன் பூட்சு காலை நக்குபவர்கள் என்றும், பதவி வேட்டைக் காரர்கள் என்றும், சென்ட் பர்சென்ட் தேசபக்தர்களான காங்கிரஸ் தலைவர்களும், அவர்களுடைய பத்திரிக்கைகளும் தூற்றின. நான் இப்பதவியை ஏற்பேனேயானால், என் புனிதமான கட்சிக்குக் களங்கம் விளைவித்தவனாவேன். அதனால் நான் பதவி ஏற்க மாட்டேன். மன்னிக்க வேண்டும்.

    இவ்வாறு கடிதம் எழுதி, முதன் மந்திரி பதவியினையே துச்சமென எண்ணி தூக்கி எறிந்தவர்தான் தியாகராயர்.

     திவான் பகதூர் ஏ.சுப்பராயலு ரெட்டியார் அவர்களை முதன் மந்திரியாகவும், ராஜா ராமராய நிங்கர் (பனகல் அரசர்) அவர்களை இரண்டாவது மந்திரியாகவும், ராவ் பகதூர் கே.வெங்கட ரெட்டி அவர்களை மூன்றாவது மந்திரியாகவும் , நியமிக்கும்படி, தியாகராயர் கேட்டுக் கொண்டார்.

     தியாகராயரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆளுநர் இம்மூவரையும் மந்திரிகளாக நியமனம் செய்தார்.

வட்டக் கழகம்

  ஒவ்வொரு மாவட்டத்திலும், இப்பொழுதுள்ள ஊராட்சி மன்றங்கள், ஒன்றியங்கள் எல்லாம் ஏற்படுவதற்கு முன்னர், மாவட்டக் கழகம், வட்டக் கழகம் என்ற ஆட்சி முறை  இருந்து வந்த்து.

             1920 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் நீதிக் கட்சியின் முன்ன்னித் தலைவர்களான சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள், தஞ்சை மாவட்டக் கழகத் தலைவராகவும், உமாமகேசுவரனார் அவர்கள் தஞ்சாவூர் வட்டக் கழகத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.



      1920 ஆம் ஆண்டிலிருந்து 1932 ஆம் ஆண்டு வரை, தொடர்ந்து பன்னிரெண்டாண்டுகள் வட்டக் கழகத் தலைவராகப் பணியாற்றிய பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார்.

          உமாமகேசுவரனார் அவர்களையும் பன்னீர் செல்வம் அவர்களையும், இரட்டையர் என்றே அன்றைய தலைமுறையினர் அழைத்தனர். அந்த அளவிற்கு இருவரும் நண்பர்களாவார்கள்.

           மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு உயர் பதவிகளுக்கு வரும் பலர், பொது நலம் மறந்து, சுய நலமே குறிக்கோளாய் கொண்டு, தன் வீடு,  தன் பெண்டு, தன் பிள்ளை என தங்கள் குடும்பத்தை வளப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பது இன்று பரவலாய் காணப்படும் காட்சியாகும்.

           ஆனால் பன்னிரெண்டாண்டுகள் வட்டக் கழகத் தலைவராய் பதவி வகித்தபோதும், சுய நலம் என்பதனையே முற்றும் துறந்த முனிவராய், தமிழ் நலம் ஒன்றினையே சுவாசமாகக் கொண்டு சுவாசித்து, தமிழ் மொழியினை வளப்படுத்திய, பலப்படுத்திய பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார்.

        சென்னை தொடக்கப் பள்ளிச் சட்டத்தைப் பயன்படுத்தி, தஞ்சை வட்டத்தில் இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கையினை 40 லிருந்து 170 ஆக உயர்த்தினார்.

         தஞ்சை அரசர் அற நிலையங்களின் வருவாயிலிருந்து இரண்டு உயர்நிலைப் பள்ளிகள் இயங்கி வந்தன. ஒன்று ஒரத்த நாட்டிலும் மற்றொன்று இராசா மடத்திலும் இருந்தது. இவ்விரு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இலவச உணவும், இலவச விடுதி வசதியும் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் பிராமண வகுப்பினைச் சார்ந்த மாணவர்கள் மட்டுமே இச்சலுகைகளை அனுபவித்து வந்தனர். கடும் எதிர்ப்புகளுக்கு இடையிலே, உமாமகேசுவரனார் அவர்கள் பன்னிர் செல்வம் அவர்களின் துணைகொண்டு இந்நிலையினை மாற்றி, ஏனைய தமிழ் இன மாணவர்களும் இத்தகைய சலுகைகளைப் பெருமாறு செய்தார்.
ஒரத்தநாடு முக்தாம்பாள் சத்திரம்

       தஞ்சையில், கரந்தைக்கு அருகில், பழைய திருவையாற்று வீதியில் சுரேயசு சத்திரம் என்று ஒன்று உண்டு. சோம்பேறிகளின் தங்குமிடமாகச் செயல்பட்ட, இச்சத்திரத்தை ஆதி திராவிட மாணவர்கள் தங்குமிடமாகவும், இலவச உணவு பெறுமிடமாகவும் மாற்றி அமைத்தார்.

சுரேயசு சத்திரம்

         திருவையாற்றில் இராமச்சந்திர மேத்தா சத்திரம் என்று ஒன்று உண்டு. அதற்கென நிலங்களும் இருந்தன. இச் சத்திரமானது வடநாட்டில் இருந்து வரும் பைராகிகளுக்கு உணவு வழங்க ஏற்பட்ட சத்திரமாகும். அது சரியாக நடைபெறாமல் இருந்தது. பைராகிகளே இல்லாத போது சத்திரத்திற்கு ஏது தேவை. இதனால் சத்திரத்திற்குத் தொடர்பில்லாத பலர், அங்கு தங்கி உணவு உண்டு வந்தனர். இதனையறிந்த உமாமகேசுவரனார், அச்சத்திரத்திற்குக் கட்டுப் பாடுகளை விதித்து, அதன் மூலம் பெருந்தொகையினை வருவாயாக ஈட்டித் தந்தார். இந்தச் சேமிப்பினால் வளமான நிலங்கள் வழங்கப் பட்டன. இதன் பயனையும் ஏழை மாணவர்கள் அடையுமாறு செய்தார்.

        அடுத்ததாக, பல ஆண்டுகள் பலவாறு முயன்றும், தமிழைப் புகுத்த முடியாமற் போன, திருவையாற்று கல்யாண மகால், வேத பாடசாலையின் பக்கம் உமாமகேசுவரனாரின் முழுக் கவனமும் திரும்பியது.

..... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா