27 ஏப்ரல் 2013

கரந்தை - மலர் 6


--------. கடந்த வாரம் --------
உண்மையின் உறைவிடமாய் விளங்கிய உமாமகேசுவரனாருக்கும், மாவட்ட துணை ஆட்சியாளருக்கும், ஒரு விசயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படவே, தன் வேலையே வேண்டாமென்று உதறித் தள்ளினார்.
-------------------------------
   
     பின்னர் சென்னை சென்று, சென்னைச் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். சட்டப் படிப்பினை வெற்றிகரமாக முடித்த உமாமகேசுவரனார், கரந்தை திரும்பி, அந்நாளில் சிறந்து விளங்கிய வழக்கறிஞர் கே.சீனிவாச பிள்ளை என்பாரிடம் சேர்ந்து, வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். சில ஆண்டுகளிலேயே சட்ட நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து, தனியே வழக்குரைஞர் தொழிலைச் செய்யத் தொடங்கினார்.

     உமாமகேசுவரனார் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கியபோது, ஒருசில தமிழர்களே வழக்கறிஞர்களாய் இருந்தனர். ஏ.டி.பன்னீர் செல்வர், ஐ.குமாரசாமி பிள்ளை, மருத முத்து மூப்பனார், அழகிரி சாமி நாயுடு, எம்.வேங்கடாசலம் பிள்ளை என விரல் விட்டு எண்ணிவிடலாம்.

     பெயர்ப் பலகைக் கூடத் தொங்க விடாமல், ஏறத்தாழ முப்பத்தியிரண்டு ஆண்டுகள், திறம்பட வழக்கறிஞராயய் பணியாற்றியவர் உமாமகேசுவரனார்.

     இடையறா உழைப்பு, உண்மைக்காகவும், நேர்மைக்காகவும் மட்டுமே வாதிடும் உயரிய குணம், அச்சம் என்பதை என்னவென்றே அறியாத உள்ளம் இவையே வழக்கறிஞர் உமாமகேசுவரனாரின் பண்புகளாகும்.

     எக்கட்சிகாரரிடமும் வழக்காடுவதற்கு உரிய தொகை இவ்வளவு என ஒருபோதும் கூறமாட்டார். பணம் கொடுக்க இயலாத ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்காக, எவ்விதத் தொகையும் பெறாமல் வழக்காடி வெற்றி தேடித் தருவார்.

     இவ்வாறான தன்மைகளால் அன்றைய ஆங்கிலேய அரசாங்கத்திற்கும் நம்பிக்கையானவராகத் திகழ்ந்தார். இதனாலேயே அரசு கூடுதல் வழக்கறிஞர் பதவியும் இவரை நாடி வந்து பெருமையடைந்தது.

     இத்தகு பெருமை வாய்ந்த, தகுதி வாய்ந்த, தனது சகோதரரைத்தான், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக்க இராதாகிருட்டினன் உளம் கொண்டார். தனது சகோதரரை, நண்பர்களோடு சேரந்து சென்று சந்தித்து, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின தலைமைப் பொறுப்பினை ஏற்றிட ஒப்புதலைப் பெற்றார்.

     இவ்வாறாக, கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோற்றம் பெற்றிட, அனைத்து நிலைகளிலும் அயராது உழைத்தமையால் இராதாகிருட்டினனை சங்கம் நிறுவிய துங்கன் என அனைவரும் போற்றலாயினர்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம்

         
நாவலர் ந.மு.வே
தஞ்சாவூர், கரந்தை, கந்தப்பச் செட்டியார் சத்திரத்தில், 1911 ஆம் ஆண்டு மே திங்கள் 14 ஆம் நாள், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தலைமையில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழா சிறப்பாக கொண்டாடப் பெற்றது.


    
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழா நடைபெற்ற கந்தப்ப செட்டியார் சத்திரம் இன்று பாழடைந்த நிலையில்
கரந்தைத் தமிழ்ச் சங்கம், என்றென்றும் வளர் பிறையாய் வளர, தமிழ் மொழியின் இழந்த பெருமைகளை மீட்க, கீழ்க் கண்டோர், கரந்தைத் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர்.
 
இராசாளியார் மற்றும் பெத்தாச்சி செட்டியார்
ஆதரிப்பாளர்கள்

அரித்துவார மங்கலம், பெருநிலக் கிழார்,
பெருவள்ளல் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார்

ஆண்டிப்பட்டி, பெருநிலக் கிழார்,
பெருவள்ளல் சா.ராம.ழ.சித. பெத்தாச்சி செட்டியார்சபைத் தலைவர்

திரு த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

உதவி சபைத் தலைவர்

மோகனூர் ஆர். வேங்கடாசலம் பிள்ளை

காரியதரிசி

திரு பி.கல்யாண சுந்தரம் பிள்ளை

உதவிக் காரியதரிசி

திரு கோவிந்தசாமி பிள்ளை

பொருளாளர்

திரு எஸ். தட்சிணாமூர்த்தி பிள்ளை

விகிதர்

திரு அ. கணபதி பிள்ளை

அங்கத்தினர்கள்

திரு த.வே.இராதாகிருட்டின பிள்ளை
திரு பா.சிவகுருநாத பிள்ளை
திரு ஆர். கிருட்டினசாமி பிள்ளை
திரு ஜி. மாது சாமி வன்னியர்
திரு டி.கே. இராமசாமி பிள்ளை
திரு மகா தேவ ராவ்
திரு கி. நாக பிள்ளை
திரு பி.வேங்கடாசலம் பிள்ளை
திரு அயில் செட்டியார்
பட்டுக்கோட்டை திரு வி. நாராயண சாமி பிள்ளை
பட்டுப் கோட்டை திரு துரைசாமி நாயுடு
கரந்தை திரு முருகேசன்

கௌரவ அங்கத்தினர்கள்

திரு சேதுராம பாரதியார்
திரு அர்.சுப்பிரமணிய அய்யர்
திரு உ.நா.அப்பாசமி அய்யர்
திரு ஐ.சாமிநாத முதலியார்
திரு எல்.உலகநாத பிள்ளை
திரு சோமநாத ராவ்
திரு மு.வேங்கடசமி நாட்டார்
திரு ஜோசப் பிள்ளை
திரு வீ.சுப்பராய பிள்ளை
திரு பழனி வேலு பிள்ளை
திரு ஆ.வை. இராமசாமி பிள்ளை
திரு மரு.குப்பு சாமி பிள்ளை
திரு நா.அ.மு. திருவேங்கடம் செட்டியார்
திரு இராமசாமி வன்னியர்
திரு சிவஞானம் பிள்ளை
திரு மு.ஆப்பிரகாம் பண்டிதர்
உக்கடை திரு பாப்பா நாடு சமீன்தார்
திரு வி.ஏ. வாண்டையார்

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற பிறகு, வித்தியா நிகேதனம் சரியாக செயல்படாது போயிற்று.  ஆயினும் வித்தியா நிகேதனத்தின் தலைவர் இராசாளியார் அவர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பேரில், எவ்வித மன வருத்தமும் அடையாது, வேண்டும் உதவிகளைச் செய்து வந்தார்.

       கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் திங்கள் தோறும் கூட்டங்கள் நடத்துவதென்றும், ஆண்டுதோறும் ஆண்டு விழாக்கள் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பெற்றது.

     மக்கள் வேற்று மொழிச் சொற்கள் கலக்காத தூய தமிழில் பிழையின்றிப் பேசுமாறும், எழுதுமாறும் செய்வதே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் குறிக்கோள் ஆயிற்று. தமிழகத்தின் தெருக்களில் தமிழ்தான் இல்லை என்னும் இழி நிலையினைப் போக்க வேண்டும் என்பதற்காகக், கரந்தைத் தமிழ்ச் சங்கம்  வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியது.

      ஆண்டுதோறும் நடைபெற்ற ஆண்டு விழாக்களில், தமிழகத்துப் பெரும் புலவர்கள் அனைவரும் வந்து பங்கேற்றனர். தமிழ்ப் புலவர்கள் ஓரிடத்தில், ஒன்று கூடுவதற்குக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழி செய்தது. தமிழைத் தமிழர்களே கற்காது புறக்கணித்தபோது, தமிழில் பேசுதல் கற்றவர்களுக்கு இழுக்கு என்ற கருத்து, வேரூன்றத் தொடங்கிய போது, அழகிய தமிழ்ச் சொற்களின் இடத்தினை, வடமொழிச் சொற்களும், ஆங்கிலச் சொற்களும் பிடித்து அரசாளத் தொடங்கியபோது, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அயராயப் பணிகள் , தமிழக மக்களிடத்தில் மாபெரும் புரட்சியினை உண்டாக்கின.

     தமிழும், வடமொழிச் சொற்களும் கலந்து பேசும் மணிப் பிரவாள நடை மறைந்து, தூய தனித் தமிழில் பேசும் பேச்சு வழக்கு உண்டாயிற்று. இந்த தனித் தமிழ் நடை, கரந்தை நடை என்றே போற்றப் பெற்றது.

     விவாக சுபமுகூர்த்தப் பத்திரிக்கை என்னும் சொல் மறைந்து, திருமண அழைப்பிதழ் என்னும் சொல் தோன்றியது. மகாராய ராய ஸ்ரீ போய் திருவாளர், திரு என்னும் தமிழ்ச் சொற்கள் வழக்கத்திற்கு வந்தன. பிரசங்கம் என்பது சொற்பொழிவு ஆயிற்று, அக்கிராசனாதிபதி தலைவர் ஆனார். காரியதரிசி செயலாளர் ஆகவும், பொக்கிஷத்தார் பொருளாளராகவும் மாறிப் போனார். சீமான், சீமாட்டி என்ற செற்கள் போய் திரு, திருமதி, என்னும் சொற்களும், செல்வன், செல்வி போன்ற எண்ணற்ற தூய தமிழ்ச் சொற்களும் வழக்கிற்கு வந்தன.

     சங்கம் தோன்றிய நாளில், உதவி சபைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட, மோகனூர் ஆர்.வேங்கடாசலம் பிள்ளை அவர்கள், 1913 ஆம் ஆண்டிலிருந்து செயலாளர் பொறுப்பேற்று செம்மாந்தப் பணியாற்றத் தொடங்கினார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கக் கலா நிலையம்

     உலக மொழிகளுள் உயர் மொழியாய் வீற்றிருந்த தமிழ் மொழி, மீண்டும் அவ்வுயர்வைப் பெற வேண்டும் என்ற ஆராத காதலினாலும், தமிழ் மக்கள் கலை நயம் முதலிய எல்லா நலங்களையும் பெற்று, உலக மக்களுள் ஒருவராகக் கருதப்பட வேண்டும் என்னும் கருத்தினாலும், உமாமகேசுவரனார் அவர்கள், சங்கம் தொடங்கப்பெற்ற முதலாண்டிலேயே, சங்கத்திற்கென்று தனியொரு நூல் நிலையம் அமைக்கும் பணியினைத் தொடங்கினார்.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே. நூலகம் ஒன்றினைத் தொடங்க எண்ணி முயற்சி மேற்கொண்ட உமாமகேசுவரனார், சேகரித்த நூல்களை அடுக்கி வைப்பதற்குக்கூட இடம் இல்லாமல் தவித்த தவிப்பை அடுத்தவாரம் பார்ப்போமா நண்பர்களே.

20 ஏப்ரல் 2013

கரந்தை - மலர் 5---------- கடந்த வாரம் ----------
நாம் எதற்காக இவர்களுக்குச் சேவகம் செய்ய வேண்டும்? இந்த அமைப்பினின்று விலகி, நாமே நமக்காக ஒரு புதியத் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி, நம்மால் இயன்றப் பணிகளைச் செய்தால் என்ன?
-----------------------------------   

               இளைஞர்கள் அனைவரும் இராதாகிருட்டினன் கருத்தை வரவேற்றனர். இராதாகிருட்டினனின் முயற்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதாக உற்சாகமுடன் உறுதியளித்தனர்.

     எனவே புதியதொரு தமிழ்ச் சங்கம் தொடங்குவதென்று அனைவரும் முடிவெடுத்தனர். புதிய தமிழ்ச் சங்கத்திற்குப் பெயர் வைக்க வேண்டுமல்லவா? என்ன பெயர் வைக்கலாம் என்று அனைவரும் ஆலோசனை நடத்தினர். தமிழகத்துத் தமிழர்களிடம், தமிழுணர்ச்சியைத் தட்டிய எழுப்பிய சங்கம் மதுரைத் தமிழ்ச் சங்கமல்லவா? எனவே மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பெயரினைப் பின்பற்றி, இப்புது சங்கம், கரந்தையில் செயல்பட இருப்பதால், கரந்தைத் தமிழ்ச் சங்கம் எனப் பெயரிடுவது எனத் தீர்மானித்தனர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கமானது, எந்நாளும் நிலைத்து நின்று தமிழ்ப் பணியாற்ற வேண்டுமென்று இராதாகிருட்டினன் விரும்பினார். எனவே இச்சங்கத்திற்கு, அரசு விதிகளின்படி, தலைவர், துணைத் தலைவர், செயலாளர் முதலானோரைத் தேர்ந்தெடுக்க எண்ணினார்.

