01 ஏப்ரல் 2012

கணிதத்தின் நிழலில்...


     கடந்த 5.2.2012 ஞாயிற்றுக் கிழமை, உறவினர் இல்லத் திருமணமொன்று கும்பகோணத்தில் நடைபெற்றது. இத்திருமண விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, தஞ்சாவூரிலிருந்து நானும் எனது மனைவியும் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டோம்.

     கும்பகோணம் சாரங்கபாணிக் கோவிலைக் கடந்து, உச்சிப் பிள்ளையார் கோவிலை நெருங்கும்போது, கணிதமேதை சீனிவாச இராமானுஜனின் நினைவு வந்தது. இராமானுஜன் வாழ்ந்த வீடு அருகில்தானே இருக்கிறது, பார்த்துவிட்டுச் சென்றால் என்ன? என்ற எண்ணம் தோன்றியது.


     இராமானுஜனின் இல்லம் அருகில்தான் இருக்கிறது, பார்த்துவிட்டுச் செல்வோமா? என என் மனைவியிடம் கேட்டேன். அவசியம் பார்ப்போம் என்றார்.


     உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு எதிரே உள்ள சாலையில் வண்டியைத் திருப்பி, உடனே வலது புறமுள்ள கிழக்கு சந்நிதித் தெருவிற்குள் நுழைந்தேன். 17 ஆம் எண்ணுள்ள வீட்டின் முன் வண்டியை நிறுத்தி இறங்கினோம்.
கணிதமேதை சீனிவாச இராமானுஜன் வாழ்ந்த இல்லம்
     இராமானுஜனின் வாழ்வினைப் போலவே மிகவும் குறுகிய வீடு. சுமார் இருபது அடி அகலம் கூட இல்லாத சாதாரண ஓட்டு வீடு.

     முப்பத்து மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இராமானுஜன், மழலைப் பருவம் முதல், தன் வாழ்வின் பெரும் பகுதியை, சற்றேறக்குறைய இருபது ஆண்டுகளுக்கும்மேல் கழித்த வீடு இது.

     இராமானுஜன் மழலையாய் தவழ்ந்ததும், நடக்கக் கற்றுக் கொண்டதும், பேசக் கற்றுக் கொண்டதும் இந்த வீட்டில்தான்.

     சிறு வயது முதலே வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த இராமானுஜன், உண்ண உணவிற்கு வழியின்றி, பலநாள் பானைத் தண்ணீரை மட்டுமே அருந்தி பள்ளிக்குச் சென்றது இந்த வீட்டில் இருந்துதான்.

     சிறு வயதில் அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு, முகமெங்கும் தழும்புகளைப் பெற்று, படுத்தப் படுக்கையாய் கிடந்ததும் இந்த வீட்டில்தான்.

    கல்லூரியில் தோல்வியைத் தழுவி, கல்வி உதவித் தொகையினை இழந்து, கட்டணம் செலுத்தவும் வழியின்றித் தவித்து, மன உளைச்சலுக்கு ஆளாகி, வீட்டை விட்டு ஓடினாரே, அதுவும் இந்த வீட்டில் இருந்துதான்.

     இராமானுஜனின் இந்த வீட்டிற்கு ஏற்கனவே இருமுறை வந்துள்ளேன். நூறு முறையாவது, இராமானுஜனின் இல்லம் இருக்கும் தெருவின் வழியே சென்றிருப்பேன். அப்பொழுதெல்லாம், இராமானுஜன் ஒரு பெரிய கணித மேதை என்ற ஒருவரிச் செய்தியை மட்டுமே அறிந்திருந்தேன்.

     ஆனால் இராமானுஜனை எலும்பும் , தசையும், இதயமும் உள்ள ஒரு சக மனிதராக, வாழ்க்கையில் அவலங்களை மட்டுமே சந்தித்த, பொருளாதார நிலையில் மிகவும் தாழ்ந்து, ஏழ்மையின் அரவணைப்பில் உழன்ற அவரது வாழ்க்கையை உணராதவனாகவே இருந்தேன்.
     2007 ஆம் ஆண்டு, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையில், ஆய்வியல் நிறைஞர் (M.Phil.,) ஆய்வு மாணவராக சேர்ந்த பொழுது, கணிதவியல் அறிஞர் சீனிவாச இராமானுஜன் ஓர் ஆய்வு என்னும் தலைப்பினையே, எனது ஆய்வுத் தலைப்பாக எடுத்துக் கொண்டேன்.

     இராமானுஜன் பற்றிய செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கியபோதுதான் தெரிந்தது, தமிழில் இராமானுஜனைப் பற்றிய நூல்களை மிகவும் குறைவு என்று. ஒன்றிரண்டு நூல்கள் வெளிவந்துள்ள போதிலும், அதிலுள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை. மேலும் இந்நூல்கள் சிறுவர்களுக்கான நூல்களாகவே இருந்தன. ஆங்கில நூல்களும், இணையமும் கைகொடுத்தன.

     இராமானுஜனைப் பற்றிப் பலரும் அறியாத செய்திகளை ஆங்கிலத்தில் கண்டு மலைத்தேன். ஆய்வியல் நிறைஞர் படிப்பை நிறைவு செய்தவுடன், ஆய்வேட்டினை நூலாகவும் வெளியிட்டேன்.

     இராமானுஜனை கணித மேதையாக மட்டுமன்றி, மனிதராக அறிந்து, உணர்ந்தபின், அவர் வாழ்ந்த இல்லத்திற்கு முதன் முறையாக வருகின்றேன்.

     வீட்டின் முன்புறம். இடதுபுறத்தில் சிறிய திண்னை. வலது புறம் வீட்டினுள்ளே செல்வதற்கான வழி. வீட்டினுள் காலடி எடுத்து வைத்தேன். உடலிலும், உள்ளத்திலும் இனம் புரியாத ஒர் உணர்வு மெல்ல, மெல்லப் பரவ, வீட்டினுள் நுழைந்தேன்.

      இராமானுஜனின் இல்லமானது, தற்பொழுது சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தால், நினைவு இல்லமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. சாஸ்த்ரா அலுவலர் ஒருவர் எங்களை வரவேற்றார். அறிமுகப் படுத்திக் கொண்டோம்.
             வீட்டின் மையப் பகுதியில், நடு நடுவே மரத்தூண்கள் வீட்டைத் தாங்கி நிற்க, வலது புறம், திறந்த வெளியுடன் கூடிய சிறிய முற்றம். இடது புறம் இராமானுஜனின் மார்பளவுச் சிலை. இராமானுஜனின் கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு உணர்வு. சிலையினையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இடது புறம் ஒரு படுக்கை அறை, உள்ளே நுழைந்தோம். ஒரே ஒரு மரக் கட்டில் மட்டும் இருந்தது. அருகே ஒரு சன்னல்.

        இராமானுஜன் கூச்ச சுபாவம் உள்ளவர். பள்ளியில் எந்த மாணவனிடமும் அதிகமாகப் பேசமாட்டார். மாலையில் பள்ளி விட்டதும், நேராக வீட்டிற்கு ஒடி வந்து விடுவார். வீட்டின் வெளிப்புறத் திண்ணையை ஒட்டி அமைந்திருக்கும், சன்னலின் உட்புறமாக உள்ள மேடையில் ஏறி உட்கார்ந்து கொள்வார். வீட்டை விட்டு வெளியில் விளையாடக்கூடச் செல்ல மாட்டார். இந்த சன்னல் மேடையில் அமர்ந்துதான், அன்றாடப் பாடங்களைப் படிப்பார். அவரது உலகமே இந்த சன்னல் மேடைதான்.

     மெதுவாக அந்த சன்னலை நோக்கி நடந்தேன். சன்னல் மேடையைத் தொட்டுப் பார்த்தேன். இராமானுஜன் எப்பொழுதும் அமர்ந்திருந்த சன்னல் மேடையல்லவா. நானும் சிறிது நேரம் அந்த சன்னல் மேடையில் அமர்ந்தேன். இராமானுஜனின் அருகிலேயே அமர்ந்ததைப் போல் ஒர் எழுச்சி.

      அந்த அறையை விட்டு வெளியே வந்து, வீட்டின் மையப் பகுதியைக் கடந்து சென்றோம். வீட்டின் சமையலறை. மேடையில் ஒரு சிறிய அடுப்பு. மறுபுறம் அம்மியும் குளவியும்.

     இராமானுஜனின் குடும்பம் போதிய வருமானம் இன்றி வறுமையில் வாடிய குடும்பம். இராமானுஜனின் தாயார், பல நாள், இரவில் வடிக்கும் சோற்றில் சிறிய அளவினை, குழந்தைகளுக்கு உணவாகக் கொடுத்து, மீதமிருக்கும் சோற்றினை, மறுநாள் காலை, குழந்தைகளுக்குப் பழைய சோறாகப் போடுவது வழக்கம்.

     ஒரு நாள் இராமானுஜன் பள்ளிக்குச் செல்வதற்கு முன், உணவுத் தட்டுடன் சாப்பிடத் தயாரானான். ஆனால் அவரது தாய் கோமளத்தம்மாளோ, அய்யா சின்னசாமி, அம்மா எப்படியும் இன்று மாலைக்குள் அரிசி வாங்கி சமைத்து வைக்கிறேன். இரவு சாப்பிடலாம்.  அதுவரை பொறுத்துக் கொள் என வேண்டினார். இராமானுஜன் மறு வார்த்தை பேசாமல், வீட்டின் ஒரு மூலையில் இருந்த பானையில் இருந்து மூன்று டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, அம்மா, நாள் பள்ளிக்குச் சென்று வருகிறேன் எனக் கூறிப் பள்ளிக்குச் சென்று விட்டார். இக் காட்சி இராமானுஜனின் வீட்டில் மீண்டும் மீண்டும் அரங்கேறியக் காட்சியாகும்.

      காலை உணவு உண்ணாமல், பானைத் தண்ணீரை மட்டுமே குடித்து, பல நாள் இராமானுஜன் பள்ளிக்குச் சென்றாரே, அந்தப் பானை சமையலறையின் எந்த மூலையில் இருந்திருக்கும் என்பதை என் கண்களும், மனமும் தேடின. ஒரு மூலையில் அடுப்பு மற்றும் தண்ணீர்தொட்டி, ஒரு மூலையில் அம்மி, குளவி. சமையலறைக்குள் நுழையும் வழியில் வலது மூலை காலியாக இருந்தது. எனவே தண்ணீர் பானை இங்குதான் இருந்திருக்க வேண்டும் என் எண்ணிக் கொண்டேன்.

     கொல்லைப் புறத்திற்குச் சென்றோம். ஒரு கிணறு இருந்தது. கொல்லைப் புறத்திற்கும், சமையலறைக்கும் இடைப்பட்ட சுவற்றில் ஒரு துளையினையும், துளையில் ஒரு கருங்கல் பலகை உள் நோக்கிச் சரிவாக பொறுத்தப்பட்டிருந்ததையும் பார்த்தோம். கிணற்றிலிருந்து நீர் இறைத்து,  இத்துளை வழியே ஊற்றினால, சமையலறையின் உட்புறம் அமைந்திருக்கும் தொட்டியில் நீர் நிரம்பும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
     மீண்டும் வீட்டின் மையப்பகுதிக்கு வந்தோம். சிறிய உருவமானாலும், தனது கணிதத் திறமையால், உலகையே அண்ணாந்து பார்க்க வைத்த, மாபெரும் கணித மேதை இராமானுஜனின் சிலைக்கு அருகில் சிறிது நேரம் அமர்ந்தேன்.

     இராமானுஜன் இலண்டனில் தங்கியிருந்த காலத்தில், ஹங்கேரியன் கணிதவியல் மேதை ஜார்ஜ் பால்யா என்பவர், இராமானுஜனின் நண்பர் ஹார்டியைச் சந்தித்தார். அவர் ஹார்டியிடமிருந்து, இராமானுஜனின் நோட்டுக்களைப் பார்த்துவிட்டுத் தருவதாகக்கூறி, சில நாட்களுக்குக் கடனாகப் பெற்றுச் சென்றார். ஒரு சில நாட்களிலேயே, பதட்டத்துடன் வந்து, இராமானுஜனின் நோட்டுகளை திருப்பிக் கொடுத்துவிட்டு, இதற்கு மேலும் இராமானுஜனின் தேற்றங்களைப் பார்க்க விரும்பவில்லை. மீண்டும் பார்ப்பேனேயானால், இராமானுஜனின் கணிதச் சுழலில் சிக்கி, என் மீதி வாழ்க்கையை இராமானுஜனின் தேற்றங்களை நிரூபிப்பதிலேயே கழித்து விடுவேனே தவிர, என்னால் தனியாக எதையும் புதிதாக கண்டுபிடிக்க இயலாமல் போய்விடும். இராமானுஜனின் நோட்டுக்கள் என் முழு வாழ்க்கையையே விழுங்கிவிடும் என்றார்.

      தனது கணிதத் திறமையால், உலக கணித அறிஞர்கள் அனைவரையும் திக்குமுக்காட வைத்த இராமானுஜன், தான் மட்டும் ஏழ்மைச் சுழலில் சிக்கி, கரையேற முடியாமல் தத்தளித்ததுதான் வாழ்வின் யதார்த்தம்.

      சிறிது நேரம்  இராமானுஜனின் சிலைக்கு அருகிலேயே அமர்ந்திருந்துவிட்டு, பார்வையாளர்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டேன்.

      சாஸ்த்ரா அலுவலரிடம், நான் கணித மேதை இராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றினை நூலாக வெளியிட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்தேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்த சாஸ்த்ரா அலுவலர், சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில், இராமானுஜன் பற்றிய ஆங்கில நூல்கள் உள்ளனவே தவிர, தமிழ் நூல்களை நான் பார்த்ததில்லை. இராமானுஜனின் இந்த நினைவு இல்லத்திற்கு பல வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும், இந்தியாவின் பல  மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். அவர்களிடம் இராமானுஜன் பற்றிய செய்திகளை நான் கூற விரும்புகிறேன், ஆனால் தமிழில் புத்தகம் இல்லாத காரணத்தால் என்னால் கூற இயலவில்லை என்று வருந்தினார்.

     கவலைப்படாதீர்கள் எனது நூலினைத் தங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன் என்று நான் கூற, சாஸ்த்ரா அலுவலர் மிகவும் மகிழ்ந்தார்.

     சாஸ்த்ரா அலுவலரிடமிருந்தும், இராமானுஜனின் இல்லத்திடமிருந்தும், கனத்த இதயத்தோடு விடைபெற்றோம்.

     சென்னையில் நடைபெற்ற கணிதமேதை சீனிவாச இராமானுஜனின் 125 வது பிறந்த நாள் விழாவின்போது, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால், 2012 ஆம் ஆண்டானது கணித ஆண்டாக அறிவிக்கப்பெற்றது, தமிழ்ச் சமுதாயமே எண்ணி எண்ணிப் பெருமைப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும்.

     இக்கணித ஆண்டில், தூய கணிதத்தின் கருவூலமாம் சீனிவாச இராமானுஜன் வாழ்ந்த, சுவாசித்த இல்லத்தில், நானும் சிறிது நேரம் தங்கியதும், கணிதக் காற்றை சுவாசித்ததும், என் வாழ்வின் மறக்கவொண்ணா நிமிடங்களாகும்.

கணிதமேதை சீனிவாச இராமானுஜனின் நினைவினைப் போற்றுவோம்.