30 மார்ச் 2013

கரந்தை மலர் 2


--------------

 சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் 

கம்பரையும், வள்ளுவரையும் 
படிப்பார் யாருமில்லையா 
------------
       தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பே இல்லாமல், 1381 ஆண்டுகள் கடந்தன. இதன் விளைவு, தமிழ் மொழியின் வளமும், பொலிவும் குன்றத் தொடங்கியது. வட மொழி வளரத் தொடங்கியது. தமிழும் வடமொழிச் சொற்களும் கலந்து பேசும் மணிப் பிரவாள நடையே பேச்சு மொழியாக மாறியது. மெத்தப் படித்தவர்கள் கூட தமிழுடன் வடமொழியினையும் கலந்து பேசுவதையே பெருமையாக எண்ணிப் போற்றிய காலம் அது.

       அக்காலத்தே, தமிழின் தலையெழுத்தை மாற்ற ஒருவர் தோன்றினார். அவர்தான் வள்ளல் பாண்டித்துரைத் தேவராவார்.

மதுரைத் தமிழ்ச் சங்கம்

     இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இராமநாத புரத்தை ஆட்சி புரிந்த அரசர் பாண்டித் துரைத் தேவராவார். இவர் தமிழை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர். கவி புனையும் ஆற்றல் படைத்தவர். கம்பராமாயணம், காஞ்சி புராணம், தனிகை புராணம் முதலான புராணங்களையும், சைவ சமய நூல்களையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்.

     1901 ஆம் ஆண்டில் பாண்டித் துரை தேவர் அவர்கள் மதுரையில் சில காலம் தங்கியிருந்தார். சொற்பொழிவாற்றுவதில் மிகுந்த வல்லமை படைத்த பாண்டித் துரை தேவரின், சொற்பொழிவினைக் கேட்க மதுரை மக்கள் விரும்பினர். தேவரும் சொற்பொழிவாற்ற இசைந்தார்.

     பாண்டித் துரை தேவர் அவர்கள், தனது சொற்பொழிவின் போது, கம்பராமாயணத்தில் இருந்தும், திருக்குறளில் இருந்தும், சில பாடல்களை மேற்கோள் காட்டிப் பேச விரும்பினார். இராமாநாத புரத்திலிருந்து மதுரைக்கு வரும்பொழுது, நூல்கள் எதனையும் எடுத்துவராத காரணத்தால், மதுரையில் உள்ளவர்களிடமிருந்து, இவ்விரண்டு நூல்களையும் பெற்று வருமாறு, தனது உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

     உதவியாளர்கள் பல நாட்கள் முயன்றனர். பலரிடமும் கேட்டனர். ஆனால் இல்லை, இல்லை என்ற பதிலே கிடைத்தது. ஒருவரிடம் கூட இந்நூல்கள் இல்லை. பாண்டித்துரை தேவரின் நெஞ்சம் கலங்கியது சங்கம் வைத்துத் .தமிழ் வளர்த்த மதுரையில் கம்பரையும், வள்ளுவரையும் படிப்பார் யாருமில்லையா என மனம் குமுறினார்.

     இம்மாபெரும் குறையினைப் போக்க, தமிழினைக் காக்க, வளர்க்க ஏதாவது செய்தே ஆக வேண்டும் . இந்த இழி நிலையினை மாற்றியே தீர வேண்டும் என அன்றே உறுதியெடுத்தார்.

     இதன் விளைவாக, பாண்டித் துரை தேவர் அவர்களின் பெரும் முயற்சியினால், 1901 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 14 ஆம் நாளன்று, மதுரைத் தமிழ்ச் சங்கம் தோற்றுவிக்கப் பட்டது. தமிழ் மக்களிடையே தமிழுணர்ச்சிப் பரவ, இச்சங்கம் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம்.

     மதுரைத் தமிழ்ச் சங்கமானது, பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் என மூன்றுத் தேர்வுகளை நடத்தி, தமிழாய்ந்த புலவர்களை உருவாக்கத் தொடங்கியது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மகத்தான பணி தமிழ் நாடெங்கும் பரவத் தொடங்கியது.  தமிழகத்தின் அனைத்துப் பகுதியினரிடமும் தமிழ் உணர்ச்சியைத் தழைக்கச் செய்தது. இதன் பயனாக ஒவ்வொரு ஊரிலும், தமிழ்ச் சங்கங்கள் தோன்றலாயின. மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவானது, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாடப் பட்டது.

தஞ்சைத் தமிழ்ச் சங்கம்

     மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டு விழா, தஞ்சை நகரில் சிறப்புறக் கொண்டாடப் பெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழன்பர்கள் பலருக்கும் ஓர் எண்ணம் தோன்றியது. தஞ்சையில் ஓர் தமிழ்ச் சங்கம்  தொடங்கினால் என்ன? என்பதே அவ்வெண்ணமாகும்.

     இதன் பயனாக பாப்பாநாடு சமீன்தார் சாமிநாத விசய தேவர் அவர்களைத் தலைவராகவும், இராசம் அய்யங்கார் அவர்களைத் அமைச்சராகவும், பண்டித உலகநாத பிள்ளை முதலானோரை உறுப்பினர்களாகக் கொண்டு தஞ்சைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்றது. இச்சங்கத்தின் சார்பில் தமிழகம் என்னும் இதழும் வெளியிடப் பெற்றது.

     அனால் இச்சங்கம் நீடித்து நிலைக்கவில்லை. தோன்றிய சில ஆண்டுகளிலேயே மறைந்து போயிற்று. தஞ்சைத் தமிழ்ச் சங்கம் மறைந்தாலும், தஞ்சை வாழ் மனதில் தமிழ்ச் சங்கம் பற்றிய ஏக்கம் இருந்து கொண்டேயிருந்தது.

வித்தியா நிகேதனம்

     தஞ்சை தூய பேதுரு கல்லூரியில் விசுவலிங்கம் பிள்ளை என்பார் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார். அவருடைய மகன் புலவர் வி. சாமிநாத பிள்ளை என்பவராவார். இவரும், தமிழ் இலக்கண இலக்கியங்களில் பெரும் புலமை பெற்று விளங்கிய, இலக்கணக் கடல் அரசஞ் சண்முகநாரும் நெருங்கிய நண்பர்கள்.

     1909 ஆம் ஆண்டு வாக்கில் அரசஞ் சண்முகனார், தனது தொல்காப்பிய பாயிரவிருத்தி என்னும் நூலை அச்சிடும் பொருட்டு, சில காலம் தஞ்சையில் தங்கியிருந்தார். அவ்வமயம் அரசஞ் சண்முகனாரின் தூண்டுதலினாலும், புலவர் சாமிநாத பிள்ளை போன்றோரின் முயற்சியினாலும், ஒரு தமிழ்ச் சங்கம் தோற்றம் கண்டது.

     கவி இரவீந்திர நாத் தாகூர் அவர்களின் சாந்தி நிகேதனத்தின் புகழ் பரவத் தொடங்கிய காலம் அது. எனவே சாந்தி நிகேதனம் என்னும் பெயரைப் பின்பற்றி, இச்சங்கத்திற்கு வித்தியா நிகேதனம் என்று பெயர் சூட்டப் பட்டது. கரந்தை, வடவாற்றங்கரையில் அமைந்திருந்த பஞ்சநத பாவா மடத்தில் வித்தியா நிகேதனம் தொடங்கப் பெற்று, செயல்படத் தொடங்கியது.

     அரசஞ் சண்முகநாரின் நண்பரும், தமிழ், ஆங்கிலம், வட மொழிகளில் சிறப்புற பயின்று, இம்மொழிகளை ஆராய்வதையே பொழுது போக்காகவும், விளையாட்டாகவும் மேற்கொண்டிருந்த, அரித்துவார மங்கலம் பெருநிலக் கிழாரும், பெரும் வள்ளலுமாகிய வா.கோபால சாமி இரகுநாத இராசாளியார் அவர்களே இச்சங்கத்தின் தலைவராவார். வி. சாமிநாத பிள்ளை செயலாளராவார்.

     அரசஞ் சண்முகநார், பின்னத்தூர் நாராயணசாமி அய்யர், நீ.கந்தசாமி பிள்ளை, தட்சிணா மூர்த்தி பிள்ளை, கல்யாண சுந்தரம் பிள்ளை, பாலசுப்பிர மணிய பிள்ளை முதலானோர் இச்சங்கத்தின் உறுப்பினராவர்.

     தமிழ்த் தாத்தா உ,வே.சாமிநாத அய்யர் அவர்கள் பலமுறை இச்சங்கத்திற்கு வந்து, தங்கி தமிழாராய்ச்சியில் ஈடுபடுவதுண்டு.  மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர் பாண்டித் துரை தேவரின் ஆதரவும், ஒத்துழைப்பும் இச்சங்கத்திற்குக் கிடைத்தது. இதன் விளைவாக வித்தியா நிகேதனம் சிறப்புடன் தமிழ்ப் பணியாற்றி வந்தது.

     இந்நிலையில், கரந்தைப் பகுதியினைச் சேர்ந்த 25 வயது நிரம்பிய, தமிழார்வமும், துடிப்பும் மிகுந்த இளைஞர் ஒருவர், இச்சங்கத்தில் உறுப்பினராய் சேர்ந்தார்.

     அந்த இளைஞரின் பெயர் த.வே. இராதாகிருட்டினன் என்பதாகும்.

..... வருகைக்கு நன்றி நண்பர்களே. இராதாகிருட்டினன் அவர்களை அடுத்த சனிக்கிழமைச் சந்திப்போமா?


-------------------------------
தமிழக அரசிற்கு ஓர் அன்பு வேண்டுகோள்


ஈரோட்டில்
கணிதமேதை சீனிவாச இராமானுஜன்
பிறந்த வீடு
கண்டுபிடிப்பு

     நண்பர்களே, தனது கணிதத் திறமையால், தமிழ் நாட்டிற்கும், பாரதத் திருநாட்டிற்கும் பெருமை சேர்த்தவர், பிறவிக் கணிதமேதை சீனிவாச இராமானுஜன் என்பதை நாமறிவோம்.

