26 அக்டோபர் 2012

கணிதமேதை அத்தியாயம் 3


அத்தியாயம் 3

     இராமானுஜன் கும்பகோணத்தில் இருந்து புகைவண்டி மூலம் விசாகப்பட்டினத்தைச் சென்றடைந்தார். இராமானுஜனைக் காணாமல் பெற்றோர் தவித்தனர். சென்னை, திருச்சி என ஒவ்வொரு உறவினர் வீட்டிற்கும் சென்று தேடினர். காணவில்லை என்று செய்தித் தாட்களில் விளம்பரம் செய்தனர். செப்டம்பர் மாத இறுதியில் இராமானுஜனை, விசாகப்பட்டினத்தில் கண்டுபிடித்து, மீண்டும் கும்பகோணத்திற்கு அழைத்து வந்தனர். இராமானுஜன் விசாகப்பட்டினத்தில் எங்கு தங்கினார், சாப்பாட்டிற்கு என்ன செய்தார் என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை.

இராமானுஜனின் இல்லம்
     இராமானுஜன் காணாமல் போவது இது முதல் முறையும் அல்ல. பலமுறை மன உளைச்சல் காரணமாக, காணாமல் போனதுண்டு. 1897 இல் டவுன் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, கணக்குப் பாடத்தில் தன்னைவிட சாரங்கபாணி ஒரு மதிப்பெண் அதிகம் பெற்றதைத் தாங்க முடியாமல் அழுதுகொண்டே வீட்டிற்கு ஓடியது நினைவிருக்கிறதல்லவா?

     உயர்நிலைப் பள்ளிப் படிப்பின்போதே, முக்கோணவியலைச் செங்கோண முக்கோணத்தின் உதவி இல்லாமலும் வெளிப்படுத்த முடியும் என்ற உண்மையைக் கண்டறிந்தார். ஆனால் இதே உண்மையை சுவிஸ் நாட்டு கணிதவிய்ல் அறிஞர் லெனார்டு ஆயிலர் என்பார் 150 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்துள்ளார் என்ற செய்தியை அறிந்தபோது, அவரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. முக்கோணவியல் தொடர்பாக தான் எழுதிய தாட்களை எல்லாம், வீட்டுப் பரணியில் மறைத்து வைத்தார். சுருக்கமாகச் சொல்வதானால் இராமானுஜன் எளிதில் உணர்ச்சி வயப்படும், சிறு நிகழ்வுகளைக் கூட மனதளவில் தாங்க இயலாத மனிதராகவே வாழ்ந்தார்.

பச்சையப்பன் கல்லூரி

பச்சையப்ப முதலியார்
     1784 ஆம் ஆண்டு பிறந்த பச்சையப்ப முதலியார், தமிழ் மற்றும் ஆங்கிலப் புலமை வாய்ந்தவர். ஆங்கிலேயர்களின் வணிகப் பணிகளுக்குத் தொடர்பாளராகப் பணியாற்றியதன் மூலம் பெரும் செல்வம் ஈட்டியவர். தனது இருபத்தொன்றாவது வயதிலேயே கோடிக் கணக்கில் பொருள் சேர்த்தவர். தனது 46 வது வயதில் தனது சொத்து முழுவதையும் அறக்கட்டளைக்கு எழுதி வைத்துவிட்டு இறந்தார். 1889 ஆம் ஆண்டு அந்த அறக்கட்டளையின் சார்பில் பச்சையப்பா கல்லூரி நிறுவப்பட்டது. இக் கல்லூரியில் இந்துக்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். இக்கல்லூரி 1906 வாக்கில் சிறந்த கல்லூரியாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.

இன்று பச்சையப்பா கல்லூரி
     கும்பகோணம் கல்லூரியில் தோல்வியைச் சந்தித்த இராமானுஜன், மீண்டும் அதே படிப்பை பச்சையப்பன் கல்லூரியில் பயில வேண்டும் என்ற எண்ணத்துடன், 1906 ஆம் ஆண்டு, புகை வண்டி மூலம் எக்மோர் வந்து சேர்ந்தார்.

     மிகவும் களைத்துப்போய், பசியுடன் இருந்ததால் எழும்பூர் புகைவண்டி நிலையத்தின் பயணியர் ஓய்வு அறையிலேயே தூங்கி விட்டார்.  இராமானுஜனைக் கண்டு பரிதாபப்பட்ட ஒரு பயணி ஒருவர், அவரை எழுப்பித் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, உணவு வழங்கிக் கல்லூரிக்கு வழி கூறி அனுப்பி வைத்தார்.

     பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த இராமானுஜன், பிராட்வேயில் உள்ள பழக்கடைகளுக்கு அருகில் ஒரு சந்தில் இருந்த தனது பாட்டியின் வீட்டில் தங்கினார்.

     கல்லூரியில் தனது புதிய கணிதப் பேராசிரியரிடம் தனது கணித நோட்டுக்களைக் காண்பித்து, தனது கணித ஆர்வத்தையும், ஏழ்மையையும் விளக்கினார். இராமானுஜனின் கணிதத் திறமையால் கவரப் பட்ட அவ்வாசிரியர், இராமானுஜனை அழைத்துச் சென்று முதல்வரிடம் அறிமுகப்படுத்தினார். கல்லூரி முதல்வரும் அந்நிமிடமே பகுதி கல்வி உதவித் தொகையினை வழங்கி உதவினார்.

     பச்சையப்பா கல்லூரியில் தொடக்கக் காலம் நன்றாகவே சென்ற போதிலும், வயிற்றுப் போக்கால் அவதிப்பட்ட இராமானுஜன் மூன்று மாதங்கள் கும்பகோணத்திற்கு வந்து தங்க நேரிட்டது.

     இராமானுஜனின் புதிய கணிதப் பேராசிரியர் என். இராமானுஜாச்சாரியார், இயற்கணிதம் அல்லது முக்கோணவியலின் ஒரு கணக்கிற்கு, தள்ளக் கூடிய வசதியுள்ள இரு கரும் பலகைகளிலும், படிப்படியாகக் கணக்கிட்டு விடையைக் கண்டுபிடித்துக் கூறுவார். பல நேரங்களில் இராமானுஜன் எழுந்து, சார், இந்தக் கணக்கிற்கு விடைகான, இத்தனை வரிகள் தேவையில்லை. சில வரிகளிலேயே இதற்கு விடை காணலாம் என்று கூறுவான். சிறிது மந்தமாகக் காது கேட்கும் அவ்வாசிரியரும், எப்படி? செய்து காட்டு என இராமானுஜனை அழைத்துக கரும்பலகையில் விடைகாண அறிவுறுத்துவார். இராமானுஜன் கணக்கைத் தொடங்கிய இரண்டாவது வரியிலேயே, மனதிற்குள்ளாகவே அடுத்தடுத்த வரிகளைக் கணக்கிட்டு, மூன்று அல்லது நான்கே வரிகளில் விடையைக் கண்டுபிடித்துக் காட்டி, மொத்த வகுப்பையும் குழப்பத்தில் ஆழ்த்துவார்.

சிங்காரவேலு முதிலியார்
     இராமானுஜனின் மற்றொரு கணிதப் பேராசிரியர் பி.சிங்காரவேலு முதலியார் அவர்களாவார். இவர் இராமானுஜனின் கணிதத் திறமையால் பெரிதம் ஈர்க்கப்பட்டார். கணித இதழ்களில் வரும் கணக்குகளுக்கு இருவரும் சேர்ந்து விடைகாணும் முயற்சியில் இறங்கி வெற்றி பெறுவார்கள்.

     பச்சையப்பா கல்லூரியில் அனைவருமே இராமானுஜனின் கணிதத் திறமையைக் கண்டு வியந்தனர். இருந்த போதிலும் கும்பகோணத்தில் ஏற்பட்ட அதே தடங்கல் சென்னையிலும் தொடர்ந்தது. கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பயின்றபோது ஆங்கிலப் பாடம் இராமானுஜனைத் தோற்கடித்தது என்றால், பச்சையப்பா கல்லூரியில் உடலியல் பாடமானது வேப்பங்காயாய் கசக்கத் தொடங்கியது.

     தேர்வில் கணக்கைத் தவிர மற்ற பாடங்களில் குறைந்த மதிப்பெண்களே பெற்றார். குறிப்பாக உடலியலில் பத்து சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்களே பெற்றுத் தோற்றார். மூன்று மணி நேர கணிதத் தேர்வை முப்பது நிமிடங்களில் எழுதி முடித்தார். ஆனால் பலன்தானில்லை.

     1907 டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒரு முறை தேர்வை எழுதினார். மீண்டும் தோற்றார். 1904 மற்றும் 1905 இல் கும்பகோணத்தில் தோல்வி. மீண்டும் 1906 மற்றும் 1907 இல் சென்னையில் தோல்வி. இராமானுஜன் திறமை வாய்ந்தவர் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் இந்தியக் கல்வி முறையின் அமைப்பில் இராமானுஜன் போன்றோருக்கு இடமில்லாமல் போனது. இந்தியக் கல்வி முறை இராமானுஜன் பட்டம் பெறுவதற்குப் பெருந்தடையாக மாறியது.

     1908 ஆம் ஆண்டில் கல்லூரிப் படிப்பைத் தொடர வழியின்றி, வேலை ஏதுமின்றிக் கும்பகோணத்து வீட்டையே சுற்றி சுற்றி வந்தார். குடும்பத்தின் பொருளாதார நிலைமையும் மிகவும் மோசமானதாக இருந்தது. இராமானுஜனின் தந்தை சீனிவாசன் சம்பாதிப்பதோ மாதம் இருபது ரூபாய். தாய் கோமளத்தம்மாள் கோயில்களில் பஜனை பாடுவதன் மூலம் மாதந்தோறும் பத்து அல்லது பதினைந்து ரூபாய் சம்பாதித்து வந்தார். கல்லூரி மாணவர்களுக்கு வீட்டில் தங்க இடமளித்து, உணவு வழங்கி வந்ததன் மூலம் மாதந்தோறும் பத்து ருபாய் கிடைத்து வந்தது.

     இராமானுஜன் நண்பர்கள், மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று கணக்கெழுதவோ, மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தரவோ வாய்ப்பு கிடைக்குமா என்று விசாரிக்கத் தொடங்கினார்.

     ட்யூசனுக்கு விசுவநாத சஸ்த்திரி எனும், கும்பகோணம், அரசுக் கல்லூரி தத்துவப் பேராசிரியரின் மகன் கிடைத்தான். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கும்பகோணத்தின் மறுபுறத்தில் உள்ள சோலையப்ப முதலித் தெருவில் இருக்கும் மாணவனின் வீட்டிற்கு இராமானுஜன் நடந்தே சென்று கணிதம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். ஆனால் இராமானுஜனால் மாணவனின்ப பாடத்திட்டத்திற்கு ஏற்றாற்போல் சொல்லிக் கொடுக்க  இயலவில்லை. மாணவனின் வயது, தகுதி, புரிதல் திறன் இவற்றைப் பற்றிக் கருதாமல் சொல்லிக் கொடுத்ததால் ட்யூசன் வகுப்புகளையும் இழந்தார். இராமானுஜனிடம் சிலகாலம் ட்யூசன் படித்த, இந்தியன் பப்ளிக் சர்விஸ் கமிசனின் தலைவராகப் பணியாற்றிய கோவிந்தராஜா கூறுகையில், அவர் எப்பொழுதுமே முடிவிலாத் தொடர் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். அவர் கற்றுத் தரும் கணக்கிற்கும், நான் எழுத வேண்டிய தேர்விற்கும் தொடர்பிருக்காது. அதனால் அவரிடம் பாடம் கேட்பதை நிறுத்தி விட்டேன். மாணவர்களின் பாடப்பகுதி பற்றியோ, மாணவர்களின் தேவை என்ன என்பது பற்றியோ அவர் கவலைப் பட்டதாகவோ அல்லது அறிந்திருந்ததாகவோ தெரியவில்லை என்று கூறுகிறார்.

     இராமானுஜன் முதலில் கல்வி உதவித் தொகையை இழந்தர்ர். கல்லூரிக் கல்வியையும் இருமுறை இழந்தார். ட்யூசன் சொல்லித் தருவதற்கான வாய்ப்பினையும் இழந்தார். மொத்தத்தில் அனைத்தையும் இழந்து நின்றார்.

,,,,,வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் அடுத்த சனிக்கிழமைச் சந்திப்போமா?
...........................................................


கரந்தை ஜெயக்குமார் வலைப் பூக்கள் நூல் வெளியீட்டு விழா


நண்பர்களே,

     வணக்கம். கடந்த 24.10.20012 புதன் கிழமை எனது பள்ளியில்,

  • கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன் அவர்களின் பிறந்த நாள் விழா
  • கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி நாள் விழா
  • உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் 72 ஆம் ஆண்டு விளையாட்டு விழா
ஆகிய முப்பெரு விழாக்கள் நடைபெற்றன.

      இவ்விழாவில் எனது நூலான கரந்தை ஜெயக்குமார் வலைப் பூக்கள் நூலும் வெளியிடப்பெற்றது என்பதனை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.


     கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு நா. கலியமூர்த்தி அவர்கள், நூலினை வெளியிட , நூலின் முதற் படியை, கரந்தைத் தமிழ்ச் சங்க நிறைவேற்றுக் கழக உறுப்பினரும், தேசிய நல்லாசிரியருமான புலவர் சிவ. பாலசுப்பிரமணியன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

    
நூலின் இரண்டாம் படியினை, எனது நண்பரும், கரந்தைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவருமான திரு இரா. சுந்தரவதனம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

     நூலின் மூன்றாம் படியினை, இவ்வெளியீட்டிற்குக் காரணமான, சங்கச் செயலாளர் செம்மொழிவேளிர் திரு ச.இராமநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.


      கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பெருமை மிகு , தமிழ்ப் பெருமன்ற மேடையில், எனது நூல் வெளியிடப்பெற காரணமாக இருந்த . கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் திரு ச.இராமநாதன் அவர்களுக்கும், தலைவர் திரு நா.கலியமூர்த்தி அவர்களுக்கும், துணைத் தலைவர் திரு இரா.சுந்தரவதனம் அவர்களுக்கும், பள்ளித் தலைமையாசிரியர் திரு சொ.இரவிச்சந்திரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.
       



நன்றி

    

       

19 கருத்துகள்:

  1. கணிதம் மேல் கொண்ட தீராத காதலால், மற்றப் பாடங்களில் தேற முடியவில்லை - நமது நாட்டு பாடமுறையின் கோளாறோ என்று தோன்றுகிறது.

    நல்ல தகவல்கள்.

    நூல் வெளியீடு சிறப்பாக நடந்தேறியது குறித்து மகிழ்ச்சி.

    உங்கள் பக்கத்தினைத் தொடர ஆரம்பித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வரவு. கணிதமேதை குறித்த பதிவிற்கு நன்றி. தொடருகிறேன்.பார்க்க:பத்மாவின் தாமரை மதுரை

      நீக்கு
  2. நல்லதோர் வரலாற்றுப்பதிவு.
    பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா

      நீக்கு

  3. கணிதத்தில் மேதை என்றாலும் உலகம் தெரிந்து பிழைக்கத் தெரியாதவராய் இருந்திருக்கிறார். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. அறுவை சிகிச்சை செய்து கொண்ட கண்ணிற்கு ஓய்வு தேவை அய்யா. கவனமுடன் பார்த்துக் கொள்ளுங்கள்.

      நீக்கு
  4. சிறந்த பகிர்வு சார்...

    பலரும் அறிய பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா

      நீக்கு
  5. அன்பு வணக்கங்கள் கரந்தை ஜெயகுமார் அவர்களே....

    கணிதமேதை இராமானுஜம் அவர்களைப்பற்றி அரிய விஷயங்களின் பகிர்வு அறிந்தேன்.....

    கணிதத்தில் இத்தனை முழுமையான திறமை இருந்தும் மற்ற பாடங்களில் எப்போதும் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் அவரால் சோபிக்கவே முடியாமல் போனதையும் அறியமுடிந்தது....

    சிறப்பான பகிர்வுக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

      நீக்கு
  6. ராமானுஜம் அவர்கள் பற்றி சிறப்பான பதிவு. பயனுல்ள்ள தகவல்கள் மிக்க நன்றி..தொடர்வேன்.

    பதிலளிநீக்கு
  7. கணிதமேதை இராமானுஜம் பற்றிய அருமையான தகவல்கள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. சாதனையாளனாகும் முன் இராமானுஜன் பலவற்றை இழந்துள்ளதை நினைக்கும்போது மனதிற்கு வேதனையாகயிருக்கிறது. ஜம்புலிங்கம்

    பதிலளிநீக்கு
  9. தங்கள் தொடர் மிகச் சிறப்பாகச் செல்கிறது
    கணித மேதையை மிகச் சிறப்பாக முழுமையாக
    புரிந்து கொள்ளமுடிகிறது.தொடர வாழ்த்துக்கள்
    நூல் வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி கொள்ளச் செய்தது
    படங்களுடன் அருமையாகப் பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  10. தங்களின் நூல் வெளியிடப்பட்டது அறிந்து மகிழ்ந்தோம்..மேலும் பல நூல்கள் தங்கள் எழுத்துகளில் வெளிவர வேண்டும் என்பது எங்களது அவா!

    பதிவு நன்று..வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. //தோழர்களே. இதோ கால இயந்திரம் நமக்காகக் காத்திருக்கின்றது. வாருங்கள், வந்து இருக்கைகளில் அமருங்கள். சற்று பின்னோக்கிப் பயணிப்போமா?.//

    உங்கள் கால இயந்திரம் வழியே கணிதமேதை சீனிவாச இராமானுஜன் வரலாற்றையும். ஒரு மேதை சிறுவயதில் எவ்வளவு கஷ்டம் அடைந்து இருக்கிறார் என்பதனையும் மூன்று அத்தியாயங்களையும் படித்து தெரிந்து கொண்டேன். உங்கள் அடுத்த பதிவிற்காக வரும் சனிக்கிழமையை எதிர்பார்க்கிறேன். சிறப்பாக எழுதியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  12. ஆசிரியர் அவர்களின் வலைப் பூக்கள் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. ஒரு புகழ் பெற்ற‌ மனிதரின் வித்தியாசமான மன உண‌ர்வுகளை அறிந்து கொள்ள முடிந்தது. அருமையான தொடர்!

    தங்களின் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தேறியதற்கு இனிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு