13 டிசம்பர் 2013

மண்டேலா ஓய்வெடுக்கட்டும்

If you want to make peace with your enemy,
You have to work with your enemy.
Then he becomes your partner.
-          Nelson Mandela

     என் வாழ்நாள் முழுவதும் ஆப்பிரிக்க மக்களின் போராட்டத்துக்காகவே என்னை அர்ப்பணித்திருக்கிறேன். வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக நான் போராடியிருக்கிறேன். கருப்பர் ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன். எல்லோரும் ஒற்றுமையாக வாழக்கூடிய, எல்லோருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய, ஜனநாயகப் பூர்வமான, சுதந்திரமான சமூகம் என்ற இலட்சியத்தையே நான் போற்றி வந்திருக்கிறேன். நான் அடைய நினைப்பது இந்த இலட்சியத்தைத்தான். நான் வாழ நினைப்பது இந்த இலட்சியத்துக்காகத்தான். தேவை என்றால், என் உயிரையும் துறக்க நினைப்பது இந்த இலட்சியத்துக்காகத்தான்.


     நண்பர்களே, நாச வேலையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப் பெற்று, தென்னாப்பிரிக்க உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட, நெல்சன் மண்டேலா அவர்கள், 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள், நீதிபதி டி வெட் அவர்களைப் பார்த்து, நெஞ்சம் நிமிர்த்தி, நேர்கொண்ட பார்வையோடு, முழங்கிய வார்த்தைகள்தான் இவை.

     ஒன்றல்ல, இரண்டல்ல, 27 ஆண்டுகள் சிறையில் இருந்த ஒரே தலைவர் நெல்சன் மண்டேலா  மட்டும்தான்.


    

     நண்பர்களே, இருபத்து ஏழு ஆண்டுகள் சிறை வாழ்க்கையில் அவர் ஆற்றிய மகத்தான பணி என்ன தெரியுமா? பேசிக் கொண்டேயிருந்தார். வெள்ளையர் தரப்பினரிடையேயும், கருப்பர் தரப்பினரிடையேயும் பேசிக் கொண்டேயிருந்தார்.

     இரு தரப்பின்ர் இடையேயும், வெறுப்பையும், வன்முறையையும் தவிர்க்க இடைவிடாமல் பேசிக்கொண்டே இருந்தார். மண்டேலாவின் இந்த அமைதிப் போராட்டம் உலகையே உலுக்கியது. உலகின் அனைத்து மூலை முடுக்குகளில் இருந்தும் எழுந்த கண்டனக் குரலும், கொடுக்கப்பெற்ற அழுத்தமும் நிற வெறி அரசை அசைத்தது.

        நண்பர்களே, 1994 ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் இனப் பாகுபாடு ஒழிந்தது. அனைவருக்கும் ஓட்டுரிமைக் கிடைத்தது. தேர்தல் நடைபெற்றது. மண்டேலா குடியரசுத் தலைவர் ஆனார்.

     நண்பர்களே, நெல்சன் மண்டேலா, குடியரசுத் தலைவரானதும் என்ன செய்தார் தெரியுமா? அதுநாள் வரை தென்னாப்பிரிக்க நிற வெறி அரசின் அதிபராக விளங்கிய, எஃப்.டபிள்யு.டி.கிளர்க் அவர்களையே, துணை குடியரசுத் தலைவராக்கினார். வெள்ளையரை அன்போடு அரவணைத்தார்.

     கருணை, பெருந்தன்மை, தாயுள்ளம், இன்னா செய்தாரை ஒருத்தல், என்றெல்லாம் கூறுவோமே, அச்சொற்களின் முழுவடிவம் மண்டேலா. ஆம் நண்பர்களே, 1994 இல் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றபோது, சிறப்பு அழைப்பாளராக யாரை அழைத்தார் தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

     இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் இருந்தார் அல்லவா? அந்தச் சிறையின் ஜெயிலரை சிறப்பு அழைப்பாளராக அழைத்திருந்தார்.

     தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அரசு மறைந்து, ஜனநாயக அரசு மலர்ந்தபோதும, ஓர் நினைவு மண்டேலாவை வாட்டிக் கொண்டே இருந்தது. ஆம் நண்பர்களே, ஒரு பெண்ணின் நினைவு. அவர் பெயர் சாரா.

     சாரா அவர்களின் முழுப் பெயர் சாரா பார்ட்மன். இவர் 1815 ஆம் ஆண்டே இறந்து விட்டார். ஆம் நண்பர்களே, மண்டேலா பிறப்பதற்கு நூறு வருடங்களுக்கு முன்னரே சாரா மறைந்து விட்டார். ஆனாலும் சாராவிற்கு நேர்ந்த அவலம் மண்டேலாவை வாட்டிக் கொண்டே இருந்தது.


     தென்னாப்பிரிக்க பழங்குடி இனமான கோய்ஸன் என்ற இனத்தைச் சார்ந்தவர் சாரா. இவர் பிறந்த ஆண்டு 1789. சிறு வயது முதலே, கடுமையான உடலுழைப்பிற்கு ஆட்படுத்தப் பட்டார். ஓங்கி நெடிது உயர்ந்த உருவம் இவருடையது. உயரத்திற்கேற்ற பருமனான உடல்.

     நணபர்களே, தென்னாப்பிரிக்காவிற்கு வந்த இங்கிலாந்து கப்பலின் மருத்துவர் வில்லியம் டன்லப் என்பவரின் கண்களில் படுகிறார் இந்த சாரா. வித்தியாசமான உடலமைப்பைக் கொண்ட சாராவைப் பார்த்ததும் மருத்துவரின் மனதில் ஒரு குரூர எண்ணம் தோன்றியது. சாராவிடம் பேசினார். ஆசை வார்த்தைகளைக் கூறினார். வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி, சாராவை இலண்டன் அழைத்துச் சென்றார்.

     நண்பர்களே, இலண்டன் சென்றதும் மருத்துவர் என்ன செய்தார் தெரியுமா? சாராவை ஆடையின்றிக் காட்சிப் பொருளாக்கினார். பூதாகரமான பெண் என விளம்பரம் செய்து கண்காட்சி நடத்தினார். சாராவைப் பார்க்க, கேடு கெட்ட மக்கள் குவிந்தனர்.


    
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சாரா பிரான்ஸ் கொண்டு செல்லப்பட்டார். அங்கும் காட்சிப் பொருளாக்கப்பட்டார். ஈவு இரக்கமற்ற மனிதர்கள், சாராவை பாலியல் தொழிலிலும் தள்ளினார்கள். கடுமையான பாலியல் நோயின் காரணமாக, 1815 ல் சாரா இறந்த போது, அவரது வயது வெறும் 25 தான்.

     நண்பர்களே, சாரா இறந்த பிறகாவது அவரது உடலை நிம்மதியாக விட்டார்களா என்றால், இல்லை. சாராவின் உடலமைப்பின் மீது ஆர்வம் கொண்ட, ஒரு மனிதத் தன்மையற்ற அறிவியலாளர், ஜார்ஜியல் குய்வர் என்பார், சாராவின் உடலை ஆராய்ச்சி செய்ய விரும்பினார்.


     பிளாஸ்டர் காஸ்ட் முறையில் பொம்மை போல் வடித்தார். இதோடு திருப்தி அடைந்தாரா என்றால் இல்லை. நண்பர்களே, அடுத்து அவர் செய்த செயலைக் கேட்டால், அதிர்ச்சியில் உறைந்து போவீர்கள். சாராவின் உடலில் இருந்து, அவரது மூளை மற்றும் அந்தரங்கப் பாகங்களை வெட்டி எடுத்து, பாரிஸ் நகரில் உள்ள, மியூசியத்தில் காட்சிக்கு வைத்தார்.

     நண்பர்களே, சாரா இறந்தபிறகும், அவரது உடல் உறுப்புகள், 160 ஆண்டுகள் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாகவே இருந்தன. பின்னர் எழுந்த எதிர்ப்பின் காரணமாக, 1974 முதல் பொது மக்கள் பார்வைக்குத் தடை விதிக்கப் பட்டது.

      தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவரான பிறகு, நெல்சன் மண்டேலா, சாராவின் உடல் கண்ணியமான முறையில், அடக்கம் செய்யப்பட வேண்டும் எனக் கூறி, சாராவின் உடலின் எஞ்சிய பாகங்களைத் தருமாறு, 1994 இல் பிரான்சிடம் கோரிக்கை வைத்தார்.

      நண்பர்களே, பிரான்ஸ் அசைந்து கொடுக்கவில்லை. நெல்சன் மண்டேலாவின் அடுத்தப் போராட்டம் தொடங்கியது.

       சாரா பிறந்த, அதே கோய்ஸன் இனத்தைச் சாரந்த , பெண் உரிமைப் போராளியும், கவிஞருமான, டயானா ஃபெர்ரஸ் என்பவர், 1988 இல் ஒரு கவிதை எழுதினார்.
பிறந்த நாட்டுக்குக் கண்ணியமாக அழைத்துச் செல்வேன்
என ஒரு கவிதை எழுதினார். உருக்கமான இக்கவிதை உலகின் உணர்வையே உலுக்கியது.

      நண்பர்களே, சாராவின் எஞ்சிய உடல் பாகங்கள் 2002 ஆம் ஆண்டுதான், தென்னாப்பிரிக்கா வந்து சேர்ந்தன.

     தென்னாப்பிரிக்க நாட்டின், பெண்கள் தினமான ஆகஸ்ட் 9 ஆம் நாள், சாராவின் எஞ்சிய உடல் பாகங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன.


    

பல மனித ஆயுட் காலங்களையும் கடந்து, அவமதிக்கப்பட்ட பெண்ணின் உடல், இனியாவது அமைதியாக உறங்கட்டும் எனக் கூறிய மண்டேலா, அன்றே சாராவின் கல்லறையை தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்தார்.

      நண்பர்களே, இவர்தான் மண்டேலா. எந்த ஒரு ஜனநாயக நாட்டுக்கும், ஒரே தலைவர், நீண்ட காலம் ஆட்சியில் இருப்பது நல்லதல்ல, எனக்கூறி, இரண்டாம் முறை தேர்தலில் போட்டியிடாமலேயே ஒதுங்கியவர்தான் மண்டேலா.

      மண்டேலா தான் கன்ட கனவை நனவாக்கியிருக்கிறார். இனப் பாகுபாட்டிற்கும், வெறுப்பு அரசியலுக்கும், வன்முறைப் பாதைக்கும் எதிரான, ஓர் உயிரோட்டமானச் சின்னமாக, தனது தென்னாப்பிரிக்காவை அவர் மாற்றியிருக்கிறார்.

     நண்பர்களே, நெல்சன் மண்டேலா அவர்களின் அமரத்துவச் செய்தியை, தென்னாப்பிரிக்க நாட்டின், தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜுமா முறைப்படி அறிவித்தார்.

     நமது அன்புக்குரியவரும், தென் ஆப்பிரிக்க ஜனநாயகத்தின் நிறுவனரும், அதிபருமான நெல்சன் மண்டேலா காலமானார். அவர் இப்போது நிரந்தரமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் இப்போது அமைதியாக இருக்கிறார்.


நண்பர்களே,
தென்னாப்பிரிக்கக் காந்தி,
நெல்சன் மண்டேலா
ஓய்வெடுக்கட்டும். அமைதியாய் உறங்கட்டும்.

    


    

42 கருத்துகள்:

 1. . மண்டேலா பற்றி யாரும் எழுதவில்லையே என்று நினைத்தேன். உணர்வு பூர்வமான எழுத்துக்கள் சாரா பற்றிய தகவல்களை உருக்கமாக விவரித்திருக்கிறீர்கர்கள்.மனம் கலங்கிப் போனது மிக சிறப்பான பதிவு.
  தென் ஆப்ரிக்காவில் தொடங்கிய காந்தியின் அகிம்சை வழியில் இன்று வரை நடைபோட்ட மண்டேலா ஒரு மாமனிதர் என்பதை தெளிவாக்கி விட்டீர்கள் நன்றி

