05 செப்டம்பர் 2012

தியாகமும் கல்வியும்


      1920 ஆம் ஆண்டு, மைசூர் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருக்கு, தங்கள் பல்கலைக் கழகத்திற்கு வந்து பணியாற்றுமாறு கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பெற்றது. வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அப் பேராசிரியர், மைசூர் பல்கலைக் கழகத்தில் தான் ஆற்றி வந்தப் பணியினைத் துறந்து, கல்கத்தா புறப்பட ஆயத்தமானார். புகை வண்டி மூலம் கல்கத்தா செல்ல ஏற்பாடு செய்திருந்தார். பயண நாளும் வந்தது.

       பயண நாளன்று, காலை முதலே, மைசூர் பல்கலைக் கழகத்தில், அப் பேராசிரியரிடம் பயின்ற மாணவர்கள், அவரின் இல்லத்திற்கு முன் குவியத் தொடங்கினர். நேரம் ஆக, ஆக மாணவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே சென்றது. பேராசிரியரை அழைத்துச் செல்வதற்காக, குதிரைகள் பூட்டப்பட்ட கோச் வண்டி, வீட்டின் முன் தயார் நிலையில் நிறுத்திவைக்கப் பட்டிருந்தது.

          பேராசிரியர் வீட்டை விட்டு வெளியே வருகிறார். பேராசிரியர் வாழ்க வாழ்க என மாணவர்கள் முழக்கமிடத் தொடங்குகின்றனர். பேராசிரியரை கோச் வண்டியில் அமர வைக்கின்றனர். வண்டியிலிருந்த குதிரைகளை அவிழ்த்து விட்டுவிட்டு, மாணவர்களே கோச் வண்டியை இழுத்துக் கொண்டு புகை வண்டி நிலையம் நோக்கி, தங்கள் பேராசிரியரை ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். பேராசிரியர் வாழ்க வாழ்க என்னும் முழக்கம் விண்ணை முட்டுகின்றது. இதுநாள் வரை உலகம் கண்டிராத அற்புதக் காட்சி. புகை வண்டி நிலையம் வந்தவுடன், கோச் வண்டியிலிருந்த தங்கள் ஆசிரியரை மாணவர்கள்,தங்களின் தோள்களில் சுமந்து செல்கின்றனர்.

     பேராசிரியர் பயணிக்க வேண்டிய தொடர் வண்டிப் பெட்டியை அடைந்தவுடன் கீழே இறக்கி, வாய் விட்டுக் கதறி அழுதவாறு பேராசிரியருக்கு பிரியா விடை தருகின்றனர். பேராசிரியரும் கலங்கிய விழிகளுடனும், குளிர்ந்த உள்ளத்துடனும், கையசைத்து விடைபெறுகின்றார்.

      பல்கலைக் கழகப் பேராசிரியராகவும், துணை வேந்தராகவும், இந்தியத் தூதராகவும் பணியாற்றி இந்தியக் குடியரசுத் தலைவராகவும் உயர்ந்த இம்மாமனிதர் டாக்டர் எஸ். இராதாகிருட்டினன் ஆவார். இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாளைத் தான், ஆசிரியர் தினமாக பாரதமே கொண்டாடி மகிழ்கின்றது.

             டாக்டர் எஸ். இராதாகிருட்டினன் அவர்கள் 1975 ஆம் ஆண்டு, தனது 86 ஆம் வயதில் மறைந்தார். இராதாகிருட்டினன் அவர்கள் மறைந்து 37 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் 2012 ஆம் ஆண்டில் நாம் நிற்கின்றோம். இதோ செப்டம்பர் மாதமும் வந்துவிட்டது.

     உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் நான், எனது வகுப்பில் ஆசிரியர் தினத்தினைச் சிறப்பாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்தேன்.