    
கும்பகோணத்தில் இவர் தவழ்ந்து, வளர்ந்திருந்தாலும், இவர் பிறந்தது ஈரோடு என்பதையும் நாமறிவோம். கும்பகோணத்தில் இவர் வளர்ந்த வீட்டினை யாவரும் அறிவர். இருந்தபோதிலும், இவர் பிறந்த ஈரோட்டு வீடானது, யாரும் அறியாத ஒரு புதிராகவே இன்றளவும் இருந்து வந்தது.

    அண்மையில், டோக்கியோ அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் பல்கலைக் கழகக் கணிதத் துறைத் தலைவர் பேராசிரியர் சுசுமு சக்குரை அவர்களும், தமிழ் நாடு அறிவியல் கழகத் தலைவர் பேராசிரியர் என்.மணி அவர்களும் மேற்கொண்ட ஆய்வின் பயனாக, ஈரோட்டில் இராமானுஜன் பிறந்த வீடானது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 
நன்றி இந்து நாளிதழ்
    ஈரோடு சிவன் கோவிலுக்கும், அதன் குளத்திற்கும் இடையேயுள்ள, அழகிய சிங்கர் தெருவின் 18 ஆம் எண்ணுள்ள இல்லத்தில்தான் இராமானுஜன் பிறந்தார் என்று உறுதிபடுத்தப் பட்டுள்ளது.

     இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் அவர்களால், இராமானுஜன் பிறந்த இல்லத்தினை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானமானது, மாநகராட்சியில் முன்மொழியப்பட்டு, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானம் விரைவில் தமிழக அரசுக்கும் அனுப்பபெற உள்ளது.

     தமிழ் நாடு அறிவியல் கழகத்தின் சார்பிலும், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பேராசிரியர் மணி அவர்கள், ஈரோடு மாநகராட்சியின் தீர்மானத்தினை வரவேற்பதாகக் கூறியுள்ளார்.

     வலைப் பூ நண்பர்களின் சார்பாக, நாமும் தமிழக அரசை வேண்டுவோம்.
------------------------------------------
ஈரோட்டில் கணித மேதை சீனிவாச இராமானுஜன் பிறந்த இல்லத்தினை அரசே ஏற்றுக் கொண்டு, அருங்காட்சியகமாக மாற்றி, இராமானுஜன் பற்றிய கண்காட்சி ஒன்றினை நிரந்தரமாக அவ்வீட்டினில் அமைத்து, எதிர்காலத்தில் ஆயிரமாயிரம் இராமானுஜர்கள் தோன்ற ஊக்குவிக்க வேண்டுமென்று தமிழக அரசை அன்போடு வேண்டுகிறோம்.
இங்ஙனம்
வலைப் பூ நண்பர்கள்




இந்து நாளிதழ் செய்தியினை வழங்கி உதவிய
    

முனைவர் ப.ஜம்புலிங்கம்,
கண்காணிப்பாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம்
சோழ நாட்டில் பௌத்தம்
அவர்களுக்கு
நன்றி நன்றி நன்றி




23 மார்ச் 2013

கரந்தைத் தமிழ்ச் சங்கம்


          வாழி  பகலோன்  வளரொளிசேர்  ஞாலமெலாம்
          ஆழி  செலுத்துதமிழ்  அன்னையே  வாழியரோ
          நங்கள்  கரந்தைத்  தமிழ்ச்சங்கம்  நாள்நாளும்
          அங்கம்  தழைக்க அமைந்து
-          கரந்தைக் கவியரசு

    
      தமிழர்கள் அனைவரும் போற்றி வணங்கத் தக்க, தமிழ் வழிபாட்டுத் தலமாகவே விளங்கும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், ஓர் அங்கமாய்த் திகழும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், கடந்த இருபது ஆண்டுகளாக, பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவன் நான்.

    நான் இப் பள்ளியின் ஆசிரியர் மட்டுமல்ல, இப் பள்ளியின் முன்னாள் மாணவன். என் வாழ்வின் முப்பதாண்டுகளை, கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்திலேயே கழித்திருக்கின்றேன். இனியும் சுவாசம் என்று ஒன்றிருக்கும் வரையில், நேசமாய் என்றென்றும் என் பணியினைச் செவ்வனே தொடர்வேன்.

செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன்
     1925 ஆம் ஆண்டு, சங்கத்தின் ஒப்பிலா முதற்றலைவர், தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களால் தொடங்கப் பெற்று, இன்று வரை, தொய்வின்றித் தொடர்ந்து வெளிவரும், தமிழ்ப் பொழில என்னும் தமிழாராய்ச்சித் திங்களிதழின், அச்சுப் பணியினை மட்டுமன்றி, தமிழ்ப் பொழில பதிப்பாசிரியர் குழுவில் ஓர் இடத்தினையும், இன்றைய சங்கச் செயலாளர் செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன் அவர்கள், எனக்கு வழங்கினார்.
        கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், தமிழ் வளர்ச்சிப் பணிகள் குறித்து, சில கட்டுரைகளை தமிழ்ப் பொழிலில் வெளியிட்டபோது, அக்கட்டுரைகளை தனியொரு நூல் வடிவில், வெளியிட்டு மகிழ்ந்ததும், சங்கச் செயலாளர் செம்மொழி வேளிரி திரு ச.இராமநாதன் அவர்கள்தான்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடர்பான, செய்திகளைத் திரட்டி வாருஙகள் என்று கூறி, செலவிற்குப் பணம் கொடுத்து, என்னையும், எனது நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி முதுகலை வேதியியல் ஆசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களையும், சென்னை ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பியவரும், சங்கச் செயலாளர் செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன் அவர்கள்தான்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நூற்றாண்டு கால வரலாற்றைத் தொகுத்து எழுதுங்கள் என, என்னை உற்சாகப் படுத்தியவரும், ஊக்கப் படுத்தியவரும் சங்கச் செயலாளர் செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன் அவர்கள்தான்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றினை எழுதுவது என்பது சாத்தியமா? ஒரு தமிழ் மாமலையின் வரலாற்றினை, ஒரு சிறு மடு, ஏட்டில் எழுத முயலலாமா? மெத்தத் தமிழ் கற்ற, தமிழ்ச் சான்றோர்களால் போற்றி வளர்க்கப் பெற்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றை வரைய, ஒரு கணக்காசிரியன் பேராசைப் படலாமா? என்று எண்ணி எண்ணித் தயங்கியே, ஆண்டுகள் இரண்டினைக் கழித்தேன்.

      நான் பயின்ற சங்கம், என்னை வளர்த்த சங்கம், எனக்கு வாழ்வளித்த சங்கம். இத்தகு சங்கத்திற்கு, இதுநாள் வரை நான் என்ன செய்திருக்கிறேன்? என்னால் என்ன செய்ய இயலும்? எண்ணிப் பார்த்தேன். சங்கம் பற்றி எழுதுவதை விட, சங்கத்தின் புகழினைப் பறைசாற்றுவதை விட, வேறு என்ன, என்னால் செய்ய இயலும்?

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மாபெரும் வரலாற்றினை, தமிழின் இழந்த பெருமைகளை மீட்டெடுத்த சங்கத்தின் வீர மிகு வரலாற்றினை, அன்னைத் தமிழைக் காக்க மொழிப் போராட்டத்தினை முதன் முதலில் தொடங்கிய, சங்கத்தின் தீரமிகு வரலற்றினை, தமிழ் மொழியைச் செம்மொழிச் சிம்மாசனத்தில் அமர வைத்திட்ட, சங்கத்தின் செம்மொழி வெற்றி வரலாற்றினை, என்னால் இயன்றவரை ஏட்டில் எழுத முற்படுகின்றேன்.

நண்பர் திரு வெ.சரவணன்
      பிழையிருப்பின், கனிவோடு கூறுங்கள், திருத்திக் கொள்கிறேன். செய்திகள் ஏதேனும் விடுபட்டிருப்பின், எடுத்துக் கூறுங்கள், சேர்த்துக் கொள்கிறேன்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்னும் இத்தொடருக்கு வித்திட்ட, சங்கச் செயலாளர் செம்மொழி வேளிர் திரு ச.இராமநாதன் அவர்களுக்கும், அருமை நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி முதுகலை ஆசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களுக்கும், எந்நாளும், என் நெஞ்சில், நன்றியுணர்வு, நீங்காது நிலைத்திருக்கும்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் பற்றிய, தொடக்க காலச் செய்திகளை, வாரி வழங்கிய,

      கரந்தைத் தமிழ்ச் சங்க பெத்தாச்சி புகழ் நிலையம்
      தஞ்சாவூர், சரசுவதி மகால் நூலகம்
      சென்னை, ஆவணக் காப்பகம்
      சென்னை, கன்னிமாரா நூல் நிலையம்
      சென்னை, மறைமலை அடிகள் நூலகம்
      சென்னை, சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம்
      சென்னை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூல் நிலையம்

முதலிய நூலகங்களுக்கும், அவற்றின் நூலகர்களுக்கும் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

     எனது நான்காண்டு கால தொடர் முயற்சிக்குப் பின், இதோ, சங்க வரலாற்றின் முதல் அத்தியாயம், தங்களின் கனிவான பார்வைக்குப் படைக்கப் படுகிறது.

     தமிழர்களின் தலையெழுத்தை மாற்றிக் காட்டிய, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், சீர்மிகு வரலாறு, இதோ கதிரொளி பட்ட, தமிழ்த் தாமரையாய் மலர்கின்றது.

     மீண்டும் சொல்கிறேன், தமிழ்ச் சிங்கத்தின் சிற்றமிகு கர்ஜனையினை, மொழிபெயர்க்க முயற்பட்ட, சின்னஞ்சிறு முயலின் முயற்சி இது. பொறுத்தருள்வீர்.

     தங்குபுகழ்  செந்தமிழ்க்கோர்  அன்பராகில் அவர்கண்டீர்
     யாம் வணங்குங்  கடவுளாரே

என வாழ்ந்து காட்டிய, சங்கத்தின் முதற்றலைவர், செந்தமிழ்ப் புரவலர், ராவ் சாகிப், தமிழவேள் த.வே.உமாமகேசுவரன் அவர்களின் மலர் பாதம் பணிந்து, வணங்கி, என் பணியினைத் தொடர்கின்றேன்.

வாருங்கள் கரந்தைக்கு. சேர்ந்து பயணிப்போம்.


     தமிழ்ச் சங்கங்கள்

           சிங்கத்திற்  சீர்த்தது  வல்  நாரசிங்கம்,  திகழ்மதமா
           தங்கத்திற்  சீர்த்தது  ஐராவதமா  தங்கம்,  விண்சேர்
           சங்கத்திற்  சீர்த்தது  இராசாளி  யப்பெயர்க்  காவலனாற்
           சங்கத்திற்  சீர்த்தது  தஞ்சைக்  கரந்தைத்  தமிழ்ச்சங்கமே


     கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி என்று தமிழ்க் குடியின் தொன்மையினைச் சான்றோர் பறைசாற்றுவர். உலகின் முதன் மொழியாகத் தோன்றிய தமிழ் மொழியினைக் காக்கவும், வளர்க்கவும், போற்றவும் தோன்றிய அமைப்புகளே தமிழ்ச் சங்கங்களாகும்.

     தமிழ் மொழி தோன்றிய காலந்தொட்டே, தமிழ்ச் சங்கங்களும் தோன்றி, தமிழ்ப் பணியாற்றி வந்துள்ளன.ஆனால் முதல், இடை, கடை என மூன்று சங்கங்களே தமிழ் வளர்த்ததாக, ஒரு மாயை இன்றைய தமிழுலவில் நிலவி வருகின்றது. உண்மையில் முச் சங்கங்களுக்கு  முந்தியும், பிந்தியும் தமிழ் நாட்டில், தமிழ்ச் சங்கங்கள் தோன்றி தமிழ் வளர்த்துள்ளன.

     கி.மு. 30,000 ஆம் ஆண்டு முதல், பல்வேறு கால கட்டங்களில் தோன்றி, தமிழ் வளர்த்து, பின்னர் இயற்கையின் சீற்றத்தாலும், கால வெள்ளத்தாலும், அழிக்கப்பட்ட, மறக்கப்பட்ட, தமிழ்ச் சங்கங்கள் பற்றிய குறிப்புகளை, சங்க நூல்களும், சமண நூல்களும், பிற நாட்டு வரலாற்றுக் குறிப்புகளும், நமக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன.

     அவையாவன,

பகுறுளியாற்றுத் தென் மதுரைத் தமிழ்ச் சங்கம்
இடம்  பகுறுளியாற்றின் கரையில் இருந்த தென் மதுரை
காலம் கி.மு.30,000 முதல் கி.மு.16,500 வரை

மகேந்திர மலைத் தமிழ்ச் சங்கம்
இடம் - குமரிக் கண்டத்து, குமரிநாட்டு, ஏழ் குன்ற நாட்டின்
மகேந்திர மலை
காலம் கி.மு. 16,000 முதல் கி.மு. 14,550 வரை
 
பொதிய மலைத் தமிழ்ச் சங்கம்
இடம் -  பொதிய மலை, பாவநாசம்
காலம் - கி.மு. 16,000 முதல்

மணிமலைத் தமிழ்ச் சங்கம்
இடம்- மணிமலை,இது மேருமலைத் தொடரின் 49
கொடு முடிகளில் ஒன்று, ஏழ்குன்ற நாட்டு மகேந்திர மலைக்கும் தெற்கில் இருந்தது
காலம் கி.மு.14,550 முதல் கி.மு.14,490 வரை

குன்றம் எறிந்த குமரவேள் தமிழ்ச் சங்கம்
இடம் - திருச்செந்தூர், இந்நகருக்கு திருச் சீரலைவாய்
என்றும் அலை நகர் என்றும் பெயருண்டு
காலம் - கி.மு.14,058 முதல் கி.மு.14,004 வரை

தலைச் சங்கம்
இடம் - குமரி ஆற்றங்கரையில் இருந்த தென் மதுரை
காலம் - கி.மு.14,004 முதல் கி.மு. 9,564 வரை

முது குடுமித் தமிழ்ச் சங்கம்
இடம் - கொற்கை
காலம் - கி.மு.7,500 முதல் கி.மு. 6,900 வரை

இடைச் சங்கம்
இடம் - தாம்பிரபரணி ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்த கபாட புரம் 
காலம் - கி.மு. 6,805 முதல் கி.மு. 6,000 வரை

திருப்பரங்குன்றத்துத் தென்மதுரைத் தமிழ்ச் சங்கம்
இடம் - திருப்பரங்குன்றம் பக்கம் இருந்த தென் மதுரை
காலம் - கி.மு. 1,915 முதல் கி.மு. 1,715 வரை

கடைச் சங்கம்
இடம் - நான்மாடக் கூடல், மதுரை ஆலவாய் எனப்படும் உத்தர மதுரை
காலம் - கி.மு. 1,715 முதல் கி.பி.235 வரை

வச்சிர நந்தி தமிழ்ச் சங்கம்
இடம் - திருப்பரங்குன்றத்து தென் மதுரை
காலம் - கி.பி. 470 முதல் கி.டிப.520 வரை

      கி.பி. 470 இல் வச்சிர நந்தி என்னும் சமண மதத் தலைவரால், சமண மததை வளர்க்கும் பொருட்டு, ஒரு தமிழ்ச் சங்கம் திருப்பரங்குன்றத்துத் தென் மதுரையில் தோற்றுவிக்கப் பட்டது. இச் சங்கம் கி.பி.520 வரை செயலாற்றியது.

     வச்சிர நந்தித் தமிழ்ச் சங்கத்திற்குப் பின் தமிழ் மொழியில், வட மொழிச் சொற்கள் கலக்கத் தொடங்கின. தனித் தமிழின் வளர்ச்சி குன்றியது. தமிழகத்தின் ஒவ்வொரு ஆலயங்களுக்கும். புதிது புதிதாக வட மொழிப் புராணங்கள் தோன்றத் தொடங்கின.

      கி.பி. 520 இல் தொடங்கி, அடுத்த 1381 ஆண்டுகள் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பே இல்லாமல், தமிழ் மொழியின் வளமும், பொலிவும் குன்றத் தொடங்கியது. வட மொழி வளரத் தொடங்கியது. தமிழும் வடமொழிச் சொற்களும் கலந்து பேசும் மணிப் பிரவாள நடையே பேச்சு மொழியாக மாறியது.

                                              
.... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமோ.
----------


இத்தொடருக்கான முகப்புப் பக்கத்தை அழகுற அமைத்துத் தந்த நண்பர்,

திரு எஸ்.கோவிந்தராஜ்,
ஓவிய ஆசிரியர், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி
கரந்தை காமராஜ்
அவர்களுக்கு மனமார்ந்த
நன்றியினைத்
தெரிவித்து மகிழ்கின்றேன்

15 மார்ச் 2013

கணிதமேதை அத்தியாயம் 23


இராமானுஜனின் மறைவிற்குப் பின்


இந்திய கணித மேதை பேராசிரியர் சீனிவாச இராமானுஜன், பி.ஏ.,எப்.ஆர்.எஸ்., அவர்கள் காலமானார் என்ற மரணச் செய்தி உலகச் செய்தித் தாள்களில் எல்லாம் வெளிவந்தது.

•       1927 ஆம் ஆண்டு, Collected Papers of Srinivasa Ramanujan எனும் இராமானுஜனின் ஆய்வுத் தாட்கள் அடங்கிய நூலானது ஜி.எச்.ஹார்டி, பி.வி.சேசு அய்யர், பி.எம்.வில்சன் ஆகியோரால் வெளியிடப் பெற்றது.

•     1957 ஆம் ஆண்டு பாம்பே, டாடா ஆராய்ச்சி நிறுவனமானது, Note Books எனும் பெயரில் இரு தொகுதிகளில், இராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகளை அப்படியே நூலாக வெளியிட்டது.

•      புது தில்லி, நரோசா பதிப்பகம் The Lost Note Book and other Unpublished Papers   எனும் தலைப்பில் இராமானுஜனின் கட்டுரைகளை வெளியிட்டது.

•       1962 டிசம்பர் 22 ஆம் நாள் கணித மேதையின் 75 வது பிறந்த நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. பிறந்த நாளினை முன்னிட்டு, மத்திய அரசானது இராமானுஜன் உருவம் அச்சிடப் பெற்ற அஞ்சல் தலையினை வெளியிட்டது. 15 பைசா விலை நிர்ணயிக்கப்பட்ட, 25 இலட்சம் அஞ்சல் தலைகளும், வெளியிடப்பெற்ற அன்றே விற்றுத் தீர்ந்தன.

•    கும்பகோணம் டவுன் உயர்நிலைப் பள்ளியில் 75 வது பிறந்த நாளினை முன்னிட்டு இராமானுஜன் ஹால் என்னும் பெயரில் ஒரு பெருங் கூடம் திறக்கப் பெற்றது.

•    இராமானுஜன் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் பல வெளியிடப் பெற்றன. 1967, 1972 மற்றும் 1988 இல் இராமானுஜனைப் பற்றிய ஆங்கில நூல்களும், 1980 மற்றும் 1986 இல் தமிழ் நூல்களும், மேலும் ஹிந்தி, கன்னடம், மலையாள மொழிகளிலும் மற்றைய இந்திய மொழிகளிலும் புத்தகங்கள் வெளிவரத் தொடங்கின.

•   1963 இல் சென்னை அடையாறு கணித விஞ்ஞான நிறுவனம் தொடங்கப் பெற்று இராமானுஜன் பார்வையீட்டுப் பேராசிரியர் பதவி  எனும் பெயரில் ஒரு பதவி ஏற்படுத்தப் பட்டது.

•    1973 இல் பேராசிரியர் இராமானுஜன் அனைத்துலக நினைவுக் குழுவின் சார்பில், இராமானுஜனின் மார்பளவு சிலை நிறுவப் பட்டது.

•     இராமானுஜன் எழுத்தராகப் பணியாற்றிய சென்னை துறைமுகக் கழகத்தின் சார்பில், புதிதாக வாங்கப் பெற்ற கப்பலுக்கு சீனிவாச இராமானுஜன் எனப் பெயர் சூட்டப் பெற்றது.

•      1972 ஆம் ஆண்டு இராமானுஜன் கணித மேனிலை ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப் பெற்றது.

•     1987 இல் இராமானுஜனின் நூற்றாண்டு விழா சென்னையில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.
    சென்னையில் நடைபெற்ற விழாவின் போது, நரோசா பதிப்பகத்தார் வெளியிட்ட இராமானுஜனின் The Lost Note Book  எனும் நூலினை முதற்படியினை, அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் கையொப்பமிட்டு வெளியிட, இராமானுஜனின் மனைவி திருமதி ஜானகி அம்மையார் அவர்கள், நூலின் முதற் படியினைப் பெற்றுக் கொண்டார்.

•   மூன்று இந்தியத் திரைப் படங்கள் இராமானுஜனைப் பற்றி வெளியிடப் பட்டன.

• 1986 இல் தொடங்கப் பெற்ற இராமானுஜன் கணிதக் கழகத்தின் சார்பில், முதல் கணித இதழானது, நூற்றாண்டு விழாவின் போது வெளியிடப் பெற்றது.

•   கும்பகோணத்தில் இராமானுஜன் படமானது ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது.

•     அண்ணா பல்கலைக் கழகமானது தனது கணிப்பொறி மையத்திற்கு இராமானுஜன் பெயரினை வைத்தது.

•   கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகமானது இராமானுஜன் ஆராய்ச்சி நிலையம் மற்றும் நூலகம் தொடங்கியது.

•    கும்பகோணத்தில் இராமானுஜன் வாழ்ந்த வீடு, சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தால் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப் பட்டு வருகிறது.

•    ஆங்கில எழுத்தாளரான ராண்டல் காலின்ஸ் என்பவர், தான் எழுதிய  The Case of the Philosophers Ring  என்னும் நாவலில் ஹார்டியையும், இராமானுஜனையும் கதாபாத்திரங்களாக இணைத்துள்ளார்

•   இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் 1946 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட The Discovery of India  எனும் நூலில், இராமானுஜன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
     இராமானுஜனின் குறுகிய கால வாழ்வும், மரணமும் இந்தியாவின் நிலையினைத் தெளிவாகக் காட்டுகிறது. கோடிக் கணக்கான இந்தியர்களுள் சிலருக்கே கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. வறுமையில் பிடியில் சிக்கி உண்ண உணவின்றி, பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு உண்ண உணவும், கற்க கல்வி வசதியும் ஏற்படுத்தப் படுமேயானால், இந்தியாவில் இருந்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் இலட்சக் கணக்கில் தோன்றி புதிய பாரதத்தைப் படைப்பார்கள் என்பது உறுதி.

•   பிரிட்டிஸ் திரை இயக்குநர் ஸ்டீபன் பிரை என்பவரும் இந்தியாவைச் சேர்ந்த தேவ் பெங்கல் என்பவரும் இணைந்து, இராமானுஜனைப் பற்றிய ஹாலிவுட் திரைப்படம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

•    கணித மேதை சீனிவாச இராமானுஜனின் 125 ஆம் ஆண்டு விழாவின் போது, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால், 2012 ஆம் ஆண்டானது கணித ஆண்டாகவும், இராமானஜன் பிறந்த டிசம்பர் 22 ஆம் நாளானது, கணித நாளாகவும் அறிவிக்கப் பட்டது.

    இராமானுஜனின் கணிதத் திறமைகளை இனம் கண்டு, இலண்டனுக்கு அழைத்து, இராமானுஜனின் திறமைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி, இராமானுஜன் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

I did not invent him
Like other great men, he invented  himself
He was Svayambhu.


கணக்கு மட்டுமே என் வேட்கை
கணக்கு மட்டுமே என் வாழ்க்கை

என வாழ்ந்து காட்டிய
அம் மாமேதையின்
நினைவினைப் போற்றுவோம்
வாழ்க வாழக என்றே வாழ்த்துவோம்.

வாழ்க இராமானுஜன்     வளர்க இராமானுஜன் புகழ்
----

நிறைவாய் நன்றியுரை

     நண்பர்களே, கணிதமேதை சீனிவாச இராமானுஜன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார். இத்தொடரிலிருந்து இராமானுஜன் விடைபெற்றாலும், நமது எண்ணத்தில், இதயத்தில் நீங்காத இடத்தினைப் பிடித்து, என்றென்றும் நமது நினைவலைகளில் வாழ்வார் என்பது உறுதி.

     கணிதமேதை சீனிவாசன் என்னும் இத்தொடரினை விடாது வாசித்து, நேசித்த அன்பு உள்ளங்களுக்கு, எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன்.

மேலும்,

     எனது எம்.பில்., ஆய்வுப் படிப்பின்போது என்னை வழி நடத்தி, நெறிப் படுத்தி, இராமானுஜன் பற்றிய ஆய்வினை முறைப் படுத்திய, எனது ஆசான்,

முனைவர் சா.கிருட்டினமூர்த்தி,
முன்னாள் தலைவர், அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழ்ப் பல்கலைக் கழகம்,தஞ்சாவூர்
அவர்களுக்கும்,

வாருங்கள் எம்.பில்., ஆய்வுப் படிப்பில் சேருவோம் என்று, என்னை அழைத்துச் சென்ற எனது நண்பர்,

திரு ஆ.சதாசிவம்,
உதவித் தலைமையாசிரியர்,
உமாமகேசுவர மேனிலைப் பள்ளி,தஞ்சாவூர்
அவர்களுக்கும்,

கணிதமேதை இராமானுஜன் தொடரினைத் தொடங்கிய நாள் முதல், பல்வேறு நாளிதழ்களில் வெளிவந்த இராமானுஜன் பற்றிய, பல்வேறு செய்திகளை வழங்கி, இத் தொடருக்கு மெருகேற்றிய நண்பர்கள்,

முனைவர் பா.ஜம்புலிங்கம்,
கண்காணிப்பாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம்
சோழ நாட்டில் பௌத்தம்
அவர்களுக்கும்,

திரு வெ.சரவணன்,
முதுகலை ஆசிரியர், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி
கரந்தை சரவணன்
அவர்களுக்கும்,

இத்தொடருக்கான முகப்புப் பக்கத்தை அழகுற அமைத்துத் தந்த நண்பர்,
திரு எஸ்.கோவிந்தராஜ்,
ஓவிய ஆசிரியர், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி
கரந்தை காமராஜ்
அவர்களுக்கும்,

கணிதமேதை சீனிவாச இராமானுஜன் தொடரினையும், என்னையும்
வலைச்சரம்
என்னும் கவின்மிகு வலைப் பூவில் அறிமுகப் படுத்திய,


திருமதி உஷா அன்பரசு
உஷா அன்பரசு, வேலூர்
http://tthamizhelango.blogspot.com
அவர்களுக்கும்,


திருமிகு தி, தமிழ் இளங்கோ
எனது எண்ணங்கள்
அவர்களுக்கும்,


வாரந்தோறும் இத் தொடரினை, தன் முகப் புத்கதகத்தில் பகிர்ந்து

கணிதமேதையின் புகழினைப் பரப்பிய


திரு ரத்னவேல் நடராஜன்
ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ரத்னவேல்நடராஜன்
அவர்களுக்கும்

வாரந்தோறும் தவறாது வருகை தந்து வாசித்து வாழ்த்தியதோடு, தனது பல்வேறு பணிகளுக்கு இடையிலும், நேரம் ஒதுக்கி, சிரமம் பாராது, மன மகிழ்ந்து, எனது வலைப் பூவினை,
தமிழ் மணம்
திரட்டியில், இணைத்து உதவிய

திருமிகு டி.என்.முரளிதரன்,
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், சென்னை
மூங்கில் காற்று
அவர்களுக்கும்,


வாழ்வில் வெல்லத் துடிக்கும் இளம் உள்ளங்களின் வாசிப்பிற்கும், நேசிப்பிற்கும் உரியதாய், பல்லாயிரக் கணக்கான இல்லங்களிலும், உள்ளங்களிலும், நம்பிக்கைச் சுடறேற்றி வரும்
நமது நம்பிக்கை
திங்களிதழில்,

கணிதமேதை சீனிவாச இராமானுஜன் தொடரினை தொடர்ந்து
வெளியிட்டு வரும்,
உலகறிந்த பேச்சாளராய், இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் நற் கவிஞராய், உத்வேகம் தரும் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரரான,
கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா
அவர்களுக்கும்

என் நெஞ்சார்ந்த நன்றியினைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

     மீண்டும் சொல்கிறேன், வலைப் பூ தோழர்களாகிய, உங்களின் உயரிய, உன்னத ஒத்துழைப்பினாலும், ஆதரவினாலுமே இத் தொடர் வெற்றி பெற்றிருக்கின்றது.

வலைப் பூ வாசகர்கள் அனைவருக்கும்,
என் மனமார்ந்த, நெஞ்சம் நெகிழ்ந்த
நன்றியினைக் காணிக்கையாக்குகின்றேன்.

நன்றி  நன்றி  நன்றி

அடுத்தவாரம், புதியதொரு தொடரில் சந்திப்பபோமா நண்பர்களே,

                    என்றென்றும் நன்றியுடனும், தோழமையுடனும்,
                               கரந்தை ஜெயக்குமார்