06 ஆகஸ்ட் 2017

பண்பெனப்படுவது



     
      ஆண்டு 2008.

      செப்டம்பர் மாதம்.

      அகமதாபாத்

      இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்

      I.I.M
 
     எம்.பி.ஏ., மாணவர்களுக்குப் பாடம் நடத்த, ஒரு புதுப் பேராசிரியர், வருகைப் பேராசிரியர் (Visiting Professor), பெரும் பதவி வகித்தவர், பணிக் காலம் முடிவடைந்த நிலையில், கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் நடத்த, வர இருக்கிறார் என்ற செய்தி அறிந்து வளாகமே பரபரப்பில் மூழ்கியது.


      முனைவர் அணில் குப்தா என்ற பேராசிரியரும், மாணவர் தலைவரும், வருகைப் பேராசிரியரை வரவேற்பதற்காக, விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

      இதோ வானூர்தி மெல்ல இறங்கித் தரையைத் தொட்டு, வேகமாய் ஓடி, மெல்லத் திரும்பி, ஒரு கட்டிடத்தின் முன் நின்று, தன் கதவுகளைத் திறக்கிறது.

      ஓங்கி உயர்ந்த படிக்கட்டு, விமானத்தைத் தொட்டு உறவாடி, இணைந்து நிற்கிறது.

      பயணியர் ஒவ்வொருவராய் இறங்குகின்றனர்.

     இதோ வருகைப் பேராசிரியர்.

     பேராசிரியர் அணில் குப்தா வணங்கி வரவேற்கிறார்.

       விருந்தினர் மாளிகையில் தாங்கள் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. ஐ.ஐ.எம் இன் இயக்குநர், பேராசிரியர் சபீர் பரூவா அவர்கள், தங்களை வரவேற்க, விருந்தினர் மாளிகைக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

      பேராசிரியர் அணில் குப்தா அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட, அடுத்த நொடியில், வருகைப் பேராசிரியரின் முகத்தில் ஒரு மாறுதல், ஒரு சிந்தனை.

      சில நொடிகளில், ஏதோ ஒரு முடிவிற்கு வந்த வருகைப் பேராசிரியர், மெல்லத் திரும்பி, தனது உதவியாளரிடம் கூறினார்.

நாம் நேராக கல்லூரிக்குச் செல்வோம்.

      பேராசிரியர் அணில் குப்தா அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

      ஏன்?, ஏன், விருந்தினர் மாளிகைக்குச் செல்லாமல், நேரே கல்லூரிக்குச் செல்வோம் என்கிறார்.

      ஏதேனும் தவறு நிகழ்ந்து விட்டதோ, நம்மையும் அறியாமல், ஏதேனும் தவறு செய்துவிட்டோமோ?

    அணில் குப்தா குழப்பத்தோடு, வருகைப் பேராசிரியரின் பின்னே நடக்கிறார்.

     வருகைப் பேராசிரியரின் மகிழ்வுந்து, கல்லூரியை நோக்கி விரைந்தது.

      அம் மகிழ்வுந்தின் முன்னும் பின்னும் பல்வேறு பாதுகாப்பு வாகனங்கள்.

      நாற்பது நிமிடப் பயணம்.

      ஐ.ஐ.எம் கல்லூரியின் கஸ்தூரிபாய் லால்பாய் நிருவாக முன்னேற்ற மையம் (Kasturibhai Lalbai Management Development Centre) சுருக்கமாய் கே.எல்.எம்.

      கே.எல்.எம்., கட்டடத்தின் முன் மகிழ்வுந்து நிற்கிறது

      வருகைப் பேராசிரியர், படிக் கட்டுகளில் வேகமாய் ஏறி, கட்டிடத்தின் உள் நுழைகிறார்.

     ஐ.ரு.எம். இன் இயக்குநர் பேராசிரியர் பரூவா, செய்தியறிந்து, வேகமாய், ஓட்டமும் நடையுமாக விரைந்து வந்து, வருகைப் பேராசிரியரை வரவேற்கிறார்.

      இயக்குநருக்கு வணக்கம் கூறிய வருகைப் பேராசிரியர், மலர்ந்த முகத்துடன், இயக்குநரின் கரம் பற்றி மகிழ்ந்து, மெல்லப் பேசினார்.

      இந்த வளாகத்திற்கு வெளியில், நான் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இந்த வளாகத்தைப் பொறுத்தவரை, தாங்கள் இயக்குநர், நான் பேராசிரியர்.

      பேராசிரியர்தான் இயக்குநரைப் பார்க்க வர வேண்டுமே தவிர, இயக்குநர் பேராசிரியரைப் பார்க்க வரக்கூடாது.

      எனவேதான், விருந்தினர் மாளிகைக்குச் செல்லாமல், தங்களைக் காணக் கல்லூரிக்கு விரைந்து வந்தேன்.

       தாங்கள் என் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

       இயக்குநர் மட்டுமல்ல, அந்த வளாகமே, வருகைப் பேராசிரியரின் பண்பில், அன்பில் நெகிழ்ந்துதான் போய்விட்டது.

       இப்படியும் ஒரு மனிதரா என அங்கிருந்த, ஒவ்வொருவரும் வியந்துதான் போனார்கள்.

       நண்பர்களே, இந்த வருகைப் பேராசிரியர் யார் தெரியுமா?

      இவர் இதற்குமுன் வகித்த பதவி என்ன தெரியுமா?

      இந்தியாவின் உச்சப் பதவி

      இந்தியாவின் முதற் குடிமகன்

       இந்தியக் குடியரசுத் தலைவர் பதவி.

இவர்தான்



இளைஞர்களின் எழுச்சி நாயகர்

ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.
---------------


வாக்களிக்க