15 மார்ச் 2013

கணிதமேதை அத்தியாயம் 23


இராமானுஜனின் மறைவிற்குப் பின்


இந்திய கணித மேதை பேராசிரியர் சீனிவாச இராமானுஜன், பி.ஏ.,எப்.ஆர்.எஸ்., அவர்கள் காலமானார் என்ற மரணச் செய்தி உலகச் செய்தித் தாள்களில் எல்லாம் வெளிவந்தது.

•       1927 ஆம் ஆண்டு, Collected Papers of Srinivasa Ramanujan எனும் இராமானுஜனின் ஆய்வுத் தாட்கள் அடங்கிய நூலானது ஜி.எச்.ஹார்டி, பி.வி.சேசு அய்யர், பி.எம்.வில்சன் ஆகியோரால் வெளியிடப் பெற்றது.

•     1957 ஆம் ஆண்டு பாம்பே, டாடா ஆராய்ச்சி நிறுவனமானது, Note Books எனும் பெயரில் இரு தொகுதிகளில், இராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகளை அப்படியே நூலாக வெளியிட்டது.

•      புது தில்லி, நரோசா பதிப்பகம் The Lost Note Book and other Unpublished Papers   எனும் தலைப்பில் இராமானுஜனின் கட்டுரைகளை வெளியிட்டது.

•       1962 டிசம்பர் 22 ஆம் நாள் கணித மேதையின் 75 வது பிறந்த நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. பிறந்த நாளினை முன்னிட்டு, மத்திய அரசானது இராமானுஜன் உருவம் அச்சிடப் பெற்ற அஞ்சல் தலையினை வெளியிட்டது. 15 பைசா விலை நிர்ணயிக்கப்பட்ட, 25 இலட்சம் அஞ்சல் தலைகளும், வெளியிடப்பெற்ற அன்றே விற்றுத் தீர்ந்தன.

•    கும்பகோணம் டவுன் உயர்நிலைப் பள்ளியில் 75 வது பிறந்த நாளினை முன்னிட்டு இராமானுஜன் ஹால் என்னும் பெயரில் ஒரு பெருங் கூடம் திறக்கப் பெற்றது.

•    இராமானுஜன் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் பல வெளியிடப் பெற்றன. 1967, 1972 மற்றும் 1988 இல் இராமானுஜனைப் பற்றிய ஆங்கில நூல்களும், 1980 மற்றும் 1986 இல் தமிழ் நூல்களும், மேலும் ஹிந்தி, கன்னடம், மலையாள மொழிகளிலும் மற்றைய இந்திய மொழிகளிலும் புத்தகங்கள் வெளிவரத் தொடங்கின.

•   1963 இல் சென்னை அடையாறு கணித விஞ்ஞான நிறுவனம் தொடங்கப் பெற்று இராமானுஜன் பார்வையீட்டுப் பேராசிரியர் பதவி  எனும் பெயரில் ஒரு பதவி ஏற்படுத்தப் பட்டது.

•    1973 இல் பேராசிரியர் இராமானுஜன் அனைத்துலக நினைவுக் குழுவின் சார்பில், இராமானுஜனின் மார்பளவு சிலை நிறுவப் பட்டது.

•     இராமானுஜன் எழுத்தராகப் பணியாற்றிய சென்னை துறைமுகக் கழகத்தின் சார்பில், புதிதாக வாங்கப் பெற்ற கப்பலுக்கு சீனிவாச இராமானுஜன் எனப் பெயர் சூட்டப் பெற்றது.

•      1972 ஆம் ஆண்டு இராமானுஜன் கணித மேனிலை ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப் பெற்றது.

•     1987 இல் இராமானுஜனின் நூற்றாண்டு விழா சென்னையில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.
    சென்னையில் நடைபெற்ற விழாவின் போது, நரோசா பதிப்பகத்தார் வெளியிட்ட இராமானுஜனின் The Lost Note Book  எனும் நூலினை முதற்படியினை, அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் கையொப்பமிட்டு வெளியிட, இராமானுஜனின் மனைவி திருமதி ஜானகி அம்மையார் அவர்கள், நூலின் முதற் படியினைப் பெற்றுக் கொண்டார்.

•   மூன்று இந்தியத் திரைப் படங்கள் இராமானுஜனைப் பற்றி வெளியிடப் பட்டன.

• 1986 இல் தொடங்கப் பெற்ற இராமானுஜன் கணிதக் கழகத்தின் சார்பில், முதல் கணித இதழானது, நூற்றாண்டு விழாவின் போது வெளியிடப் பெற்றது.

•   கும்பகோணத்தில் இராமானுஜன் படமானது ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது.

•     அண்ணா பல்கலைக் கழகமானது தனது கணிப்பொறி மையத்திற்கு இராமானுஜன் பெயரினை வைத்தது.

•   கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகமானது இராமானுஜன் ஆராய்ச்சி நிலையம் மற்றும் நூலகம் தொடங்கியது.

•    கும்பகோணத்தில் இராமானுஜன் வாழ்ந்த வீடு, சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தால் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப் பட்டு வருகிறது.

•    ஆங்கில எழுத்தாளரான ராண்டல் காலின்ஸ் என்பவர், தான் எழுதிய  The Case of the Philosophers Ring  என்னும் நாவலில் ஹார்டியையும், இராமானுஜனையும் கதாபாத்திரங்களாக இணைத்துள்ளார்

•   இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் 1946 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட The Discovery of India  எனும் நூலில், இராமானுஜன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
     இராமானுஜனின் குறுகிய கால வாழ்வும், மரணமும் இந்தியாவின் நிலையினைத் தெளிவாகக் காட்டுகிறது. கோடிக் கணக்கான இந்தியர்களுள் சிலருக்கே கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. வறுமையில் பிடியில் சிக்கி உண்ண உணவின்றி, பசியால் தவிக்கும் ஏழைகளுக்கு உண்ண உணவும், கற்க கல்வி வசதியும் ஏற்படுத்தப் படுமேயானால், இந்தியாவில் இருந்து விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் இலட்சக் கணக்கில் தோன்றி புதிய பாரதத்தைப் படைப்பார்கள் என்பது உறுதி.

•   பிரிட்டிஸ் திரை இயக்குநர் ஸ்டீபன் பிரை என்பவரும் இந்தியாவைச் சேர்ந்த தேவ் பெங்கல் என்பவரும் இணைந்து, இராமானுஜனைப் பற்றிய ஹாலிவுட் திரைப்படம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

•    கணித மேதை சீனிவாச இராமானுஜனின் 125 ஆம் ஆண்டு விழாவின் போது, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால், 2012 ஆம் ஆண்டானது கணித ஆண்டாகவும், இராமானஜன் பிறந்த டிசம்பர் 22 ஆம் நாளானது, கணித நாளாகவும் அறிவிக்கப் பட்டது.

    இராமானுஜனின் கணிதத் திறமைகளை இனம் கண்டு, இலண்டனுக்கு அழைத்து, இராமானுஜனின் திறமைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜி.எச்.ஹார்டி, இராமானுஜன் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

I did not invent him
Like other great men, he invented  himself
He was Svayambhu.


கணக்கு மட்டுமே என் வேட்கை
கணக்கு மட்டுமே என் வாழ்க்கை

என வாழ்ந்து காட்டிய
அம் மாமேதையின்
நினைவினைப் போற்றுவோம்
வாழ்க வாழக என்றே வாழ்த்துவோம்.

வாழ்க இராமானுஜன்     வளர்க இராமானுஜன் புகழ்
----

நிறைவாய் நன்றியுரை

     நண்பர்களே, கணிதமேதை சீனிவாச இராமானுஜன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார். இத்தொடரிலிருந்து இராமானுஜன் விடைபெற்றாலும், நமது எண்ணத்தில், இதயத்தில் நீங்காத இடத்தினைப் பிடித்து, என்றென்றும் நமது நினைவலைகளில் வாழ்வார் என்பது உறுதி.

     கணிதமேதை சீனிவாசன் என்னும் இத்தொடரினை விடாது வாசித்து, நேசித்த அன்பு உள்ளங்களுக்கு, எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன்.

மேலும்,

     எனது எம்.பில்., ஆய்வுப் படிப்பின்போது என்னை வழி நடத்தி, நெறிப் படுத்தி, இராமானுஜன் பற்றிய ஆய்வினை முறைப் படுத்திய, எனது ஆசான்,

முனைவர் சா.கிருட்டினமூர்த்தி,
முன்னாள் தலைவர், அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழ்ப் பல்கலைக் கழகம்,தஞ்சாவூர்
அவர்களுக்கும்,

வாருங்கள் எம்.பில்., ஆய்வுப் படிப்பில் சேருவோம் என்று, என்னை அழைத்துச் சென்ற எனது நண்பர்,

திரு ஆ.சதாசிவம்,
உதவித் தலைமையாசிரியர்,
உமாமகேசுவர மேனிலைப் பள்ளி,தஞ்சாவூர்
அவர்களுக்கும்,

கணிதமேதை இராமானுஜன் தொடரினைத் தொடங்கிய நாள் முதல், பல்வேறு நாளிதழ்களில் வெளிவந்த இராமானுஜன் பற்றிய, பல்வேறு செய்திகளை வழங்கி, இத் தொடருக்கு மெருகேற்றிய நண்பர்கள்,

முனைவர் பா.ஜம்புலிங்கம்,
கண்காணிப்பாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம்
சோழ நாட்டில் பௌத்தம்
அவர்களுக்கும்,

திரு வெ.சரவணன்,
முதுகலை ஆசிரியர், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி
கரந்தை சரவணன்
அவர்களுக்கும்,

இத்தொடருக்கான முகப்புப் பக்கத்தை அழகுற அமைத்துத் தந்த நண்பர்,
திரு எஸ்.கோவிந்தராஜ்,
ஓவிய ஆசிரியர், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி
கரந்தை காமராஜ்
அவர்களுக்கும்,

கணிதமேதை சீனிவாச இராமானுஜன் தொடரினையும், என்னையும்
வலைச்சரம்
என்னும் கவின்மிகு வலைப் பூவில் அறிமுகப் படுத்திய,


திருமதி உஷா அன்பரசு
உஷா அன்பரசு, வேலூர்
http://tthamizhelango.blogspot.com
அவர்களுக்கும்,


திருமிகு தி, தமிழ் இளங்கோ
எனது எண்ணங்கள்
அவர்களுக்கும்,


வாரந்தோறும் இத் தொடரினை, தன் முகப் புத்கதகத்தில் பகிர்ந்து

கணிதமேதையின் புகழினைப் பரப்பிய


திரு ரத்னவேல் நடராஜன்
ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ரத்னவேல்நடராஜன்
அவர்களுக்கும்

வாரந்தோறும் தவறாது வருகை தந்து வாசித்து வாழ்த்தியதோடு, தனது பல்வேறு பணிகளுக்கு இடையிலும், நேரம் ஒதுக்கி, சிரமம் பாராது, மன மகிழ்ந்து, எனது வலைப் பூவினை,
தமிழ் மணம்
திரட்டியில், இணைத்து உதவிய

திருமிகு டி.என்.முரளிதரன்,
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், சென்னை
மூங்கில் காற்று
அவர்களுக்கும்,


வாழ்வில் வெல்லத் துடிக்கும் இளம் உள்ளங்களின் வாசிப்பிற்கும், நேசிப்பிற்கும் உரியதாய், பல்லாயிரக் கணக்கான இல்லங்களிலும், உள்ளங்களிலும், நம்பிக்கைச் சுடறேற்றி வரும்
நமது நம்பிக்கை
திங்களிதழில்,

கணிதமேதை சீனிவாச இராமானுஜன் தொடரினை தொடர்ந்து
வெளியிட்டு வரும்,
உலகறிந்த பேச்சாளராய், இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் நற் கவிஞராய், உத்வேகம் தரும் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரரான,
கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா
அவர்களுக்கும்

என் நெஞ்சார்ந்த நன்றியினைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

     மீண்டும் சொல்கிறேன், வலைப் பூ தோழர்களாகிய, உங்களின் உயரிய, உன்னத ஒத்துழைப்பினாலும், ஆதரவினாலுமே இத் தொடர் வெற்றி பெற்றிருக்கின்றது.

வலைப் பூ வாசகர்கள் அனைவருக்கும்,
என் மனமார்ந்த, நெஞ்சம் நெகிழ்ந்த
நன்றியினைக் காணிக்கையாக்குகின்றேன்.

நன்றி  நன்றி  நன்றி

அடுத்தவாரம், புதியதொரு தொடரில் சந்திப்பபோமா நண்பர்களே,

                    என்றென்றும் நன்றியுடனும், தோழமையுடனும்,
                               கரந்தை ஜெயக்குமார்

29 கருத்துகள்:

  1. சிறப்பாக முடித்தீர்கள் ஐயா...

    அனைவரையும் குறிப்பிட்டு நன்றி சொன்னது மேலும் சிறப்பு... வாழ்த்துக்கள் பல... நன்றிகளும் பல...

    விரைவில் புத்தக வடிவிலும் வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா. தங்களைப் போன்றவர்களின் தொடர் வருகையும், வாழ்த்தும், உற்சாகமூட்டும் சொற்களுமே, எனக்குக் கிடைத்த பெரு வரமாகும் அய்யா.மீண்டும் நன்றி. அடுத்த வாரம் , புதிய தொடர் ஒன்றினைத் தொடங்க எண்ணியுள்ளேன். தங்களின் அன்பான ஆதரவினை நாடுகின்றேன். நன்றி

      நீக்கு
  2. தி. தமிழ் இளங்கோ அவர்களின் இணைப்பு மட்டும் சிறிது மாற்றம் செய்ய வேண்டும் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. மிக சிறப்பாக தொடர் நிறைவு செய்துள்ளீர்கள். ஒரு சில பதிவுகளை வாசிக்கமால் விட்டு விட்டேன் அவற்றை தற்பொழுது வாசித்தவிட்டேன். உங்களின் அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. அடுத்தத் தொடருக்கும் தங்களின் வருகையினை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் அய்யா. நன்றி

      நீக்கு
  4. கணித மேதை ராமானுஜம் பற்றிய சிறப்பான தொடர். பல தகவல்களை கொண்டு வெளியிட்டது சிறப்பு.

    தங்களது பணி மேலும் சிறப்புற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அய்யா. தொடர்ந்து வருகை தருமாறு அன்போடு வேண்டுகின்றேன் அய்யா

      நீக்கு
  5. பெயரில்லா16 மார்ச், 2013

    சிறப்பான தொடர்...வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. அடுத்தத் தொடரக்கும் வருகைதர அன்போடு வேண்டுகின்றேன் அய்யா

      நீக்கு
  6. நெஞ்சத்தை நெகிழ வைத்த பதிவு
    மட்டுமல்லாமல் நெஞ்சிலும்
    நிறைந்துவிட்ட பதிவு
    பாராட்டுக்களும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. தங்களின் தொடர் வருகையினை அன்போடு வேண்டுகின்றேன் அய்யா

      நீக்கு
  7. மிகப் பெரிய பணி நிறைவான பணியை அருமையாகச் செய்திருக்கிறீர்கள். இத்தொடர் இன்னும் மறைந்து கிடக்கும் ராமானுஜர்களை கண்டெடுக்க உதவட்டும்.
    நான் செய்த உதவி மிகச் சிறியது அதையும் நினைவில் கொண்டு நன்றி தெரிவித்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல நல்ல படைப்புகளை அளியுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. தொடர்ந்த தங்களின் வருகையினாலும்,அதரவினாலுமே இத் தொடரினை நன்முறையில் பகிர முடிந்தது அய்யா.தாங்கள் செய்தது சிறிய உதவி அல்ல.தங்களின் உதவியினால், முயற்சியினால், கணித மேதை இராமானுஜன் பற்றிய வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள், பல நூறு புதிக வாசக நண்பர்களைச் சென்றடைந்துள்ளது அய்யா. மிக்க நன்றி. அடுத்தத் தொடருக்கும் தங்களின் அன்பான ஆதரவினை வேண்டுகின்றேன் அய்யா. நன்றி

      நீக்கு
  8. I was continue reading this article Mr.RAMANUJAM was a great man in this world.He was more IQ power compared more scientists.This article touch my heart and more.Thanks sir.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பாலு சார். அடுத்தத் தொடருக்கும் தங்களின் தொடர் வருகையினை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்

      நீக்கு
  9. அற்புதமான பணி! நூல்வடிவில் பார்க்க ஆசைப்படுகிறேன்! வாழ்த்துக்களுடன்!---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அய்யா. அடுத்தத் தொடருக்கும் தங்களின் ஆதரவினைத் வழங்கி உதவிட வேண்டும் அய்யா

      நீக்கு
  10. மிகவும் அருமையான பணி. கணித மேதையின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறியும் விதத்தில் தொடராக கொடுத்தது மிகவும் சிறப்பு. நன்றி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. அடுத்தத் தொடருக்கும் தங்களின் வருகையினை ஆவலுடன் எதிர்பார்க்ன்றேன் அய்யா.

      நீக்கு
  11. ராமானுஜர் வாழ்க்கை மனதை கனக்க செய்தது.இத்தனை விளக்கமாக நிறைய உழைப்புடன் இத்தொடரை நிறைவு செய்துள்ளீர்கள். நூலாக பாதுக்காக்க வேண்டிய தொடர். ஆசிரியையாக இருக்கும் என் தோழிகளுக்கு உங்கள் தொடரை லிங்க் கொடுத்து மெயில் அனுப்பி வைத்திருக்கிறேன். அடுத்த தொடரை வரவேற்கிறோம்.

    நல்ல விஷயத்தை கொடுத்து அதை நாங்கள் பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பு தந்த உங்களுக்குத்தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். எங்களுக்கு நன்றி கூறியது உங்கள் பெருந்தன்மை!

    அடுத்த தொடர் என்ன ஐயா? யாரை பற்றி? தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணிதமேதை இராமானுஜன் தொடர், அதிக எண்ணிக்கையிலான நண்பர்களைச் சென்றடைய உதவியவர் தாங்கள்.அதற்காக நன்றி சொல்லியே ஆக வேண்டும்.நன்றி
      ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன், தமிழின் இழந்த பெருமைகளை மீட்டிடத் தோன்றிய அமைப்பு கரந்தைத் தமிழ்ச் சங்கம். இக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நூற்றாண்டு கால வரலாற்றினை அடுத்த தொடராக எழுத முயற்சி மேற்கொண்டுள்ளேன். இத் தொடருக்கும் தங்களின் மேலான ஆதரவினை அன்போடு வேண்டுகின்றேன். நன்றி

      நீக்கு
  12. தொடர் பதிவில் நல்ல ஒரு பணியைச் செய்துள்ளீர்கள். நிறைவான நன்றிகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கின்றேன், அடுத்தத் தொடருக்கம் தங்களின் அன்பான ஆதரவினை வேண்டுகின்றேன்

      நீக்கு

  13. பதிவுகள் பலவும் மேலோட்டமான வாசிப்புக்காகவே எழுதப் படும்போது, எல்லோரும் அறிய வேண்டிய கணிதமேதை பற்றி சற்றுக் கனமான பதிவை, மிகவும் தெளிவாக வலைப் படுத்தி உள்ளீர்கள். அதற்காகவே என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி அய்யா. அடுத்தத் தொடராக கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்னும் மாபெரும் அமைப்பின் நூற்றாண்டு கால வரலாற்றினை எழுதிட எண்ணியுள்ளேன் அய்யா. இத் தொடருக்கும் தங்களின் அன்பான ஆதரசினை வேண்டுகின்றேன் அய்யா. நன்றி

      நீக்கு
  14. பயணம் காரணமாக விட்டிருந்த பதிவுகளைப் படித்து முடித்தேன்.
    அருமையாக எழுதியிருக்கிறீர்கள். புத்தகமாக வெளிவர வேண்டும்.

    கணிதப் புலமைக்கு அப்பால் ராமானுஜன் என்கிற தனிமனிதனைப் பற்றி, அவனுடைய வேட்கைகள், வெறுப்புகள், குணங்கள் பற்றி, அதிகம் தெரியவில்லை. தெரிந்தால் முடிந்தால் ஒரு கட்டுரையை பிற்சேர்க்கையாக எழுதுங்களேன்?

    கரந்தை என்றால் கும்பகோணமா?

    பதிலளிநீக்கு
  15. கணிதமேதை ராமானுஜர் தொடரில் சிறு பங்களித்தமைக்காக ( முகப்பு டிசைன் )
    என் புகைப்படத்தையும் வெளியிட்டு சிறப்பித்தமைக்காக என் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தங்களின் பணி தொடர வாழ்த்துகிறேன், பாராட்டுக்கள். நன்றி, நன்றி. நன்றி,

    பதிலளிநீக்கு
  16. கணிதமேதை ராமானுஜர் தொடரில் சிறு பங்களித்தமைக்காக ( முகப்பு டிசைன் )
    என் புகைப்படத்தையும் வெளியிட்டு சிறப்பித்தமைக்காக என் முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தங்களின் பணி தொடர வாழ்த்துகிறேன், பாராட்டுக்கள். நன்றி, நன்றி. நன்றி,

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு