31 மே 2013

கரந்தை மலர் 11


-------. கடந்த வாரம் -----.
பல ஆண்டுகள் பலவாறு முயன்றும், தமிழைப் புகுத்த முடியாமற் போன, திருவையாற்று கல்யாண மகால், வேத பாடசாலையின் பக்கம் உமாமகேசுவரனாரின் முழுக் கவனமும் திரும்பியது.
----------------------
அரசர் கல்லூரி

     திருவையாற்று வேதபாட சாலையில் தமிழையும் புகுத்த வேண்டும் என்பது, வட்டக் கழகத் தலைவராய் அமர்ந்த பின் தோன்றிய எண்ணமல்ல. பல ஆண்டுகளாக முயற்சி மேற் கொண்டிருந்தவர்தான் உமாமகேசுவரனார்.

     1917 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெற்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆறாவது ஆண்டு விழாவில், பழமை பெருமைகளிற் சிறந்த நம் தமிழ் மொழி வழங்கும் தமிழகத்தில், இத் தஞ்சை மன்னரால் அறத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கும் பொருளின் பயனைக் கல்வி நெறியில் தமிழர்கள் அடையுமாறு, இளைஞர்களின் கல்விப் பயிற்சிக்கு வேண்டியாங்கு உதவவும், திருவையாற்று வட மொழிக் கல்லூரியில் தமிழையும் முதன்மைப் பாடமாக வைத்து நடத்தவும், தஞ்சாவூர் இறைத் தண்டற்றலைவர் (Collector) அவர்களுக்கும், நாட்டாண்மைக் கழகத்தாருக்கும் (District Board) விண்ணப்பம் செய்கிறோம் என்னும் தீர்மானத்தினை, உமாமகேசுவரனார் முன்மொழிந்து நிறைவேற்றினார்.
 
 காவிரிக் கரையில், கல்யாண மகால்
     மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், நாட்டாண்மைக் கழகத்தாருக்கும் தீர்மானத்தினை அனுப்பி நிறைவேற்றி வைக்கும்படி வேண்டிய போதிலும், தமிழைப் புகுத்த முடியாத நிலையே நீடித்தது.

     இந்நிலையில்தான் 1920 ஆம் ஆண்டு வட்டக் கழகத் தலைவராக உமாமகேசுரனார் தேர்ந்தெடுக்கப் பட்டார். திருவையாற்றில் தமிழைப் புகுத்தும் முயற்சியில் முழுமூச்சுடன் இறங்கினார்.

     திருவையாற்று வடமொழிக் கல்வி நிர்வாகத்தினரை, வட்டக் கழகத் தலைவராய் சந்தித்தார். இரண்டாம் சரபோசி மன்னர் அவர்களால் வட மொழி வளர்ச்சிக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில், தமிழைப் புகுத்து என்பது இயலாத செயலாகும், என்ற பதிலே கிடைத்தது.

     உடனே, இரண்டாம் சரபோசி மன்னர் அவர்களால் எழுதப்பட்ட அறக்கட்டளை சாசனத்தையே பார்த்துவிடுவோமே, என்று எண்ணி சரசுவதி மகால் நூலகத்திற்குச் சென்றார்.

     சரசுவதி மகால் நூலகத்தில் ஆராய்ச்சியாளராக இருந்த திரு எல்.உலகநாத பிள்ளை அவர்கள் மூலமாக, சரபோசி மன்னர் எழுதிய அறக்கட்டளைச் செப்புப் பட்டயத்தைப் பார்வையிட்டார். ஆனால் அந்த செப்புப் பட்டயமோ, வடமொழியில் எழுதப் பட்டிருந்தது. எனவே செப்புப் பட்டயத்தைப் படியெடுத்துக் கொண்டு கடலூர் நோக்கிப் புறப்பட்டார்.

     கடலூருக்கு அருகேயுள்ள, திருப்பாதிரிப் புலியூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஆதீனம், திருக்கோவலூர் ஆதீனம் ஆகும். இத் திருக்கோவலூர் ஆதீனத்தின் ஐந்தாம் குருமூர்த்தியாகப் பொறுப்பேற்று, ஐம்பத்து மூன்று ஆண்டுகள் செங்கோலோச்சியவர், ஞானியார் அடிகள் ஆவார். இவர் தமிழ் மொழிப் புலமையும், வடமொழிப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்றவர். மேலும் தமிழவேள் உமாமகேசுவரனாரிடத்து மிக்கப் பற்றும் பாசமும் உடையவர். பின்னாளில் உமாமகேசுவரனார் அவர்களுக்கு, செந்தமிழ்ப் புரவலர் என்னும் சீர்மிகு பட்டத்தினையும், தமிழவேள் என்னும் செம்மாந்தப் பட்டத்தினையும் வழங்கி அருளியப் பெருமகனார் இவரே ஆவார்.
 
ஞானியார் அடிகள்
     இத்தகு பெருமை வாய்ந்த ஞானியார் அடிகளை உமாமகேசுவரனார் சந்தித்தார். பட்டயத்தின் நகலினைக் காட்டி, மன்னர் இரண்டாம் சரபோசியின் அறக்கட்டளைக் குறித்த விவரங்களை ஆராய்ந்து கூறுமாறு வேண்டினார். பட்டயத்தின் நகலினைக் கவனமுடன் படித்த ஞானியார் அடிகள், ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இவ்வறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளதே தவிர, வடமொழி கற்பிப்பதற்காக என்று எவ்விடத்திலும் குறிப்பிடப் படவில்லை.  எனவே ஏழை மாணவர்களுக்கு இவ்வறக்கட்டளை மூலம் தமிழ் கற்பிக்கத் தடை எதுவும் கிடையாது என்று கூறி, அக்கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுவிக்க வழி வகுப்பது தமிழராம் நமது கடன் என அறிவுறுத்தி, ஆசி வழங்கி உமாமகேசுவரனாரை வழியனுப்பினார்.

     1920 ஆம் ஆண்டு முதல் தஞ்சை மாவட்டக் கழகத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றிய சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள், 1924 இல் மாவட்டக் கழகத் தலைவரானார். 1930ஆம் ஆண்டு வரை இவரே மாவட்டக் கழகத்தின் தலைவர். மாவட்டக் கழகத்தின் தலைவரே, சத்திரம் நிர்வாகத்தின் தலைவராவார். இக்காரணத்தால் திருவையாற்று  வேத பாடசாலையின் தலைவரானார் சர் ஏ.டி.பன்னீர் செல்வம். இதனால் உமாமகேசுவரனாரின் பணி எளிதாகியது.

     1924 ஆம் ஆண்டு, திருவையாற்று வேத பாடசாலையில், தமிழ் பயில்வதற்காக, பத்து மாணவர்களுக்குத் தமிழவேள் இடம் ஒதுக்கினார். அடுத்த ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கையினை இருபதாக உயர்த்தினார். மூன்றே ஆண்டுகளில் தமிழ் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும், வட மொழி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் சமமானது. வட மொழிக்கு இணையாக, சமமாக தமிழும் நங்கூரம் இட்டு அமர்ந்தது.

     உமாமகேசுவரனார் இதோடு மனநிறைவு அடைந்தாரா என்றால், அதுதான் இல்லை. சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களின் தலைமையினைப் பயன்படுத்தி, 1927 ஆம் ஆண்டில், வேத பாடசாலையின் பெயரினை அரசர் கல்லூரி என மாற்றினார. அவ்வருடமே சென்னைப் பல்கலைக் கழகத்தாரின் இசைவு பெற்று தமிழ் வித்வான் பட்டப் படிப்பினையும் ஏற்படுத்தினார்.

     இவ்வாறாக ஒரு வடமொழிக் கல்லூரியில் தமிழை நுழைத்து, ஏழை மாணவர்கள் இலவசமாய் தமிழ்ப் பயில வழி வகுத்தப் பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார்.

     இன்று அரசர் கல்லூரியில், தமிழ் சமஸ்கிருத மொழிகள் இரண்டிலும் இளங்கலைப் பட்டம் முதல் முனைவர் பட்ட வகுப்புகள் வரை நடைபெற்று வருகின்றன.

      1927 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற பல்லாயிரக் கணக்கானோரும், பட்டம் பெற பயின்று வருவோரும், தங்கள் இல்லங்களில் வைத்து வணங்க வேண்டிய மும்மூர்த்திகள் இரண்டாம் சரபோசி மன்னரும், உமாமகேசுவரனாரும், சர் ஏ.டி.பன்னீர் செல்வமும் ஆவர்.

நாகத்தி

     தஞ்சை வட்டத்தில் இரண்டு தீவுச் சிற்றூர்கள் உண்டு. ஒன்று நாகத்தி, மற்றொன்று தொண்டரையன் பாடி. இவை நாற்புறமும் ஆறுகள் சூழ, ஆறுகளின் இடையினில் தீவாக அமைந்த ஊர்களாகும். நாகத் தீவு என்பதே பின்னாளில் நாகத்தி என்று மருவிற்று. இவ்வூர்களில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, ஊரின் எந்தப் பக்கம் செல்ல வேண்டும் என்றாலும், கோடைக் காலங்களில் பொசுக்கும் ஆற்று மணலில் நடக்க வேண்டும்,ஆற்றில் நீர் நிறைந்து செல்லும் காலங்களில் நீந்தித் தான் கடக்க வேண்டும். உமாமகேசுவரனாரின் குல தெய்வமும் இவ்வூரில் இருப்பதால், சிறு வயது முதலே, இப்பகுதி மக்களின் நிலையினை நன்கு உணர்ந்தேயிருந்தார்.
 
நாகத்தி பாலம்
    எனவே, வட்டக் கழகத் தலைவராய் பொறுப்பேற்றவுடன், நாகத்தி மற்றும் தொண்டரையன் பாடி என்ற இவ்விரண்டு ஊர்களுக்கும் தனித் தனியே பாலங்கள் கட்ட ஏற்பாடு செய்தார். நாகத்திப் பாலமானது உமாமகேசுவரனார் காலத்திலேயே கட்டி முடிக்கப் பெற்றுவிட்டது. தொண்டரையன் பாடி பாலம், உமாமகேசுவரனார் காலத்தில் தொடங்கப் பட்டு, பின்னர் மாவட்டக் கழகத்தால் கட்டி முடிக்கப் பட்டது.

ஏழூர் திருவிழா

     போற்றிப்  புகழ்  மாவட்டக் கழகம்  பொலியப்  பலபணிகள்
     ஆற்றி  மகிழ்ந்தார் திருவையாற்  றேழூர்  விழாவில்  வழிபாடு
     நோற்றுச்  செல்வோர்  துயர்தீர  நொடிகள்  இல்லா வழிப்பாதை
     கூற்றக்  கழகப்  பொருள்கொண்டு  கோலியமைத்துப்  புகழ்பெற்றார்
-          பாவலர் பாலசுந்தரம்

     வட இந்தியாவில் ஐந்து நதிகள் பாயும் மாநிலம் பஞ்சாப் என்றழைக்கப் படுகிறது. தமிழகத்தில் மூன்று ஆறுகள் பாயும் ஒரு ஊர் முக்கூடல் என்றும் திருமுக்கூடல் என்றம் அழைக்கப் படுகிற்து. கேரளாவிலோ மூன்று ஆறுகள் பாயும் ஊரானது மூணாறு என்று அழைக்கப் படுகிறது. தமிழகத்தில் ஐந்து ஆறுகள் பாயும் பகுதியானது திருவையாறு என்று வழங்கப் படுகிறது.

                     குந்தி  நடந்து  குனிந்தொருகை  கோலூன்றி
                    நொந்திருமி  யேங்கி  நதைத்தேறி  - வந்துந்தி
                    ஐயாறு  வாயாறு  பாயாமு  னேஞ்சமே
                     ஐயாறு  வாயா  லழை

என்று ஐயடிகள் காடவர்கோனால் போற்றப்படும் ஐயாறு, திரு என்ற அடைமொழியுடன் திருவையாறு என அழைக்கப் படுகிறது.

     காவிரியின் கரையோரமாக எத்தனையோ கோயில்கள் இருப்பினும், திருவையாற்று ஐயாரப்பர் கோயிலை மட்டுமே காவிரிக் கோட்டம் என சுந்தரமூர்த்தி நாயனார் அழைக்கிறார்.

     திருவையாற்றிலுள்ள ஐயாறப்பர் கோயிலில், சித்திரைப் பெருவிழாவின் தொடர்ச்சியாக, ஏழூர் திருவிழாவானது நடைபெறுகிறது. சித்திரைத் திங்களில் நிறைமதி நாளன்று ஐயாரப்பர் பல்லக்கில் புறப்படுவார். தேவாரம் பாடுவோரும், பஜனை பாடுவோரும் என ஆயிரக் கணக்கானோர் பல்லக்கினைப் பின் தொடர்ந்து செல்வார்கள். ஐயாரப்பர் பல்லக்கினைத் தொடர்ந்து நந்தியம் பெருமான் மனைவியுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்படுவார். இவ்விரண்டு பல்லக்குகளையும் வழங்கிய பெருமைக் உரியவர் மராட்டிய மன்னன் சிவாஜியின் மனைவி கௌரம்பாபாயி அவர்களாவார்.

     திருவையாற்றிலிருந்து கும்பகோணம் சாலையில் 2 கி.மீ தொலைவில், திங்களூருக்குச் சாலை பிரியும் இடத்தில், திருநாவுக்கரசர் பெயரால் அப்பூதி அடிகள் அமைத்த தண்ணீர் பந்தல் இன்றும் அன்பர்கள் சிலரால் அமைக்கப் படுகிறது. ஏழூர் பல்லக்கானது, இவ்விடத்தைக் கடக்கும் போது, ஊர்வலத்தில் செல்லும் அன்பர்கள் சில நிமிடங்கள் நின்று, அப்பூதியடிகளின் அன்பினை, குருபக்தியினை வியந்து போற்றியபடி, நீரும் மோரும் அருந்தி தங்கள் பயணத்தைத் தொடர்வார்கள்.

..... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக்கிழமைச் சந்திப்போமா.