     கடந்த 24.8.2012 வெள்ளிக் கிழமையன்று, எனது வகுப்பு மாணவிகளிடம், ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு, நமது வகுப்பு மாணவியர் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் கட்டுரைப் போட்டி ஒன்றினையும், பேச்சுப் போட்டி ஒன்றினையும் நடத்துவோமா? என்றேன். அனைவரும் மகிழ்ச்சியாக நடத்துவோம், போட்டியில் கலந்து கொள்ள தயார் என்றனர்.

     கட்டுரைப் போட்டியினை 29.8.2012 புதன் கிழமை மாலை 4.30 மணிக்கும், பேச்சுப் போட்டியினை, ஆசிரியர் தினத்தன்று காலை 9.30 மணிக்கும் நடத்துவது என்று முடிவாயிற்று.

     போட்டிக்கானத் தலைப்பைக் கூறுங்கள் என்றனர். கட்டுரைப் போட்டிக்கானத் தலைப்பு எனது ஆசிரியர்கள், பேச்சுப் போட்டிக்கானத் தலைப்பு டாக்டர் இராதாகிருட்டினன் என்றேன்.

     மேலும் மாணவிகளாகிய நீங்கள் அனைவரும் ஒன்றாம் வகுப்பிலிருந்து தொடங்கி ஒன்பது ஆண்டுகள் கல்வி பயின்று, தற்பொழுது பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றீர்கள். கடந்த பத்தாண்டுகளில், உங்களுக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களைப் பற்றியும், தற்பொழுது உங்களுக்கு ஆசிரியர்களாக இருப்பவர்களைப் பற்றியும் எழுதுங்கள். உங்களது ஆசிரியர்களைப் பற்றிய உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்.

     நான் தற்பொழுது உங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்து வருகின்றேன், எனது வகுப்பறைச் செயற்பாடுகளைப் பற்றிய நிறை, குறைகளை எழுதுங்கள், நான் எனது பணியினை, இன்னும் செம்மையாகச் செய்ய, எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற உங்களின் கருத்துக்களையும் எழுதுங்கள் என்றேன்.

     மாணவிகள் மகிழ்வோடு தயாரானார்கள். 29.8.12 புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு, கணித சிறப்புப் பயிற்சி வகுப்பின் போது கட்டுரைப் போட்டியினை நடத்தினேன். எனது வகுப்பில் உள்ள 39 மாணவிகளும் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் கட்டுரை எழுதினார்கள். கட்டுரைத் தாட்களுடன் வீட்டிற்கு வந்தேன்.

     வீட்டிற்கு வந்த பிறகு, எனது மனைவியிடம் கட்டுரைப் போட்டி பற்றிக் கூறினேன். மாணவியர் எழுதியக் கட்டுரைகளைப் பார்க்க எனது மனைவி ஆர்வமானார். குறிப்பாக என்னைப் பற்றி, எனது மாணவியர்கள் என்ன எழுதியிருக்கின்றார்கள் என அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். எட்டாம் வகுப்பு பயிலும், எனது மகளும் ஆர்வமுடன் எங்களுடன் வந்து அமர்ந்தார். ஒவ்வொரு கட்டுரையாகப் படிக்கத் தொடங்கினோம்.

     எனது ஆசிரியர்கள் என்னும் தலைப்பில் மாணவியரின் கட்டுரைகளைப் படிக்கப் படிக்க வியப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. முதன் முறையாக மாணவியர், தங்களது பாடப் பகுதியினைத் தாண்டி, தாங்களாகவே, சுயமாக எழுதிய கட்டுரை. பல மாணவியர் தங்களுக்கு 6 ஆம் வகுப்பில்,  7 ஆம் வகுப்பில், 8 ஆம் வகுப்பில் பாடம் நடத்திய ஆசிரியர்களைப் பற்றி, மறவாமல் குறிப்பிட்டு, எக்காரணத்தால் அவ்வாசிரியரைத் தங்களுக்குப் பிடிக்கும் என்பதையும் விரிவாக எழுதியிருந்தனர்.

     சிலர் தங்களது குடும்ப நிலையினை மனம் திறந்து எழுதியிருந்தனர். ஒரு மாணவி, எனது அப்பாவுடன், உடன் பிறந்தவர்கள் அனைவரும் படித்து நல்ல வேலையில், நல்ல நிலைமையில் உள்ளனர். ஆனால் எனது அப்பா படிக்காத காரணத்தால், கூலி வேலை செய்து வருகின்றார். போதுமான வருமானமின்றி குடும்பமே தவிக்கும் நிலை உள்ளது. நான் நன்றாகப் படித்து, நல்ல நிலைக்கு முன்னேறி, எனது  அப்பாவை நல்ல முறையில் பார்த்துக் கொள்வேன் என்று எழுதியிருந்தார். படித்த எங்களின் உள்ளம் உருகியது.

     ஒரு மாணவி, கடந்த ஆண்டுவரை ஆசிரியர்களிடம் பேசப் பயப்படுவேன். ஆனால் இந்த ஆண்டு, தாங்கள் என் வகுப்பிற்கு வந்த பிறகு, எனக்கு அந்த பயம் போய்விட்டது. பாடம் தொடர்பானச் சந்தேகங்களைப் பயமின்றிக் கேட்க முடிகின்றது என்று எழுதியிருந்தார். மகிழ்ச்சியாக இருந்தது.

     சில மாணவிகள் பள்ளியில் தாங்கள் சந்திக்கும் சில இன்னல்களை எடுத்துக் கூறி, தீர்வு காண வேண்டியிருந்தனர்.

      அனைத்து மாணவிகளின் கட்டுரைகளையும் படித்த பிறகுதான் தெரிந்தது, இம்மாணவிகள் வயதில் வேண்டுமானால் சிறியவர்களாக இருக்கலாம், ஆனால் உள்ளத்தால், சிந்தனையால் உயர்ந்தவர்கள். அறிவு முதிர்ச்சியினை அடைந்தவர்கள், எதிர்கால் வாழ்வைத் துணிவுடன் எதிர்கொள்ளக் காத்திருக்கும் வீராங்கனைகள் என்பது புரிந்தது.

     சிறந்த கட்டுரையினை எழுதிய மூவருக்குப் பரிசு வழங்குவோம் என்ற எண்ணத்துடன் இருந்த எனக்கு, எந்தக் கட்டுரைக்கு முதல் பரிசு தருவது, எந்த கட்டுரைக்கு இரண்டாம் பரிசு தருவது என்பதை முடிவு செய்ய முடியவில்லை. இறுதியில் நானும், எனது மனைவியும் ஒன்பது கட்டுரைகளைத் தேர்வு செய்தோம். ஒன்பது கட்டுரைகளுக்குமே முதல் பரிசு வழங்குவது என்று முடிவு செய்தோம்.

கப்பலோட்டியத் தமிழனின் உண்மைப் படம்
     ஆசிரியர் தினமான இன்று 5.9.2012 புதன் கிழமை காலை, உடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், பிற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரிய நண்பர்களுக்கும், ஆசிரியர் தின நல்வாழ்த்துச் செய்தியினை, இணையதளத்தின் வே2 எஸ்.எம்.எஸ்., வழியாக அனுப்பினேன். தொடர்ந்து, நாள்தோறும் பார்வையிடும் வலைப் பூ தளங்களைப் பார்வையிடத் தொடங்கினேன்.

     பேராசிரியர் சுபவீ அவர்களின் வலைப் பூவிற்குச் சென்ற பொழுதுதான் தெரிந்தது, செப்டம்பர் 5 ஆம் நாளுக்கு, இன்னுமொரு பெருமையும் உண்டு என்பது புரிந்தது. தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் எண்ணி எண்ணிப் பெருமைப்பட வேண்டிய நாள் இந்நாளாகும். ஆம், இந்நாள் செக்கிழுத்தச் செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளாகும்.

     ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தமைக்காக, இரட்டை ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் செக்கிழுத்த செம்மலை மறந்தே போய்விட்டோமல்லவா?

      செக்கிழுத்த செம்மலின் தியாகத்தைப் போற்ற வேண்டிய புனித நாள் அல்லவா செப்டம்பர் 5.

     இனி வரும் ஆண்டுகளில், எனது வகுப்பில், வ.உ.சி அவர்களின் பிறந்த நாளினையும், ஆசிரியர் தினத்தினையும் சேர்த்தே கொண்டாடுவது என்று முடிவு செய்தேன்.

     வகுப்பிற்குச் சென்றவுடன், வ.உ.சி.,அவர்களின் பிறந்த நாளும் இன்றுதான் என்ற செய்தியினையும், வ.உ.சி அவர்களின் வீரமிகு, தீரமிகு போராட்ட வாழ்வு குறித்தும் பேசினேன். திடீரென்று ஒரு சிந்தனை, பேச்சுப் போட்டியுடன், ஒரு ஓவியப் போட்டியினையும் நடத்தினால் என்ன என்று.

     நீங்கள் அனைவரும் ஆசிரியர் தினப் பேச்சுப் போட்டிக்குத் தயராக வந்திருப்பீர்கள். செக்கிழுத்த செம்மலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு ஓவியப் போட்டி நடத்தலாமா? கப்பலோட்டியத் தமிழனின் திரு உருவை ஓவியமாக வரையத் தயாரா? என்றேன். மாணவிகள் சற்றும் தயங்காமல் தயார் என்றனர்.

     ஆசிரியர் தினப் பேச்சுப் போட்டியுடன், வ.உ.சி அவர்களின் பிறந்தநாள் ஓவியப் போட்டியினையும் நடத்தினேன்.

தமிழாசிரியை திருமதி ப.உஷா ராணி அவர்களும், சமூக அறிவியல் ஆசிரியை திருமதி  வி. சித்திர பாரதி அவர்களும் நடுவர்களாக அமர்ந்து பேச்சுப் போட்டியினை நடத்தி, வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். மடை திறந்த வெள்ளம் போல், மாணவிகள் ஆற்றிய சொற்பொழிவில், வகுப்பறைவே நனைந்தது.

     ஓவிய ஆசிரியரும் நண்பருமான திரு ஜி.கோவிந்தராசு அவர்கள் ஓவியப் போட்டிக்கு நடுவராக இருந்து, சிறந்த ஓவியங்களைத் தேர்ந்தெடுத்தார்.

மாணவியர் நாடகம்
     மாலை பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வென்றவர்களுக்கானப் பரிசளிப்பு விழா. பள்ளி உதவித் தலைமையாசிரியர் நண்பர் திரு அ.சதாசிவம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நண்பர்களான முதுகலை ஆசிரியர் திரு வெ.சரவணன் அவர்களும், உடற் கல்வி ஆசிரியர் திரு துரை.நடராசன் அவர்களும், ஆசிரியை திருமதி வி.சித்திர பாரதி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தனர்.

முதற் பரிசு பெற்ற ஓவியம்
          பரிசளிப்பு விழாவிற்கு முன்னதாக, மாணவிகள் ஒரு சிறு நாடகத்தினை அரங்கேற்றினார்கள். மாணவிகளுக்கு வீட்டிலோ, பள்ளியிலோ அல்லது வேறு எங்கேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், சற்றும் மனம் தளராமல், ஆசிரிய ஆசிரியைகளை நாடி தங்களது பிரச்சினைகளைக் கூறி தீர்வு காண வேண்டுமே அல்லாது, தவறாக முடிவிற்குச் செல்லக் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் வெகு இயல்பாக, நேர்த்தியாக நடித்து, சிறப்பு விருந்தினர்களின் பாராட்டினைப் பெற்றனர்.


      ஒரு சிறிய வகுப்பறையில் நடத்தினாலும், ஒரு நிறைவான விழாவாக, இவ்விழா அமைந்திருந்தது.


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி    டாக்டர் எஸ்.இராதாகிருட்டினன்
நினைவினைப் போற்றுவோம்