07 ஜூன் 2013

திப்பு சுல்தானின் கோட்டையில் ஓர் நாள்


மே மாதத்தின் மத்தியில், ஓர் நாள், நண்பர் பால்ராஜ் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது, இம்மாதம் 24 ஆம் தேதி, திருச்சியைச் சேர்ந்த நண்பர்கள் சிலருடன், மைசூர் மற்றும் ஊட்டி சுற்றுலா செல்ல இருக்கின்றேன், வருகிறீர்களா? என அழைத்தார். வருகிறேன் என்றேன்.

     24.5.2013 வெள்ளிக் கிழமை இரவு ஒன்பது மணியளவில், நானும் நண்பர் பால்ராஜ் அவர்களும், பேரூந்தில், தஞ்சையில் இருந்து திருச்சிக்குப் புறப்பட்டோம். 10.30 மணியளவில், திருச்சி தொடர் வண்டி நிலையத்தின் அருகில் இறங்கினோம்.

     அங்கிருந்த முருகன் கோயிலுக்கு எதிரில், திரு நேரு, திரு அசோகன், திரு நரசிம்மன் ஆகியோர் எங்களுக்காகக் காத்திருந்தனர். மூவருமே திருச்சி தேசியக் கல்லூரியில் பணியாற்றுபவர்கள். இவர்களுடன் திரு நேரு அவர்களின் இளைய மகன் செல்வன் அழகேசன் அவர்களும் எங்களுக்காகக் காத்திருந்தார்.

     நண்பர் பால்ராஜ் நால்வரிடமும் என்னை அறிமுகப்படுத்தினார். அறிமுகப் படுத்திக் கொண்டோம். அறுவரும் முருகப் பெருமானை வணங்கி, டவேரா காரில் பயணத்தைத் தொடங்கினோம்.
    
     மறுநாள் சனிக் கிழமை அதிகாலை மைசூர் சென்றடைந்தோம். மைசூர் செல்லும் வழியில், பன்னாரி மாரியம்மனையும், நஞ்சங்கூடு சிவபெருமானையும் தரிசித்தோம்.

    
 மைசூரில் விலங்கியல் பூங்காவிற்கு எதிரிலேயே ஸ்ரீகீர்த்தி தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கினோம்.

     அன்று காலை விலங்கியல் பூங்காவையும், பிற்பகல் மைசூர் அரண்மனையினையும் பார்த்து ரசித்துவிட்டு, மாலை பிருந்தாவன் தோட்டம் சென்றோம். இசைக்கு ஏற்றபடி வண்ண விளக்குகளின் ஒளியினைத் தாங்கி, நடனமாடும், நீறூற்றுகளின் நடனக் காட்சிகளை மெய்மறந்து பார்த்தோம்.

     மறுநாள் காலை விடுதியினை காலிசெய்து விட்டுப் பயணத்தைத் தொடங்கினோம். அப்பொழுது அலைபேசி வழி தொடர்பு கொண்ட நண்பர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், மைசூரின் ரெங்கனா திட்டு பறவைகள் சரணாலயத்தையும், சீரங்கப் பட்டிணத்தையும் தவறாது பார்த்து வருமாறு அறிவுறுத்தினார்.

      முதலில் சாமுண்டீஸ்வரி கோயில் சென்று வணங்கினோம். வசந்த மாளிகை திரைப் படத்தில், வசந்த மாளிகையாய் காட்சிதரும் லலித் மகால் சென்று சுற்றிப் பார்த்தோம். அடுத்து ரெங்கனா திட்டு பறவைகள் சரணாலயம். எங்கு நோக்கினும் பறவைகள். மனித மற்றும் வாகனங்களின் சத்தத்தையே கேட்டுப் பழகிப்போன காதுகளுக்கு, ஆயிரக் கணக்கான பறவைகளின் ஒலி சங்கீதமாய் இனித்தது. பறவைகளின் சரணாலயத்திலிருந்து புறப்பட்டு வெகுநேரமாகியும், பறவைகளின் ரீங்காரம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்த்து.

     அடுத்ததாக சீரங்கப் பட்டிணம். சீரங்கப் பட்டிணத்தில் நுழைந்த்துமே, ஒரு வித உணர்வு, உள்ளக் கிளர்ச்சி மெல்ல, மெல்ல உடலெங்கும் பரவுவதை உணர முடிந்தது.