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா13 டிசம்பர், 2013

  வணக்கம்
  ஐயா
  நெல்சன் மண்டேலா பற்றியும். சாரா பார்ட்மன். என்ற பெண்மணி பற்றிய வரலாறும் மிகச் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா (நெல்சன் மண்டேலா என்ற மாமனிதனின் வரலாறு உலக அரங்கில் எப்போதும்... பேசப்படும்.பதிவு அருமை வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா
  த.ம.வாக்கு2வது.
  -நன்றி-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. நெல்சன் மண்டேலா செய்த உன்னதமானப் பணியை உங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்.பாராட்டுக்கள்
  த.ம +1

  பதிலளிநீக்கு
 5. மறைந்த மாமனிதர் மண்டேலாவைப் பற்றி
  உண்மை சம்பவங்களை தொகுத்து
  தமிழ் மக்களின் கவனத்திற்கு கொண்டு
  வந்த உங்கள் பணி பாராட்டுக்குரியது

  அவர் உடல் வேண்டுமானாலும்
  மண்ணுக்குள் போயிருக்கலாம்

  அவர் இலட்சியங்கள் லட்சக்கணக்கான
  ஆண்டுகள் வாழ்ந்து இந்த உலகில்
  இன்றும் பல நாடுகளில் நிலவிவரும்
  இனவெறி,நிற வெறிக்கான
  போராட்டங்களை தொடர்ந்து
  மேற்கொண்டு வரும்
  என்பதில் ஐயமில்லை.

  சரியான சமயத்தில்
  வெளிவந்த பதிவு

  பாராட்டுக்கள் KJ

  பதிலளிநீக்கு
 6. அவரின் தியாகங்கள்
  மெய்சிலிர்க்க வைக்கின்றன
  அவர் குறித்த அறியாதன பல
  தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. இப்போது நிரந்தரமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் இப்போது அமைதியாக இருக்கிறார்.//ஆம் அவரது ஆத்மா உறங்கட்டும்

  பதிலளிநீக்கு
 8. அற்புதமான அஞ்சலி ! நீற வெறியை எதிர்த்து போரிட்டவர் ! அந்த வெறியர்களொடு சமாதான சகவாழ்வு என்ற உயரிய சிந்தனையை நடைமுறைப்படுத்தியவர் ! மனித குலத்தில் இப்படி ஒரு பெண்ணை அவமானப் படுத்தியதில்லை என்று சாரவின் எஞ்சிய உடலை கொண்டுவந்து தேசிய பூங்காவாக மாற்றியவர் ! எல்லவற்றிர்க்கும் மேலாக தென் ஆப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்டிசியின் மத்திய கமிட்டி உறுப்பினராக செயலாற்றியவர் ! "The highest developement of humanism is Marxism " என்பதை நிருபித்துகாட்டியவர் ! அதன் காரணமாகவே அமெரிக சி.ஐ.ஏ வால் 1964மாண்டு காட்டிக் கொடுக்கப்பட்டு 27 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் ! மீண்டும்கூறுகிறென் ! அற்புதமான அஞ்சலி ! நன்றி---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 9. தெளிவாக அழகாக பதிவு செய்துள்ளீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 10. பல அறியாத தகவல்களை விரிவாக விளக்கமாக சொல்லி உள்ளீர்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
 11. அருமையான பதிவு.. மண்டேலாவுக்கு என் இரங்கல்களும்!!

  பதிலளிநீக்கு
 12. உலகின் அனைத்துப்பகுதிகளிலும் அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்ட ஒரே மாமனிதர் மண்டேலாவைப் பற்றி அரிய தகவல்களைத் தந்து அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியமைக்கு நன்றி. உங்களுடன் நாங்களும் சேர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

  பதிலளிநீக்கு
 13. மண்டேலா தான் கன்ட கனவை நனவாக்கியிருக்கிறார். இனப் பாகுபாட்டிற்கும், வெறுப்பு அரசியலுக்கும், வன்முறைப் பாதைக்கும் எதிரான, ஓர் உயிரோட்டமானச் சின்னமாக, தனது தென்னாப்பிரிக்காவை அவர் மாற்றியிருக்கிறார்.

  அருமையான அஞ்சலி பகிர்வுகள்..!

