27 ஜூன் 2013

கரந்தை - மலர் 14


------- கடந்த வாரம் -----
திரிப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள், தன் உரையில், இத்தகைய பெருமையும், இனிமையும் உடைய தமிழை உயர்தனிச் செம்மொழி என்ற நிலையில் அரசியலார் போற்றாதிருப்பது கவலத் தக்கதாகும் என்று தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

சிலப்பதிகாரம், மணிமேகலை நாடகங்கள்

     தமிழ் மொழியானது இயல், இசை, நாடகம் என்னும் மூன்று கூறுகளை உடையது. முத்தமிழ் என்று போற்றப்படும் தமிழில், பழமையான இயற்றமிழ் நூல்கள் கிடைத்த அளவிற்கு, இசைத் தமிழ் நூல்களும், நாடகத் தமிழ் நூல்களும் கிடைத்தபாடில்லை. இக்குறையினைப் போக்க பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் மனோன்மணீயம் நாடகத்தையும், பரிதிமாற் கலைஞர் அவர்கள், மானவிஜயம் என்னும் நாடகத்தையும், மறைமலை அடிகள் அவர்கள் சாகுந்தலம் என்னும் நாடகத்தையும் எழுதி நாடகத் துறைக்கு வித்திட்டார்கள்.
 
பரிதிமாற் கலைஞர் - சுந்தரம் பிள்ளை - மறைமலை அடிகள்
     சங்கத் தலைவர் உமாமகேசுவரனார் அவர்கள் சிலப்பதிகாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதனால்தான் தமிழ்ப் பெருமன்றம் அமைத்த வேளையில், தமிழ்ப் பெருமன்ற மேடையினைக் கூட, சிலப்பதிகாரத்தில் மாதவி நடனமாடிய மேடையின் அளவினை ஒத்த வகையில் அமைத்துப் பெருமிதம் அடைந்தார்.
 
வேங்கடாசலம் பிள்ளை
     உமாமகேசுவரனாரின் விருப்பத்திற்கு இணங்க கவிஞர் அரங்க வேங்கடாசலம் பிள்ளை அவர்கள், சிலப்பதிகாரத்தை நாடகமாக்கி வழங்கினார்.  சிலப்பதிகாரத்தில் குடுகுடுப்பைக் காரன் பாத்திரத்தை புதிதாய் உருவாக்கி, சுவையூட்டியதோடு, அப்படைப்பின் வாயிலாகவே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு எழுச்சியையும், புத்துணர்ச்சியையும் ஊட்டினார். சிலப்பதிகார நாடகத்தில், குடுகுடுப்பைக் காரன், எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை முன்கூட்டியே கூறுவது போல், ஒரு காட்சியினை அமைத்தார். இனி குடுகுடுப்பைக் காரன் கூறுவதைக் கேளுங்கள்,


    ஓ, ஓடிவாடி, ஓடிவாடி உதிரக் காட்டேரி, இரத்தக் காட்டேரி, உண்மையைச் சொல்லடி, ஒளிக்காமற் சொல்லடி, மறைக்காமற் சொல்லடி, இந்த சங்கத்துக்கு அதிட்டம் வருகுது, அதிட்டம் வருகுது, வந்திட்டுது, வந்திட்டுது. இந்தச் சங்கத்துக்கு அதிட்டம் வந்திட்டுது. பணம் வருகுது, பணம் வருகுது, ஆயிரக் கணக்கா, இலட்சக் கணக்கா பணம் வருகுது. பணம் வருகுது, பணம் வருகுது. இந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், விழித்துக் கொண்டாங்கள், விழித்துக் கொண்டாங்கள். இனிமேல் ஊர் ஊராய் போவாங்கள், கொடுத்ததை வாங்குவாங்கள், காற்காசு வாங்குவாங்கள், ஒரு பிடி அரிசி வாங்குவாங்கள், எதைக் கொடுத்தாலும் இன்பமாய் வாங்குவாங்கள். ஓ அதிட்டம் வந்திட்டுது. காசு பணம் ஆகுது, பணம் பத்து ஆகுது, பத்து நூறு ஆகுது, நூறு ஆயிரம் ஆகுது, ஆயிரம் இலட்சம் ஆகுது. இந்த நாட்டிலே இருக்கிற பணக்காரரு, நிலக்காரரு, சொந்தக்காரரு, சுகக்காரரு,, பெரிய வக்கீல்மாரு, உத்தியோகத்தரு,  பெரிய பெரிய மடத்துக்காரரு, இவர்களாலே ஒரு காசுமில்லை, ஒரு தூசுமில்லை. இவர்கள் பணம் தாசிக்காகுது, வேசிக்காகுது, கோர்ட்டுக்காகுது - அது பாவச் சொத்து. அந்த பாவச் சொத்து, எப்படியாவது போகட்டும். இந்த சங்கத்துக்கு வேண்டாம். அதிலேயும் நல்லவங்க இருக்காங்க, அவங்க கொடுக்குறாங்க, கொடுப்பாங்க.

    இப்பகுதி, நாடகத்தைப் பார்க்கும் இளைஞர்களுக்குச் சுவையூட்டுவதற்காக எழுதப்பட்டது என்று கூறுவார் கவிஞர். ஆயினும் அது மட்டுமே உண்மையன்று. தமிழ் நாட்டுச் செல்வர்கள், தம்முடைய காசு, பணத்தை தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல், தாசிக்கும், வேசிக்கும் செலவிடுவதைச் சுட்டிக் காட்டிச் சாடுகிறார். உண்மையான தமிழ் ஆர்வமுடைய ஏழை, எளியவர்களிடம் நிதி திரட்ட வேண்டும். அதனைக் கொண்டு, சங்கத்தை ஒரு பெரிய பல்கலைக் கழகமாக வளர்க்கின்ற முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று சங்க  உறுப்பினர்களுக்கு எழுச்சியினையும், கடமை உணர்ச்சியினையும் ஊட்டவே இப்பகுதி எழுதப் பெற்றுள்ளது.

     கவிஞர் அரங்க. வேங்கடாசலம் பிள்ளை அவர்களின் இச்சிலப்பதிகார நாடகமானது, பதினான்காம் ஆண்டு விழாவில், செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரி மாணவர்களால், நாடகமாக நடிக்கப் பட்டது.

     இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான, சிலப்பதிகாரத்தை நாடகமாய் எழுதி அரங்கேற்றியதைத் தொடர்ந்து, இன்னொரு காப்பியமாகிய மணிமேகலையையும் நாடக வடிவில் எழுதினார். இந்நாடகமானது தனியொரு நூலாக, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடாக வெளிவந்துள்ளது.

தமிழ்ப் பல்கலைக் கழக முயற்சிகள்

     ஆந்திரர் தங்கள் மொழிக்கெனத் தனிப் பல்கலைக் கழகம் கண்டாற்போல, வங்காளிகள் தங்கள் மொழிக்கெனத் தனிப் பல்கலைக் கழகம் பெற்றார்போல, உசுமானியர் தங்கள் மொழிக்கென உசுமானியப் பல்கலைக் கழகம் கண்டாற் போலத், தமிழரும் தங்கள் மொழிக்கென ஒரு தனிப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்து நடத்த வேண்டும் என்று முதன் முதலில் முழங்கியவர், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசுவரனார் அவர்களேயாவார்.

      உமாமகேசுவரனார் உள்ளத்து முகிழ்த்தெழுந்த, தமிழ்ப் பல்கலைக் கழக ஆசையினை, தமிழர்தம் தேவையினை நிறைவேற்றும் முகத்தான், கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாக்களில் தீர்மானங்கள் பலவற்றை நிறைவேற்றி, அரசியலாருக்கு அனுப்பி வற்புறுத்தினார். அரசியலார் இத் தீர்மானத்தை நிறைவேற்ற முயலாமை கண்டு வருந்தி, இனியும் வாளாவிருத்தல் கூடாதென்று எண்ணி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், திருவனந்தபுரத்திலும் மேலும் இலங்கையிலும் உள்ள தமிழறிஞர்களைக் கொண்டு, மாவட்ட வாரியாக பல குழுக்களை அமைத்து, அவ்வப்பகுதி மக்களின் ஆதரவினைப் பெற்று அரசியலாரை வற்புறுத்தவும் ஏற்பாடுகளைச் செய்தார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழா, 4.9.1921 மற்றும் 5.9.1921 ஆகிய தேதிகளில், கரந்தை கந்தப்ப செட்டியார் அவர்கள் அற நிலையத்தில், சங்கத்தின் காப்பாளர்களுள் ஒருவராகிய, கீழையூர் சிவ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ் மொழிக்கென ஒரு தனிப் பல்கலைக் கழகம் இருக்க வேண்டுவது இன்றியமையாதென்று இக் கூட்டத்தார் துணிபுற்று, இம் முயற்சியில் ஈடுபட வேண்டுமென, தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வதுடன், இதனை மேற்கொண்டு செய்விக்க வேண்டுமென அரசியலாரையும் வேண்டிக் கொள்கிறார்கள் எனும் தீர்மானம் உமாமகேசுவரனார் அவர்களால் நிறைவேற்றப்பட்டது.


     
இத்தீர்மானமே, தமிழுக்குத் தனியே ஓர் பல்கலைக் கழகம் வேண்டுமென, தமிழ்கூறும் நல்லுலகில் இயற்றப்பட்ட முதல்  தீர்மானமாகும்.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் சந்திப்போமா

                      --------------------------------------------------------------- ஹரணியின்

நத்தையோட்டுத் தண்ணீர்

     இன்று (27.6.2013)  வியாழக் கிழமை காலை 11.30 மணியளவில், ஆசிரியர் ஓய்வு அறையில் அமர்ந்திருந்தேன். ஜெயக்குமார். குரல் கேட்டு நிமிர்ந்தேன். எதிரே ஹரணி. வாருங்கள் வாருங்கள், அமருங்கள் என மகிழ்வோடு வரவேற்றேன். ஒரு நிமிடம் வாருங்கள் என வெளியே அழைத்துச் சென்றார். தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து, நூலொன்றினை எடுத்து வழங்கினார். மகிழ்வோடு பெற்றுக் கொண்டேன்.


     
ஹரணி. தமிழ்  கூறும் நல்லுலகில் அனைவரும் அறிந்த பெயர். வலைப் பூ வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர். ஹரணி அவர்கள் குறித்து எனக்கு ஒரு தனித்த பெருமை உண்டு. அவரும் கரந்தை. நானும் கரந்தை. சிறு வயது முதலே அவருடன் நல்ல பழக்கமுண்டு.

     ஹரணி அவர்கள் பற்றி பலரும் அறியாத செய்தி ஒன்றுண்டு. இவர் கல்லூரிப் படிப்பை, இளங்கலைப் படிப்பை அறிவியலில் தொடங்கி, ஆய்வுப் படிப்பைத் தமிழில முடித்தவர்.

     தமிழை நேசிப்பவர்கள் பலருண்டு. ஆனால் இவரோ தமிழை சுவாசிப்பவர்.
வாசிக்காத நாட்களெல்லாம், சுவாசிக்காத நாட்கள்
என்னும் உயரிய, உன்னத கொள்கையினை உடைவர்.

     ஹரணி அவர்களின் இல்லம் இருப்பதோ கரந்தையில். பணியாற்றுவதோ அண்ணாமலையில். நாள்தோறும் 200 கி.மீ பயணிப்பவர். பேரூந்தில் பயணித்த நாட்களை நெஞ்சில் நிறுத்தி பேரூந்து என்னும் புதினத்தைப் படைத்தவர். தற்பொழுது தொடர் வண்டியில் பயணிப்பவர். தொடர் வண்டிப் பயணத்தில், நாள்தோறும் குறைந்த்து 200 பக்கங்களையாவது படிப்பவர். இப்பழக்கத்தினை இன்று வரையில் தொடர்பவர். விரைவில் தொடர் வண்டி என்னும் புதினத்தைப் படைத்தாலும் படைப்பார்.

      படைப்பிலக்கியத் துறையில் கதை, கவிதை, நாடகம், சிறுவர் இலக்கியம், மொழி பெயர்ப்பு, ஆங்கிலக் கவிதைகள், பெண்ணியம் என்னும் நிலைகளில், தனது படைப்புத் திறனை வெளிப்படுத்திவரும், பன்முக ஆளுமை உடையவர்.

நத்தையோட்டுத் தண்ணீர்
ஹரணி அவர்களின் கைவண்ணத்தில ஓர் புதிய படைப்பு. புதுமைப் படைப்பு.

     நூலின் மூன்றாவது பக்கத்திலேயே, நம்மை முழுவதுமாய் நூலுக்குள் ஈர்த்து விடுகிறார்.

       சூழல்களாலும் ...
       இயலாமையாலும் ...
       மனம் புழுங்கும்
       சத்திய
       உள்ளங்களுக்கு....
       இச்சிறு நூல்

     14 கட்டுரைகள். ஒவ்வொன்றும் நம்மை பெருமூச்சு விட வைக்கும். ஆம் உண்மைதான்.

    நல்ல வாழ்க்கை வாழ்வது என்பது
    நல்ல புத்தகங்களை வாசிப்பது போல

    வாசிப்பு என்பது ஒரு கலை
    வாசிப்பு என்பது ஒரு தவம்
    வாசிப்பு என்பது ஒரு பரவசம்
    வாசிப்பு என்பது ஓர் உணர்வு
என தொடர்ந்து எழுதி, நம்மையும் அந்தச் சுழலுக்குள் இழுத்து விடுகிறார்.

நட்பை விமர்சனம் செய்வது நட்பாகாது
என்ற ஒரு வரியே, இவர் அனுபவம் என்னும் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தவர் என்பதை நமக்குப் புரிய வைக்கிறது.

     கடிதம் ஓர் வாழ்வின் உன்னத அடையாளம்
     கடிதம் எழுதுதல் ஒரு கலை
     நாம் தொலைத்தவற்றுள் இதுவும் ஒன்றல்ல
     இதுதான் ஒன்று
சம்மட்டி கொண்டு நம்மைத் தாக்குகின்றன் இவரின் எழுத்துக்கள். வளர்ச்சி என்னும் பெயரில் நாம் இழந்தது அதிகம். எதை எதை இழந்தோம் என்பதையே அறியாமல், உணராமல் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

     ஓடி பிடித்து விளையாடல்
     சடுகுடு
     திருடன் போலிஸ்
     கிச்சு கிச்சு தாம்பாளம்
     சில்லு செதுக்கல்
     கிட்டிப் புள் விளையாட்டு
     பளிங்கு உருட்டல்
இப்படி பல விளையாட்டுக்களை, இருள் சூழும் வரை, தெருவிலே நின்று விளையாடினோமே நினைவிருக்கிறதா? ஆனால் இன்று நம் பிள்ளைகளுக்கு, இவ்விளையாட்டுக்களின் பெயராவது தெரியுமா?

நாம் குழந்தைகளை ஏமாற்றுகிறோம்
நாம் குழந்தைகளுக்கு எதுவும் கற்றுக் கொடுப்பதில்லை
தேவையில்லை என நாமாகவே தன்னிச்சையான முடிவு எடுக்கிறோம்
என நம்மைச் சாடுகிறார். உண்மை சுடுகிறது.

     கூட்டுக் குடும்பம் என்கிற அற்புதத்தைப் போட்டு உடைத்து விட்டார்களே. அது சுக்கு சுக்கலாகிவிட்டதே
என இவர் வருந்துவதைப் படிக்கும் பொழுது, நமது மனதில் வலி, மெல்ல மெல்ல கூடுகிறது.

     அவர்கள் எங்கே இருக்கிறார்கள்... எப்படியிருக்கிறார்கள்... இருக்கிறார்களா? புகழுடம்பு எய்திவிட்டார்களா? தெரியாது. ஆனாலும அவர்கள் இன்றைக்கும், அன்றைக்கு பார்த்த்து போலவே மனத்தில் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். அழியாப் பிம்பமாய், அதே ஆசிரியர்களாக. மிடுக்குடன்
என ஹரணி அவர்கள், தனக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களைப் பற்றிக் கூற, கூற, நாமும் நமது இளமைக் கால, பள்ளிக் கால நினைவலைகளில் மூழ்கி மூச்சுத் திணறுவதை உணர முடிகிறது.

நத்தையோட்டுத் தண்ணீர்
இந்த நத்தையோட்டில் தேங்கியிருப்பது வெறும் தண்ணீரல்ல. தெளிந்த அனுபவம். அந்த அனுபவம் புகட்டிய பாடம். அந்தப் பாடத்தால் விளைந்த உயர் ஞானம்.

     ஆழ்கடலில் மட்டுமல்ல, இந்த நத்தையோட்டுத் தண்ணீரில் மூழ்கினால் கூட நல் முத்தெடுக்கலாம்.
வாருங்கள். வாசித்துப் பாருங்கள்.

ஹரணி அவர்களின்
அலைபேசி 9442398953
மின்னஞ்சல் uthraperumal@gmail.com

நூல் வெளியீடு
கே.ஜி.பப்ளிகேஷன்ஸ்,
31, பூக்குளம் புது நகர்,
கரந்தை,
தஞ்சாவூர் – 613 002


20 ஜூன் 2013

கரந்தை - மலர் 13


------ கடந்த வாரம் ------
ஏழூர் திருவிழாவானது சிறக்கப் பல்லாற்றானும் பாடுபட்ட பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார்
-------------------------

இராதாகிருட்டினன் மறைவு

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பெருமையினைப் பெற்றமையால், சங்கம் நிறுவிய துங்கன் எனப் போற்றப் பெற்றவர் இராதாகிருட்டினன். தன் முயற்சியால் தோன்றிய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் எவ்விதப் பதவியினையும் ஏற்காமல், அடிப்படை உறுப்பினராய் இருந்து பெருந்தொண்டாற்றிய பெருமைக்கு உரியவர் இவர். சங்கம் வளர உறுப்பினர்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்துவதுதான் முதற் படி என்பதை உணர்ந்த இராதாகிருட்டினன், தான் பணியாற்றிய தனுக்கோடி அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றும் சக அலுவலர்களையும், தனுக்கோடியின் வணிகர்களையும், ஒப்பந்தக் காரர்களையும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர்களாக்கினார்.

    தன் மனைவி செண்பக வள்ளி அம்மாள் அவர்களையும், 1916 ஆம் ஆண்டிலேயே, கரந்தைத் தமிழ்ச் சங்க உறுப்பினராக்கினார். இராதா கிருட்டினனின் மனைவி செண்பக வள்ளி அம்மாள் அவர்கள்தான், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையினைப் பெற்றவராவார.
 
இராதாகிருட்டினன்
     இத்தகு பெருமை வாய்ந்த சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன், அவர்கள், 27.2.1918 அன்று தனது 33 ஆம் வயதில் அகால மரணமடைந்து, அனைவரையும் மீளாத் துயரில் ஆழ்த்திச் சென்றார்.
 
அரங்க. வேங்கடாசலம் பிள்ளை
             என்றிளைய  பருவத்தே  எழுந்துநின்  னட்பம்மா
             அன்றுமுதல்  யாமெய்துஞ்  சீரெல்லாம்   அதன்பயனே
             நன்றுதரும்  நண்பாவோ  நண்பாவோ  நண்பாவோ
             ஒன்றுளத்து  நினையன்றெம்  மூக்கமதே  யிழந்தனமே

             வள்ளுவர்தம்  திருநாளே  நின்னாளா  மாண்புற்றோய்
             ஒள்ளியசீர்  நின்மக்கள்  உன்புகழை  ஏந்துவரால்
             நள்ளிய  நின்காதலியை,  நம்முன்னை  நண்பர்களை
             விள்ளரிய  துயரடக்கிப்  பொறுமைகொள வேண்டுதுமே

என்று அரங்க. வேங்கடாசலம் பிள்ளை அவர்களும்,
 
ந.மு.வேங்கடசாமி நாட்டார்
             மதிவலி  யானே  பதிநலம்  பேணினை
             நவிறொறு  நூனயம்  போலத்  தவிரா
             வின்பு சுரக்க  வியைந்த  கேண்மையி
             னட்டனை  மன்னே  முன்னே  யெம்மொடு
             விட்டனை  யினியாம்  விழுமங்  கூர
             இனையை  யாகலின்  இராதா  கிருட்டின
             ஒளியு  மிருளும்  போல
             அளியகண்  டேமிவ்  வகனில  வாழ்க்கையே

என்று பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களும்,
 
இராமசாமி வன்னியர்
            சீரார்  கரந்தைத்  திருப்பதியி  லங்குரித்த
            பேரா  ரிராதா  கிருட்டினப்பேர்  பெற்றவனே
            ஏராரு  நின்புகழை  யிவ்வுலகி  லேநிறுத்தி
            நீரார்  சடைமுடியோன்  நீள்கழல்சென்  றுற்றனையே

            தீந்தமிழி  லாங்கிலத்திற்  றேர்ச்சிபெறு  நுண்ணறிவாய்
            ஏய்ந்த  கரந்தை  யெழிலார்  தமிழ்ச்சங்கம்
            வாய்ந்த  புகழ்பரவ  மன்னுவித்தா  யக்கழகம்
            பாய்ந்து  பெருகுவதைப்  பாராது  சென்றனையே

என்று கூடலூர் வே. இராமாசாமி வன்னியர் அவர்களும் கையறு நிலைச் செய்யுட்களைப் இயற்றி இராதாகிருட்டினன் பிரிவு தாளாது துயருற்றனர்.

இராதாகிருட்டினன் கழகம்

     சங்கம் நிறுவிய துங்கன் இராதாகிருட்டினன் அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில், கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத்தொழில கலாசாலையில், அதன் தலைமையாசிரியரும், இராதாகிருட்டினனின் ஆருயிர் நண்பருமான கவிஞர் அரங்க.வேங்கடாசலம் பிள்ளை அவர்களால், இராதாகிருட்டினன் கழகம் தோற்றுவிக்கப் பட்டது.

     தமிழ் மொழியில் மாணவர்கள் தேர்ச்சியுறுவது போல், ஆங்கிலத்திலும் நன்கு தேர்ச்சி பெற வேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில், இக் கழகத்தின் சார்பில், ஒவ்வொரு திங்கட் கிழமையும், ஒரு கூட்டம் கூட்டப் பெற்றறு, இக்கூட்டத்தில், கட்டுரை வரைதல், பேசப் பழகுதல், செய்யுள் இசைத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பெற்றன.

இராதாகிருட்டினன் படத் திறப்பு

     இராதாகிருட்டினப் பிள்ளையின் மறைவினைத் தொடர்ந்து, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழாவானது ஒத்திவைக்கப் பட்டது.

      எனவே 1919 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஏழு மற்றும் எட்டாம் ஆண்டு விழாக்கள் சேர்ந்து, 24.5.1919 மற்றும் 25.5.1919 ஆகிய இரு நாட்கள் கொண்டாடப் பெற்றன.

      முதல் நாள் விழாவின் போது 24.5.1919 இல், கரந்தைத் தமிழ்ச் சங்கம் கண்டு, தண்டமிழ்த் தொண்டின் வழிதுறை காட்டிய பெருந்திருவாளர் இராதாகிருட்டினனின் நண்பர்களால், சங்கத்திற்கு உதவப்பெற்ற, இராதாகிருட்டினனது, திருஉருவப் படம், உயர்திரு ஞானியார் சுவாமிகளால் திறந்து வைக்கப் பெற்றது.

தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழியே

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், 24.5.1919 மற்றும் 25.5.1919 ஆகிய இரு நாட்களில் கொண்டாடப் பெற்ற, ஏழு மற்றும் எட்டாம் ஆண்டு விழாவின் போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் ஓர் உயர் தனிச் செம்மொழியே என்னும் தீர்மானம் இயற்றப் பெற்றது.

      தமிழ் மொழியானது தொன்மையும், சீர்மையும், செம்மையும் வாய்ந்து விளங்குகின்ற ஓர் உயர் தனிச் செம்மொழியென உறுதிபட, பல திறத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதால், சென்னைப் பல்கலைக் கழகத்தார், தாம் இதுகாறும் கொண்டிருந்த கொள்கையை மாற்றி, தமிழ் உயர் தனிச் செம்மொழியே என்பதை ஒப்புக் கொண்டு, இத் தென்னாட்டுப் பல்கலைக் கழகத்தில், அதற்கு முறைப்படி முதலிடமும், உரிமைகளும் கொடுக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள் என்ற தீர்மானம் இயற்றப்பட்டது. இத் தீர்மானமானது, சங்க உறுப்பினர்களான, திரு டி.எஸ்.சபாபதி பிள்ளை அவர்களால் முன்மொழியப்பட்டு, திரு எம். அப்பாவு முதலியார் அவர்களால் வழி மொழியப் பட்டது.

     இத்தீர்மானமே தமிழ் மொழியை உயர் தனிச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்று, அமைப்பு ரீதியாக இயற்றப்பெற்ற முதல் தீர்மானமாகும். இத் தீர்மானமானது, சென்னைப் பல்கலைக் கழகத் தலைவர் அவர்களுக்கும், துணைத் தலைவர் அவர்களுக்கும், சென்னை ஆட்சி அமைச்சர் அவர்களுக்கும் முறைப்படி அனுப்பப் பட்டது.

1919 ஆம் ஆண்டு உமாமகேசுவரனார் கையெழுத்திட்டு அரசுக்கு அனுப்பிய  கடிதம்


     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு விழாவானது, 21.8.1920 அன்று திருவாளர் எஸ். சோமசுந்தர பாரதியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் போது, எவ்வளனும் இனிது வாய்ந்துள்ள தமிழ் மொழியை, உயர் தனிச் செம்மொழி வரிசையில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று பலமுறையும், சென்னைப் பல்கலைக் கழகத்தாரை வற்புறுத்தியும். அவர்கள் இன்னும் அவ்வாறு செய்யாமலும், கட்டாயப் பாடமாக ஏற்படுத்தாமலும் இருப்பது பிசகென்று அறிவிப்பதோடு, இனியாவது அவர்கள், தமிழை உயர்தனிச் செம்மொழியாகக் கொள்வதுடன், கட்டாய முறையாகவும், கூடியவரை கல்லூரிகளில் கலை பயில் கருவி மொழியாகவும் கொண்டு, தங்கள் முதற் கடமையை செலுத்தும்படி அவர்களை இப்பொருங்கூட்டத்தார் கேட்டுக் கொள்கிறார்கள் என்னும் தீர்மானம் இயற்றப் பட்டது. இத் தீர்மானத்தினை திருவாளர் வி.ஏ. சகராயப் பிள்ளை அவர்கள் முன் மொழிய, திருவாளர் ஐ.குமாரசாமி பிள்ளை அவர்கள் வழி மொழிந்தார்.

     1921 ஆம் ஆண்டில் சென்னை மாகாண ஆட்சித் தலைவர் அவர்கள் தஞ்சாவூருக்கு வருகை தந்தபோது, செந்தமிழ் மொழியினை, உயர்தனிச் செம்மொழியாக அறிவிப்பது தொடர்பாகக் , கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக, திருவாளர் ராவ் பகதூர் வீ.அ. வாண்டையார் அவர்கள் தலைமையில், ஒரு குழுவினர் சென்று சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை நேரில் எடுத்துரைத்தனர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்ககத்தின் பதினோராவது ஆண்டு விழாவானது, 18.11.1922 மற்றும் 19.11.1922 ஆகிய தேதிகளில், திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின்போது, விசுவபாரதிக் குடையார் தமிழை உயர்தனிச் செம்மொழியாகச் சம்மதித்து, அதனை அவர்கள் பாட வரிசையில்  சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவின் தொன்மை வரலாறு எழுதுவோர்க்குத் தென் இந்திய வரலாறு இல்லையாயின், முற்றுப் பெறாததாலும், வேண்டிய செய்திகள் சங்கத் தமிழ் நூல்களில் மட்டும் கிடைக்குமாதலாலும், உலகத்து நாகரீகமுற்ற நாடுகளில் தமிழ் நூல், தமிழ் அறிவுப் பரப்பை மிகுவிக்க வேண்டுமென்றும், அவர்களை இப்பெருங்கூட்டாத்தார் கேட்டுக் கொள்கிறார்கள் எனும் தீர்மானம் இயற்றப் பட்டது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரண்டாம் ஆண்டு விழா, 22.9.1923 மற்றும் 23.9.1923 ஆகிய தேதிகளில் தமிழ் வள்ளல் சா.ராம.மு.சித. பெத்தாச்சி செட்டியார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் போது,  உலகத்து உயர் தனிச் செம்மொழிகளில், முதல் மொழியென கருதுப் படுவதற்கு உரித்தான எல்லா இலக்கணமும் தமிழ் மொழி உடையதாக இருப்பதால், அதனை அத்தகைய மொழியாக ஆட்சியாளர்கள் கருதி, ஐ.சி.எஸ்., பட்டத்திற்கு அதனை ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று, இந்திய அரசியலாரை இப்பெருங் கூட்டத்தார் கேட்டுக் கொள்கிறார்கள் எனும் தீர்மானம் இயற்றப் பட்டது.

     இதே விழாவில் மீண்டும், மிகவும் பழைமையான காலந்தொட்டு, நாகரிகம் அடைந்துள்ள நாடுகளில், தமிழ் நாடும் ஒன்றாகலானும், இலக்கியச் செழிப்பிலும், தத்துவ அறிவின் உயர்விலும், பண்டைய நாகரிகத்தின் பயனுடைமையிலும், உலகத்து பழைமையான மொழிகளில் எவ்வகையிலும் குறைவுபடாது, அழியா நிலைமை எய்தியுளதாய் தமிழ் மொழி சிறப்பெய்தி வரலானும், இந்திய நாட்டின் தொன்மை வரலாற்றை வரைவோர்க்குத், தென்னிந்திய வரலாறு இல்லையாயின் மிகவும் முடைப் படுவாராகையாலும், அவ்வாறு முடைபடாதிருத்தற்கு வேண்டிய செய்திகள், சங்கத் தமிழ் நூல்களில் மட்டுமே கிடைக்கக் கூடுமாதலாலும், விசுவபாரதிக்கு உடையார், தமிழை உயர் தனிச் செம்மொழியாகக் கொண்டு, தற்காலத்து நாகரிகமடைந்த எல்லா நாடுகளிலும் தமிழ் நூலையும், தமிழறிவுப் பரப்பையும் மிகுவிக்க வேண்டுமென்று அவர்களை இப்பெருங் கூட்டத்தார் கேட்டுக் கொள்கின்றனர் எனும் தீர்மானம் இயற்றப்பட்டது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவானது, 1938 அம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15,16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வெள்ளி விழாவிற்குத் தலைமையேற்ற, திரிப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள், தன் உரையில், இத்தகைய பெருமையும், இனிமையும் உடைய தமிழை, உயர்தனிச் செம்மொழி என்ற நிலையில் அரசியலார் போற்றாதிருப்பது கவலத் தக்கதாகும் என்று தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே மீண்டும் சந்திப்போமா

13 ஜூன் 2013

கரந்தை மலர் 12


-------- கடந்த வாரம் -------
திருவையாற்றிலிருந்து கும்பகோணம் சாலையில் 2 கி.மீ தொலைவில், திங்களூருக்குச் சாலை பிரியும் இடத்தில், திருநாவுக்கரசர் பெயரால் அப்பூதி அடிகள் அமைத்த தண்ணீர் பந்தல் இன்றும் அன்பர்கள் சிலரால் அமைக்கப் படுகிறது. ஏழூர் பல்லக்கானது, இவ்விடத்தைக் கடக்கும் போது, ஊர்வலத்தில் செல்லும் அன்பர்கள் சில நிமிடங்கள் நின்று, அப்பூதியடிகளின் அன்பினை, குருபக்தியினை வியந்து போற்றியபடி, நீரும் மோரும் அருந்தி தங்கள் பயணத்தைத் தொடர்வார்கள்.
------------------------
திருப்பழனம்

     குலவெஞ்  சிலையான்  மதில்மூன்  றெரித்த  கொல்வேறுடை  யண்ணல்
  கலவ  மயிலும்  குயிலும்  பயிலும்  கடல்போற்  காவேரி
  நலமஞ்சுடைய  நறுமாங்  கனிகள்  குதிகொண்  டதிருந்திப்
  பலவின்  கனிகள்  திரைமுன்  சேர்க்கும்  மழன  நகராமே

என ஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பெற்ற திருப்பழனத்தை பல்லக்குகள் சென்றடையும். பொதுமக்களால் இவ்வூர் திருப்பயணம் என்று அழைக்கப் படுகிறது. பழனம் என்ற பைந்தமிழ் சொல் வயல் வெளியைக் குறிக்கும். வயல் வெளிகள் நிறைந்த ஊராகையால் திருப்பழனம் என்றழைக்கப்படுகிறது.

     திருப்பழனத்தார் தமது ஊரில் இறைவனுக்கு விழா கொண்டாடி, அவரைப் பல்லக்கில் அமர்த்தி விழாக் கோலத்துடன் ஊர் எல்லைக்கு அழைத்து வருவார்கள். திருவையாற்றில் இருந்து வந்த பல்லக்குகளுடன், இப்பல்லக்கும் சேர்ந்து கொள்ளும். திருவையாறு மற்றும் திருப்பழனப் பல்லக்குகள் காவேரி மற்றும் குடமுருட்டி ஆறுகளைக் கடந்து, திருச்சோற்றுத் துறை என்னும் ஊரைச் சென்றடையும்.

திருச்சோற்றுத் துறை

    காலை எழுந்து  கடிமல்  தூயன  தாங்கொணர்ந்த
    மேலை  அமரர்  விருத்பு  மிடம்விரை  யான்மலிந்த
    சோலை  மணங்கமழ்  சோற்றுத்  துறையுறை  வார்சடைமேல
    மாலை  மதியமன்  றோவெம்  பிரானுக்கு  கழகியதே

என்று அப்பர் பெருமானால் பாடப்பெற்ற தலம் திருச்சோற்றுத் துறையாகும்.

     திருஞான சம்பந்தர் காலம் தொடங்கி இவ்வூரின் பெயர் மாற்றம் இன்றி வழங்கி வருகிறது. திருச்சோற்றுத் துறையினை திரு + சோறு + துறை எனப் பிரிக்கலாம். சோற்றடைப்பு என்ற சொல் அன்னதானக் கட்டளையையும், சோற்றுப்புரை என்ற சொல் மடைப் பள்ளியையும் குறிக்கும். திருவிழாக் காலங்களில் நீர்த் துறையில் கூடி உண்ணும் விருந்திற்குத் துறை சாதம் என்று பெயராகும். இச்சொல்லே முன்பின்னாக சோற்றுத் துறை என்று தனித் தமிழில் அமைந்துள்ளது. அடியார்களுக்குச் சோற்றினை வழங்கும் சிவன் உறையும் தலம் திருச்சோற்றுத் துறையாகும்.

     திருவையாற்று, திருப்பழனப் பல்லக்குகளுடன் திருச்சோற்றுத் துறையின் பல்லக்கும் சேர்ந்து, மூன்று ஊர் பல்லக்குகளும் திருவேதிக் குடிக்குப் பயணமாகும்.
திருவேதிகுடி

      செம்பொன்  நன்மலர்  மேலவன்  சேர்திருவேதிக் குடியே

என அப்பர் பெருமானால் பாடப் பெற்ற தலம் திருவேதிகுடியாகும். வேதி என்ற சொல்லுக்கு அறிந்தவன், பண்டிதன், மேடை, மதில் என்ற சொற்களைத் தமிழகராதி குறிப்பிடுகின்றது. எனவே மதிலுடன் ஊர்ப் பெயரைத் தொடர்பு படுத்தலாம் எனினும், கல்வியில் சிறந்தவர்கள் வாழ் ஊராகக் குறிப்பிடுவதே பொருத்தமாகும். திருவேதிகுடியில் ஆலய மரியாதையை ஏற்றபின், மாலை ஆறு மணியளவில் திருவேதிகுடிப் பல்லக்கும் சேர்ந்து கொள்ள, நான்கு ஊர் பல்லக்குகளும் கண்டியூருக்குப் பயணமாகும்.

கண்டியூர்

        பிண்டியார்  மண்டை  யேந்தி  பிறர்மனை  திருந்துண்ணும்
        உண்டியான்  சாபம்  தீர்த்த  ஒருவனூர்  உலமேகத்தும்
        கண்டியூர்

எனத் திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்ற தலம் கண்டியூர். இவ்வூர் தஞ்சாவூர் திருவையாறு சாலையில் அமைந்துள்ளது. பிரம்மா தன்னை சிவனுக்குச் சமமாக எண்ணியதால், பார்வதி தேவியார் அவருடைய ஐந்து தலைகளுள் ஒன்றைக் கொய்யுமாறு இறைவனிடம் கூற, இறைவனும் அவ்வாறே செய்தார். இதனால் இவ்வூர் கண்டனபுரம் ஆயிற்று என்பர்.

     தமிழ் அகராதியானது கண்டி என்பதற்குப் பல பொருட்களைக் குறிப்பிட்டுள்ளது. அவற்றுள் மந்தை, நிலப் பிரிவு, எழுபத்தைந்து ஏக்கருள்ள நில அளவை, ஒரு முகத்தல் அளவை என்பன சிலவாகும். மந்தை, நிலப் பிரிவு இவற்றில் ஒன்றிலிருந்து உருவான பெயராகவே இருக்க வேண்டும். ஏழூர்களின் பிற ஊர்ப் பெயர்களுக்கு இயற்கையின் அடிப்படையில் பெயர் அமைந்திருக்க, இவ்வூருக்கு மட்டும் புராண அடிப்படையில் பெயர் அமைந்திருக்க வாய்ப்பில்லை.

             ஏழூரும் சுற்றி இளைப்பாறும் கண்டியூர்
என்பதற்கேற்ப பல்லக்கு சுமப்பவர்களும், ஏழூரை வலம் வரும் பொது மக்களும் சில மணி நேரங்கள் ஓய்வெடுப்பார்கள். ஓய்வுக்குப் பின் ஐந்து ஊர் பல்லக்குகளும் திருப்பூந்துருத்திக்குச் செல்லும்.

திருப்பூந்துருத்தி

     பல்லக்கில் வந்த ஞானசம்பந்தப் பெருமானை, வயதான நிலையில் இருந்த அப்பர், பல்லக்கை சுமப்பவர்களில் ஒருவராக சுமந்த தலம் இத்திருப்பூந்துருத்தியே ஆகும்.

     செழுமதியம்  தவம் சோலைப் பூந்துருத்தி
எனச் சேக்கிழாரால் பாடப்பெற்றத் தலம் திருப்பூந்துருத்தியாகும்.

     ஆற்றிடைக்குறையில் உள்ள தலம் துருத்தி எனப்படும். எடுத்துக்காட்டாக, மாயிலாடுதுறைக்கு அருகில் உள்ள குத்தாலம் என்னும் ஊரானது திருத்துருத்தி என்றே முன்னாளில் அழைக்கப் பட்டது. காவேரி, குடமுருட்டி என்ற ஆறுகளுக்கு இடையில் பூக்கள் மிகுந்து காணப்பட்ட நிலப்பகுதி, திரு என்னும் அடைமொழியுடன் இணைந்து திருப்பூந்துருத்தி ஆயிற்று என்றும் கூறுவர்.

     ஐந்து ஊர் பல்லக்குகளும், திருப்பூந்துருத்தி தீர்த்த நாராயணர் சமாதியருகே வந்து சேரும். திருப்பூந்துருத்தி இறைவன் பல்லக்கில் அமர்ந்து ஐந்து ஊர் பல்லக்குகளையும் வரவேற்பார். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். பின்னர் குடமுருட்டி மற்றும் காவிரி ஆறுகளைக் கடந்து, நள்ளிரவுக்குப் பின் ஆறு ஊர் பல்லக்குகளும் திருநெய்த்தானத்தைச் சென்றடையும்.

திருநெய்த்தானம்

பறையும்பழி  பாவம்படு  துயரம்  பலதீரும்
பிறையும்புனல்  அரவும்பட  சடையம்  பெருமானார்
அறையம்புனல்  வருகாவிரி  அலைசேர்வடர்  கரைமேல்
நிறையும்புனை  மடவார்பயில்  நெய்த்தா  னமேனீரே

என்று ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருநெய்த்தானமாகும். இவ்வூர் திருவையாற்றில் இருந்து கல்லனை செல்லும் வழியில், இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஏழூர் திருவிழாவின் ஏழாவது தலம் இந்த திருநெய்த்தானமாகும்.

     கால்நடைகள் மிகுதியாக இருந்து நெய் உற்பத்தி அதிகமாக இருந்ததனால் இவ்வூருக்கு நெய்த்தானம் என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். பாலின் அடிப்படையில் பாலூர், வெண்னையின் சிறப்பால் வெண்னெய் நல்லூர், எருமைகள் மிகுந்த ஊர் எருமைப் பட்டி, பசுக்கள் நிறைந்த ஊர் ஆவூர் என அழைக்கப்பட்டு வருவது போல் நெய்த்தானமும் ஏற்பட்டது. திரு என்ற அடைமொழியுடன் இவ்வூர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் மக்களின் தவறான உச்சரிப்பு காரணமாக இன்று இவ்வூர், தில்லைஸ்தானம் என்றே அழைக்கப்படுகிறது.

     திருநெய்த்தானத்தை வந்தடையும் ஆறு ஊர் பல்லக்குகளையும் திருநெய்த்தான இறைவன் நெய்யாடியப்பர் பல்லக்கில் அமர்ந்து காவிரிக் கரையில் வரவேற்பார். தொடர்ந்து வான வேடிக்கை நடைபெறும். பொழுது புலர்ந்து விடும். பின்னர் ஏழூர் பல்லக்குகளும் புறப்பட்டு திருவையாற்றைச் சென்றடையும்.

     திருவையாற்றின் மேல வீதி, வடக்கு வீதி வழியாக தேரடியை அடைந்த பின், ஆறு ஊர்களின் பல்லக்குகளும் தேரடியிலேயே நிற்க, திருவையாற்று ஐயாறப்பர் பல்லக்கினைத் தேவர்கள் வரவேற்கும் விழா நடைபெறும். கயிற்றில் கட்டிய பொம்மை ஒன்று அசைந்தாடி வந்து, ஐயாறப்பருக்கு மாலையிடும். இந்நிகழ்ச்சிக்குப் பூப்போடுதல் என்று பெயர். தொடர்ந்து ஐயாறப்பர் பல்லக்கானது, தெற்கு கோபுர வாசல் வழியாக, திருவோலக்க  மண்டபத்தை வந்தடையும். மங்கல ஒலி முழங்க ஏழூர் திருவிழாவானது இனிதே நிறைவுறும்.

உமாமகேசரும் சத்தானமும்

     தஞ்சை வட்டக் கழகத் தலைவராகத் திகழ்ந்த உமாமகேசுவரனார் அவர்கள், தமது பொறுப்பில் இருந்த எல்லா ஊர்களுக்கும் நேரில் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். உமாமகேசுவரனாரது திருவடி படாத ஊரே தஞ்சை வட்டத்தில் இல்லை எனலாம். அவரால் தான் சிற்றூர்கள் அனைத்திற்கும் தார்ச் சாலைகள் போடப்பட்டன. உமாமகேசுவரனார் காலத்தில் போடப்பட்ட சாலைகளில் முக்கியமானது, வரகூர் - அன்பது மேலகரம் சாலையாகும். இச்சாலை வரகூர் அக்கிரகாரத்தின் எதிர்ப்பினையும் மீறி அமைக்கப்பட்ட சாலையாகும்.

     திருவையாற்றை மையமாகக் கொண்டு நடைபெறும் ஏழூர் திருவிழாவின்போது, திருவையாற்றில் இருந்து புறப்படும் பல்லக்குகளைத் தூக்கிச் செல்வோரும், பல்லக்கின் முன்னும், பின்னும் செல்லும் பல்லாயிரக் கணக்கானப் பொது மக்களும், ஏழூரையும் இணைப்பதற்குரிய சரியான சாலைகள் இல்லாமல் பெரிதும் துயறுற்றனர். பலவிடங்களில் வயல்வெளிகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.

     ஏழூர் திருவிழாவில் தவறாமல் கலந்து கொள்ளும் இயல்புடைய உமாமகேசுவரனார், மக்கள் படும் இன்னல்களைத் தாமே நேரில் கண்டு உணர்ந்து, உடனடியாக சாலைகள் அமைப்பதற்கு உரிய ஆணையினைப் பிறப்பித்தார்.

     மேலத் திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய இரண்டு ஊர்களை இணைக்கும் சாலையும், திருப்பழனம், திருச்சோற்றுத் துறை ஆகிய ஊர்களை இணைக்கும் சாலையும், கண்டியூர் ஆலங்குடி சாலைகளும் உடனடியாகப் போடப்பட்டன. இவற்றுள் முதலிரண்டு சாலைகளும், காவிரி மற்றும் குடிமுருட்டி ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப் பட்டவை. ஆற்றில் நீர் நிறைந்தோடும் காலங்களில், இவ்வாறுகளைக் கடப்பதற்கு, இப்பாதைகளின் இருபுறமும், உமாமகேசுவரரால் தோணித் துறைகள் ஏற்படுத்தப் பட்டன.

     திருப்பழனம், திருச்சோற்றுத் துறைச் சாலையின் இருபுறமும் நிழல் தரும் மரங்கள் பயிரிடப்பட்டன. இவைமட்டுமல்ல, சாலைகளுக்குக் குறுக்காகச் செல்லும் வாய்க்கால்களைக் கடக்க பாலங்களும் அமைத்தார்.


     ஏழூர் திருவிழாவை முன்னிட்டு சிறப்பான துப்புரவு ஏற்பாடுகள் செய்யப்படும். பகற் பொழுதில் காவிரி, குடமுருட்டி ஆகிய இரண்டு ஆறுகளின் மணற் பரப்பில் நடந்து செல்வோருக்குக் கால்கள் சுடாதபடி, வைக்கோல் பரப்பப்பட்டு, தண்ணீர் தெளிக்கப்படும். இரவு நேரங்களில் ஆங்காங்கே மண்ணெண்ணய் ஆவி விளக்குகள் பொறுத்தப்பட்டிருக்கும். உமாமகேசுவரரால் இது போன்ற வசதிகள் செய்யப் பெற்றதால், மக்கள் சுற்றுலாச் செல்வது போல் ஏழூர் வலம் வருதலை மேற்கொண்டனர்.

    ஏழூர் திருவிழாவின் போது, ஏழு ஊர்களையும் இணைக்கும் அனைத்து சாலைகளும் விழாக் கோலம் பூண்டிருக்கும். ஆங்காங்கே தேவாரம் பாடு கூட்டங்களும், பஜனைக் கூட்டங்களும் நடைபெறும். சிலர் இசைக் கருவிகளை வாசித்தபடியும், சிலர் பாடிக் கொண்டும் செல்வார்கள். இப்பாடல்கள் கேட்டு மகிழ்ந்து அக்கூட்டங்களுடன் செல்வோரில் பலர் ஆடியும், சிலர் பாடியும், மேலும் பலர் பல்வேறு வேடங்கள் புனைந்தும் செல்வார்கள். ஆயிரக் கணக்கானப் பொது மக்கள் இவைகளைக் கண்டும் கேட்டும் ரசித்தவாறு செல்வார்கள்.


     கூட்டத்தில் செல்வோருக்குச் சிலர் பெரிய பெரிய விசிறிகளைக் கொண்டு விசிறுவார்கள். சிலர் சந்தணக் குழம்புகளை துருத்தியில் நிரப்பிப் பீய்ச்சுவார்கள். வழி எல்லாம் தண்ணீர் பந்தல்களும், தோரணங்களும் காட்சி அளிக்கும். வீடுகளின் முன்பான அமைக்கப்பட்டிருக்கும் பந்தல்களில், தாருகளுடன் உள்ள வாழை மரங்களும், இளநீர் குலைகளும், ஈச்சங் குலைகளும் கட்டப் பெற்றிருக்கும். மா, தென்னை, பணை காகிதங்களால் செய்யப் பெற்ற தோரணங்கள் வீடுகளையும், வீதிகளையும் அலங்கரித்திருக்கும். தெருக்கள் எல்லாம் நீர் தெளித்து, தூய்மை செய்யப்பெற்று, அழகிய வண்ணக் கோலங்களால் பொலிவு பெற்றுக் காட்சியளிக்கும்.

      இவ்விழாவினால் மக்களிடையே உள்ள அரிய நல்லுணர்ச்சிகள் யாவும் வெளிப்படுகின்றன. அவற்றால் தெய்வ உணர்ச்சி, சமய வளர்ச்சி, மக்கள் ஒற்றுமை, சாதி வேற்றுமை நீங்குதல், அன்பு, அளவிலா மகிழ்ச்சி முதலியன உண்டாகின்றன. மேலும் பல்வகை கலைகளும் வளருகின்றன.

     உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் வெண்ணீறும், உருத்திராட்ச மணி மாலையும், புன்முறுவலும் பூத்த பொன் மேனியராய், இடையில் கட்டிய வேட்டியும், இதன் மேல் சுற்றிய வெண்ணிற துண்டுடன், அடியார்கள் புடை சூழ, ஏழூர் முழுதும் நடந்தே செல்வார். அடியார்களை ஆங்காங்கே சமயச் சொற் பொழிவாற்றச் செய்வதோடு, தாமும் சொற் பொழிவாற்றுவார். விழா நடக்கும் இரண்டு நாட்களிலும் வேறு பணிகள் எதிலும் ஈடுபட மாட்டார்.

     ஏழூர் திருவிழா நாட்களில் உமாமகேசுவரனாரின் பங்களிப்பையும், செயல் திறனையும் நேரில் கண்ட மறைமலை அடிகளாரின் புதல்வர் மறை. திருநாவுக்கரசு அவர்கள் மறைமலையடிகள் வரலாறு என்னும் தனது நூலில், உமாமகேசுவரனார் வளர்த்த ஏழூர் விழாவை இனியும் வாழ்வித்தல் அன்பர் கடனாகும் என்று எழுதுகிறார். இதிலிருந்தே ஏழூர் திருவிழாவில் உமாமகேசுவரனார் கொண்டிருந்த ஈடுபாட்டை அறியலாம்.

     இதுமட்டுமல்ல, ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் இளவல் ந.மு.கோவிந்தராய நாட்டார் அவர்கள், தான் எழுதிய, திருவையாற்றின் ஏழூர் திருவிழா வரலாறு என்னும் நூலினை உமாமகேசுவரனாரின் நினைவுக்கு உரிமையாக்கிப் பின்வருமாறு எழுதுகிறார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோன்றிய காலத்திலிருந்து, அதன் தலைவராயிருந்து தமிழன்னைக்கு அரும்பெருந் தொண்டாற்றி வந்த, அண்ணலாரும், கரந்தைப் புலவர் கல்லூரி, உயர் நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, திக்கற்ற மாணவர் இல்லம் ஆகியவற்றை நிறுவி, அவற்றை தண்ணளி நிறைந்த தாய்போல் புரந்து வந்த பேராளரும், எளிய மாணவர்களுக்கும், புலவர்களுக்கும் பொருளுதவி செய்து, அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டிய வள்ளலாரும், தமிழும் சைவமும் தழைத்தோங்க, அவற்றை தம்மிரு கண்களாகப் போற்றித் தொண்டாற்றி வந்த தூய வாழ்க்கையரும், ஆண்டுதோறும் ஐயாறப்பர் ஏழூர் விழாவிற்குச் சென்று, ஏழூர் நடந்து வலம் வந்து, வணங்கி இறையருள் பெற்ற திருவினாரும், தஞ்சை வட்டக் கழகத் தலைவராயிருந்த போது, திருப் பழனத்திலிருந்து, திருச்சோற்றுத் துறை வரையில் சாலையின்மையால் ஐயாறப்பர் முதலிய மூர்த்திகள் எழுத்தருளும் திருப்பல்லக்குகளும், அடியார் குழாங்களும் வயல்களின் வழியாகச் செல்ல வேண்டியிருந்தமை அறிந்து வருந்தித் தக்கதோர் சாலை அமைத்துதவிய சைவப் பெருந்தகையாளரும், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளரும், பேரறிவாளரும் ஆகிய தமிழ்ப் புரவலர் தமிழவேள் உயர்திருவாளர் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, பி.ஏ., பி.எல்., அவர்கள் நினைவிற்கு இந்நூல் உரிமையாக்கப்படுகிறது.

     இவ்வாறாக ஏழூர் திருவிழாவானது சிறக்கப் பல்லாற்றானும் பாடுபட்ட பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார்.

,..... வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் சந்திப்போமா