     
திப்பு சுல்தான். இப்பெயரினை உச்சரிக்கும்போதே, ஓர் வீர உணர்வு உதிரத்தில் எழுகிறதல்லவா? புலிகளை மிகவும் நேசித்தவர் திப்பு. தன்னையும் புலியாகவே எண்ணி, எண்ணி, புலியாகவே வாழ்ந்தவர். தன் கொடியில் கூட புலியையே பொறித்தவர். ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனம்.

     இந்திய விடுதலைப் போராட்டத்தின் வீர வரலாற்றைத் தொடங்கி வைத்தவர் அல்லவா திப்பு சுல்தான். ஆங்கிலேயர்கள் மீண்டும், மீண்டும் திப்புவைச் சீண்டிச் சீண்டி, மண்னை அல்லவா கவ்வினார்கள். ஆங்கிலேயர்களின் சதி, சூழ்ச்சி, போர் எதுவுமே பலிக்கவில்லையே திப்பு சுல்தானிடம். இறுதியில் உடனிருந்தே கொல்லும் துரோகத்திற்கல்லவா இறையாகிப் போனார்.

      துரோகிகளும், நய வஞ்சகர்களும், சுயநலப் பேய்களும் உலாவும் காடல்லவா, இப்பூமி. திப்பு சுல்தான் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

          வாருங்கள், சீரங்கப் பட்டிணத்திற்குள் நுழைவோம். பெரிய மதில் சுவர் எங்களை வரவேற்கிறது. அதோ ஒரு பாதை தெரிகிறதல்லவா? அதுதான் மைசூர் கேட். வாருங்கள்.

     சீரங்கப் பட்டிணத்தை ஒரு தீவு என்றே சொல்லலாம்.  நாற்புறமும் கடலால் சூழ்ந்த தீவு அல்ல, ஆனால் நாற்புறமும் காவிரியால் சூழப்பெற்ற தீவுப் பகுதிதான் சீரங்கப் பட்டிணம். மேற்கில் இருந்து ஓடி வரும் காவிரியானது, சீரங்கப் பட்டிணத்திற்கு முன் இரண்டாகப் பிரிந்து, ஒரு புறம் காவிரியாகவும், மறுபுறம் வாகினி நதியாகவும் ஓடி, மீண்டும் ஒரே நதியாக, காவிரியாக ஒன்றிணைந்து ஓடுகிறது.


    
 இதோ ரெங்கநாதசுவாமி கோயில். ஒன்பதாம் நூற்றாண்டில் கங்க மன்னரால் கட்டப்பெற்ற கோயிலாகும் இது. பின்னர் ஹோசல மன்னர்களாலும், விஜயநகர மன்னர்களாலும் புதுப்பிக்கப்பட்ட, விரிவு படுத்தப் பட்ட கோயிலாகும். பாற்கடலில் ஆதிசேசன் என்னும் நாகத்தின் மேல் ரெங்கநாத சுவாமி துயில் கொள்ளும் காட்சியைக் கண்டு வணங்கினோம்.


    
 ரெங்கநாத சுவாமி கோயிலுக்கு எதிரிலேயே, கூப்பிடு தூரத்தில், திப்பு சுல்தான் வாழ்ந்த அரண்மனை. வானளாவிய அரண்மனையினை எதிர்பார்த்துச் சென்றால், அதிர்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது. எங்கே அரண்மனை? வெறும் தரையும், சில குட்டிச் சுவர்களும் மட்டுமே மிஞ்சியுள்ளன. ஆம் ஆங்கிலேயர்களின் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இறையாகி, தரை மட்டமாக அல்லவா காட்சியளிக்கின்றது. திகைப்புடன் அரண்மனை இருந்த இடத்தையே பல நிமிடம் பார்த்துக் கொண்டு நிற்கிறோம். ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தான் மீது கொண்டிருந்த கோபத்தின் எல்லை புரிகிறது. பேசுவதற்கு வார்த்தைகள் ஏதுமின்றி, இடதுபுறமாகத் திரும்பிப் பயணிக்கின்றோம்.

     ஒரு சில நிமிடங்களிலேயே எதிர்படுகிறது ஒரு மேட்டுப் பகுதி. இதுதான் கர்னல் பெய்லிஸ் டங்கன் எனப்படும், திப்பு சுல்தான் உருவாக்கிய சிறை.


   
  மெதுவாகப் படிக்கட்டுகளில் ஏறுகிறோம். மேடான பகுதிக்குச் சென்றவுடன், தரைப் பகுதிக்கும் கீழே தெரிகிறது சிறைச் சாலை. தரை மட்டத்தில் மதில் சுவர். மதில் சுவற்றினை ஒட்டியவாறு ஓடுகிறது காவிரி. காவிரியின் தரை மட்டத்திற்கும் கீழே சிறைச்சாலை தெரிகிறது. படிக்கட்டுகளின் வழியே கீழே இறங்குகிறோம். பூமிக்கு முப்பது அடி ஆழத்தில் அச்சிறைக் கூடம். உள்ளே நுழைகிறோம்.

     நடுவில் இரு வரிசையில் பெரிய பெரிய தூண்கள். தூண்களுக்கும், இரு புறச் சுவர்களுக்கும் இடையே வளைவுகள். சுவற்றில் வரிசையாய் சிறு சிறு கற்கள் ஒரு அடி நீளத்திற்கு, ஒரே அளவினதாய், சம இடைவெளிகளில் பொறுத்தப்பட்டுள்ளன. கைதிகளை இரு கற்களுக்கும் இடையில் நிற்க வைத்து, இரு கைகளையும் தோள் உயரத்திற்கு, கிடைமட்டமாக நீட்டச் செய்து, இக் கற்களுடன் கைகளை பிணைத்துக் கட்டுவார்களாம். பின்னர் சுவற்றில் உள்ள ஒரு துவாரத்தினைத் திறந்து விட்டால், காவிரி நீரானது இச்சிறையினை மெல்ல மெல்ல நிரப்பும். முதலில் கைதிகளின் கணுக்காலினைத் தொடும், நீரானது, மெல்ல மெல்ல படிப்படியாக உயர்ந்து, கைதியினை முழுமையாய் மூழ்கடித்து விடும். கைதிகள் ஜலசமாதி ஆக வேண்டியதுதான்.


    
 திப்பு சுல்தானிடம் சிறைபட்டு, இச்சிறையில் அடைத்து வைக்கப்பட்ட ஆங்கிலேய அதிகாரியின் பெயர் கர்னல் பெய்லி என்பதாகும். அவர் பெயரே இச்சிறையின் பெயராக நிலைத்து விட்டது. சிறையின் மையப் பகுதியில், மேற் கூறையில் ஓர் பெரிய ஓட்டை. வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்கானதால் விழுந்த ஓட்டையாம் இது. சிறையின் வலப்புற மூலையில் ஓர் பள்ளம் தெரிகிறது.


     


இப்பள்ளத்தில் இறங்கினால், சுரங்கப் பாதை வழியாக பல இடங்களுக்கும் செல்லலாம் என்று கூறுகின்றனர். மீண்டும் படிகளில் ஏறி மேலே வருகிறோம். மதில் சுவற்றை தொட்டவாறு காவிரி ஓடுகிறது. மதில் சுவரில் வரிசையாய் சதுர வடிவில் துளைகள்.


    

சற்று குனிந்து, துளைகளுக்கு உள்ளே பார்த்தால், இந்த ஒரு துளை மூன்று துளைகளாக பிரிந்து செல்வதைக் காண முடிகிறது. வீரர்கள், இத்துளைகளுக்குள் துப்பாக்கியைச் சொருகி, ஆங்கிலேயர்களுடன் போரிட இந்த ஏற்பாடு. சற்று இடதுபுறமாகவோ, வலது புறமாகவோ சுட வேண்டும் எனில், சற்று துப்பாக்கியை வெளியே இழுத்து, வேண்டிய திசையைக் காட்டும் துளைக்குள் சொருகிச் சுடவேண்டியதுதான்.


    
 திப்பு சுல்தானின் முன்னேற்பாடுகளை உணர்ந்து மலைப்புடன் வெளி வருகிறோம். வந்த வழியாகவே மீண்டும் பயணம். ஐந்து நிமிடப் பயணம்.

      இதோ, இதோ இடது புறம் தெரிகிறதே இதுதான் தண்ணீர் வாயில் ( Water Gate )  காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.


    
  கர்னல் பெய்லி சிறையைப் பார்த்தபோது, நமக்கு ஏற்பட்ட மலைப்பு மெல்ல மெல்ல கரைகிறது. எத்துனை, எத்துனை முன்னேற்பாடுகள் செய்தும் என்ன பயன்? பாதுகாப்பினை எந்தெந்த வகைகளில் பலப்படுத்த முடியுமோ, அந்தந்த வகைகளில் எல்லாம் பலப்படுத்தியிருந்தாலும் என்ன பயன்?

     உடன் பிறந்தே கொல்லும் துரோகம் இருக்கிறதே, அத்துரோகத்திற்கு முன், இப்பாதுகாப்புகள் எல்லாம் எம்மாத்திரம். ஆம் ஒரு துரோகியின் நயவஞ்சகச் செயலுக்கு, நினைவுக் சின்னமாய், அவமானச் சின்னமாய் தண்ணீர் வாயில் ( Water Gate ) தலை குனிந்து நிற்கிறது.

     திப்பு சுல்தான் தினமும் அதிகாலையில் இவ்வழியே நுழைந்து, காவிரியில் நீராடுவது வழக்கம். பல்வேறு வழிகளில் போராடியும், திப்புவை ஒழிக்க இயலாத ஆங்கிலேயர்களின் வஞ்சக வலையில் விழுந்தவன்தான் மீர் சாதிக். எப்பொழுதும் திப்புவின் உடனிருக்கும் வீரன். உடனிருந்தே கொல்லும் வியாதி என்பது இதுதானோ?

     ஒரு நாள் அதிகாலை, மீர் சாதிக், யாரும் அறியா வண்ணம் தண்ணீர் வாயிலை ஆங்கிலேயர்களுக்குத் திறந்து விட்டான். வழக்கம்போல் நீராட வந்த திப்பு சுல்தான், ஆங்கிலேயர் படை திடுமென உள் நுழைந்து எதிர்பாராமல் தொடுத்திட்ட தாக்குதலை, முறியடிக்க முடியாமல், நயவஞ்சகத்தால் கொல்லப் பட்டார்.

      1799 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள், தனது 48 வது வயதில் திப்பு சுல்தான் துரோகத்திற்கு பலியான இடம் இது.

     கனத்த இதயத்துடன் தண்ணீர் வாயிலையே சிறிது நேரம் வெறித்து பார்த்தபடி நின்று விட்டு புறப்பட்டோம். சிறிது தூரம்தான் சென்றிருப்போம்.

     இதோ பாருங்கள், இதுதான் மே 4 ஆம் நாள் மதியம் திப்புவின் உடல் கண்டுபிடிக்கப் பட்ட இடம்.


      
கண்கள் திறந்திருந்தன. உடலில் மூன்று இடங்களில் வெட்டுக் காயங்கள். வலது காதில் கீழ் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு, கன்னத்தில் பதிந்து கிடந்தது. பட்டாடை, தலைப்பாகை எதுவும் இல்லை. ஆபரணங்கள் எதுவும் இல்லை. உடலுக்கு அருகே குர் ஆன் பிரதி. அவ்வளவுதான்.

      அமைதியாய், சிறிது நேரம் திப்புவின் உடல் கண்டெடுக்கப் பட்ட இடத்திலேயே நின்றோம். சிறிது நேரத்திற்குப் பிறது மௌனமாய் புறப்பட்டோம்.

       சிறிது நேரத்தில், திப்பு சுல்தானின் வழிபாட்டுக் கூடாமாகிய ஜும்மா மசூதிக்குச் சென்றோம்.  இம்மசூதியானது, ஒரு காலத்தில் ஆஞ்சநேயர் ஆலயமாக இருந்ததாகவும், பின்னர் திப்புவால் இந்த ஆலயம் பல்வேறு மாற்றங்களைப் பெற்று மசூதியாக மாற்றப்பட்டதாகவும் வழிகாட்டி ஒருவர் கூறினார். கோயில்களை இடித்து மசூதி கட்டியவர் என்ற பெயரும், சரித்திரத்தின் பக்கங்களில் திப்புவிற்கு உண்டு, அவ்வாறு இருக்குமோ என்று எண்ணினோம்.


    
 திப்புவின் மாளிகைக்கு நேர் எதிரே இருக்கும், ரங்கநாதசுவாமி கோயில் மனதில் தோன்றியது. கோயில்களை எல்லாம் இடித்தவர் என்றால், தனது மாளிகைக்கு நேர் எதிரில் இருக்கும் கோயிலை விட்டுவைத்திருப்பாரா?

       கோட்டையினை விட்டு வெளியேறி, முதன்மைச் சாலையில் பயணித்தோம். 15 நிமிட பயணத்திற்குப் பின், வலது புறம் திரும்பி, சிறிது தூரம் சென்றோம்.

      இதோ திப்புவின் கோடை கால மாளிகை. பெரும்பாலும் மரப் பலகைகளால் கட்டப் பெற்றக் கட்டிடம். சுவரெங்கும்.,திப்பு சுல்தானின் போர்க்களக் காட்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் காட்சியளிக்கின்றன. கோடை காலத்தில் சூரியனின் தாக்கம் அதிகம் தெரியாமல இருப்பதற்காகத்தான், எங்கெங்கினும் மரப் பலகைகள் பொறுத்தப் பட்டுள்ளதாக்க் கூறினார்கள்.


    


அங்கிருந்து கிளம்பினோம். சில நிமிடப் பயணம்தான். கும்பஸ் (GUMBAZ) . திப்பு சுல்தானின் கல்லறை. திப்பு சுல்தான் மரணமடைந்த அடுத்த நாளே, திப்புவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் இது. திப்புவின் தந்தை ஹைதர் அலி, தாயார் பாத்திமா பேகம் இருவருக்கும் அருகிலேயே திப்புவும் நல்லடக்கம் செய்யப் பெற்ற இடம். கண்ணைக் கவரும் நுணுக்கமான வேலைப்பாடுகள். முகப்பில் பெரிய தோட்டம். தாஜ்மகாலை நினைவு படுத்தும் வகையிலான அமைப்பு. தோட்டத்திலும், திப்புவின் உடல் உறங்கும் இடத்திற்கு வெளியிலும் எங்கு நோக்கினும், கல்லறைகள் , கல்லறைகள்.


    

திப்புவின் மனைவி, குழந்தைகள் மற்றும் வீரர்களின் சமாதிகள் என ஐம்பதிற்கும் மேற்பட்ட சமாதிகள்.

     அச்சமென்பதை என்னவென்றே அறியாத திப்புவும், ஹைதர் அலியும் மீளாத் துயில் கொள்ளும் இடமல்லவா இது. கண்மூடி வணங்கினோம். அமைதியாய் பல நிமிடங்கள் கழிந்தபின். கனத்த இதயத்துடன், மனமின்றிப் புறப்பட்டோம்.

       இரண்டு நாட்கள் மைசூரில் செலவிட்டமையைத் தொடர்ந்து, எங்களது மகிழ்வூந்து ஊட்டி நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. எங்களது மகிழ்வூந்து ஊட்டி மலையின் கொண்டை ஊசி வளைவுகளில், சுழன்று ,சுழன்று ஏறத் தொடங்கினாலும், மனமென்னவோ, திப்புவை சுற்றியே சுழன்று, உழன்று கொண்டிருந்தது.

 .... வருகைக்கு நன்றி ந்ண்பர்களே, மீண்டும் அடுத்த சனிக் கிழமை, கரந்தைத் தமிழ்ச் சங்கத் தொடரில் சந்திப்போமா

53 கருத்துகள்:

 1. வித்தியாசமான பதிவு
  காயும் கோடையிலே பெய்த
  குளிர் மழை போல்

  பாராட்டுக்கள்

  சுதந்திர போராளிகளுக்கு
  மரணம் அவர்களின்
  எதிரிகளால் வருவதில்லை

  அவர்கள் பேராசை பிடித்த
  சதிகாரர்களுக்கு விரிக்கும்
  வலையில் சிக்கும்
  இழி பிறவிகளாலே தான்
  வந்தது என்பது வரலாறு

  மகிழ்ச்சியாக உலா வந்த
  நான் கனத்த இதயத்துடன்
  வெளி வந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மட்டில்லா மகிழ்கினை அளிக்கின்றது அய்யா.
   தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன் அய்யா.