  பதிலளிநீக்கு
 14. மாமனிதர் மண்டேலா பற்றிய அருமையான அஞ்சலிப் பகிர்வுகள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 15. நெல்சன் மண்டேலா பற்றிய பதிவு அற்புதம்.பல தெரியாத தகவல்கள். மனித நேயத்தின் வெளிப்பாடே சாரா குறித்த அவரது செயல்கள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. அருமையான தலைவரை பற்றிய தகவல்கள் அருமை! சாரா பற்றி தெரியாது! தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 17. மனிதருள் மாணிக்கம் அமரர் நெல்சன் மண்டேலா!..
  அவரைப் பற்றிய தகவல்களால் கண்கள் கசிந்தன..

  இத்தகைய பண்பாளர்களால் தான் -
  இன்னும் வையகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது!..

  பதிலளிநீக்கு
 18. இனமானம் என்றால் இப்படி இருக்கவேண்டும் !
  நாமும் இருக்கிறோம் .நம் தலைவர்களும்
  இருக்கிறார்கள் !என்னத்த சொல்ல .போங்க
  சார் வயிற்றெரிச்சலை கிளப்பாம .
  நாம் பாடம் படிக்க வேண்டிய பதிவு

  பதிலளிநீக்கு
 19. உள்ள்ம் தொடும் பதிவு. இவரே பெரும் மகாத்மா.

  பதிலளிநீக்கு
 20. மண்டேலா பற்றிய பல தகவல்கள் அறியாதவை....

  பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி .

  அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.....

  பதிலளிநீக்கு
 21. என் இனிய நண்பர் ஜெயகுமார் அவர்களுக்கு., மகாத்மா காந்தியின் வெற்றி பெற்ற ஆயுதமான அகிம்சை வழியினை பயன்படுத்தி எதிரியினை நேசித்து அவருடன் அன்புடன் பணி செய்தால் எதிரியையும் வசப்படுத்தலாம் என்பதை வாழ்ந்து காட்டி இந்த உலகத்திற்கு ஒரு உன்னதமான பாடத்தை உணர்த்தியவர் நெல்சன் ம்ண்டேலா அவர்கள். இந்த உலகில் அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்து வருகிறோம் என்பதே நம் அனைவருக்கும் மிக பெருமையான ஒரு விசயம். ஒருவருடைய மனம் தளராத போராட்டம் கல்வியறிவு குறைந்த, இனப்பாகுபாட்டால் மனம் நொந்த, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய ஒரு மிகப்பெரும் சமூதாயத்தின் பிரச்சினைகளை வேரறுக்க முடிந்தது என்றால் அது நெல்சன் மண்டேலா அவர்களுடையதுதான் என்றால் அது மிகையாகாது.அவருடைய ஆத்மா சாந்தியடையும் என்பது சர்வ நிச்சயம்.

  பதிலளிநீக்கு
 22. இனி அவர் உறங்கட்டும். சாரா பற்றிய தகவல்களுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 23. நெல்சன் மண்டேலா பற்றி மிகவும் அருமையான... உணர்வுப்பூர்வமான பகிர்வு ஐயா...
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் அய்யா. சும்மா ஒற்றை வரியில் அந்த மாமனிதருக்கு அஞ்சலி செலுத்திவிடக் கூடாதே என்று நினைத்தே தள்ளித்தள்ளிப் போட்டுவிட்டேன். இப்போது நான் எழுத நினைத்ததைவிடவும் மிக அருமையாக சாரா நிகழ்வையும் சேர்த்து எழுதிச் சிறக்கச் செய்துவிட்டீர்கள் அய்யா. நன்றி. அந்த மாமனிதரோடு சேர்ந்து அவரைக் கொடுமைக்கு உள்ளாக்கிய க்ளார்க்குக்கும் நோபல்ப ரிசு அறிவித்த வெள்ளைத் திமிர் அடங்கவில்லை பார்த்தீர்களா? இந்திய விபிசிங் அரசு அறிவித்த “மண்டேலா“கமிஷன் அறிக்கை இடஒதுக்கீட்டைத் தமது நாட்டிலும் அமல்படுத்திய அந்த சமூகச் சிந்தனையாளரை ஒடுக்கப்பட்டோர் உலகம் ஒருநாளும் மறவாது. சிறப்பான பதிவிற்கு என் சிரந்தாழ்ந்த வணக்கமும். நன்றியும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “மண்டல்“ கமிசனைத்தான் -இந்தியாவிலேயே பலரும் ஒத்துக்கொள்ளாத சூழலில், இந்தியாவிற்கு வந்த மண்டேலா ஒத்துக்கொண்டு தம் நாட்டிலும் இடஒதுக்கீட்டை செயல்படுத்தப் போவதாகச் சொல்லி அவ்வாறே செய்ததால்- “மண்டேலா கமிசன்“ என்று சொன்னேன்... தவறில்லையே?

   நீக்கு
 25. இனிய வணக்கம் ஐயா..
  சாரா பற்றிய நிகழ்வுகள் நெஞ்சம் கனக்கச் செய்தது.
  வரலாறு அறிந்துகொண்டேன் ஐயா..

  பதிலளிநீக்கு
 26. எந்த ஒரு ஜனநாயக நாட்டுக்கும், ஒரே தலைவர், நீண்ட காலம் ஆட்சியில் இருப்பது நல்லதல்ல, எனக்கூறி, இரண்டாம் முறை தேர்தலில் போட்டியிடாமலேயே ஒதுங்கியவர்தான் மண்டேலா.//
  அருமை! பல அரிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 27. உங்கள் பதிவுகள் தனித்துவம் வைத்ததாக இருக்கின்றன...

  வாழ்த்துக்கள் ...
  மிக நல்ல நெகிழ, கலங்க, பீடு கொள்ள வைத்த ஒரு பதிவு ...
  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 28. சகோதரருக்கு வணக்கம்
  உலகத்தாரால் இரண்டாம் காந்தி என்றழைக்கப்படும் நெல்சன் மண்டேலா அவர்களின் இறப்பிற்கு இரங்கலாக வந்துள்ள தங்கள் பதிவின் கருத்தைக்கண்டு நெகிழ்ந்து போனேன். சாரா அவர்களுக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு கண்கள் குளமானதைத் தவிர்க்க முடியவில்லை. அப்பெண்மணிக்கு போராடி மகுடம் சேர்த்த மண்டேலா அவர்களுக்கும் அரிய தகவல்களோடு அழகான பதிவைத் தந்த தங்களுக்கும் நன்றிகள் ஆயிரம்.. உன்னதமான தலைவரை உறங்க விடுவோம்..

  பதிலளிநீக்கு
 29. மண்டேலா பற்றிய பலசெய்திகள்! நான் அறியாதன!!நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 30. வழக்கம் போல இன்னொரு கனமான, இன்னொரு மரியாதைமிக்க, இன்னொரு மறக்கமுடியாத படைப்பு தங்களிடமிருந்து. வாழ்த்துகிறேன்- வாழ்த்த வயதுண்டு என்பதால்!

  பதிலளிநீக்கு
 31. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 32. அன்புள்ள ஜெயக்குமார்.

  தொடர்ந்த பணிகள். மண்டேலாவைப் பற்றிய பதிவைப் பதிவிட முடியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். எப்படியும் வெளியிடுவேன். உங்களின் பதிவு கண்களில் உணர்வின் வேதனையை வடிய விட்டுவிட்டது. அவருக்கான ஆன்மா இன்னும்கூட இந்த மனித இனத்தைத்தான் எண்ணிக்கொண்டிருக்கும். அத்தகைய புண்ணிய ஆத்மா அது. நன்றிகள் கண்ணீருடன்.

  பதிலளிநீக்கு
 33. புதிய தகவல்கள் .மனம் கனக்க செய்கிறது.சாரா விற்கு நேர்ந்த கொடுமை .என்ன சொல்வது...?

  பதிலளிநீக்கு
 34. காந்திக்கு நிகராக அறியப்படும் மண்டேலாவின் மரணம் அவர் மக்களுக்கு மட்டுமல்ல உலகிற்கே இழப்புதான் என்றாலும் மரணம் என்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாதே! உங்கள் பதிவு பல புதிய தகவல்களைத் தந்திருக்தின்றது!! மிக்க நன்றி! நல்ல ஆழமான ஒரு ப்திவு!!

  பதிலளிநீக்கு
 35. நான் இவருடைய சுயசரிதை வாசித்து இருக்கிறேன் நல்ல தலைவர்
  பதிவிற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 36. மண்டேலா பற்றிய அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு