13 மார்ச் 2015

சுவடிகளைத் தேடி

   

 தமிழ் நாடெங்கும் அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார், பாதம் தேயத் தேய, நடையாய் நடந்து கொண்டிருக்கிறார். சுவடிகளைத் தேடித்தான் இந்த அலைச்சலும், நடையும்.

      அன்னைத் தமிழைக் காக்க வேண்டும், ஓலைச் சுவடிகளில் பொதிந்துள்ள, அருந்தமிழை அச்சேற்றி, நூலாக்கி, இறந்துபடாமல் காக்க வேண்டுமே என்ற கவலை.

     திருநெல்வேலியில், வக்கீல் சுப்பையா பிள்ளை என்பாரிடம், ஏடுகள் பல இருப்பதாக அறிந்த நாளில் இருந்தே, இருப்பு கொள்ளவில்லை. திருநெல்வேலிக்குச் சென்றாக வேண்டுமே என்ற எண்ணம், இடைவிடாமல், மனதை வற்புறுத்திக் கொண்டே இருந்தது.

     இதோ, பெரியவர் கிளம்பி விட்டார்.


     திருநெல்வேலி சென்ற அப்பெரியவர், முதலில், குற்றாலக் குறவஞ்சி என்னும் கவின்மிகு கவிதை நூலை இயற்றித் தமிழன்னைக்கு அமுது படைத்த, திரிகூட ராசப்பக் காவிராயரைச் சந்தித்தார்.

    இருவரும் சேர்ந்து சென்று, வக்கீல் சுப்பையா பிள்ளையைச் சந்தித்தனர்.

     எங்கள் வீட்டில் ஊர்க் காட்டு வாத்தியார் ஓலைச்சுவடிகள் வண்டிக் கணக்காக இருந்தன. எல்லாம் பழுது பட்டு, ஒடிந்து உபயோகமில்லாமல் போய்விட்டன. இடத்தை அடைத்துக் கொண்டு யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் இருந்த அவற்றை என்ன செய்வது என்று யோசித்தேன்.
       அவற்றில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்கோ எனக்குத் திறமை இல்லை. அழகாக அச்சுப் புத்தகங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில், இந்தக் குப்பையைச் சுமந்து கொண்டிருப்பதில் என்ன பயனென்று எண்ணினேன்.
        ஆற்றிலே போட்டுவிடலாமென்றும், ஆடிப் பதினெட்டில் சுவடிகளைத் தேர் போல் கட்டி விடுவது சம்பிரதாயமென்றும் சில முதிய பெண்கள் சொன்னார்கள். நான் அப்படியே எல்லா ஏடுகளையும், ஓர் ஆடி மாதம் பதினெட்டாம் தேதி வாய்க்காலில் விட்டு விட்டேன் என்றார் சுப்பையா பிள்ளை.

     தண்ணீரில் விட்டுவிட்டார்கள் என்பதை அறிந்ததும், பெரியவருக்கு மூச்சுத் திணறத் தொடங்கியது. தானே தண்ணீரில் வீழ்ந்து மூழ்கிவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு.
     அடே பாவிகளா என்று மனதிற்குள் புலம்பியவாரே, தள்ளாடித் தள்ளாடி அங்கிருந்து புறப்பட்டார்.

      தாயே, தமிழே, என் செய்வேன், உனக்கா இந்நிலை.

      சில மாதங்கள் கடந்த நிலையில், கரிவலம் வந்த நல்லூரில், சில சிலப்பதிகாரச் சுவடிகள் இருப்பதாக ஓர் செய்தி, அப்பெரியவரை நாடி வந்தது. உடனே புறப்பட்டார்.

     கரிவலம் வந்த நல்லூர்.

     அவ்வூரில் உள்ள, ஓர் ஆலயத்தில், வரகுண பாண்டியனுடைய ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப் பட்டு வருவதாக அறிந்து, பால் வண்ண நாதர் கோயிலுக்குச் சென்றார். கோயிலின் தருமகர்த்தா அலுவலகத்தில் இருந்த, அலுவலர் ஒருவரைச் சந்தித்தார்.

வரகுண பாண்டியர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகள் எல்லாம்                 ஆலயத்தில் இருக்கின்றனவாமே? அதை நான் பார்க்கலாமா?

அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னவோ வைக்கோற் கூளம் மாதிரி, கணக்குச் சுருணையோடு எவ்வளவோ பழைய ஏடுகள் இருந்தன.

அப்படியா? அவை எங்கே இருக்கின்றன. தயை செய்து அந்த இடத்திற்கு அழைத்துப் போவீர்களா?

அதற்குள் அவசரப் படுகிறீர்களே. வரகுண பாண்டியர் இறந்த பிறகு, அவர் சொத்தெல்லாம் கோயிலைச் சேர்ந்து விட்டதால், அவர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளெல்லாம் அப்போதுதான் கோயிலுக்கு வந்தனவாம்.

அதுதான் தெரியுமே. இப்போது அவை எங்கே இருக்கின்றன? அவ்விடத்திற்கு என்னை அழைத்தச் செல்லுங்களேன்

ரொம்பத்தான் அவசரப் படுகிறீர்கள் பெரியவரே. குப்பைக் கூளமாக கிடந்த சுவடிகளை நான் பார்த்திருக்கின்றேன். எந்தக் காலத்து கணக்குச் சுருணைகளோ

அப்படியா, வேறே ஏடுகள் அதில் இல்லையா?

எல்லாம் கலந்துதான் கிடந்தன

அலுவலரின் அலட்சியப் பேச்சினைக் கேட்கக் கேட்க, பெரியவருக்குக் கோபம் தலைக்கு ஏறியது

வாருங்கள் போகலாம்

என்னை ஏன் கூப்பிடுகிறீர்கள்? அந்தக் கூளங்களை எல்லாம் என்ன செய்வது என்று யோசித்தார்கள். ஆகம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி செய்து விட்டார்கள்.

பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு வித பதற்றம் அவரைத் தொற்றிக் கொள்கிறது

ஆகமங்களில் சொல்லிய படியா? அப்படி என்ன செய்தார்கள்?

பழைய ஏடுகளை கண்ட கண்ட இடத்தில் போடக் கூடாதாம். அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்து விட வேண்டுமாம். இங்கே அப்படித்தான் செய்தார்கள்.

ஹா

பெரியவர், தன்னையும் மறந்து வேதனையில் ஓலக் குரல் எழுப்பினார்

குழி வெட்டி, அக்கினி வளர்த்து, நெய்யில் தோய்த்து, பழைய சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்துவிட்டார்கள்.

அடுத்த நொடி, அப்பெரியவர் பொங்கி எழுந்தார்.

இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா?  அப்படிச் சொல்லியிருந்தால், அந்த ஆகமத்தையல்லவா முதலில் ஆகுதி செய்ய வேண்டும்

அப்பெரியவரின் கோபம் குறையவில்லை

தமிழின் பெருமையைச் சொல்லிய பெரியோர் பலர்,

நீரிலே ஆழாமல் மிதந்ததென்றும்
நெருப்பிலே எரியாமல் நின்றதென்றும்
பாராட்டியிருக்கிறார்களே.

ஆனால் இன்று அதே தமிழ், நீரில் மூழ்கியும், நெருப்பில் எரிந்தும், அழிவதைக் காணாமல் போய்விட்டார்களே. இன்று நான் அல்லவா, இக் கொடுமையான காட்சிகளைக் கண்டு கொண்டிருக்கிறேன்.
என் உயிரனைத் தமிழே, உனக்கா இந்நிலை
எனக் கதறினார்.

நண்பர்களே இவர்தான்,

ஆழிப் பேரலைகள் அடுக்கடுக்காய் எழுந்து, கடல் கோளாய் விசுவரூபமெடுத்து, ஒரு முறை அல்ல இரு முறை, தமிழர்தம் இலக்கியங்களை, அகண்ட தன் வாய் கொண்டு விழுங்கிய போதும்,

இன்று நம்மிடையே உலாவுகின்ற, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, புறநானூறு உள்ளிட்ட ஒப்புயர்வற்ற இலக்கியங்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்து, அச்சேற்றி, நூல்களாய் பதிப்பித்து அழிந்து படாமல் காத்த பெருந்தகையாளர்,

பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்கு வாயே

என பாரதியால் போற்றப்பெற்ற

தமிழ்த் தாத்தா
உ.வே. சாமிநாத ஐயர்




    


80 கருத்துகள்:

  1. சொன்ன விதம் பதற்றத்துடன்... இன்னும் எத்தனை பொக்கிசங்கள் ஆகுதியாகி இருக்குமோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போகிப் பொங்கல் என்னும் பெயரில்
      எண்ணற்ற ஓலைச் சுவடிகளை எரித்துப் பெருமைப் பட்ட சமுதாயம் நமது சமுதாயம்
      நன்றி ஐயா

      நீக்கு
  2. அந்தக் காலத்திலேயே இப்படி நடந்திருக்கிறதே.....

    பதிலளிநீக்கு
  3. மிகவும் வேதனையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஜயா
    தமிழ்த் தாத்தா இல்லையென்றால் பல இலக்கியங்கள் நாம் அறியாமலே போயிருப்போம். தங்களின் எழுத்து நடையில் படிப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. படிக்கும்போதே நமக்குப் பதறுகிறதே... அப்போது பெரியவருக்கு எப்படி இருந்திருக்கும்... நம்முடைய அறியாமையாலே எவ்வளவு பொக்கிஷங்களை இழந்திருக்கிறோம்.. நினைத்தாலே வேதனைதான் மிஞ்சுகிறது.

    பதிலளிநீக்கு
  6. நீரிலும் நெருப்பிலும் கரையான் அரித்தும் இன்னும் எப்படி எப்படியோ எத்தனைப் பொக்கிஷங்கள் அழிந்தனவோ!! மனவேதனை தான்..ஆனாலும் அண்ணா, இன்றும் இந்த அலட்சியப் போக்கோடு நம் மக்கள் பலர் இருக்கின்றனர்.. :(
    நல்ல பதிவு அண்ணா, த.ம.4

    பதிலளிநீக்கு
  7. அவர்தம் தமிழ்ச்சேவை மிகப்பெரிது.
    தங்களுக்கே உரிய தனி்த்த நடையில் இப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது அய்யா!

    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்த் தாத்தாவின் சேவை
      பெரிதினும் பெரிதல்லவா
      நன்றி நண்பரே

      நீக்கு
  8. வேடிக்கை மனிதர்களால் வேதனைத்தான் -எனக்கும்
    வீண்ணைத் தாண்டி வருகிறது

    பதிலளிநீக்கு
  9. தமிழ்த் தாத்தா மேதகு உ.வே.சா. அவர்கள் மட்டும் இல்லையென்றால் இலக்கியங்கள் பலவற்றை நாம் இழந்திருப்போம்!..

    அவரது உழைப்புக்கு ஈடு இணை இல்லவே இல்லை!..

    பதிலளிநீக்கு
  10. காக்க வேண்டிய பொக்கிசங்களை எத்தனை அலச்சியமாக அழித்திருக்கிறார்கள். போற்றப்பட வேண்டியவர்கள் உ.வே.சா போன்றவர்கள்.நல்ல பகிர்வு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உ.வே.சா போற்றப்பட வேண்டியவர்தான் சகோதரியாரே
      நன்றி

      நீக்கு
  11. சுவடிகளைத் தேடி – தமிழ்த்தாத்தா உ.வே.சா. அய்யாவின் உழைப்பிற்கு பொருத்தமான தலைப்பு. தமிழ், தமிழ் என்பவர்களே அவரை மதிக்க மறந்த இந்நாளில் அவரைப் பற்றிய அருமையான பதிவு.
    த.ம.8

    பதிலளிநீக்கு
  12. காலமெல்லாம் போற்றி வணங்கத்தக்கவர் ஏடு காத்த பெரியவர் உ.வே.சா. அவர்கள்!
    தங்கள் கட்டுரையால் இன்று சற்று கூடுதலாக நினைவு போற்றினேன்!
    கட்டுரைக்கு நன்றி!!
    - மும்பை சரவணன்

    பதிலளிநீக்கு
  13. மிக மிக அருமையான பதிவு நண்பரே! எத்தனை எத்தனை அரிய பொக்கிஷங்கள் இது போன்று தீக்கிரையாக்கப்பட்டதோ? ஒரு வேளை வடமொழி நிலை பெற வேண்டும் இன்று இது நடந்திருக்கலாமோ? இன்றும் கூட தமிழ் மொழி சாவது ஒரு சில சமூக அமைப்பில் நடந்து கொண்டுதானே இருக்கின்றது... மிகவும் வேதனையான விசயம். தமிழ் தாத்தா மட்டும் இல்லை என்றால் என்ன ஆகி இருக்கும்....போற்றுவோம் அவரை....

    பதிலளிநீக்கு
  14. வேதனையான விடயம் எவ்வளவு பொங்கிஷங்கள் மண்ணுள் புதைந்ததோ...
    தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் அவர்களை நினைவு கூர்வோம்
    போற்றத்தக்க பதிவைத்தந்த நண்பருக்கு நன்றி.
    தமிழ் மணம் 11

    பதிலளிநீக்கு
  15. ஆகமங்களின் பெயரால் எத்துனையோ கொடுமைகள், அதில் தலைக்கொடுமை நம் பண்பாடு மிக்க பொக்கிஷங்களை இழந்தது தான் மிச்சம், தாத்தா சிரமம் பட்டு தந்த பொக்கிஷங்களை நாம் போற்றினாலே போதும். அருமையான பதிவு தந்த சகோ வாழ்த்துகள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  16. தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் அவர்களை நினைவு கூர்வோம்

    பதிலளிநீக்கு
  17. தமிழிற்குச் சான்று
    ஏட்டுச் சுவடிகள் - அதை
    மீட்டுப் பாருங்கள்!
    சுவடிகளின் நிலை
    இப்படி என்றால்
    தமிழின் நிலை
    என்னவாகும்?

    பதிலளிநீக்கு
  18. மனத்தை உருக்கிடும் உண்மைச் சம்பவங்களை வாசிக்கையில் உள்ளம் பதறுகிறது :(
    உ .வே சாமிநாத ஐயர் போன்றோர் என்றென்றும் போற்றுதலுக்கு உரியவர்கள் தமிழ் காத்த தெய்வத்தை நினைவில் நிறுத்திய சிறந்த பகிர்வுக்குப் பாராட்டுக்களும் என் இனிய வாழ்த்துக்களும் சகோதரா சகோதரா .

    பதிலளிநீக்கு
  19. ரசனையாக எழுதி இருக்கிறீர்கள். வீணான சுவடிகளும் இவர் கையில் கிடைத்திருந்தால்...

    பதிலளிநீக்கு
  20. ரசனையாக எழுதி இருக்கிறீர்கள். வீணான சுவடிகளும் இவர் கையில் கிடைத்திருந்தால்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீணான சுவடிகளும் இவர் கையில் கிடைத்திருந்தால்
      தமிழின் பெருமையினைப் பறைசாற்றும் நூல்கள் பல அல்லவா
      நமக்குக் கிடைத்திருக்கும்
      நன்றி நண்பரே

      நீக்கு
  21. பெயரில்லா13 மார்ச், 2015

    மிகக் கொடுமை...எத்தனை பொக்கிசங்கள்!
    ஆயினும் சில காப்பாற்றப்பட்டன.
    அருமைத் தகவல்கள்.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம்
    ஐயா.

    பதிவை படித்த போது மனம் கனத்து விட்டது ஆகுதியாகிய பொக்கிஷங்களுடன் எத்தனை ஆகுதியாகிருக்கும்.. வரலாறு பாதி அழிந்தது போலதான் ஐயா எம்மொழி பற்றிய சின்ன ஆதாரம் பிற்காலத்தில் பெரிய ஆதாரமாக திகழும்.. தேடலுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயாத.ம 14
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  24. கிடைத்த சுவடிகளே இவ்வளவு விஸ்வரூபம் எடுத்திருக்கும்போது அழிந்த சுவடிகளும் கிடைக்கப் பெற்றிருந்தால் .... ? மிகப்பெரிய if...

    பதிலளிநீக்கு
  25. அய்யா வணக்கம். தாமத வருகைக்கு மன்னியுங்கள். ஏடுதேடி நாடெலாம் திரிந்த தாத்தாவைப் பின்தொடர்ந்த தங்களின் பதிவு துப்பறியும் கதை படிப்பதுபோல விறுவிறுப்பாகச் செல்கிறது. தஞ்சையில் தமிழ்த்தாத்தா பற்றி நான் பேசியபோது -தஞ்சை புத்தகக் காட்சியில் - தாங்கள் எதிரில் இருந்தீர்களே? அதை நினைவூட்டுவதில் மகிழ்கிறேன். இந்தத் தலைமுறைக்கு -கடந்த 3ஆண்டுகளாக- ஆறாம் வகுப்பில் முதல்பாடமாக உவேசா அவர்களைப் பற்றிய பாடம் இடம்பெற நானும் காரணமாக இருந்ததை என்வாழ்வின் மிகவும் பெருமைக்குரியதாக நினைக்கிறேன். அது நினைவிற்கு வந்தது. தங்களைப் போல்வார் அன்பினால் தமிழ்த்தாத்தா இன்னும் பல தலைமுறைகளுக்கு வாழ்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறாம் வகுப்புப் பாடத்தில் தமிழ்த் தாத்தாவிற்கும் இடம் அளித்த, தங்களின் தமிழ்ப் பணி என்றென்றும் போற்றுதலுக்கு உரியது ஐயா.
      இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் நடைபெற்ற புத்தகக் கண் காட்சியினை நினைவில், இன்றும் தேக்கி வைத்திருக்கும்
      தங்களின் நினைவாற்றலை வணங்குகின்றேன் ஐயா
      நன்றி

      நீக்கு
  26. உ.வே. சா அவர்களை பற்றிய அருமையான பதிவு! நேரடியாக நடப்பது போன்று விவரித்த பாங்கு அருமை! தொடர்க! நன்றி!

    பதிலளிநீக்கு
  27. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    படிக்கும் பொழுதும் படித்த பின்பும் மனம் கனத்து தொண்டை அடைத்தது போன்ற உணர்வு. நாம் பார்க்க வேண்டும் என்று விரும்பிய முக்கிய நபரை பார்க்க முடியாமல் அவரை எரித்து விட்டோம் என்று சொல் கேட்டதைப் போன்று நம் மனது ஆற்றாமையால் துயரப்படுகிறது. அறியாமையாலும் அலட்சியத்தாலும் நம் இலக்கியச் செல்வத்தை அழித்து விட்டு நம் தாய் மொழித் தமிழை இழிவாக பேசும் மக்களிடையே நாம் வாழ்ந்து வருவதும் உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழின் பெருமை அறியா மக்களுடன்தான் நாம் வாழ்ந்து வருகிறோம்
      நன்றி நண்பரே

      நீக்கு
  28. இதையாவது உ வா சா அவர்களால் காப்பாற்ற முடிந்ததே ,அது நாம் பெற்ற பேறு!
    த ம 17

    பதிலளிநீக்கு
  29. பெரியவர் உ.வே.சா. போலவே ஆங்கிலேய அதிகாரி எல்லீஸ் டங்கன் என்பவரும் தமிழகம் முழுவதும் அலைந்து ஓலைச் சுவடிகளை சேகரித்தார். அதையெல்லாம் அன்றைய மதுரை மாவட்ட கலெக்டர் பங்களாவகவும், இன்று காந்தி மயூசியமகவும் இருக்கும் கட்டடத்தில் பத்திரப்படுத்தினார். அவர் இறந்த பின், மலையாக குவிந்திருந்த ஓலைச்சுவடிகளை மாதகணக்கில் அடுப்பெரிக்க பயன் படுத்திருக்கிறார்கள். எத்தனை பெரிய இழப்பு தமிழுக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லீஸ் டங்கன் அவர்களின் உழைப்பின், நம் தமிழின் அருமை தெரியாதவர்களாக அல்லவா நாம் இருந்திருக்கிறோம்
      நன்றி நண்பரே

      நீக்கு
  30. மிக தாமதமாய் வருகிறேன். ஆனால் படிக்கையிலேயே தமிழ்த்தாத்தா தான் எனப் புரிந்து விட்டது. வயிற்றெரிச்சல் தான். பெருமை அறியா மக்கள். இப்படித் தான் இப்போது கோயில்களின் கல்வெட்டுக்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். :( யாருக்கும் வெட்கம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது முன்னோர்களின் அருமை தெரியாமல் இருக்கிறோம், அறியாமையை தொடர்ந்து கொண்டும் இருக்கிறோம் சகோதரியாரே
      நன்றி

      நீக்கு
  31. பழமையின் பெருமை அறியாதவர்கள், கற்பூரம் வாசமானது
    என்பது கூட அறியாமல் இருந்தவர்களை எப்படித்தான்
    நொந்துகொள்வது தங்களின்நடையில் படிப்பது அலாதிதான்
    சகோதரரே.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் !

    அழித்தது எரித்தது எண்ணற்ற பொக்கிசங்கள்
    இருப்பதைக் காத்தார் ஊ வே சா அவர்போல
    செழித்திட வைப்போம் சிதறாமல் எம்தமிழை

    சிறந்த பதிவு என்றும் நீங்காத நினைவுகளில் ஊ வே சா

    வாழ்த்துக்கள் நண்பரே
    தம 19

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செழித்திட வைப்போம் சிதறாமல் எம்தமிழை
      நன்றி நண்பரே

      நீக்கு
  33. மிக மிக அருமை.தமிழ் காத்த அய்யா அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  34. yes. It is true. Dr.U.V.Saa Iyer Only searched,collected and gathered all remarakable tamil literature for us. thanks to remember him

    பதிலளிநீக்கு
  35. அய்யா அற்புதமான பதிவு.. தமிழுக்காக நடந்து தேய்ந்த உவேசாவின் பாதங்களுக்கும் .. அவரை நினைவுபடுத்திய தங்களது கரங்களுக்கும், முத்து நிலவன் போன்ற பெருந்தகைகளுக்கும் தமிழ்சமுகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  36. மிக மிக அருமையான பதிவு அய்யா. உங்கள் நடையில் தமிழ்த் தாத்தா உவேசாவின் அற்பணிப்பை படிக்கும் போது மிக அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  37. அருமையான பதிவு. இன்னும் எத்தனை எத்தனை பொக்கிஷங்களை நாம் இழந்திருக்கிறோமோ. ஆனால் ஒன்று, இவர் மட்டும் இல்லையென்றால் பல நல்ல தமிழ் நூல்களை எல்லாம் நமக்கு தெரியாமல் போயிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே
      உ.வே.சா அவர்கள் இல்லையால்
      பொக்கிசங்கள் பலவற்றை நாம் இழந்திருப்போம்
      நன்றி நண்பரே

      நீக்கு
  38. தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் தேடுதல்களால் பல பொக்கிஷங்கள் கிடைத்தன. சில தண்ணீரிலும், நெருப்பிலும் போனது வருத்தமான நிகழ்வுதான். தமிழ்தாத்தாவின் பெருமைகளை அழகாய் சொன்னீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  39. போற்றுதலுக்குரிய தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் சரித்திரம் என்ற புத்தகத்தை முழுவதுமாகப் படித்து வியந்திருக்கிறேன். அவரைப்பற்றிய இந்தத்தங்களின் சிறப்பான பதிவுக்கு பாராட்டுக்கள் + நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  40. அன்பின் ஜெயக்குமார்

    தமிழ்த் தாத்தா - உ. வே. சாமிநாத ஐயர் அவர்களைப் பற்றிய அருமையான பதிவு பாராட்டுக்குரியது.

    பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் ஜெயக்குமார்.

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  41. அன்பின் ஜெயக்குமார்

    தமிழ்த் தாத்தா - உ. வே. சாமிநாத ஐயர் அவர்களைப் பற்றிய அருமையான பதிவு பாராட்டுக்குரியது.

    பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் ஜெயக்குமார்.

    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  42. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (21/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    பதிலளிநீக்கு
  43. சிலருக்கு பொன்னும் பொருளும் பெறுமதியானவை..எங்கள் தமிழ்த்தாத்தாவுக்கு ஏட்டுச்சுவடிகள் தான் பெறுமதியானவை.அதைச் சித்தரித்த.முறை பிரமாதம்..பாராட்டுக்கள்.......உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு