26 அக்டோபர் 2012

கணிதமேதை அத்தியாயம் 3


அத்தியாயம் 3

     இராமானுஜன் கும்பகோணத்தில் இருந்து புகைவண்டி மூலம் விசாகப்பட்டினத்தைச் சென்றடைந்தார். இராமானுஜனைக் காணாமல் பெற்றோர் தவித்தனர். சென்னை, திருச்சி என ஒவ்வொரு உறவினர் வீட்டிற்கும் சென்று தேடினர். காணவில்லை என்று செய்தித் தாட்களில் விளம்பரம் செய்தனர். செப்டம்பர் மாத இறுதியில் இராமானுஜனை, விசாகப்பட்டினத்தில் கண்டுபிடித்து, மீண்டும் கும்பகோணத்திற்கு அழைத்து வந்தனர். இராமானுஜன் விசாகப்பட்டினத்தில் எங்கு தங்கினார், சாப்பாட்டிற்கு என்ன செய்தார் என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை.

இராமானுஜனின் இல்லம்
     இராமானுஜன் காணாமல் போவது இது முதல் முறையும் அல்ல. பலமுறை மன உளைச்சல் காரணமாக, காணாமல் போனதுண்டு. 1897 இல் டவுன் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, கணக்குப் பாடத்தில் தன்னைவிட சாரங்கபாணி ஒரு மதிப்பெண் அதிகம் பெற்றதைத் தாங்க முடியாமல் அழுதுகொண்டே வீட்டிற்கு ஓடியது நினைவிருக்கிறதல்லவா?

     உயர்நிலைப் பள்ளிப் படிப்பின்போதே, முக்கோணவியலைச் செங்கோண முக்கோணத்தின் உதவி இல்லாமலும் வெளிப்படுத்த முடியும் என்ற உண்மையைக் கண்டறிந்தார். ஆனால் இதே உண்மையை சுவிஸ் நாட்டு கணிதவிய்ல் அறிஞர் லெனார்டு ஆயிலர் என்பார் 150 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்துள்ளார் என்ற செய்தியை அறிந்தபோது, அவரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. முக்கோணவியல் தொடர்பாக தான் எழுதிய தாட்களை எல்லாம், வீட்டுப் பரணியில் மறைத்து வைத்தார். சுருக்கமாகச் சொல்வதானால் இராமானுஜன் எளிதில் உணர்ச்சி வயப்படும், சிறு நிகழ்வுகளைக் கூட மனதளவில் தாங்க இயலாத மனிதராகவே வாழ்ந்தார்.

பச்சையப்பன் கல்லூரி

பச்சையப்ப முதலியார்
     1784 ஆம் ஆண்டு பிறந்த பச்சையப்ப முதலியார், தமிழ் மற்றும் ஆங்கிலப் புலமை வாய்ந்தவர். ஆங்கிலேயர்களின் வணிகப் பணிகளுக்குத் தொடர்பாளராகப் பணியாற்றியதன் மூலம் பெரும் செல்வம் ஈட்டியவர். தனது இருபத்தொன்றாவது வயதிலேயே கோடிக் கணக்கில் பொருள் சேர்த்தவர். தனது 46 வது வயதில் தனது சொத்து முழுவதையும் அறக்கட்டளைக்கு எழுதி வைத்துவிட்டு இறந்தார். 1889 ஆம் ஆண்டு அந்த அறக்கட்டளையின் சார்பில் பச்சையப்பா கல்லூரி நிறுவப்பட்டது. இக் கல்லூரியில் இந்துக்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். இக்கல்லூரி 1906 வாக்கில் சிறந்த கல்லூரியாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.

இன்று பச்சையப்பா கல்லூரி
     கும்பகோணம் கல்லூரியில் தோல்வியைச் சந்தித்த இராமானுஜன், மீண்டும் அதே படிப்பை பச்சையப்பன் கல்லூரியில் பயில வேண்டும் என்ற எண்ணத்துடன், 1906 ஆம் ஆண்டு, புகை வண்டி மூலம் எக்மோர் வந்து சேர்ந்தார்.

     மிகவும் களைத்துப்போய், பசியுடன் இருந்ததால் எழும்பூர் புகைவண்டி நிலையத்தின் பயணியர் ஓய்வு அறையிலேயே தூங்கி விட்டார்.  இராமானுஜனைக் கண்டு பரிதாபப்பட்ட ஒரு பயணி ஒருவர், அவரை எழுப்பித் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, உணவு வழங்கிக் கல்லூரிக்கு வழி கூறி அனுப்பி வைத்தார்.

     பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த இராமானுஜன், பிராட்வேயில் உள்ள பழக்கடைகளுக்கு அருகில் ஒரு சந்தில் இருந்த தனது பாட்டியின் வீட்டில் தங்கினார்.

     கல்லூரியில் தனது புதிய கணிதப் பேராசிரியரிடம் தனது கணித நோட்டுக்களைக் காண்பித்து, தனது கணித ஆர்வத்தையும், ஏழ்மையையும் விளக்கினார். இராமானுஜனின் கணிதத் திறமையால் கவரப் பட்ட அவ்வாசிரியர், இராமானுஜனை அழைத்துச் சென்று முதல்வரிடம் அறிமுகப்படுத்தினார். கல்லூரி முதல்வரும் அந்நிமிடமே பகுதி கல்வி உதவித் தொகையினை வழங்கி உதவினார்.

     பச்சையப்பா கல்லூரியில் தொடக்கக் காலம் நன்றாகவே சென்ற போதிலும், வயிற்றுப் போக்கால் அவதிப்பட்ட இராமானுஜன் மூன்று மாதங்கள் கும்பகோணத்திற்கு வந்து தங்க நேரிட்டது.

     இராமானுஜனின் புதிய கணிதப் பேராசிரியர் என். இராமானுஜாச்சாரியார், இயற்கணிதம் அல்லது முக்கோணவியலின் ஒரு கணக்கிற்கு, தள்ளக் கூடிய வசதியுள்ள இரு கரும் பலகைகளிலும், படிப்படியாகக் கணக்கிட்டு விடையைக் கண்டுபிடித்துக் கூறுவார். பல நேரங்களில் இராமானுஜன் எழுந்து, சார், இந்தக் கணக்கிற்கு விடைகான, இத்தனை வரிகள் தேவையில்லை. சில வரிகளிலேயே இதற்கு விடை காணலாம் என்று கூறுவான். சிறிது மந்தமாகக் காது கேட்கும் அவ்வாசிரியரும், எப்படி? செய்து காட்டு என இராமானுஜனை அழைத்துக கரும்பலகையில் விடைகாண அறிவுறுத்துவார். இராமானுஜன் கணக்கைத் தொடங்கிய இரண்டாவது வரியிலேயே, மனதிற்குள்ளாகவே அடுத்தடுத்த வரிகளைக் கணக்கிட்டு, மூன்று அல்லது நான்கே வரிகளில் விடையைக் கண்டுபிடித்துக் காட்டி, மொத்த வகுப்பையும் குழப்பத்தில் ஆழ்த்துவார்.

சிங்காரவேலு முதிலியார்
     இராமானுஜனின் மற்றொரு கணிதப் பேராசிரியர் பி.சிங்காரவேலு முதலியார் அவர்களாவார். இவர் இராமானுஜனின் கணிதத் திறமையால் பெரிதம் ஈர்க்கப்பட்டார். கணித இதழ்களில் வரும் கணக்குகளுக்கு இருவரும் சேர்ந்து விடைகாணும் முயற்சியில் இறங்கி வெற்றி பெறுவார்கள்.

     பச்சையப்பா கல்லூரியில் அனைவருமே இராமானுஜனின் கணிதத் திறமையைக் கண்டு வியந்தனர். இருந்த போதிலும் கும்பகோணத்தில் ஏற்பட்ட அதே தடங்கல் சென்னையிலும் தொடர்ந்தது. கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பயின்றபோது ஆங்கிலப் பாடம் இராமானுஜனைத் தோற்கடித்தது என்றால், பச்சையப்பா கல்லூரியில் உடலியல் பாடமானது வேப்பங்காயாய் கசக்கத் தொடங்கியது.

     தேர்வில் கணக்கைத் தவிர மற்ற பாடங்களில் குறைந்த மதிப்பெண்களே பெற்றார். குறிப்பாக உடலியலில் பத்து சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்களே பெற்றுத் தோற்றார். மூன்று மணி நேர கணிதத் தேர்வை முப்பது நிமிடங்களில் எழுதி முடித்தார். ஆனால் பலன்தானில்லை.

     1907 டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒரு முறை தேர்வை எழுதினார். மீண்டும் தோற்றார். 1904 மற்றும் 1905 இல் கும்பகோணத்தில் தோல்வி. மீண்டும் 1906 மற்றும் 1907 இல் சென்னையில் தோல்வி. இராமானுஜன் திறமை வாய்ந்தவர் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் இந்தியக் கல்வி முறையின் அமைப்பில் இராமானுஜன் போன்றோருக்கு இடமில்லாமல் போனது. இந்தியக் கல்வி முறை இராமானுஜன் பட்டம் பெறுவதற்குப் பெருந்தடையாக மாறியது.

     1908 ஆம் ஆண்டில் கல்லூரிப் படிப்பைத் தொடர வழியின்றி, வேலை ஏதுமின்றிக் கும்பகோணத்து வீட்டையே சுற்றி சுற்றி வந்தார். குடும்பத்தின் பொருளாதார நிலைமையும் மிகவும் மோசமானதாக இருந்தது. இராமானுஜனின் தந்தை சீனிவாசன் சம்பாதிப்பதோ மாதம் இருபது ரூபாய். தாய் கோமளத்தம்மாள் கோயில்களில் பஜனை பாடுவதன் மூலம் மாதந்தோறும் பத்து அல்லது பதினைந்து ரூபாய் சம்பாதித்து வந்தார். கல்லூரி மாணவர்களுக்கு வீட்டில் தங்க இடமளித்து, உணவு வழங்கி வந்ததன் மூலம் மாதந்தோறும் பத்து ருபாய் கிடைத்து வந்தது.

     இராமானுஜன் நண்பர்கள், மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று கணக்கெழுதவோ, மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தரவோ வாய்ப்பு கிடைக்குமா என்று விசாரிக்கத் தொடங்கினார்.

     ட்யூசனுக்கு விசுவநாத சஸ்த்திரி எனும், கும்பகோணம், அரசுக் கல்லூரி தத்துவப் பேராசிரியரின் மகன் கிடைத்தான். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கும்பகோணத்தின் மறுபுறத்தில் உள்ள சோலையப்ப முதலித் தெருவில் இருக்கும் மாணவனின் வீட்டிற்கு இராமானுஜன் நடந்தே சென்று கணிதம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். ஆனால் இராமானுஜனால் மாணவனின்ப பாடத்திட்டத்திற்கு ஏற்றாற்போல் சொல்லிக் கொடுக்க  இயலவில்லை. மாணவனின் வயது, தகுதி, புரிதல் திறன் இவற்றைப் பற்றிக் கருதாமல் சொல்லிக் கொடுத்ததால் ட்யூசன் வகுப்புகளையும் இழந்தார். இராமானுஜனிடம் சிலகாலம் ட்யூசன் படித்த, இந்தியன் பப்ளிக் சர்விஸ் கமிசனின் தலைவராகப் பணியாற்றிய கோவிந்தராஜா கூறுகையில், அவர் எப்பொழுதுமே முடிவிலாத் தொடர் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். அவர் கற்றுத் தரும் கணக்கிற்கும், நான் எழுத வேண்டிய தேர்விற்கும் தொடர்பிருக்காது. அதனால் அவரிடம் பாடம் கேட்பதை நிறுத்தி விட்டேன். மாணவர்களின் பாடப்பகுதி பற்றியோ, மாணவர்களின் தேவை என்ன என்பது பற்றியோ அவர் கவலைப் பட்டதாகவோ அல்லது அறிந்திருந்ததாகவோ தெரியவில்லை என்று கூறுகிறார்.

     இராமானுஜன் முதலில் கல்வி உதவித் தொகையை இழந்தர்ர். கல்லூரிக் கல்வியையும் இருமுறை இழந்தார். ட்யூசன் சொல்லித் தருவதற்கான வாய்ப்பினையும் இழந்தார். மொத்தத்தில் அனைத்தையும் இழந்து நின்றார்.

,,,,,வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் அடுத்த சனிக்கிழமைச் சந்திப்போமா?
...........................................................


கரந்தை ஜெயக்குமார் வலைப் பூக்கள் நூல் வெளியீட்டு விழா


நண்பர்களே,

     வணக்கம். கடந்த 24.10.20012 புதன் கிழமை எனது பள்ளியில்,

  • கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன் அவர்களின் பிறந்த நாள் விழா
  • கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி நாள் விழா
  • உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் 72 ஆம் ஆண்டு விளையாட்டு விழா
ஆகிய முப்பெரு விழாக்கள் நடைபெற்றன.

      இவ்விழாவில் எனது நூலான கரந்தை ஜெயக்குமார் வலைப் பூக்கள் நூலும் வெளியிடப்பெற்றது என்பதனை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.


     கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு நா. கலியமூர்த்தி அவர்கள், நூலினை வெளியிட , நூலின் முதற் படியை, கரந்தைத் தமிழ்ச் சங்க நிறைவேற்றுக் கழக உறுப்பினரும், தேசிய நல்லாசிரியருமான புலவர் சிவ. பாலசுப்பிரமணியன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

    
நூலின் இரண்டாம் படியினை, எனது நண்பரும், கரந்தைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவருமான திரு இரா. சுந்தரவதனம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

     நூலின் மூன்றாம் படியினை, இவ்வெளியீட்டிற்குக் காரணமான, சங்கச் செயலாளர் செம்மொழிவேளிர் திரு ச.இராமநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.


      கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பெருமை மிகு , தமிழ்ப் பெருமன்ற மேடையில், எனது நூல் வெளியிடப்பெற காரணமாக இருந்த . கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் திரு ச.இராமநாதன் அவர்களுக்கும், தலைவர் திரு நா.கலியமூர்த்தி அவர்களுக்கும், துணைத் தலைவர் திரு இரா.சுந்தரவதனம் அவர்களுக்கும், பள்ளித் தலைமையாசிரியர் திரு சொ.இரவிச்சந்திரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.
       நன்றி

    

       

19 அக்டோபர் 2012

கணிதமேதை .- அத்தியாயம் 2


     மாலை பள்ளியில் இருந்து இராமானுஜன் வீடு திரும்பாததால், கவலையில் கண்ணீர் விழிகளுடன் கோமளத்தம்மாள், இராமானுஜனைத் தேட ஆரம்பித்தாள். எங்கு தேடியும் இராமானுஜனைக் காணவில்லை. அச்சமயம் இராமானுஜனின் நண்பன் அனந்தராமனின் தாயார் அங்கு வந்து விசாரிக்க, இராமானுஜனைக்  காணவில்லை, அவன் காலையும் சாப்பிடவில்லை, மதியமும் சாப்பிடவில்லை. மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக்கூறி அழத் தொடங்கினாள். கோமளத்தம்மாளைச் சமாதானம் கூறி வீட்டில் அமரவைத்த அனந்தராமனின் தாயார், தானும், அனந்தராமனும் ஆளுக்கொரு பக்கமாக இராமானுஜனைத் தேடத் தொடங்கினர்.

டவுன் உயர்நிலைப் பள்ளி
     அனந்தராமன் பல இடங்களில் தேடி அலைந்தான். எங்கும் இராமானுஜனைக் காணவில்லை. திடீரென்று அனந்தராமனுக்கு ஒரு சந்தேகம், ஒரு வேளை சாரங்கபாணிக் கோயிலுக்குச் சென்றிருப்பானோ? என்று, உடனடியாகக் கோயிலுக்குச் சென்று தேடினான். கோயிலின் ஒரு மண்டபத்தில், கணக்குப் புத்தகங்களைத் தலைக்கு வைத்துக் கொண்டு, இராமானுஜன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் படுத்திருந்த தரை முழுவதும் சாக்கட்டியால் கணக்குகள் போடப்பட்டிருந்தன. அனந்தராமன் அவனைத் தட்டி எழுப்பினான். திடுக்கிட்டு எழுந்த இராமானுஜன், என்ன அனந்தராமா அதற்குள் எழுப்பிவிட்டாயே, நேற்று நமது கணக்கு வாத்தியாருக்கே விடை தெரியாத, அந்தக் கணக்கை, நான் மனதிலேயே போட்டுப் பார்த்தேன், போட்டு முடிப்பதற்குள் எழுப்பிவிட்டாயே, இரு, நான் மனதிலேயே போட்ட பாதிக் கணக்கையாவது இந்த நோட்டில் எழுதி வைத்துவிட்டு வருகின்றேன் என்று கூறி எழுத ஆரம்பித்தான்.

     எழுதி முடித்தவுடன் அனந்தராமன், இராமானுஜனைத் தன் வீட்டிற்கே அழைத்துச் சென்றான். இராமானுஜனைக் காணாமல், அனந்தராமனும் சாப்பிடாமல் இருக்கிறான் என்ற செய்தியைக் கூறி, அனந்தராமனின் தாயார் தன் வீட்டிலேயே, இராமானுஜனுக்கும் உணவிட்டாள்.

     பிறகொரு நாள், அனந்தராமன் இராமானுஜனிடம், எப்படி எவ்வளவு கடினமான கணக்கையும், நீ வெகு எளிமையாகப் போட்டு விடுகிறாய், இந்தத் திறமை உனக்கு எப்படி வந்தது என்று என்னிடம் சொல்லக்கூடாதா? என வேண்டினான். உடனே தன் திறமையின் இரகசியம் என்று தான் நம்பும் சேதியை தெளிவாக விளக்கினான் இராமானுஜன், அனந்தராமா, நாள் தோறும் நான் நாமகிரித் தாயாரை வேண்டிக் கொள்கிறேன், தினமும் காலையில் பள்ளிக்குச் செல்வதற்கு முன்,என் தாயாரின் காலில் விழுந்து வணங்கி விட்டுத்தான் செல்வேன். அம்மாவும் தினமும் என்னை வாழ்த்துவாள். மேலும் ஒரு நாள் கனவில் ஜோதிமயமான உருவம் ஒன்று தோன்றியது, அதிலிருந்து ஒரு தேவதை வெளியே வந்து, எனக்குக் கணக்குப் பாடங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டு மறைந்து விட்டது. அன்று முதல் எவ்வளவு கடினமாக கணக்காக இருந்தாலும், யாரோ எனக்குச் சொல்லித் தருவது நன்றாகத் தெரிகிறது. அதனால்தான் எனக்குக் கணக்குப் பாடம் எளிமையாக இருக்கிறது என்று கூறினான்.

     கும்பகோணம் கல்லூரியில் படித்து வந்த திருச்சி மற்றும் திருநெல்வேலியைச் சார்ந்த இரு பிராமண மாணவர்களுக்கு, கோமளத்தம்மாள் தன் வீட்டிலேயே உணவு தயாரித்து வழங்கி அதன் மூலம் ஒரு சொற்பத் தொகையை மாதா மாதம் சம்பாதித்து வந்தார். அவ்விரு மாணவர்களிடம் இருந்து, அவர்களுக்குத் தெரிந்த கணக்குகள் அனைத்தையும் இராமானுஜன் கற்றுக் கொண்டான். அவ்விரு மாணவர்களும் இராமானுஜனுக்குத் தொடர்ந்து சொல்லித்தர வழி அறியாமல், கல்லூரி நூலகத்தில் இருந்து, கணக்குப் புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து வந்து இராமானுஜனுக்குப் படிக்கக் கொடுக்கலாயினர். அவ்வாறு அவர்கள் கொடுத்த புத்தகங்களிலேயே மிகவும் முக்கியமானது 1893 இல் கல்லூரி மேற்படிப்பிற்குப் பாடமாக வைக்கப் பட்டிருந்த எஸ்.எல்.லோனி எழுதிய திரிகோணமிதி என்ற நூலாகும். மிகவும் கடினமான கணக்குகள் அடங்கிய இந்த புத்தகத்தை தனது பதிமூன்றாவது வயதிற்குள் கற்றுத் தேர்ந்தான் இராமானுஜன்.

     ஒரு நாள் அந்த இரு கல்லூரி மாணவர்களுக்குள் ஒரு கணக்கிற்கு விடை காண்பது தொடர்பாக வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அவ்வேளையில் அங்கு வந்த இராமானுஜன், அவர்களின் வாக்குவாதத்தைப் பொறுமையாகக் கேட்டான்.  அவர்களின் நோட்டுப் புத்தகங்களைப் பார்த்தான். அதில் போட்டிருந்த கணக்கின் வழி முறைகளில் செய்யப்பட்டிருந்த தவற்றைச் சுட்டிக் காட்டினான். அதனை ஏற்றுக் கொள்ளாத அக் கல்லூரி மாணவர்கள், உன்னால இக்கணக்கைப் போட முடியுமா? எனச் சவால் விட்டனர். சவாலை ஏற்றுக் கொண்ட இராமானுஜன், நான்கே வரிகளில் சரியான விடையைக் கண்டுபிடித்துக் கொடுத்தான்.

     மறுநாள் கல்லூரியில், கணித வகுப்பின்போது, கணிதப் பேராசிரியரிடம், இராமானுஜன் நான்கே வரிகளில் விடையைக் கண்டுபிடித்ததைக் காட்டினார்கள். பேராசிரியர் திகைத்தார்.  இந்தக் கணக்கைப் போட்டுக் கொடுத்தவர் ஒரு பெரிய கணித மேதையாகத்தான் இருக்க வேண்டும். பேராசிரியர்களான எங்களுக்கே இது போன்று சுருக்கமான முறையில் கணக்குப் போடுவது மிகவும் கடினம். இந்தக் கணக்கை உங்களுக்குப் போட்டுத் தந்தது யார்?  அவர் எந்த கல்லூரியில் வேலை பார்க்கிறார்? என வியப்போடு கேட்டார்.

     அய்யா, இந்தக் கணக்கைப் போட்டுக் கொடுத்தவன் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன். அவன் வீட்டில்தான் நாங்கள் குடியிருக்கிறோம் என்று அவ்விருவரும் கூறினர்.

     நீங்கள் சொல்வதை என்னால் நம்பவே முடியவில்லை. நீங்கள் சொல்வது உண்மையானால், இது இறைவன் தந்த வரமாகத்தான் இருக்க வேண்டும். அவரை நான் பார்க்க வேண்டும் என்று சொல்லுங்கள். பெற்றோர்களிடம் அவரை நல்லபடியாகக் கவனித்துக் கொள்ளச் சொல்லுங்கள் என்று பேராசிரியர் வியந்து கூறினார்.

கார் புத்தகம்

கார் புத்தகம்
     இராமானுஜன் தன் பள்ளிப் படிப்பை முடிப்பதற்குச் சில காலத்திற்கு முன், 1903 ஆம் ஆண்டு வாக்கில், வீட்டில் தங்கியிருந்த மாணவர்கள் மூலமாகக் கணக்குப் புத்தகம் ஒன்றினைப் பெற்றான். நூலின் பெயர் A Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics என்பதாகும். இதை எழுதியவர் ஜார்ஜ் ஷுபிரிட்ஜ் கார் (George Shoobridge Carr) என்பவராவார்.

     ஜார்ஜ் கார் ஒரு கணித ஆசிரியர். இலண்டனில் மாணவர்களுக்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெளியே, தனிப் பயிற்சி அளிக்கும் எண்ணற்ற ஆசிரியர்களுள் ஒருவர். தன்னிடம் தனிப் பயிற்சி பெறும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தயாரித்து தொகுத்தளிக்கப்பட்ட, விடைக் குறிப்புகளை உள்ளடக்கியதே இப் புத்தகமாகும். இந்நூலின் முதற்பகுதியை 1880 மே மாதத்திலும், இரண்டாம் பகுதியை 1886 லும் கார் வெளியிட்டார்.

     இந்நூலில் ஐயாயிரத்திற்ம் மேற்பட்ட சூத்திரங்கள், தேற்றங்கள், வடிவ கணித வரைபடங்கள் மற்றும் கணிதச் செய்திகள் இடம் பெற்றிருந்தன. கணித ஆசிரியர் கார் இதுவரை இல்லாத, கண்டுபிடிக்கப் படாத புதிய தேற்றங்கள் எதனையும் இந்நூலில் சேர்க்கவில்லை. மாறாக ஏற்கனவே நிரூபிக்கப் பட்டத் தேற்றங்களை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், படிப்படியாக விளக்கியிருந்தார்.

     கணிதத்தில் நாட்டமுடைய இராமானுஜனுக்கு, இப்புத்தகம் ஒரு புதிய பரிமாணத்தைப் புரிய வைத்தது. இப்புத்தகத்தில் உள்ள சமன்பாடுகள், சூத்திரங்கள் இராமானுஜனுக்குப் புதியவை அல்ல.ஆனால் அவற்றைப் பெறக் கையாளப்பட்ட வழிமுறைகள் இராமானுஜனின் மனதில் புதிய ஒளியை உண்டாக்கின. எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகளுக்கான பாதையை இப்புத்தகம் காட்டியது.

      எதிர்காலத்தில் மற்ற பாடங்களில் கவனம் செலுத்தாமல் கணிதம், கணிதம் என்று கணிதத்தையே தனது உலகாக, தனது மூச்சாக சுவாசிக்க இராமானுஜனுக்குக் கற்றுக் கொடுத்தது இப்புத்தகமேயாகும்.

தென்னகத்தின் கேம்பிரிட்ஜ்

     1904 ஆம் ஆண்டு, கார் புத்தகத்தைப் படித்த சில மாதங்களில், டவுன் உயர் நிலைப் பள்ளியில் பெற்ற மதிப்பெண்களால் கிடைத்த கல்வி உதவித் தொகையின் உதவியுடன், கும்பகோணம் அரசு கல்லூரியில் F.A., (Fine Arts)  படிப்பில் சேர்ந்தார் இராமானுஜன்.

     கும்பகோணம் அரசு கல்லூரியானது, கற்றறிந்தவர்களால் தென்னகத்தின் கேம்ப்பிரிட்ஜ் எனப் போற்றப்பெறும் கல்லூரியாகும். 1854 ஆம் ஆண்டு தஞ்சை ராணியார் வழங்கிய நிலத்தைக் கொண்டு, அதிலிருந்த கட்டிடங்களில் தொடங்கப் பெற்றதாகும். 1871 ஆம் ஆண்டில் கட்டிடங்கள் சீர் செய்யப்பெற்று விரிவுபடுத்தப்பட்டன. காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இக்கல்லூரி விடுதி வசதியுடன் கூடியதாகும். கல்லூரியையும், காவிரி ஆற்றின் தென் கரையையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நடைப் பாலமானது, பின்னாளில் 1944 இல் கட்டப் பட்டதாகும். இராமானுஜன் காலத்தில் தோணியில் பயணம் செய்தே கல்லூரியை அடையவேண்டும். மார்ச் ஏப்ரல் மாதங்களில் காவிரியில் நீரின்றி மணலானது நடப்பவர்களின் காலைப் பொசுக்கும்.

கும்பகோணம் அரசு கல்லூரி
     கார் புத்தகத்தைப் படித்த நாளில் இருந்தே, இராமானுஜன் மனமானது கணிதத்தை மட்டுமே நேசிக்கத் தொடங்கியது. மற்ற பாடங்கள் இருப்பதையே மறக்கத் தொடங்கினார். கல்லூரி விதி முறைகளால் இராமானுஜனின் உடலைத்தான் வகுப்பறையில் அமர்த்த முடிந்தது, ஆனால் மனமோ கணிதச் சிந்தனையில் சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது. கணிதத்தையே சிந்தித்து, சுவாசித்து, தன்னையுமறியாமல் இராமானுஜன் கணிதத்திற்கே அடிமையாகிப் போனார். கல்லூரியில் இராமானுஜனின் வகுப்புத் தோழனாகிய என்.ஹரிராவ் கூறுகையில், அவனுக்கு வகுப்பில் நடக்கும் நிகழ்ச்சிகள் எதிலும் ஆர்வமில்லாமல் போனது. ஆசிரியர் வகுப்பில் ரோமன் வரலாற்றை நடத்திக் கொண்டிருக்கையில், இராமானுஜன் மட்டும் தலைகுனிந்து கணிதச் சமன்பாடுகளில் மூழ்கிப் போவான். மேலும் என்னுடன் பேசும்போது கூட கணிதத்தையேப் பேசுவான். எத்திசையில் கூட்டினாலும், ஒரே விடையைத் தருகின்ற வகையில் மாயச் சதுரங்களை அமைப்பது பற்றியும், இயற்கணிதம், வகை நுண்கணிதம், தொகை நுண் கணிதம், பகா எண்கள், முடிவிலாத் தொடர்கள் பற்றியே பேசுவான் எனக் குறிப்பிடுகிறார்.

பி.வி.சேசு அய்யர்
     கல்லூரி நூலகத்தில் உள்ள மற்ற மொழி கணித நூல்களையும் எடுத்துப் படிக்கத் தொடங்கினார். அரசு கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றிய பி.வி.சேசு அய்யர் பல நேரங்களில் இராமானுஜனை அவர் விருப்பப்படி செயல்பட அனுமதித்தார். மேலும் இலண்டன் கணிதவியல் கழக வெளியீடுகளை, இராமானுஜனிடம் கொடுத்து, அதில் உள்ள கேள்விகளுக்கு விடையளிக்குமாறு உற்சாகப்படுத்துவார். ஒரு நாள் முடிவிலாத்தொடர் குறித்த தனது கணக்குகளைப் பேராசிரியர் பி.வி.சேசு அய்யரிடம் காண்பித்தபோது, அற்புதம் எனப் பாராட்டினார். ஆனால் இதுபோன்ற கவனிப்பும், பாராட்டும் கிடைப்பது அரிதான செயலாகும். இராமானுஜனிடம் தங்களது கணித நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்ன பேராசிரியர்களே, அந்தப் புத்தகத்தால் வகுப்பில் கவனம் செலுத்தாது, அப்புத்தகத்தையே ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையினைக் கண்டு, புத்தகங்களைத் திரும்பப் பெற்றதும்  உண்டு.

     கணக்கில் மட்டுமே கவனம் செலுத்தியதால் தத்துவம், ஆங்கிலம், கிரேக்க மற்றும் ரோமானிய வரலாற்றில் தோல்வியே அடைந்தார். இதன் விளைவாக இராமானுஜனுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டது.

     கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டதால், பருவமொன்றுக்கு ரூ.32. கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை. இராமானுஜனின் தந்தை சீனிவாசனின் ஒன்றரை மாத ஊதியத்திற்கு இத்தொகை சமமாகும்.

     இராமானுஜனின் தாய் கோமளத்தம்மாள்  கல்லூரிக்குச் சென்று முதல்வரைச் சந்தித்து, தனது மகனுக்கு கல்வி உதவித் தொகையினை வழங்குமாறு வேண்டினார். முதல்வர் நாகரிகமாக மறுத்தார். ஆங்கிலத்தில் இராமானுஜன் தோல்வி அடைந்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். ஆனால் தாயோ எனது மகன் கணிதத்தில் பெற்றுள்ள மதிப்பெண்களைப் பாருங்கள், மிக அதிக மதிப்பெண் பெற்றுள்ளான்.அதற்காகவாவது கல்வி உதவித தொகை தாருங்கள் என்று மன்றாடினாளர்.  சில பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க விதிகளில் வழியில்லை என்று கூறி திட்டவட்டமாக மறுத்தார் முதல்வர்.

     கல்வி உதவித் தொகை பெற்றால் மட்டுமே, படிப்பைத் தொடரக்கூடிய இக்கட்டான நிலையில் இருந்தார் இராமானுஜன். எப்படியோ சில மாதங்கள் கல்லூரியில் தொடர்ந்தார். குடும்பத்தின் நிதிச் சுமையை நன்கு அறிந்திருந்த இராமானுஜன், தனக்குக் கல்வி உதவித் தொகை மறுக்கப் பட்ட செய்தியினை அனைவரும் அறிவார்கள் என்பதையும் அறிவார்.

     மற்றப் பாடங்களில் கவனம் செலுத்தாததால்தான் இந்த இழப்பு என்று தெரிந்தும், அவரால் கணிதத்தைத் தவிர வேறு பாடத்தை மனதால் கூட நினைத்துப் பார்க்க இயலவில்லை. மன அழுத்தத்தால் மிகவும் பாதிக்கப் பட்ட இராமானுஜன், மாற்று வழி ஏதுமின்றி 1905 இல் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடினார்.
இராமானுஜனைக் காணவில்லை என இந்து நாளிதழில்  2.9.1905  ல்  வெளிவந்த விளம்பரம்

,,,,,வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் அடுத்த சனிக்கிழமைச் சந்திப்போமா?
-------


கரந்தை ஜெயக்குமார் வலைப் பூக்கள்

                                   
                              அன்பர்களே,

      வணக்கம். வலைப் பூவில் நான் எழுதிய கட்டுரைகளுள் சிலவற்றைத் தொகுத்து, கரந்தை ஜெயக்குமார் வலைப் பூக்கள் என்னும் பெயரில் நூலொன்றினை வெளியிட்டுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்  கொள்கின்றேன்.

      தாங்கள் எனது வலைப் பூவிற்குத் தொடர்ந்து காட்டிவரும் ஆதரவும் உற்சாகமுமே, இந்நூல் வெளிவர மூல காரணம் என்பதைப் பெருமையுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்.

தொடர்ந்து தங்களின் நல்லாதரவினை வேண்டுகின்றேன்..நன்றி


    

     

13 அக்டோபர் 2012

கணிதமேதை சீனிவாச இராமானுஜன்


வலைப் பூ தோழர்களுக்கு,

     வணக்கம். அன்பர்களே நான் ஒரு கணித ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். நான் எனது M.Phil., ஆய்விற்கு எடுத்துக் கொண்டத் தலைப்பு கணிதமேதை சீனிவாச இராமானுஜன் என்பதாகும்.

     கணித மேதை சீனிவாச இராமானுஜனின் 125 வது பிற்ந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் கணித ஆண்டாக அறிவிக்கப் பட்ட ஆண்டு இவ்வாண்டாகும்.

     கணித ஆண்டாகிய இவ்வாண்டில், கணித மேதையின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி சிறிது தூரம் நடக்கலாமா தோழர்களே. M.Phil., ஆய்வில் நான் கண்ட, உணர்ந்த சீனிவாச இராமானுஜனைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

     இராமானுஜன் கண்டுபிடித்த கணக்குகளை,  புதிய தேற்றங்களைப் பற்றி அலசுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக, கணித மேதை சீனிவாச இராமானுஜனை, எலும்பும், தசையும், இரத்தமும், உணர்வுக் குவியல்களை உள்ளடக்கிய, நம்மைப் போன்ற சக மனிதராக உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகின்றேன்.

     உண்ண உணவிற்கே வழியின்றி, வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த, இராமானுஜனின் உண்மை உருவத்தை, உங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகின்றேன்.

      தோழர்களே. இதோ கால இயந்திரம் நமக்காகக் காத்திருக்கின்றது. வாருங்கள், வந்து இருக்கைகளில் அமருங்கள். சற்று பின்னோக்கிப் பயணிப்போமா?.

      2012, 2010,...........2000.......1947,.......1900,.....1887. இதோ கும்பகோணம். உச்சிப் பிள்ளையார் கோவிலும், சாரங்கபாணிக் கோவிலும் தெரிகின்றதல்லவா. வாருங்கள் கால இயந்திரத்திலிருந்து, இறங்கி, சாரங்கபாணிக் கோவிலுக்கு அருகிலுள்ள கிழக்கு சந்நிதி தெருவிற்குச் செல்வோம். இதோ இந்த ஓட்டு வீடுதான், இராமானுஜனின் வீடு. வாருங்கள் உள்ளே செல்வோம்.

அத்தியாயம் 1

     தென்னிந்தியாவின் புனிதத் தலங்களுள் மிக முக்கியமான தலம் கும்பகோணம் ஆகும். இது தென்னகத்தின் கங்கை என்று போற்றப்படும் காவிரி ஆற்றினையும், அரசலாற்றினையும், புனித மகாமகக் குளத்தினையும் உடைய கோவில் நகரமாகும்.

இராமானுஜனின் வீட்டிற்கு முன் நான்
     கும்பகோணம் சாரங்கபாணிக் கோவிலுக்கு அருகில், கிழக்கு சந்நிதித் தெருவில் உள்ள 17 ஆம் எண் வீடு ஒரு சாதாரண ஓட்டுக் கூரை வீடு. குடும்பத் தலைவர் சீனிவாச அய்யங்கார். இவரது சொந்த ஊர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள, திருச்சேறை என்று இன்று அழைக்கப்படும் திருச்சிறை ஆகும். இவரது மனைவி கோமளத்தம்மாள். இவரது சொந்த ஊர் ஈரோடு.

கோமளத்தம்மாள்
     திருமணமாகி நீண்ட காலமாகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லையே என்ற கவலை. இந்நிலையில் கோமளத்தம்மாள் கருவுற்றார். முதல் பிரசவம் என்பதால் ஈரோடு, தெப்பக்குளம் தெருவில் இருக்கும் தனது தந்தையார் வீட்டுக்குச் சென்றார். இவரது தந்தையின் பெயர் நாராயண அய்யங்கார். இவர் ஈரோடு முன்சீப் நீதிமன்றத்தில் அமீனா வேலை பார்ப்பவர்.

     ஈரோடு சென்ற கோமளத்தம்மாளுக்கு, 1887 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 22 ஆம் நாள் வியாழக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது. இவர்கள் வைணவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், குழந்தையானது வியாழனன்று பிறந்ததாலும் இராமானுஜன் என்று பெயரிட்டனர். இவரது தாயார் இவரைச் சின்னச்சாமி என்றே அழைத்தார்.

குடும்பச் சூழல்

     இராமானுஜனின் தந்தை சீனிவாச அய்யங்கார், கும்பகோணத்தில் ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பாரத்து வந்தார். இவர் பட்டுப் புடவைகளைத் தரம் பார்த்து, மதிப்பிடுவதில் வல்லவர். இவரது மாதச் சம்பளம் ரூ.20.

     இராமானுஜனின் தாய் கோமளத்தம்மாள் பஜனைப் பாடல்களையும் மற்றும் பக்திப் பாடல்களையும், அருகிலுள்ள கோயில்களில் மற்றவர்களுடன் சேர்ந்து குழுவாகப் பாடுவதன் மூலம் மாதமொன்றுக்கு ரூ.5 அல்லது ரூ.10 சம்பாதித்துக் குடும்ப வறுமையைச் சமாளித்தார்.

     1889 ஆம் வருடம் டிசம்பர் மாதம் தொடர்ந்து நான்கு, ஐந்து நாட்களுக்குப் பஜனை பாடச் செல்லாததால், குழுத் தலைவியே நேரில் கோமளத்தம்மாள் வீட்டிற்கு வந்தார். வீட்டில் இரண்டு வயது நிரம்பிய இராமானுஜன் வேப்பிலைப் படுக்கையில் கிடத்தப் பட்டிருந்தான். அவன் உடல் முழுவதும் பெரியம்மையினால் பாதிக்கப் பட்டிருந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அவ்வாண்டில் மட்டும் சுமார் நான்காயிரம் பேர் பேரியம்மைக்குப் பலியாகியிருந்தனர். பெரியம்மையிலிருந்து இராமானுஜன் தப்பிவிட்டாலும், முகத்தில் ஏற்பட்ட வடுக்கள் இறுதிவரை மறையவில்லை.

     இராமானுஜனுக்கு ஒன்றரை வயது இருக்கும் பொழுது, கோமளத்தம்மாளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சடகோபன் எனப் பெயரிடப்பட்ட அக்குழந்தை மூன்றே மாதத்தில் இறந்து விட்டது. இராமானுஜனுக்கு நான்கு வயதிருக்கும் பொழுது கோமளத்தம்மாள் 1891 இல் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஆனால் அக்குழந்தையும் மூன்றே மாதத்தில் இறந்து விட்டது. இராமானுஜனுக்கு ஆறரை வயதிருக்கும் பொழுது, கோமளத்தம்மாள் ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். சேசன் எனப் பெயரிடப்பெற்ற இக் குழந்தையும் ஒரு வருடம் முடிவதற்குள் இறந்து விட்டது.

     இராமானுஜனுக்கு பத்து வயதிருக்கும் பொழுது, 1898 இல் கோமளத்தம்மாள் லட்சுமி நரசிம்மன் என்ற மகனையும், இராமானுஜனுக்கு பதினேழு வயதிருக்கும் பொழுது திருநாராயணன் என்றொரு மகனையும் பெற்றெடுத்தாள்.

     மூன்று குழந்தைகளைப் பறிகொடுக்க நேர்ந்ததால் சிறு வயதில் இராமானுஜனை, வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்காமலே வளர்த்தனர்.

     இராமானுஜன் மூன்று வயது வரை பேசவே இல்லை. ஊமையோ எனப் பெற்றோர் கவலையடைந்தனர். கோமளத்தம்மாள் தனது மகனை அழைத்துக் கொண்டு, அப்பொழுது தனது தகப்பனார் வசித்துக் கொண்டிருந்த காஞ்சிபுரத்திற்குச் சென்றார். அங்கு அவனது தாத்தா, தரையில் பரப்பிய அரிசியில் இராமனுஜனின் கைவிரலைப் பிடித்து எழுத்துப் பயிற்சி ஆரம்பித்து, எழுத்துக்களை எழுதக் கற்றுக் கொடுத்ததோடு, சுலோகங்களையும் கற்றுக் கொடுத்தார். சிறிது காலத்தில் இராமானுஜன் பேசவும், வேத மந்திரங்களை உச்சரிக்கவும் தொடங்கினான்.

நாமக்கல் நாமகிரித் தாயார்

     திருச்சியிலிருந்து சேலம் செல்லும் வழியில் அமைந்திருக்கும் ஊர் நாமக்கல். அவ்வூரின் மையப் பகுதியில் அமைந்திருப்பது நாமகிரி என்னும் மலையாகும். இம்மலை முழுவதும் வெள்ளைக் கற்களால் ஆனது. சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவும், 200 அடி உயரமும் உடையது. இதன் பாறைகள் செங்குத்தாக அமைந்திருக்கும் விதம், வைணவர்கள் தங்கள் நெற்றியில் இடும் நாமத்தைப் போன்று இருப்பதால், இம்மலைக்கு நாமக்கல் என்றும், பின்னர் ஊரின் பெயரும் நாமக்கல் என்றும் அழைக்கப்படலாயிற்று. இம்மலையின் அடிவாரத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயிலில், நரசிம்மரும் உடன் நாமகிரித் தாயாரும் அருள் பாலித்து வருகின்றனர்.

     கோமளத்தம்மாளின் பூர்வீகம், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிற்றூராகும். கோமளத்தம்மாளும் அவரது பாட்டனார்களும், நாமக்கல் நாமகிரித் தாயாரையே தங்களது குல தெய்வமாக வழிபட்டு வந்தனர். கோமளத்தம்மாளுக்கு திருமணமாகிப் பல வருடங்கள் ஆகியும், குழந்தை பிறக்காத போது, அவர்கள் வேண்டிக் கொண்ட தெய்வமும், இராமானுஜன் பிறந்து மூன்று வருடங்களாகியும் வாய் திறந்து பேசாதது கண்டு, அவர்கள் வேண்டிக் கொண்ட தெய்வமும் நாமகிரித் தாயார்தான்.

     கோமளத்தம்மாளின் உதடுகள் நாள்தோறும் உச்சரிக்கும் பெயர் நாமகிரித் தாயார்தான். குழந்தைப் பருவம் முதல் தாயாரின் அரவனைப்பில் மட்டுமே வளர்ந்த இராமானுஜனுக்கு இயற்கையாகவே நாமகிரித் தாயாரிடம் பக்தியேற்பட்டது.

தொடக்கக் கல்வி

     இராமானுஜன் 1892 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாள் விஜயதசமியன்று, காஞ்சிபுரத்தில் உள்ள திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். அதன் ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். மாணவர்கள் அனைவரும், எப்பொழுதும் கைகட்டி,  வாய்பொத்தி பணிவுடன் அமர்ந்திருக்க வேண்டும். இராமானுஜனுக்கு ஆசிரியரைப் பிடிக்கவில்லை, அவரின் கட்டுப்பாடுகளும் பிடிக்கவில்லை. எனவே அப்பள்ளியில் உட்கார மனமின்றிப் பாதியிலேயே எழுந்து வீட்டிற்கு வந்துவிடுவான்.  இரண்டு வருடங்களில், காஞ்சிபுரத்தில் உள்ள பல பள்ளிகளில் மாறி மாறிப் படித்தான்.

     ஒரு கடன் விசயத்தில் நாராயண அய்யங்காருக்குத் தன் முதலாளியின் மீது வருத்தம் எற்பட்டது. எனவே நாராயண அய்யங்கார் தனது பணியினைத் துறந்து, சென்னைக்குச் சென்று விட்டார். கோமளத்தம்மாளும் இராமானுஜனும் கும்பகோணம் திரும்பினர்.

     இராமானுஜன் கும்பகோணத்தில் காங்கேயன் பள்ளியில் சேர்க்கப்பட்டான். பின்னர் சிறிது காலம் சென்னையில் படித்தான். 1895 இல் மீண்டும் கும்பகோணத்தில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தான்.

     அக்கால வழக்கப்படி இராமானுஜன் குடுமி  வைத்திருந்தான். நன்றாக தலைவாரிப் பின்னல் போட்டிருப்பான். பூக்கள் கிடைக்கும் பொழுது அவையும் குடுமியில் வைக்கப்படும். நெற்றியில் பளிச்சென்று தென்கலை திருமண் இட்டிருப்பான்.

இராமானுஜனின் சன்னலில் நான்
     இராமானுஜன் கூச்ச சுபாவம் உடையவன். பள்ளியில் எந்த மாணவனிடமும் அதிகமாகப் பேச மாட்டான். ஆசிரியர் பாடம் சொல்லித் தரும்பொழுது நன்றாகக் கவனிப்பான். மாலையில் பள்ளி விட்டதும், நேராக தன் வீட்டிற்கு வந்து விடுவான். வீட்டின் வெளிப்புறத் திண்ணையை ஒட்டி அமைந்திருக்கும் சன்னலின் உட்புறம் உள்ள மேடையில் ஏறி உட்கார்ந்து கொள்வான. வீட்டை விட்டு விளையாடக் கூட வெளியில் செல்ல மாட்டான்.அந்த சன்னல் மேடையில் அமர்ந்துதான் அன்றாடப் பாடங்களைப் படிப்பான். வீட்டில் அவனது உலகமே இந்த சன்னல் மேடைதான்.

     காங்கேயன் தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கையில், சாரங்கபாணி என்பவன் இராமானுஜனின் மிக நெருங்கிய நண்பனாக இருந்தான். வகுப்பிலேயே சிறந்த மாணவர்களின் இராமானுஜன் ஒருவன், மற்றொருவன் சாரங்கபாணி.

மாவட்ட முதன்மை-சான்றிதழ்
     நவம்பர் 1897 இல் நடைபெற்ற ஆரம்பப் பள்ளித் தேர்வில், மாவட்டத்திலேயே முதல் மாணவனாக இராமானுஜன் வெற்றி பெற்றான். ஆனால் கணிதத்தில் 45க்கு 42 மதிப்பெண்கள் பெற்றிருந்தான். ஆனால் சாரங்கபாணியோ 43 மதிப்பெண்கள் பெற்றிருந்தான். இராமானுஜன் கணக்குப் பாடத்தில் மட்டும், சாரங்கபாணியால் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப் பட்டான். தன்னைவிட சாரங்கபாணி ஒரு மதிப்பெண் அதிகம் பெற்று விட்டான் என்பதை இராமானுஜனால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இதனை இராமானுஜன் பெரிய அவமானமாக நினைத்தான். இதனால் சாரங்கபாணியிடம் கோபமடைந்து, அவனுடன் பேசுவதையே நிறுத்தி விட்டான். மதிப்பெண்களைப் பெற்றவுடன் அழுதுகொண்டே வீட்டிற்கு ஓடினான்.

     பள்ளியிலிருந்து தனது மகன் அழுது கொண்டே வீட்டிற்கு வந்ததைக் கண்ட கோமளத்தம்மாள் திகைத்துப் போய் காரணத்தை விசாரித்தாள். அதே நேரத்தில் சாரங்கபாணியும், இராமானுஜனின் வீட்டிற்கு வந்தான். நான் கணக்குப் பாடத்தில் மட்டும், அவனைவிட ஒரு மதிப்பெண் அதிகம் பெற்று விட்டேன். ஆனால் மற்ற பாடங்களில் அவன்தான் அதிக மதிப்பெண்கள் பெற்று, மாவட்டத்திலேயே முதலாவதாக வந்துள்ளான். இதற்குப் போய் அவமானப்படுகிறான்.  என்னுடன் பேசாமல் வந்துவிட்டான் என்று காரணம் கூறினான்.

     கோமளத்தம்மாள் தன் மகனை நோக்கி, அய்யா சின்னசாமி, நீ எதிலும் யாருக்கும் சிறியவன் இல்லை. நீயே முதல்தர மாணவன். உன்னை வெல்ல இவ்வுலகில் யாரும் இல்லை. அடுத்த முறை கணக்கில் நீதான் முதல் மதிப்பெண் பெறுவாய். கவலைப் படாதே. சாரங்கபாணி உன் நண்பன் அல்லவா? இனிமேல் எதற்காகவும் அவனுடன் சண்டையிட்டுப் பேசாமல் இருக்கக் கூடாது என்று கூறி அவனைத் தேற்றினாள்.

     தன் தாயின் செர்ல்லை வேதவாக்காகவே எடுத்துக் கொண்ட இராமானுஜன், தான்  இனி முழுக் கவனம் செலுத்த வேண்டிய பாடம் கணிதமே என்று முடிவு செய்தான். கணிதத்தில் மட்டும் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கினான். இச்சம்பவமே பின்னாளில் இராமானுஜன் கணக்கையே தவமான, வேதமாக, வெறியாக நேசிக்க முதல் காரணமாக அமைந்து விட்டது.

     இராமானுஜன் தொடக்கப் பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து, மாவட்டத்திலேயே முதலாவதாக வந்த பெருமையுடன், தனது வீட்டிற்கு அருகிலுள்ள டவுன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தான்.

     ஒரு நாள் ஆசிரியர் கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தான். ஒரு எண்ணை அதே எண்ணால் வகுத்தால், என்ன விடை கிடைக்கும் என்பது பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். எந்தவொரு எண்ணையும் அதே எண்ணால் வகுத்தால் ஒன்று என்ற எண்ணே விடையாகக் கிடைக்கும் எனக் கூறினார். இராமானுஜன் உடனே எழுந்து பூஜ்ஜியத்தைப் பூஜ்ஜியத்தால் வகுத்தால் ஈவு ஒன்று வருமா? என்று கேள்வி கேட்டு ஆசிரியரையே அதிர வைத்தான்.

     சுமார் இருபது வரிகளில் வழிமுறையோடு செய்யவேண்டிய பெரிய கணக்குகளைக் கூட, இரண்டே வரிகளில் போட்டு சரியான விடையைக் கூறும் திறமை இராமானுஜனிடம் இருந்தது.

     இராமானுஜனின் குடும்பம் போதிய வருமானம் இன்றி வறுமையில் வாடிக் கொண்டிருந்தது. பல நாள் இரவில் வடிக்கும் சோற்றில் சிறிய அளவினைக் குழந்தைகளுக்கு உணவாகக் கொடுத்து, மறுநாள் காலை பழைய சோறாகப் போடுவது வழக்கம்.

     ஒருநாள் இராமானுஜன் பள்ளிக்குச் செல்வதற்கு முன் உணவுத் தட்டுடன் சாப்பிடத் தயாரானான். ஆனால் தாய் கோமளத்தம்மாளோ, அய்யா சின்னச்சாமி, அம்மா எப்படியும் மாலைக்குள் அரிசி வாங்கி சமைத்து  வைக்கிறேன், இரவு சாப்பிடலாம், அதுவரை பொறுத்துக் கொள் என வேண்டினாள். இராமானுஜனோ மறுவார்த்தை பேசாமல், வீட்டின் ஒரு மூலையில் இருந்த பானையில் இருந்து மூன்று டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு, அம்மா நான் பள்ளிக்குச் சென்று வருகிறேன் என்று கூறிப் பள்ளிக்குச் சென்றுவிட்டான்.

     ஆனால் அன்று மாலை பள்ளியில் இருந்து இராமானுஜன் வீடு திரும்பவில்லை.

                                                             .......தொடரும். 


வணக்கம் தோழர்களே. அடுத்த சனிக் கிழமை சந்திப்போமா

    

    

       

01 அக்டோபர் 2012

முதல் குரல்


வலைப் பூ பேரன்பர்களுக்கு,

      வணக்கம். நான் கடந்த 13.9.2012 அன்று, மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையில், கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். தொலைக் காட்சிப் பார்க்கக் கூடாது, கணினி முன் அமரக் கூடாது என்று மருத்துவர்கள், ஒரு வார காலத்திற்கு தடா போட்டனர். வீடு திரும்பிய பின், என் மனைவி, இத் தடாவை மேலும் ஒரு வார காலத்திற்கு நிட்டித்து பொடா வை அமல் படுத்தினார்.

      இரண்டு வாரம் நிறைவுற்று, தடாவும், பொடாவும் சிறிது தளர்த்தப் பட்ட நிலையில், இன்றுதான் கணினி முன் அமரும் வாய்ப்புக் கிடைத்தது.

        அன்பர்களின் வலைப் பூவைக் காணாத கண்ணும் கண்ணல்ல
        அன்பர்களின் வலைப் பூவைப் பார்க்காத நாளும் நாளல்ல

        இனி நாளும் வருவேன் வலைப் பூக்களைக் காண.

                                       என்றென்றும் அன்புடன்,
                                        கரந்தை ஜெயக்குமார்

முதல் குரல்       இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். தமிழ் மொழியில் வடமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதை மெத்தப் படித்தவர்களும் பெருமையாய்க் கருதிய காலம். இதன் விளைவாய் மணிப்பிரவாள நடை என்னும், தமிழும் வடமொழியும் கலந்து பேசும் பேச்சு வழக்கு உண்டாயிற்று.

     ஆங்கிலேயர்களின் வருகையாலும், ஆட்சியாலும் ஆங்கில மொழிச் சொற்களும் தமிழில் கலந்து, தமிழ்ச் சொற்களாகவே உருமாறிப் போயின. சிறு சிறு கிராமங்களில் வசிக்கும், படிப்பறிவு அற்ற பாமரர்கள் கூட, விளக்கை லைட்டு என்றும், தண்ணீரை வாட்டர் என்றும், வானொலியை ரேடியோ என்றும், மருத்துவரை டாக்டர் என்றும் அழைக்கும் பழக்கம் உண்டாயிற்று. நாளடைவில் ஆங்கிலச் சொல் எது, தமிழ்ச் சொல் எது, என்று அறியாத வகையில் இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்தன. இதனால் தமிழ் மொழியே உருமாறி புதிய மொழியாய் மாறிவிடுமோ என்ற அச்ச நிலை ஏற்பட்டது.

     மலையாளலும், தெலுங்கும், கன்னடமும் இவ்வாறு தமிழில் இருந்து திரிந்த, பிரிந்த மொழிகள் தானே. இதனால் தானே,

  கன்னடமுங்  களிதெலுங்கும் கவின் மலையாளமுந்  துளுவும்
  உன்னுதரத்  துதித்தெழுந்தே  ஒன்று  பால  ஆயிடினும்,
  ஆரியம்போல்  உலகவழக்கு அழிந்து  ஒழிந்து  சிதையாஉன்
  சீரிளமைத்திறம்  நினைந்து  செயல் மறந்து  வாழ்த்துதுமே

என்று பாடினார் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை.

     பாலையும் நீரையும் தனித்தனியே பிரித்தெடுக்கும் வல்லமை வாய்ந்தது அன்னப் பறவை என்பர். அந்த அன்னப் பறவையைப் போல், வடமொழியிலிருந்து, தமிழ் மொழியைப் பிரித்தெடுக்கவும், பிரித்து தமிழை நன்னிலைக்கு வளர்த்து உயர்த்தவும் தோன்றிய அமைப்புதான் கரந்தைத் தமிழ்ச் சங்கம்.

          கெடல்  எங்கே  தமிழின்  நலம்
         அங்கெல்லாம்  தலையிட்டுக்
         கிளர்ச்சி செய்வீர்

என்பார் பாவேந்தர் பாரதிதாசன். ஆம் கிளர்ச்சி செய்து தமிழை மீட்டெடுக்கத் தோன்றிய அமைப்புதான் கரந்தைத் தமிழ்ச் சங்கம். கரந்தை என்றாலே மீட்டல் என்றுதானே பொருள்.

தமிழவேள் உமாமகேசுவரனார்
     1911 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அயரா முயற்சியாலும், சங்கத் தலைவர் தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களின் தளரா உழைப்பாலும், தனித் தமிழில் பேசும் கரந்தை நடை தோன்றியது.

    
 வட மொழியின் பிடியில் இருந்தும், அங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்தும், தமிழைக் காக்க, கரந்தையும் தமிழறிஞர்களும் போராடி வந்த வேளையில், ஆட்சி அதிகாரத்துடன், அரசு உத்தரவு என்னும் கேடயம் தாங்கி, அழையா விருந்தாளியாய் இந்தி உள்ள நுழைந்தது.

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்

     இந்தியாவின் பொது மொழியாக இருக்க வல்லமை வாய்ந்த மொழி இந்திதான் என்பது மகாத்மா காந்தியின் எண்ணமாகும். இந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் மகாத்மா காந்தி அவர்கள் 1918 ஆம் ஆண்டு இந்தி பிரச்சார சபையினைத் ( Dhakshin Bharat Hindi Prachar) தொடங்கினார். தமிழகத்திலும் இச்சபை கிளை விரித்து, இந்தியைப் பரப்ப முற்பட்டது.

     இந்நிலையில் 1920 ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசானது, சென்னை உள்ளாட்சிக் கழகச் சட்டத்தினை ( Madras Local Bodies Act 1920 ) இயற்றி தேர்தலை நடத்தியது. இத்தேர்தலில் நீதிக் கட்சி சென்னை மாகாணத்தின் ஆட்சியைக் கைப்பற்றியது. 1920 ஆம் ஆண்டிலிருந்து 1937 ஆம் ஆண்டுவரை நீதிக் கட்சியின் ஆட்சி நடைபெற்றது.

மகாத்மா காந்தியும் ராஜாஜியும்
     1937 ஆம் ஆண்டு ஜுலை மாதம் நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. 1937 ஆண்டு ஜுலை மாதம் 14 ஆம் நாள் இராஜாஜி என்றழைக்கப் படும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் முதல்வர் பொறுப்பேற்றார். இராஜாஜி அவர்கள் முதல்வராய்ப் பதவியேற்ற அடுத்த மாதமே, 11.8.1937 இல் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயக் கல்வி மொழியாக அறிமுகப் படுத்த எண்ணியுள்ளதாக அறிவித்தார்.

     தமிழகம் கொந்தளிக்கத் தொடங்கியது. கரந்தைத் தமிழ்ச் சங்கம் வீறு கொண்டு எழுந்தது.

முதல் இந்தி எதிர்ப்புத் தீர்மானம்

    இராஜாஜி அவர்கள் தன் எண்ணத்தை வெளிப் படுத்திய 16 ஆம் நாளே, 27.8.1937 இல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், சங்கத் தமிழ்ப் பெருமன்றத்தில், முதல் இந்தி மொழி மறுப்புக் கூட்டம் நடைபெற்றது.

     வழக்கறிஞர் எம்.எம். வெங்கடாசலம் பிள்ளை அவர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமாமகேசுவரனார் அவரகளும், கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் கரந்தைக் கவியரசு அவர்களும், கட்டாய இந்தியை எதிர்த்து உரையாற்றினர். கூட்டத்தின் முடிவில், ஏழு தீர்மானங்கள்  நிறைவேற்றப் பட்டன.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின இத் தீர்மானங்களே, கட்டாய இந்தியை எதிர்த்து நிறைவேற்றப் பட்ட முதல் தீர்மானமாகும். அவையாவன,

01.                       இளம் பிராயத்தினராயுள்ள மாணவர்கள் கற்க வேண்டியிருக்கும் தாங்கவொண்ணாத சுமையாகும் பாடத் திட்டத்தில், இந்த அயல் மொழியையும் சேர்ப்பதனால், மாணவர் சிறார்களின் உடல் நலமும், கல்வி முன்னேற்றமும் கேடுற்றுப் பாழ்படுமென்பது,

02.                        ஆங்கிலம், தாய்மொழி இவற்றிற்குரிய பயிற்சிக்கு ஒதுக்கப் பட்டிருக்கும் நேரங்களிலிருந்து காலத்தை இந்தி மொழி பறி கொள்வதால், அம்மொழிகளில் மாணவர் தேர்ச்சி குன்றி மொழி வளம் பாழ்படுமென்பது,

03.                        வடமொழி பயிலும் மாணவர்க்கு மிக்க உதவியாகவும், கல்வித் துறையில் பின்னிலையில் நிற்கும் வகுப்பினரின் கல்வி முன்னேற்றம் தடைபட்டுக் கேடுறுமெனவும் கருதுவம் என்பது,


04.                        மக்களிடையே தொடக்கக் கல்வியை பரவச் செய்தற்கு வேண்டிய அளவு பணமில்லாதிருப்பதுவும், பயனற்றதாகிய இந்தி வளர்ச்சியில், உள்ள முதலை செலவிடத் துணிவதும், இந்திமொழி ஆசிரியர்கள் மாகாணத்தின் தேவைக்கும் போதாது மிகமிகக் குறைந்திருப்பதும் காணமாட்டாது, இதனைத் தொடங்குவது மதியீனமும், பயனற்றதும் என்பது,

05.                        இந்த மாகாணத்து மக்களுக்கு எவ்வித நற்பயனும் விளைக்கமாட்டாத இந்தி மொழியைப் பரப்புவோமென ஆராயாது விரைவதும், பொதுமக்கள் தமக்கு இன்றியமையாது வேண்டுமெனப் பரிந்து கேட்கும் கல்விச் சீர்திருத்தங்களைக் கருதாது நெகிழ விட்டிருப்பதும், அரசியலார் இயற்றும் தவறென்பது,


06.                        பொதுமக்களின் மனப்பான்மையை அறிந்து கொள்ளும் பொருட்டு இதனை வெளியிடாதும், இதனால் விளையவிருக்கும் கேடுகளைக் கருதாமலும், இத்தகைய முக்கியமான கருமத்தை மிகமிகச் சடுதியில் தொடங்கத் துணிந்தது இழுக்கென்பது,

07.                        விரும்பவும், வேண்டவும் படாததொரு மொழியை, முன்னெச்சரிக்கையில்லாத மக்களின் மீது, தமது அதிகாரக் கொடுமையால் சுமத்துவோமென வன்கண்மை புரிவது, மக்களாட்சியின் தத்துவங்களையும், தாமே தற்பெருமை பேசிக் கொள்ளும் அகிம்சா தருமத்தையும் வலிந்து தாக்குமென்பது.

தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள் முன்மொழிய, டி.ஆர். மதுர முத்து மூப்பனார் அவர்கள் வழிமொழிய. ஜெ.எம். சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் துணை மொழிய, இவ்வேழு தீர்மானங்களும் மறுப்பார் இன்றி ஒரு மனதாய் நிறைவேற்றப் பட்டன.

     உமாமகேசுவரனார் தீர்மானங்களை இயற்றியதோடு நிம்மதி அடைந்தாரில்லை. சீறிக் கிளம்பினார். இந்தி மொழிக்கு ஆதரவாக. இராஜாஜி முன்வைத்தக் கருத்துக்கள் அத்துனையையும், தன் எழுத்தினாலும், பேச்சினாலும் தகர்த்தெறிந்தார்.

     இந்தி மொழிக்கு ஆதரவாக இராஜாஜி ஐந்து கருத்துக்களை முன் வைத்தார்.

01.                   இந்தியாவின் அரசியல் வளர்ச்சிக்குப் பொதுமொழி வேண்டும். இந்தி மொழி நாடெங்கும் பயிலும் பெரு வழக்கிற்று, அதுவே சிறந்தது.

02.                   மொழி வேற்றுமையால் மனவேற்றுமை விளையும், மொழி ஒன்றுபட்டால் மக்களின் உள்ளமும் ஒன்றுபடும்


03.                   ஆங்கில ஆட்சியின் தொடர்பு முழுதும் விடுபட்டு, இந்திய நாடு தன்னரசு கொள்ளும் நாளில், இந்தி மொழியே அரசியல் மொழியாகத் திகழும். அதுகாலை தென்னாட்டினர் ஏக்கற்று நிற்காது முதன்மையிடம் பெறுதற் பொருட்டு இந்தி மொழியில் புலமையும் பயிற்சியும் பெற வேண்டும்.

04.                   இந்தி மொழியில் தேர்ச்சியடைந்தவர் அரசியல் துறைகளில் பதவியும் ஊதியமும் பெறலாம். இம்மொழிப் பயிற்சி இல்லாதவர் அவற்றைப் பெறலாகாது.


05.                   இந்தி மொழியால் தமிழ் மொழி வளம் பெறுமேயன்றிப் பாழ்பட மாட்டாது.


அஞ்சாமை  ஈகை  அறிவூக்கம்  இந்நான்கும்
எஞ்சாமை  வேந்தர்க்கு  இயல்வு

என்பார் திருவள்ளுவர். அஞ்சுதல் என்பதையே அறியாத உமாமகேசுவரனார், முதல் மந்திரியையும், அமைச்சர்களையும் நோக்கி சொற்கனைகளை வீசினார்.

     மக்களின் விருப்பம் யாதாயினும் பள்ளிகள்தோறும் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்குவது திண்ணம். அதனை எதிர்ப்பவர்கள் அறிவிலிகள் என முதல் மந்திரியார் கூறுகின்றனர். மற்றுமுள்ள ஒன்பது மந்திரிகளும், பத்து அமைச்சர்களும். இவ்வரசியல் கட்சியினராகிய சட்டசபை உறுப்பினர்களும் தனது உளம் பற்றிய கருத்தை வெளியிடுதற்கு அஞ்சி, தத்தம் பதவிகளைக் காத்துக் கொள்ளுவதே கருமனெம நினைத்துத் தலைவரைப் பின்பற்றியே பேசுகின்றனர்.

     மக்களின் ஆணையே தமக்குத் துணையாயிருப்பதெனவும் அன்னார் குறிவழி நின்று தொண்டு புரிதலே தமது கருமம்  எனவும் பறைசாற்றி வருகின்ற மந்திரி வகையினர், மக்கள் வேண்டாததொன்றை வலிந்து செலுத்துவோமென்பது நீதி முறையா? மக்கள் வேண்டாததும், விரும்பாததுமாகிய இந்தியை மாணவர்கள் கற்குமாறு வலியப் புகுத்துவோமென்பது கொடுங்கோன்மையன்றோ?

     அரசியல் தலைமையிலிருக்கும் ஒரு சிலர் விரும்பும் இத் தீய செயல் நிறைவேறுவதற்கு, பிறர் கருவிகளாய் இருப்பது  இழிந்த செயலாகும். தமிழ் நாட்டின் உரிமைகளைப் பறி கொண்டு, பதவிகளில் அமர்ந்திருக்கும் தலைவர்கள், உடுக்கை இந்தவன் கை போல வந்து, இடக்கண் களைய முற்பட வேண்டும். தமிழ் மக்கள் ஊமர்களாய், செவிடர்களாய் இருந்தொழியாது, அடிமை வாழ்வை உதறி எறிந்து தமிழ்ப் போரில் முனைந்து நின்று வாகை சூட வேண்டும்

என்று வீர முழக்கமிட்ட உமாமகேசுவரனார், இராஜாஜியின் கருத்துக்களுக்கு எதிராக, தன் வாதங்களைப் பின்வருமாறு, முன்வைத்து முழங்கினார்.

01.         இந்திய நாடு இந்நிலைக்கு வருதற்கு இந்தி மொழி சிறிதும் துணை செய்ததில்லை. நாட்டில் வழங்கி வரும் பன் மொழிகளும் துணை செய்து மக்கட்கு அரசியல் உணர்ச்சியை அளித்தன. காந்தியடிகள் போன்ற தலைவர்கள் தென்னாட்டிற்கு வந்தகாலை, நாட்டு மொழி அறியாது இடர் பட்டாரில்லை. அவரது கருத்துக்களை அறியுமாறில்லாது தென்னாட்டினர் தடுமாறினதுமில்லை. இந்தி மொழி இந்திய நாடெங்கும் பெரு வழங்கில் உள்ளது எனுங் கூற்றும் ஒப்பத் தக்கதன்று. இம்மொழி தென்னாட்டில் வழக்கில் இல்லாதது. வட நாட்டிலும், சிற்சில பகுதிகளில் மட்டும் பல்வேறு  உருவங்களில் ஒன்று பேசுவோர், மற்றொன்றை அறிய மாட்டாது வழக்கில் இருப்பது. பெரு வழக்கில் இருப்பதென்பதும் பொய்க் கூற்று.

02.         சாதி பற்றியும், சமயம் பற்றியும் போராட்டங்கள் நிகழ்வது உண்மை. சாதி சமயப் பிணக்கங்களால் கொலை, பழி, பாதகங்களும் பகைமையும் ஒரு மொழி பயில்வோருள்ளேயே, நாடெங்கும் மலிந்து கிடக்கின்றன. மக்களுள் வேற்றுமை உணர்ச்சிகளை வளர்த்து, இன்னல்களை விளைவிக்கும் தீய செயல்களும், கொள்கைகளும் பலவாயிருக்க, அவற்றை அகற்றி ஒற்றுமையை வளர்க்கக் கருதாது, மொழி பற்றிய வாதங்களால் கலாம் விளையுமெனக் கதையாலெனினும் கேட்டறியாத மந்திரி, இந்தி மொழியை ஆட்சியில் கொணர்ந்து ஒற்றுமை வளர்ப்போம் என்பது மதியின்மையும் ஏமாற்றமும் ஆகும்.


03.         நாட்டு மொழிகள் யாவற்றையும் கீழ்ப்படுத்தி இந்தி மொழியானது, மொழியரசு புரியவிருக்குங்காலம் பல்லூழிகள் கடந்தும் நிகழுமோவென ஐயுற வேண்டியிருக்கின்றது.

04.         வடநாடு சென்று வேலை தேடுவோர்க்கன்றி இது பொருந்தாது. இந்திய நாட்டின் அரசியல் சட்டமானது நாட்டு மொழியும், ஆங்கிலமும் அரசியல் துறைகளில் வழங்கத் தகுவனவென்று விதித்திருக்கின்றது. அரசியல் அலுவல்கட்குரிய தகுதிகளைப் பெற்றும் வேலை கிடைக்காது அலமருவோர் வடநாட்டிலும் மிகுந்திருக்கின்றனர். வடநாட்டில் வேலை கிடைக்குமெனும் ஆசையால் தென்னாட்டினன் இந்தி மொழியைக் கற்கப் புகுவது பயனிலுழவாகும்.


05.         வடமொழிச் சார்புடையாரும், அன்னார் நன்மதிப்பை எவ்வாற்றானும் பெற்று வாழ வேண்டுமெனுங் குறிக்கோளில் அடிப் பட்டவர்களும் இக் காரணத்தை ஏதுவும் எடுத்துக் காட்டுமின்றி கூறித் திரிகின்றனர். முகமதியராட்சியில் அடிப்பட்ட வட நாட்டினரின் ஊழியத் தொடர்பால், துலுக்கு மொழிகளும், ஆரியச் சிதைவு மொழிகளும் கலந்த குளறு படை மொழியே இந்தி எனப்படுவது. சிறந்த நூல் வழக்கோ, இலக்கியமோ இல்லாதது. கலைச் செல்வத்தைக் கண்டறியாதது. இதுபோது வடநாட்டினரிற் சிலர் அரசியற் குழப்பமாகிய பெரு வள்ளத்தால் ஏற்றப்பட்டு, தென்னாட்டை அடிமை கொண்டதால், தமது கொற்றம்பிற்றை நாளில் பேசப்படவேண்டுமெனும் சிறு வேட்கையால், தமது மொழியை நாடெங்கும் பரப்பவும், பேணவும் கருதுகின்றனர். தென்னாட்டுத் தலைவர்களோ, வடநாட்டுத் தலைவர்களின், நன் மதிப்பைப் பெறுவதாலன்றி, தமது வாழ்வு உயராதென நினைந்து, அன்னார் அடியிணையைத் தந்தலைக் கணியாக்கி, நீர் வழிச் செல்லும்  புணைபோலச் சென்று, வட நாட்டினரின் விருப்பத்தை நிறைவேற்றத் துணிந்து விட்டனர். இக் கொள்கையினர் இந்தியை வளர்ப்பதால் தமிழ் மொழி வளரும் என நாடெங்கும் கூறி வருவது வெற்றுரை. கேழ்வரகில நெய் வடிகிறது என்ற கதைகளை இப்பொய்யுரை நினைவிற்குக் கொணர்கின்றது.

சென்னை மாகாணத் தமிழர் மாநாடு

பெரியார்
     26.12.1937 இல் திருச்சியில் நடைபெற்ற சென்னை மாகாண மூன்றாவது தமிழர் மாநாடானது, இந்தி எதிர்ப்பு மாநாடாகவே நடைபெற்றது. இம்மாநாட்டுப் பணிகளை முன்னின்று செய்து, மாநாட்டு வரவேற்புரை நிகழ்த்தியவர் உமாமகேசுவரனார் ஆவார்.

சோமசுந்தர பாரதியார்
     இம் மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட மிக முக்கியமானத் தீர்மானம் என்ன தெரியுமா? சோமசுந்தர பாரதியார், தந்தைப் பெரியார், தமிழவேள் உமாமகேசுவரனார் ஆகிய மூவரும் ஒரு தூதுக் குழுவாகச் சென்று, மாநில ஆளுநரைச் சந்தித்து, இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கினால், தமிழ்ர்க்கு ஏற்படும் இன்னல்களை எடுத்துரைத்து முறையிட வேண்டும் என்பதாகும்.

காஞ்சித் தமிழர் மாநாடு

     27.2.193 அன்று நடைபெற்ற காஞ்சித் தமிழர் மாநாட்டில், கலந்து கொண்டு, பொது மக்கள் பணத்தைக் கொண்டு சர்க்கார் வரவு செலவு திட்டத்தில் தேவையற்ற இந்திக்குப் பணம் செலவழிக்கக் கூடாதென இம்மாநாடு எச்சரிக்கின்றது என்னும் தீர்மானத்தை உமாமகேசுவரனார் வழி மொழிந்தார்.

கட்டாய இந்திக் கல்வி சட்டம் அமல்

     தமிழ் நாட்டில் நடைபெறும் கிளர்ச்சிகளையும், போராட்டங்களையும், கண்டு கொள்ளாத இராஜாஜி அவர்கள், 21.4.1938 இல் சென்னை மாகாணத்தின் 125 பள்ளிகளில், கட்டாய இந்திக் கல்வி கற்பிப்பதற்கான அரசு ஆணையினை வெளியிட்டார்.

     வெகுண்டு எழுந்தார் உமாமகேசுவரனார். மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, இந்தி எதிர்ப்புப் பிரசாரத்தினை தீவிரப் படுத்த முடிவு செய்தார். திருச்சியிலிருந்து, சென்னை கோட்டை நோக்கி பேரணி ஒன்று புறப்பட ஏற்பாடுகள் செய்யப் பட்டன. இப்பேரணியைத் திறம்பட நடத்திச் செல்ல, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், வழக்கறிஞர் ஐ.குமார சாமி பிள்ளை அவர்களை அனுப்பி வைத்துவிட்டு, மாநிலம் தழுவிய பிரச்சாரத்திற்கு உமாமகேசுவரனார் புறப்பட்டார்.

தமிழர் பெரும் படை

ஐ.குமாரசாமி
     வழக்கறிஞர் ஐ.குமாரசாமி பிள்ளை அவர்களைத் தளபதியாகக் கொண்டு, தமிழர் பெரும் படை ஒன்று, 1.8.1938 இல் திருச்சியிலிருந்து புறப்பட்டு, இந்தி எதிர்ப்பு முழக்கங்களை முழங்கியவாறும், தமிழுணர்வை ஊட்டியவாறும், 47 நாட்கள் இடைவிடாது நடந்து, 304 ஊர்களை கடந்து 11.9.1938 இல் சென்னையைச் சென்றடைந்தது.

     இப்பெரும் படையினைத் உலகமே வியக்குமாறு, தளபதியாய் இருந்து நடத்திச் சென்ற, வழக்கறிஞர் ஐ .குமாரசாமி யார் தெரியுமா? உமாமகேசுவரனாரின் மறைவிற்குப் பின் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இரண்டாவது தலைவராய் தேர்ந்தெடுக்கப் பெற்ற அதே ஐ.குமாரசாமி பிள்ளைதான்.

தமிழவேளின் சூறாவளிச் சுற்றுப் பயணம்

கி.ஆ.பெ.விசுவநாதன்
     தமிழவேள் உமாமகேசுவரனாரும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன் அவர்களும் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்து, இந்தி எதிர்ப்பு உணர்வைக் கொழுந்து விட்டு எரியச் செய்தனர்.

     இக்குழுவினர் வட ஆற்காடு மாவட்டத்திற்குச் சென்ற பொழுது, இம் மூவரையும் எதிர்கொண்டு வரவேற்றவர், வட ஆற்காடு மாவட்டத்தில் தமிழாசிரியராய் பணியாற்றிக் கொண்டிருந்த உரைவேந்தர் ஔவை துரைசாமி பிள்ளை ஆவார்.

ஔவை துரைசாமி பிள்ளை
     கரந்தைத் தமிழ்ச் சங்கம் என் வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி, வளமான புலமைக்கும், நலமான வாழ்வுக்கும் வழிகோலியது. கரந்தையில் மூவர் எனக்கு உறுதுணையாயினர்.முதலாமவர் என்னைப் போற்றிக் புரந்த தமிழவேள் உமாமகேசுவரனார், மற்றொருவர் என் பேராசான் கரந்தைக் கவியரசு. மூன்றாமவர், என் வாழ்விலும், தாழ்விலும் பங்கேற்று, நானும் எனது நிழலும் போல, நாங்கள் உடலால் பிரிந்திருந்தாலும், உள்ளத்தால் இணைந்திருந்த சிவ.குப்புசாமி பிள்ளை என்று உரைத்து, உமாமகேசுவரனாரிடத்தில் பக்தியும், பற்றும், பாசமும் கொண்டவர் ஔவை துரைசாமி பிள்ளையாவார்.

     வட ஆற்காடு முழுமையும், மூவரையும் அழைத்துச் சென்று இந்தி எதிர்ப்பு கூட்டங்களுக்கு ஔவை ஏற்பாடு செய்தார். இதன் பலனையும் ஔவை அனுபவித்தார். அன்றைய காங்கிரஸ் அரசாங்கமானது, ஔவை அவர்களை பல ஊர்களுக்கும் மாற்றம் செய்து மகிழ்ச்சி அடைந்தது தனிக் கதை.

தாலமுத்து- நடராசன் மறைவு

     இந்தி எதிர்ப்புப் போராட்டம் பட்டி, தொட்டியெங்கும் பரவியது.இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரக் கணக்கானோர் சிறை சென்றனர். அவ்வாறு சிறை சென்றவர்களுள், தாலமுத்து மற்றும் நடராசன் ஆகிய இருவரும் கடுமையான வயிற்று நோயால் பீடிக்கப் பட்டு, சிறைக் கைதிகளாகவே உயிர் துறந்தனர். இருவருக்கும் உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்காமலும், விடுதலை செய்யாமலும், மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால்தான் விடுதலை செய்வோம் என்று சிறை அதிகரிகள் கூறியதாக ஒர் செய்தி நாடெங்கும் பரவி, போராட்ட உணர்வை தீவிரப் படுத்தியது.

இராஜாஜி ராஜினாமா

     1939 ஆம் ஆண்டு செப்டம்பரில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. இந்தியர்களைக் கேட்காமலலேயே, இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தியதைக் கண்டித்து, காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென்று, காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. இதன் அடிப்படையில் 29.10.1939 அன்று இராஜாஜி அமைச்சரவை பதவி விலகியது.

கட்டாய இந்திக்கு ஓய்வு

     காங்கிரஸ் அமைச்சரவையின் ராஜினாமாவைத் தொடர்ந்து, ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. 29.10.1939 முதல் 30.4.1946 வரை ஆளுநரின் ஆட்சி நடைபெற்றது. தந்தைப் பெரியார், தமிழவேள் உமாமகேசுவரனார் மற்றும் நாவலர் சோமசுந்தர பாரதியார் மூவரும் தூதுக் குழுவாய் சென்று, ஆளுநரைச் சந்தித்து, கட்டாய இந்தி சட்டத்தை கைவிடுமாறு வேண்டினர்.

     அன்றைய ஆளுநர் எர்ஸ்க்கின் அவர்களும், 1.2.1940 அன்று கட்டாய இந்திக் கல்வியைத் திரும்பப் பெறுவதாக அறிவித்து, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தமிழினம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

மகாத்மா காந்தியின் மனமாற்றம்

     இந்தியாவின் பொது மொழியாக இந்தியை மாற்ற, பிள்ளையார் சுழி போட்ட, மகாத்மா காந்தியடிகள், சிலகாலம் தமிழ் பயின்றதன் பலனாய், பின்னாளில் உரைத்ததைக் கேளுங்கள்.

     இந்த சச்சரவில் (டிரான்ஸ்வால் சச்சரவு) தமிழர்கள் செய்த காரியத்தைப் போல், வேறு எந்த இந்திய சாதியும் செய்யவில்லை.  ஆதலால், வேறு யாதொரு காரணமும் இல்லாவிட்டாலும், அவர்களுக்கு என் திருப்தியை நன்கு உணர்த்துவதற்காக மாத்திரமாவது, அவர்களுடைய புஸ்தகங்களை ஊன்றிப் படிக்க வேண்டும். சென்ற மாதம் அவர்களுடைய பாஷையைக் கவனமாகப் படித்து வந்தேன். அதைப் படிக்கப் படிக்க, அந்த பாஷையிலுள்ள அழகு அதிகமாகத் தெரிகிறது. அது நேர்த்தியாகவும் அமிர்தம் போன்றதுமான பாஷை. நான் படித்ததிலிருந்த எனக்குத் தெரிவது என்னவெனில், தமிழர்களின் மத்தியில் பூர்வ காலத்திலும், இப்போதும் அநேக புத்திமான்களும், ஞானவான்களும் இருந்திருக்கிறார்கள், முடிவில் இந்திய முழுமையும் ஒரே ஜனாங்கமாக ஏற்பட வேண்டுமானால், சென்னை ராஜதானிக்கு வெளியில் உள்ளவர்களும் தமிழ்ப் பாஷையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.