03 மே 2013

கரந்தை . மலர் 7


----------- கடந்த வாரம் ---------
உமாமகேசுவரனார் அவர்கள், சங்கம் தொடங்கப்பெற்ற முதலாண்டிலேயே, சங்கத்திற்கென்று தனியொரு நூல் நிலையம் அமைக்குள் பணியினைத் தொடங்கினார்.
-----------------------------------

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவிற்காகச் சேகரித்து வைக்கப் பெற்றிருந்த தொகையில் இருந்து, ஒரு பகுதி செலவிடப்பெற்று 20 புத்தகங்கள் வாங்கப்பெற்றன. கரந்தைக் கவியரசு என பின்னாளில் போற்றப் பெற்ற மோகனூர் வேங்கடாசலம் பிள்ளை அவர்கள், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பதிப்பில் ஏழு புத்தகங்களை வாங்கி, கரந்தைத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கென்று வழங்கினார். கரந்தை, மளிகை வீ. சுப்பராய பிள்ளை அவர்கள் 17 புத்தகங்களையும், கும்பகோணம் மண்டல அலுவலகத்தில், தலைமை எழுத்தராகப் பணியாற்றிய ஏ.பாலகிருட்டினன் அவர்கள் 4 புத்தகங்களையும், திருச்சி டி.என். சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் 10 புத்தகங்களையும், கரந்தை லேவாதேவி பா.நா. சிவகுருநாத பிள்ளை அவர்கள் 4 புத்தகங்களையும், கரந்தை முருகேசன் அவர்கள் 6 புத்தகங்களையும், கரந்தைத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினர்.

                   எங்கள்சங்க  மெழிலுடன்  வளருமா
                   றிங்கதன்  போஷகனாக  இயைந்துளோய்
                   தங்கு  கோபாலசாமியை  முன்னிய
                   துங்க  ரகுநாதப் பெயர்கொடுதோற்றியோய்
                   எங்கள்  புத்தகசா  லையைச்
                   செங்கமரமதுகொடு  திறக்க நீவருகவே

எனக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் வரவேற்க, கரந்தைத் தமிழ்ச் சங்க ஆதரிப்பாளர்களுள் ஒருவராகிய, அரித்துவார மங்கலம், பெருவள்ளல் திருவாளர் கோபாலசாமி இரகுநாத இராசாளியார் அவர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்க நிதியில் இருந்து வாங்கப் பெற்ற இருபது புத்தகங்கள், மற்றும் அன்பளிப்பாகப் பெறப்பெற்ற நாற்பத்தி எட்டு புத்தகங்கள் என, அறுபத்தி எட்டு புத்தகங்களுடன் கூடிய, கரந்தைத் தமிழ்ச் சங்கக் கலா நிலையம் என்னும பெயருடைய நூலகத்தைத் திறந்து வைத்தார்.



     சங்கத்திற்கெனத் தனியொரு இடம் இல்லாமையால், சங்கக் கூட்டங்களும் பிறவும், கந்தப்பச் செட்டியார் சத்திரத்திலேயே நடைபெற்று வந்தன. இச் சத்திரமானது திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு வாடகைக்கு விடப்படும் பொழுது, சங்கப் பணித் தொடர்பாக யாரும் சத்திரத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதுண்டு.

    மேலும் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவானது இச்சத்திரத்தில் மிகவும் சிறப்புடன் நடைபெறும். நவராத்திரி நாட்களில் ஆளுயர பொம்மைகளைக் கொண்டு ராமர் பட்டாபிசேகக் காட்சி, வனவாசம் செல்லல், மகாபாரதக் காட்சிகள், நல்லதங்காய் குழந்தைகளை கிணற்றில் போடும் காட்சிகள் என பல காட்சிகள், காண்போரைக் கவரும் வண்ணம் மிகவும் உண்மைத் தன்மையுடன் அலங்கரித்து வைக்கப் பட்டிருக்கும், தஞ்சை மக்கள் அனைவரும், இந்நாட்களில் இச் சத்திரத்திற்கு வருகை தந்து கொலு காட்சிகளைக் கண்டு மகிழ்வர்.  
 
நூலகம் முதன் முதலில் தொடங்கப் பெற்ற உமாமகேசுவரனார் இல்லம்
     இதனால் சங்கத்திற்கு என்று வாங்கப்பெற்ற மேசை, நாற்காலிகள் மற்றும் அலமாரிகளைக் கூட தொடர்ந்து சத்திரத்தில் வைத்துப் பாதுகாக்க முடியாத நிலை. இதனால் கரந்தைத் தமிழ்ச் சங்க நூலகமானது, கரந்தை சேர்வைகாரன் தெருவில் உள்ள, உமாமகேசுவரனார் அவர்களின் இல்லத்திலேயே செயல்படத் தொடங்கியது. இரண்டாம் ஆண்டில் புத்தகங்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது. 1913-14 ஆம் ஆண்டில் வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்கள், மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் பதிப்பிக்கப்பெற்ற நூல்களில் 38 நூல்களையும், செந்தமிழ் இதழ்களின் 11 தொகுதிகளையும் விலைக்கு வாங்கி, கரந்தைத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கு வழங்கினார்.

     1915 ஆம் ஆண்டில் உமாமகேசுவரனார் அவர்களின் முயற்சியின் பயனாக, கரந்தை கோவிந்தராஜுலு நாயுடு மற்றும் சுப்பராயலு நாயுடு அகியோரின் உதவியுடன், தர்மாபுரம் உதவி ஆட்சியர் வேங்கடசாமி நாயுடு அவர்கள், கரந்தைக் கடைத் தெருவில் அமைந்திருந்த, காலஞ்சென்ற வாசுதேவ நாயக்கருக்குச் சொந்தமாகிய சத்திரத்தை, சங்கத்தின் உபயோகத்திற்காக ஆறு ஆண்டுகளுக்கு, வாடகை ஏதுமின்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கி உதவினார். இதனைத் தொடர்ந்து கரந்தைக் தமிழ்ச் சங்கக் கலா நிலையமானது, இச்சத்திரத்திற்கு மாற்றம் செய்யப்பெற்றது. புத்தகங்களின் எண்ணிக்கையும் 929 ஆக உயர்ந்தது. நூலகம் செயல்பட தனித்த இடம் கிடைத்தமையைத் தொடர்ந்து, தஞ்சையில் புத்தக சாலைகள் இல்லாத குறையினை நீக்க வேண்டி, சங்கத்தின் உறுப்பினர் அல்லாதவரும், இந்நூலகத்தில் சந்தாதாரராகி நூல்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பெற்றது.

நூலகம் இயங்கிய வாசுதேவ நாயக்கருக்குச் சொந்தமான சத்திரம்

     மேலும் இவ்வாண்டிலேயே ஒரு இலவசப் படிப்பகம் ஒன்றும் தொடங்கப் பெற்றது. சங்கத்தின் அங்கத்தினர் மட்டுமல்லாது, அனைவரும் யாதொரு சந்தாவும் செலுத்தாமல், இலவசமாகவே இப்படிப்பகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பெற்றது. இப்படிப்பகத்திற்கென, சங்கத் தலைவர் உமாமகேசுவரனார் அவர்கள் தனது சொந்த செலவில், Justice, Mysore university Magazine, Furgusson College magazine முதலிய ஆங்கில பத்திரிக்கைகளையும், தமிழர் நேசன், சித்தாந்தம், கிருஷிகன் முதலான தமிழ் இதழ்களையும் தொடர்ந்து வாங்கி வழங்கினார்.

     சங்க அன்பர் அ. கந்தசாமி பிள்ளை அவர்கள், சைபச் பிரகாசம் இதழினை வழங்கியுதவினார். மேலும் சங்கத்தின் சார்பில் ஞானசாகரம், தமிழன், நல்லாசிரியன், விவேக சிந்தாமணி, மனோரங்சனி, செந்தமிழ் மற்றும் நாளிதழ்களான சுதேசமித்திரன், திராவிடன் மற்றும் Mysore Economic Journel, Madras Mail  இதழ்களும் வாங்கப்பெற்றன.

     1925 அம் ஆண்டு சங்கத்தின் சார்பில் தமிழ்ப் பொழில் என்றும் திங்கள் இதழ் வெளிவரத் தொடங்கியதும், மாற்றிதழ்களாக, செந்தமிழ்ச் செல்வி, தமிழர், தமிழர் நேசன், செந்தமிழ், தொழிற் கல்வி, ஸ்ரீராம கிருட்டின விசயம், புதுயுகம், மாருதி, கிராமப் பஞ்சாயத்து, அரிசமய திவாகரம், கலா சிந்தாமணி, தாருஸ் இஸ்லாம்,ஆரம்ப ஆசிரியன், ஆனந்த போதினி, ஒற்றுமை, நச்சினார்க்கு இனியன், இய்தியத் தாய், வைத்தியச் சந்திரா, குடியரசு, அகிலாபானு, தேச பக்தன், யதார்த்தவசனி போன்ற இதழ்கள் படிப்பகத்திற்குத் தொடர்ந்து தருவிக்கப்பட்டன. அ.பொன்னண்ணாக் களத்தில் வென்றார் என்பார் இப்படிப்பகம் மற்றும் நூல் நிலையத்தின் மேற்பார்வையாளர் பொறுப்பினை ஏற்றுச் சிறப்பித்தார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், இலவச படிப்பிடத்தின் உபயோகத்தைக் கண்டறிந்து மதித்து, இப்படிப்பகத்தை மேம்படுத்த விரும்பிய, தஞ்சை நகர் பரிபாலன சமையினர் (நகராட்சி நிர்வாகத்தினர்) 1917 அம் ஆண்டு முதல் வருடத்திற்கு நூறு ருபாய் அளித்து உதவத் தொடங்கினர். தஞ்சாவூர் நகராட்சி நிர்வாகத்தினர், கரந்தைத் தமிழ்ச் சங்கப் படிப்பிடத்திற்கு வழங்கும் உதவித் தொகைக்கு சென்னை அரசாங்கத்தாரும் அங்கீகாரம் வழங்கினர்.

நீராருங் கடலுடுத்த...

          கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோன்றிய நாளிலிருந்தே, தமிழின் பெருமையினைத் தமிழர்க்கு உணர்த்த உமாமகேசுவரனார் கையில் எடுத்த பேராயுதம் விழாக்களாகும். திங்கள் தோறும் விழாக்கள் நடத்தி, தமிழ்ப் பெருமக்களை அழைத்து, தமிழின் பெருமையினைக் கல்லாதவர்களும் உணரும்படிச் செய்தார்.

     ஆயினும் உமாமகேசுவரனாருக்கு ஒரு மனக்குறை நெஞ்சை நெருடிக் கொண்டே இருந்தது. அக்காலத்தில் கோயில் திருவிழாக்களின் போது, கதா காலேட்சபங்கள்  நடைபெறும். மகா பாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களையும், அரிச்சந்திரன் கதையினையும், உரை நடையும், பாட்டும் கலந்த நடையில் கதா காலேட்சபமாய் விளக்குவர். விடிய விடிய மக்களும் அயராது கண் விழித்து கதை கேட்டு மகிழ்வார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை பாட்டோடு ஒன்றிய இனமல்லவா நமது தமிழினம்.

     எனவே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் விழாக்களை, தமிழின் பெருமையினைப் பறைசாற்றும், ஓர் இனிய பாட்டுடன் தொடங்கினால் என்ன? என்ற எண்ணம் உமாமகேசுவரனாரின் உள்ளத்தே உரு பெற்றது.

     உமாமகேசுவரனார் தினமும் அதிகாலையில் தூய வெண்ணீறு துதைந்த பொன் மேனியராய் தேவார, திருவாசகத்தையும், இராமலிங்க அடிகள் அருளிய திருவருட்பாவையையும், உளமுருகப் பாடிக் களிப்புறும் நல் மனத்தினர்.

     தேவாரம், திருவாசகம், திருவருட்பாவிற்கு இணையாக, உமாமகேசுவரனாரின் உள்ளத்தை உருக்கிய பாடல், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலாகும்.

          நீராருங்  கடலுடுத்த  நிலமடந்தைக்  கெழிலொழுகுஞ்
          சீராரும்  வதனமெனத்  திகழ்பரத  கண்டமிதிற்
          றக்கசிறு  பிறைநுதலுந்  தரித்தநறுந்  திலகமுமே
          தெக்கணமு  மதிற்சிறந்த   திரவிடநற்  றிருநாடும்
          அத்திலக  வாசனைபோ  லனைத்துலகு  மின்பமுற
          எத்திசையும்  புகழ்மணக்க  விருந்தபெருந்  தமிழணங்கே

..... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.