20 டிசம்பர் 2013

மலாலா - கல்வியின் தேவதை

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
    றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டக் குள்ளே பெண்ணை பூட்டிவைப் போமென்ற
     விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
     பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில்ஆணுக் கிங்கேபெண்
     இளைப்பில்லை காணென்று கும்மியடி
                                  மகாகவி பாரதி

     குஷால் பள்ளி. 2012 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் செவ்வாய்க் கிழமை 9 ஆம் நாள். நேரம் பிற்பகல் 12.00 மணி. பள்ளியின் மணி ஒலிக்கிறது. தேர்வு முடிந்து மணவ, மாணவியர் வெளியே வருகின்றனர். பள்ளிப் பேரூந்து காத்திருக்கிறது. உண்மையிலேயே அது பேரூந்து அல்ல. டயோட்டோ வாகனம். வெள்ளை நிறம், பின்புறத்தில் இருபுறமும் இரண்டு நீண்ட இருக்கைகள். நடுவிலும் ஒரு இருக்கை.


     இருபது மாணவிகளும், மூன்று ஆசிரியைகளும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு அமர, வாகனம் புறப்படுகிறது. சில நிமிடங்களில், ஒரு இளைஞன், தாடி வைத்த இளைஞன், சாலையின் குறுக்கே வந்து கை காட்டி வாகனத்தை நிறுத்துகிறான்.

     மற்றொரு இளைஞன். வெள்ளை உடையில், குல்லாய் அணிந்து, கைக் குட்டையினை கண்களுக்குக் கீழே முகத்தை மறைத்தவாறு கட்டியிருப்பவன், வாகனத்தின் பின்புறம் வருகிறான்.

     மலாலா யார் ?
    யாரும் பதில் கூறவில்லை. ஆனால் மாணவிகள் அனைவரும், அவர்களை அறியாமலேயே, முகத்தை மறைக்காதவாறு அமர்ந்திருக்கும் மாணவியைப் பார்க்கிறார்கள்.

     இளைஞன், மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியை வெளியே எடுக்கிறான். மூன்று முறை சுடுகிறான். மலாலா இரத்த வெள்ளத்தில் சாய்கிறாள்.
நண்பர்களே, நான் படிக்க வேண்டும், என்னைப் படிக்க விடுங்கள், என் போன்ற சிறுமிகளையும் படிக்க விடுங்கள் என்று குரல் எழுப்பியமைக்காகக் கிடைத்தப் பரிசுதான், இந்த துப்பாக்கிக் குண்டு.

     தொலைக் காட்சியில் தோன்றி, பெண்களைப் படிக்க விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தாரல்லவா, அதற்குப் பரிசுதான் இந்த துப்பாக்கிக் குண்டு.

     அமெரிக்காவின் தூதுவர், ரிச்சர்டு ஹெல்புரூக், அவர்களைச் சந்தித்து, தன் பன்னிரெண்டாவது வயதில், பெண்கள் படிப்பதற்கு உதவுங்கள் என்று கோரிக்கை வைத்தாரல்லவா, அதற்குக் கிடைத்தப் பரிசுதான், இந்த துப்பாக்கிக் குண்டு.

     நண்பர்களே, பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியைச் சேர்ந்த சிறுமி மலாலாவிற்குத், தலிபான்கள் வழங்கிய அன்புப் பரிசுதான் இந்த துப்பாக்கிக் குண்டு. காரணம் மலாலா பள்ளி செல்கிறார். மற்ற மாணவியரையும் படிக்க வற்புறுத்துகிறார். பெண்கள் படிக்கலாமா? படிக்க விடலாமா? தவறாயிற்றே.

      நண்பர்களே, தலிபான் தீவிரவாதி மூன்று முறை சுட்டான். முதல் குண்டு மலாலாவின் இடது புருவத்திற்கு அருகில், உள்ளே நுழைந்து, மூளைக்கு மிக அருகில் பயணித்து, இடது தோள் பகுதியில் வேகத்தைக் குறைத்து, உள்ளேயே ஓய்வெடுக்கத் தொடங்கியது.    

முதல் குண்டு துளைத்த மறுவினாடியே, மலாலா சரிந்து விழுந்து விட்டதால், மற்ற இரு குண்டுகள், அருகிலிருந்த மாணவி ஷாகியாவின் இடது தோள் பட்டையையும், கையையும் துளைத்தன. இதில் ஒரு குண்டு, கைநட் என்ற மாணவியின் வலது கையை உரசிக் கொண்டு சென்றது.

     நண்பர்களே, மலாலா ஸ்வாட் மத்திய மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார். செய்தி பரவியது. உலகே ஒன்று திரண்டு கண்டனக் குரலை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. மலாலா உயிர் பிழைக்க ஆங்காங்கே பிரார்த்தனைகள், வேண்டுகோள்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.


  பின்னர், மலாலா ஸ்வாட் மருத்துவ மனையில் இருந்து, ஹெலிகாப்டர் மூலம், பெஷாவர் நகரில் உள்ள CMH (Combined Military Hospital) மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.


     கர்னல் ஜுன்எய்ட். அம் மருத்துவமனையின் இள வயது மருத்துவர். மலாலாவை ஸ்கேன் செய்கிறார். மூளையில் குண்டு படவில்லை. ஆனால் குண்டு, மண்டை ஓட்டினைத் துளைத்துக் கொண்டு சென்ற பொழுது, மண்டை ஓட்டின் சில துகள்கள், மூளையினைக் குத்திக் காயப்படுத்தி இருப்பது தெரியவருகிறது. இதன் விளைவாய் மூளை வீங்கத் தொடங்கிவிட்டதைப் பார்க்கிறார்.

     நண்பர்களே, நமக்கு கையிலோ, காலிலோ அடிபட்டால், அடிப்பட்ட பகுதி வீங்குவதைப் பார்த்திருப்போம். மலாலாவிற்கும் அப்படித்தான் மூளை வீங்கத் தொடங்கி இருந்தது.

        நண்பர்களே, மூளை வீங்கினால் என்னவாகும். மண்டை ஓட்டின் உட்புறப் பகுதியில் முட்டும். அதற்கும் மேலே வீங்குவதற்கு, மண்டை ஓட்டிற்குள் இடம் இருக்காது. மேலும், மேலும் வீங்கத் தொடங்கும்போது,  வீங்குவதற்கு மண்டை ஓடு இடமும் கொடுக்காது. இதன் காரணமாக மூளையில் அழுத்தம் அதிகரிக்கும், முடிவில் மரணம்தான்.

     நண்பர்களே, கர்னல் ஜுன்எய்டு அடுத்து செய்த செயலைச் சொன்னால், நம்ப மாட்டீர்கள். இளவயது மருத்துவரானாலும், துணிச்சலுடனும், புத்திசாலித் தனத்துடனும் செயல்பட்டார்.

      மூளையின் வீக்கத்தைக் கட்டுப் படுத்த இயலாது. ஆனால் மூளை வீங்குவதற்கு இடவசதி செய்து கொடுக்கலாமல்லவா?. அதற்கு மூளையின் வீக்கம், மண்டை ஓட்டினைத் தொடும் இடத்தில் உள்ள, மண்டை ஓட்டினை வெட்டி எடுத்து, மூளை வீங்க வழி ஏற்படுத்தித் தருவதுதான் ஒரே வழி என்று முடிவு செய்தார்.

     எட்டு சென்டிமீட்டர் அகலம், பத்து சென்டிமீட்டர் நீளத்திற்கு, மண்டை ஓட்டை, ரம்பம் கொண்டு வெட்டி எடுத்தார்.


     நண்பர்களே, மலாலா பூரண குணம் அடைந்த பிறகு, மூன்று மாதங்கள் கடந்தபின், மண்டை ஓட்டினை மீண்டும் பொறுத்த வேண்டும். அதுவரை மண்டை ஓட்டின் துண்டுப் பகுதியைப் பாதுகாத்தாக வேண்டும். எங்கு வைத்துப் பாதுகாப்பது. மலாலாவின் வயிற்றுப் பகுதியைக் கீறிப் பிளந்து, மண்டை ஓட்டின் துண்டினை, குடல் பகுதியில் பாதுகாப்பாகச் சொருகி வைத்தார்.

        இலண்டன், பிரம்மிங்ஹோம், ராணி எலிசபெத் மருத்துவ மனையினைச் சார்ந்த இரு மருத்துவர்கள், மருத்துவர் ஜாவிட் மற்றும் மருத்துவர் ஃபியானோ இருவரும், அச்சமயம் ராவல்பிண்டியில் இருந்தனர். மருத்துவர் ஃபியானோ குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்.
     நண்பர்களே, இவ்விருவரும் பெஷாவர் மருத்துவ மனைக்கு வருகை தந்து, மலாலாவைப் பரிசோதித்தனர். இரத்த அழுத்தம் குறைந்திருந்தது. மேலும் இரத்தத்தில் அமிலத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே இருந்தது. எனவே, சிறப்பு வசதிகளை உடைய வேறு மருத்துவமனைக்கு மாற்றப் பரிந்துரை செய்தனர். ராவல் பிண்டி மருத்துவ மனைக்கு மலாலா மாற்றப் பட்டார். ஆனாலும் முன்னேற்றமில்லை. மலாலாவின் நிலைமை மோசாமாகிக் கொண்டே சென்றது.

      பாகஸ்தான் பிரதமர் கியானி பல்வேறு சுற்று ஆலோசனைக்குப் பின், மலாலாவை இலண்டன் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என்று முடிவு செய்தார். உடனடியாக மாலாவிற்கு பாஸ்போர்ட் தயாரானது.

     நண்பர்களே, இங்குதான் மிகப் பெரிய பிரச்சனை தலை தூக்கியது. மலாலாவை எவ்வாறு இலண்டனுக்கு கொண்டு செல்வது? மருத்துவமனை வசதியுடன் கூடிய விமானம் பாகிஸ்தானிடம் இல்லை. அமெரிக்கா உதவ முன் வந்தது. ஏற்றுக் கொள்ள பாகிஸ்தான் தயாராக இல்லை. காரணம் அமெரிக்காவின் உதவியை ஏற்றால், உள்நாட்டில் குழப்பம் கொந்தளிக்கத் தொடங்கிவிடும்.

     பிரிட்டீஸ் அரசு விமானம் வழங்க முன் வந்தது. ஆயினும், பாகிஸ்தான் அரசிடமிருந்து, முறையான வேண்டுகோளினை எதிர்பார்த்தது. பாகிஸ்தான் மசியவில்லை.

      நண்பர்களே, இக்கட்டான இந்நேரத்தில், ஐக்கிய அரபு நாடுகளின் மன்னர் குடும்பம், தங்களது சொந்த பயன்பாட்டிற்கான விமானத்தை, வழங்கி உதவ முன்வந்தது. நவீன மருத்துவமனையுடன் கூடிய சொகுசு ரதம் அது.

      மருத்துவர் ஃபியானோ அவர்களின் நேரடி மேற்பார்வையில், மலாலா, இலண்டன் எலிசபெத் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டார்.

     நண்பர்களே, சுடப்பட்ட ஏழு நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 16 ஆம் நாள், மலாலா கண் திறந்து பார்த்தார். முகம் முழுவதும் மருத்துவ உபகரணங்கள். பேச இயலா நிலை. மருத்துவர் ஃபியானோ ஒரு குறிப்பேட்டையும், பேனாவையும் தருகிறார். மலாலா எழுதினார்.

அப்பா எப்பொழுது வருவார்?
மருத்துவ மனைச் செலவிற்கு எங்களிடம் அதிக பணம் இல்லையே?
When will my father come?
We don’t have a lot of money

        நண்பர்களே, பார்த்தீர்களா? நினைவு திரும்பியதும் மலாலாவின் முதல் கவலையைப் பார்த்தீர்களா? பணம் இல்லையே, எப்படி தந்தை இவ்வளவு மருத்துவ மனைச் செலவினங்களையும் சமாளிப்பார் என்ற கவலை.
     சில நாட்களுக்குப் பின், மலாலாவைக் காண வந்த, பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, முழுச் செலவினங்களையும் பாகிஸ்தான் அரசு ஏற்கும் என அறிவித்தார். மலாலா நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.


     நண்பர்களே, மலாலாவிற்கு உலகெங்கினும் இருந்து வாழ்த்து அட்டைகள், நினைவுப் பரிசுகள், இனிப்புகள் என அன்பளிப்புகள் மலை, மலையாய் குவிந்தன.

     ஒரு அன்பளிப்பு, மறைந்த பெனாசிர் பூட்டோ அவர்களின் மகன்களிடமிருந்து வந்திருந்தது. உள்ளே இசுலாமியப் பெண்கள், தலைக்கு மேல் அணியும் இரு துப்பட்டாக்கள். பெனாசிர் பூட்டோ அணிந்த துப்பட்டாக்கள். மலாலா தன் முகத்தினை, துப்பட்டாக்களில் புதைத்து முகர்ந்து பார்க்கிறார். பெனாசிர் பூட்டோவின் வாசம் வீசுகிறது. ஒரு துப்பட்டாவில், ஒரு நீண்ட கருமை நிற தலை முடி.

     நண்பர்களே, ஐக்கிய நாடகள் சபையில், தனது 16 வது பிறந்த நாளில் மலாலா உரையாற்றினார். உலக நாடுகளின் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

எங்களைப் புத்தகத்தையும், பேனாவையும் எடுக்க விடுங்கள்.
அவைகளே எங்களது வலிமையான ஆயுதங்கள்.
Let us pick our books and pens.
They are our most powerful weapons.

     நண்பர்களே மலாலா விடுத்த வேண்டுகோளை, ஆற்றிய உரையைத் தொலைக் காட்சிப் பெட்டியில் பார்த்திருப்பீர்கள். செய்தித் தாட்களில் படித்திருப்பீர்கள்.

      நண்பர்களே, அன்று மலாலா அணிந்திருந்த உடை உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? பிங்க் நிற சல்வார் காமீஸ். வெள்ளை நிற துப்பட்டா. இந்தத் துப்பட்டா பெனாசிர் பூட்டோவின் துப்பட்டா.    

பதினாறு வயதே நிரம்பிய மலாலாவின் சாதனை பெரியது. அவரது போராட்டம் மகத்தானது. துப்பாக்கி ஏந்திய தலிபான்களுக்கு இடையில் நின்று, எழுது கோலை ஏந்தப் போராடியவர் அவர்.

     நண்பர்களே, மலாலா கூறுவதைக் கேளுங்கள்.

     தலிபான் தீவிரவாதியால் சுடப்பட்ட பெண் என நினைவு கூறப்படுவதை நான் விரும்பவில்லை. பெண்களின் கல்விக்காகப் போராடி வருபவர் என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறேன்.

I don’t want to be thought of,
as a girl who was shot by the Taliban,
but by the girl who fought for education.
This is the cause to which I want to devote my life.
மலாலாவைப் போற்றுவோமா நண்பர்களே,
மலாலாவின் கனவு நிறைவேற வாழ்த்துவோமா நண்பர்களே