17 மே 2013

கரந்தை மலர் 9


---------- கடந்த வாரம் ---------

பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராய் பொறுப்பேற்றபின் அரசு விழாக்கள், தமிழ் மொழியினைச் சிறப்பிக்கும் பாடல் ஒன்றுடன் தொடங்கப்படுமேயானால், தமிழ் மொழியின் சிறப்பு பாமரர்களையும் சென்றடையும் என்று எண்ணினார். அதற்குரிய பாடலைத் தேர்ந்தெடுக்க எண்ணி, பல பாடல்களை ஆராய்ந்த பொழுது, இரண்டே இரண்டு பாடல்கள்தான் அண்ணாவின் கவனத்தையும், மனதையும் ஒருசேரக் கவர்ந்திழுத்தன.
-------------------------------

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்யப்பெற்ற பாடலையும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சொந்தப் பாடலையும், படித்துப் படித்து மயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள், கரந்தைக் கவியரசர் அவர்களின் பாடலையே, தமிழக அரசின் தமிழ்த் தாய் வாழ்த்தாக தேர்வு செய்ய விரும்பினார். எனினும், திராவிடத்தின் எழுச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் போராடிய போராளி அண்ணா அவர்களை, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலில் உள்ள
தெக்கணமும் அதிற்சிறந்த  திராவிடநற் றிருநாடும்
என்னும் வரியிலுள்ள திராவிட என்னும் வார்த்தை சுண்டி இழுத்தது.


     எனவே, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலையே தமிழ்த்தாய் வாழ்த்தாக, அரசு விழாக்களின் போது பாட வேண்டும் என அறிவுறுத்தும் வகையில் அரசு ஆணை வெளியிட எற்பாடு செய்தார். ஆனால் எதிர்பாராத வகையில் உடல் நலம் குன்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் 3.2.1969 இல் இவ்வுலக வாழ்வைத் துறந்ததனால், அரசு அணை வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. அண்ணாவைத் தொடர்ந்து நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் சில நாட்கள் தமிழகத்தின் பொறுப்பு முதல்வரானார். 10.2.1969 அன்று டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழகத்தின் முதல்வராய் அரியணையில் அமர்ந்தார்.

     டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராய் பொறுப்பேற்ற அடுத்த வருடமே, 23.11.1970 ஆம் நாளன்று, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய நீராருங் கடலுடுத்த என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை, அரசு நிகழ்ச்சிகளில் பாட வேண்டும் என, அரசு பொதுத் துறையின் சார்பாக அரசாணை (மெமோ எண், 3584.70-4, 23 நவம்பர் 1970) வெளியிடப் பெற்றது.


      தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன் முதலில் மெட்டமைத்து இசையமைத்தப் பெருமைக்கு உரியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விசுவநாதன் அவர்களாவார். மெல்லிசை மன்னர் இசையமைத்த நீராருங் கடலுடுத்த பாடலினை உள்ளடக்கிய, ஒலித் தட்டு ஒன்றும், அரசு ஆணையுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களுக்கும் அனுப்பப் பட்டது. இதன் பயனாக நீராருங் கடலுடுத்த பாடலானது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவியது.

பதிவும் நோக்கமும்

     புதிதாகத் தோற்றுவிக்கப்பெற்ற அமைப்புகளை, அரசின் பதிவுத் துறையின் பதிவு செய்தாக வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால்தால் மட்டுமே, அந்த அமைப்பு அல்லது சங்கம், முறையான சங்கமாக அரசினால் அங்கீகரிக்கப்படும்.

     உமாமகேசுவரனார் அவர்களால், கரந்தைத் தமிழ்ச் சங்கமானது, 1860 ஆம் ஆண்டின் 21 வது சட்ட விதிகளின் படி, 1.5.1914 அன்று பதிவு செய்யப்பெற்றது. கரந்தைத் தமிழ்ச் சங்கப் பதிவு எண். 1/ 1914  ஆகும்.

     சங்கத்தைப் பதிவு செய்தபோது, சங்கத்தின் நோக்கங்களையும், அவற்றை நிறைவேற்றுவதற்கான வழி முறைகளையும், உமாமகேசுவரனார் தெளிவாகப் பதிவு செய்தார்.

சங்கத்தின் பதிவுச் சான்றிதழ்


சங்கத்தின் நோக்கங்கள்

01.        தமிழின் நிலைமையும், தமிழரின் நிலையையும் சீர் பெறச் செய்வது, உயர்த்துவது,
02.        சங்க உறுப்பினர்களுக்குள் நட்புரிமையும், ஒருமைப்பாடும் உண்டாக்குவது.
03.        தமிழரின் அற நிலையங்களை மேற்கொண்டு காப்பது.
04.        உறுப்பினர்களின் உடல் நிலை, ஒழுக்க நிலை, சமூக நிலை, கல்வி நிலை, இவை செம்மையுறுவதற்கான வசதிகளை அமைப்பது.
05.        தமிழரின் தொழிலும், பொருளாதாரமும் வளம் பெறச் செய்வது.

    இந்நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு, சங்கம் மேற்கொள்ளவிருக்கும் பணிகளாவன.

01.       சொற்பொழிவுகளும், சொற்போர்களும் நடத்துதல்.
02.       படிப்பிடங்களையும், நூல் நிலையங்களையும், தஞ்சாவூரிலும், பிற இடங்களிலும் நிறுவி நடத்துதல்.
03.       தக்க ஆசிரியர்களைக் கொண்டு போதனை வகுப்புகள் நடத்துதல்.
04.       துண்டு வெளியீடு, நூல் வெளியீடு,  தாள் வெளியீடு முதலியன செய்தல்.
05.       தமிழ் நூல் ஆராய்ச்சிகள், தமிழர் நாகரிகம் பற்றிய ஆராய்ச்சிகள், இலக்கண, இலக்கிய அறிவு நூல் முதலிய பிற மொழி நூல்களையும் தமிழில் ஆக்குதல், வெளியிடல்.
06.       கைத் தொழில் கலா சாலைகள் அமைத்து நடத்துதல்.
07.       உடற் பயிற்சிக்கான உள்ளிட (Indoor), வெளியிட (Out door) விளையாட்டுக்களுக்கு வசதிகள் செய்தல்.
08.       தமிழ்க் கல்லூரிகளும், தமிழ்க் கலாசாலைகளும் வைத்து நடத்துதல்.
09.       தேர்வுகள் நடத்துதல், உதவிச் சம்பளங்கள், பரிசுகள். பதக்கங்கள், நற்சாட்சி பத்திரங்கள் முதலியன கொடுத்துப் படிப்போர்களை ஊக்குவித்தல்.
10.       கலாசாலைகளில் எளிமை, தூய்மை, விரிந்த மனம், நல்லொழுக்கம் முதலியன மாணவர்களிடம் படியப் பழக்குதல்.
11.       தமிழரின் முன்னேற்றத்திற்கான அற நிலையங்கள், கல்வி நிலையங்கள், புகலிடங்கள் ( Asylums), அனாதை இல்லங்கள், ஏழையில்லங்கள், மருத்துவ சாலைகள் முதலியன நடத்துதல்.
12.       கிளைச் சங்கங்கள், கல்வி நிலையங்கள் முதலியவற்றை நிறுவித் தாய்ச் சங்கத்துடன் இணைத்து அவற்றை நடத்துதல்.
13.       ஒப்புவிக்கப்படும் அறங்களை ( Trusts) மேற்கொண்டு காத்தல்.
14.       சங்கத்தின் நோக்கங்கள் நிறைவேறுவதற்கான காரியங்கள் பலவற்றையும் செய்தல். மகாநாடுகள், பொதுக் கூட்டங்கள் முதலியன நடத்துதல். பின்னும் அவசியமான தொண்டுகள் புரிதல்.

கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரி

     நமது நாட்டில் பண்டைக் காலத்து நின்று நிலவி இறந்து பட்ட சிறந்த கைத் தொழில்களையும், அவற்றிற்கு இன்றியமையாத சாத்திரங்களையும்
(Science)  கற்பிக்கும் பெரிய செந்தமிழ்க் கலா சாலையொன்று ஸ்தாபிப்பின், மாணவர்கள் தமிழ்ப் பயிற்சியோடு சீவனோபாய வழிகளிலும் தேர்ச்சி பெறுவாராகையால், நம்மனோர்க்குத் தமிழ்பால் இப்பொழுதுள்ள வெறுப்பு நீங்கிப் பெரிதும் விருப்பமுண்டாகும் என்பதில் ஐயமில்லை. இன்னும் பிள்ளைகள் பயிலும் கைத்தொழில்களுக்கு வேண்டும் சாத்திர நூல்களைப் புதிதாக மேல் நாட்டு மொழிகளினின்று மொழி பெயர்த்துக் கொள்ளும் கட்டாயம் ஏற்படுகிறமையின், நமது மொழியில் சாத்திர நூல்களும் இல்லாத குறையும் நிவர்த்தியாதல் கண்கூடாம் என்று கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு அறிக்கையானது எடுத்து இயம்புகின்றது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கிய இரண்டாவது ஆண்டிலேயே, உமாமகேசுவரனாருக்கு இவ்வெண்ணம் முகிழ்த்தெழுந்தாலும, சங்கத்திற்கு என்று சொந்த இடமோ, தேவையான பொருளாதார வசதியோ இல்லாத காரணத்தால், இவ்வெண்ணத்தை நடைமுறைப் படுத்த இயலவில்லை.

     உமாமகேசுவரனாரின் அயரா முயற்சியின் காரணமாக, 1916 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஆறாம் நாள், விஜயதசமியன்று, சங்கப் புரவலர் அரித்துவார மங்கலம் கோபாலசாமி இரகுநாத இராசாளியார் அவர்களால், வாடகைக் கட்டிடம் ஒன்றில், செந்தமிழ்க் கைத் தொழில் கல்லூரி தொடங்கி வைக்கப்பெற்றது. தொடங்கிய ஆண்டில் நாற்பது மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்ந்தனர். கைத் தொழில் ஒன்றினைப் பயிற்றுவிப்பது உமாமகேசுவரனாரின் முடிந்த நோக்கமென்றாலும், வருவாய் குறைவினால் தமிழ் மட்டுமே கற்பிக்கப் பெற்றது. இக்கல்லூரியின் பராமரிப்பிற்காக உமாமகேசுவரனார், தனது சொந்த வருவாயில் இருந்து, ஒவ்வொரு மாதமும் ரூ.25 வழங்கினார்.
 
முதன் முதல் கலாசாலை தொடங்கப் பெற்ற சிறிய இடம் இன்று
     தஞ்சைப் பகுதி வியாபாரிகள் பலரும், இக்கல்லூரியின் வளர்ச்சிக்காக தினந்தோறும், தங்களது வருவாயில் இருந்து, உண்டிகை தருமம் செய்து உதவினர். பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும், மாணவர்களிடமிருந்து கட்டணம் பெற்றிடாமல், இலவசமாகவே தமிழ் பயிற்றுவிக்கப்பெற்றது.

     1919-20 அம் ஆண்டில், இக்க்லலூரியின் ஆசிரியர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. மாணவர்களுக்குத் தமிழோடு ஆஙகிலமும், கணிதமும் கற்பிக்கப்பெற்றது.

      கோணார்பப் பட்டு கற்பக விநாயகா கலாசாலையில், தலைமையாசிரியராய் பணியில் அமர்ந்து, அப்பள்ளி மாணவர்களை மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்தும் தேர்விற்குத் தயார் படுத்தும் பணியினைச் செம்மையாகச் செய்து, தனது கல்வியாலும், ஒழுக்கத்தினாலும், உழைப்பாலும் அப்பகுதி மக்கள் விரும்பிப் போற்றும் நல்லாசிரியராய் உயர்ந்த அரங்க.வேங்கடாசலம் பிள்ளை அவர்கள், அக் கலாசாலையில் தனக்குக் கிடைத்த, அதிக வருவாயை விடுத்தும், வேறு பல இடங்களில் பெரு வருவாய் அளிப்பதாக உறுதியளித்துப் பிறர் அழைத்தமையை ஏற்க மறுத்தும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மீது இயல்பாக உள்ள அன்பினால், 1920 இல் செந்தமிழ்க் கைத் தொழில் கல்லூரியின் தலைமையாசிரியராகப் பொறுப் பேற்றார். இவரின் வருகைக்குப் பின்னர் கல்லூரியின் புகழும் பெருமையும் மேலும் பரவத் தொடங்கியது.

     எம்.எஸ். கல்யாண சுந்தரம் அய்யர் இக்கல்லூரியின் கண்காணிப்பாளராகத் திறம்படப் பணியாற்றினார். மேலும் இக் கல்லூரியின் பெருமையினை நன்குணர்ந்த, கரந்தைப் பகுதியில் அமைந்திருக்கும், பால் சுவாமிகள் மடத்தின் தலைவர் கிருட்டினமூர்த்தி அவர்கள், இக்கல்லூரி மாணவர்கள் சிலருக்கு இலவசமாகவே உணவளித்து உதவினார்.

     குறுகிய காலத்திலேயே இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இதன் காரணமாக வகுப்புகளின் எண்ணிக்கையும், ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 1923 ஆம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 410 ஆகவும், வகுப்புகளின் எண்ணிக்கை எட்டு ஆகவும், ஆசிரியர்களின் எண்ணிக்கை பதினொன்றாகவும் உயர்ந்தது.

     செந்தமிழ்க் கல்லூரியானது நாள்தோறும் வளர்ச்சி அடைந்து வந்தாலும், கல்லூரிக்கும், சங்கத்திற்கும் தனி இடம் இல்லாமையால் உமாமகேசுவரனார் பெரிதும் வருந்தினார். பிற்காலத்தில் சங்கத்திற்கென்று சொந்தமாக இடம் வாங்கப் பெற்றதும், இக்கல்லூரியானது, புதிய இடத்திற்கு மாற்றப் பெற்றது. மேலும தமிழ், ஆங்கிலம், கணிதம் முதலியவற்றை மட்டுமே கற்றிக்கப் பெற்று வந்த நிலை மாறி, மாணவர்களுக்கு நெசவு, நூல் நூற்றல், பாய் நெசவுத் தொழில், மர வேலைகள், நூற் கட்டு முதலியனவும் கற்பிக்கப் பட்டன.

கல்யாண மகால்

    சோழர்களின் தலைநகராய் கோலோச்சியத் தஞ்சையில், மூன்றாம் இராசேந்திர சோழனின் ஆட்சியோடு, கி.பி.1279 இல் சோழராட்சி முடிவுக்கு வந்தது. பிறகு தஞ்சாவூரானது பாண்டியர்களாலும், திருச்சி மாவட்டத்தின் கண்ணனூரைத் தலைநகராகக் கொண்ட போசளர்களாலும் ஆளப்பட்டது. போசளர்களுக்குப் பிறகு தஞ்சாவூர் விசயநகரப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.

       1535 இல் தஞ்சையில் நாயக்கர் அட்சி மலர்ந்தது. நாயக்கர்களைத் தொடர்ந்து, தஞ்சாவூரானது 1675 முதல் 1855 வரை மராட்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

       மராட்டிய மன்னர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் தஞ்சையில் 18 சத்திரங்களை நிறுவினர். இச் சத்திரங்களில் புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்ரிகர்களுக்கு, இலவசமாக தங்கும் வசதியும், இலவசமாக உணவும் வழங்கப்பட்டன. இச் சத்திரங்களில் மருத்துவர்களும் நியமிக்கப் பட்டிருந்தனர். பயணத்தின் போது உடல் நலக்குறைவு ஏற்படும் யாத்ரிகர்களுக்கு இலவசமாக மருத்துவ வசதியும் அளிக்கப் பட்டது. மேலும் இச்சத்திரங்கள் மூலம் கல்வியும் கற்றுத் தரப்பட்டது. இச்செயல்களை மேற்கொள்ளும் பொருட்டு, மராட்டிய அரசர்கள், இச்சத்திரங்களுக்கு அறக்கட்டளைகளாக, பலநூறு ஏக்கர் நிலங்களை எழுதி வைத்தனர்.

     இவற்றுள் ஒரத்தநாடு முக்தம்மாள் சத்திரம், நீடாமங்கலம் யமுனாம்பாள் சத்திரம் போன்றவை பெயர் பெற்ற சத்திரங்களாகும்.  இவ்வரிசையில் இரண்டாம் சரபோசி மன்னர் அவர்கள், தனது வாரணாசிப் புனிதப் பயணத்திற்குப் பிறகு, திருவையாற்றில் வளம் தரும் காவிரியின் வட கரையில், கண்கவர் மாட மாளிகைகளுடன் உருவாக்கிய சத்திரமே கல்யாண மகால் சத்திரமாகும்.

   
நாயக்க மன்னர்கள் தங்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கிய நூலகத்தினை விரிவுபடுத்தி, வளர்த்து மாபெரும் சரசுவதி மகால் நூலகமாக உயர்த்திய பெருமை இந்த இரண்டாம் சரபோசி மன்னரையேச் சாரும்.
 ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் போது, அனைத்துச் சத்திரங்களும், கோயில்களும், அவற்றிற்காக அறக் கட்டளைகளாக வழங்கப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப் பட்டன. நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பின், கோயில்களும், கோயில்களுக்கான நிலங்களும், மராட்டிய மன்னர்களின் வாரிசுகளிடம் ஆங்கிலேயர்களால் ஒப்படைக்கப் பட்டன. ஆனால் சத்திரங்கள் அனைத்தும், ஆங்கிலேயர்களின் வருவாய் துறையினரின் பொறுப்பிலேயே இருந்து வந்தன. 1871 ஆம் ஆண்டு சத்திரம் நிர்வாகமானது, உள்ளூர் ஆட்சிக் குழுவிடம் ஒப்படைக்கப் பட்டது. தமிழ் நாட்டிலேயே சத்திரம் நிர்வாகம் என்னும் பெயரில் ஒரு தனி நிர்வாகம்  நடைபெற்று வருவது தஞ்சாவூரில் மட்டும்தான்.

     கல்யாண மகால் சத்திரத்தின் சார்பில் 1881 ஆம் ஆண்டு வேத பாடசாலை ஒன்று தொடங்கப் பெற்றது. இங்கு வடமொழி கற்கும் மாணவர்களுக்கு விடுதி மற்றும் உணவு வசதிகள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப் பட்டன. இந்த வேத பாடசாலையால் பயனடைந்தவர்கள் பிராமணர்கள் மட்டும்தான் என்பதனைச் சொல்லத் தேவையில்லை.

     இந்நிலையில் 1916 ஆம் ஆண்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் பெயரில் நீதிக் கட்சித் தோன்றியது.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.