14 நவம்பர் 2024

இசைத்தமிழ் வளர்த்த தஞ்சை

 

பன்னெடுங்  காலம்  பணிசெய்து  பழையோர்

     தாம்பலர்  ஏம்பாலித்  திருக்க

என்னெடுங்  கோயில்  நெஞ்சுவீற்  றிருந்த

     எளிமையை  யென்றுநான்  மறக்கேன்

மின்னெடும்  புருவத்  திளமயி  லனையார்

     விலங்கள்செய்  நாடக சாலை

இன்னடம்  பயிலும்  இஞ்சிசூழ்  தஞ்சை

     இராசரா  கேச்சரத்  திவர்க்கே.

                                            ஒன்பதாம் திருமுறை-திருவிசைப்பா-பண்பஞ்சமம்

     கொங்கு நாட்டில் பிறந்த கருவூர்த்தேவர், தஞ்சை இராசராசேச்சரத்தைப் பஞ்சமப் பண்ணில் பாடியுள்ளார். இப்பதிகம் 11 பாடல்களைக் கொண்டுள்ளது. தஞ்சையில் மன்னன் இராசராச சோழன் தனது இருபதாம் ஆட்சிக் காலத்தில், இராசராசேச்சரத்து இறையவர்க்குக் கோயில் கட்டிய பொழுது துணை நின்றவர் கருவூர்த்தேவர். இவரே இராசேந்திர சோழன், இராசராசன் மனைவி திரைலோக்கி பெயரால் அமைந்த தலங்களையும் பாடியுள்ளார். திருக்களந்தை ஆதித்தேச்சரம் பற்றிப் பாடியுள்ளார். இவையனைத்தும் பண் சுமந்த இசைப்பாக்களாகும்.

     திருமங்கையாழ்வார் பல்லவர் கால ஆழ்வார் ஆவார். இவர் பாடிய பெரிய திருமொழியில் ஒரு பதிகம், வம்புலாஞ்சோலை மாமணிக்குன்றனைப் பற்றிப் பாடியது. இதுவும் இசைப் பாவாகும். இன்று இசைக்கப் பெறாமல் ஓதப்பட்டு வருகிறது.

      திருப்புகழ் பாடிய அருணகிரியார், தஞ்சை முருகனைப் பற்றிப் பாடிய நான்கு பாடல்கள் கிடைத்துள்ளன.

அஞ்சன வேல்விழி – மடமாதர்
அங்கவர் மாயையி – லலைவேனோ

விஞ்சுறு மாவுன – தடிசேர
விம்பம தாயரு – ளருளாதோ

நஞ்சமு தாவுணு – மரனார்தம்
நல்கும ராவுமை – யருள்பாலா

தஞ்சென வாமடி – யவர்வாழத்
தஞ்சையில் மேவிய – பெருமாளே.

     முதலாழ்வார் பெருமக்களாலும் போற்றப்பெற்ற தஞ்சை நகரம் இசைக்கலையில் மையமாகத் திகழ்ந்து வருகிறது. இதுகுறித்துச் சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் இசைத்துறைப் பேராசிரியர்றைப் பேராசிரியர் Tanjore is a Sear of Music என்ற ஆய்வுமேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்று நூலாக வெளியிட்டுள்ளார்.

     இன்றைய தஞ்சை மாநகரத்தை மட்டும் எல்லையாகக் கொண்டு, தஞ்சை வளர்த்த இசைத்தமிழ் வளங்களைக் காண்போம்.

     தஞ்சை இராசராசேச்சரக் கோயிலில் திருமுறை விண்ணப்பம் செய்திட, மாமன்னன் இராசராசன் 48 பிடாரர்களையும், நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனையும், கொட்டி மத்தளம் வாசிப்பான் ஒருவனையும் நியமித்ததைக் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் பிடாரர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். சிவதீட்சை பெற்ற தீட்சா நாமமும் பெற்றுள்ளனர்.

     நாட்டியக் கலை வளர்க்க 400 தளிச்சேரிப் பெண்டுகளும், 11 நிருத்தமாராயர்களையும், வங்கியம், மெராவியம், பாடவியம், உடுக்கை, வீணை ஆகிய இசைக் கருவிகள் இசைப்போரும், ஆரியம் பாடுவார் மூவர், தமிழ் பாடுவார் நால்வர், பக்கவாத்தியர் ஐவர், கொட்டி மத்தளம் வாசிப்போர் இருவர், முத்திரைச் சங்கு ஊதுபவர் மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊதியம் பெற்றுள்ளனர்.

     தஞ்சையில் 143 ஆண்டுகள் நாயக்கர்கள் ஆட்சி நடந்தது. இக்காலத்தில், இசைக்கலை வளர் மையமாகிய தஞ்சை, கலை வளர்ச்சியில் பல் வளங்களைப் பெற்றது. சங்கீத சுதா, பாரத சுதா, யட்சகான நூற்கள் வந்தன. கோவிந்த தீட்சதர் 24 மெட்டுகள் கொண்ட வீணையை உருவாக்கினார். இன்று இவ்வீணை மன்னர் இரகுநாதர் பெயரால், இரகுநாத வீணை என அழைக்கப்படுகிறது. வீணை செய்வோர் இன்றும் தஞ்சையில் உள்ளனர்.

     கோவிந்த தீட்சதரின் மகன் வேங்கடமகி, தஞ்சை மன்னர் விசயராகவர் ஆலோசனைப்படி, சதுர்தண்டிப் பிரகாசிகை என்ற மேளபத்ததி முறையை உருவாக்கினார்.

     தஞ்சையில் கிருஷ்ண பக்தியை வளர்க்கும் பஜனை முறை எழுந்தது. சங்கீத மேளம், பாகவத மேள முறைகள் தோன்றின.

     மராட்டிய மன்னர்கள் காலத்தில், சங்கீத மும்மூர்த்திகள் தோன்றி, இசையில் இறைவழிபாடு செய்யும் தொன்மை முறையை தெலுங்கு, சமஸ்கிருத படைப்புகள் வாயிலாகத் தந்தனர்.

     தியாகேசர் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, அதிரூபாவதி கல்யாணம், சிவகாம சுந்தரி பரியை நாடகம், என ஐந்து தமிழிசை நாடகங்கள் தோன்றின.

     தஞ்சை நாட்டிய நால்வரால், இன்றைய ஆடல் அரங்கிசை வடிவமைப்புகள் உருவாக்கப் பெற்றன.

     இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இசைத்தமிழ் ஆய்வு மையமாகத் தஞ்சை விளங்கியது.

     இராவ் சாகிப் தஞ்சை மு.ஆபிரகாம் பண்டிதர், தஞ்சையில் இசைத்தமிழ் ஆய்வைத் தொடங்கினார். 1912 இல் சங்கீத வித்யாமகாஜன சங்கத்தை நிறுவினார்.

     1912 ஆம் ஆண்டில் இருந்து 1916 ஆம் ஆண்டுவரை, தம் சொந்த பொருட்செலவில், ஏழு இசை மாநாடுகளை நடத்தினார்.

     இசையின் தொன்மை, ஓர் இயக்கில் உள்ள சுருதிகள், இராக லட்சணங்களை ஆராய்ந்தார். இவற்றைத் தொகுத்து 1917 ஆம் ஆண்டில், 1346 பக்கங்கள் கொண்ட கருணாமிருத சாகர முதல் நூலை வெளியிட்டார்.

     சிலம்பு கூறும் இசை நுட்கங்களை வெளியிடும் நூலுக்கு இசைத்தமிழ் நூல் என்று பெயரிட்டார்.

     கருணாமிருத சாகரம் இரண்டாம் தொகுதி, கருணாமிருத சாகரத் திரட்டு போன்ற நூல்களையும் வெளியிட்டார்.

     இசை கற்போர், தாய்மொழி வழி இசை கற்க, சொற்பிழை, சுரப்பிழை, கருத்துப் பிழை வாராமல் பயில இசைத்தமிழ் பாடல்களையும் தந்துள்ளார்.

     சிலப்பதிகார அரங்கேற்று காதை கூறும் யாழசிரியர் அமைதி அடிப்படையில், 1947 ஆண்டில், தஞ்சையில் மாபெரும் ஓர் இசைத்தமிழ் ஆய்வு நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் யாழ்நூல் எனும் பெயரில், கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடாக வெளிவந்தது.

     இந்நூல் விபுலானந்த அடிகளாரின் வாழ்நாள் சாதனை நூலாகும்.

     இந்நூல், தமிழரின் தொன்மை இசைக் கருவி யாழ் மூலம் எழுந்த இசை வளங்களை உரைக்கும் நூல். இவர்தந்த மதங்க சூளாமணி என்னும் நாடகத் தமிழ் நூல், நாடகத் தமிழ்த் திறன் உரைக்கும் நூலாகும்.

     தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் மூன்றாவது மகன், வரகுண பாண்டியர் எழுதியுள்ள பாணர் கைவழி எனப்படும் நூல், பண்டைய யாழ் இசைக் கருவிதான், இன்றைய வீணையாக வளர்ந்துள்ளமையைத் தெரிவிக்கிறது.

     ஆபிரகாம் பண்டிதல் குடும்ப உறவில் மலர்ந்த பேராசிரியர் து.ஆ.தனபாண்டியர், பண்டிதரின் இசைக் கோட்பாடுகளை தெளிவு படுத்தி, இராகங்களும் நுண்ணலகுகளும், புதிய இராகங்கள், இசைத்தமிழ் வரலாறு தொகுதி 1,2,3 மற்றும் பல ஒலி நாடாக்களை வெளியிட்டு இசைத்தமிழ் உலகிற்கு அளப்பரிய சாதனை செய்துள்ளார்.

     தஞ்சை பொன்னையா பிள்ளை என்பார், தஞ்சை நால்வர் மரபில் வந்தவர். அண்ணாமலைப் பல்கலைக் கழக இசைத்துறையில் பணியாற்றி, இசைத்தமிழ் பாக்களை ஆய்வு செய்து அளித்துள்ளார். இவரது மகன் வீணை சிவானந்தம் அவர்கள், யாழ்நூல் அரங்கேற்றத்தின் பொழுது, புதிதாக மீட்டுருவாக்கம் பெற்ற யாழை இசைத்தவராவார்.

     இவரும், இவரது குடும்பத்தாரும், சென்னைப் பண்ணாராய்ச்சி மாநாட்டில் இசைப் பேரறிஞர் விருது பெற்றுள்ளனர்.

     மங்க இசை மன்னர்கள், மரபு தந்த மாணிக்கங்கள், தாள வர்ண தரங்கிணி 4 தொகுதிகள் போன்ற அரிய நூல்களைத் தந்த, தஞ்சாவூர் பி.எம்.சுந்தரம் அவர்கள் ஒரு சிறந்த இசைவாணர், படைப்பாளர், ஆய்வாளர் ஆவார்.

     சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைப் பாடல்களுக்கு இசையமைத்துப் பக்தி பாடல்களை, சீர்காழி கோவிந்தராசன் மூலம் வெளிப்படுத்திய இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா அவர்கள் தஞ்சாவூரைச் சார்ந்தவர்.  இவர் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவராவார். இவர் காலத்தில் உருவாகிய மாவட்ட இசைப் பள்ளிகள் பல.

     சீகாழி மூவர்களின் வரலாற்றை எழுதி, அவர்களின் பாடல்களை உலகிற்கு அறிவித்து, தமிழிசை ஆதிமும்மூர்த்திகள் மூவரையும் நமக்குக் காட்டிய மு.அருணாசலம் ஐயா, இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் யு.சுப்பிரமணியம் ஆகியோரின் பணிகள் போற்றத்தக்கவையாகும்.

     தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பெற்ற பொழுது, இசைத் துறையும் உருவாக்கப்பட்டது. தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சையில் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

     தஞ்சையில் இசைக் கலைஞைர்கள் பலர் உள்ளனர். நாகசுரக் கலைஞர்கள், தவில் கலைஞர்கள், இசை ஆசிரியர்கள், இசை ஆய்வாளர்கள், தண்ணுமையோன், குழலோன், வில்லோன், கஞ்சிராக் கலைஞர்கள், வீணைக் கலைஞர்கள், கிராமியப் பாடல் கலைஞர்கள் எனப் பல்வகையினர் உள்ளனர். இவர்களில் ஒன்றிய, மாநில விருதாளர்கள் பலர் உள்ளனர்.

     திருச்சி பாரதனின் குகநானூறு இசைப் பாடல்களை முழுநேரமாகப் பாடியவர்களும் இவர்களுள் அடங்குவர்.

     திருவருட்பா பாடல்களை பாடிய ஞானமணி ராசப்பிரியர், தஞ்சை சரசுவதி, இசைத் தமிழ்ப் பாடல்களாக நாட்டிய நிகழ்வுகளைத் தந்த தலைக்கோலாசான் பா.ஹேரம்பநாதன் உட்பட பலர் உள்ளனர்.

---

கடந்த 10.11.2024 ஞாயிற்றுக் கிழமை

ஏடகம்

ஞாயிறு முற்றம்

சொற்பொழிவில்,

     இசைத்தமிழ்ப் பற்றியும், நாட்டியத் தமிழ்ப் பற்றியும் ஆராய்வதனையே, தனது முழு நேரப் பணியாகக் கொண்டு செயலாற்றிவரும், இசைத் தமிழ் அறிஞர்கள் தொகுதி 1,2,3,4, மழை தரும் பண்ணும் பதிகங்களும், ஆனாய நாயனார், கருவூர்த் தேவர், பழந்தமிழ்ப் பண்ணிசை, இசைத்தமிழ்த் தடத்தில் திருவருட்பா, சிலப்பதிகார அரங்கேற்று காதை நாட்டும் இசை நுட்பங்கள் முதலான 64 நூல்களின் ஆசிரியரும், திருப்புகழும் திருத்தலங்களும் என்னும் தலைப்பில் 400 பொழிவுகளை நிகழ்த்தியவரும், திருச்சி வானொலியில் கருணாமிர்த சாகரம் பற்றி பதினைந்து தொடர் பொழிவுகளை நிகழ்த்தியவரும்,

     தனது இசைத்தமிழ் நாட்டியத் தமிழ்ப் பயணத்திற்கு மேலும் வலுவூட்ட, பல நாட்டிய நாடகங்கள், நாட்டிய உருக்களைப் படைத்து, தன் மகள், தமிழ்ப் பல்கலைக் கழக இசைத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் செ.கற்பகம் வாயிலாக, உலக அரங்கில், நாட்டிய நாடகங்களை, நாட்டிய உருக்களைத் தந்துவருபவரும், சிலம்பு இசை நாட்டிய உயராய்வு கல்வி அறக்கட்டளை ஒன்றினை நிறுவி, தொடர்ந்து தொய்வின்றிப் பணியாற்றிவருபவருமான

திருவையாறு அரசர் கல்லூரியின் முன்னாள் முதல்வர்


முனைவர் சண்முக.செல்வகணபதி அவர்களின்

இசைத்தமிழ் வளர்த்த தஞ்சை

எனும் பொருண்மையிலான, பொழிவு கேட்டு, அரங்கே வியந்து போனது, நெகிழ்ந்து போனது.

தஞ்சாவூர், வேளாண் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற


தமிழ்ச் செம்மல் ரா.சிவக்குமார் அவர்களின்

தலைமையில் நடைபெற்ற, இப்பொழிவு கேட்க வந்திருந்தோரை


செல்வி அபர்ணா ஸ்ரீநிவாசன் அவர்கள்

வரவேற்றார்.

பொழிவின் நிறைவில்

தஞ்சாவூர், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,

தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்


செல்வி செ.புனித அஞ்சலி அவர்கள்

நன்றி கூறினார்.

தஞ்சாவூர, மருதுபாண்டியர் கலை அறிவியல் கல்லூரி

தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்


முனைவர் கி.உஷா அவர்கள்

விழா நிகழ்வுகளை அழகுத் தமிழால் தொகுத்து வழங்கினார்.

 

இசைத் தமிழை

ஏடக அரங்கிற்கு அழைத்து வந்து,

இசைத் தமிழின் பெருமையை -அதன்

உன்னதத்தை, தொன்மையை

உலகிற்கு உணர்த்திய

இசைத்தமிழ்  ஆய்வு மையமே

தஞ்சைதான் – என உணரவைத்த

ஏடக நிறுவனர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களை

வாழ்த்துவோம், பாராட்டுவோம்.