13 ஜூன் 2013

கரந்தை மலர் 12


-------- கடந்த வாரம் -------
திருவையாற்றிலிருந்து கும்பகோணம் சாலையில் 2 கி.மீ தொலைவில், திங்களூருக்குச் சாலை பிரியும் இடத்தில், திருநாவுக்கரசர் பெயரால் அப்பூதி அடிகள் அமைத்த தண்ணீர் பந்தல் இன்றும் அன்பர்கள் சிலரால் அமைக்கப் படுகிறது. ஏழூர் பல்லக்கானது, இவ்விடத்தைக் கடக்கும் போது, ஊர்வலத்தில் செல்லும் அன்பர்கள் சில நிமிடங்கள் நின்று, அப்பூதியடிகளின் அன்பினை, குருபக்தியினை வியந்து போற்றியபடி, நீரும் மோரும் அருந்தி தங்கள் பயணத்தைத் தொடர்வார்கள்.
------------------------
திருப்பழனம்

     குலவெஞ்  சிலையான்  மதில்மூன்  றெரித்த  கொல்வேறுடை  யண்ணல்
  கலவ  மயிலும்  குயிலும்  பயிலும்  கடல்போற்  காவேரி
  நலமஞ்சுடைய  நறுமாங்  கனிகள்  குதிகொண்  டதிருந்திப்
  பலவின்  கனிகள்  திரைமுன்  சேர்க்கும்  மழன  நகராமே

என ஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பெற்ற திருப்பழனத்தை பல்லக்குகள் சென்றடையும். பொதுமக்களால் இவ்வூர் திருப்பயணம் என்று அழைக்கப் படுகிறது. பழனம் என்ற பைந்தமிழ் சொல் வயல் வெளியைக் குறிக்கும். வயல் வெளிகள் நிறைந்த ஊராகையால் திருப்பழனம் என்றழைக்கப்படுகிறது.

     திருப்பழனத்தார் தமது ஊரில் இறைவனுக்கு விழா கொண்டாடி, அவரைப் பல்லக்கில் அமர்த்தி விழாக் கோலத்துடன் ஊர் எல்லைக்கு அழைத்து வருவார்கள். திருவையாற்றில் இருந்து வந்த பல்லக்குகளுடன், இப்பல்லக்கும் சேர்ந்து கொள்ளும். திருவையாறு மற்றும் திருப்பழனப் பல்லக்குகள் காவேரி மற்றும் குடமுருட்டி ஆறுகளைக் கடந்து, திருச்சோற்றுத் துறை என்னும் ஊரைச் சென்றடையும்.

திருச்சோற்றுத் துறை

    காலை எழுந்து  கடிமல்  தூயன  தாங்கொணர்ந்த
    மேலை  அமரர்  விருத்பு  மிடம்விரை  யான்மலிந்த
    சோலை  மணங்கமழ்  சோற்றுத்  துறையுறை  வார்சடைமேல
    மாலை  மதியமன்  றோவெம்  பிரானுக்கு  கழகியதே

என்று அப்பர் பெருமானால் பாடப்பெற்ற தலம் திருச்சோற்றுத் துறையாகும்.

     திருஞான சம்பந்தர் காலம் தொடங்கி இவ்வூரின் பெயர் மாற்றம் இன்றி வழங்கி வருகிறது. திருச்சோற்றுத் துறையினை திரு + சோறு + துறை எனப் பிரிக்கலாம். சோற்றடைப்பு என்ற சொல் அன்னதானக் கட்டளையையும், சோற்றுப்புரை என்ற சொல் மடைப் பள்ளியையும் குறிக்கும். திருவிழாக் காலங்களில் நீர்த் துறையில் கூடி உண்ணும் விருந்திற்குத் துறை சாதம் என்று பெயராகும். இச்சொல்லே முன்பின்னாக சோற்றுத் துறை என்று தனித் தமிழில் அமைந்துள்ளது. அடியார்களுக்குச் சோற்றினை வழங்கும் சிவன் உறையும் தலம் திருச்சோற்றுத் துறையாகும்.

     திருவையாற்று, திருப்பழனப் பல்லக்குகளுடன் திருச்சோற்றுத் துறையின் பல்லக்கும் சேர்ந்து, மூன்று ஊர் பல்லக்குகளும் திருவேதிக் குடிக்குப் பயணமாகும்.




