10 ஜூலை 2012

கல்யாண மகால்


நண்பர் சரவணன்

     உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், என்னுடன் பணியாற்றும் முதுகலை ஆசிரியரும், எனது நண்பருமாகிய திரு வெ.சரவணன் அவர்களின் சகோதரியின் கணவர், ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு சிங்காரவேலு என்பார் சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அன்னாரின் ஆன்மா என்றென்றும் இறையின்பத்தில் திளைத்திருப்பதற்கான 15 ஆம் நாள் சடங்கானது, கடந்த 1.7.2012 ஞாயிற்றுக் கிழமை காலை 8,00 மணியளவில், திருவையாறு புஷ்ப மண்டப படித் துறையில் நடைபெற்றது.



நண்பர் சதாசிவம்
     இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு, அன்று காலை 7.00 மணியளவில். கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து, உமாமகேசுவர மேனிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியரும், எனது நண்பருமாகிய திரு அ.சதாசிவம் அவர்களும், நானும் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு, திருவையாற்று புஷ்ப மண்டபத் துறைக்குச் சென்றோம். அங்கு எங்களுக்கு முன்னரே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு நா.கலியமூர்த்தி அவர்களும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களான புலவர் கோ.பாண்டுரங்கன், திரு எம்.சண்முகவேலு, திரு தேவதாஸ் ஆகியோரும், எனது சிற்றப்பாவும், மறைந்த ஆசிரியர் திரு சிங்காரவேலு அவர்களின் நண்பருமான திரு சி.திருவேங்கடம் அவர்களும் வந்திருந்தனர். சரவணன் அவர்களின் உறவினர்கள் இருபதிற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

     கங்கையின் கரையில் அமைந்திருக்கும், புனிதத் தலமான காசிக்கு இணையாகப் போற்றப்படும், இத்திருவையாற்று புஷ்ப மண்டபத் துறையானது, கங்கையினைப் போலவே, புனிதமான, காவிரியின் வடகரையில் தெய்வீகத் தோற்றத்துடன் அமைந்திருப்பதாகும்.

புஷ்ப மண்டப படித்துறை
     காவிரி ஆறு வெறிச்சோடிக் கிடந்தது. எப்பொழுதும் ஆற்றின் ஒரு ஓரத்திலாவது சிறு வாய்க்கால் போல, ஓடும் தண்ணீரும் இல்லாமல், மணற் பரப்பானது பாலைவனம் போல் காட்சியளித்தது. மணலில் எங்கு பார்த்தாலும், சடங்குகளின் நிறைவில் ஆற்றில் விடப்படும், பானைகளின் உடைந்த ஓடுகள். சிறிது தூரம் ஆற்று மணலில் இறங்கி நடந்தேன்.

     புஷ்ப மண்டபத் துறைக்கு அடுத்த பழமையான அரசர் காலத்து மண்டபம் கம்பீரமாய் காட்சியளித்தது. வர்ணம் பூசியோ, பழுது பார்த்தோ ஆண்டுகள் பல கடந்து விட்ட போதிலும், பொலிவு குறையாமல் நெஞ்சம் நிமிர்த்தி நின்றது அம்மண்டபம். இம்மண்டபமே திருவையாற்று அரசர் கல்லூரியாகும். காவிரியில் நீர் நிறைந்து செல்லும் காலங்களில், இக்கல்லூரிக் கட்டிடத்தில் நீர் மோதி ஆர்ப்பரிக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

     இவ்விடத்தில் ஓர் சிறிய செய்தியினைக் கூறியாக வேண்டும். நான் ஒன்றும் திருவையாற்றிற்குப் புதியவனல்ல. நான் பிறந்த மண் திருவையாறு. நான் தவழ்ந்த மண் திருவையாறு. நான் வளர்ந்த மண் திருவையாறு. முதலாம் வகுப்பில் என்ற எழுத்தை எனக்குக் கற்றுக் கொடுத்த மண் திருவையாறு. இரண்டாம் வகுப்பில் இருந்து கரந்தை ஜைன இலவச தொடக்கப் பள்ளியிலும், தொடர்ந்து உமாமகேசுவர மேனிலைப் பள்ளியிலும் படித்த போதும், ஒவ்வொரு ஆண்டும் எனக்கு கோடை வாசஸ்தலம் திருவையாறுதான்.

     திருவையாற்றின் அத்தனை சந்துகளும், தெருக்களும் அத்துப்படியாக இருந்த போதிலும், திருவையாறு என்ற புண்ணிய பூமியின், பெருமையினை உயர்வினை அறியாத சிறுவனாகவே இருந்திருக்கின்றேன். இன்று திருவையாற்றின் பெருமையினை ஓரளவிற்கு உணர்ந்தவனாய், அய்யாறப்பர் கோவில், ஏழூர் திருவிழா, தியாகராச ஆராதனை, திருவையாற்றுத் தமிழிசை விழா, புஷ்ப மண்டபத் துறை குறித்துச் சிறிதேனும் அறிந்தவனாய், காவிரியாற்று மணலில் நடந்தேன்.

     அரசர் கல்லூரியானது இருகரம் நீட்டி அழைப்பதைப் போல் ஓர் உணர்வு. அக்கட்டிடத்தினையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நிற்கின்றேன். மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோசியும், தமிழவேள் உமாமகேசுவரனாரும், சர் ஏ.டி.பன்னீர் செல்வமமும் அவர்களும் என் மனக் கண்ணில் வலம் வந்தார்கள். மெதுவாக மணலில் நடந்து கரையேறினேன். சடங்கு நடக்கும் இடத்தினை அடைந்தேன். 8.30 மணியளவில் சடங்கு நிறைவுற்றவுடன், புஷ்ப மண்டபத்திலிருந்து கிளம்பினோம். புஷ்ப மண்டபத் தெருவின் முனையில் இருந்த ஒரு தேநீர் கடையில் அனைவரும் தேநீர் அருந்தினோம். பிறகு அனைவரும் தஞ்சை நோக்கிப் பயணிக்க, நானும் நண்பர் சதாசிவம் அவர்களும், புஷ்ப மண்டபத் தெருவில் இருந்து வலது பக்கம் திரும்பி அரசர் கல்லூரிக்குச் சென்றோம்.

     ஞாயிற்றுக் கிழமை ஆதலால், அரசர் கல்லூரியின் இரும்புக் கதவு பூட்டப் பட்டிருந்தது. அக்கதவிலேயே ஒரு சிறிய கதவு. அதனைத் திறந்துகொண்டு உள்ளே சென்றோம். தொடக்கமே திறந்த வெளி அரங்கமாகும். வலதுபுறம் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். நேர் எதிரே விழா மேடை. மேடையில் இருவர் அமர்ந்திருந்தனர். எங்களைக் கண்டதும் மேடையிலிருந்து இறங்கி வந்தனர். இருவரும் கல்லூரிக் காவலர்கள். அய்யா நாங்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வருகின்றோம். கல்லூரியைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றோம். தாராளமாகப் பாருங்கள் என்ற இருவரும்,  எங்களை அழைத்துச் சென்று ஒவ்வொரு கட்டிடமாகக் காட்டினார்கள். முதலாவது சம்ஸ்கிருதத் துறைக்கான இரண்டடுக்குக் கட்டிடம். தொடர்ந்து சிறிய பெரிய கட்டிடங்கள். எல்லாமே இருபது அல்லது முப்பது வருடங்களுக்குள் கட்டப்பெற்றவை. கல்யாண மகால் எங்கிருக்கிறது? என்றேன். இங்கிருக்கும் கட்டிடங்களுக்குப் பின்புறம், காவிரி ஆற்றின் கரையில் இருப்பதுதான் கல்யாண மகால். இங்கிருந்து அக்கட்டிடத்திற்குச் செல்வதற்கானப் பாதை பூட்டப்பட்டுள்ளது. கல்லூரி செயல்படும் நாட்களில்தான் இப்பாதை திறந்திருக்கும். அடுத்த தெரு வழியாகச் சென்றால் கல்யாண மகால் கட்டிடத்தைக் காணலாம் என்றனர். நன்றி கூறி விடைபெற்று, இருசக்கர வாகனத்தில், பக்கத்துத் தெருவான திருமஞ்சன வீதிக்குள் நுழைந்தோம்.

     திருமஞ்சன வீதியானது காவிரிக் கரையில் சென்று முடிந்தது. இத்தெருவில் இருந்து, ஒரு சிறிய தெரு, தெரு என்று கூட கூறமுடியாது, சுமார் பதினைந்து அடி அகலமே இருக்கும் ஒரு சந்து பிரிந்து சென்றது. இச்சந்தின் வலதுபுறம் நான்கைந்து வீடுகள் இருந்தன. இடது புறம் காவிரிக் கரையின் படிக்கட்டுகள். இச்சந்து ஒரு மண்டபத்துடன் முடிந்தது. இதோ இம் மண்டபம்தான் கல்யாண மகால்.

கல்யாண மகால்

    சோழர்களின் தலைநகராய் கோலோச்சியத் தஞ்சையில், மூன்றாம் இராசேந்திர சோழனின் ஆட்சியோடு, கி.பி.1279 இல் சோழராட்சி முடிவுக்கு வந்தது. பிறகு தஞ்சாவூரானது பாண்டியர்களாலும், திருச்சி மாவட்டத்தின் கண்ணனூரைத் தலைநகராகக் கொண்ட போசளர்களாலும் ஆளப்பட்டது. போசளர்களுக்குப் பிறகு தஞ்சாவூர் விசயநகரப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.

       1535 இல் தஞ்சையில் நாயக்கர் அட்சி மலர்ந்தது. நாயக்கர்களைத் தொடர்ந்து, தஞ்சாவூரானது 1675 முதல் 1855 வரை மராட்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

       மராட்டிய மன்னர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் தஞ்சையில் 18 சத்திரங்களை நிறுவினர். இச் சத்திரங்களில் புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்ரிகர்களுக்கு, இலவசமாக தங்கும் வசதியும், இலவசமாக உணவும் வழங்கப்பட்டன. இச் சத்திரங்களில் மருத்துவர்களும் நியமிக்கப் பட்டிருந்தனர். பயணத்தின் போது உடல் நலக்குறைவு ஏற்படும் யாத்ரிகர்களுக்கு இலவசமாக மருத்துவ வசதியும் அளிக்கப் பட்டது. மேலும் இச்சத்திரங்கள் மூலம் கல்வியும் கற்றுத் தரப்பட்டது. இச்செயல்களை மேற்கொள்ளும் பொருட்டு, மராட்டிய அரசர்கள், இச்சத்திரங்களுக்கு அறக்கட்டளைகளாக, பலநூறு ஏக்கர் நிலங்களை எழுதி வைத்தனர்.
ஒரத்தநாடு முக்தாம்பாள் சத்திரம்

     இவற்றுள் ஒரத்தநாடு முக்தம்மாள் சத்திரம், நீடாமங்கலம் யமுனாம்பாள் சத்திரம் போன்றவை பெயர் பெற்ற சத்திரங்களாகும்.  இவ்வரிசையில் இரண்டாம் சரபோசி மன்னர் அவர்கள், தனது வாரணாசிப் புனிதப் பயணத்திற்குப் பிறகு, திருவையாற்றில் வளம் தரும் காவிரியின் வட கரையில், கண்கவர் மாட மாளிகைகளுடன் உருவாக்கிய சத்திரமே கல்யாண மகால் சத்திரமாகும்.

கல்யாண மகால் சத்திரம்
      நாயக்க மன்னர்கள் தங்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கிய நூலகத்தினை விரிவுபடுத்தி, வளர்த்து மாபெரும் சரசுவதி மகால் நூலகமாக உயர்த்திய பெருமை இந்த இரண்டாம் சரபோசி மன்னரையேச் சாரும்.

மன்னர்
இரண்டாம் சரபோசி
     ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் போது, அனைத்துச் சத்திரங்களும், கோயில்களும், அவற்றிற்காக அறக் கட்டளைகளாக வழங்கப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப் பட்டன. நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பின், கோயில்களும், கோயில்களுக்கான நிலங்களும், மராட்டிய மன்னர்களின் வாரிசுகளிடம் ஆங்கிலேயர்களால் ஒப்படைக்கப் பட்டன. ஆனால் சத்திரங்கள் அனைத்தும், ஆங்கிலேயர்களின் வருவாய் துறையினரின் பொறுப்பிலேயே இருந்து வந்தன. 1871 ஆம் ஆண்டு சத்திரம் நிர்வாகமானது, உள்ளூர் ஆட்சிக் குழுவிடம் ஒப்படைக்கப் பட்டது. தமிழ் நாட்டிலேயே சத்திரம் நிர்வாகம் என்னும் பெயரில் ஒரு தனி நிர்வாகம்  நடைபெற்று வருவது தஞ்சாவூரில் மட்டும்தான்.

     கல்யாண மகால் சத்திரத்தின் சார்பில் 1881 ஆம் ஆண்டு வேத பாடசாலை ஒன்று தொடங்கப் பெற்றது. இங்கு வடமொழி கற்கும் மாணவர்களுக்கு விடுதி மற்றும் உணவு வசதிகள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப் பட்டன. இந்த வேத பாடசாலையால் பயனடைந்தவர்கள் பிராமணர்கள் மட்டும்தான் என்பதனைச் சொல்லத் தேவையில்லை.

     இந்நிலையில் 1917 ஆம் ஆண்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் பெயரில் நீதிக் கட்சித் தோன்றியது.

நீதிக் கட்சி

உமாமகேசுவரனார்
     தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களை இன்றைய தலைமுறையினர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக மட்டுமே அறிவர். ஆனால் இவர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மட்டுமல்ல, 1917 ஆம் ஆண்டு தோற்றம் கண்ட நீதிக் கட்சியின் முக்கியமானத் தலைவர்களுள் ஒருவர்.

     தஞ்சை மாவட்டத்தில் நீதிக் கட்சியின் தூண்கள் என்று போற்றப் பட்டவர் மூவர். ஒருவர் உமாமகேசுவரனார், இரண்டாமவர் சர் ஏ.டி.பன்னீர்செல்வம், மூன்றாமவர் ஐ.குமாரசாமிப் பிள்ளை. இதில் உமாமகேசுவரனார் அவர்களையும் பன்னீர் செல்வம் அவர்களையும், இரட்டையர் என்றே அன்றைய தலைமுறையினர் அழைத்தனர். அந்த அளவிற்கு இருவரும் ஆத்மார்ந்த நண்பர்களாவார்கள்.

     அன்றைய ஆங்கிலேய அரசாங்கமானது, 1920 ஆம் ஆண்டில் இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களை இயற்றி நடைமுறைப் படுத்தியது. முதலாவது சென்னை உள்ளாட்சிக் கழகச் சட்டம் (Madras Local Bodies Act, 1920), மற்றொன்று சென்னை தொடக்கப் பள்ளிச் சட்டம் (Madras Elementary School Act, 1920).  

     1920 ஆம் ஆண்டில் சென்னை உள்ளாட்சிக் கழகச் சட்டத்தின் படி நடைபெற்ற தேர்தலில், தஞ்சை மாவட்டக் கழகம், வட்டக் கழகம் இரண்டினையும் நீதிக் கட்சிக் கைப்பற்றியது.

ஏ.டி.பன்னீர் செல்வம்
     தஞ்சை வட்டக் கழகத்தின் முதல் தலைவராக உமாமகேசுவரனார் தேர்ந்தெடுக்கப் பட்டார். மாவட்டக் கழகத்தின் துணைத் தலைவராக, சர் ஏ.டி. பன்னீர் செல்வம் அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1920 ஆம் ஆண்டிலிருந்து 1932 ஆம் ஆண்டு வரை, தொடர்ந்து பன்னிரெண்டாண்டுகள் வட்டக் கழகத் தலைவராகப் பணியாற்றிய பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார்.

     மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு உயர் பதவிகளுக்கு வரும் பலர், பொது நலம் மறந்து, சுய நலமே குறிக்கோளாய் கொண்டு, தன் வீடு,  தன் பெண்டு, தன் பிள்ளை என தங்கள் குடும்பத்தை வளப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பது இன்று பரவலாய் காணப்படும் காட்சியாகும்.

     ஆனால் பன்னிரெண்டாண்டுகள் வட்டக் கழகத் தலைவராய் பதவி வகித்தபோதும், சுய நலம் என்பதனையே முற்றும் துறந்த முனிவராய், தமிழ் நலம் ஒன்றினையே சுவாசமாகக் கொண்டு சுவாசித்து, தமிழ் மொழியினை வளப்படுத்திய, பலப்படுத்திய பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார்.

     சென்னை தொடக்கப் பள்ளிச் சட்டத்தைப் பயன்படுத்தி, தஞ்சை வட்டத்தில் இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கையினை 40 லிருந்து 170 ஆக உயர்த்தினார்.

     தஞ்சை அரசர் அற நிலையங்களின் வருவாயிலிருந்து இரண்டு உயர்நிலைப் பள்ளிகள் இயங்கி வந்தன. ஒன்று ஒரத்த நாட்டிலும் மற்றொன்று இராசா மடத்திலும் இருந்தது. இவ்விரு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இலவச உணவும், இலவச விடுதி வசதியும் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் பிராமண வகுப்பினைச் சார்ந்த மாணவர்கள் மட்டுமே இச்சலுகைகளை அனுபவித்து வந்தனர். கடும் எதிர்ப்புகளுக்கு இடையிலே, உமாமகேசுவரனார் அவர்கள் பன்னிர் செல்வம் அவர்களின் துணைகொண்டு இந்நிலையினை மாற்றி, ஏனைய தமிழ் இன மாணவர்களும் இத்தகைய சலுகைகளைப் பெருமாறு செய்தார்.

சிரேயசு சத்திரம் மாணவர் உணவு விடுதி
     தஞ்சையில், கரந்தைக்கு அருகில், பழைய திருவையாற்று வீதியில் சுரேயசு சத்திரம் என்று ஒன்று உண்டு. சோம்பேறிகளின் தங்குமிடமாகச் செயல்பட்ட, இச்சத்திரத்தை ஆதி திராவிட மாணவர்கள் தங்குமிடமாகவும், இலவச உணவு பெறுமிடமாகவும் மாற்றி அமைத்தார்.

     திருவையாற்றில் இராமச்சந்திர மேத்தா சத்திரம் என்று ஒன்று உண்டு. அதற்கென நிலங்களும் இருந்தன. இச் சத்திரமானது வடநாட்டில் இருந்து வரும் பைராகிகளுக்கு உணவு வழங்க ஏற்பட்ட சத்திரமாகும். அது சரியாக நடைபெறாமல் இருந்தது. பைராகிகளே இல்லாத போது சத்திரத்திற்கு ஏது தேவை. இதனால் சத்திரத்திற்குத் தொடர்பில்லாத பலர், அங்கு தங்கி உணவு உண்டு வந்தனர். இதனையறிந்த உமாமகேசுவரனார், அச்சத்திரத்திற்குக் கட்டுப் பாடுகளை விதித்து, அதன் மூலம் பெருந்தொகையினை வருவாயாக ஈட்டித் தந்தார். இந்தச் சேமிப்பினால் வளமான நிலங்கள் வழங்கப் பட்டன. இதன் பயனையும் ஏழை மாணவர்கள் அடையுமாறு செய்தார்.

      அடுத்ததாக, பல ஆண்டுகள் பலவாறு முயன்றும், தமிழைப் புகுத்த முடியாமற் போன, திருவையாற்று கல்யாண மகால், வேத பாடசாலையின் பக்கம் உமாமகேசுவரனாரின் முழுக் கவனமும் திரும்பியது.

அரசர் கல்லூரி

     திருவையாற்று வேதபாட சாலையில் தமிழையும் புகுத்த வேண்டும் என்பது, வட்டக் கழகத் தலைவராய் அமர்ந்த பின் தோன்றிய எண்ணமல்ல. பல ஆண்டுகளாக முயற்சி மேற் கொண்டிருந்தவர்தான் உமாமகேசுவரனார்.

     1917 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெற்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆறாவது ஆண்டு விழாவில், பழமை பெருமைகளிற் சிறந்த நம் தமிழ் மொழி வழங்கும் தமிழகத்தில், இத் தஞ்சை மன்னரால் அறத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கும் பொருளின் பயனைக் கல்வி நெறியில் தமிழர்கள் அடையுமாறு, இளைஞர்களின் கல்விப் பயிற்சிக்கு வேண்டியாங்கு உதவவும், திருவையாற்று வட மொழிக் கல்லூரியில் தமிழையும் முதன்மைப் பாடமாக வைத்து நடத்தவும், தஞ்சாவூர் இறைத் தண்டற்றலைவர் (Collector) அவர்களுக்கும், நாட்டாண்மைக் கழகத்தாருக்கும் (District Board) விண்ணப்பம் செய்கிறோம் என்னும் தீர்மானத்தினை, உமாமகேசுவரனார் முன்மொழிந்து நிறைவேற்றினார்.

     மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், நாட்டாண்மைக் கழகத்தாருக்கும் தீர்மானத்தினை அனுப்பி நிறைவேற்றி வைக்கும்படி வேண்டிய போதிலும், தமிழைப் புகுத்த முடியாத நிலையே நீடித்தது.

     இந்நிலையில்தான் 1920 ஆம் ஆண்டு வட்டக் கழகத் தலைவராக உமாமகேசுரனார் தேர்ந்தெடுக்கப் பட்டார். திருவையாற்றில் தமிழைப் புகுத்தும் முயற்சியில் முழுமூச்சுடன் இறங்கினார்.

     திருவையாற்று வடமொழிக் கல்வி நிர்வாகத்தினரை, வட்டக் கழகத் தலைவராய் சந்தித்தார். இரண்டாம் சரபோசி மன்னர் அவர்களால் வட மொழி வளர்ச்சிக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில், தமிழைப் புகுத்து என்பது இயலாத செயலாகும், என்ற பதிலே கிடைத்தது.

     உடனே, இரண்டாம் சரபோசி மன்னர் அவர்களால் எழுதப்பட்ட அறக்கட்டளை சாசனத்தையே பார்த்துவிடுவோமே, என்று எண்ணி சரசுவதி மகால் நூலகத்திற்குச் சென்றார்.

ஞானியார் அடிகள்
     சரசுவதி மகால் நூலகத்தில் ஆராய்ச்சியாளராக இருந்த திரு எல்.உலகநாத பிள்ளை அவர்கள் மூலமாக, சரபோசி மன்னர் எழுதிய அறக்கட்டளைச் செப்புப் பட்டயத்தைப் பார்வையிட்டார். ஆனால் அந்த செப்புப் பட்டயமோ, வடமொழியில் எழுதப் பட்டிருந்தது. எனவே செப்புப் பட்டயத்தைப் படியெடுத்துக் கொண்டு கடலூர் நோக்கிப் புறப்பட்டார்.

     கடலூருக்கு அருகேயுள்ள, திருப்பாதிரிப் புலியூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஆதீனம், திருக்கோவலூர் ஆதீனம் ஆகும். இத் திருக்கோவலூர் ஆதீனத்தின் ஐந்தாம் குருமூர்த்தியாகப் பொறுப்பேற்று, ஐம்பத்து மூன்று ஆண்டுகள் செங்கோலோச்சியவர், ஞானியார் அடிகள் ஆவார். இவர் தமிழ் மொழிப் புலமையும், வடமொழிப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்றவர். மேலும் தமிழவேள் உமாமகேசுவரனாரிடத்து மிக்கப் பற்றும் பாசமும் உடையவர். பின்னாளில் உமாமகேசுவரனார் அவர்களுக்கு, செந்தமிழ்ப் புரவலர் என்னும் சீர்மிகு பட்டத்தினையும், தமிழவேள் என்னும் செம்மாந்தப் பட்டத்தினையும் வழங்கி அருளியப் பெருமகனார் இவரே ஆவார்.

     இத்தகு பெருமை வாய்ந்த ஞானியார் அடிகளை உமாமகேசுவரனார் சந்தித்தார். பட்டயத்தின் நகலினைக் காட்டி, மன்னர் இரண்டாம் சரபோசியின் அறக்கட்டளைக் குறித்த விவரங்களை ஆராய்ந்து கூறுமாறு வேண்டினார். பட்டயத்தின் நகலினைக் கவனமுடன் படித்த ஞானியார் அடிகள், ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இவ்வறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளதே தவிர, வடமொழி கற்பிப்பதற்காக என்று எவ்விடத்திலும் குறிப்பிடப் படவில்லை.  எனவே ஏழை மாணவர்களுக்கு இவ்வறக்கட்டளை மூலம் தமிழ் கற்பிக்கத் தடை எதுவும் கிடையாது என்று கூறி, அக்கல்லூரியில் தமிழ்ப் பயிற்றுவிக்க வழி வகுப்பது தமிழராம் நமது கடன் என அறிவுறுத்தி, ஆசி வழங்கி உமாமகேசுவரனாரை வழியனுப்பினார்.

     1920 ஆம் ஆண்டு முதல் தஞ்சை மாவட்டக் கழகத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றிய சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள், 1924 இல் மாவட்டக் கழகத் தலைவரானார். 1930ஆம் ஆண்டு வரை இவரே மாவட்டக் கழகத்தின் தலைவர். மாவட்டக் கழகத்தின் தலைவரே, சத்திரம் நிர்வாகத்தின் தலைவராவார். இக்காரணத்தால் திருவையாற்று  வேத பாடசாலையின் தலைவரானார் சர் ஏ.டி.பன்னீர் செல்வம். இதனால் உமாமகேசுவரனாரின் பணி எளிதாகியது.

     1924 ஆம் ஆண்டு, திருவையாற்று வேத பாடசாலையில், தமிழ் பயில்வதற்காக, பத்து மாணவர்களுக்குத் தமிழவேள் இடம் ஒதுக்கினார். அடுத்த ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கையினை இருபதாக உயர்த்தினார். மூன்றே ஆண்டுகளில் தமிழ் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும், வட மொழி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் சமமானது. வட மொழிக்கு இணையாக, சமமாக தமிழும் நங்கூரம் இட்டு அமர்ந்தது.

     உமாமகேசுவரனார் இதோடு மனநிறைவு அடைந்தாரா என்றால், அதுதான் இல்லை. சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களின் தலைமையினைப் பயன்படுத்தி, 1927 ஆம் ஆண்டில், வேத பாடசாலையின் பெயரினை அரசர் கல்லூரி என மாற்றினார. அவ்வருடமே சென்னைப் பல்கலைக் கழகத்தாரின் இசைவு பெற்று தமிழ் வித்வான் பட்டப் படிப்பினையும் ஏற்படுத்தினார்.

     இவ்வாறாக ஒரு வடமொழிக் கல்லூரியில் தமிழை நுழைத்து, ஏழை மாணவர்கள் இலவசமாய் தமிழ்ப் பயில வழி வகுத்தப் பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார்.

     இன்று அரசர் கல்லூரியில், தமிழ் சமஸ்கிருத மொழிகள் இரண்டிலும் இளங்கலைப் பட்டம் முதல் முனைவர் பட்ட வகுப்புகள் வரை நடைபெற்று வருகின்றன.

      1927 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற பல்லாயிரக் கணக்கானோரும், பட்டம் பெற பயின்று வருவோரும், தங்கள் இல்லங்களில் வைத்து வணங்க வேண்டிய மும்மூர்த்திகள் இரண்டாம் சரபோசி மன்னரும், உமாமகேசுவரனாரும், சர் ஏ.டி.பன்னீர் செல்வமும் ஆவர்.

     நிற்க. நிகழ்காலத்திற்கு வருவோமா? இதோ கல்யாண மகால் முன், இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருவரும் இறங்கினோம். மண்டபத்தை ஒட்டிய வீடுதான்,கல்லூரி விடுதியின் மேலாளரின் வீடு. வீட்டுத் திண்னையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து, விடுதி மேலாளர் இருக்கின்றாரா? எனக் கேட்டோம்? திண்னையில் அமர்ந்து இருந்தவர் எழுந்து வந்து நான்தான் மேலாளர் என்றார். அறிமுகப் படுத்திக் கொண்டோம். உமாமகேசுவர மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் என்றதும், அவரது முகம் மலர்ந்தது. எனது பெயர் இராசேந்திரன். எனது சொந்த ஊர் இரும்புத் தலை. உங்கள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றும் திரு நடராசன் அவர்களின் ஊரைச் சேர்ந்தவன் என்றார். எங்களின் முகமும் மலர்ந்தது.

காவிரி ஆற்றில் இருந்து, கல்யாண மால் உணவு விடுதியின் தோற்றம்
     விடுதியைப் பற்றி விசாரித்தோம். விடுதியின் பெயர் கல்யாணமால் உணவு விடுதி என்றார். இவ்விடுதியில் 200 க்கும் மேற்பட்ட மாணவியர்கள் தங்கி பயின்று வருகின்றனர். அனைவருக்கும் தங்கும் விடுதி வசதியும், உணவும் இலவசமாகவே வழங்கப் படுகின்றது என்றார்.

கல்யாண மால் உணவு விடுதி
    விடுதியின் பெயர் மனதை நெருடியது. இரண்டாம் சரபோசி மன்னர் நிறுவிய சத்திரத்தின் பெயர் கல்யாண மகால் என்பதாகும். எனவே இவ்விடுதியின் பெயர் கல்யாண மகால் உணவு விடுதி என்று இருக்குமானால் பொருத்தமானதாக இருந்திருக்கும். ஆனால் விடுதியின் பெயர் கல்யாணமால் என்றே அழைக்கப் படுகின்றது. கல்லூரியின் ஆண்டு மலரிலும் கல்யாணமால் விடுதி என்றே உள்ளது. காலப் போக்கில் பெயர் மருவி இருக்குமோ என்ற எண்ணம் எழுந்தது.

      கல்யாணமால் விடுதியின் முகப்பைப் பார்த்தோம். விடுதியின் பெயரினைப் போலவே, விடுதியின் முகப்பும் உருமாறி, பழுதடைந்த நிலையில், பரிதாபமாய், ஏதோ யானைக் கொட்டகைப் போல் காட்சியளித்தது. மேலாளரிடம் அரசர் கல்லூரியின் மாணவர் கையேடு கிடைக்குமா?, என்று கேட்டேன். இதோ தருகிறேன் என்று கொண்டு வந்து கொடுத்தார். பிரித்துப் பார்த்தேன்.  கல்லூரியின் 131 ஆண்டுகால வரலாறு இரண்டே பக்கங்களில், மளிகைக் கடையின் விலைப் பட்டியலைப் போல் காட்சியளித்தது. மனம் வேதனையால் வாடியது.

மன்னர் இரணடாம் சரபோசி
     அரசர் கல்லூரி போன்ற பெருமை வாய்ந்த கல்லூரிகள் மாணவர்களுக்குக் கல்வியை மட்டும் கற்றுத் தந்தால் போதுமா? பழம் பெருமையும், வரலாற்று முக்கியத்துவமும் பெற்ற கல்லூரியின் வரலாற்றினை, தமிழ் கற்கும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டுமல்லவா? இது கல்லூரியின் கடமையல்லவா? ஏதோ அரசர் கல்லூரியில் சேர்ந்தோம், படித்தோம், பட்டம் பெற்றோம், வேலை கிடைத்தது, வாழ்வு வளமடைந்தது என்று மாணவர்கள், தங்கள் வாழ்க்கையினைத் தொடருவார்களேயானால், இரண்டாம் சரபோசி மன்னரின் வள்ளல் தன்மையும், கல்வி வளர்ச்சியில் அவர் காட்டிய அக்கறையும், உமாமகேசுவரனார், ஏ.டி.பன்னீர் செல்வம் போன்றவர்களின் தமிழ்த் தாகமும், தன்னலமற்ற அயரா உழைப்பும், கல்லூரியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கரந்தைக் கவியரசு போன்ற எண்ணற்றோரின் தளராத் தமிழ்ப் பணியும், சிதம்பர ரகசியம் போல், வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறைந்து விடுமல்லவா?

கனத்த இதயத்துடன் விடைபெற்றோம்.

    

     

01 ஜூலை 2012

கணித மேதையின் தப்புக் கணக்கு


          உலகமே கண்டு வியந்த கணித மேதை சீனிவாச இராமானுஜன் ஆவார். ஆனால் இராமானுஜனின் வாழ்க்கைக் காலமோ மிகவும் குறுகியது. முப்பத்து மூன்று ஆண்டுகளே வாழ்ந்து, ஏகலைவனாய் வளர்ந்து, கணிதத்தின் உச்சியைத் தொட்டவர்.

          கணிதமெனும் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுக்கத் தெரிந்த இராமானுஜனுக்கு, உலகமே வியக்கும் வன்னம் புத்தம் புதுக் கணிதத் தேற்றங்களை நாளும் கண்டுபிடித்த இராமானுஜனுக்கு, சாதாரண உடலியற் கணக்கு விளங்காமற் போனதுதான் விந்தையிலும் விந்தையாகும்.

                இராமானுஜனின் கணிதத் தேற்றங்களை அஞ்சல் வழிப் பெற்று ஆராய்ந்து, வியப்பின் விளிம்பிற்கேச் சென்ற, இலண்டன் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி அவர்கள்,1913 ஆம் ஆண்டு, இலண்டனுக்கு வருமாறு இராமானுஜனை அழைத்தார். அனால் இராமானுஜன் இந்த கிடைத்தற்கரிய அழைப்பினை ஏற்க மறுத்துவிட்டார். காரணம், அய்யங்கார் வகுப்பில் பிறந்தவர்கள், தங்கள் சமூக விதிகளின் படி கடல் கடந்து செல்லக் கூடாது என்பதுதான்.

     சில நாட்களில் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் நெவில் என்பார், ஒரு கணிதக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் பொருட்டு சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு வருகை புரிந்தார். இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணிய ஹார்டி அவர்கள், நெவிலிடம் ஒரு முக்கியப் பொறுப்பினை ஒப்படைத்தார். கணித மேதை இராமானுஜனை எப்படியாவது இலண்டனுக்கு வரச்  சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதே அப்பொறுப்பாகும்.

இலண்டனில் பி.ஏ., பட்டம் பெற்றபொழுது
         பேராசிரியர் நெவில் அவர்கள் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழு அறையில் இராமானுஜனைச் சந்தித்து, இலண்டனுக்கு வருமாறு அழைத்தபோது, இலண்டனுக்கு வர தனது இசைவினை வழங்கி நெவிலை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் இராமானுஜன். இதற்குக் காரணம், இராமானுஜன் எழுத்தராகப் பணியாற்றிய, சென்னைத் துறைமுகக் கழகத்தின் தலைவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் மற்றும் நாராயண அய்யர் போன்றவர்கள், இந்தியாவில் இருக்கும் வரை உன் திறமை வெளிப்பட வாய்ப்பேயில்லை, இலண்டன் சென்றால்தான் உன் திறமையை இவ்வுலகு அறியும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், தனது கொள்கையை, சிறிது தளர்த்தி இலண்டன் சென்றார். உலக அளவிலான புகழ் அவரை நாடி வந்தடைந்தது.

      இராமானுஜன் இலண்டனுக்குச் சென்ற ஆண்டு 1914. இராமானுஜன் இலண்டன் சென்ற சில மாதங்களிலேயே முதலாம் உலகப் போர் தொடங்கியது. போரின் தொடக்கத்தில் இராமானுஜனுக்குப் பாலும், காய்,கனிகளும் தடையின்றிக் கிடைத்தன. நாட்கள் செல்லச் செல்ல சைவ உணவுப் பொருட்கள்  கிடைப்பது பெரிதும் கடினமாயிருந்தது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்ணும் பழக்கம் இராமானுஜனை விட்டு விலகத் தொடங்கியது.

      1917 ஆம் ஆண்டு, மிகவும் உடல் நலம் குன்றிய இராமானுஜன், ஹில் குரோப் நகருக்கு அருகே உள்ள, மென்டிப் சானிடோரியத்தில் சேர்க்கப் பட்டார். இங்கு, இராமானுஜனுக்குக் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

      விட்டமின்-டி சத்துக்குறைவே காசநோய்க்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டு வரை காசநோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு விட்டமின் டி சத்துக் குறைவினைத் தடுக்க முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டுக் கறி, மீன், மீன் எண்ணெய் மாத்திரைகள் போன்றவையே உணவாக உட்கொள்ள அறிவுறுத்தப் பட்டது. ஆனால் அய்யங்கார் வகுப்பினைச் சேர்ந்தவரான இராமானுஜன், இவ்வகை உணவுகளில் ஒன்றைக்கூட சாப்பிடாதவராக இருந்தார். மருத்துவர்கள் பலவாறு அறிவுறுத்தியும், மீன் எண்ணெய் மாத்திரைகளைக் கூட உட்கொள்ள அவர் தயாராக இல்லை. தனது உடல் நிலை தளர்வுற்ற போதிலும், சைவமே தன்னைக் காக்கும் என்று இராமானுஜன் போட்ட மனக் கணக்கு பெருந்த தவறாய் போனது. விபரீத முடிவினைத் தந்தது.

      சூரிய ஒளியானது நமக்கு வெளிச்சத்தை மட்டும் தருவதில்லை. சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள் நம் தோலில் தொடர்ந்து படும்பொழுது, தோலில் உள்ள கொழுப்புக்களைத் தூண்டி, விட்டமின் டி உற்பத்தியை ஊக்குவிக்கும். ஆனால் இலண்டனில் வருடக் கணக்கில் நான்கு சுவர்களுக்குள்ளேயே  தனது  கணித வாழ்க்கையை அமைத்துக் கொண்ட இராமானுஜனுக்கு சூரிய ஒளியும் எட்டாக் கனியாய் மாறியது.

     இராமானுஜன் 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் நாள் இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய ஓராண்டிலேயே, 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள், காசநோயே இராமானுஜனை மண்ணுலகிலிருந்து, விண்ணுலகிற்கு அழைத்தச் சென்றது.

     இராமானுஜன் தனது முதல் கொள்கையினைத் தளர்த்தியதைப் போலவே, தனது இரண்டாவது கொள்கையைப்  பிடிவாதத்தைச் சிறிது தளர்த்தியிருப்பாரேயானால், குறைந்த பட்சம் தனது உடல் நிலை முன்னேற்றம் அடையும் வரையிலாவது, மருத்துவர்களின் ஆலோசனையினைப் பின்பற்றி இருப்பாரேயானால், உடலியற் சூத்திரத்தினை உணர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின் பற்றி இருப்பாரேயானால், இராமானுஜனின் வாழ்வு எல்லையானது விரிந்து மலர்ந்திருக்கும்.

   இராமானுஜனும் நூறாண்டு வாழ்ந்து, கணித உலகில் ஆயிரமாண்டு முன்னேற்றத்திற்கானச் சாதனைகளைப் படைத்திருப்பார்.
----------------------------------