15 மார்ச் 2023

கலம் தரு திரு

 


     அண்மையில்.

     மிக அண்மையில்.

     இரு மாதங்களுக்கு முன்,

     திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின், பேராசிரியர் எஸ்.எம்.ராமசாமி அவர்களின் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், ஒரு பெரு ஆய்வினை மேற்கொண்டு, பூம்புகார் பற்றிய ஆய்வு அறிக்கையினை வெளியிட்டனர்.

இன்றைய பூம்புகாரின் கடற்கரையினைத் தாண்டி, 25 கி.மீ. தூரத்தில், கடலுக்குள்ள மூழ்கிக் கிடக்கிறது, அன்றைய பூம்புகார் நகரம் என சான்றுகளோடு அறிவித்துள்ளனர்.

      கடற்கோளால் கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் பூம்புகார், எத்தனை ஆண்டுகளுக்கு முன் மூழ்கி இருக்கும் என்பதையும் அறிவியல் முறைப்படி கணித்து, அறிவித்துள்ளனர்.

      எத்துணை ஆண்டுகளக்கு முன் தெரியுமா?

     ஓராயிரம், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அல்ல.

     பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையது, பூம்புகார் என அறிவித்துள்ளனர்.

     நினைத்துப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது அல்லவா.

     15,000 ஆண்டுகள்.

     இவருக்கு முன்னர், காவிரிப் பூம்பட்டின ஆய்வில் இறங்கிய ஒரு ஆங்கிலேயர், சொன்னது 11,000 ஆண்டுகள்.

     இவர் மேலும் சொன்னார்.

     70 முதல் 80 கப்பல்களை வரை ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கக்கூடிய அளவிற்கான ஒரு பெரும் துறைமுகம் இருந்துள்ளது என்பதை, மூழ்கிப் பார்த்து ஆய்ந்து பார்த்துச் சொன்னார்.

     மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், அகன்ற சாலைகள் நிறைந்த நகரமாய் பூம்புகார் இருந்துள்ளது என்றும் சொன்னார்.

     15,000 ஆண்டுகளுக்கு முன்னரே, 70 முதல் 80 கப்பல்களை வரை நிற்கக்கூடிய துறைமுகம் இருந்திருக்கிறது.

         அப்படியானால், வணிகம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்.

     கடல் கடந்த வணிகம்.

     எனவே கி.மு.300 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.300 ஆம் ஆண்டுவரையிலான, 600 ஆண்டுகளே சங்ககாலம் என, நம் முன்னோர், அப்பொழுது அவர்களுக்குக்  கிடைத்தத் தரவுகளை வைத்துச் சொன்னார்கள் அல்லவா, அதனை, அக்கருத்தை, மாற்றியமைக்கவும், மறுவரையறை செய்வதற்குமான காலம் வந்து விட்டது.

    தமிழர் வணிகம் என்பது காலத்தால் மிகவும் முற்பட்டது.

    ஆங்கிலம் என்றொரு மொழியின், முதல் எழுத்துக் கூட தோன்றாத காலத்தில், 15,000 ஆண்டுகளுக்கு முன்னரே பூம்புகாரில் மட்டுமல்ல, ஹரப்பாவிலும் கப்பல் வைத்துப் பன்னாட்டு வணிகம் செய்ததும் தமிழர்கள்தான்.

     ஒழுங்குடன் அமைக்கப் பட்ட வீதிகள், மாடி வீடுகள், சாளரங்கள், கழிவூ நீர் வடிகால் ஏற்பாடுகள் என முன்னனியில் இருந்ததும் தமிழர்கள்தான்.

     ஹரப்பா நாகரிகம் கூட, நமக்கு வழி நிலை நாகரிகம்தான்.

     தெற்கே இருந்த குமரிக் கண்ட நாகரிகம், மதுரை, ஆதிச்ச நல்லூர் இவைதான் முதன்மை நாகரிகங்கள்.

     ஹரப்பாவில் இருந்தவர்கள் தமிழர்கள் என்பதற்கான, உறுதியான சான்று தற்பொழுது கிடைத்துள்ளது.

     அண்மையில், ஹரப்பாவில் கிடைத்த ஒரு எலும்புத் துண்டு, அமெரிக்க ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

     ஆய்வு முடிவு வெளியானது.

     எலும்புத் துண்டில் இருந்தது, ஆரியரல்லாதவருடைய மரபணு.

     இரண்டு வகையான மரபணுதான் இந்தியாவில் முக்கியமானது.

     ஒன்று வட இந்திய மரபணு அல்லது இந்தோ ஐரோப்பிய மரபணு,

     மற்றொன்று தென்னிந்திய மரபணு.

     நம் தமிழர் மரபணு.

     ஹரப்பாவில் கிடைத்தது, தென்னிந்திய மரபணு.

     டோனி ஜோசப் என்பவர், தனது  Early Indians  ஆதிகால இந்தியர்கள் நூலில் இந்த ஆய்வு குறித்துத்தான் விரிவாக எழுதியுள்ளார்.

கலம் தரு திருவின் புலம்பெயர் மாக்கள்

கலந்து, இருந்து உறையும் இலங்கு நீர் வரைப்பும்

என உரைக்கிறது சிலப்பதிகாரம்.

     கடலில் இருந்து நிலத்திற்கு நுழையும் பகுதிகளில் யவனர்கள் இருப்பிடங்கள் இருந்தன, அங்குப் பயன்படுத்த முடியாத அளவிற்குப் பண்டங்கள் நிரம்பிக் கிடந்தன. கப்பலில் சென்று பொருள் ஈட்டி வந்த உள் நாட்டு வணிகர்களும், யவனர்களும் அங்கு ஒன்று கலந்து இனிமையாக வாழ்ந்தனர்.

     சிலப்பதிகாரம் மேலும் கூறுகிறது.

வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்

பூவும், புகையும், மேவிய விரையும்

பகர்வனர் திரிதரும் நகர வீதியும்

     மேனியில் பூசும் வண்ணப் பொடிகள், மணப் பொடிகள், பூ அகில் போன்ற புகையும் பொருள்கள், மணத் தூவிகள் முதலானவற்றை விற்றுக் கொண்டு நகர வீதிகளில் வணிகர்கள் திரிந்தனர்.

பட்டினும், மயிரினும், பருத்தி நூலினும்

கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்

     பட்டு, மயிர், பருத்தி முதலானவற்றில் நூல்களை நூற்று, ஆடையாக நெய்யும் காருகர், நெசவாளிகள் வாழும் இடங்கள் இருந்தன.

தூசும், துகிரும், ஆரமும், அகிலும்

மாசு அறு முத்தும், மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா

வளம் தலை மயங்கிய நனைத்தலை மறுகம்

     ஆடைகள், பவளங்கள், பூ மாலைகள், அகில் கட்டைகள், முத்துக்கள், மாணிக்கக் கற்கள், பொன் அணிகள் எனப் பல செல்வங்கள் அளவிட முடியாதபடி விற்பனைக்காகத் தெருக்களில் கொட்டிக் கிடந்தன.

     தமிழர் வணிகத்திற்கானச் சிலப்பதிகாரச் சான்று இது.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்

காலின் வந்த கருங்கறி மூடையும்

வடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்

தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்

கங்கை வாரியும் காவிரிப் பயனும்

ஈழத்து உணவும், காழகத் தாக்கமும்

     நீரின் வழியாக வரப்பெற்ற உயர் வகை குதிரைகள், நில வழியாகக் கொண்டுவரப் பெற்ற மிளகு, வடக்கு மலையில் இருந்து தருவிக்கப்பட்ட அரிய வைரக் கற்கள் மற்றும் பொன், மேற்கு மலையில் இருந்து சந்தனம் உள்ளிட்ட வாசனைப் பொருள்கள், தென் கடல் முத்து, கீழைக்கடல் பவளம், கங்கை காவிரியின் பொருள்கள், ஈழத்திலிருந்து உணவு வகைகள், காழகத்தில், பர்மாவில் உற்பத்திச் செய்யப்பட்டவை என துறைமுகத்திற்கு வந்து இறங்கிய பொருள்கள் குறித்து விளக்குகிறது பட்டினப்பாலை.

     தமிழர் வணிகத்திற்கானப் பட்டினப்பாலைச் சான்று இது.

     வணிகம் என்பது ஒரு இனத்தினுடைய ஆட்சிக்கு, ஒரு இனத்தினுடைய கட்டமைப்புக்கு இன்றியமையாதது ஆகும்.

     வணிகம் என்பது உழைப்பு, உற்பத்தி, உற்பத்தியில் உபரியாக வந்ததை, விற்பதும், தேவைப்படுவதை பன்னாட்டில் இருந்து வாங்குவதும் ஆகும்.

     15,000 ஆண்டுகளாக வணிகத்தில், பன்னாட்டு வணிகத்தில் கொடி கட்டிப் பறந்த, நமது நிலை, இன்று எப்படி இருக்கிறது.

     வணிகத்தை இழந்து கொண்டிருக்கிறோம்.

     வணிகத்தை இழந்தால் நாட்டை இழக்க வேண்டிவரும் என்பதற்கு, அண்மைக்கால எடுத்துக் காட்டுதான் கிழக்கிந்திய கம்பெனி.

     கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்கு வந்தபொழுது, அன்றிருந்த மன்னர்களிடம், வியாபாரம் செய்வதற்குத்தான் இடம் கேட்டனர்.

     கம்பெனி நடத்தினார்கள்.

     நாட்டைப் பிடித்தார்கள்.

     அயலவர்கள் வணிகத்தில் மேம்பட்டு நின்றால், அரசு அவர்கள் பக்கம்தான் நிற்கும்.

     அவர்கள்தான் அரசியலை முடிவெடுப்பார்கள்.

     அதுதான நடந்தது.

     இருநூறு ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சி.

     பாடு பட்டோம், போராடினோம்.

     விரட்டினோம்.  

     இப்பொழுது என்ன நடக்கிறது.

     எங்கு பார்த்தாலும் மார்வாடிகள், குஜராத்தியர்களின் அடகு கடை.

     தமிழ் நாட்டின் மொத்த வணிகமும் தமிழனிடம் இல்லை.

     கணினி முதல் அனைத்தும் வடநாட்டுக்காரர்கள், மார்வாடிகள் வசம்.

     திருப்பூர் ஆலைகள் மூடிக் கிடக்கின்றன.

     துணிகள் வடநாட்டில் இருந்து வருகின்றன.

     சென்னையின் வணிகம் முழுதாய் தமிழரிடம் இருந்து போய்விட்டது.

     தஞ்சையை எடுத்துக் கொண்டால், மாட்டு மேஸ்திரி சந்து கடைகளில் ஒன்று கூடத் தமிழனிடம் இல்லை.

     தஞ்சையில் அயல் மாநிலத்தார் வணிகம் மெல்ல மெல்லப் பரவி வருகிறது.

     உத்திரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் என ஒரு நாளைக்கு ஆயிரம் குடும்பங்கள் தமிழகத்திற்கு வந்து குடியேறுகின்றன.

     ரயில்வே, அஞ்சல் துறை என ஒவ்வொரு துறையிலும் வெளி மாநிலத்தவர்கள்.

     உடல் உழைப்புத் தொழிலிலும் அயல் மாநிலத்தவர்கள்.

     தமிழ் நாட்டை மெல்ல, மெல்ல நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

     என்ன செய்யப் போகிறோம்?

---

கடந்த 12.03.2023

ஞாயிற்றுக் கிழமையன்று,

ஏடகம்

ஞாயிறு முற்றம்

சொற்பொழிவில்

பழந்தமிழர் வணிகம்

எனும் தலைப்பில் உரையாற்றிய

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்


திரு பெ.மணியரசன் அவர்கள்,

எங்கும், எதிலும்

அயல் மாநிலத்தவர்கள்.

நாம் நமது தமிழ் நாட்டை

மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறோம்.

என்ன செய்யப் போகிறோம்?

எனக் கேள்வி எழுப்பியபோது

அரங்க மௌனத்தால் நிரம்பி வழிந்தது.

தஞ்சாவூர், கவிஞர்


தஞ்சை ந.இராமதாசு அவர்கள்

தலைமையில்

நடைபெற்ற,

இப்பொழிவிற்கு வந்திருந்தோருக்கு

ஏடகம், சுவடியியல் மாணவி


செல்வி ர.ச.தரணி அவர்கள்

நன்றி கூற

விழா இனிது நிறைவுற்றது.

முன்னதாக,

வரவேற்புரையாற்றிய

சென்னை, உலகத் திருக்குறள் கூட்டமைப்பின்

மாநிலப் பொருளாளர்


குறள் நெறிச் செல்வர் இராம.சந்திரசேகரன் அவர்கள்

தன் வரவேற்புரையின்போது,

தஞ்சையின் இலக்கிய அமைப்புகளின்

வழிகாட்டியாக விளங்கிய

உலகத் திருக்குறள் பேரவையின்

மாநில துணைத் தலைவர்

மேனாள் வணிகவரித் துறை அமைச்சர்

குறள் நெறிச் செல்வர், பாரிவேள்


தமிழ்த்திரு சி.நா.மீ.உபயதுல்லா அவர்களின்

நல் இலக்கிய மனதை எடுத்துக்கூறி,

இத்தகு பெருமகனாரின் மறைவிற்கு

ஒரு நிமிடம்

சொல்லற நின்று

அஞ்சலி செலுத்த வேண்டியபோது,

ஏடக அரங்க முழுமையும் எழுந்து நின்று

மௌனத்தால் பாரிவேளுக்கு அஞ்சலி செலுத்தியது.

சுவடியியல் மாணவர், அஞ்சல் அலுவலர்


திரு சு.சரவணன் அவர்கள்,

தங்கு தடையற்ற, தெளிந்த நீரோடையாய் பயணித்த

தன் சொல் வன்மையால், அழகுத் தமிழால்

நிகழ்வுகளை சுவைபடத் தொகுத்து வழங்கினார்.

பழந்தமிழர் வணிகத்தை

உளங் குளிரக் கேட்டு

கடலில் மிதந்தும்

கடற்கரையில் காலார நடந்தும்

ஏடக அரங்கில் சுவாசித்தக் கற்றிலும்

உப்பை உணர வைத்தப்

பொழிவை,

ஏற்பாடு செய்த

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.