     இளைஞர்கள் அனைவரும், இராதாகிருட்டினனே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினைத், தலைமையேற்று நடத்த வேண்டும் என வற்புறுத்தினர்.

      நண்பர்களின் வேண்டுகோளை ஏற்க மறுத்த இராதாகிருட்டினன், அதற்கானக் காரணங்களை விவரித்தார். நான் தற்சமயம் தனுக்கோடி கடற் சுங்கத்  ஆய்வுக் கழகத் தலைமை தாளாளராகப் பணியாற்றி வருகிறேன். அரசு உத்தியோகம் என்பதால், இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, பணியிட மாறுதல் காரணமாக, பல்வேறு ஊர்களுக்கும் சென்று பணியாற்ற கடமைப் பட்டுள்ளேன். அதனால் கரந்தையில் நிரந்தமாய் தங்கி என்னால் பணியாற்ற இயலாது. நாம் உருவாக்க நினைக்கும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குத் தலைமை ஏற்பவர், கரந்தையில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

      மேலும் தற்பொழுது ஆங்கிலேயர் ஆடசி நடைபெறுவதால், தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக, ஆங்கிலேயர்களின் உதவியினை நாட வேண்டியிருக்கும். எனவே தமிழ்ப் புலமையோடு, ஆங்கிலத் திறமையும் கைவரப் பெற்ற ஒருவரே இச்சங்கத்திற்குத் தலைமை ஏற்கத் தகுதியானவராக இருப்பார் என எண்ணுகிறேன்.

     தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மிகச் சிறந்த புலமை மிக்கவரும், தஞ்சையின்  புகழ் பெற்ற நேர்மையான வழக்கறிஞருமான, எனது சகோதரர் திரு த.வே. உமாமகேசுவரனார் அவர்களே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமையினை ஏற்கத் தகுதியானவர் என உளப்பூர்வமாக நம்புகிறேன்.

     உமாமகேசுவரனாருக்கு உற்றத் துணையாய் இருந்து, சங்கத்தை வளர்த்திட, இழந்த தமிழின் பெருமைகளை மீட்டிட, முழுவதும் தகுதியானவராகிய, எனது ஆருயிர் நண்பர் கவிஞர் அரங்க. வேங்கடாசலம் பிள்ளை அவர்கள், சங்கத் துணைத் தலைவர் பொறுப்பினை ஏற்றுச் சிறப்பிக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன் என உரைத்தார்.

     இராதாகிருட்டினனின் கருத்தை நண்பர்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றனர். உமாமகேசுவரனாரைத் தலைவராகவும், அரங்க.வேங்கடாசலம் பிள்ளை அவர்களைத் துணைத் தலைவராகவும் கொண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்குவது என்று முடிவு செய்தனர்.

த.வே. உமாமகேசுவரனார்

                    தூயவெண்  ணிறுதுதைந்த  பொன்
                        மேனியும்  தாழ்வடமும்
                 நாயகன்  சேவடி  தைவர
                        சிந்தையும்  நைந்தருகிப்
                 பாய்வது  போலன்பு  நீர்பொழி
                        கண்ணும்  பதிகச்  செஞ்சொல்
                 மேயசெவ்  வாயுமுடையார்
                        புகுந்தனர்  வீதியுள்ளே

என்னும் திருநாவுக்கரசர் புராணச் செய்யுளை நினைவூட்டும் வகையில், சிவமணக்கும் இன்சொல், உருமணக்கும் திருநீறு, இயலருள் ஒழுகும் கண்கள், அருள் மணக்கும் திரு நோக்கு, இளநகை செவ்வாய், சொற்பொறுக்கும் செவிகள், வீரவுரை நவிலும் நாக்கு, செம்பாகத் தமிழ் பேசி சிரிப்புக் காட்டும் முகம், எடுப்பான திருஉருவம் உடையவர் உமாமகேசுவரனார்.

     வேம்பப் பிள்ளை காமாட்சி அம்மையார் தம்பதியினரின், மகனாக 1883 ஆம் ஆண்டு மே திங்கள் 7ஆம் நாள் உமாமகேசுவரனார் தோன்றினார்.
 
உமாமகேசுவரனார்
     உமாமகேசுவரனாரின் மூத்த சகோதரி தர்மசம்வர்த்தினி ஆவார். உமாமகேசுவரனாருக்கு அடுத்து தோன்றியவர்கள் மூவர். அவர்கள் இராதாகிருட்டினன், கோபால்சாமி, செண்பக வள்ளி ஆகியோராவார்.

     உமாமகேசுவரனார் தனது சிறு வயதிலேயே, உடன் பிறந்த தமையன் கோபாலசாமி என்பாரை இழந்தார். சிறிது காலத்திலேயே, தன்னை பாலூட்டி சீராட்டி வளர்த்த தனது அருமை அன்னையாரை இழந்தார். வயது பன்னிரெண்டில் தனது பாட்டனார் வைத்தியலிங்கம் பிள்ளையை இழந்தார். பாட்டனாரை இழந்த 14 வது நாளிலேயே தனது தந்தையையும் இழந்தார்.


      கரந்தையில் தனது சிற்றன்னை பெரிய நாயகத்தம்மையார் அரவணைப்பில் வாழ்ந்தார். இவது சித்தப்பா வீ.சுப்பராய பிள்ளையோ பெரு வணிகர். இவருக்கு உமாமகேசுவரனாரை வணிகத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணம். ஆனால் சிற்றன்னை பெரிய நாயகத்தம்மையாருக்கோ, உமாமகேசுவரனைப் படிக்க வைக்க வேண்டும் ஆவல் 

     தனது கணவரிடத்தில் பேசினார் வென்றார். உமாமகேசுவரனார் தூய பேதுரு கல்லூரியில் கல்வி பயின்றார். இவருக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர் சண்முகம் பிள்ளை என்பவராவார். இச் சண்முகம் பிள்ளை, உமாமகேசுவரனாரின் தந்தை வேம்பப் பிள்ளையின் வகுப்புத் தோழராவார்.

     இதனால் தனது நண்பரின் மகனை ஆங்கிலத்தில் மிகச்சிறந்த அறிவுள்ளவனாக்க வேண்டும் என்ற உறுதியுடன், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று, கரந்தையிலிருந்த, உமாமகேசுவரனாரின் வீட்டிற்கே வந்து ஆங்கிலம் பயிற்றுவித்தார்.

     இயற்கையாகவே அமைந்த தமிழ்ப் புலமையுடன், ஆங்கில அறிவிலும் உரம் மிக்கவரானார் உமாமகேசுவரனார்.

     தஞ்சை தூய பேதுரு கல்லூரியில் இளங்கலை வகுப்பு வரை படித்து முடித்தார். சில காலம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். எழுத்தர் பணி இவருக்கு நிறைவைத் தரவில்லை. இந்நிலையில் உண்மையின் உறைவிடமாய் விளங்கிய உமாமகேசுவரனாருக்கும், மாவட்ட துணை ஆட்சியாளருக்கும், ஒரு விசயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படவே, தன் வேலையே வேண்டாமென்று உதறித் தள்ளினார்.

....... வருகைக்கு நன்றி நண்பர்களே. அரசாங்க அலுவலை துச்சமாய் மதித்து உதறித் தள்ளிய உமாமகேசுவரனார் அடுத்து என்ன செய்தார் என்பதை அடுத்த சனிக் கிழமை பார்ப்போமா.

-----------

ஆதித்த குரு சாமிகள் மடம்

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடரினை நான்காண்டுகால முயற்சிக்குப் பிறகே எழுதத் தொடங்கினேன். இந்த நான்காண்டுகளில் பல்வேறு நூல்களை, ஆவணங்களைப் படித்து குறிப்புகளைச் சேகரித்தேன். ஆயினும் பற்பல வினாக்கள் தோன்றிக் கொண்டே இருந்தன.
     குறிப்பாக சங்கத்திற்கான இடம் பாவா மடத்திடமிருந்து வாங்கப் பெற்றதாக ஆவணங்கள் கூறுகின்றன. அப்படியானால், அந்த பாவா மடம் எங்கிருக்கிறது என்று தேடத் தொடங்கினேன். பலரையும் விசாரித்தேன். சரியான விடைதான் கிடைக்கவில்லை

     கடந்த 10.4.2013 புதன் கிழமை காலை ஓர் எண்ணம் உதிக்கவே, திரு சௌந்தர் அவர்களை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் திரு ச.இராமாநாதன் அவர்களின் சகோதரர் திரு ச.திருநாவுக்கரசு அவர்களின் புதல்வர்தான் இந்த சௌந்தர். எனக்கு அண்ணன் போன்றவர். இருப்பினும் நெருங்கிய நண்பராய் பழகி வருபவர்.
சௌந்தர்

     கரந்தையில் பாவா மடம் எங்கிருக்கிறது தெரியுமா? என வினவினேன். கரந்தைப் பூக்குளத்தில் பஞ்ச நதி பாவா மடம் என்று ஒன்று உள்ளது. அது சிவன் கோயிலாகும் என்றவர், சோமு அண்ணாத்தையைக் கேட்கலாமே என்றார்.

     எப்பொழுது பார்க்கலாம்? என்றேன். இப்பொழுதே பார்க்கலாம் என்றார். நான் அப்பொழுது எனது பள்ளியின் ஆசிரியர் அறையில் இருந்தேன். பிற்பகலில்தான் ஒன்பதாம் வகுப்பிற்கான தேர்வு இருக்கிறது. காலையில் ஓய்வுதான். மணியோ 10.00 தான் ஆகிறது. நேரம் இருக்கிறது. எனவே சரி இப்பொழுதே பார்க்கலாம் என்றேன். பள்ளியிலேயே இருங்கள், நானே அங்கு வருகிறேன் என்றார்.

     பள்ளித் தலைமையாசிரியரிடமும், உதவித் தலைமையாசிரியரிடமும் அனுமதி பெற்றுக் கொண்டு தயாராகக் காத்திருந்தேன். சௌந்தர் வந்தார். இருவரும் கிளம்பினோம். தூரம் அதிகமல்ல. திரு சோமு அவர்களின் வீடு, சங்கத்திற்கு அடுத்த தெருவிலேயே உள்ளது. சேர்வைகாரன் தெரு என்று பெயர்.

     சேர்வைகாரன் தெரு சென்று, இடது புறம் திரும்பி மீண்டும் வலது புறம் திரும்பினோம். இடது புறத்தில் இரண்டாவது வீடு.

     பெரியவர் சோமு பிள்ளை அவர்களின் மருமகள் எங்களை வரவேற்றார். முன் அறையில் சாய்வு நாற்காலியில் சோமு பிள்ளை கண் மூடிப் படுத்திருந்தார். பெரியவரின் வயது என்ன தெரியுமா? 98.

     பெரியவர் சோமு பிள்ளை அவர்கள் அந்தக் காலத்திலேயே பொறியியல் பட்டம் பயின்றவர். 98 வயதும் ஆறு மாதங்களும் நிறைவடைந்த நிலையிலும், தினந்தோறும், மாலை வேளைகளில், தெரு விளக்கு எரிந்தாலும், இருண்டு கிடந்தாலும், கவலைப் படாமல், நடந்தே கரந்தைக் கடைத் தெருவிற்குச் சென்று, அன்பர்கள் பலரைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்து, வீடு திரும்புவதை இன்றளவும் வழக்கமாகக் கொண்டிருப்பவர்.

     காது மட்டும் சிறிது மந்தமான நிலையினை அடைந்துள்ளதால், பெரியவரின் திருமகனார் ராஜகோபால் அவர்கள் மூலம் உரையாடுவதே சிறந்தது என்பதை உணர்ந்தோம்.

     திரு ராஜகோபால் அவர்கள் மடத்திற்குச் சென்றிருப்பதை அறிந்தோம். வீட்டிற்கு பக்கத்து சந்தில் உள்ள மடத்திற்குச் சென்றோம். நான் சிறு வயதில், பல நூறு முறை இந்தச் சந்தின் வழியாகச் சென்றிருப்பேன். ஆனால் இதுநாள் வரை உள்ளே சென்றதில்லை.
ஆதித்த குரு சுவாமிகள் மடம்

      முதன் முறையாக மடத்தினுள் நுழைகின்றேன். ஆதித்த குரு சுவாமிகள் மடம். அமைதியான சூழல். ராஜகோபால் அவர்கள் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தார். சௌந்தர் அவர்களைக் கண்டதும் முகம் மலர்ந்து வரவேற்றார். என்னை அறிமுகப்படுத்தினார். எனது நோக்கம் அறிந்ததும் அவரின் முகம் மேலும் பிரகாசமடைந்தது. மலர்ச்சி முகத்திலும் வார்த்தைகளிலும் தெரிந்தது.

     ஆதித்த குரு சுவாமிகளில் கருவறைக்கு எங்களை அழைத்துச் சென்றார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, சித்தர் ஆதித்த குரு சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த இடம் இது என்றார். ஜீவ சமாதியின் மேல் புறம் ஓர் லிங்கம். தீப ஆராதனை காட்டினார். ஆதித்த குருவை வணங்கினோம். எங்களுக்குத் திருநீறு வழங்கினார். அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றார்.
ஆதித்த குரு ஜீவ சமாதி

      அறையின் நடுவில் ஓர் சிறிய மேடையில், கண்ணாடிக் கூண்டினுள், நான்கடி உயரத்தில் ஒர் சிலை. சிலை என்பது தவறு. உயிருள்ள மனிதர் அமர்ந்திருப்பதை போன்ற ஓர் உணர்வு எங்களைத் தாக்கியது. அவ் உருவின் கருனை மிகு கண்கள் எங்களையே உற்று நோக்குகின்றன.

      இராஜகோபால் கூறினார், ஆரம்பத்தில் கண்ணாடி கூண்டு கிடையாது. இவ்வறைக்கு அருகில் வருபவர்கள், உள்ளே பார்க்கும் பொழுது, உயிருடன் யாரோ அமர்ந்திருக்கிறார்கள் என்பதைப் போல் உணர்ந்து பல முறை திடுக்கிட்டுப் போயுள்ளனர். எனவே இங்கிருப்பது உருவச் சிலைதான் என்பதை உணர்த்துவதற்காகவே கண்ணாடிக் கூடு அமைதோம் என்றார்.
பாடகச்சேரி சுவாமிகள்

     கண்ணாடிக் கூண்டுக்குள் அமர்ந்து, இதயத்தை ஊடுருவும் பார்வையால் எங்களைப் பார்ப்பவர் பாடகசேரி சுவாமிகள்.

     பாடகசேரி சுவாமிகள் 1849 ஆம் ஆண்டு கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் இராமலிங்கம் என்பதாகும்.

     இராமலிங்கம் தனது சிறு வயதிலேயே கும்பகோணத்திற்குத் தெற்கேயுள்ள, வலங்கைமானுக்கும் நீடாமங்கலத்திற்கும் இடையிலுள்ள, பாடகச் சேரி என்னும் சிற்றூருக்கு அருயேயுள்ள, பட்டம் என்னும் குக்கிராமத்திற்கு வந்து தங்கினார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே, முற்றும் துறந்த முனிவராய், திகம்பரர் போல், ஆடை ஏதுமின்றி பல காலம் வாழ்ந்து, வடலூர் வள்ளலாரிடம் ஞானானுபதேசம் பெற்றவர். யோக சித்தி என்னும் நவகண்ட யோகாசனம் செய்யும் பொழுது, தனது உடலையே ஒன்பது பாகங்களாக இவர் தனித் தனியாகப் பிரித்ததை, பல கிராமவாசிகள் பார்த்து வியந்துளளனர்.

     பின்னர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, பட்டம் என்னும் ஊரிலிருந்து விலகி, பாடகச்சேரி சென்று, பல்லாண்டுகள் அங்கேயே தங்கியிருந்தார். பாடகச் சேரியில் இருந்ததனால், இவர் பாடகச்சேரி சுவாமிகள் என்றே அழைக்கப் பெற்றார். சித்த மருத்துவத்தில் மகத்துவம் பெற்றிருந்த இவர், தனது மருத்துவத் திறமையால் பலரையும் குணப்படுத்தியுள்ளார். இதன் மூலம் தனக்குக் கிட்டிய பொருள்களைக் கொண்டு அன்னதானம் செய்தல், கோயில்களுக்கு குடமுழுக்கு செய்தல் எனத் தன் பணியினைத் தொடர்ந்தவர்.

         பாடகச்சேரி சுவாமிகள் தஞ்சைக்கு வரும் பொழுதெல்லாம், ஆதித்த குரு மடத்தில் தங்குவது வழக்கம். இதன் நினைவாகவே, பாடகச்சேரி சுவாமிகளின் திருஉரு இன்று, ஆதித்தகுரு மடத்திற்கு வருவோருக்கு அருள் பாலித்து வருகின்றது. பாடகச் சேரி சுவாமிகளை மனதார வணங்கினோம்.

     இக்கட்டிடத்திற்கு அடுத்து, வரிசையாய் சமாதிகள். தரையோடு தரையாக முதல் சமாதி. உற்று நோக்குகிறோம். உடலும் உள்ளமும் ஒரு சேர சிலிர்த்தது. வியப்பில் விழிகள் விரிந்தன.

தஞ்சை, கரந்தை, சேர்வைகாரன் தெரு,
வீ.சுப்பராய பிள்ளை மனைவி
பெரிய நாயகத்தம்மாள்
விரோதி ஆண்டு, ஆடி மாதம் 12 ஆம் நாள்
இறைவன் திருவடி அடைந்தார்கள். வயது 95,
27.7.49

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர் உமாமகேசுவரனாரை சீராட்டி வளர்த்த, அவரின் சிற்றன்னையல்லவா இவர். கண்மூடி, கரம் கூப்பி வணங்குகிறோம்.
 
பெரியநாயகத்தம்மையார் மீளாத் துயில்  கொள்ளும் இடம்
     உமாமகேசுவரனாரின் தந்தை வேம்பப் பிள்ளை, தாயார் காமாட்சி. இவரது பாட்டனார் வைத்தியலிங்கம் பிள்ளை. வேம்பப் பிள்ளை அவர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரகத்தில் எழுத்தராய்த் தன் பணியினைத் துவங்கியவர். பின்னர் படிப்படியாய் சிரசுதார், வட்ட ஆட்சியர், துணை நடுவர் என உயர்ந்தவர்.

     உமாமகேசுவரனார் தனது சிறு வயதிலேயே, உடன் பிறந்த தமையன் கோபாலசாமி என்பாரை இழந்தார். சிறிது காலத்திலேயே, தன்னை பாலூட்டி சீராட்டி வளர்த்த தனது அருமை அன்னையாரை இழந்தார். வயது பன்னிரெண்டில் தனது பாட்டனார் வைத்தியலிங்கம் பிள்ளையை இழந்தார். பாட்டனாரை இழந்த 14 வது நாளிலேயே தனது தந்தையையும் இழந்தார்.

      உறவுகள் எல்லாம் ஒவ்வொன்றாய் மறைய, தனது சிறு வயதிலேயே, துன்பத்தின் உச்சியைத் தொட்டவர்தான் உமாமகேசுவரனார்.

      கரந்தையில் தனது சிற்றன்னை பெரிய நாயகத்தம்மையார் அரவணைப்பில் வாழ்ந்தார். இவது சித்தப்பா வீ.சுப்பராய பிள்ளையோ பெரு வணிகர். இவருக்கு உமாமகேசுவரனாரை வணிகத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணம். ஆனால் சிற்றன்னை பெரிய நாயகத்தம்மையாருக்கோ, தனது அக்காள் மகன் உமாமகேசுவரனைப் படிக்க வைக்க வேண்டும். அவன் படித்து பெரிய நிலைக்கு உயர்வதைக் கண்ணாரக் காண வேண்டும் என்ற ஆவல் உள்ளத்தில் பொங்கியது.
 
Rசுப்பராய பிள்ளை - பெரியநாயகத்தம்மையார்
     தனது கணவரிடத்தில் பேசினார், வென்றார். தனது மகன் சிதம்பரத்துடன், உமாமகேசனையும், இராதாகிருட்டினனையும், மாட்டு வண்டியில், தஞ்சை வடக்கு வீதியில் இன்றும் இருக்கும், தூய பேதுரு பள்ளிக்கு அனுப்பினார்.

     ஆம். உமாமகேசுவனைப் படிக்க வைத்து, தமிழ் வளர்க்க, மாண்ட தமிழின் பெருமைகளை மீட்டெடுக்க, போர் முனைக்கு அனுப்பிய மாதரசியல்லவா, இக் கல்லறையில் மீளாத் துயில் கொண்டுள்ளார்.

     பின்னாளில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வருகை தந்த தமிழறிஞர்களுக்கு, மனமார உணவு பரிமாறிய கரங்கள் அல்லவா, இங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன. உமாமகேசுவரனாரின் வளர்ச்சியைக் கண்டு குளிர்ந்த உள்ளமல்லவா இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது.

     உமாமகேசன் மறைந்த பிறகும். பல்லாண்டுகள் வாழ்ந்து, தனது மகனினும் மேலாய் வளர்த்த உமாமகேசனின் பிரிவுத் துயரைத் தாங்காமல், நாளும் துடித்திட்ட இதயமல்லவா, இங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.

     என்ன தவம் செய்தேனோ, உமாமகேசனை தமிழுக்கு ஈந்து மகிழ்ந்த, இம்மண்ணுலக தமிழன்னைத், துயிலும் புண்ணிய தலத்தில், நானும் எனது காலடியினைப் பதிக்க, என்ன தவம் செய்தேனோ, என்று எண்ணி நெஞ்சார வணங்கினேன்.

      கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றினை, உமாமகேசனின் ஒப்பற்ற தியாகத்தை, அப்பழுக்கற்ற சேவையினை, தமிழுக்குத் தாழ்வெனின் பொங்கியெழுந்த உமாமகேசனின் சீற்றமிகு வீரத்தினை, எழுதத் துணிந்திட்ட எனக்கு, உற்ற துணையாய், வழிகாட்டியாய் இருந்து உதவிடுங்கள் தாயே என வேண்டினேன்.

     பெரிய நாயகத்தம்மையார் துயிலும் இடத்திற்கு அருகில் இரு சமாதிகள் இருந்தன. ஆதித்த குரு மடத்தின் மீது பெரு மதிப்பு வைத்திருந்த தங்கம்மாள் மற்றும் அவரது அருமை மகனார் அப்பாவு சாமியார் இருவருக்கும் ஒரே இடத்திலேயே அருகருகே சமாதிகள்.


     அருகிலேயே ஒரு சிறு கோயில். அதுவும் சமாதிதான். ஆதித்த குவிவின் சீடரான சொக்கலிங்க சாமிகளின் சமாதி இது. சொக்கலிங்க சுவாமிகள் அமரத்துவம் அடைந்த நாள் 25.8.1894. இன்றைக்கு 129 ஆண்டுகளுக்கு முந்தையது.


      தெய்வத்துள் தெய்வமாய் இரண்டறக் கலந்து விட்ட, இப்பெரியோர்களை வணங்கி, மடத்தினின்று புறப்பட்டு, மீண்டும் சோமு பிள்ளை அவர்களின் இல்லம் வந்தோம்.

     முக்கியமான செய்தி ஒன்றினைச் சொல்ல மறந்து விட்டேன். இந்தப் பெரியவர் சோமு பிள்ளை யார் தெரியுமா? உமாமகேசுவரனாரை சீரோடும் சிறப்போடும், வளர்த்து ஆளாக்கினாரே, பெரிய நாயகத்தம்மையார், அந்த பெரிய நாயகத்தம்மையாரின் பெயரன்தான் இந்தப் பெரியவர் சோமு பிள்ளை. உமாமகேசனோடு பள்ளிக்குச் சென்றாரே சிதம்பரம், அந்தச் சிதம்பரத்தின் அருமைப் புதல்வர்தான் இந்த சோமு பிள்ளை.

     பெரியவர் சோமு பிள்ளையின் திருமகனார் ராஜகோபால் அவர்கள், தனது தந்தையை, அறையில் இருந்து அழைத்து வந்து, இருக்கையில் அமரச் செய்து, நாங்கள் வந்திருப்பதன் நோக்கத்தினை, பக்குவமாய், அவர் காதருகே எடுத்துரைத்தார்.
 
பெரியவர் சோமு பிள்ளையுடன் அவரது  திருமகனார்  ராஜகோபால்
     உமாமகேசுவரனார், கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்ற வார்த்தைகளைக் கேட்டவுடன், பெரியவரின் முகத்தில், ஓர் மகிழ்ச்சி, இதழ்கள் புன்னகைக் பூக்கின்றன. பெரியவரது கண்களே கூறின, மனமானது, சிந்தனைக் குதிரையில் ஏறி, கடந்தகால நினைவலைகளில் பயணிக்கத் தொடங்கி விட்டது என்பதை.


     மெதுவாகப் பேசத் தொடங்கினார். பத்து நிமிடமோ, இருபது நிமிடமோ அல்ல. சற்றேரக்குறைய இரண்டரை மணி நேரம் விடாது பேசிக் கொண்டே இருந்தார். செய்திகள் அருவியாய் கொட்டின. முதுமையின் தளர்வு வார்த்தைகளில் சிறிதும் இல்லை.

     செய்தி திரட்டச் சென்ற நாங்களே, பேசியது போதும், ஓய்வெடுங்கள் எனக் கூறும் படியாகிவிட்டது.


     ஓய்வெடுக்கச் சொன்னவுடன், பேச்சினை நிறுத்த சிறிதும் மனமின்றிக் கூறினார், சில நாட்கள் கழித்து வாருங்கள், என் நினைவில் இருப்பதை எல்லாம், ஒரு நோட்டில் குறிப்புகளாக எழுதி வைக்கிறேன்.

     பெரியவர் சோமு பிள்ளை தனது, 98 ஆம் வயதிலும், சிறிதும் தளராமல், தயங்காமல் எழுதித் தருகிறேன் என்று கூறியது மிகுந்த வியப்பைக் கொடுத்தது. உடலுக்குத்தான் வயதாகிவிட்டதே தவிர, மனது இளமையாகத்தான் இருக்கிறது என்பது புரிந்தது.

     புறப்படும் பொழுது கேட்டேன், உமாமகேசுவரனார் வாழ்ந்த வீடு எது? என்று. இவ்வீட்டிற்கு முன்னால் உள்ள, முதல் வீட்டில்தான் உமாமகேசுவரனார் வாழ்ந்தார். அவ்வீட்டில் தற்பொழுது எனது சகோதரர் வசித்து வருகிறார் என்றார்.
 
தமிழ்த் தலமாம் உமாமகேசுவரனார் இல்லம்
     திருமூலர் கூறுவார், மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம் என்று. ஆம். செம்மையான மனதிற்குச் சொந்தக்காரர்தான் இப் பெரியவர் சோமு பிள்ளை. பெரியவரை வணங்கி விடை பெற்றோம்.

     அழகப் பிள்ளை சந்தின் இரண்டாம் வீடு, பெரியவர் சோமு பிள்ளை வசிக்கும் வீடு. இதோ, இந்த முதல் வீடு இருக்கிறதே, இதுதான் தமிழவேள் வாழ்ந்த வீடு. தமிழகத்துத் தமிழறிஞர்கள் அனைவருக்கும் உணவிட்ட வீடு. ஒரு வகையில் இதுவும் ஒரு கோயில்தான். ஆம் தமிழ்க் கோயில்.

     உமாமகேசுவரனார் வாழ்ந்த இல்லத்தை, தமிழ்த் தலத்தை மனதார வணங்கி விடைபெற்றோம்.

வாழ்வின் மறக்க இயலாத சந்திப்பு, இச் சந்திப்பு.

    

    13 ஏப்ரல் 2013

கரந்தை - மலர் 4


நாமே நமக்காக ஒரு புதியத் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி, நம்மால் இயன்றப் பணிகளைச் செய்தால் என்ன?------------ கடந்த வாரம் -----------
குயிலையாவிற்குத் தான் செலுத்தும் குருதட்சணையாக ஆசானாற்றுப் படை என்றும் கவிதை நூலைப் படைத்தார். இந்நூலுக்கு பதிப்புரை எழுதி வெளியிட்டவர் யார் தெரியுமா? வேங்கடாசலம் பிள்ளையின் அருமை நண்பர் இராதாகிருட்டினன் அவர்கள்தான்.
--------------------------------------

     தனது ஆசிரியருக்கு நன்றியறிதலைத் தெரிவிக்கும் வகையிலும், தனது நண்பரின் முதல் நூலினை வெளியிட வேண்டும் என்ற ஆர்வத்தினாலும், இராதாகிருட்டினன் அவர்களே இந்நூலினை வெளியிட்டடார்.

     பழந்தமிழ் இலக்கியங்களில் பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் தமிழர்களின் பைந்தமிழ்ச் கருவூலங்களாகும். திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, கூத்தராற்றுப் படை ஆகியவை பத்துப் பாட்டில் அடங்கும். இவை ஆற்றுப்படை நூல்களாகும். இப்பாட்டில் ஆற்றுப் படுத்தப்பெறும், பாணர், கூத்தர், விறலியர், பொருநர் ஆகியோர் தாம் பெற்ற பேறு பெருக இவ்வையகம் எனும் பழந்தமிழ் பண்பாட்டுக் கொள்கையினை உடையவர்கள்.

     ஆற்றுப்படை என்பது, தமக்குப் பெரும் பரிசு வழங்கிச் சிறப்பித்த அரசர்களின் உயரிய பண்புகளையும், அந்த அரசனது நாடு, அதன் தலை நகர் முதலியவற்றின் சிறப்பினையும், அந்த அரசனின் அரண்மனைக்குச் செல்வதற்கு உரிய வழிகளையும், தம்மைப் போன்ற பிற புலவர்களுக்கு எடுத்துரைப்பதாகும்.

                                          முத்தமி  ழறிநர்  முழுமதிக்  குடிபுகு
                                           மடியார்க்  குநல்லா  ரவர்,  பயன்  காண
                                          முடியார்க்  குநல்லா  ரிவர்மற்  றெனவும்
                                           புலம்பூத்  தொளிருமிப்  புவிகொண்  டெஞ்சிய
                                           கலம்படு  புகழி  னலம்பல  விழைத்தவர்

                                           நச்சினார்க்  கினியர்,  அச்சுவரு  களத்து
                                           நச்சார்க்  குமினிய  ரிவரோ  வெனவுங்
                                           கடுகைத்  துளைத்துட்  கடலே  ழளித்தோர்
                                           பரிமே  லழகர்,  பணித்த  பன்மதமாங்
                                           கரிமே  லழக  ரெனவுங்  கவினுடைக்

                                          குளிர்ந்த  சொல்லினர்  குணமொன்  றில்லாக்
                                           குணங்குண  மாக்கொள்  குரிசினன்  செய்யார்
                                           வையைச்  சுப்பிர  மணிய
                                           ஐயரென்  நாமத்  தருட்  கிழவோரே     ஏ நெஞ்சமே, நின் அறியாமையைப் போக்கவல்ல நல்லாசான் ஒருவரைக் காணப் பெறாமால் வருந்துகின்றாயா? அந்தணர் குடியில் பிறந்தவரும், பரிமேலழகர், நச்சினாரக்கினியர் முதலிய உரையாசிரியர்களைப் போன்ற பேரறிவும், நல்லொழுக்கமும் உடையவராகிய சுப்பிரமணிய அய்யர், தஞ்சை தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். அவர் தம்முடைய இனிய வாழ்க்கைத் துணைவியுடன் இல்லறம் நடாத்தும் வீடு, நாளங்காடிக்கு வடகீழ் திசையில் உள்ளது. நீ அவ்வீட்டிற்குச் சென்று அவரைக் கண்டு பயன்பெறலாம்  அல்லது அவர் பணிபுரியும் பள்ளியில் சென்று காணலாம் என்பது வேங்கடாசலம் இயற்றிய ஆசானாற்றுப்படையின் உட்பொருளாகும். மேலும் இந்நூலில் வயல் சூழ்ந்த கரந்தையிலுள்ள கலைமகள் நிலையமும் (பால சரசுவதி வித்யாசாலா), மக்கள் கூட்டம் அதிகமுள்ள கீழவாசலும், புகைவண்டி நிலையமும், சிவகங்கைப் பூங்காவும், அய்யங்கடைத் தெருவும் மற்றும் தஞ்சை நகர் அமைப்பும் விரிவாக கூறப்பட்டுள்ளது.

      இந்நூலைப் பற்றிய மிகுந்த வியப்புக்கு உரிய செய்தி என்னவென்றால், இந்நூல் வெளியிடப்பெற்ற ஆண்டு 1910 ஆகும். அதாவது தனது 24 ஆம் வயதிற்குள்ளாகவே கவி புனையும் ஆற்றல் கைவரப் பெற்று கவியரசு என பின்னாளில் அழைக்கப் பட்டமைக்கு உரிய அனைத்துக் தகுதிகளையும் பெற்றவராகத் திகழ்ந்தார்.

     வேங்கடாசலம் பிள்ளையின் மனையியார் மங்கலத்தம்மை என்பவர் ஆவார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தனக்குத் தமிழறிவு புகட்டிய, குயிலையா என்னும் சுப்பிரமணிய அய்யருக்காக ஆசானாற்றுப் படை இயற்றியதோடு, வேங்கடாசலம் பிள்ளையின் மனம் நிறைவடையவில்லை. தனது குழந்தைக்கு, அத்தமிழாசிரியரின் நினைவாக சுப்பிரமணியம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

     தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் நெடார் என்னும் சிற்றூர் உள்ளது. இந்த நெடாருக்கு அருகில் அமைந்துளள மற்றொரு சிற்றூர் கோணார்ப் பட்டு என இன்று அழைக்கப்படும் கோணார் பற்று ஆகும். இவ்வூரில் அமைந்திருந்த கற்பக விநாயகா கலாசாலையில், வேங்கடாசலம் அவர்கள் தலைமையாசிரியராய் பணியில் சேர்ந்தார். அப்பள்ளி மாணவர்களை மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்தும் தேர்விற்குத் தயார் படுத்தும் பணியினைச் செம்மையாகச் செய்து, தனது கல்வியாலும், ஒழுக்கத்தினாலும், உழைப்பாலும் அப்பகுதி மக்கள் விரும்பிப் போற்றும் நல்லாசிரியராய் உயர்ந்தார்.

     இக்காலகட்டத்தில், பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் நட்பு இவருக்குக் கிட்டியது. இதனால் மேலைச் சிவபுரி சன்மார்க்கத் தொடர்பும் கிட்டியது. இதன் மூலம் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், மகாவித்துவான் ரா.ராகவ அய்யங்கார், சோழவந்தான் அரசஞ் சண்முகனார், மு.இராகவ அய்யங்கார், அனந்தராம அய்யர் போன்ற பெரும் புலவர்களின் நட்பும், பழக்கமும் ஏற்பட்டது.

     இந்நிலையில்தான், கரந்தையில் வித்தியா நிகேதனம் என்னும் அமைப்புத் தொடங்கப்பட்டது. தனது நண்பர் இராதாகிருட்டினனின் அழைப்பினை ஏற்று, வேங்கடாசலம் பிள்ளை அவர்கள், வித்தியா நிகேதனத்தில் தன்னையும் ஓர் உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

இளைஞர்களின் எழுச்சி

     கரந்தையில் வித்தியா நிகேதனம் தொடங்கப் பெற்றவுடன், இராதாகிருட்டினன் அவர்கள், அக மகிழ்ந்து வேங்கடாசலம் பிள்ளை அவர்களை மட்டுமல்ல, தனது நண்பர்கள் அனைவரையும், வித்தியா நிகேதனத்தில் உறுப்பினர்களாக்கினார்.

     தமிழ்ப் பணி ஒன்றினையே குறிக்கோளாகக் கொண்டு, வித்தியா நிகேதனத்தில் இணைந்த, இராதாகிருட்டினன் குழுவினருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.

     வித்தியா நிகேதனத்தின் தலைவர் அரித்துவார மங்கலம் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார் மிகவும் கண்டிப்பானவர். செயலாளர் சாமிநாத பிள்ளையோ இளைஞர்களிடத்து தனது அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கினார். இதனால் இளைஞர்களின் மனம் வெதும்பியது.

     வித்தியா நிகேதனத்தில் உறுப்பினர்களாய் இருந்த, தனது நண்பர்களை அனைவரையும் அழைத்த இராதாகிருட்டினன், கரந்தையிலுள்ள கந்தப்ப செட்டியார் சத்திரத்தில் சிறு கூட்டம் ஒன்றைக் கூட்டினார். நாம் அனைவரும் வித்தியா நிகேதனத்தில் இணைந்தது தமிழ்ப் பணியாற்றத்தானே தவிர, அடிமை வாழ்வு வாழ்ந்தற்கு அல்லவே? நாம் இளைஞர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இப்பெரியவர்கள் நம்மை வேலையாட்களைப் போல நடத்துவது சரியா? நாம் எதற்காக இவர்களுக்குச் சேவகம் செய்ய வேண்டும்? இந்த அமைப்பினின்று விலகி, நாமே நமக்காக ஒரு புதியத் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி, நம்மால் இயன்றப் பணிகளைச் செய்தால் என்ன? என்று முழங்கினார்.

..... வருகைக்கு நன்றி நண்பரே. இராதாகிருட்டினனின் முயற்சி வெற்றி பெற்றதா? புதிய தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கினாரா என்பதை அடுத்த வாரம் அறிவோமா நண்பரே.