   நீக்கு
 2. அழகான படங்களுடன் அருமையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 3. ஸ்ரீரங்கபட்டனத்து காவிரி ஆறும், கோவிலும் என்னை கவர்ந்தது. கோவிலின் பிரம்மாண்டத்தை தாண்டி ஏதோ ஒரு சோகம் இருப்பதாக தெரியும் எனக்கு. இவ்வளவு வரலாற்று உண்மைகள் எனக்கு தெரியாது, இனி போனால் ஆரும் என்னை கவருமா என்பது சந்தேகமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாகத் தங்களை காவிரி கவரும் சகோ.
   ஏனெனில் முக்கியமான வரலாற்று நிகழ்வுகளின் காலடித் தடம் படிந்த இடமல்லவா அது. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 4. விரிவா எழுதியிருக்கீங்க. மைசூர் போனா நீங்க சொன்ன மாதிரியே தங்கி சுத்தி பார்த்திட்டு வரலாம். ஐடியாவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் மைசூரில் தங்கி பார்த்து விட்டு வாருங்கள் நண்பரே. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 5. இந்தகோடைவிடுமுறைக்கு எங்கும்செல்லமுடியவில்லையே என்ற நெருடலுடன் சென்றுகொண்டிருந்த இந்நாளில் உங்களது மைசூர்பயனபகிர்வை உங்களதுகட்டுரையின் வாயிலாக படித்தபின் எனக்கு இரண்டுமுறை மைசூர் சென்றுவந்ததுபோல் ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டது.திப்புசுல்தானின் வீரமும் ,விவேகமும் இந்தியன் ஒவ்வொராளும் போற்றபடவேண்டிய மதிக்கப்படவேண்டிய செயலாகும்.திப்புசுல்தானின் மரனம் ஒவ்வொரு மனிதனும் வெட்க்கப்படவேண்டிய செயல்.வாழ்வது சிலகாலங்களாக இருந்தாலும் மனிதன் மனிதனாக வாழ்வோம்.மனித உணர்வுகளை,மனிதனை மனிதனாக பார்க்க பழகதெரிந்தவனே ஓரு முழுமையான மனிதன் ஆவான்.மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி பாலு.தாங்கள் அவசியம் சென்று பார்க்க வேண்டிய இடம் சீரங்கப் பட்டிணம். வீரபாண்டிய கட்டபொம்மனின் கயத்தாற்றிற்கு சமமான இடம் சீரங்கப் பட்டிணம். அவசியம் பார்த்து வாருங்கள்.
   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி பாலு. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 6. எங்களையும் மலைக்க வைத்து விட்டீர்கள் ஐயா... கூடவே பயணித்த உணர்வு... அடுத்த முறை நேரில் தரிசிக்க வேண்டும்... நன்றி... வாழ்த்துக்கள் பல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே. தொடர்ந்து வருகை தந்திட அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு

 7. மைசூர் செல்லும் வழியில் ஓரிரு முறை ஸ்ரீரங்கப்பட்டினம்சென்றிருக்கிறேன். இவ்வளவு நுணுக்கமாக விரிவாகச் சுற்றிப் பார்க்கவில்லை. சுற்றுலா என்றாலேயே கோயிலுக்குச் சென்று கண்மூடி தியானித்து வருவது என்றாகிவிட்டது. அருமையான பதிவு.பல்வேறு விவரங்கள். . பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அய்யா. வீரபாண்டிய கட்ட பொம்ம்னுக்கு ஒரு கயத்தாறு, திப்புவிற்கு சீரங்கப் பட்டிணம் அய்யா.அடுத்த முறை செல்லும் பொழுது அவசியம் பார்த்து வாருங்கள் அய்யா.
   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு வேண்டுகிறேன்.

   நீக்கு
 8. படங்களும் பதிவும் அருமை.இன்னும் நிறைய இடங்களுக்கு சென்று வந்து இதுபோல நல்ல பதிவுகளை தாங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் என்னை உற்சாகப்படுத்துகின்றன அய்யா. நன்றி.. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு வேண்டுகின்றேன்.

   நீக்கு
 9. திப்புவை சுற்றியே சுழன்று பகிர்ந்த
  அருமையான பயணப்பகிர்வுகளுக்கும்
  படங்களுக்கும் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 10. நான சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு பார்த்து
  பிரமித்த இடங்கள் படங்களுடன் மிக மிக நேர்த்தியாகப்
  பதிவு செய்துள்ளீர்கள் மிக்க நன்றி
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தம் உற்சாகப் படுத்துகின்றன. நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 11. திப்பு சுல்தானின் கோட்டையில் ஓர் நாள் என்ற உங்கள் பதிவு திப்பு சுல்தானைப்பற்றிய ஒரு நல்ல சினிமாவை பார்த்தது போல இருந்தது. பல கோடிகள் செலவழித்து எடுத்த படத்தை பார்த்து குழப்பம்தான் மிஞ்சுகிறது ஆனால் அதையெல்லாம் மிஞ்சி மனதில் நிற்கிறது உங்கள் பதிவு. படங்களும் பகிர்வும் அதை எடுத்து சொன்ன விதமும் மிக அருமை. பாராட்டுக்கள் கரந்தை ஜெயக்குமார் அவர்களே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தம் உற்சாகப் படுத்துகின்றன. நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 12. நானும் போயிருக்கிறேன்...உங்களைப்போல் அனுபவிக்கவில்லை..:)

  படங்கள் வலப்புறம் செல்வதால் கொஞ்சம் சிறிய அளவு தேர்வு செய்யவும்...

  கரந்தை மலர் நாளையா ?

  மறுபடி வருகிறேன்..வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தம் உற்சாகப் படுத்துகின்றன. நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்.
   படங்களை சரி செய்து விட்டேன்அய்யா.
   அடுத்த வாரத்தில் இருந்து கரந்தை மலர் தொடரும் அய்யா. நன்றி

   நீக்கு
 13. திப்பு சுல்தான் போர்களத்தில் கொல்லப்பட்டதாகத்தான் படித்து இருக்கிறேன், இது எனக்கு புதிய செய்தி...!

  பல விஷயங்கள் நான் அறியாதது சொல்லியமைக்கு நன்றி...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தம் உற்சாகப் படுத்துகின்றன. நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 15. மனதை ஆற்றுப் படுத்த வெளியூர் பயணம் சிறந்தது. மைசூர் சென்று ”மனசே ரிலாக்ஸ்! ப்ளீஸ்” செய்து இருக்கிறீர்கள். படங்களும் அவற்றிற்குரிய வரலாற்றுச் செய்திகளும் பதிவிற்கு சிறப்பைத் தருகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தம் உற்சாகப் படுத்துகின்றன. நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்.

   நீக்கு
 16. ***வசந்த மாளிகை திரைப் படத்தில், வசந்த மாளிகையாய் காட்சிதரும் லலித் மகால் சென்று சுற்றிப் பார்த்தோம்.***

  லலீத் மஹால்தான் வசந்தமாளிகையா காட்சி அளித்ததுனு இப்போத்தான் எனக்கு தெரிகிறது. ஒரு முறை பெங்களூர்ல இருந்து ஏதோ திப்பு சுல்தான் சம்மந்தமான ம்லை உயரத்திற்கு போனதா ஞாபகம். அது இதுதானானு தெரியலை. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வசந்த மாளிகை மட்டுமல்ல, ரஜினிகாந்த நடித்த மாவீரம், அருணாசலம் போன்ற படங்களிலும் இடம் பெற்ற மாளிகை இதுதான் என்கிறார்கள். தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 17. அது சரி, புகைப்படங்களில் அரை நிஜாருடன் காட்சியளிக்கிறாரே ஓர் இளைஞர், அவர் யார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தம் உற்சாகப் படுத்துகின்றன. நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்.
   வருடாவருடம் குற்றாலம் செல்லும் போது அணியும் உடை அய்யா அது. ஏதே ஆர்வத்தினால் மைசூரிலும் அணிந்து கொண்டேன்.

   நீக்கு
 18. ஏற்கெனவே அந்த இடங்களுக்கெல்லாம் சென்று மனம் விம்ம நின்றிருக்கிறேன், இன்று இவ்வளவு அழகாகப் பதிவு செய்து மீண்டும் சென்ற உணர்வு தந்தீர்கள்..நேரில் கண்டதுபோலவே மனம் கனக்கிறது..திப்புவின் மகன்களையும் விடவில்லையே ஆங்கிலேயர்!!! ராக்கெட் ஏவுவதிலும் முன்னோடியல்லவா திப்பு சுல்தான், இந்தியாவில் தெரிகிறதோ இல்லையோ NASA வில் படம் இருக்கிறது. உடன் இருந்து குழி பறிப்போர் இல்லாவிட்டால் நம் சரித்திரம் நன்றாய் இருந்திருக்குமோ, ஹ்ம்ம்ம்ம்... திப்புவைப் போன்ற சிறந்த மன்னர்களைப் பற்றி நம் பிள்ளைகள் வரலாற்றில் படிக்க வேண்டும் என்பது என் ஆசை..பதிவிற்கு மிகவும் நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தம் உற்சாகப் படுத்துகின்றன. நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்.
   தாங்கள் கூறுவது சரிதான், நமது பிள்ளைகளுக்கு, நமது மன்னர்களைப் பற்றியும், நமது முன்னோர்களின் வீர வரலாற்றினையும் எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியம். தொலைக் காட்சிப் பெட்டியையே உலகமாய் நினைத்துக் கொண்டிருக்கும் இக்கால மாணவர்களுக்கு நமது முன்னோர்களின் பெருமை எல்லாம் தெரியாமலே போய்விடும்

   நீக்கு
 19. முன்னரே இவ்விடங்களுக்குச் சென்றபோதிலும் உங்களுடைய எழுத்தைப் பார்த்தபோது இன்னும் ஒரு முறை சென்று வரலாம் என்ற எண்ணம் எழுந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தம் உற்சாகப் படுத்துகின்றன. நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்.
   தங்களின் அன்பான வழிகாட்டுதலே இக்கட்டுரைக்குக் காரணம் அய்யா.நன்றி

   நீக்கு
 20. சமீபத்தில்தான் பெங்களூர் மைசூர் சென்று வந்தேன். ஆனால் பல இடங்கள் பார்கவில்லை.விரிவான விளக்கங்கள் தந்திருக்கிறீர்கள். அடுத்த முறை போகும்போது ரசித்து பார்க்கவேண்டும் .. எழுத்து நடையும் ஈர்க்கும் வகையில் அமைந்த நல்ல பதிவு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தம் உற்சாகப் படுத்துகின்றன. நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு அழைக்கின்றேன்.
   எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பு அய்யா.

   நீக்கு
 21. இணைய தளம் பாதிக்கப்பட்டிருந்தது. எனவே தான் உடன் கருத்துரைக்க முடியவில்லை. எனினும் இன்னும் பிரமிப்பு தீரவில்லை!.. உங்களுடன் பயணம் செய்தது போலவே இருந்தது.. பழைமை என்றுமே இனிமையானது!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழமை என்றுமே இனிமையான வரலாற்றுப் புதையல்தான் அய்யா. வருகைக்குத் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தந்திட அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 22. மிக அருமையான பதிவும் பகிர்தலும் ஐயா!

  நேரில் பார்த்து பகிரும் உங்கள் கலைக்கண்களால் நானும் பார்க்கின்றதாய் உணருகின்றேன்.
  அருமை!.. எத்தனை எத்தனை வரலாற்றுச் சிறப்புக்கள்!
  பிரமிப்பைத் தருகின்றது.

  பகிர்தலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ. தொடர்நது வருகை தந்திட அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 23. மைசூர் பயணத்தில் பார்த்திருக்கின்றேன். மீண்டும் காணக்கிடைத்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ. தொடர்நது வருகை தந்திட அன்போடு அழைக்கின்றேன்

   நீக்கு
 24. நல்ல பயணக் கட்டுரை,நன்றி.ஆனால் பெரும்பாலுமாய் அரண்மனைகள் எல்லாம் ஒரே ஸ்டைலில் அமைந்திருப்பது போல் உள்ளது.

  பதிலளிநீக்கு
 25. அன்புள்ள ஜெயக்குமார்..

  நான் பட்டப்படிப்பு முடித்த ஆண்டில் மைசூர் சென்று வந்தது.பல நினைவு விட்டு மறந்தே போய்விட்டன. ஆனாலும் திப்பு சுல்தான் பற்றிய செய்திகள் அற்புதமானவை. வரலாறு அதிலும் இந்த தேசத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவர்கள் அதாவது இலக்கியம் சார்ந்து மனித நலம் சார்ந்து என்ற வகையில் திப்புசுல்தானின் பங்களிப்பு முக்கியமானது. அவனது தனிப்பண்புகள் தனித்துவச் சிறப்புடையது. அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 26. //ரங்கநாதசுவாமி கோயில் மனதில் தோன்றியது. கோயில்களை எல்லாம் இடித்தவர் என்றால், தனது மாளிகைக்கு நேர் எதிரில் இருக்கும் கோயிலை விட்டுவைத்திருப்பாரா? //

  இதே சந்தேகம் எனக்கும். நானும் சென்றிருக்கிறேன் ஆனால் முழுதும் சுற்றி பார்த்ததில்லை நேரமின்மை ஒரு காரணம். பல தகவல்களை அறிய தந்திருக்கிறீர்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
 27. அழகான படங்கள். அருமையான தகவல்கள் என சிறப்பான பயணக் கட்டுரை. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
 28. சுற்றுலா சென்றுவந்த மனநிறைவை கொடுத்தது உங்கள் பதிவு.வாழ்த்துக்கள்.தொடருங்கள்!

  பதிலளிநீக்கு
 29. சில நாட்களுக்கு முன்னர் நானும் அங்கு சென்று வந்தேன்.
  ஒரு மாவீரனின் உண்மை வரலாற்றை மதமாச்சரியங்களுக்கு இடமில்லாமல் தெளிவான முறயில் சொல்லி இருக்கிறீர்கள். மனதுக்கு நிறைவாக இருக்கிறது. இன்னும் இந்த மண்ணில் மனிதம் வாழ்கிறது என்பதற்கு உங்கள் பதிவு ஒரு அடையாளம் . நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு