![]() |
பென்னி குக் |
மறதி என்பது ஒரு தனி மனிதனைப் பொறுத்த வரையில் நன்மை பயக்கக் கூடியது என்று கூறுவர். ஒருவன் தனது வாழ்வின் நேற்றைய பிரச்சினைகள், சோகங்கள், நம்பிக்கை துரோகங்கள், துயரங்கள் அனைத்தையும் நிகழ்காலத்தில் நினைத்துக் கொண்டே இருப்பானேயானால், அம்மனிதனது எதிர்காலம் பாதிக்கப்படும்.
ஒருவன் தனக்கு மற்றவர்கள் செய்த உதவிகளை, தனது முன்னோர்களின் பெருமைகளை, சாதனைகளை மறந்து விடுவானேயானால் அல்லது தனது சந்ததியினருக்கு, இத் தகவல்களைக் கொண்டு சேர்க்காமல் விட்டு விடுவானேயானால், அவனது குலப் பெருமை அவனோடு சேர்த்துப் புதைக்கப்பட்டுவிடும்.
தனி மனிதர்கள் சேர்ந்ததுதான் சமூகம். பழமையினை மறந்த தனி மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுதும், சமுதாய ஒற்றுமை சீர்குலையும் போதும், அவன் சார்ந்த சமூகத்தின் பழம்பெருமைகளும், உரிமைகளும், மறுக்கப்படுவதும், மறக்கப்படுவதும் எளிதான செயலாக மாறிவிடும். அச்சமூகத்தின் பெருமைகள், சாதனைகள், போதனைகள் அனைத்தும், வரலாற்றின் பக்கங்களில் இருந்து அழிக்கப்பட்டு, இதுபோன்று ஒரு சமூகம் இருந்ததே வருங்காலத் தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விடும் வாய்ப்புகள் அதிகமுண்டு.
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று தமிழராகிய நாம், பெருமைப்பட்டுக் கொண்டாலும், மறதி என்னும் ஒர் கொடிய தொற்று நோயின் பிடியில் சிக்கி, நம்மை நாமே மறந்து வாழ்கிறோமா? என்று எண்ணத் தோன்றுகிறது.
கர்நாடகத்துடன் காவிதி நீர் குறித்த பிரச்சினை, ஆந்திராவுடன் பாலாற்று பிரச்சினை, கேரளாவுடன் முல்லை பெரியாறு அணை பிரச்சினை, இலங்கையுடன் கச்சத் தீவு பிரச்சினை என தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கின்றன.


ஆனால் சென்ற நூற்றாண்டு வரை, தமிழர்கள் இப் பெரியக் கோயிலைக் கட்டியவர் யாரென்று கூட தெரியாதவர்களாக, நமது மூதாதையரின் பெருமையினை அறியாதவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் மிக மிக வருத்தப்பட வேண்டிய உண்மையாகும்.
கிருமி கண்ட சோழன் என்பவனால் கட்டப் பெற்றது என்று பிரகதீஸ்வர மகாத்மியம் என்னும் வடமொழி புராணத்திலும், காடு வெட்டிச் சோழனால் கட்டப் பெற்றது என்று ஜி.யு.போப் அவர்களாலும் தவறானத் தகவல்களே பதிவு செய்யப்பட்டன. தமிழர்கள் அதனையும் நம்பி வந்தனர்.
ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது, கல்வெட்டு ஆய்வாளராக நியமிக்கப் பட்ட ஜெர்மன் அறிஞர் ஹூல்ஸ் என்பவரே 1886 ஆம் ஆண்டு பெரிய கோயில் கல்வெட்டுக்களைப் படியெடுத்துப் படித்து, இப்பெரிய கோயிலைக் கட்டியவர் இராசராச சோழன் என்று உலகிற்கு அறித்த பெருமைக்கு உரியவராவார். ஒரு ஜெர்மானியன் சொல்லித்தான் நமது முன்னோர்களைப் பற்றி நமக்கே தெரிந்தது.
தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாத புரம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, 1886 ஆம் ஆண்டு முதல் 1895 ஆம் ஆண்டுவரை கடுமையாகப் போராடி, தனது சொந்த சொத்துக்களை விற்று, நமக்காக முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிக் கொடுத்தவர் ஒரு ஆங்கிலேயர் பென்னி குக்.
தமிழர்களாகிய நமக்காக, தனது சொந்த சொத்துக்களை விற்று, அணையினைக் கட்டி, நமது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொடுத்தாரே, பென்னி குக், அவரையாவது நாம் நினைவில் வைத்திருந்தோமா என்றால், இல்லை என்பதே வேதனைத் தரக்கூடிய பதிலாகும்.
முல்லைப் பெரியாறு அணை கட்டப் பெற்று 116 ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்குள் பென்னி குக்கை மறந்து விட்டோம்.
![]() |
ஓ.ஆண்டி |
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், அதே பாலார் பட்டி கிராமத்தைச் சேர்ந்த, ஓ.ஆண்டி என்பவரை, இந்தப் படம் வெகுவாக பாதித்தது. எதற்காக நமது கிராமத்தில் உள்ள அனைவரின் வீடுகளிலும் இந்தப் படம் மாட்டப்பட்டுள்ளது? இவர் யார்? என்று பலரையும் விசாரித்தார். பதில் கூறுவார் யாருமில்லை. விடை அறியாமல் விட்டு விடவும் மனம் வரவில்லை. ஒவ்வொரு நூலகமாக நுழைந்து விடையினைத் தேடினார்.
முடிவில் இப்படத்தில் இருப்பவர் முல்லைப் பெரியாறு அணையினை நமக்காகக் கட்டிக் கொடுத்த பென்னி குக் என்று ஊரறிய உரத்த குரலில் அறிவித்தார்.
பாலார் பட்டி விழித்துக் கொண்டது. தங்கள் வீட்டில இருக்கும் படத்தில் இருப்பவர் யார் என்பதை உணர்ந்து கொண்டனர். அன்று முதல் பென்னி குக்கைப் பற்றி பல்வேறு கட்டுரைகள் , நூல்கள் பாலார் பட்டியை வலம் வரத் தொடங்கின. தமிழகமும் தன் துயில் கலைத்து எழுந்தது.
பாலார் பட்டியில் கர்னல் பென்னி குக் நினைவு கலை அரங்கம் கட்டப்பெற்றது. சிலை நிறுவப்பட்டது. அன்று முதல் பென்னி குக் பிறந்த நாளான சனவரி 15 ஆம் நாளினை, தைத் திங்கள் முதல் நாளினை, பென்னி குக் பொங்கலாகவே பாலார் பட்டி கொண்டாடத் தொடங்கியது. பென்னி குக்கை மீட்டெடுத்ததற்காக தமிழர்களாகிய நாமெல்லாம் ஓ. ஆண்டி அவர்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டுள்ளோம்.


ஹூல்ஸ் வந்தார் பெரிய கோயிலைக் கட்டியவரை நமக்குக் காட்டினார். ஆண்டி வந்தார், முல்லைப்பெரியாறு அணையினைக் கட்டியவரை கண்டுபிடித்துக் கொடுத்தார். இன்றும் எதை எதை எல்லாம் மறந்திருக்கின்றோமோ? தெரியவில்லை. யாராவது கண்டுபிடித்து நினைவு படுத்தினால்தான் நமக்கே தெரியவரும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உரைத்து உலகையே தமிழன் ஆண்டது ஒரு காலம். நமக்குச் சொந்தமானதைப் பெறுவதற்குக் கூட போராட வேண்டியிருப்பது இந்தக் காலம்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
-----------------------------------------------------------
சனவரி 15 ஆம் நாள்
கர்னல் பென்னி குக்கின் பிறந்த நாள்.
இந்நன்நாளில் பென்னி குக்கின்
நினைவினைப் போற்றுவோம்
___
தமிழர் திருநாளாம் பொங்கல் எனும் – இப்
பொன்நாளில் புதிதாய் ஓர் சபதமேற்போம
பென்னி குக்கின் செல்வத்தையும் -வற்றா
நல் உள்ளத்தையும் அடித் தளமாக்கி,
தமிழர்களின் உழைப்பால் உதிரத்தால் உயர்ந்த
முல்லைப் பெரியாறு அணையினைக் காக்க ...
தமிழர் திருநாளாம் பொங்கல் எனும் – இப்
பொன்நாளில் புதிதாய் ஓர் சபதமேற்போம்...
_______________________________________
உங்களது கட்டுரை மறதியை மறக்கவைத்தது. இக்கட்டுரை எங்களுக்கு ஒரு பாடம். அன்புடன், ஜம்புலிங்கம்
பதிலளிநீக்குமதிப்பிற்குரிய ஜம்புலிங்கம் அவர்களுக்கு,
நீக்குவணக்கம். தாங்கள் மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த
எழுத்துப் பிழைகளைச் சரி செய்திருக்கின்றேன்.தங்களின்
கருத்தும் ஆலோசனைகளும் என்னைச் செம்மையாக்க
உதவும் என்பதில் ஐயமில்லை. நன்றி
அருமை ஜெயக்குமார்..
பதிலளிநீக்குமறதி என்பதைப் பயனுள்ள பதிவாகத் தந்தைமைக்கு நன்றிகள். உங்களின் தேர்ந்த நடை என்னைப பிரமிக்க வைக்கிறது. எப்படி இதுவரை வெளிக்காட்டாமல் போனீர்கள்..தெரியாமல் போனோம் என்று நினைத்துக் கொள்கிறேன். செறிவாக அமைந்த கட்டுரை. அழகான கட்டுரை. வண்ண எழுத்துக்கள் படிக்கத் தடையாக உள்ளன. எழுத்தின் அளவும் அப்படியே. இதை கொஞ்சம் மாற்றவேண்டுகிறேன். பென்னிகுக்கை அறிவித்த ஓ ஆண்டியின் முகவரி இருப்பின் தெரிவிக்கவும் அவருக்கு ஒரு நன்றிக்கடிதம் எழுதவேண்டும். தொடர்ந்து எழுதுங்கள். பலருக்கும் சொல்லுங்கள். பலரும் அறியவேண்டிய செய்திகள். இன்றைய காலத்தின் அவசியத் தேவை. பென்னிகுக்கிற்கு மணிமண்டபம் கட்ட ஆணையிட்ட முதல்வர் அவர்களின் பணி போற்றத்தக்கது. அவர்கள் திரு ஓ ஆண்டியையும் கௌரவிக்கவேண்டும் என்பது வேண்டுகோள். வாழ்த்துக்கள் ஜெயக்குமார்.
மதிப்பிற்குரிய ஹரணி அவர்களுக்கு,
நீக்குவணக்கம். தங்களின் கருத்துரைக்கும், பராட்டிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை முதற்கன் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன்.திரு ஓ.ஆண்டி அவர்களைப் பற்றி டெக்கான் குரோனிக்கல் இதழில், கடந்த டிசம்பர் திங்கள் 10 நாள் வெளியான செய்தியை, எனது நண்பர் திரு வெ.சரவணன் அவர்களிடமிருந்து பெற்றேன்.அச்செய்தியினை தங்களின் பார்வைக்காக, எனது வலைப் பூ விலும் சேர்த்துள்ளேன்.நன்றி.
தங்களின் கட்டுரைகளை தொடர்ந்து படித்தும் மற்றவர்களுக்கும் விளக்கியுள்ளேன். தொடர்ந்து தங்களின் படைப்புகள் வெளிவர வாழ்த்துகளுடன் -க.பாபு
பதிலளிநீக்குநண்பர் ஹரிசங்கர் பாபு அவர்களுக்கு நன்றியினைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்
நீக்குகன்னியரும்,காளையரும்,மற்றுமுள்ள ஜீவன்களும்,கொடிய
பதிலளிநீக்குதண்ணீர் பிரச்னையால் தடுமாறி நிற்காமல்,1895ம் அகவையிலே,
வன்னி மரத்தடி நாயகனே வடிவு கொண்டு வந்தார் போல்,
’பென்னி க்விக்’ என்பான் கட்டி வைத்தான் பேரணையை!
ஆரண்ய நிவாஸ் திரு ஆர்.இராமமூர்த்தி அவர்களே,
நீக்குதங்கள் கருத்துரைக்கு நன்றி. பென்னி குக் நமக்காகக் கட்டி வழங்கிட்ட அணையினைக் காப்பதே, நாம் அவருக்கு செலுத்தும் உண்மை அஞ்சலியாகும்.