திருவேதிகுடி

      செம்பொன்  நன்மலர்  மேலவன்  சேர்திருவேதிக் குடியே

என அப்பர் பெருமானால் பாடப் பெற்ற தலம் திருவேதிகுடியாகும். வேதி என்ற சொல்லுக்கு அறிந்தவன், பண்டிதன், மேடை, மதில் என்ற சொற்களைத் தமிழகராதி குறிப்பிடுகின்றது. எனவே மதிலுடன் ஊர்ப் பெயரைத் தொடர்பு படுத்தலாம் எனினும், கல்வியில் சிறந்தவர்கள் வாழ் ஊராகக் குறிப்பிடுவதே பொருத்தமாகும். திருவேதிகுடியில் ஆலய மரியாதையை ஏற்றபின், மாலை ஆறு மணியளவில் திருவேதிகுடிப் பல்லக்கும் சேர்ந்து கொள்ள, நான்கு ஊர் பல்லக்குகளும் கண்டியூருக்குப் பயணமாகும்.

கண்டியூர்

        பிண்டியார்  மண்டை  யேந்தி  பிறர்மனை  திருந்துண்ணும்
        உண்டியான்  சாபம்  தீர்த்த  ஒருவனூர்  உலமேகத்தும்
        கண்டியூர்

எனத் திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்ற தலம் கண்டியூர். இவ்வூர் தஞ்சாவூர் திருவையாறு சாலையில் அமைந்துள்ளது. பிரம்மா தன்னை சிவனுக்குச் சமமாக எண்ணியதால், பார்வதி தேவியார் அவருடைய ஐந்து தலைகளுள் ஒன்றைக் கொய்யுமாறு இறைவனிடம் கூற, இறைவனும் அவ்வாறே செய்தார். இதனால் இவ்வூர் கண்டனபுரம் ஆயிற்று என்பர்.

     தமிழ் அகராதியானது கண்டி என்பதற்குப் பல பொருட்களைக் குறிப்பிட்டுள்ளது. அவற்றுள் மந்தை, நிலப் பிரிவு, எழுபத்தைந்து ஏக்கருள்ள நில அளவை, ஒரு முகத்தல் அளவை என்பன சிலவாகும். மந்தை, நிலப் பிரிவு இவற்றில் ஒன்றிலிருந்து உருவான பெயராகவே இருக்க வேண்டும். ஏழூர்களின் பிற ஊர்ப் பெயர்களுக்கு இயற்கையின் அடிப்படையில் பெயர் அமைந்திருக்க, இவ்வூருக்கு மட்டும் புராண அடிப்படையில் பெயர் அமைந்திருக்க வாய்ப்பில்லை.

             ஏழூரும் சுற்றி இளைப்பாறும் கண்டியூர்
என்பதற்கேற்ப பல்லக்கு சுமப்பவர்களும், ஏழூரை வலம் வரும் பொது மக்களும் சில மணி நேரங்கள் ஓய்வெடுப்பார்கள். ஓய்வுக்குப் பின் ஐந்து ஊர் பல்லக்குகளும் திருப்பூந்துருத்திக்குச் செல்லும்.

திருப்பூந்துருத்தி

     பல்லக்கில் வந்த ஞானசம்பந்தப் பெருமானை, வயதான நிலையில் இருந்த அப்பர், பல்லக்கை சுமப்பவர்களில் ஒருவராக சுமந்த தலம் இத்திருப்பூந்துருத்தியே ஆகும்.

     செழுமதியம்  தவம் சோலைப் பூந்துருத்தி
எனச் சேக்கிழாரால் பாடப்பெற்றத் தலம் திருப்பூந்துருத்தியாகும்.

     ஆற்றிடைக்குறையில் உள்ள தலம் துருத்தி எனப்படும். எடுத்துக்காட்டாக, மாயிலாடுதுறைக்கு அருகில் உள்ள குத்தாலம் என்னும் ஊரானது திருத்துருத்தி என்றே முன்னாளில் அழைக்கப் பட்டது. காவேரி, குடமுருட்டி என்ற ஆறுகளுக்கு இடையில் பூக்கள் மிகுந்து காணப்பட்ட நிலப்பகுதி, திரு என்னும் அடைமொழியுடன் இணைந்து திருப்பூந்துருத்தி ஆயிற்று என்றும் கூறுவர்.

     ஐந்து ஊர் பல்லக்குகளும், திருப்பூந்துருத்தி தீர்த்த நாராயணர் சமாதியருகே வந்து சேரும். திருப்பூந்துருத்தி இறைவன் பல்லக்கில் அமர்ந்து ஐந்து ஊர் பல்லக்குகளையும் வரவேற்பார். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். பின்னர் குடமுருட்டி மற்றும் காவிரி ஆறுகளைக் கடந்து, நள்ளிரவுக்குப் பின் ஆறு ஊர் பல்லக்குகளும் திருநெய்த்தானத்தைச் சென்றடையும்.

திருநெய்த்தானம்

பறையும்பழி  பாவம்படு  துயரம்  பலதீரும்
பிறையும்புனல்  அரவும்பட  சடையம்  பெருமானார்
அறையம்புனல்  வருகாவிரி  அலைசேர்வடர்  கரைமேல்
நிறையும்புனை  மடவார்பயில்  நெய்த்தா  னமேனீரே

என்று ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருநெய்த்தானமாகும். இவ்வூர் திருவையாற்றில் இருந்து கல்லனை செல்லும் வழியில், இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஏழூர் திருவிழாவின் ஏழாவது தலம் இந்த திருநெய்த்தானமாகும்.

     கால்நடைகள் மிகுதியாக இருந்து நெய் உற்பத்தி அதிகமாக இருந்ததனால் இவ்வூருக்கு நெய்த்தானம் என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். பாலின் அடிப்படையில் பாலூர், வெண்னையின் சிறப்பால் வெண்னெய் நல்லூர், எருமைகள் மிகுந்த ஊர் எருமைப் பட்டி, பசுக்கள் நிறைந்த ஊர் ஆவூர் என அழைக்கப்பட்டு வருவது போல் நெய்த்தானமும் ஏற்பட்டது. திரு என்ற அடைமொழியுடன் இவ்வூர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் மக்களின் தவறான உச்சரிப்பு காரணமாக இன்று இவ்வூர், தில்லைஸ்தானம் என்றே அழைக்கப்படுகிறது.

     திருநெய்த்தானத்தை வந்தடையும் ஆறு ஊர் பல்லக்குகளையும் திருநெய்த்தான இறைவன் நெய்யாடியப்பர் பல்லக்கில் அமர்ந்து காவிரிக் கரையில் வரவேற்பார். தொடர்ந்து வான வேடிக்கை நடைபெறும். பொழுது புலர்ந்து விடும். பின்னர் ஏழூர் பல்லக்குகளும் புறப்பட்டு திருவையாற்றைச் சென்றடையும்.

     திருவையாற்றின் மேல வீதி, வடக்கு வீதி வழியாக தேரடியை அடைந்த பின், ஆறு ஊர்களின் பல்லக்குகளும் தேரடியிலேயே நிற்க, திருவையாற்று ஐயாறப்பர் பல்லக்கினைத் தேவர்கள் வரவேற்கும் விழா நடைபெறும். கயிற்றில் கட்டிய பொம்மை ஒன்று அசைந்தாடி வந்து, ஐயாறப்பருக்கு மாலையிடும். இந்நிகழ்ச்சிக்குப் பூப்போடுதல் என்று பெயர். தொடர்ந்து ஐயாறப்பர் பல்லக்கானது, தெற்கு கோபுர வாசல் வழியாக, திருவோலக்க  மண்டபத்தை வந்தடையும். மங்கல ஒலி முழங்க ஏழூர் திருவிழாவானது இனிதே நிறைவுறும்.

உமாமகேசரும் சத்தானமும்

     தஞ்சை வட்டக் கழகத் தலைவராகத் திகழ்ந்த உமாமகேசுவரனார் அவர்கள், தமது பொறுப்பில் இருந்த எல்லா ஊர்களுக்கும் நேரில் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். உமாமகேசுவரனாரது திருவடி படாத ஊரே தஞ்சை வட்டத்தில் இல்லை எனலாம். அவரால் தான் சிற்றூர்கள் அனைத்திற்கும் தார்ச் சாலைகள் போடப்பட்டன. உமாமகேசுவரனார் காலத்தில் போடப்பட்ட சாலைகளில் முக்கியமானது, வரகூர் - அன்பது மேலகரம் சாலையாகும். இச்சாலை வரகூர் அக்கிரகாரத்தின் எதிர்ப்பினையும் மீறி அமைக்கப்பட்ட சாலையாகும்.

     திருவையாற்றை மையமாகக் கொண்டு நடைபெறும் ஏழூர் திருவிழாவின்போது, திருவையாற்றில் இருந்து புறப்படும் பல்லக்குகளைத் தூக்கிச் செல்வோரும், பல்லக்கின் முன்னும், பின்னும் செல்லும் பல்லாயிரக் கணக்கானப் பொது மக்களும், ஏழூரையும் இணைப்பதற்குரிய சரியான சாலைகள் இல்லாமல் பெரிதும் துயறுற்றனர். பலவிடங்களில் வயல்வெளிகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.

     ஏழூர் திருவிழாவில் தவறாமல் கலந்து கொள்ளும் இயல்புடைய உமாமகேசுவரனார், மக்கள் படும் இன்னல்களைத் தாமே நேரில் கண்டு உணர்ந்து, உடனடியாக சாலைகள் அமைப்பதற்கு உரிய ஆணையினைப் பிறப்பித்தார்.

     மேலத் திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய இரண்டு ஊர்களை இணைக்கும் சாலையும், திருப்பழனம், திருச்சோற்றுத் துறை ஆகிய ஊர்களை இணைக்கும் சாலையும், கண்டியூர் ஆலங்குடி சாலைகளும் உடனடியாகப் போடப்பட்டன. இவற்றுள் முதலிரண்டு சாலைகளும், காவிரி மற்றும் குடிமுருட்டி ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப் பட்டவை. ஆற்றில் நீர் நிறைந்தோடும் காலங்களில், இவ்வாறுகளைக் கடப்பதற்கு, இப்பாதைகளின் இருபுறமும், உமாமகேசுவரரால் தோணித் துறைகள் ஏற்படுத்தப் பட்டன.

     திருப்பழனம், திருச்சோற்றுத் துறைச் சாலையின் இருபுறமும் நிழல் தரும் மரங்கள் பயிரிடப்பட்டன. இவைமட்டுமல்ல, சாலைகளுக்குக் குறுக்காகச் செல்லும் வாய்க்கால்களைக் கடக்க பாலங்களும் அமைத்தார்.


     ஏழூர் திருவிழாவை முன்னிட்டு சிறப்பான துப்புரவு ஏற்பாடுகள் செய்யப்படும். பகற் பொழுதில் காவிரி, குடமுருட்டி ஆகிய இரண்டு ஆறுகளின் மணற் பரப்பில் நடந்து செல்வோருக்குக் கால்கள் சுடாதபடி, வைக்கோல் பரப்பப்பட்டு, தண்ணீர் தெளிக்கப்படும். இரவு நேரங்களில் ஆங்காங்கே மண்ணெண்ணய் ஆவி விளக்குகள் பொறுத்தப்பட்டிருக்கும். உமாமகேசுவரரால் இது போன்ற வசதிகள் செய்யப் பெற்றதால், மக்கள் சுற்றுலாச் செல்வது போல் ஏழூர் வலம் வருதலை மேற்கொண்டனர்.

    ஏழூர் திருவிழாவின் போது, ஏழு ஊர்களையும் இணைக்கும் அனைத்து சாலைகளும் விழாக் கோலம் பூண்டிருக்கும். ஆங்காங்கே தேவாரம் பாடு கூட்டங்களும், பஜனைக் கூட்டங்களும் நடைபெறும். சிலர் இசைக் கருவிகளை வாசித்தபடியும், சிலர் பாடிக் கொண்டும் செல்வார்கள். இப்பாடல்கள் கேட்டு மகிழ்ந்து அக்கூட்டங்களுடன் செல்வோரில் பலர் ஆடியும், சிலர் பாடியும், மேலும் பலர் பல்வேறு வேடங்கள் புனைந்தும் செல்வார்கள். ஆயிரக் கணக்கானப் பொது மக்கள் இவைகளைக் கண்டும் கேட்டும் ரசித்தவாறு செல்வார்கள்.


     கூட்டத்தில் செல்வோருக்குச் சிலர் பெரிய பெரிய விசிறிகளைக் கொண்டு விசிறுவார்கள். சிலர் சந்தணக் குழம்புகளை துருத்தியில் நிரப்பிப் பீய்ச்சுவார்கள். வழி எல்லாம் தண்ணீர் பந்தல்களும், தோரணங்களும் காட்சி அளிக்கும். வீடுகளின் முன்பான அமைக்கப்பட்டிருக்கும் பந்தல்களில், தாருகளுடன் உள்ள வாழை மரங்களும், இளநீர் குலைகளும், ஈச்சங் குலைகளும் கட்டப் பெற்றிருக்கும். மா, தென்னை, பணை காகிதங்களால் செய்யப் பெற்ற தோரணங்கள் வீடுகளையும், வீதிகளையும் அலங்கரித்திருக்கும். தெருக்கள் எல்லாம் நீர் தெளித்து, தூய்மை செய்யப்பெற்று, அழகிய வண்ணக் கோலங்களால் பொலிவு பெற்றுக் காட்சியளிக்கும்.

      இவ்விழாவினால் மக்களிடையே உள்ள அரிய நல்லுணர்ச்சிகள் யாவும் வெளிப்படுகின்றன. அவற்றால் தெய்வ உணர்ச்சி, சமய வளர்ச்சி, மக்கள் ஒற்றுமை, சாதி வேற்றுமை நீங்குதல், அன்பு, அளவிலா மகிழ்ச்சி முதலியன உண்டாகின்றன. மேலும் பல்வகை கலைகளும் வளருகின்றன.

     உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் வெண்ணீறும், உருத்திராட்ச மணி மாலையும், புன்முறுவலும் பூத்த பொன் மேனியராய், இடையில் கட்டிய வேட்டியும், இதன் மேல் சுற்றிய வெண்ணிற துண்டுடன், அடியார்கள் புடை சூழ, ஏழூர் முழுதும் நடந்தே செல்வார். அடியார்களை ஆங்காங்கே சமயச் சொற் பொழிவாற்றச் செய்வதோடு, தாமும் சொற் பொழிவாற்றுவார். விழா நடக்கும் இரண்டு நாட்களிலும் வேறு பணிகள் எதிலும் ஈடுபட மாட்டார்.

     ஏழூர் திருவிழா நாட்களில் உமாமகேசுவரனாரின் பங்களிப்பையும், செயல் திறனையும் நேரில் கண்ட மறைமலை அடிகளாரின் புதல்வர் மறை. திருநாவுக்கரசு அவர்கள் மறைமலையடிகள் வரலாறு என்னும் தனது நூலில், உமாமகேசுவரனார் வளர்த்த ஏழூர் விழாவை இனியும் வாழ்வித்தல் அன்பர் கடனாகும் என்று எழுதுகிறார். இதிலிருந்தே ஏழூர் திருவிழாவில் உமாமகேசுவரனார் கொண்டிருந்த ஈடுபாட்டை அறியலாம்.

     இதுமட்டுமல்ல, ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் இளவல் ந.மு.கோவிந்தராய நாட்டார் அவர்கள், தான் எழுதிய, திருவையாற்றின் ஏழூர் திருவிழா வரலாறு என்னும் நூலினை உமாமகேசுவரனாரின் நினைவுக்கு உரிமையாக்கிப் பின்வருமாறு எழுதுகிறார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோன்றிய காலத்திலிருந்து, அதன் தலைவராயிருந்து தமிழன்னைக்கு அரும்பெருந் தொண்டாற்றி வந்த, அண்ணலாரும், கரந்தைப் புலவர் கல்லூரி, உயர் நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, திக்கற்ற மாணவர் இல்லம் ஆகியவற்றை நிறுவி, அவற்றை தண்ணளி நிறைந்த தாய்போல் புரந்து வந்த பேராளரும், எளிய மாணவர்களுக்கும், புலவர்களுக்கும் பொருளுதவி செய்து, அவர்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டிய வள்ளலாரும், தமிழும் சைவமும் தழைத்தோங்க, அவற்றை தம்மிரு கண்களாகப் போற்றித் தொண்டாற்றி வந்த தூய வாழ்க்கையரும், ஆண்டுதோறும் ஐயாறப்பர் ஏழூர் விழாவிற்குச் சென்று, ஏழூர் நடந்து வலம் வந்து, வணங்கி இறையருள் பெற்ற திருவினாரும், தஞ்சை வட்டக் கழகத் தலைவராயிருந்த போது, திருப் பழனத்திலிருந்து, திருச்சோற்றுத் துறை வரையில் சாலையின்மையால் ஐயாறப்பர் முதலிய மூர்த்திகள் எழுத்தருளும் திருப்பல்லக்குகளும், அடியார் குழாங்களும் வயல்களின் வழியாகச் செல்ல வேண்டியிருந்தமை அறிந்து வருந்தித் தக்கதோர் சாலை அமைத்துதவிய சைவப் பெருந்தகையாளரும், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளரும், பேரறிவாளரும் ஆகிய தமிழ்ப் புரவலர் தமிழவேள் உயர்திருவாளர் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, பி.ஏ., பி.எல்., அவர்கள் நினைவிற்கு இந்நூல் உரிமையாக்கப்படுகிறது.

     இவ்வாறாக ஏழூர் திருவிழாவானது சிறக்கப் பல்லாற்றானும் பாடுபட்ட பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார்.

,..... வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் சந்திப்போமா

40 கருத்துகள்:

  1. பாடல் பெற்ற தலங்கள் குறித்த தகவல்கள் அருமை! சிறப்பான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் திருவையாற்றிற்கு அருகில் கும்பகோணத்தில் இருப்பவர். இவ்விழாவினைப் பார்த்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன் அய்யா.
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

      நீக்கு
  2. அருமையான தகவல்களுடன் பதிவு சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.

    //திருவையாற்றிலிருந்து கும்பகோணம் சாலையில் 2 கி.மீ தொலைவில், திங்களூருக்குச் சாலை பிரியும் இடத்தில், திருநாவுக்கரசர் பெயரால் அப்பூதி அடிகள் அமைத்த தண்ணீர் பந்தல் இன்றும் அன்பர்கள் சிலரால் அமைக்கப் படுகிறது.//

    நினைத்துப் பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அய்யா. நினைக்க நினைக்க மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செயல் அய்யா இது. தங்களின் வருகையும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தந்து சிறப்பிக்க அன்போடு வேண்டுகிறேன் அய்யா.

      நீக்கு
  3. அருமையான தகவல்கள் அடங்கிய பதிவு.
    மிக்க மகிழ்ச்சி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

      நீக்கு
  4. பல ஊர், மனிதர்கள், அவர்தம் பழக்க வழக்கங்களின் தகவல்களை அடங்கிய அரிய படைப்பு. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

      நீக்கு
  5. செழிப்பான தமிழ்நாட்டில் வாழ்றீங்க போல! நாங்கல்லாம் "தண்ணியில்லாத காட்டில்" இருந்து வந்தவங்க! :) இருந்தாலும் எங்க ஊர்தான் எங்களுக்கும் சொர்க்கம்!

    உங்களால் "கரந்தை" புகழ் பரவட்டம்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செழிப்பான் ஊர் என்பது எல்லாம் பழமையான செய்தி அய்யா. காவிரி வறண்டு கிடக்கிறது.தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

      நீக்கு
  6. சிறப்பான தகவல்கள், விளக்கங்கள் அனைத்தும் சிறப்பு... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

      நீக்கு
  7. மக்கள் தமிழும் சைவமும் தம்மிரு கண்களாகக் கொண்டு வாழ்ந்தனர். ஏழூர் பல்லக்கு விழா தமிழகத்தில் காலகாலமாக நடைபெற்று வரும் மிகப் பெரிய சமுதாய ஒருங்கிணைப்புத் திருவிழா எனில் மிகையாகாது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் அய்யா. ஏழூர் திருவிழா மிகப் பெரிய சமுதாய ஒருங்கிணைப்புத் திருவிழாதான்.தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

      நீக்கு
  8. அன்றைய காவிரி நீர் போல்
    தளிர் நடை போட்டு செல்கிறது.
    பாராட்டுக்கள். கரந்தையாரே.

    கங்கையிற் புனிதமாய
    காவிரி நீர் நடுவுபாட்டு
    பூம்பொழில் அரங்கம்தன்னில்
    எங்கள் மால், இறைவன்,
    ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
    என்று காவிரியின் மாண்பை பாடுகிறார்
    தொண்டரடிபொடி ஆழ்வார்.

    அவள் பாயும் இடமெல்லாம்
    பச்சை மால் மலை போல் மேனி கொண்டு
    படுத்திருக்கும் அரங்கனின் நாயகியாம்
    தான்ய லட்சுமியின் அருள் நிறைவு
    பொங்கி ததும்புகிறது.

    அவள் செல்லும் வழியெல்லாம்
    கணக்கற்ற சைவ வைணவ திருத்தலங்கள்.

    தமிழும் பக்தியும் கைகோத்து
    தமிழ்நாட்டை தெய்வீக மணம்
    கமழ செய்தது அக்காலத்தில்.

    அதன் சுவடுகள் மட்டுமே இன்று எஞ்சி நிற்கிறது.

    தஞ்சை வளநாடு சோறுடைத்து
    என்ற நிலை போய் மக்கள் பலர்
    வயிற்று பிழைப்புக்காக கல்லை உடைத்து
    அதில் கிடைக்கும் அற்ப வருவாயில்
    வயிற்றை கழுவும் நிலை வந்துவிட்டது .

    எதற்கெடுத்தாலும் அரசை கையேந்தும்
    பிச்சைக்கார பட்டாளங்களை உருவாக்கிவிட்டன
    ஆளவந்த சுயநல அரசியல் அசிங்கங்கள்.

    உடலில் உறுதியிருப்பவன்
    எளியோரை வதைக்கிறான்

    உள்ளத்தில் உறுதியிருப்பவன்
    ஊரை ஏமாற்றி கொழுக்கிறான்.

    எல்லாம் மக்களின்
    அறியாமையின் வெளிப்பாடுகள்

    சிந்திப்பார் யாருமில்லை.

    எதையும் சிந்திக்காமல்
    எவன் பின்னேயும் சென்றும்
    ஏமாந்து மக்கள் அல்லல்படும்
    கூடமாகிவிட்டது தமிழர் கூட்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அய்யா. காவிரி பாயும் வழியெல்லாம், வளம் கொழித்தது அந்தக் காலம் அய்யா. காவிரியில் இன்று தண்ணீர் மட்டுமோ இல்லை, மணலும் கூட கொஞ்சம் கொஞ்சமாய், கரையேறிப் போய்ப் கொண்டே இருக்கிற்து அய்யா. இந்நிலை என்று மாறுமோ.தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

      நீக்கு
  9. உமா மகேஸ்வரனாரின் அறிய பணிகளை படிக்கும்போழ்து வியப்பு மேலிடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

      நீக்கு
  10. எங்கள் சொந்த ஊர் திருமழபாடி. எங்கள் ஊருக்கு எதிரில், கொள்ளிடம் ஆற்றின் தென் கரையில் உள்ள ஊர்தான் தில்லைஸ்தானம். தில்லைஸ்தானத்தில் நடைபெறும் ஏழூர்சாமி திருவிழாவினைப் பற்றி எனது தந்தை சொல்லுவார். திருவையாறு சுற்று வட்டார மக்களின் வாழ்வில் கலந்த ஏழூர் திருவிழாவிற்கு, நான் சென்றதில்லை. ஆனால் அந்த ஊரில் போடும் அதிர்வேட்டுக்களின் சத்தத்தை இந்த கரையில் கேட்டு இருக்கிறேன்.

    திருநெய்த்தானம் என்பது தில்லைஸ்தானம் ஆனது என்ற விவரத்தினை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். மேலும் ஏழூர்த் திருவிழா நிகழ்ச்சிகளையும், ஏழூர் திருவிழா நாட்களில் உமாமகேசுவரனாரின் பங்களிப்பையும் சிறப்பாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா எனது சொந்த ஊர் திருவையாறு. தஞ்சையில் இப்பொழுது இருக்கின்றேன். பலமுறை தஞ்சையில் இருந்து, நண்பர்களுடன் இணைந்து, இரவு பத்து மணிக்கு மேல் சைக்கிளில் புறப்படுவோம். காவிரி மணலில் படுத்திருந்து , வான வேடிக்கை பார்ப்போம்.
      வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவசியம் ஏழூர் திருவிழாவினையும் வான வேடிக்கையினையும் பாருங்கள் அய்யா.தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

      நீக்கு
  11. ஏற்றம் தரும் ஏழூர் திருவிழா பற்றி சிறப்பான பகிர்வுகள்... பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

      நீக்கு

  12. ஏழூர்த் திருவிழா ஒரு நாள் வைபவமா?ஒருங்கிணைத்து விழாநடக்க உறுதுணையாய் இருந்த உமாமகேஸ்வரர் போற்றற்குரியவர். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை திருவையாற்றில் இருந்து , பல்லக்குகள் புறப்படும் அய்யா. ஒவ்வொரு ஊருக்கும் செல்லச் செல்ல , அவ்வூர் பல்லக்குகளும் இணைந்து, அன்று இரவே ,அதாவது மறுநாள் அதிகாலை இரண்டு மணி அளவில் திருநெய்தானத்தை சென்றடையும் அய்யா. தொடர்ந்து காவிரி ஆற்றில் வான வேடிக்கை நடைபெறும். காலை ஆறு மணி அளவில் திருநெய்த்தானத்தில் இருந்து புறப்படும், ஏழூர் பல்லக்குகள், காலை பத்து மணி அளவில் திருவையாற்றை வந்தடையும் அய்யா. வாழ்வில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய திருவிழா அய்யா இது.தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

      நீக்கு
  13. இத்திருவிழாவில் இரண்டு முறை கலந்துகொண்டு அனைத்துத் தலங்களுக்கும் சென்றுள்ளேன். காலையில் திருவையாற்றில் கிளம்பி ஒவ்வொரு பல்லாக்காகச் சேர அவற்றோடு பயணித்து தில்லைஸ்தானத்தில் நிறைவடையும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். இவ்விழா சிறக்கப் பாடுபட்ட பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார் என்பதை தற்போது தான் தெரிந்துகொண்டேன். இத்தலங்கள் மற்றும் விழா தொடர்பாக ஒரு கட்டுரையும் (சப்தஸ்தான தலங்கள், மகாமகம் சிறப்பு மலர், 2004), ஒரு ஆய்வுத்திட்டமும் (Study of Saptastana temples of Thanjavur district in Tamil Nadu and the festival of Tamil Nadu, Project Report, Nehru Trust for the Indian Collections at the Victoria & Albert Museum, New Delhi 110 011, June 2009) எழுதியுள்ளேன் என்பதைப் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழூர் திருவிழா குறித்து தாங்கள் கட்டுரையினையும், ஆய்வுத் திட்டமும் எழுதியுள்ளது அறிந்து மகிழ்ந்தேன் அய்யா. நன்றி.தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

      நீக்கு
  14. தமிழ் விளையாடுகிறது பதிவில். பாராட்டுக்கள்.

    அறையம் புனல்வரு காவிரி அலைசேர் வடர்கரை மேல் - இன்று நிறைய ஏக்கப் பெருமூச்சுக்களை உருவாக்கும் என்று நினைக்கிறேன் :)

    திரு.பட்டாபிராமனின் பின்னூட்டம் ரசனைமிக்கது. நேர்மையானதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அய்யா. திரு பட்டாபிராமன் அய்யா அவர்களது பின்னூட்டம் ரசனைமிக்கதும் நேர்மையானதும் இன்றைய நிலையினை பிரதிபலிப்பதும், அவரின் மன ஏக்கங்களையும் வெளிப்படுத்துகின்றது அய்யா. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

      நீக்கு
  15. ஏழூர் திருவிழாவில் நாமும் கலந்துகொள்ளவேண்டும் என்ற மிப்பெறிய ஆவலை உங்களது கட்டுரை ஏற்படுத்தியதற்கு முதற்கன் மிக்க நன்றி.மேலும் சுயநலமாக சுழன்றுவரும் மக்கள் கூட்டம் உள்ள இக்காலத்தில் அன்றே மக்களுக்காக தனதுவாழ்நாள் முழுமையையும் அற்பணித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்களை நேரில்கண்டு அவர்கள் துயர்துடைத்து வாழ்ந்த உத்தமர் பண்பாளர் பகுத்தறிவாளளர் கல்விவள்ளல் திக்கற்றமாணர்களின் வாழும் கடவுளாக விளங்கிய அய்யா தமிழ்வேள் உமாமகேசுவரனாரின் பதிவு என்றென்றும் காலத்தால் அழிக்கமுடியாதது மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே, தாங்களும் விரையில் ஒரு வலைப் பூவினைத் தொடங்க வேண்டும் என்பது என் விருப்பம். விருப்பத்தினை நிறைவேற்றுவீர்களா,

      நீக்கு
  16. அன்புள்ள ஜெயக்குமார்

    ஏழூர் திருவிழா என் வாழவோடு இணைந்த தனமைகொண்டது. ஏன் என்றால் என்னுடைய தாயின் சொந்தஊர் திருவையாறு. எனவே சிறுவயதிலிருந்து கிட்டத்தட்ட விவரம் தெரிந்தவரை பலமுறைகள் ஊர்ஊராகச் சுற்றி ஆற்றுவெளிகளில் வாணவேடிக்கையும் உயிருள்ள தேள். பூரான் பல்லி பாம்பு என உயிர்ப்பந்தல்களைக் கண்டு வழியெங்கும் நீரும் மோரும் பானகமும் குடித்த நினைவுகள் வந்துக்கொண்டேயிருக்கின்றன. நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அய்யா. வசந்தகால நினைவலைகள் அவை.தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

      நீக்கு
  17. அவசியம் இணைக்கின்றேன் அய்யா.தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தர அன்போடு அழைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  18. தாங்கள் தங்கள் PROFILE இல் கொடுத்துள்ள மெயில் விலாசம் தவறாக உள்ளது.

    தாங்கள் எனக்கு ஒரு மெயில் கொடுத்து உறுதி செய்யவும்.

    என் மெயில் ID : valambal@gmail.com

    பதிலளிநீக்கு
  19. அய்யா வணக்கம். தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன் அய்யா.

    பதிலளிநீக்கு
  20. அய்யா வணக்கம். தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன் அய்யா.

    பதிலளிநீக்கு
  21. ‘ந.மு.வேங்கடசாமி நாட்டார்’ அவர்களின் பெயரைப் படித்ததும் நினைவு பின்னோக்கிப் போகிறது. 1967ல் நான் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் புகுமுக வகுப்பில் இருந்தபோது, பாளையங்கோட்டையின் ‘முத்தமிழ் இலக்கியக் கழகம்’ நடத்திய ‘இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சி’ என்னும் ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது நினைவில் வெளிச்சமிடுகிறது. (அக்கழகம், பேராசிரியர் வளன் அரசு அவர்கள் தலைமையில் இயங்கி வந்தது. மற்ற இரு பரிசுகளும் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கே கிடைத்தன). பரிசாக வந்தது, ஒரு பேனாவும், மதிப்பிற்குரிய ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் உரையில் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டிருந்த ‘பதிற்றுப்பத்து’ நூலும். அடுத்த இரண்டாண்டுகளில் சங்க இலக்கியத்தின் பெரும் பகுதியைப் படித்து முடிக்க இது தான் எனக்கு ஊன்றுகோலாக இருந்தது. இந்த இனிய நினைவை அசைபோட வாய்ப்பளித்தமைக்கு நன்றி. தங்கள் எழுத்தைத் தொடருங்கள். மீண்டும் நன்றி. – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

    பதிலளிநீக்கு
  22. ஆஹா..இவ்வளவு தெளிவாக படங்களுடன் விளக்கியமை பாராட்டுக்குரியது.ஏலூர் பாலூர் பற்றி பெயர்க் காரணமும் சொன்னவை நன்று

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு