01 பிப்ரவரி 2012

மருத்துவமும் மனித நேயமும்




  

     தூத்துக்குடி இ.எஸ்.ஐ., மருத்துவமனையினைச் சார்ந்த மருத்துவர் சேதுலட்சுமி அவர்கள், ஒரு இளைஞரால் கொலை செய்யப்பட்டார். மருத்துவர் சேதுலட்சுமியிடம் சிகிச்சைப் பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் இறந்து போனதைத் தொடர்ந்து, அப்பெண்ணின் கணவரால் அம்மருத்துவர் கொலை செய்யப்பட்டார். மருத்துவரைக் கொலை செய்தவர் உடனே காவல் துறையினரிடம் சரணடைந்து விட்டார்.
     மருத்துவர் சரியான சிகிச்சை அளித்தாரா? இல்லையா? பெண்ணின் கணவரின் கொடுஞ்செயல் நியாயமானதா? இல்லையா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஒரு செயல் நடந்தேறிவிட்டது. கொலை செய்தவரை காவல்துறையினர் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். விசாரணையின் நிறைவில் நீதிமன்றம் உரிய தீர்ப்பினை வழங்க இருக்கின்றது.
     தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் இச்சம்பவத்தினால் பெரிதும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இது நியாயமானதே. ஆனால் இக்கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம் என்று கூறி, தமிழகத்தின் அரசு மருத்துவ மனைகளிலும், தனியார் மருத்துவ மனைகளிலும் பணியாற்றும் ஆயிரக் கணக்கான மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, எட்டு இலட்சத்திற்கும் அதிகமான நோயாளிகளை பரிதவிக்க விட்டார்களே  இது முறையா? சரியா?
     தனது மனைவியையும், குழந்தையினையும் ஒருசேர இழந்த, அந்தக் கணவனின் நிலையினை ஒரு நொடி நினைத்துப் பாருங்கள். எதிர்காலக் கனவுகள், இலட்சியங்கள், ஆசைகள் என எத்துனை எண்ணங்களை இதயத்தில் தேக்கி வைத்திருந்திருப்பான். ஒரு சில நிமிடங்களில் எதிர்காலமே, தனது கண் முன்னே, இடிந்து தரைமட்டமாகி விட்டதைக் கண்டு, என்ன பாடுபட்டிருப்பான்? மெத்தப் படித்தவர்களே நிதானத்தை இழக்கும் இக்காலத்தில், மகேஸ் என்னும் இவ்விளைஞன் உணர்வு வயப்பட்டு, கோபத்தின் பிடியில் சிக்கி, தன்னிலை மறந்துதான், இக்கொலையினைச் செய்திருப்பான் என்பதை அனைவரும் அறிவர்.
     ஆனால் இறைவனோடு வைத்து,வணங்கத் தகுந்த மருத்துவர்கள், நின்று, நிதானித்து, யோசித்து மருத்துவம் பார்க்க மாட்டோம் எனப் போராட்டம் நடத்தி, எந்தத் தவறினையும் செய்திடாத, தங்களைக் கடவுள் போல காப்பார் எனக் கருதி வந்த நோயாளிகளை தவிக்கவிட்டார்களே இது தருமமா?
     மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பாக ஊர் முழுவதும் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சுவரொட்டிகளைக் கண்டவுடன், நெருடலாய் ஒரு எண்ணம் இதயத்தில் தோன்றியது. நோயாளிகளை சோதித்து உரிய மருத்துவத்தினை,சிகிச்சையினை மருத்துவர்கள் வெள்ளைத் தாட்களில் எழுதி வழங்கும்போது, அம்மருத்துவ முறையினைச் செயல்படுத்தும்  செவிலியர்கள் இக்கொலையினைக் கண்டித்து ஆர்ப்பாட்டமோ போராட்டமோ நடத்தவில்லையே ஏன்? இக்கேள்வி நெஞ்சை நெருடிக்கொண்டே இருக்கிறது. விடைதான் தெரியவில்லை.
     இக்கட்டுரையின் நோக்கமே, நடந்து முடிந்து விட்ட செயலில் எது சரி, எது தவறு என்று ஆராய்வது அல்ல. மாறாக, எனது வாழ்வில், எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தினை, எவ்வளவு முயன்றாலும், சுவாசமென்று ஒன்று இருக்கும் வரை, உதறித் தள்ள முடியாத ஒரு நிகழ்வினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.
      2010 ஆம் ஆண்டு மார்ச் மாதக் கடைசியில், எனது மகளுக்கு இருமல் வந்தது. குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டினோம். சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார். 2010 ஆம் ஆண்டில் எனது மகளின் வயது பதினொன்று.தற்சமயம் ஏழாம் வகுப்பில் படித்து வருகிறார். இம் மருத்துவரும் எனக்குப் புதியவரல்ல. எனது மூத்த மகன் பிறந்ததில் இருந்தே, கடந்த பதினெட்டு வருடங்களாக இம் மருத்துவரை நான் அறிவேன்.
     பத்து நாட்களுக்கு மேல் மருந்து சாப்பிட்ட பிறகும் இருமல் குறைந்த பாடில்லை. மேலும் ஐந்து நாட்களுக்கு மருந்து எழுதிக் கொடுத்த மருத்துவர், எதற்கும் ஒரு ஸ்கேன் செய்து பார்த்து விடுவோம் என்று கூறி, ஸ்கேன் செய்து வருமாறு சீட்டு எழுதிக் கொடுத்தார். எங்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
     ஒரு தனியார் மருத்துவ மனைக்குச் சென்று ஸ்கேன் எடுத்தோம். புகழ் பெற்ற இதய நோய் மருத்துவரே, எனது மகளை ஸ்கேன் செய்து, ஸ்கேன் அறிக்கையினையும் கொடுத்தார். அறிக்கையினைப் படித்துப் பார்த்தேன். Congenital A cyanotic heart disease. Moderate sized ostium Secundum ASD/L-R Shunt/2:1 Shunt 5 mm to 6 mm என்று இருந்தது. Heart  Disease என்ற வார்த்தைக்கு மட்டுமே அர்த்தம் புரிந்தது.
     குழந்தைகள் நல மருத்துவர் ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஸ்கேன் அறிக்கையுடன் வந்து பார்க்குமாறு கூறியிருந்தார். இவ்விடத்தில் என்னைப் பற்றிக் கூற வேண்டியிருக்கிறது, குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். நான் ஒரு ஆசிரியர். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் கணித பாடம் கற்பிக்கும் கணித ஆசிரியர். பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வுகள் முடிந்திருந்த சமயம் அது. விடைத்தாட்கள் திருத்தும் பணி அப்பொழுதுதான்  தொடங்கியிருந்தது.  மேனிலைப் பள்ளி ஒன்றில், பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வின் கணிதப் பாடத்திற்கான விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தேன். தொடர்ந்து பத்து நாட்களுக்கு விடைத்தாட்களைத் திருத்த வேண்டியிருந்தது.
    எனவே, காலை நேரத்தில் மகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் பொறுப்பை, எனது மனைவியிடம் விட்டுவிட்டு, விடைத்தாட்கள் திருத்துவதற்காக, சென்று விட்டேன். காலை ஒன்பது மணிக்கே விடைத்தாட்கள் திருத்தும் பணி தொடங்கிவிடும். காலை 11.00 மணியளவில், தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, எனது அலைபேசி ஒலித்தது. மறு முனையில் எனது மனைவி. ஹலோ என்றேன். மறு முனையிலிருந்து பதில் ஏதுவும் வரவில்லை. லேசான விசும்பல் ஒலி மட்டுமே கேட்டது. என் மனதிலும், உடலிலும் லேசானப் பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது. டாக்டர் என்ன சொன்னார்? எதற்காக அழுகிறாய்? என்று திரும்ப, திரும்ப கேட்கிறேன். ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்ட என் மனைவி, மகளின் இதயத்தில் ஓட்டை இருக்கிறதாம். உடனே ஆபரேசன் செய்ய வேண்டுமாம். ஒரு மாதத்திற்குள் கட்டாயம் ஆபரேசன் செய்தே தீரவேண்டுமாம் என்று நா தழுதழுக்கக் கூறினார். அப்படியே உறைந்து போனேன். சுய நினைவினை அடைய சில நிமிடங்கள் ஆனது. முறுமுனையில் என் மனைவி, என்னங்க பேசாம இருக்கீங்க, பேசுங்க, பேசுங்க எனக் கூறுவது கிணற்றிலிருந்து வரும் குரல் போல செவிகளில் பட்டது. சுதாரித்துக் கொண்டேன். கவலைப் படவோ, பயப்படவோ இது நேரமில்லை. முதலில் மனைவிக்கு ஆறுதல் கூற வேண்டும், தேற்ற வேண்டும் என்ற எண்ணமே முதலில் தோன்றியது. கவலைப் படாதே, இன்று எல்லா வியாதிகளுக்கும் மருத்துவம் இருக்கிறது. ஆபரேசன் என்பது இன்றைய காலகட்டத்தில் சாதாரணமான ஒன்று. கவலைப் படாதே, மனதை அலட்டிக் கொள்ளாதே, வீட்டிற்குச் செல், மாலை வருகிறேன், செய்ய வேண்டியதை பேசி முடிவு செய்வோம், வீட்டிற்கு மகளுடன் பத்திரமாகச் செல் என்று பலவாறு ஆறுதல் கூறினேன்.
     தொடர்ந்து பத்தாம் வகுப்பு விடைத்தாட்களைத் திருத்தியாக வேண்டும். ஒவ்வொரு விடைத்தாளும், ஒவ்வொரு மாணவனின் எதிர்காலத்தை முடிவு செய்யும் வல்லமை படைத்தது. விடைத்தாள் திருத்தும் பணியினைத் தவறின்றிச் செய்தாக வேண்டும். கண்களை மூடி, மனதை ஒருமுகப் படுத்த முயன்றேன். தற்சமயம் கவனம் செலுத்த வேண்டியது விடைத்தாளில்தான், விடைத்தாளில்தான் எனத் திரும்பத் திரும்ப மனதிற்குள்ளேயே கூறிக் கொண்டேன். மகளின் விசயத்தில் கவலைப் படுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடாது. எனவே கவலைப் படாதே. தைரியமாய் இரு என எனக்கு நானே கூறிக்கொண்டு, எனது பணியினைத் தொடர்ந்தேன்.
     மாலை வீடு திரும்பியவுடன், எனது மனைவி, எனது தந்தை, தாயுடன் கலந்து பேசினேன். இனி செய்ய வேண்டியது என்ன? எப்படிச் செய்வது? என்று பேசினோம். எனது தந்தையார் ஒரு கருத்தைக் கூறினார். வேறொரு மருத்துவரை அணுகி, மீண்டும் ஒரு முறை ஸ்கேன் செய்து, ,இதயத்தில் ஓட்டை இருக்கிறதா? இல்லையா? என்பதை நன்றாக உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். அவ்வாறே செய்வது என்று முடிவு செய்தோம்.
     செய்தி அறிந்த எனது எதிர் வீட்டினர் எங்களுக்கு உதவிட முன்வந்தனர். எதிர் வீட்டில் வசிப்பவர் இரும்பு மற்றும் மின் சாதனங்களை விற்கும் கடை ஒன்றினை நடத்தி வருபவர். அவரது மனைவி இதே ஊரினைச் சேர்ந்தவர். இதே ஊரினைச் சார்ந்த இதய நோய் மருத்துவர், அவர்களது குடும்ப நண்பராவார். எனவே அவரிடம் ஆலோசனை கேட்பது என்று முடிவு செய்யப் பட்டது.
     அடுத்த நாள் காலை, நான் விடைத்தாள் திருத்தும் பணிக்குப் புறப்பட, எனது மனைவியும், மகளும், எதிர் வீட்டாரின் மனைவியும் மருத்துவரைப் பார்க்கச் சென்றனர்.
     காலை 11.00 மணிஅளவில் என் அலைபேசி அழைத்தது.எதிர் முனையில் என் மனைவி. டாக்டரிடம் காட்டினோம். ஸ்கேன் எடுத்துப் பார்த்தார், பயப்படுவதற்கு ஒன்றுமில்லை, சளித் தொந்தரவுதான், ஒரு மாதத்திற்கு மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று கூறினார் என்றார். மகளுக்கு இதயத்தில் ஒட்டை இருப்பதாக வேறொரு மருத்துவர் கூறினாரே அதைக் கூறினாயா? என்று கேட்டேன். இல்லை என்றார். அப்படியானால் மருத்துவரை திரும்ப ஒரு முறை பார்த்து, ஏற்கனவே ஒரு மருத்துவர் என் மகளுக்கு இதயத்தில் ஓட்டை ஏற்பட்டிருப்பதாகக் கூறியதால்தான், நாங்கள் உங்களிடம் வந்தோம் என்று நிலைமையைச் சொல் என்று கூறினேன்.
     சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் எனது மனைவி என்னை அழைத்தார். டாக்டரைப் பார்த்தோம். ஏற்கனவே பார்த்த டாக்டர் எனது மகளுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாகக் கூறினார். தாங்கள் பயப்படத் தேவையில்ல் என்கிறீர்களே? தைரியமாக இருக்கலாமா? என்று கேட்டேன், அதற்கு வேறொரு டாக்டரிடம் காட்டியதை ஏன் என்னிடம் முதலில் சொல்லவில்லை என சத்தம் போட்டு, தற்பொழுது அவர் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டை கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார். ஸ்கேன் எடுக்கக் கொடுத்தப் பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டார் எனக் கூறினார்.
      ஒரு நிமிடம் என்ன பேசுவது என்றே புரியவில்லை. ஒன்று தான் கொடுத்த ஸ்கேன் அறிக்கை சரியானதுதான்  என உறுதிபடக் கூறியிருக்கலாம், அல்லது அந்த டாக்டர் ஒட்டை இருப்பதாகவா கூறினார், வாருங்கள் மீண்டும் ஒரு முறை ஸ்கேன் செய்து பார்ப்போம். உண்மையிலேயே துளை இருக்கிறதா? இல்லையா? என உறுதி செய்வோம் எனச் சொல்லியிருக்கலாம். ஆனால் இன்னொரு மருத்துவரிடம் காட்டியதை என்னிடம் ஏன் சொல்லவில்லை எனக்கூறி, மருத்துவம் பார்க்க மறுப்பது ஒரு மருத்துவருக்கு அழகா? இதுதான் மருத்துவ தர்மமா? என்று புரியவில்லை. சரி வீட்டிற்குச் செல், மாலையில் பேசுவோம் என்று மனைவியிடம் கூறினேன்.
     மாலை வீட்டில் அமர்ந்து அனைவரும் கூடிப் பேசினோம். எனது தந்தை, எனது நண்பரின் மகன் ஒருவர் எம்,எஸ்., படித்து, அறுவை சிகிச்சை மருத்துவராக வேறொரு ஊரில் பணியாற்றி வருகிறார். எனவே அவரிடம் கருத்து கேட்போம் எனக் கூறினார்.
    மறுநாள் தொடர்பு கொண்டபொழுது, அவர் பணியாற்றும் ஊரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவ மனையின் பெயரைக் கூறி, அங்கிருக்கும் குழந்தைகள் நல இதய நோய் மருத்துவர் எனது நண்பர், அவரிடம் பேசுகிறேன். எனவே நீங்கள் இவ்வூருக்கு வந்து, அம்மருத்துவரைப் பாருங்கள் என்றார்.
     இம்முறை எனது தந்தையார், எனது மனைவியையும், எனது மகளையும் அழைத்துக் கொண்டு அத்தனியார் மருத்துவ மனைக்குச் சென்று, குழந்தைகள் நல இதய நோய் மருத்துவரைச் சந்தித்தார்.
     பிற்பகலில் எனது மனைவி, அலைபேசியில் என்னை அழைத்தார். டாக்டரை சந்தித்தோம். ஸ்கேன் செய்து பார்த்தார், இதயத்தில் ஒட்டை இருக்கிறது, எனவே அறுவை சிகிச்சையின் மூலம், இத்துளையினை அடைக்க வேண்டும் என்று கூறினார். மேலும் இதே ஊரில் வசிக்கும் இதய நோய் மருத்துவத்தில் அனுபவமிக்க மூத்த மருத்துவரிடம் வேண்டுமானால், மீண்டும் ஒரு முறை பரிசோதித்து, அவரது கருத்தினையும் கேட்டுவிடலாம் என்று கூறி, அவரே, அந்த டாக்டரிடம் தொலைபேசியில் பேசினார். அந்த மூத்த டாக்டரை ஒரு மாதத்திற்குப் பார்க்க முடியாதாம். அந்த டாக்டரை பார்ப்பதற்கு முன்பதிவு செய்ய வேண்டுமாம். ஒரு மாதத்திற்கு அவரது அப்பாயின்மென்ட் கிடைக்காதாம். எனவே மே மாதம் பத்தாம் நாள் காலை நமது மகளுக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருக்கிறார் என்று கூறினார். எனது மகளின் இதயத்தின் உண்மை நிலையை உறுதிபடுத்த ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமாம். காத்திருந்தோம்.
     மே மாதம் பத்தாம் நாள் காலை நான், எனது தந்தையார், எனது மனைவி, எனது மகள் என நால்வரும் அம்மருத்துவரைக் காண பயணமானோம். காலை 10,00 மணிக்கே மருத்துவரது கிளீனிக்கை அடைந்து விட்டோம். மிகப் பெரிய காத்திருப்பு அறை, ஸ்கேன் செய்ய, ஈ.சி.ஜி., எடுக்க என தனித் தனி அறைகள். மருந்துகள் விற்பனை பிரிவும் தனியே இருந்தது. முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் எங்களுக்கு நிற்பதற்குக் கூட இடமில்லை. அவ்வளவு கூட்டம். வெளியிலேயே காத்திருந்தோம். சுமார் ஐந்து மணி நேரம் காத்திருத்தலுக்குப் பிறகு அழைக்கப் பட்டோம். முதலில் ஒரு பெண், எனது மகளை ஸ்கேன் செய்து, அறிக்கை தயார் செய்து மருத்துவரிடம் காண்பிக்கச் சென்றார். சிறிது நேரத்தில், திருச்சியின் அனுபவமிக்க மூத்த அம் மருத்துவரே நேரில் வந்து என் மகளை ஸ்கேன் செய்தார். அரைமணி நேரக் காத்திருத்தலுக்குப் பிறகு மருத்துவர் எங்களை அழைக்கவே, அவரது அறைக்குச் சென்றோம். மருத்துவருக்கு எதிரே சுவற்றில், மிகப் பெரிய எல்.சி.டி., தொலைக் காட்சிப் பெட்டி பொருத்தப்பட்டிருந்தது. தொலைக் காட்சியில் சிகப்பு மற்றும் பல வண்ணங்களில் மாடர்ன் ஆர்ட் ஓவியம் போல, ஒரு காட்சி தெரிந்தது.
     மருத்துவர் தொலைக் காட்சிப் படத்தைக் காட்டி, இதுதான் உங்கள் மகளின் இதயம். இதயத்தில் நான்கு அறைகள் இருக்கும். மேற்புறத்தில் அருகருகே அமைந்திருக்கும், இரு அறைகளுக்கு இடையிலேயான, நடுச்சுவற்றுப் பகுதியில். ஏழு மில்லிமீட்டர் அளவிலான சிறு துளை இருக்கிறது. அதனால் இரத்தமானது ஒரு அறையிலிருந்து, பக்கத்து அறைக்கு துளை வழியாக, குறுக்குவாட்டில் பாய்ந்து செல்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யத்தான் வேண்டும் என்று உறுதியாகக் கூறினார். மூவரும் பேச்சற்று அமர்ந்திருந்தோம்.  
     எனது மகளை ஸ்கேன் செய்த தகவல்கள் முழுவதையும் பதிவு செய்த குறுந்தகடு ஒன்றினையும், ஸ்கேன் ரிப்போர்ட்டினையும் வழங்கினார். பதினோரு வயது மகளுக்கு, நெஞ்சுப் பகுதியின் தோலைப் பிளந்து, நெஞ்சு எலும்புகளை வெட்டிப் பிரித்து, அதனுள்ளே இருக்கும் இதய்த்தினை வெளியே எடுத்து, துளையினை அடைக்க வேண்டுமாம். வேறு வழியில்லையா? மருந்து, மாத்திரைகளாள் சரிசெய்ய முடியாதா? என வினவினோம்.
     முடியாது. மருந்து மாத்திரைகளால் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் இத்துளையினை அடைப்பதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று அறுவை சிகிச்சையின் மூலம், நெஞ்சுக் கூட்டைப் பிளந்து செய்வது. இரண்டாவது முறையானது, கால் நரம்பு ஒன்றில் சிறு துளையிட்டு, அதன் மூலம், ஒரு குழாய் வழியே இதயம் வரை சென்று துளையினை அடைக்கலாம்.  இம்முறையில் துளையினை அடைத்தால், நெஞ்சுப் பகுதியை பிளக்க வேண்டியதில்லை. மேலும் அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்கானத் தழும்புகளும் இருக்காது என்று கூறி, வேறொரு ஊரிலுள்ள, ஒரு தனியார் மருத்துவ மனையினை அணுகுமாறு பரிந்துரைத்தார்.
     எனது மகளின் குறுந்தகட்டினையும், அறிக்கையினையும் பெற்றுக் கொண்டு, இம் மருத்துவரைப் பார்க்குமாறு அறிவுறுத்திய, தனியார் மருத்துவ மனையினைச் சார்ந்த, குழந்தைகள் நல மருத்துவரைப் போய் பார்த்தோம். ஸ்கேன் அறிக்கையினைப் படித்தபின், எங்கள் மருத்துவ மனையில்நெஞ்சுப் பகுதியைப் பிளந்து (Open Heart Surgery)  செய்யும் அறுவை சிகிச்சையினை மட்டுமே செய்கிறோம். நீங்கள் கூறும் இரண்டாவது முறை, சமீபத்திய கண்டுபிடிப்பாகும். செலவு அதிகமாகும். செலவைப் பற்றிக் கவலை இல்லாவிட்டால், இரண்டாம் முறையினை முயற்சிக்கலாம். எங்கள் மருத்துவ மனையில் திறமைமிக்க மருத்துவக் குழு இருக்கிறது கவலைப் பட வேண்டாம். Open Heart Surgery முறையில் இங்கேயே செய்யலாம் எனக் கூறினார். கலந்து பேசி ஓரிரு நாளில் மீண்டும் வந்து சந்திக்கிறோம் எனக் கூறி விடைபெற்று வீட்டினை வந்தடைந்தோம்.
     எங்களுக்கு அடுத்த வீட்டில் வசிப்பவர் அழகப்பன் என்பவர். அவரது சகலை மகன் இலண்டனில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். அழகப்பன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது,நான் இலண்டனில் இருக்கும் மருத்துவர் சரவணனிடம் தங்கள் மகளைப் பற்றிப் பேசினேன். அவர் ஸ்கேன் அறிக்கையினையும், குறுந்தகட்டில் உள்ள வீடியோ படக் காட்சிகளையும், மின்னஞ்சல் (e mail) மூலம் இலண்டனுக்கு அனுப்பச் சொன்னார். எனவே மின்னஞ்சலை முதலில் அனுப்புங்கள் என்றார்.
     ஸ்கேன் அறிக்கையினை கணினியில் ஸ்கேன் செய்தேன். குறுந்தகட்டில் உள்ள படக் காட்சிகளை மின்னஞ்சலில் அனுப்புவதற்கு வசதியாக,கணினியில் பதிவு செய்து, இரண்டினையும் மின்னஞ்சல் மூலம் இலண்டனுக்கு அனுப்பினேன். இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், இலண்டனிலிருந்து அவரே அழைத்தார். ஸ்கேன் அறிக்கையினையும், ஸ்கேனின் படக் காட்சிகளையும் பார்த்தேன், இதயத்தில் துளை இருப்பது உண்மைதான். அதற்காகக் கவலைப் படவேண்டாம். இன்றைய நவீன உலகில், இப்பிரச்சினையினை எளிதாக சரி செய்து விடலாம் என்று ஆறுதல் கூறினார்.
     அறுவை சிகிச்சியினைத் தவிர்ப்பதற்கு வழி இல்லை என்பது புரிந்தது. எங்கள் முன்னே நான்கு கேள்விகள் வழி மறித்து நின்றன. ஒன்று, எந்த முறையினைப் பயன்படுத்தி துளையினை சீர் செய்வது? இரண்டு எந்த ஊரில், எந்த மருத்துவமனையில் இச்சிகிச்சையினை மேற்கொள்வது? மூன்று எவ்வளவு செலவாகும்? நான்கு அந்தப் பணத்திற்கு எங்கே செல்வது?
     எங்கள் மகள் காலங்காலத்திற்கும், நெஞ்சுப் பகுதியில் தழும்புகளுடன் இருப்பதில், இம்மியளவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கால் வழியே செய்யப்படும் சிகிச்சையினை செய்வது என்று முடிவு செய்தோம்.
     சென்னையிலிருக்கும் எனது நண்பர் அனந்தராமன் அவர்களை அலைபேசியில் அழைத்தேன். இவ்விடத்தில் எனது நண்பர் அனந்தராமன் அவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்தாக வேண்டும். இவர் 1994 ஆம் வருடம் தஞ்சையில் இருந்த டாப்லைன் அச்சகத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அச்சகப் பணிதொடர்பாக முதன் முதலில் அனந்தராமனை டாப்லைன் அச்சகத்தில் சந்தித்தேன். அன்று தொடங்கிய நட்பு. பின்னர் அனந்தராமன் அவர்கள் லக்மி அச்சகத்தில் மேலாளராகப் பணியில் சேர்ந்தார். இந்த லக்மி அச்சகத்தில்தான், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மாத இதழான தமிழ்ப் பொழில் அச்சிடப்பெற்று வந்தது. இன்றும் இவ்வச்சகத்தில்தான் அச்சிடப்பெற்று வருகிறது.
     உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியுடன், தமிழ்ப் பொழில் இதழின் அச்சகப் பணியினையும் கூடுதலாக, கடந்த இருபது ஆண்டுகளாகப் பார்த்து வருபவன் நான். எனவே லக்மி அச்சகத்தில் தொடர்ந்து, அனந்தராமன் அவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு கிட்டியது. நெருங்கிய நண்பர்களானோம்.
    சில ஆண்டுகள் கழித்து சென்னை சென்ற அனந்தராமன் அவர்கள், சென்னையிலேயே தங்கி விட்டார். தற்சமயம் எஸ்.பி,எஸ்., அச்சகத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார்.
     அனந்தராமனை அலைபேசியில் அழைத்து எனது மகளின் நிலையினைக் கூறி, எந்த மருத்துவ மனையினை அணுகலாம் என்று விசாரித்துக் கூறுமாறு வேண்டினேன். ஸ்கேன் அறிக்கையினையும், குறுந்தகட்டினையும் அஞ்சலில் அனுப்பி வைக்கச் சொன்னார். அனுப்பி வைத்தேன்.
     இரண்டே நாட்களில் என்னை அலைபேசியில் அழைத்தார். சென்னை போரூரில் அமைந்திருக்கும் Frontier Life Line Hospital-ஐப் பரிந்துரைத்தார். இதய அறுவை சிகிச்சையில், இன்று புகழ் பெற்று விளங்கும் மருத்துவர் செரியன் அவர்களின் மருத்துவமனை இது. இம் மருத்துவ மனையில் குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றுபவர் மருத்துவர் பிரேம் சேகர் அவர்களாவார்.தற்சமயம் மருத்துவர் பிரேம் சேகர் வெளி நாடு சென்றுள்ளார். மேமாதம் முப்பதாம் தேதி அவர் இந்தியா திரும்புகிறார். எனவே இம்மருத்துவர் நாடு திரும்பியவுடன், அவரைக் கலந்து ஆலோசித்துவிட்டு தெரிவிக்கிறேன்,அதன் பிறகு சென்னை வரலாம் என்றார். மேலும் ரூபாய் இரண்டு இலட்சம் வரை செலவாகலாம் என்றும் தெரிவித்தார்.
     நான் பணியாற்றும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியானது, அரசு உதவிபெறும் பள்ளியாகையால், அரசு ஊதியம் பெறுபவன் நான். தமிழக அரசின் ஸ்டார் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருப்பவன். எனவே தஞ்சையில் உள்ள ஸ்டார் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலகத்திற்குச் சென்றேன். எனது மகளின் மருத்துவ அறிக்கைகளைக் காட்டி விசாரித்தேன்.
     ஒவ்வொரு நான்காண்டுகளுக்கும் ரூபாய் இரண்டு இலட்சம் வரை மருத்துவக் காப்பீட்டுத் தொகையினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், எந்த மருத்துவமனையில், மருத்துவம் பார்க்க விரும்புகின்றோமோ, அம் மருத்துவமனைக்குச் சென்று,ஸ்டார் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையினைக் காண்பித்து சேர்ந்தால் போதும். மற்ற ஏற்பாடுகளை அம் மருத்துவமனையே பார்த்துக் கொள்ளும் எனத் தெரிவித்தனர்.
     எனது மனைவியின் நகைகளை, எனது மைத்துனரிடம் கொடுத்து, வங்கியில் அடமானம் வைத்து, ரூபாய் ஒரு இலட்சம் பணம் பெற்று, அத் தொகையினை எனது வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு அனந்தராமனின் அழைப்பிற்காகக் காத்திருந்தேன்.
     இந்நிலையில் நான் பணியாற்றும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றும், நண்பர் சரவணன் அவர்களும், துணி வியாபாரம் செய்யும் எனது நண்பர் சேகர் அவர்களும் பணம் அதிகம் தேவைப் படுமே? என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்? சொல்லுங்கள் நாங்களும் பணம் ஏற்பாடு செய்து தருகிறோம் எனக் கேட்டனர். ஒரு இலட்சம் வங்கியில் இருப்பதைத் தெரிவித்தேன்.
     எனது பள்ளியில் பணியாற்றும் நண்பரும், உதவித் தலைமையாசிரியருமான சதாசிவம் அவர்கள், எனது வங்கிக் கணக்கில் ரூபாய் ஒரு இலட்சம் வரை இருக்கிறது, எனவே வேண்டுமானால் சொல்லுங்கள் ஒரு இலட்சம் ரூபாயினை  உடனேத் தருகிறேன்  எனக் கேட்டார். தற்சமயம் பணம் தேவைப்படாது என எண்ணுகிறேன், பணம் தேவைப்படுமானால், நான் பணம் கேட்கும் முதல் நபர் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்று கூறினேன். மற்ற நண்பர்கள் பலரும் உதவிட முன்வந்தனர்.
     சூன் மாதம் ஒன்றாம் தேதி கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி திறந்தது.. முதல் நாள் ஆகையால், பத்தாம் வகுப்பிலிருந்த மாணவியரின் பெயர் மற்றும் இதற்கு முன் பயின்ற பள்ளிகள் குறித்து ஒவ்வொருவராக விசாரித்துக் கொண்டிருந்தேன். அலைபேசி ஒலித்தது. சார் வணக்கம், நான் அனந்தராமனின் நண்பர், சரவணன் பேசுகிறேன். நான் தற்சமயம் செரியன் மருத்துவமனையில் இருக்கிறேன். தங்கள் மகளின் மருத்துவ அறிக்கைகளுடன் மருத்துவர் பிரேம் சேகர் அவர்களைச் சந்தித்துப் பேசினேன். அடுத்த வாரம் செவ்வாய்க் கிழமை எட்டாம் தேதி மருத்துவமனையில் சேரச் சொல்லியிருக்கிறார். அதற்கும் அடுத்த நாள் புதன் கிழமை ஆபரேசன் செய்வதாக கூறியுள்ளார் என்று கூறினார்.
      சரவணன் அவர்கள் எனது நண்பர் அனந்தராமன் குடியிருக்கும் அடுக்ககத்தில். அடுத்த பிளாட்டில் வசிப்பவர். ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர். சரவணன் அவர்களுக்கு நன்றி கூறினேன்.
     அடுத்த நாள் இரண்டாம் தேதி புதன் கிழமை காலை 11.30 மணியளவில் என் அலைபேசி ஒலித்தது. மறுமுனையில் அனந்தராமனின் சகோதரர் நாராயணசாமி. நாராயண சாமி அவர்கள் பல்லாண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றியவர். தற்சமயம் திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர். தஞ்சைக்கு எனது பெற்றோர்களைப் பார்ப்பதற்காக வந்தேன்,இன்னும் சிறிது நேரத்தில் இங்கிருந்து புறப்பட்டு திருச்சி செல்ல இருக்கிறேன். அதற்கு முன்னர் உங்களைப் பார்க்க வேண்டும். இன்னும் அரை மணி நேரத்திற்குள், தஞ்சை தொடர் வண்டி நிலையத்திற்கு வர முடியுமா? எனக் கேட்டார்.
     உடனே வருகிறேன் எனக் கூறி, தலைமையாசிரியரிடம் அனுமதியினைப் பெற்றுக் கொண்டு, நானும் நண்பர் சரவணன் அவர்களும் தொடர் வண்டி நிலையத்திற்குச் சென்றோம். நாராயணசாமி அவர்கள் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். உங்கள் மகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப் போகிறீர்கள் என தம்பி கூறினான். இந்தத் தொகையினை செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி ரூ.50,000 ஐ என் கையில் திணித்தார். பணத்திற்கு ஏற்கனவே எற்பாடு செய்துவிட்டேன், தங்களின் உதவிக்கு நன்றி எனக் கூறினேன். ஏற்பாடு செய்திருந்தாலும் பரவாயில்லை, இதனையும் வைத்துக் கொள்ளுங்கள் எனக் கட்டாயப்படுத்திப் பணத்தைக் கொடுத்தார். பெற்றுக் கொண்டேன்.
     கலைக் கல்லூரியில் பணியாற்றும் எனது நண்பர் பால்ராஜ் அவர்களை, என்னுடன் சென்னைக்கு வாருங்கள், மருத்துவ மனையில் சில நாட்கள் தங்க வேண்டியிருக்கும், நீங்கள் உடன் வந்தால் உதவியாக இருக்கும் என அழைத்தேன். ஒரு நொடி கூட யோசிக்காமல் வருகிறேன் என்றார்.
     எட்டாம் தேதி காலை சென்னையில் இருக்க வேண்டும். எனவே ஏழாம் தேதி இரவு பால்ராஜ், எனது மனைவி, மகள் என நால்வரும் சென்னைப் புறப்பட்டோம். எனது தந்தையார், சித்தப்பா, எனது தம்பி, நண்பர்கள் சரவணன், சேகர், பத்மநாபன் மற்றும் பலர் தொடர் வண்டி நிலையத்திற்கு வந்து எங்களை வழி அனுப்பி வைத்தனர்.
     எட்டாம் தேதி செவ்வாய்க் கிழமை அதிகாலை, சென்னை மாம்பலத்தில் இறங்கினோம். நண்பர் அனந்தராமன் எங்களுக்காகக் காத்திருந்தார். ஒரு ஆட்டோவில், அவரின் வீட்டிற்குச் சென்றோம். அனந்தராமனின் மனைவி எங்களை வரவேற்றார். அனந்தராமனின் மனைவியும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர். எங்களுக்காக இருவருமே விடுமுறை எடுத்திருந்தனர்.
     காலை ஒன்பது மணிக்கு போரூர். ப்ரான்டியர் லைப் லைன் மருத்துவ மனைக்குச் சென்றோம். மருத்துவர் பிரேம் சேகர் அவர்களை அனந்தராமன், என் மனைவி மகளுடன் சந்தித்தேன். இன்று மாலை மருத்துவ மனையில் அட்மிட் ஆகிவிடுங்கள், நாளையே துளையினை அடைத்து விடுவோம் என்றார். எங்களை வெளியில் காத்திருக்கச் சொன்னார். சிறிது நேரக் காத்திருத்தலுக்குப் பிறகு, செவிலியர் ஒருவர் எங்களிடம் வந்து, உங்கள் மகளுக்கு நாளை ஆபரேசன் செய்யப் போகிறார்கள். எங்கள் மருத்துவமனை வழக்கப்படி, நீங்கள் எந்த மருத்துவ மனையில், தங்கள் மகளுக்கு ஸ்கேன் செய்திருந்தாலும், நாங்களும் ஒரு முறை அனைத்து சோதனைகளையும் செய்து விட்டுத்தான் ஆபரேசன் செய்வோம். எனவே தங்கள் மகளுக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றார். சம்மதித்தோம். மருத்துவர் பிரேம் சேகர் அவர்களே இன்னும் ஒரு மணி நேரத்தில் தங்கள் மகளுக்கு ஸ்கேன் செய்வார் என்றும் கூறினார். காத்திருந்தோம்.
     காத்திருந்த நேரத்தில் அனந்தராமன் அவர்களுடன் மருத்துவ மனையின் அலுவலகத்திற்குச் சென்று, கால் வழியே, இதயத் துளையினை எவ்வாறு அடைப்பார்கள் என்று விசாரித்தோம்.மேலும் ஸ்டார் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இந்த ஆபரேசனை செய்து கொள்ள விரும்புகிறோம் என்பதை தெரிவித்தோம்.
     முதலில் இதயத் துளையினை அடைக்கும் முறை பற்றிப் பார்ப்போம். இதனை ஆங்கிலத்தில் Elective Device Closure என்கிறார்கள். நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து, மயக்கத்தில் ஆழ்த்தி, ஒரு மிகச்சிறிய கேமரா ஒன்றினை, ஒரு சிறு குழாய் வழியே, வாய்க்குள் செலுத்துவார்கள். குழாயின் முனையில் பொருத்தப் பட்டிருக்கும் கேமிராவானது, வாய் வழியே உள்ளே சென்று, இதயத்திற்குள் நுழையும். இதயத்திற்குள் கேமரா நுழைந்தவுடன் இதயத்தின் நிலைமையினை கணினித் திரையில் மருத்துவர்கள் தெளிவாகப் பார்த்து, இதயத்தில் ஓட்டை இருக்குமிடத்தையும், துளையின் அளவினையும் துல்லியமாகக் கணக்கிடுவார்கள். பிறகு கால் பகுதியில், கணுக்காலுக்கு சிறிது மேலே செல்லும் ஒரு நரம்பினைத் துண்டித்து, அந்த நரம்பின் வழியே, இதயத் துளையினை அடைக்கப் பயன்படும் பொருளை, ஒரு சிறு குழாயில் பொருத்தி, மேலே அனுப்புவார்கள். இக்குழாயானது இதயத்தை வேறொரு வழியே சென்றடையும்.
     இதயத்தினுள் இருக்கும் கேமிராவின் மூலம், கணினித் திரையில் பார்த்துக் கொண்டே, கால் வழியாகச் சென்ற பொருளைப் பயன்படுத்தி துளையினை அடைப்பார்கள்.ஒரு நாள் மருத்துவ மனையில் தங்கினால் போதும் அடுத்த நாளே வீட்டிற்கு வந்துவிடலாம்.
    இதயத் துளையினை அடைக்கப் பயன்படும் பொருள், நமது சட்டை பொத்தனை விட சிறிய அளவில் இருக்கும் என்றார்கள்.இது ஒருவிதமான அலாய் (Alloy) உலோகத்திலிருந்து தயாரிக்கப் படுவதாகும். இப்பொருள் நெகிழ்வுத் தன்மை உடையது. இப்பொருளை ஒரு சட்டைப் பொத்தானாகவே கற்பனை செய்து கொள்ளுங்கள். இரு சட்டைப் பொத்தான்களை அருகருகே வைத்து, இரண்டையும் அதன் துளைகளின் வழியே, ஒரு நூலால் இணைத்தால் எப்படியிருக்குமோ, அப்படித்தான், இந்த அலாய் மெட்டலின் வடிவமும் இருக்குமாம். இதயத் துளையினை ஒரு பொத்தான் வெளிப்புறமாக அடைக்கும், அதனடன் இணைந்திருக்கும் மற்றொரு பொத்தான், துளையினை உட்புறமாக அடைக்கும். அதாவது இதயத் துளையின் வெளிப்புறமாக ஒரு பொத்தானும், உட்புறமாக ஒரு பொத்தானும் அடைக்கும். இரு பொத்தான்களையும் ஒன்றை நோக்கி ஒன்றை அழுத்துவார்கள். இவ்வாறு அழுத்தும் போது இரண்டு பொத்ன்களும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். துளையும் முழுமையாக அடைபட்டு விடும்.
     இதயத் துளையினை அடைக்கப் பயன்படும் இந்த Elective Device ஆனது சீனாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் வரவழைக்கப் படுகிறது என்று தெரிவித்தனர். சீனத் தயாரிப்பின் விலை ரூபாய் ஒரு இலட்சம் என்றும், அமெரிக்கத் தயாரிப்பின் விலை ரூபாய் ஒரு இலட்சத்து இருபத்து ஆறாயிரம் என்றும் தெரிவித்தனர். அமெரிக்க Device ஐப் பொறுத்தச் சொன்னோம்.ஆபரேசன் மற்றும் அறை வாடகை என கூடுதலாக ரூ.46,000 ஆகும். மொத்தம் ரூ.1,72,000 செலவாகும் என்று தெரிவித்தனர்.
     ஸ்டார் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சையினை மேற்கொள்ள விரும்புகிறோம் என்பதைத் தெரிவித்தோம். அப்படியானால், சிகிச்சை முறை, திட்ட மதிப்பீடு அறிக்கை இரண்டினையும். ஸ்டார் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலகத்திற்கு இன்றே அனுப்புகிறோம். அவர்களிடமிருந்து ஓரிரு நாட்களில் ஒப்புதல் கிடைத்துவிடும். ஒப்புதல் கிடைத்தவுடன் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தனர். சரி என்றோம்.
     சிறிது நேரத்தில் செவிலியர் எங்களை அழைக்கவே, மகளை ஸ்கேன் செய்யும் அறைக்கு அழைத்துச் சென்றோம். மகளை மட்டும் அறைக்குள் அனுப்பிவிட்டு, வெளியே காத்திருந்தோம். அரைமணி நேரம் சென்றிருக்கும், மருத்துவர் எங்களை அழைப்பதாகத் தெரிவித்தனர். உள்ளே சென்றோம்.
     மருத்துவர் பிரேம் சேகர் அவர்கள், ஏற்கனவே எடுக்கப்பெற்ற, என் மகளது ஸ்கேன் அறிக்கையினை ஒரு கையிலும், மறு கையில் ஸ்கேன் செய்யும் கருவியை எனது மகளின் மார்பிலும் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். எங்களைப் பார்த்ததும், நீங்கள் கொடுத்த அறிக்கையில் ஏழு மில்லி மீட்டர் அளவுள்ள துளை உள்ளதாக இருக்கிறது. ஆனால் நான் பரிசோதித்த வகையில் துளையிருப்பதாகத் தெரியவில்லையே என்றார்.
      திகைத்துப் போய் அவரையேப் பார்த்துக் கொண்டு நிற்கிறோம். வார்த்தைகள் வெளியே வர மறுத்தன. அவரே தொடர்ந்தார், மூத்த மருத்துவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டோர் இதயத்தில் துளை இருப்பதாகக் கூறியுள்ளனர். அதனால் மகளை அட்மிட் செய்யுங்கள், தியேட்டருக்கு அழைத்துச் சென்று கேமிராவை இதயத்திற்குள் அனுப்பிப் பார்ப்போம். தேவைப் பட்டால் துளை இருக்குமானால், துளையினை அடைப்போம் என்றார்.
     Structurally mormal heart with thinned out fossa ovalis என்ற ஸ்கேன் அறிக்கையினைக் கையெழுத்திட்டு வழங்கினார். அறையை விட்டு வெளியே வந்தோம். சிறிது நேரக் காத்திருத்தலுக்குப் பிறகு, ஒரு பெண் கவுன்சிலர் எங்களை அழைத்து, குடும்ப விவரங்களைக் கேட்டு அவற்றைக் கணினியில் பதிவு செய்து அறிக்கை ஒன்றினை எங்களுக்கு வழங்கினார்.

Out Patient Clinic Peadiatric New Case Record
Heart problem detected a month back when she was evaluated for RTI of 1 month duration. Diagnosed case of OS ASD. Here for device closure.

Recommendations
Elective Device Closure of ASD with prior confirmation with transoesophageal echo cardiography.

அதாவது துளை இருப்பது உறுதிசெய்யப் பட்ட பிறகுதான், அடுத்தகட்ட நடவடிக்கை என்று அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது.
     அன்று மாலையே ஸ்டார் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலகத்திற்கு அனுமதி வேண்டி மின்னஞ்சல் அனுப்பப் பட்டது. அன்று மாலை பேசிய என் தந்தை, பரோடா வங்கிக் கிளையில் எனது கணக்கில் ரூ.25,000 செலுத்தியுள்ளேன் என்று தெரிவித்தார். ஏற்கனவேவங்கியில் ஒரு இலட்சம் இருக்கிறது, இப்பொழுது ரூ.25,000 ஆக வங்கியில் ரூ.1,25,000 இருக்கிறது, கையில் அனந்தராமனின் சகோதரர் கொடுத்த ரூ.50,000 இருக்கிறது, எனவே பணத்திற்காக கவலைப் பட வேண்டியதில்லை என்று முடிவு செய்தேன்.
     அடுத்த நாள் மனைவியையும் மகளையும், வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு, அனந்தராமன், பால்ராஜ் நான் மூவரும் மருத்துவ மனைக்குச் சென்றோம். ஸ்டார் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலகத்தில் இருந்து, ஒரு தகவல் கேட்டு மின்னஞ்சல் வந்துள்ளது என்று தெரிவித்தனர். மருத்துவமனை அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர் ஒருவர், எங்களையும் அழைத்துக் கொண்டுபோய், மருத்துவர் பிரேம் சேகரைச் சந்தித்தார். Echo sent to us shows a thinned out fosa ovailis with no colour croosing and a structurally normal heart. Send the TEE report confirming ASD என்று அந்த மின்னஞ்சலில் இருந்தது.
     தாங்கள் அனுப்பிய ஸ்கேன் அறிகையில் துளை இருப்பதற்கான அறிகுறி இல்லை. எனவே TEE என்னும் சோதனையினைச் செய்து, அதாவது TEE  எனப்படும் கேமிராவை இயத்திற்குள் அனுப்பி சோதிக்கும் சோதனையினைச் செய்து அறிக்கை அனுப்பவும் என்றிருந்தது.
     மருத்துவர் பிரேம் சேகர் அவர்கள் தனது பெயர் அச்சிடப் பட்ட மருந்துச் சீட்டில், TEE சோதனையினைத் தனியாக செய்ய இயலாது. துளையினை அடைக்கும் செயலின் முதல் பகுதியாக, கேமராவினை அனுப்புவோம்,துளை இருந்தால் அடைப்போம், இல்லாவிடில் கேமிராவினை வெளியே எடுத்து விடுவோம்.  இரண்டினையும் ஒன்றாகத்தான் செய்ய வேண்டும், தனித்தனியாகச் செய்ய இயலாது என்று எழுதி கொடுத்தார். அவரது பதில் மின்னஞ்சல் மூலம் உடனே அனுப்பப் பட்டது. நாளை மாலைக்குள் அனுமதி கிடைத்து விடும் என்றனர். நாளை மருத்துவ மனையில் பணம் கட்ட வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தனர்.
     அனந்தராமன் எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். கையில் ஐம்பதாயிரம் இருக்கிறது, வங்கியில் ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் இருக்கிறது. ஏ.டி.எம்., கார்டு இருக்கிறது, எங்கு வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றேன். எதற்கும் வங்கியில் இருக்கும் பணத்தினை இன்றே எடுத்து கையில் வைத்துக் கொள்வோம் என்றார்.
     ஏ.டி.எம்., செண்டருக்குச் சென்று வங்கி அட்டையினை சொருகி ரூ.50,000 என பொத்தான்களை அழுத்தினேன். பணம் வரவில்லை.இரண்டு மூன்று ஏ,.டி.எம்,. செண்டர்களுக்குச் சென்று முயற்சித்தும் பணம் வரவில்லை.தொகையினைக் குறைத்து முயற்சி செய்தேன் ரூ.15,000 தொகை வந்தது. இன்னும் ஒரு மூறை ரூ.15,000 எடுக்க முயன்றேன். ஒரு துண்டு சீட்டு மட்டுமே வந்தது. ஒரு நாளைக்கு ரூ.15,000 ற்கு மேல் ஏ.டி.எம்.,ல் எடுக்க முடியாது என்பது அப்பொழுதுதான் புரிந்தது.
     எனது சேமிப்புக் கணக்கில் பணம் இருந்தும் எடுக்க இயலவில்லை. மறு நாள் முயன்றாலும் ரூ.15,000 தான் எடுக்கலாம். என்ன செய்வது என்று புரியவில்லை.  ஆக மொத்தத்தில் புத்திசாலித்தனம் என்று எண்ணி, மடத்தனமான செயலினைச் செய்திருக்கிறேன் என்பது மட்டும் புரிந்தது.நேரமோ இரவாகிவிட்டது. ஒன்றும் செய்வதற்கில்ல்.அனந்தராமன் அவரது நண்பர் ஒருவரிடம் பேசினார். நாளை காலை ரூ.50,000 தேவை என்று கூற அவரும் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தார்.
     பொழுது புலர்ந்தது. காலை 10.00 மணிக்கு முதல் வேளையாக, தஞ்சாவூர் பரோடா வங்கிக் கிளைவில் பணியாற்றி, கும்பகோணம் கிளையில்  பணயாற்றிக் கொண்டிருக்கும், மதியழகன் என்பாரிடம் தொலைபேசியில் பேசினேன். அவர் கும்பகோணத்தில் இருந்து மாற்றலாகி நாகர் கோவிலில் இருப்பதாகக் கூறினார். மேலும் என்னிடம் செக் புக் இருக்கிறதா எனக் கேட்டார். செக் புக் இருந்தால், இந்தியாவில் எந்த பரோடா வங்கிக் கிளையிலிருந்தும் பணம் எடுக்கலாம் என்றார். என்னிடம் செக் புக் இல்லை என்றேன். வங்கியின் Withdrawal Slip ஐப் பய்ன்படுத்தி ரூ.25,000 வரை எடுக்கலாம் என்றார்.
     அடுத்து எனது சேமிப்புக் கணக்கு இருக்கும், தஞ்சை பரோடா வங்கிக்கு போன் செய்தேன். வங்கி அலுவலர் ஒருவர் பேசினார். நான் எனது நிலையினை எடுத்துச் சொன்னேன். பொறுமையாகக் கேட்டார். பின்னர் உங்களது சேமிப்புக் கணக்கு எண்ணைக் கூறுங்கள் என்றார். கூறினேன். சற்று காத்திருங்கள் என்றார். காத்திருந்தேன். அவர் கணிப்பொறிப் பலகையினைத் தட்டும்  ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது. ஒரு நிமிடம் கழித்துப் பேசினார், உங்கள் கணக்கைப் பார்த்தேன், ஒரு இலட்சத்து பத்தாயிரம் இருப்பு உள்ளது. உங்கள் கணக்குடன் உங்களது புகைப்படமும், மாதிரிக் கையெழுத்தும் பதிவாகி உள்ளதா? என்று பார்த்தேன், பதிவாகி இருக்கிறது. எனவே நீங்கள் பணம் பெறுவதற்கு ஒரு வழி இருக்கிறது என்றார். மகிழ்வுடன் கூறுங்கள் என்றேன்.
     உங்களிடம் செக் புக் இல்லாததால் நேரிடையாகப் பணம் எடுக்க முடியாது. ஆனால் வேறொரு கணக்கிற்கு உங்கள் பணத்தை மாற்றம் செய்யலாம். அதாவது சென்னையில் இருக்கும் பரோடா வங்கியின் ஏதேனும் ஒரு கிளைக்குச் செல்லுங்கள். அந்த வங்கியில், உங்களுக்குத் தெரிந்தவர் யாரேனும் கணக்கு வைத்திருப்பாரேயானால், Withdrawal Slip ஐப் பயன்படுத்தி, உங்கள் கணக்கில் உள்ள தொகையினை அவர் கணக்கிற்கு மாற்றுங்கள். பின்னர் அவரது காசோலையினைப் பயன்படுத்தி, அவர் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். வங்கிக் கிளைக்குச் சென்று, எனக்குப் பேசுங்கள், நானே அந்த வங்கிஅலுவலரிடம் பேசி, பணத்தை மாற்றுவதற்கு உதவி செய்கிறேன் என்றார். சார் உங்களுக்கு மிக்க நன்றி, உங்களின் பெயரினைத் தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டேன். சுப்பிரமணியன் என்று கூறினார்.
      சென்னை பரோடா வங்கியில் கணக்கு வைத்திருப்பவரை எங்குபோய் தேடுவது? என்று புரியவில்லை. நண்பர் அனந்தராமன் உடனே அவரது நண்பர் ஒருவருக்கு போன் செய்ய,அவர், ஆம் வளசரவாக்கம் பரோடா வங்கிக் கிளையில் எனக்குக் கணக்கு இருக்கிறது, உடனே வருகிறேன் என்றார். உடனே புறப்பட்டு வளசரவாக்கம் பரோடா வங்கிக் கிளைக்குச் சென்றோம். சிறிது நேரத்தில் அனந்தராமனின் நண்பர் அங்கு வந்தார். அவரது நண்பர் ஒரு தனியார் நிறுவனத்தில், நீர் வள மேலான்மை தொடர்பான பணியினைச் செய்து வருகிறார் என்றும் இராஜசேகர் என்பது அவர் பெயர் என்றும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நன்றி கூறி அவரை வரவேற்றேன்.தஞ்சை கிளையில் பணியாற்றும் சுப்பிரமணியன் அவர்களைத் தொடர்பு கொண்டு,வளசரவாக்கம் கிளை அலுவலரிடம் எனது அலைபேசியைக் கொடுத்தேன். இருவரும் பேசிக் கொண்டனர். வங்கி அலுவலர் எனக்கு ஒரு Withdrawal Slip ஐக் கொடுத்தார்,ரூ.85,000 ஆனது எனது கணக்கிலிருந்து, ராஜசேகரின் கணக்கிற்கு மாறி, அவர் கணக்கிலிருந்து, என் கைக்கு ஐந்தே நிமிடத்தில் வந்து சேர்ந்தது. வங்கி அலுவலருக்கும், இராஜசேகருக்கும் நன்றி கூறி புறப்பட்ட நேரத்தில், அனந்தராமனுக்கு பிரான்டியர் லைப் லைன் மருத்துவ மனையிலிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.
     ஸ்டார் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலகத்தில் இருந்து அனுமதி வந்துவிட்டது. ரூ.1,72,000 கேட்டிருந்தோம். முதல் தவணையாக ரூ.80,000 அனுமதிக்கப் பட்டுள்ளது. ஆபரேசன் முடிந்தவுடன், மீதித் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள்ரூ.80,000 போக மீதமுள்ள தொகையான ரூ.92,000 ஐ காப்புத் தொகையாக உடனே செலுத்துங்கள்.  ஸடார் காப்பீட்டுத் திட்ட அலுவலகத்திலிருந்து  மீதமுள்ள தொகையினைப் பெற்றவுடன், நீங்கள் செலுத்திய தொகை திருப்பித் தரப்படும். இன்று மாலை ஜெயக்குமாரின் மகளை மருத்துவ மனையில் சேருங்கள். நாளை காலை 11.00 மணிக்கு ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவமனை அலுவலர் கூறினார்.
    உடனே அனந்தராமனின் வீட்டிற்குச் சென்று மனைவியையும், மகளையும் அழைத்துக் கொண்டு மருத்துவ மனைக்குச் சென்றோம். பணத்தைக் கட்டினோம். மகளை சேர்த்தோம்.
     மகளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, ஆசிரியர் டி..ஜெயச்சந்திரன் அவர்களைப் பார்க்கச் சென்றோம். உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் நான் மாணவனாகப் பயின்றபோது, எனக்கு ஆசிரியராக இருந்தவர். என் ஆசான். அதே பள்ளியில் நான் ஆசிரியராகப் பணியேற்றவுடன், நமது மாணவன்தானே என்று எண்ணாமல், நல்ல நண்பராய், உற்ற தோழராய் பழகி வருபவர். பணி ஓய்வுக்குப் பிறகு சென்னையில் குடியேறி போரூரில், ப்ராண்டியர் லைப் லைன் மருத்துவ மனைக்கு அருகில் உள்ள மருத்துவ நிறுவனத்தில் மேலாளராய் பணியாற்றி வருபவர். நடந்தே அவரின் அலுவலகத்தை அடைந்தோம். கவலைப் படவேண்டாம் நல்லதே நடக்கும், கர்த்தர் கைவிட மாட்டார் என ஆறுதல் கூறினார்.
     மறுநாள் காலை தஞ்சையிலிருந்து நண்பர்களும், உறவினர்களும் மருத்துவமனைக்கு வருவதாக கூறியிருந்தனர். மருத்துவ மனைக்கு அருகிலேயே நாங்களும் தங்க விரும்பினோம். எனவே எங்கு தங்குவது என விசாரித்தபோது, போரூர் பகுதியில் மருத்துவ மனைக்கு அருகிலேயே, மருத்துவமனைக்கு வருபவர்களின் வசதிக்காக வீடுகள் நாள் வாடகைகு விடப்படுகின்றன என்பதை அறிந்தோம்.
      மருத்துவமனைக்கு அருகிலேயே அமைந்திருந்த அடுக்ககம் ஒன்றில், ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்தோம். தங்குவதற்கு இரு அறைகள், சமையல் பாத்திரங்களுடன் கூடிய தனி சமையல் அறை,குளியலறை என அந்த வீடு அமைந்திருந்தது. நாளொன்றுக்கு ரூ.300 வாடகை.
     மறுநாள் 11.6.2010 வெள்ளிக் கிழமை காலை நண்பர்கள் சரவணன், சேகர் மற்றும் பத்மநாபன் மூவரும் தஞ்சையிலிருந்து வந்தனர். சென்னையில் கணிப்பொறி பயிற்சி மையம் நடத்தி வரும் நண்பர் சுதாகர் அவர்களும், எனது மாணவரும், சென்னையில் கணிப்பொறி நிறுவனத்தில் பணியாற்றி வருபவருமான ஜெயக்குமார் அவர்களும் காலையிலேயே மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.
     மேலும் தஞ்சையிலிருந்து எனது மாமனார், மாமியார், மைத்துனர்கள் தெய்வீகன், ஞானசேகர் ஆகியோர் மருத்துவ மனைக்கு வந்தனர். எனது மாமனார் ரூ.20,000 ஐ என்னிடம் கொடுத்து செலவிற்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். தேவையான தொகை இருக்கிறது என்றேன், பரவாயில்லை இதனையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். பெற்றுக் கொண்டேன்.
     எனது உறவினர் சென்னையில் பணியாற்றும் லோகநாதன் அவர் மனைவி பாக்யா மற்றும் சதீஸ் ஆகியோரும் காலையிலேயே மருத்துவ மனைக்கு வந்துவிட்டனர்.ஆசிரியர் ஜெயச்சந்திரன் அவர்களும் வந்திருந்தார். நான் பணியாற்றும் உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் இருந்து ஆசிரியர்களும், ஆசிரியைகளும் அலைபேசியில் பேசிய வண்ணம் இருந்தனர்.
     சென்னையிலிருக்கும் சிவக்குமார் என்பவர் அலைபேசியில் என்னை அழைத்தார். நான், உங்களுடன்  பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் நடராஜன் அவர்களின் உறவினர். நான் சென்னையில் வசித்து வருகிறேன். தங்கள் மகளுக்கு இன்று ஆபரேசன் என்று நடராஜன் கூறினார். மேலும் உங்களுக்கு வேண்டிய உதவிகளை உடனிருநது செய்யப் சொன்னார். எங்கு இருக்கிறீர்கள் என்று கூறுங்கள் நேரில் வருகிறேன் என்றார்.
     என்னோடு நண்பர்களும், உறவினர்களும் இருக்கிறார்கள் என்பதை கூறி, உதவி தேவைப்படுமேயானால் நானே உங்களை அழைக்கின்றேன் என்று கூறினேன்.
     காலை பதினோரு மணி அளவில் எனது மகளை ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார்கள். நான், அனந்தராமன் மற்றும் என் மனைவி மூவரும்,மகளுக்காக ஒதுக்கப் பட்ட அறையிலேயே காத்திருந்தோம். நண்பர்களும், உறவினர்களும் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்தார்கள்.
     ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு யுகமாய் மெல்ல, மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. இரண்டு மணி நேரம் காத்திருந்தோம். அறையில் முன்று பேர் இருந்தும் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை.

     காலடிச் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்கிறோம். மருத்துவர் பிரேம் குமார் அவர்கள் ஆபரேசன் தியேட்டரில் அணியும் உடையுடன் எங்களை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறார். She is all right, இதயம் ஆரோக்கியமாய் இருக்கிறது. இதயத்தில் ஓட்டை என்பது கிடையவே கிடையாது. தற்சமயம் மயக்கத்தில் இருக்கிறார். I will discharge her immediately. மயக்கம் தெளிந்ததும், மகளை அழைத்துக்கொண்டு நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம். மருந்து எதுவும் தேவையில்லை என்று கூற,மூவரும் கலங்கிய கண்களுடன் அவரையேப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மகிழ்வை வெளிப்படுத்தக் கூட, வார்த்தைகள் வெளிவராத நேரம் அது. மருத்துவரின் கைகளைப் பற்றிக் கொண்டேன்.
நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த மருத்துவர் பிரேம் சேகர்
     மருத்துவ மனைக்கு வெளியில் காத்திருந்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இச் செய்தியினைக் கூற, அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர். தஞ்சாவூருக்கு போன் செய்து தந்தையிடமும்,சித்தப்பாவிடமும், எனது சகோதரரிடமும் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டேன். என்னுடன் பணியாற்றும் ஆசிரிய,ஆசிரியைகளை அலைபேசியில் தொடர்பு கொண்டு செய்தியைத் தெரிவித்தேன். உடற்கல்வி ஆசிரியர் நடராசனின் உறவினர், சிவக்குமார் அவர்களிடம் பேசி நன்றி கூறினேன்.
      ஆசிரியர் ஜெயச்சந்திரன் அவர்கள், மருத்துவமனையில் அறையில் எனது மகளை அமரவைத்து, மகளின் எதிர்கால நலனுக்காக, இயேசு பிரானிடம் பிரார்த்தனை செய்தார்.
     மாலை ஆறு மணியளவில் எனது மகள் மருத்துவமனையிலிருந்து discharge செய்யப்பெற்றார். நண்பர்களும், உறவினர்களும்அன்று இரவே சென்னையிலிருந்து புறப்படுவதற்கு பேரூந்து பயணச் சீட்டுகளை, தனது அலுவலகத்தின் மூலம், ஆசிரியர் ஜெயச்சந்திரன் அவர்கள் பெற்றுத் தந்தார்.
     எனது மகள் மயக்க நிலையிலிருந்து முழுமையாக விடுபடாத நிலையில் இருந்ததால், அடுத்த நாள் சனிக் கிழமை காலை, தொடர் வண்டி மூலம் தஞ்சை திரும்புவது என்று முடிவு செய்தோம். நண்பர் சுதாகர் அவர்கள், உடனே தனது மனைவியைத் அலைபேசியில் அழைத்து, இணையதளத்தின் மூலமாக,பால்ராஜ், நான், என் மனைவி, மகள் என நால்வருக்கும் பயணச் சீட்டினை முன்பதிவு செய்யச் சொல்லி, பெற்றுக் கொடுத்தார்.
      இந்நிகழ்வு நடைபெற்று, ஒன்றரை வருடங்கள் கடந்து விட்ட நிலையில், இன்று நினைத்தாலும், நெஞ்சம் கனப்பதை உணர முடிகிறது.
       பகலில் விழித்திருக்கையிலும், இரவில் உறங்கும்போதும் கூட, ஓர் எதிர்மறை எண்ணம் மின்னலாய் தோன்றி மறைவதைத் தவிர்க்க இயலவில்லை. சென்னைக்கு செல்லாமல், வேறொரு ஊரிலுள்ள. மருத்துவ மனையில், என் மகளைச் சேர்த்திருப்பேனேயானால், என்ன நடந்திருக்கும் என்னும் நினைவு என்னை வாட்டி வதைக்கின்றது. நெஞ்சைக் கீறி, நெஞ்சக எலும்புகளை அறுத்துப் பிரித்துப் பார்த்தபிறகு அல்லவா, இதயத்தில் துளை இல்லை என்பது தெரிந்திருக்கும். யார் செய்த தவறுக்கு, யார் தண்டனையை அனுபவிப்பது?
      இலண்டன் மருத்துவர், என மகளின் ஸ்கேன் படக் காட்சிகளை மின்னஞ்சலில் பார்த்து, இதயத்தில் துளை இருப்பது உண்மைதான் என்று கூறினாரே? அப்படியானால் அக் குறுந்தகட்டில் துடித்துக் கொண்டிருந்தது யார் இதயம்?

        என் மகளுக்கு பிரச்சினையின் தீவிரம் பற்றி அறியாத சிறு வயது. ஆனால் எங்கள் மகளுக்கு இதயத்தில் துளை இருப்பதாக மருத்துவர் கூறிய நாளிலிருந்து, சுமார் இரண்டு மாத காலம், எனது மனைவி மனதளவில் எவ்வளவு வேதனைப் பட்டிருப்பார்?. வெளியில் காட்டிக் கொள்ளாமல் எவ்வளவு துடித்திருப்பார்?. வயது முதிர்ந்த காலத்தில், எனது தாய், தந்தையர் எவ்வளவு வாடி வதங்கி இருப்பர்?. எனது மானமாரும், மாமியாரும் எவ்வளவு துயரப் பட்டிருப்பர்?. நண்பர்களும், உறவினர்களும் பதறித் துடித்தத் துடிப்பினை எண்ணிப் பாருங்கள். எங்களுக்கு ஏன் இந்த தண்டனை? என்ன தவறு செய்தோம்?
             மனித நேயம் என்பது எழுத்திலும், ஏட்டிலும் மட்டும் தானா? கேள்விகள் அடுக்கடுக்காய் பிறக்கின்றனவே தவிர, விடையானது வெளிப்படாமல் கண்ணாமூச்சு விளையாடிக் கொண்டிருக்கிறது.
     என் வாழ்வின் சோதனை மிக்க இக்கால கட்டத்தில், தூண்களாய் நின்று என்னைத் தாங்கிப் பிடித்த நண்பர்களை நினைத்துப் பார்க்கின்றேன். இவர்களைப் போன்ற நண்பர்களின் அன்பினையும், அரவணைப்பினையும் பெறுவதற்கு நான் உண்மையிலேயே தகுதியானவன்தானா? என்கிற எண்ணம் அவ்வப்பொழுது தோன்றுகிறது. தகுதியானவனாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் தொடர்கிறது.
     நண்பர் பாலராஜ் ஐந்து நாட்களும் என்னுடன் இருந்தார். நண்பர் அனந்தராமன், செவ்வாய்க் கிழமை காலை, நாங்கள் சென்னையில் காலடி எடுத்து வைத்த அந்த நிமிடத்தில் இருந்து, சனிக் கிழமை காலை, எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து புறப்படும் வரை, தன் அலுவலகம் பக்கமே செல்லாமல், ஒவ்வொரு நொடியினையும் எங்களுக்காக மட்டுமே செலவிட்டார். அவர் மட்டுமா, அவரது மனைவியும் ஐந்து நாட்களும் பணிக்குச் செல்லாமல் எங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்.
      அனந்தராமன், ஆசிரியர் ஜெயச்சந்திரன், சரவணன், பால்ராஜ்,சேகர், பத்மநாபன்,சதாசிவம், சுதாகர், ஜெயக்குமார், சென்னை நண்பர்களான சரவணன், இராஜசேகர், சிவக்குமார் ஆகியோரையும் மருத்துவர் பிரேம் சேகர் அவர்களையும், உடனிருந்து உதவிய உற்றார் உறவினர்களையும் , என் வாழ்நாளில் என்றும் மறவேன்.
      தஞ்சை திரும்பியதற்கு அடுத்தநாள் என் மனைவி, எங்களின் மூத்த மகனிடம் சொன்னார், அப்பாவிற்குக் கிடைத்த நண்பர்கள் போல் உனக்கும் நண்பர்கள் அமைய வேண்டும், நண்பர்களிடம் நீயும் உண்மையாய் இரு.
                      -----------------------------------------