27 டிசம்பர் 2013

பொன்னியின் செல்வன்

நிலமுள்ளளவும் நீருள்ளளவும்
கலை உள்ளளவும் நிறை பெற்றோங்கும்
இறை உறை கோயிலை எழுப்பிய மன்னன்
நிறைபுகழ் ஓங்க வாழ்த்துவம் இனிதே
-          பாவலர் பாலசுந்தரம்

     நண்பர்களே, நான் ஒரு ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். கடந்த பதிமூன்று வருடங்களாக, தினமும் பள்ளிக்குச் செல்லும் பொழுது, தஞ்சைப் பெரியக் கோயில் வழியாகத்தான் செல்கிறேன், வருகிறேன்.


    

தினமும் பெரியக் கோயிலைக் காணும் பொழுதெல்லாம் மனதில் மகிழ்ச்சி தோன்றும். காரணம் கல்கி. நமக்குப் பொன்னியின் செல்வனை அறிமுகப்படுத்தியவரல்லவா. பொன்னியின் செல்வனைப் பல முறை படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும், மேலும் மேலும், உள்ளத்தில் இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டேயிருக்கும் அட்சய பாத்திரம்தான் பொன்னியின் செல்வன்.

     நண்பர்களே, பெரியக் கோயில் வளாகத்தில், காற்று வாங்கிக் கொண்டே நடக்கும் பொழுது, ராஜராஜனும் உடன் வருவதைப் போன்ற ஓர் உணர்வு நமக்கு ஏற்படும். நிச்சயம் நீங்களும் இந்த உணர்வினை அனுபவித்திருப்பீர்கள். இதுவரைத் தஞ்சைப் பெரிய கோயிலுக்கு வந்ததில்லையாயின், கட்டாயம் ஒரு முறை வாருங்கள், தங்களை வரவேற்றுப் பெரியக் கோயிலுக்கு அழைத்துச் செல்லக் காத்திருக்கிறேன்.

     கடந்த பல ஆண்டுகளாகவே, உள்ளத்தில் ஓர் ஆசை. இராஜராஜ சோழன் மீளாத் துயில் கொள்ளும், புனித இடத்தினை ஒரு முறையேனும் காண வேண்டும் என்ற ஓர் ஆசை. இவ்வளவிற்கும் அவ்விடம், எனது வீட்டிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவுதான்.

     நண்பர்களே, கடந்த 14.12.2013 சனிக் கிழமை இரவு, முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் அலைபேசியில் அழைத்தார். இவரை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

சோழ நாட்டில் பௌத்தம்
http://drbjambulingam.blogspot.in
முனைவர் ஜம்புலிங்கம் பக்கங்கள்
http://ponnibuddha.blogspot.in

என இரு வலைப் பூக்களை நடத்தி வருபவர். களப்பணி நாயகர். சோழ நாடெங்கிலும், பௌத்தத்தின் அடிச்சுவட்டைத் தேடி அலைந்து, இதுவரை உலகு அறிந்திராத புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்து, உலகிற்கு அறிவித்து வருபவர்.

     கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் உயரிய நட்பினைப் பெற்றவன் நான். எனக்கு வலைப் பூவினை அறிமுகம் செய்தவரே இவர்தான். எனது வலை உலக குருநாதர் இவர்.

     நாளை காலை உடையாளூருக்குச் சென்று வருவோமா? என்றார்.

     இதைவிட வேறு என்ன வேலை எனக்கு இருக்கப் போகிறது.

     வருகிறேன் என்றேன்.

     நண்பர்களே, 15.12.2013 ஞாயிற்றுக் கிழமை காலை 7.30 மணியளவில், இரு சக்கர வாகனத்தில் இருவரும் புறப்பட்டோம்.

    


சோழ தேசத்தின் மேன்மையினையும், தமிழரின் நாகரிகத்தினையும் உலகிற்கு உணர்த்தியவர் இராஜராஜன். தஞ்சைப் பெரிய கோயிலை வானுயரக் கட்டி எழுப்பி, சிவபாத சேகரனாய் உயர்ந்தவர் இராஜராஜ சோழன்.

நாம் எடுப்பிச்ச திருக் கற்றளி
ஸ்ரீ இராஜ ராஜீசுரமுடையார்க்கு
நாங் குடத்தநவும் அக்கன்
குடுத்தநவும் நம் பெண்டுகள்
குடுத்தநவும் கொடுப்பார்
கொடத்தநவும்
என்று பெரியக் கோயில் கல்வெட்டுகளில் செதுக்க உத்தரவிட்டதோடு, கோயிலின் பராமரிப்பிற்காக, யார் யார் என்னென்ன கொடுக்கிறார்களோ, அத்தனை பேர்களுடைய பெயரும் இங்கே வரவேண்டும். ஒருவர் மீதமில்லாது, ஒருவரையும் புறக்கணிக்காது, அவர் எவராக இருப்பினும், அவர் கொடுத்த கொடை எவ்வளவு சிறியதாக இருப்பினும், அதுவும் கல்லிலே பொறிக்கப்படவேண்டும் என்றும் ஆணையிட்டுச் செயல்படுத்தியவர் இராஜராஜன்.

     தஞ்சைப் பெரியக் கோயிலின் திருப்பணி நிறைவுற்றவுடன், தனது அருமைப் புதல்வன் இராஜேந்திரனை அரசனாய், அரியணையில் அமரச் செய்துவிட்டு, அமைதியாய், குடந்தையின் அருகே உள்ள உடையாளூரில், ஓய்வெடுத்து, இறைவனோடு ஒன்றெனக் கலந்தவர் இராஜராஜன்.

     உடையாளூரில் நுழைந்தோம். சிறு கிராமம் ஒரு குறுகிய சந்தின் முனையில், ஓர் அறிவிப்புப் பலகை. அச்சந்தில் திரும்பினோம்.

     நண்பர்களே, ஆறு அடி அகலம் கூட இல்லாத குறுகிய சந்து அது. மண் தரை. சந்தின் இரு புறமும், மூங்கில் மர முட்களைக் கொண்ட முள் வேலிகள்.

இராசராசன் சமாதியின் இன்றைய நிலை
    
சிறிது தூரம் சென்றதும், இடது புறம் ஒரு சிறிய குடில், கீற்று வேய்ந்த சிறு குடிசை. குடிசையின் பின்புறம், சாய்ந்த நிலையில், மண்ணோடு மண்ணாக ஒரு லிங்கம். மேற்புறம் ஒரு சிறிய கீற்று வேய்ந்த, பழுதடைந்த சிறு பந்தல்.

     நண்பர்களே, இதுதான், இதுதான் நண்பர்களே, தரணியாண்ட மாமன்னன் இராஜராஜ சோழனின் சமாதி. மனம் கூனிக் குறுகித்தான் போனது. உலக வரலாற்றில், தமிழனுக்கு ஓர் உயரிய இடத்தைப் பெற்றுத் தந்த மாமன்னன் இராஜராஜனின் அஸ்திக் கலசம் துயில் கொள்ளும் இடம் இப்படியா இருக்க வேண்டும். இப்படியா பராமரிக்கப்பட வேண்டும். வாழைத் தோப்பிற்கு இடையில், வெட்ட வெளியில் அல்லவா இராஜராஜன் உறங்குகிறார்.

    
பக்கிரிசாமி அவர்களுடன்

பக்கிரிசாமி என்பவர் இவ்விடத்தைப் பராமரித்து வருகிறார். கடந்த பத்தாண்டுகளுக்கும்மேல், இராஜராஜன் மீளாத் துயில் கொள்ளும், இச்சமாதியினைப் பராமரித்து வருகிறேன். வருமானத்திற்கு வழியில்லை. இராஜராஜனின் சமாதியினைப் பார்க்க வருகிறவர்கள் வழங்கும், சிறு சிறு தொகைகளைக் கொண்டு, சூடம் ஏற்றி வழிபாடு செய்து வருகிறேன் என்றார்.

     மாமன்னா, இராஜராஜா, நீ எழுப்பியக் கற்றளிக்குக் காணிக்கையாய், ஒரு சிறிய ஆட்டுக் குட்டியை அன்பளிப்பாய் வழங்கியவரின் பெயரைக் கூட, கல்வெட்டில் பொறித்து மகிழ்ந்தவன் நீ. ஆனால் உனது தற்போதைய இருப்பிடமோ வெட்ட வெளி. உனக்கொரு கட்டிடம் கட்டவோ, மணி மண்டபம் எழுப்பவோ, யாருமில்லையே இராஜராஜா. என்ன உலகு இது.

     நண்பர்களே, இராஜராஜனின் சமாதி குறித்த இருவேறு கருத்துக்கள் தமிழறிஞர்களிடையே நிலவி வருகிறது. இதுதான் இராஜராஜனின் அஸ்திக் கலசத்தைத் தாங்கிய சமாதி என்று கூறுவாரும் உள்ளனர், மறுப்பாரும் உள்ளனர். ஆனால் இராஜராஜன் தன் இறுதி நாட்களைச் செலவிட்ட இடம் உடையாளூர்தான் என்பதில் யாருக்கும் ஐயமுமில்லை, இருவேறு கருத்துமில்லை.

      எனவே இவ்வூரில், இவ்விடத்தில் இராஜராஜனுக்கு மணி மண்டபம் எழுப்பப் பெற வேண்டும் என்பதை அனைவரின் விருப்பமாகும்.

     உடையாளூரில் இருந்து புறப்பட்டு, பழையாறை சென்றோம். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகராய் விளங்கிய இடம் பழையாறை.

தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை
என்று பாடுவார் சேக்கிழார்.

     அரசலாற்றுக்குத் தென் கரையில் நின்று, அந்த நகரைப் பார்ப்போம். அட்டா வெறும் நகரமா இது? தமிழ்த் தாயின் அழகிய நெற்றியில் தொங்கும் ஆபரணத்தைப் போல அல்லவா விளங்குகிறது.

     விண் முட்டும் மணி மாட மாளிகைகளின் பொற்கலசங்களும், கோயில் கோபுரங்களின் உச்சியில் உள்ள தங்க ஸ்தூபிகளும் ஒளி வீசுகின்றன.

     பழையாறையின் நாலு திசைகளிலும் வடதளி, கீழ்த் தளி, மேற்றளி, தென்தளி என்னும் நான்கு சிவனார் கோயில்கள் இருக்கின்றன. போர் வீரர்கள் குடியிருக்கும் ஆரியப் படை வீடு, புதுப் படை வீடு, மணப் படை வீடு, பம்மைப் படை வீடு ஆகிய நான்கு வீர புரிகள் காணப்படுகின்றன.

    இவ்வளவுக்கும் நடுநாயகமாகச் சோழ மாளிகை என்றால், ஒரே மாளிகையா? விஜயாலய சோழருக்கு முன்னால் இது ஒரு தனி மாளிகையாக இருந்தது. பிறகு ஒவ்வொரு அரச குமாரனுக்கும், ஒவ்வொரு மகாராணிக்கும், ஒவ்வொரு இளவரசிக்குமாகப், பழைய சோழ மாளிகையையொட்டிப் புதிய புதிய மாளிகைகள் எழுந்து நிற்கும் காட்சியைக் காண்பதற்கு ஆயிரம் கண்கள் வேண்டும். வர்ணிப்பதற்கோ பதினாயிரம் கவிஞர்களின் கற்பனா சக்தி போதாது.

     நண்பர்களே, பறையாறை பற்றிய, கல்கியின் வர்ணனைகள்தான் மேலே நீங்கள் கண்டது. ஆனால் நண்பர்களே, பழையாறையில் இன்று எஞ்சி நிற்பது சோமநாத சுவாமி திருக்கோயில் ஒன்று மட்டும்தான்.

    
பழையாறை கோயியின் முன்புறம்

மற்ற மாட மாளிகைகளும், கோபுரங்களும் காற்றில் கரைந்து விட்டன. சோழர் காலத்திற்குப் பிறகு நடைபெற்ற, படையெடுப்புகளில், மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டன.

     பழையாறைக் கோயிலின் நுழைவு வாயிலின் கோபுரமே, இக்கோயிலின் பழமையினை மட்டுமல்ல, நமது அலட்சியத்தையும், அறியாமையினையும் பறைசாற்றுகிறது. முகப்பு கோபுரத்தின் உச்சியில், பெருந் தோட்டமே உருவாகியுள்ளது. உச்சி முழுவதும் செடிகள், கொடிகள்.

     நண்பர்களே, கோயிலின் உள்ளே நுழைந்தோம். மண் மேடுகளே எங்களை வரவேற்றன.

     கண்ணைக் கவரும் சிற்பங்கள் இருந்தும், குப்பை மேடாய் காட்சி தருகிறது கோயில். கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்தோம். வருத்தம் மட்டுமே மிஞ்சியது.
    


பழையாறைக் கோயியிலின் உட்புறக் காட்சிகள்

பழையாறையில் இருந்து புறப்பட்டு பட்டீசுவரம் வந்தோம். பட்டீசுவரத்தில் இருந்து, சுந்தர பெருமாள் கோயில் செல்லும் வழியில் இருக்கிறது பஞ்சவன் மாதேவீஸ்வரம்.

     நண்பர்களே, இராஜராஜ சோழனின் மனைவியர்களில் ஒருவர்தான் பஞ்சவன் மாதேவி. இராஜராஜ சோழனுக்குப் பிறகு, மண்ணுலக வாழ்வு துறந்து, விண்ணுலகில் இராஜராஜனுடன் மீண்டும் இணைந்தவர்.

     வாழைத் தோப்புகளுக்கு இடையில் இக்கோயில் அமைந்துள்ளது. நாங்கள் சென்றபொழுது கோயில் பூட்டியிருந்தது. அருகில் விசாரித்தோம். ஒரு வீட்டை கை காட்டினர். கோபாலன் என்பவர்தான் இக்கோயிலைப் பராமரித்து வருகிறார். எங்களைக் கண்டவுடன், சாவியை எடுத்துக் கொண்டு வந்தார்.  நான் இக் கோயிலைக் கடந்த முப்பது வருடங்களாகப் பராமரித்து வருகிறேன். வருமானம் எதுவும் கிடையாது. தினமும் கோயில் முழுவதும் கூட்டி, சுத்தம் செய்து, தீபமேற்றி வருகிறேன் என்று கூறியவாறு, கோயிலைத் திறந்து விட்டார். உள்ளே நுழைந்தோம்.

    
பஞ்சவன் மாதேவீஸ்வரம்


நண்பர்களே, இராஜராஜ சோழனுக்கோ, இராஜராஜனின் பட்ட மகிஷிக்கோ, இராஜேந்திரச் சோழனைப் பெற்றெடுத்த வானதிக்கோ பள்ளிப் படை கோயில்கள் இல்லை. ஆனால் பஞ்சவன் மாதேவியின் பள்ளிப் படை கோயில் இது. அதுவும், ராஜராஜ சோழனின் மகன், இராஜேந்திரச் சோழனால் கட்டப் பெற்ற பள்ளிப்படை கோயில் இது.

     இராஜேந்திர சோழன், தன் தந்தையினுடைய அனுக்கிக்கு கோயில் எழுப்பியிருக்கிற செயலை எண்ணும் பொழுது, பஞ்சவன் மாதேவி அற்புதமானப் பெண்மணியாய் இருந்திருக்க வேண்டும் என்பது புரிகிறது.

     நண்பர்களே,  கோயிலைச் சுற்றி வந்தோம். கருவறையின் இடது புறமுள்ள பிரகாரத்தில் நடந்து வந்த பொழுது, ஓரிடத்தை, கோயில் பராமரிப்பாளர் கோபாலன் சுட்டிக் காட்டினார்.

     இந்த இடத்தில் ஒரு மேடு இருந்தது. ஒரு கட்டிடத்தின் அடிப்பகுதி. இது இராஜராஜ சோழனின் தங்கை குந்தவி தேவியின் சமாதி என்றே அக்காலத்தில், பலரும் கூறுவார்கள். ஆனால் இப்பகுதி சில வருடங்களுக்கு முன் அகற்றப்பட்டு விட்டது என்றார்.

   

குந்தவை தேவியின் சமாதி இருந்த இடத்தினைச் சுட்டிக்காட்டும்
கோவில் பராமரிப்பாளர் திரு கோபாலன்
நண்பர்களே, கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்தவர்களால், குந்தவை தேவியை, தங்கள் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இராஜராஜ சோழனை வளர்த்து ஆளாக்கியவர். இராஜராஜ சோழனின் வழிகாட்டி. இராஜராஜ சோழனின் அன்புத் தமைக்கை.

    
கோயில் பராமரிப்பாளர் திரு கோபாலனுடன்
 
குந்தவையின் சமாதி இங்கிருந்தது, இது உண்மையா? அல்லவா எனத் தெரியாது. ஆயினும் இங்கிருந்த ஒரு கட்டிடத்தின் அடித்தளம் அகற்றப்பட்டுள்ளது. இவ்விடத்தை அகற்றாமல் புதுப்பித்திருக்கலாம் அல்லவா?

     எதிர்காலத்தில், ஏதேனும் ஒரு ஆவணத்தின் மூலமாக, குந்தவையின் சமாதி இருந்த இடம் இதுதான் என்று உறுதியானால், அப்பொழுது என்ன செய்ய இயலும்? பழமையைப் பாதுகாக்கப் தவறிவிட்டோமே.

      நண்பர்களே, தஞ்சையில் இருந்து முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களும், நானும் மகிழ்ச்சியாகத்தான் புறப்பட்டோம். ஆனால் பயணம் மகிழ்ச்சியானதாக அமையவில்லை. போற்றப்படாத இராஜராஜன் சமாதி, பராமரிக்கப் படாத பழையாறை கோயில், புதுப்பித்தல் என்னும் பெயரில் அகற்றப்பட்ட குந்தவி தேவியின் சமாதி இவைகள் யாவும், உள்ளத்தில் சொல்லொன்னா வேதனையினையே உருகாக்கின.

     நண்பர்களே, இந்தத் தமிழ்த் தேசத்தின் பல்வேறு சாபங்களில் இதுவும் ஒன்று. நம் பழம் பெருமைகளை, போற்றிப் பாதுகாக்காதது. போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது.

     தமிழ் மொழியின் தொன்மை, மக்களுக்குத் தெரியாமல் போனது போல, தமிழர் நாகரிகத்தினுடைய தொன்மையும், அதன் மிச்சங்களும் காலவோட்டத்தில் கரைந்து கொண்டேயிருக்கின்றன.

     ஒரு நாள் நாமெல்லாம், அலட்சியம், அறியாமை என்னும் உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்து பார்க்கும் பொழுது, நாம் நமது அடையாளத்தை, தமிழன் என்னும் உன்னத முகவரியினை, இழந்த அனாதைகளாய், வரலாற்றின் பக்கங்களில் இருந்து கிழிக்கப்பட்டு, மறைந்து போவோம் என்பது மட்டும் உறுதி.

உதாவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா

என்று நம் உறக்கம் கலைக்க அன்றே எழுப்பிப் பார்த்தவர்தான் பாரதிதாசன். ஆனால் நாம் என்று விழிக்கப் போகிறோம் என்பதுதான் தெரியவில்லை.


125 கருத்துகள்:

 1. விரிவான அருமையான தேவையான பதிவு.தமிழன் தமிழனை. பாராட்டாததன் விளைவே .தமிழனின் அருமையை உலகு இன்னும் முழுமையாக அறியாததன் காரணம்.அறியாத விவரங்களைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள் .சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாகச் சொன்னீர்கள் சகோதரியாரே.
   தமிழனின் பெருமையினை தமிழனே இன்னும் சரியாக உணரவில்லை
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

   நீக்கு
 2. அருமையான பதிவு ஐயா! தங்களைப் போல் தமிழாசிரியர்கள் முயன்று உழைத்தால் தமிழ்நாட்டின் உண்மை வரலாறு உலகிற்குத் தெரியவரும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. உனக்கொரு கட்டிடம் கட்டவோ, மணி மண்டபம் எழுப்பவோ, யாருமில்லையே இராஜராஜா. என்ன உலகு இது.///உங்களின் உண்மையான ஆதங்கம் புரிகிறது.அரசுக்கு தெரிந்து ஆவன செய்தால் வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் புண்ணியம் சேர்க்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு வருடமும் இராஜராஜனின் பிறந்த நாளினை சதய விழாவாக பெருமையுடன் கொண்டாடுகிறார்கள். ஓராண்டு சதய விழாவிற்கு செலவிடப்படும் தொகையினைக் கொண்டே பெரிய மணி மண்டபம் கட்டியிருக்கலாம்,
   வருகைக்கு நன்றி ஐயா

   நீக்கு
 4. மாமன்னன் ராஜராஜ சோழன் மீளாத்துயில் கொள்ளும் தலத்தினைப் பற்றிய - சிறப்பான தகவல்கள்.
  ஆயினும் நமது இயலாமை அறியாமை - இவற்றை எண்ணி வெட்கம் வருகின்றது. மாமன்னனின் ஆன்மா நம்மை மன்னித்து அருள்வதாக..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாமன்னனின் ஆத்மா நிச்சயம் நம்மை மன்னிக்கும்.
   ஆனால் வருங்கால சமூதாயம் நம்மை மன்னிக்காது
   நன்றி ஐயா

   நீக்கு
 5. அய்யகோ....தமிழர்யாம் என் பிழை செய்தோம். 'விண் தொடும் விமானம் கண்ட' எம் பேரரசன் எங்கோ ஒரு மூலையில் துயில் கொள்கிறான் என்கின்ற போது, கண்ணில் நீர் தாரையிட்டு கண்ணம் வழிந்தோடி கணிணியில் தெரிக்கிறது.

  தமிழர் இருக்க தமிழன் வரலாறு அழிந்ததே என்று மனம் வேதனைக் கொள்கிறது. ஆம், தமிழர் என்ற பொதுமை இனம், ஒற்றுமையின்மை என்ற சகதியில் அகப்பட்டுக் கொண்ட பிறகு, நமது அழிவை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

  வந்தேரிகள் நம் வரலாற்றை எழுத, மிச்ச சொச்சத்தை நமது அறியாமை தின்று தீர்த்துவிட்டது. இனியும் வாளாவியிருக்காமல் விடுபட்டதை நாம் 'சிர'மேற்கொள்வோம்!.

  அய்யா, உங்கள் வழி என் வழி.

  நாம் தொடர்வோம்!.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாதும் ஊரே யாவரும் கேளிர்
   என்று கூறிக் கூறி
   வந்தவரை எல்லாம் வாழவைத்து
   நாமும் வாழ வேண்டும் என்பதையே மறந்து விட்டோம்
   தலை நிமிர்ந்து நின்ற தமிழரினத்தில்
   பெண்கள் திரைப்படத்திற்கும், தொலைக் காட்சித் தொடருக்கும் அடிமையாகிக் கிடக்கிறனர்,
   அண்களோ போதைக்கு அடிமையாய் கிடக்கின்றனர்.
   போதையில் இருந்து விழித்தெழும்போது அனாதைகளாய் கிடப்போம்.
   வருகைக்கு நன்றி ஐயா

   நீக்கு
 6. பெயரில்லா27 டிசம்பர், 2013

  உற்சாகமுடன் உங்களுடன் பயணித்த நான்
  தளர்ந்து போனது உண்மை தான் .
  நெஞ்சம் ஆதங்கத்தில் கனக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் நெஞ்சம் கனத்துத்தான் போனது.
   வருகைக்கு நன்றி சகோதரியாரே

   நீக்கு
 7. can any one take lead to reconstruct these precious historic places.please spread these message among our Tamil peoples around the world through Facebook.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முகப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளேன் நண்பரே.
   ஸ்ரீவில்லிப் புத்தூர் திரு ரெத்னவேல் நடராசன் அவர்களும் இக்கட்டுரையினை, தனது முகப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.
   வருகைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 8. ராஜராஜ சோழன் எங்கள் சாதிக் காரர் என்று சொந்தம் கொண்டாடுபவர்கள் கூட கண்டுகொள்ளாதது வருத்தத்திற்கு உரியதே !
  த.ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே.
   நமக்கு கோயில் தேவை
   கோயிலை எழுப்பியவர் தேவையில்லை
   உண்மைக் காரணம் என்ன தெரியுமா நண்பரே
   தமிழர்களின் பகுத்தறிவு
   பெரியக் கோயிலிலோ, இராசராசன் சமாதியிலோ புணரமைப்பு செய்தால், செய்பவர்களின் அரசியல் வாழ்வு அஸ்தமிக்கும் என்ற பகுத்தறிவுதான்இதற்குக் காரணம்
   வாழ்க பகுத்தறிவு

   நீக்கு
 9. ஆதங்கங்கள் நிறைந்த அருமையான பதிவு.

  நவீன தொழில்நுட்ப வல்லுனர்களுக்கே இன்றும் வியப்பளித்து ஆச்சர்யமாகத் திகழும் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் அவர்களின் நினைவிடத்திற்கே இந்த கதி என்றால் ....... நினைக்க மிகவும் வேதனையாகத்தான் உள்ளது. ;(

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா வேதனையாகத்தான் உள்ளது
   வருகைக்கு நன்றி ஐயா

   நீக்கு
 10. என்ன செய்ய தோழரே ! தென் தமிழ்கத்தில் உள்ள புத்த,சமண கோயில்களையும் வரலாற்று சான்றுகளையும் வெடிவைத்து தகர்த்து ஜப்பனுக்கும் மற்ற நாடுகளுக்கும் எற்றுமதி செய்பவர்கள் பிடியில் நமது வரலாறு சிக்கிச்சீரழிகிறது ! ராஜராஜனின் ஆயிரமாவது விழாவை நடத்துவார்கள் ! அவனைப்பற்றிய வரலாற்றைப் புதைத்து விட்டு !---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா. சமாதியினைப் புறக்கணித்து விட்டு
   கோயிலுக்கு விழா எடுக்கிறார்கள்.
   வருகைக்கு நன்றி ஐயா

   நீக்கு
 11. நல்ல பதிவு. படிக்கப் படிக்க வேதனை. பார்த்து வந்தவர் வேதனை புரிகிறது.

  பதிலளிநீக்கு
 12. பெயரில்லா28 டிசம்பர், 2013

  வணக்கம்
  ஐயா.

  அறியமுடியாத வரலாற்றுக் குறிப்புக்கள் இராஜராஜ சோழன்.பற்றி அவனுடைய மகன் பற்றி குந்தவை பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள். தங்களைப்போன்றவர்கள் மூலம் தமிழ் தமிழ்மண்ணின் பெருமை பலருக்கு எடுத்துரைக்கப்டுகிறது என்பது புலனாகிறது.மேலும் தொடர
  வாழ்த்துக்கள் ஐயா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 13. உங்கள் ஆதங்கம் புரிகிறது ஐயா... இனி மேலாவது பழமையைப் பாதுகாக்க வேண்டும்... அறியாத பல சிறப்பு தகவல்களுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா இனிமேலாவது பழமை பாதுகாக்கப்பட்டால்
   இருப்பதாவது மிஞ்சும்
   வருகைக்கு நன்றி ஐயா

   நீக்கு
 14. உணர்வு பூர்வமான அதிர்வு.வரலாற்று நாயகர்களின் பெருமைகளை பேசும் நாம் அவர்கள் வாழ்ந்த ஆதாரங்களை பராமரிக்காதது வேதனை. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் போனியின் செல்வன் தான் அதிகமாக விற்கப் படுகிறது.அதில் கிடைக்கும் லாபத்தில் ஒருபங்கை எடுத்து ராஜாராஜன் சமாதியை முறையாக பராமரிக்க லாம். அரசும் நடவடிக்கை எடுத்தால் மாவீரனை போற்றிய பெருமை கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா
   அரசு நடவடிக்கை எடுத்தால் ஒரு மாவீரனைப் போற்றிய பெருமை கிடைக்கும்
   வரலாறும் காப்பாற்றப்படும்
   வருகைக்கு நன்றி ஐயா

   நீக்கு
 15. அழுத்தம் தெறிக்கும் பதிவு/நன்றி வணக்கம்.பழையவைகள் போற்றப்பட கலைகள் பாராட்டப்பட,பண்பாடுகள் காக்கப்பட தனி மனம் தேவைப்படுகிறது.அவைகளை சீரழிக்க இங்கே திட்டமிட்டு நாசவேலை நடைபெறுகிறதுதான்.நன்றி,வணக்கம்/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமது பண்பாடுகள் அழிந்து கொண்டாதான் இருக்கின்றன.
   என்று இந்நிலை மாறுமோ
   வருகைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 16. நான் தஞ்சை மாவட்டம் என்பதால் நேர சென்று பயணித்த மாதிரி ஒரு உணர்வு உண்டாகிறது

  பதிலளிநீக்கு
 17. போற்றப்படாத இராஜராஜன் சமாதி, பராமரிக்கப் படாத பழையாறை கோயில், புதுப்பித்தல் என்னும் பெயரில் அகற்றப்பட்ட குந்தவி தேவியின் சமாதி இவைகள் யாவும், உள்ளத்தில் சொல்லொன்னா வேதனையினையே உருகாக்கின.

  உண்மை நிலையை உரக்க
  உலகுக்கு உரைத்த பகிர்வுகள்..!

  பதிலளிநீக்கு
 18. வணக்கம்
  மீண்டும் கடந்த கால வரலாற்றை ஞாபகமுட்டி உணர்ச்சிவயபட வைத்துவிட்டிர்கள்.

  ஞாபகம் இருக்கிறதா ஆசிரியரே சரியாக இரண்டு வருடங்களுக்கு முன் 15, 2012 இதழில் மறதியே உன் தாய்மொழி தமிழா என உணர்ச்சி பொங்க இதே வலை தளத்தில் ஓர் அருமையான கட்டுரை வெளியிட்டிருந்தீர்கள்.

  1886 ம் ஆண்டு ஒரு ஜெர்மானிய அறிஞர் ஹூல்ஸ் என்பவரால் இராஜராஜேஸ்வரத்தை கட்டிவித்த பெருமகன் இராஜராஜ சோழன் என்று அறிவித்தார். வெளிநாட்டுக்காரர் சொல்லி நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறதே என ஆதங்கப்பட்டு கூறினீர்கள். எனக்கு ஆச்சரியம் இல்லை ஏனெனில் இன்றைய தமிழன் இப்படித்தான் ( இன்றைய என்பதன் காலம் கி.பி. 1700 முதல் கி.பி. 2300 வரை) இருப்பான். தமிழிண உணர்வு, கலை, பண்பாடு, மனித நேயம் இந்த பண்புகள் தோன்ற, தமிழனுக்கு மிளிர இன்னும் 286 வருடங்கள் காத்திருக்க வேண்டு்ம் இது என் உள்ளுணர்வால் கண்டு கொண்ட ஒன்று.

  தாங்கள் பெரிய கோவிலின் மீது கொண்டிருக்கும் ஆசையும், ஈர்ப்பும், பிரியமும் மெச்ச தகுந்தது. கலை பித்து கொண்ட எவருமே அதன் மேல் காதல் கொள்ளாமல் இருக்க முடியாது. சொல்லப்போனால் அது கள்ளுக்கடை ஆளை அமுக்கி போதை கொடுத்து மனிதனை தள்ளாட வைத்து வேடிக்கை பார்க்கும் கலை கோயில்.
  எப்படி நீங்கள் உங்கள் வீ்ட்டிலிருந்து கரந்தை பள்ளிக்கு வரும் போது பெரிய கோவிலை பார்த்து மெய்சிலிப்பிர்களோ அதே போல் நானும் கரந்தையில் இருந்து சரபோஜி கல்லூரிக்கு செல்லும் போது இராஜராஜன் சிலையையும், கோவிலையும் கண்டு சைக்கிளை விட்டு இறங்கி மானசீகமாக வணக்கம் தெரிவி்த்து விட்டுத்தான் போவேன்.
  சில வேளைகளில்(1989-1993) கோவிலுக்கு சென்று தொகுதி வாரியாக உள்ள கல்வெட்டுகளை படிப்பேன் ( 1000 ம் ஆண்டு முன் இருந்த தமிழை தினமலர் ஆசிரியர் அறிஞர் இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உதவியால் படிக்க நேர்ந்தது. இப்போது எனக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, தேவநாகரி, பெங்காலி போன்ற மொழிகளை படிப்பேன், எழுதுவேன்.) கலை பொக்கி்ஷங்கலான சிலைகளை கண்டு கண்ணீர் வடிப்பேன். எப்படியடா செய்திருக்கிறாய். எதை கொண்டு செய்தாய் என ஆச்சர்யபட்டு போவேன்.
  இன்னும் சொல்லப்போனால் பெரிய கோவிலும் இராஜராஜனும்தான் இந்த சரவணனை உயரத்தில் வைத்து உள்ளவர்கள்.தாங்கள் இந்த கட்டுரைக்காக வெகு ௃வாக உழைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
  எப்படியாபட்ட பூமி நம் தஞ்சை என்பதை நேரில் கண்டு பூரி்த்து போய் உள்ளீர்கள். நீங்கள் ஒரு முறை கல்லணையில் இருந்து புறப்பட்டு கும்பகோணம் வரை செல்லுங்கள். மீண்டும் கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் வரை காவேரி கரை ஒட்டியே சென்று வாருங்கள் இந்தியாவில் இப்படி ௃ஒரு பூமி எங்குமே இல்லை.
  பழையாறையில் சோமநாத சுவாமி திருகோயில் தவிர
  மற்ற மாட மாளிகைகளும், கோபுரங்களும் காற்றில் கரைந்து விட்டன இப்போதும் மொட்டையாக நிற்கிறது எத்தனை அரசாங்கம் வருகிறது போகிறது.

  அவ்வளவு ஏன் தஞ்சை எல்லையம்மன்(வடக்குவீதி பீட்டர்ஸ் ஸ்கூல் எதிர் தெரு) கோவில் நிலை எப்படி இருக்கிறது சென்று பாருங்கள.

  மேலவீதி அய்யன் குளம் நிலை எப்படி உள்ளது சென்று பாருங்கள்.

  எந்த சாமி புண்ணியமோ 1992 வரை கேட்பாரற்று இருந்த கரந்தை கருணாஸ்வாமி கோயில் குடமுழுக்கு நடை பெற்று இப்போது மக்கள் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள்.

  தமிழ்நாட்டில் பல திருக்கோயில் சிதிலைந்துதான் போய் உள்ளன. இந்த நிலை மாற உங்களைப் போன்றோர் பேப்பரில், வலைதளங்களிலும் எழுதி நம் கலையை வளர்த்தெடுக்க வேண்டும்.

  நீங்கள் ஆற்றி வரும் சேவையும் ஒரு தொண்டுதான்.

  மக்கள் விழிபடைந்து கலையின் உன்னதத்தை உணர்வர்.

  தொடரட்டும் உங்கள் பணி
  அனைவருக்கும் "இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!"
  நன்றி
  வணக்கம்

  இப்படிக்கு

  இரா. சரவணன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக நீண்டதொரு கருத்துரை
   உள்ளத்தில் உள்ள ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளீர்கள்
   எத்தனை அரசாங்கம் வருகிறது போகிறது
   யாருமே கண்டுகொள்ளவில்லையே என்ற ஆதங்கம்தான்
   மிஞ்சுகிறது.
   நமது வரலாற்றினை நம்மையறியாமல்
   நாமே தொலைத்துக்கொண்டிருக்கிறோம்

   தாங்கள் கூறிய பாதையில் பயணம் மேற்கொள்ள முயற்சிக்கின்றேன் நண்பரே
   ஒரு இனிமையான பயணமாய் நிச்சயம் அது அமையும்
   வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி நண்பரே

   நீக்கு
  2. வணக்கம்

   1.) பெரிய கோவிலில் நடந்தால் இராஜராஜன் நம்முடன் வருவதாக உணர்வீர்கள் என்ற கூற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன். உணர்ந்தும் இருக்கிறேன்.

   2.) கல்லணை டூ பும்பூகார் பயணம் செல்ல தீர்மானித்தால் ( வரும் கோடை விடுமுறையில் வைத்துக்கொள்ளவும்.) நான் மும்பையில் இருந்து வந்து கலந்து கொள்கிறேன்.

   3.) கல்லணையில் இருந்து புறப்பட்டு திருவையாறு, கணபதி அக்ரஹாரம் வரை நடந்தே சென்று இரசித்துள்ளேன்.

   4.) பழையாறை, உடையாளுர் கண்டிருக்கிறேன்.
   பஞ்சவன் மாதேவீச்சுரம் கண்ட பிறகு, அருகிலேயே குடமுருட்டி ஆறு ( 60 மீட்டர் தாண்டி) முடிகொண்டான் ஆறு ( 110 மீட்டர் தாண்டி) திருமலைராசன் ஆறு ( 1 1 2 கிலோ மீட்டர் தொலைவில்) அரசலாறு ( வெறும் 40 மீட்டர் தாண்டி நடந்தால்) காவேரி ஆறு.

   5.) பஞ்சவன் மாதேவீச்சுரம் ஸ்தலத்திலிருந்து நேர் கோடு போட்டால் போல் சென்றால், இந்த ஆறுகளின் எழிலை இரசித்து கொண்டே வாழை, தென்னை, மா, பலா, கரும்பு, நெல், ரோஜா, மல்லிகை தோட்டங்களையும் கண்டு மகிழலாம்.

   ஆகவேதான் இந்தியாவில் இப்படி ஓர் பூமி இல்லை என்று எழுதினேன்.

   ஐயா, நான் இந்தியாவை மூன்று முறை வலம் வந்துள்ளேன். என் கால்பதியாத மாநிலமே இல்லை.

   பஞ்சாபில் ஐந்து நதிகள் ஓடுகின்றன. ஆனால் வெறும் கோதுமையும், பாசுமதி அரிசியும்தான் பயிர் செய்கிறார்கள். ரோஜாவும், வாழையும், தென்னையும் மாநிலம் முழுதும் தேடி பார்த்தேன். காணவில்லை.

   ஆராய்ச்சிக்காக மொழிகள் பற்றியும், இந்திய மண், இந்தியமனங்களையும் ஆய்ந்து வருகிறேன். லீவ் கிடைத்தால் பேக்கை தூக்கிக்கொண்டு பித்தன் போல் ஊர் சுற்ற கிளம்பி விடுகின்றேன். அறிவுத்தேடலில் இந்தியாவின் உண்மையான முகத்தைப்பார்த்து திகைத்துப்போய் உள்ளேன்.

   வாழ்க வையகம்

   இப்படிக்கு

   இரா. சரவணன்

   நீக்கு
  3. கோடை விடுமுறையில் தஞ்சை வரும் பொழுது, தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே

   நீக்கு
 19. பெயரில்லா28 டிசம்பர், 2013

  உண்மையை இடித்துக் கூறும் இப்பதிவை அரசுக்கு அனுப்பி வைக்கலாம்.
  ஓரு வேளை கண்திறந்து கொள்ளலாம்.
  தேவையான கருத்து. இறையாசி நிறையட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 20. நாம் இருவரும் சோழ நாட்டில் மேற்கொண்ட ஓர் அரிய பயணத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டமை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நமது கலையையும், பண்பாட்டையும் பேணிக்காக்கும் வகையில் நாம் செய்யவேண்டியது இதனை வருங்கால தலைமுறையினருக்கு இட்டுச்செல்வது மட்டுமன்றி, அவர்களிடம் இவ்வாறான வரலாற்றார்வத்தை உண்டாக்குவதுமேயாகும். எஞ்சியுள்ள கலைப்பெட்டகங்களைப் பாதுகாக்க இதுபோன்ற பயணங்களும், பகிர்வுகளும் உதவும் என்று நம்புவோம். இதுபோன்று மற்றொரு ஒரு பயணத்தினை இணைந்து மேற்கொள்ள தயாராக இருக்கிறேன். பயணத்தைத் தொடருவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Dear Sir,
   The pallipadai mentioned in the article is not a real one .The analysis written in varalaaru.com explains that. The link is http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=11
   otherwise article is nice.

   நீக்கு
  2. நண்பர் ராகுல் அவர்களை வரவேற்கின்றேன்.
   தாங்கள் குறிப்பிட்ட இரா.கலைக் கோவன் அவர்களின் கட்டுரையினை, நான் இக்கட்டுரையினை எழுதவதற்கு முன்னரே படித்தேன் நண்பரே.
   ராஜராஜனின் பள்ளிப்படை இதுதான் என்பதற்கு ஆதாரம், அவர் குறிப்பிட்டுள்ள பாட்டில் இல்லை என்று கூறியிருக்கின்றார்.
   ஆனால வரலாற்று ஆசிரியர்கள், தமிழறிரகள் அனைவரும் ஒத்துக் கொண்ட ஒரு செய்தி என்னவென்றால்,

   இராஜராஜன் தனது இறுதி நாட்களைக் கழித்த இடம் உடையாளூர் என்பதுதான்.

   இவ்விசயத்தில் அறிஞர்களிடைய இருவேறு கருத்தில்லை.

   நண்பரே, பல இலட்சம் வருடங்களுக்கு முன்னர் பிறந்ததாகக் கூறப்படும் இராமன், பாபர் மசூதி இருக்குமிடத்தில்தான் பிறந்தார் என்று இந்தியர்கள் உறுதியாகக் கூறி, பாபர் மசூதியையே இடித்து விட்டார்கள். இராமன் பிறந்தது இந்த இடத்தில்தான் என்று யாராலுமே அறுதியிட்டுக் கூற முடியாது. இருந்தாலும் நாம் நம்புகிறோம், அவ்விடத்தில உள்ள மசூதியினை இடிக்கிற அளவுக்கு நம்புகிறோம்.

   ஆனால் இராஜராஜன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறுதிக் காலத்தைக் கழித்த இடம் உடையாளூர்தான் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. உடையாளுரில் மணி மண்டபம் எழுப்பப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் ஐயமில்லை.அவ்வாறு மணிமண்டபம்எழுப்பப்படுகிற பொழுது, அது இந்த லிங்கம் இருக்கும் இடத்தில் கட்டப்படட்டுமே என்பதுதான், பலரது விருப்பம்.
   வருகைக்கு நன்றி நண்பரே


   நீக்கு
  3. முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களுக்கு,
   எனது பல ஆண்டு ஆசை , தங்களால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
   தங்களுடன் அடுத்தப் பயணம் மேற்கொள்ளக் காத்திருக்கிறேன்
   நன்றி ஐயா

   நீக்கு
  4. ராஜேந்திர சோழனும் பற்பல க்ற்றளி எழுப்பியவர்தன. பலருக்கும் கோவில்கள் கட்டியவர்தான். புகழோடு வாழ்வாங்கு வாழ்ந்தவர், அவர் ஏன் அவரது தந்தையும் ஆசானும் மன்னனுமாய் விளங்கிய மாமன்னனின் நினைவிடத்தில் ஒரு கட்டிடம் எழுப்பவில்லை? அப்படி கட்டியிருந்தால் அது கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் சிதைந்தது எப்போது? ஏன்? யாரால்? தஞ்சை மாமன்னனின் சமாதியை , நினைவிடத்தை எதிரிகள் யாராவது சிதைத்திருந்தால் அதை ஒரு மாபெரும் சாதனையாக சொல்லிக் கொண்டு இருப்பார்கள். அது போன்ற ஆவணங்கள் ஏதாவது கிடைத்திருக்கிறதா? அப்படிஏது ம் கிடைக்க வில்லை என்றால்.............. நாமே சில கற்பனைகள் செய்துகொள்ளவேண்டியதுதான்

   நீக்கு
 21. என்ன சொல்வது வேதனையாக இருக்கிறது..... இதை எதாவது பத்திரிக்கைகளில் கொண்டு போய் சேர்க்க முயற்சிக்கிறேன்......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் இச்செய்திகளை நாளிதழ்களில்வெளிவரச் செய்யுங்கள் சகோதரியாரே.
   இராஜராஜன் தங்களை வாழ்த்துவார்

   நீக்கு
 22. THIS WEEK VERY NICE. ARTICLE. TAMIL PEOPLE. FORCE THE GOVERNMENT BUILD RAJARAJAN MANDAPAM IN UDAIYALUR.THANKS.

  பதிலளிநீக்கு
 23. அறியாத புது தகவல்கள்.
  பழைய பெருமை வாய்ந்த பழையாறை கோவில்கள் பராமரிக்க படாமல் இருப்பது கவலை அளிக்கும் விஷயம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவில்கள் பராமரிக்க படாமல் இருப்பது கவலை அளிக்கும் விஷயம்தான்
   வருகைக்கு நன்றி சகோதரியாரே

   நீக்கு
 24. கடந்த பல ஆண்டுகளாகவே, உள்ளத்தில் ஓர் ஆசை. இராஜராஜ சோழன் மீளாத் துயில் கொள்ளும், புனித இடத்தினை ஒரு முறையேனும் காண வேண்டும் என்ற ஓர் ஆசை. இவ்வளவிற்கும் அவ்விடம், எனது வீட்டிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவுதான்//
  அடுத்த முறை தஞ்சை வரும் போது பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறேன் உங்கள் இந்த பதிவை படித்தவுடன்.

  பதிலளிநீக்கு
 25. அருமையான அறிய தகவல்கள்... தஞ்சை செல்லவேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை..
  குந்தவை தேவியின் சமாதி இருந்த இடம் மறக்கபட்டதில் பார்த்திராத எனக்கும் பெரும் துயர்... தமிழகம் என்று தான் பழமையை கட்டி காக்குமோ தெரியவில்லை...

  பதிலளிநீக்கு
 26. இதற்கு காரணம் தமிழர்களின் மேம்போக்கான மனநிலைதான் அய்யா, 2009 ல் அலுவலகம் தொடர்பாக(British petroleum) எகிப்து செல்லவெண்டி இருந்தது. விமான நிலையத்தில் அருகில் உள்ள ஒரு பழையான சுட்டகளிமண்ணினால் கட்டப்பட்ட சாதாரன் எகிப்திய குடிமகனின் வீடு(கி மு 3000) நகரமாக்கல் விரிவாக்க என்ற பெயரில் இடித்து தள்ளாமல் எகிப்திய தொன்மை பொருள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்து, வெளியில் அது குறித்த அனைத்து விபரங்களையும் ஆங்கிலம், அரபி, பிரென்சு, சீனம் மற்றும் இத்தாலிய மொழியில் எழுதி வைத்துள்ளனர். அது ஒரு அரண்மனையோ அல்லது முக்கிய வழிபாட்டுத்தலமோ கிடையாது. ஒரு எகித்திய சாதரன குடிமகனின் வீட்டு, இரண்டு அறைகள் உள்ள அந்த இடத்தைக்கூட பாதுகாத்து வருகிறார்கள். அதன் மூலம் அவர்கள் தங்களின் தலைமுறைக்கு அன்றைய மனிதர்களின் வாழ்க்கையை பாடமாக காட்டுகிறார்கள். நாமோ .............

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு ஆண்டும் போகிப் பொங்கலின் பொழுது
   பழையன கழிதல் என்பதன்
   உண்மையான பொருளை அறியாமல்,
   வீட்டில் இருந்த பழைய ஓலைச் சுவடிகளை எல்லாம்
   நெருப்பில் இட்டு,
   நமது தொன்மையான வரலாற்று
   ஆதாரங்களையும் எரித்தவர்கள் அல்லவா நாம்.
   அடுத்தத் தலைமுறையினருக்கு விட்டுச் செல்ல ஏதுமில்லை நம்மிடம்.
   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 27. வேதனை தந்த விஷயங்கள். இப்படி பழமையான பல சின்னங்களை இழந்து கொண்டிருக்கிறோம்......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரலாற்றைப் போற்றிப் பாதுகாக்காததால்,
   முகவரியினை அல்லவா தொலைத்துக் கொண்டிருக்கிறோம்
   வருகைக்கு நன்றி ஐயா

   நீக்கு
 28. பிறக்கப் போகும் புத்தாண்டில் எல்லா நலனும் வளமும் பெற்று
  வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றேன் சகோதரா சிறப்பான இப்
  பகிர்வுக்கும் சேர்த்து ! துன்பங்கள் விலகும் ஒரு நாள் இன்பமே
  வாழ்வின் அத்திவாரம் என விலக்கி ......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே
   தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

   நீக்கு
 29. தமிழனின் சரித்திரத்தில் நீங்கா இடம்பெறவேண்டிய இடங்களை அடையாளம் காட்டியுள்ளீர்கள். நிச்சயம் இச்செய்தி பரவலாகத் தெரியவரும். விரைவில் இவ்விடங்களைப் பாராமரிப்பது பற்றிய கருத்தொருமிப்பு ஏற்படும். இணையம் வலிமை வாய்ந்தது. இதற்கிடையில் தஞ்சையில் வாழும் தாங்களும் நபர்களும் மாவட்ட ஆட்சியாளர் மூலம் இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட ஒரு சந்திப்பைக் கோரலாமே என்று தோன்றுகிறது. புத்தாண்டில் நல்லது நிகழலாமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தாண்டில் நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்போம் ஐயா
   வருகைக்கு நன்றி ஐயா

   நீக்கு
 30. மேடையிலும் எழுத்திலும்
  அவர்கள் புகழ் பாடிக்கொண்டு
  யதார்த்த நிலையில் அவர்களது
  நினைவுச் சின்னங்களை காக்கத் தவறிய இனம்
  உலகில் நம் தமிழினம் மட்டுமாகத்தான் இருக்க முடியும்

  விரிவான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நினைவுச் சின்னங்களை காக்கத் தவறிய இனம்
   உலகில் நம் தமிழினம் மட்டுமாகத்தான் இருக்க முடியும்//
   சரியாகச் சொன்னீர்கள் ஐயா
   வருகைக்கு நன்றி

   நீக்கு
 31. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, தங்கள் பதிவினை படித்தவுடன் நம்முடைய நன்றி உணர்ச்சியினை நினைத்து வேதனை ஏற்பட்டது. உலகே போற்றும் இராஜராஜச்சுவரம்[தஞ்சை பெரிய கோவில்] நம் தஞ்சையில் உள்ளது என்ற பெருமையை கொண்டுள்ள நாம் அப்பெருமைக்கு காரணமான மாமன்னனை கடுகளவு கூட நினைவில் கொள்ளவில்லை என்பதை நினைத்தால் மனசாட்சி சுடுகிறது. எனினும் அதனை எடுப்பித்து செய்ய அதிகாரம் உள்ளவர்களை உடனே சிறப்பு செய்ய சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்வோம். உங்களின் பதிவு அந்த நற்செயலுக்கு ஒரு ஆரம்பமாக அமையட்டும் என்று ஆசைப்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி நண்பரே
   அதிகாரம் உள்ளவர்களை உடனே சிறப்பு செய்ய சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்வோம்.

   நீக்கு
 32. நெகிழ்ச்சியுடன் கூடிய ஓரூ அருமையான பதிவு. உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும்!
  revmuthal.com

  பதிலளிநீக்கு
 33. போற்றப்படாத இராஜராஜன் சமாதி, பராமரிக்கப் படாத பழையாறை கோயில், புதுப்பித்தல் என்னும் பெயரில் அகற்றப்பட்ட குந்தவி தேவியின் சமாதி

  திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் நேரடிப் பயணப் பதிவு. தயவு செய்து இந்த பதிவை படித்து, பின் வந்த பின்னூட்டங்களையும் படிக்க வேண்டுகிறேன். எவ்வளவு அலட்சியமாக இருக்கிறோம்; மிகுந்த வேதனையாக இருக்கிறது.

  எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு கரந்தை ஜெயக்குமார்.

  பதிலளிநீக்கு
 34. தஞ்சை பெரியகோயில் பெருமையைப் பற்றி அருமையாகச் சொன்னீர்கள்! நானும் சிறு வயது முதல் தஞ்சை பெரிய கோயிலுக்கு அடிக்கடி வந்துள்ளேன். இந்த கோயிலில் உள்ள அமைதி மற்றும் வெளிச்சம் எனக்கு மிகவும் பிடித்தமான சூழ்நிலை ஆகும். இது வேறு எங்கும் இல்லை.
  உடையாளூரில் இருப்பது ராஜராஜ சோழன் சமாதி இல்லை எனவும், பெரியகோயில் உள்ளே அல்லது வெளியே உள்ள ஒரு தோட்டத்தில்தான் புதைத்து இருப்பார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொன்னதாக நினைவு. இந்த ஆராய்ச்சியும் முடிந்த முடிபு இல்லை!
  பழையாறை, பஞ்சவன் மாதேவீஸ்வரம் சென்றதில்லை. உங்கள் பதிவும் படங்களும் அங்கு போக வேண்டும் என்ற உந்துதலைத் தோற்றுவிக்கின்றன.
  விரிவான பதிவுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜன் தனது இறுதிக் காலத்தைக் கழித்த இடம் உடையாளூர்தான் என்பதை அனைத்து அறிஞர்களும் ஒப்புக் கொள்கின்றார்கள்.
   உடையாளூரில் இருக்கும் லிங்கம் இராஜராஜனின் சமாதியாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். இரண்டிற்கும் வாய்ப்பிருக்கிறது.
   இராமர் பிறந்த இடம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதிதான் என்பதை ஏற்றுக கொள்கின்றோமே.
   ஆனால் உடையாளூரில் இராஜராஜன் இறந்தார் என்பது வரலாற்று உண்மை. எனவே உடையாளூரில், அந்த லிங்கம் இருக்கும் இடத்திலேயே ஒரு மணி மண்டபத்தை எழுப்பலாமே என்பதுதான் அனைவரின் விருப்பமாகும்

   நீக்கு
 35. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! இனிய வாழ்த்துக்கள்!

  நான் வெகு நாட்களாக செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்த இடங்களுக்கு நீங்கள் சென்று வ்ந்து அழகாய் எழுதியிருக்கிறீர்கள்! ஒவ்வொன்றாய் ப‌டிக்கப் படிக்க மனம் பரவசமடைந்தது!

  நீங்கள் சொல்வது உண்மை தான்! எப்போது பெரிய கோவிலுக்குச் சென்றாலும் கல்கியின் பொன்னியின் செல்வ‌னும் அதன் கதாபாத்திரங்களான அருள்மொழி வ்ர்மன், குந்தவை, வந்தியத்தேவன் எல்லோரும் நம் கூடவே நடந்து வருகிற உணர்வை ஒவ்வொரு முறையும் அனுபவிப்பதும் உண்மை தான்!

  உடையாளூர் ராஜ‌ராஜன் சமாதி பற்றி முன்னமேயே பல முறை படித்து வருந்தியது நினைவில் உள்ள‌து. என்றாலும் மறுபடியும் உங்கள் எழுத்து வழியே அதைப்பற்றி படித்த போது, ' வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமிது தான்' என்ற பழைய பாடல் நினைவுக்கு வந்தது!

  பழையாறை கோவிலின் முகப்பு வாயில் கோபுரம் செடி கொடிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதையும் மீறி கோவிலின் முகப்பு அத்தனை அழகு!!

  தஞ்சையிலிருந்து பழையாறை, பஞ்சவன்மாதேவீஸ்வரம் எப்படி செல்ல வேண்டும்? கார் அல்லது பஸ் போக்கக்கூடிய அள‌வு சாலைகள் உள்ளனவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காரில் செல்லலாம் சகோதேரியாரே. அருமையான தார் சாலைகள் உள்ளன.
   தஞ்சையில் இருந்து புறப்பட்டு, கும்பகோணம் சாலையில் பயணிக்கவும்.
   தாராசுரத்தில் இருந்து வலது புறம் திரும்பி, பட்டீஸ்வரம் செல்லவும்.
   பட்டீஸ்வரத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பம்மைப் படையூர் செல்லவும்.
   பம்மைப் படையூரில் இருந்து வலது புறம் திரும்பி சிறிது தூரம் சென்றால், முதலில் பழையாறை, அடுத்து உடையாளுர்.


   மீண்டும் பட்டீஸ்வரம் வந்து, பட்டீஸ்வரம், சுந்தர பெருமாள் சாலையில், பட்டீஸ்வரத்தில் இருந்து ஒரே கிலோ மீட்டர் தொலைவில் பஞ்சவன் மாதேவீச்சுரம் உள்ளது.

   அவசியம் சென்று வாருங்கள் சகோதரியாரே
   வருகைக்கு நன்றி

   நீக்கு
 36. நல்ல அருமையான புதிய தகவல்கள்! தாங்கள் விவரித்திருப்பதைப் படித்தவுடன் சென்று காண வேண்டும் போல உள்ளது. தஞ்சை கோயில் பார்த்தது உண்டு. ஆனால் மற்ற தகவல்கள் சொல்லும் இடம் பழையாறை எல்லாம் காண அவா.

  காக்கத் தவறியது வருத்ததிற்கு உரியது.

  மிக அழகாக விவரித்துள்ளீர்கள். மேளும் தொடர வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவசியம் தஞ்சைக்கு வாருங்கள் நண்பரே.
   வருகைக்கு நன்றி

   நீக்கு
 37. வெளியூர் சென்றிருந்த படியால் இந்த பதிவை படிக்க தாமதமானதற்கு வருந்துகிறேன் .உங்கள் ஒவ்வொரு பதிவும் ஒரு பாடநூல் போல பயனுள்ளதாகவும் ,பரந்து விரிந்ததாகவும் உள்ளது அண்ணா .பொன்னியின் செல்வம் இப்படி ஒரு இடத்தில் துயில் கொள்வது மிகுந்த வேதனை அளிக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேதனையாகத்தான் இருக்கிறது சகோதரியாரே
   வருகைக்கு நன்றி

   நீக்கு
  2. ராஜேந்திர சோழனும் பற்பல க்ற்றளி எழுப்பியவர்தன. பலருக்கும் கோவில்கள் கட்டியவர்தான். புகழோடு வாழ்வாங்கு வாழ்ந்தவர், அவர் ஏன் அவரது தந்தையும் ஆசானும் மன்னனுமாய் விளங்கிய மாமன்னனின் நினைவிடத்தில் ஒரு கட்டிடம் எழுப்பவில்லை? அப்படி கட்டியிருந்தால் அது கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் சிதைந்தது எப்போது? ஏன்? யாரால்? தஞ்சை மாமன்னனின் சமாதியை , நினைவிடத்தை எதிரிகள் யாராவது சிதைத்திருந்தால் அதை ஒரு மாபெரும் சாதனையாக சொல்லிக் கொண்டு இருப்பார்கள். அது போன்ற ஆவணங்கள் ஏதாவது கிடைத்திருக்கிறதா? அப்படிஏது ம் கிடைக்க வில்லை என்றால்.............. நாமே சில கற்பனைகள் செய்துகொள்ளவேண்டியதுதான்

   நீக்கு
  3. பஞ்சவன் மாதேவீஸ்வரம் என்னும் பள்ளிப் படை, இராஜேந்திர சோழனால், தன் சிற்றன்னைக்குக் கட்டப்பெற்றதாகும். தன் சிற்றன்னைக்கு பள்ளிப்படை கட்டிய இராஜேந்திர சோழன் , தன் தந்தைக்கு கட்டாமலா இருந்திருப்பார், நிச்சயம் கட்டியிருப்பார். ஆனால் கால வெள்ளத்தில் அவை கரைந்து போயிருக்கலாம்.
   சோழர்கள் வசித்த மாளிகைளின் அடித்தளங்களைக்கூட தஞ்சையில் கண்டுபிடிக்கப்படவில்லை. மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டன. அதுபோலவே இராஜராஜ சோழன் பள்ளிப்படையும் பூமியில் புதைந்திருக்கலாம்

   நீக்கு
 38. ஒரு அருமையான கட்டுரை சார் இது. மாமன்னன் ராஜராஜசோழன் எனது மனங்கவர்ந்த மனிதன். அவரது சமாதி இப்படி இருப்பது மனதிற்கு வருத்தமாய் உள்ளது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருத்தமாகத்தான் இருக்கின்றது நண்பரே.
   உடையாளூருக்கு சென்றதால்தான் தஞ்சை வந்த தங்களை சந்திக்க இயலாமல் போய்விட்டது.
   தங்களின் புத்தக வெளியீட்டு விழா சிறப்புடன்
   நடைபெற உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் நண்பரே

   நீக்கு
  2. ராஜேந்திர சோழனும் பற்பல க்ற்றளி எழுப்பியவர்தன. பலருக்கும் கோவில்கள் கட்டியவர்தான். புகழோடு வாழ்வாங்கு வாழ்ந்தவர், அவர் ஏன் அவரது தந்தையும் ஆசானும் மன்னனுமாய் விளங்கிய மாமன்னனின் நினைவிடத்தில் ஒரு கட்டிடம் எழுப்பவில்லை? அப்படி கட்டியிருந்தால் அது கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் சிதைந்தது எப்போது? ஏன்? யாரால்? தஞ்சை மாமன்னனின் சமாதியை , நினைவிடத்தை எதிரிகள் யாராவது சிதைத்திருந்தால் அதை ஒரு மாபெரும் சாதனையாக சொல்லிக் கொண்டு இருப்பார்கள். அது போன்ற ஆவணங்கள் ஏதாவது கிடைத்திருக்கிறதா? அப்படிஏது ம் கிடைக்க வில்லை என்றால்.............. நாமே சில கற்பனைகள் செய்துகொள்ளவேண்டியதுதான்

   நீக்கு
  3. பஞ்சவன் மாதேவீஸ்வரம் என்னும் பள்ளிப் படை, இராஜேந்திர சோழனால், தன் சிற்றன்னைக்குக் கட்டப்பெற்றதாகும். தன் சிற்றன்னைக்கு பள்ளிப்படை கட்டிய இராஜேந்திர சோழன் , தன் தந்தைக்கு கட்டாமலா இருந்திருப்பார், நிச்சயம் கட்டியிருப்பார். ஆனால் கால வெள்ளத்தில் அவை கரைந்து போயிருக்கலாம்.
   சோழர்கள் வசித்த மாளிகைளின் அடித்தளங்களைக்கூட தஞ்சையில் கண்டுபிடிக்கப்படவில்லை. மண்ணோடு மண்ணாகிப் போய்விட்டன. அதுபோலவே இராஜராஜ சோழன் பள்ளிப்படையும் பூமியில் புதைந்திருக்கலாம்

   நீக்கு
 39. மிக அருமையான பதிவு உடன் வந்து பார்க்க வேண்டும் போல இருக்கிறது கரந்தையாரே

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் தங்சைக்கு வாருங்கள். விடுமுறை நாளானால் ,இருவரும் சேர்ந்தே செல்லலாம். புதுக்கோட்டையில் இருந்து பக்கம்தானே வாருங்கள் நண்பரே

   நீக்கு
 40. நிவாஸ் சண்முகவேல்29 டிசம்பர், 2013


  அன்பு நண்பருக்கு , உங்களைப்போலவே பலமுறை `பொன்னியின் செல்வன் ` படித்து, வரலாற்று இடங்ளைப் பார்வையிட் ஆர்வம் கொண்டவன் எனற முறையில் அருமையான இக்கட்டுரை எனது ஆர்வத்தினை அதிகப்படுத்தியுள்ளது. உரிய முறையில் அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லும் கடமை நமக்கு உள்ளது. நண்பரே..
  எப்பணியும் செய்ய ஆவலாக் உள்ளேன்..
  தகவலுக்கு: s.nivas@live.in
  9965498109

  பதிலளிநீக்கு
 41. ராஜேந்திர சோழனும் பற்பல க்ற்றளி எழுப்பியவர்தன. பலருக்கும் கோவில்கள் கட்டியவர்தான். புகழோடு வாழ்வாங்கு வாழ்ந்தவர், அவர் ஏன் அவரது தந்தையும் ஆசானும் மன்னனுமாய் விளங்கிய மாமன்னனின் நினைவிடத்தில் ஒரு கட்டிடம் எழுப்பவில்லை? அப்படி கட்டியிருந்தால் அது கொஞ்சம் கூட மிச்சம் இல்லாமல் சிதைந்தது எப்போது? ஏன்? யாரால்? தஞ்சை மாமன்னனின் சமாதியை , நினைவிடத்தை எதிரிகள் யாராவது சிதைத்திருந்தால் அதை ஒரு மாபெரும் சாதனையாக சொல்லிக் கொண்டு இருப்பார்கள். அது போன்ற ஆவணங்கள் ஏதாவது கிடைத்திருக்கிறதா? அப்படிஏது ம் கிடைக்க வில்லை என்றால்.............. நாமே சில கற்பனைகள் செய்துகொள்ளவேண்டியதுதான்

  பதிலளிநீக்கு
 42. அருமையான படங்கள்
  அரிதான தகவல்கள்
  தொல்லியல் துறையும்
  இந்து அற நிலையத் துறையும்
  சுற்றுலா துறையும்
  கைகோர்த்தால் இந்த பழமையான
  கலை பொக்கிஷங்களுக்கு விடிவு காலம் பிறக்கும்
  நல்ல பதிவு நன்றி KJ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூவரும் கைகோர்த்தால் நிச்சயம் விடிவு காலம் பிறக்கும்
   வருகைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 43. மகிழ்ச்சியாக பதிவைப் படிக்க ஆரம்பித்த நான் இறுதியில் கனத்த மனத்தோடு படித்து முடித்தேன். தஞ்சை கோவிலுக்கு வெளியே மாமன்னன் இராஜராஜனுக்கு சிலை வைக்க போராடிய நாம், அவருடைய நினைவிடத்தில் ஒரு நல்ல மணி மண்டபத்தைக் கட்ட எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிறபோது வாய்ச்சொல்லில் வீரர்கள் தான் நாம் என்பது வெளிப்படை. இனியாவது அரசு செய்யாவிடினும் தஞ்சை உள்ள தமிழ் ஆர்வலர்கள் பொது மக்களிடம் நன்கொடை வசூலித்து இந்த நற்பணியை செய்தால் என்ன? தங்களது பகிர்வுக்கும் ஆதங்கத்திற்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் ஏதாகினும் செய்ய வேண்டும் ஐயா
   வருகைக்கு நன்றி ஐயா

   நீக்கு
 44. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

  நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே
   தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

   நீக்கு
 45. இதயம் கனத்தது! ஒருமுறை ராஜ் டி.வி. செய்தியில் பார்த்ததாக ஞாபகம்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 46. தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 47. முதன்முதலாக தஞ்சாவூர் பெரிய கோவிலைப் பார்த்தபோது எனக்கும் உங்களைப்போலத்தான் ராஜராஜனும், குந்தவையும் நினைவில் வந்தார்கள். பொன்னியின் செல்வன் நான் விரும்பிப் படித்த, இன்னும் படிக்கும் நாவல். அந்த மகோன்னதங்களின் நினைவுச்சின்னங்கள் இன்றைய மனிதர்களால் கவனிக்கப்படாமல் இருப்பது மிகுந்த வேதனையைக் கொடுக்கிறது. எங்களையும் கூடவே அழைத்துச் சென்று அவற்றைப் பார்வையிட வைத்ததற்காக நன்றி!

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், ஐயா!

  பதிலளிநீக்கு

 48. வணக்கம்!

  தஞ்சைப் பெருங்கோயில் தந்தவன் வாழ்விடம்
  நெஞ்சை உருக்கும் நிலைத்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு

 49. வணக்கம்!

  தமிழ்மணம் 12

  பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
  நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
  சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
  தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
  01.01.2014

  பதிலளிநீக்கு
 50. உடையாளுர் ப் பயணம் தந்த வலி உணார்ந்தேன்..விரைவில் வழி பிறக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல் வழி பிறந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே
   வருகைக்கு நன்றி ஐயா

   நீக்கு


 51. உதாவாதினி ஒரு தாமதம்
  உடனே விழி தமிழா

  பதிலளிநீக்கு
 52. வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_21.html?showComment=1392963937862#c5891393347810975556
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 53. உங்கள் பதிவைப் படிக்கையில் வருத்தமே மிஞ்சுகிறது. ராஜராஜன் சிலையைக் கூட கொயிலுக்குள் அனுமதிக்காத ஆட்சியாளர்களையும் உளுத்துப் போன விதிகளையும்தானே கொண்டுள்ளோம்.

  பதிலளிநீக்கு
 54. அறிந்து கொள்ளவேண்டியவை தான், அறிந்து மனம் நொந்தேன். மனனுக்கே இந்த நிலையா. புனரமைத்து டூரிஸ்ட் place ஆக்கிவிட்டால் எவ்வளவு வருமானம் வரும்.எல்லா நாடுகளிலும் இவைகளை உடனே பணம் பண்ணும் படி ஏற்பாடு செய்துவிடுவார்களே. இவர்கள் ஏன் இப்படி விட்டு வைக்க வேண்டும் என்பது எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது. ஒவ்வொரு வருடமும் எத்தனை பேர் வருகிறார்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு அழகான மண்டபம் கட்டி விட்டால் எவ்வளவு பேர் வருவார்கள். பார்வை இட கட்டணம் வசூலித்தால் போதுமே.கால ஓட்டத்தில் கரையாமல் அனைத்தையும் கட்டிக் காக்கலாமே. இவ்வளவு எழுதும் நீங்கள் இவற்றை எல்லாம் யோசிக்கமலா இருப்பீர்கள். நிச்சயம் யோசித்திருப்பீர்கள். அதற்குரிய சாத்தியம் அமையாமல் இருக்கும் என்றே நம்புகிறேன். இருந்தாலும் ஆதங்கத்தில் கொட்டிவிட்டேன். மன்னிக்கவும். மிக்க நன்றி இவைகளை அறியத்தந்தமைக்கு. தங்கள் அனைத்து பதிவுகளையும் படிக்கவேண்டும் என்று எண்ணுவேன் முடியவில்லையே.
  பொன்னியின் செல்வனே இன்னமும் வாசிக்கக்கிடைக்கவில்லை.
  நன்றி!தொடர வாழ்த்துக்கள் .சகோ...!

  பதிலளிநீக்கு
 55. அ.இராஜராஜசோழன்.03 ஜூலை, 2015

  ராஜராஜசோழனுக்கு இறப்பு எப்படி ஏற்பட்டது???

  பதிலளிநீக்கு
 56. இராஜராஜசோழன் -சோழ நாட்டு மன்னனே ..!
  இராஜராஜசோழன் இயற்பெயர்-"அருண்மொழி வர்மன்"-(தேவன் " அல்ல).
  இராஜராஜ"தேவர்"-இந்த பெயர் எந்த வகையிலும் நம்பகூடியதல்ல..!

  மேலுள்ள வகுப்பினரின் பூர்வீகம்-பாண்டிய மண்டலமே.இதனால் மேலுலள்ள் பெயர் எந்த வகையிலும் நம்பகூடியதல்ல..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாண்டே
   செழியரைத்தசுகொள் ஸ்ரீ கோ ராஜ கேஸரி வந்மரான
   ஸ்ரீ ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு,


   (உயக) ஆவது ஜயங் கொண்ட சோழ மண்டலத்துக் காலியூர்க் கொடத்துத் தனியூர் உக்கலாகிய ஸ்ரீ விக்கிரமா பரணச் சதுர்வேதி மங்கலத்தின் மேலைப் பெருவழியில்
   ஸ்ரீ ராஜ ராஜ தேவர் திருநாமத்தால்க் கிணறுந் தொட்டியும் சமைப்பித்தான்.

   உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர் பணிமகன் சோழ மண்டலத்து தன்கர நாட்டு நித்த வினோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூருடையான் கண்ணனாரூரன்,

   இவனே ஸ்ரீ ராஜ ராஜ கிணற்றில்த் தொட்டிக்கு நீரிறைப்பதற்க்கு அருண் மொழி தேவன் மரக்காலால் நிசதம் நெல்

   கல்வெட்டில் தேவர் என்று இருப்பதாகவே குறிப்பிட்டுள்ளனர். தங்கள் கருத்து என்ன?

   நீக்கு
 57. ராஜராஜசோழனுக்கு இறப்பு எப்படி,எதனால் ஏற்பட்டது???
  பதிலளியுங்கள் ஆசிரியரே.......

  பதிலளிநீக்கு
 58. ராஜராஜசோழனுக்கு இறப்பு எப்படி,எதனால் ஏற்பட்டது???
  பதிலளியுங்கள் ஆசிரியரே.......

  பதிலளிநீக்கு
 59. ராஜராஜசோழனுக்கு இறப்பு எதனால் ஏற்பட்டது ஆசிரியரே????????????

  பதிலளிநீக்கு
 60. இயற்கை அவனை பறித்துகொண்டது

  பதிலளிநீக்கு
 61. யார் தான் இவற்றை மீள் செய்ய வருவாரோ
  அது வரை நினைவு களில் தான் நாம் பாதுகாக்க வேண்டும்

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு