31 ஆகஸ்ட் 2020

ரானடே

 



     ஆண்டு 1968.

     தமிழ் நாட்டின் உயர் பதவியில் இருந்தவரை, அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகம் அழைத்தது.

     அவரும் புறப்பட்டார்.

     அமெரிக்கா செல்லும் வழியில் வாடிகனில் இறங்கினார்.

    

போப்பாண்டவரைச் சந்தித்தார்.

     போப்பாண்டவர் இவருக்காக, ஐந்தே ஐந்து நிமிடங்களை ஒதுக்கினார்.

     மகாத்மா காந்தி பிறந்த, இந்திய தேசத்தின் கடைகோடி மாநிலமான தமிழ் நாட்டில் இருந்து வருகிறேன் என்றார்.

     தமிழ் நாடா, தமிழ் நாட்டைப் பற்றிக் கூறுங்களேன் என்றார் போப்.

     அடுத்த நொடி, தமிழின் தொண்மை, தமிழின் பெருமை, தமிழர்களின் சிறப்பு என ஆங்கில வார்த்தைகளை அழகழகாய் கோர்த்து, ஒரு சொற் சித்திரத்தையே வரைந்தார்.

     போப் அசந்து போனார்.

     ஆங்கிலத்தில் இப்படியும் பேச முடியுமா என வியந்து போனார்.

     அற்புதமாய் பேசுகிறீர்கள், தொடர்ந்து பேசுங்கள் என்றார்.

     பிறகென்ன, கேட்கவா வேண்டும்?

     தமிழின் பெருமைகளை அழகு ஆங்கிலத்தில் அருவியாய் கொட்டினார்.

     போப்பாண்டவர் உள்ளம் நனைந்து போனது.

     ஐம்பத்து ஐந்து நிமிடங்கள்.

     ஐந்து நிமிடம் ஒதுக்கியவர், ஐம்பத்து ஐந்து நிமிடங்கள், லாகவமாய் வந்து விழும் வார்த்தைகளில் மயங்கிப் போய் அமர்ந்திருந்தார்.

     தங்களின் உன்னத உரை கேட்டு, எம் மனம் பெரிதும் மகிழ்கிறது. தங்களுக்கு ஏதேனும் பரிசளிக்க என்னுள்ளம் விழைகிறது. என்ன வேண்டும்? கேளுங்கள் என்றார் போப்.

     எது கேட்டாலும் தருவீர்களா?

     தருகிறேன் கேளுங்கள்.

     லிஸ்பன் சிறையில் வாழும், மோகன் ரானடேயின் விடுதலையை வேண்டுகிறேன்.

     போப் அதிர்ந்து போனார்.

     மோகன் ரானடே.

     ஆசிரியராய் பணியாற்றியவர்.

     கோவா விடுதலை இயக்க முன்னனி வீரர்.

     புரட்சிக்காரர்.

     துப்பாக்கிகளையும், வெடி மருந்துகளையும் கை பற்றுவதற்காக, பல காவல் துறை கிடங்குகளின் மீதும், சுங்கத்துறை கிடங்குகளின் மீதும் தாக்குதல் நடத்தியவர்.

     1955 ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில், நடத்திய, ஒரு காவல் துறை அலுவலகம் மீதான தாக்குதலின் போது, படுகாயமடைந்து, போர்ச்சுக்கல் காவலர்களால் கைது செய்யப் பட்டவர்.

     போர்ச்சுகல்.

     ஆம், நாமெல்லாம் ஆங்கிலேயர்களின் பிடியில் சிக்கித் தவித்தபோது, கோவா, போர்ச்சுகீசியர்கள் கையில் இருந்தது.

     படுகாயமடைந்த ரானடேவிற்குச் சிகிச்சை அளித்து, குணப்படுத்தி, போர்ச்சுகல் நீதிமன்றத்தில் நிறுத்தியது காவல்துறை.

    1956 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், நீதிமன்றம் இவருக்கு 26 ஆண்டுகால சிறைத் தண்டனையை அளித்தது.

     நீதிமன்றம் தெளிவாய் சொன்னது, ரானடே இந்தியச் சிறையில் அல்ல, போச்சுகல் சிறையில் அடைக்கப்படவேண்டும் என்று உறுதியாய் சொன்னது.

     மோகன் ரானடே.

     போர்ச்சுகல் தலைநகரான, லிஸ்பனின் சிறையில் அடைக்கப்பட்டார்.

     சிறைவாசம் தொடர்ந்தது.

     1961 ஆம் ஆண்டு கோவா சுதந்திரம் பெற்றது.

     கோவாவிற்கு விடுதலை கிடைத்தது.

     ஆனால் ரானடேயிற்கு விடுதலை கிடைக்கவில்லை.

     இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுக்கத்தான் செய்தது.

     ஆனால் போர்ச்சுகல் அசைந்து கொடுக்கவில்லை.

     இந்நிலையில்தான், புரட்சி எங்கு வெடித்தாலும், போராளி எங்கிருந்து புறப்பட்டாலும், அவனே என் தோழன் என்று எண்ணிய, அந்தத் தமிழன், போப் பாண்டவரிடம் கோரிக்கை வைத்தார்.

     உலக கிறித்துவர்களின் தலைவரான நீங்கள், ஒரு வார்த்தை சொன்னால் போதும், போர்ச்சுகலின் சிறைக் கதவுகள் தானே திறக்கும். ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்கள், ரானடேயை விடுதலை செய்யுங்கள்.

     போப்பாண்டவர் யோசித்தார், பின் பேசினார்.

     சிறைக் கதவுகள் திறக்கப்பட்டன.

     போர்ச்சுகல் அரசு, சிறைக் கதவுகளைத் திறக்க ஒப்புக் கொண்டாலும், அதற்கான, சில சம்பிரதாய நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டியிருந்தது.

      நடைமுறைச் சம்பிரதாயங்களில் சில மாதங்கள் கடந்து போயின.

     1969 ஆம் ஆண்டு சனவரி இறுதியில், ரானடே சுதந்திரக் காற்றைச் சுவாசித்தார்.

     விடுதலை பெற்று இந்தியா திரும்பிய, மோகன் ரானடேயை வரவேற்க, அன்றைய பாரதப் பிரதமர் மாண்புமிகு இந்திரா காந்தி அம்மையார் அவர்கள், தானே விமான நிலையம் சென்றார்.

     வரவேற்றார்.

     கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில், என் விடுதலையை வேண்டிய, அந்த உத்தம மனிதரை, உடனே நான் பார்க்க வேண்டும் என்றார் ரானடே.

     இந்திராவின் முகத்தில் கவலையின் ரேகைகள்.

     மன்னிக்கவும், சில நாட்களுக்கு முன்பு, அவர் இறந்துபோய் விட்டார் என்றார்.

     ரானடே உடைந்து போனார்.

     உடனே நான் சென்னைக்குச் செல்லவேண்டும். அந்த உன்னத மனிதரின் கல்லறையில் நின்றாவது, அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

     ஏற்பாடுகள் செய்யப்பெற்றன.

     சென்னை, மெரினா கடற்கரையில், அண்ணா சமாதியில் அழுது புரண்டார் ரானடே.

ஆம்,

கோவா விடுதலை வீரரின் விடுதலையை,

போப்பாண்டவரிடம் வேண்டியவர்,

அன்றைய தமிழக முதல்வர்


அறிஞர் அண்ணாதுரை.




 


    

 குரல் வழிப் பதிவு கேட்டுத்தான் பாருங்களேன்






நண்பர்களே, வணக்கம்,

     எனது மின்னூல்கள் மேலும் இரண்டு, அமேசான் தளத்தில் இணைந்துள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

     இவ்விரண்டு நூல்களையும் 1.9.2020 செவ்வாய்க் கிழமை பிற்பகல் முதல் 3.9.2020 வியாழக் கிழமை பிற்பகல் வரை, கட்டணம் இன்றி தரவிறக்கம் செய்து படித்து மகிழலாம்.

     படித்துப் பாருங்கள் நண்பர்களே.





துன்பமாலை