நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜ ராஜீஸ்வரமுடையார்க்கு
நாங் குடுத்தநவும், அக்கன் குடுத்தநவும்,
நம் பெண்டுகள் குடுத்தநவும்
மற்றும் குடுத்தான் குடுத்தநவும்.
---
     ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்.
     புத்தம் புது கோயில்
     கோயில் முழுவதும் ஒரே பரபரப்பு
     மக்கள் தங்களுக்குள் பலவாறு, மகிழ்வோடு பேசிக்கொண்டு
காத்திருக்கிறார்கள்.
    புதிதாய் ஓர் அரங்கு எழும்பி நிற்கிறது
     நன்கொடைகளை வைப்பதற்காகவே உருவாக்கப் பெற்ற அரங்கு.
     இதோ அரண்மனை மகளிர் வர துவங்குகின்றனர்.
     ஒவ்வொருவரும், அரசி முதல் அந்தப்புர மகளிர் வரை,
அனைவரும், தங்கள் திருமாங்கல்யம் மற்றும் அத்தியாவசிய ஓரிரு நகைகளைத் தவிர, தங்களுக்கு
உடமையான, உரிமையான, அத்துணை நகைகளையும் இறைவனுக்குக் காணிக்கையாய் வழங்குகிறார்கள்.
     மக்கள் வியப்பின் உச்சிக்கே சென்று, பார்த்துக்
கொண்டிருக்க, அவர்களின் கண் எதிரிலேயே, அந்த அரங்கு, பொன் ஆபரணங்களால் ததும்பி வழியத்
தொடங்குகிறது.
     உண்மை
     ஆனால், இந்த நகைகள் எல்லாம் இன்று எங்கே?
     யாருக்கும் தெரியாது.
---
     ஜகதி
     ஜகதிப்படை
     ஜகதி என்பது திண்ணை வரியில், ஓர் ஓடு வர்க்கத்தின்
பெயர்.
     ஜகதிப்படை கல்வெட்டு
      ஐந்தடி உயரத்தில், இரண்டோ அல்லது மூன்று அடி
அகலத்தில் இருக்கும்.
     எளிதாய் படிக்கலாம்
     ஆனால் ஒரு கல்வெட்டு நீண்டு கொண்டே செல்லுமானால்,
எங்கே தொடங்குகிறது, எங்கே மடங்குகிறது, எங்கே முடிகிறது என்று மெத்தப் படித்தவர்களே
அறியா வண்ணம், நீளுமானால், அது ஜகதிப்படை கல்வெட்டு. 
     ஜகதிப்படை கல்வெட்டு
     தஞ்சைப் பெரியக் கோயில் ஜகதிப்படை
     தஞ்சைப் பெரியக் கோயிலில் 31 பத்திகளில், நீண்ட,
நெடிய ஜகதிப்படைக் கல்வெட்டுகள் உள்ளன.
     இந்தக் கல்வெட்டுகள், நாம் படிக்கக் கூடிய, பேசக்
கூடிய தமிழில்தான் இருக்கின்றன என்று சொன்னால் நம்புவீர்களா?
     உண்மை
     கல்வெட்டு எங்கு தொடங்குகிறது?
     எங்கு முடிகிறது?
     ஒவ்வொரு சிவன் கோயிலிலும், வலதுபுற நடை பாதையில்,
சண்டிகேசுவரர் இருப்பார் அல்லவா?
     தஞ்சைப்
பெரியக் கோயிலிலும் ஒரு சண்டிகேசுவரர் இருக்கிறார்.
     வலது புறத்தில் ஒன்பது பத்திகளில் கல்வெட்டு
     தொடர்ந்து, கோயிலின் பின்புறச் சுவற்றில் ஒன்பது
பத்திகள்
     இதன் தொடர்ச்சி, கருவறையின் இடது பக்க வெளிச்
சுவற்றில் ஒன்பது பத்திகளில்.
     பொதுவாக எந்த கோயிலுக்குச் சென்றாலும், இடது
புறமாகச் சென்று கோயிலைச் சுற்றிக் கொண்டு, வலதுபுறமாக, வெளியே வருவோம்.
     ஆனால் இந்த ஜகதிப்படை கல்வெட்டுகளோ, வலது புறம்
தொடங்கி, இடதுபுறம் வரை கருவறையைச் சுற்றி நீளுகின்றன.
     இவை தவிர, கருவறையின் முன் இருக்கும், நீண்ட
மண்டபத்தின் இடது புற வெளிச் சுவற்றில் இரு பத்திகள், வலது புற வெளிச் சுவற்றில் இரு
பத்திகளில் கல்வெட்டுகள் உள்ளன.
     மண்டபத்தின் இடதுபுறம் 28 மற்றும் 29 வது பத்தி.
     மண்டபத்தின் வலது புறம் 30 மற்றும் 31 வது பத்தி
     கோயிலைச் சுற்றி 31 பத்திகளில் ஜகதிப்படை கல்வெட்டுகள்.
     சண்டிகேசுவரருக்கு
முன் படிக்கத் தொடங்கி, வலமிருந்து, இடமாக நடப்போமானால், ஒரு முழு வட்டம் அடித்து,
சுற்றி வந்து, மீண்டும் சண்டிகேசுவரருக்கு அருகிலேயே 31 வது பத்தியைப் படித்து முடித்திருப்போம்.
     இக்கல்வெட்டுகளில், இராஜராஜ சோழனின் 23 ஆம் ஆட்சி
ஆண்டுதொடங்கி, 29 ஆம் ஆட்சி ஆண்டு வரை, ஏழு ஆண்டுகளில் வழங்கப் பெற்ற நன்கொடைகள் ஐந்து
மெய் கீர்த்திகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.  
     இரண்டு ஆண்டுகளில் மட்டும், நாள் குறிப்பிட்டு,
நன்கொடைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 
     25 ஆம் ஆட்சியாண்டில் 275வது நாள், 310வது நாள்,
312வது நாள் என நன்கொடைகளோடு, நாளும் குறிக்கப்பட்டுள்ளன.
     சண்டிகேசுவரருக்கு எதிர்புறம் பத்தி 1 முதல்
பத்தி 9 வரை முதல் மெய் கீர்த்தி.
     கோயிலின் கருவறையின் பின்புறம், பத்தி 10 முதல்
பத்தி 18 வரை இரண்டாம் மெய் கீர்த்தி.
     கருவறையின் இடது புறம் பத்தி 19 முதல் பத்தி
27 வரை மூன்றாம் மெய் கீர்த்தி.
     இடது புற மண்டபத்தில் 28 மற்றும் 29 ஆம் பத்திகளில்
நான்காம் மெய்கீர்த்தி
     வலது புற மண்டபத்தில் 30 மற்றும் 31 ஆம் பத்திகளில்
ஐந்தாம் மெய் கீர்த்தி.
     ஒரு மெய் கீர்த்திக்கும் அடுத்த மெய் கீர்த்திக்கும்
இடையே, பட்டையாய் ஒரு பூ வேலைப்பாடு காட்சியளிக்கிறது.
     சில இடங்களில் இரு பத்திகளுக்கு இடையே, உள்ளடங்கிய
அமைப்பில், ஒரு பாந்து இருக்கும்.
     இந்தப் பாந்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
     முதல் பத்தியைப் படித்து முடித்துவிட்டு, இந்த
பாந்தின் வரிகளை, மேலிருந்து, கீழாகத் தனியாகப் படிக்க வேண்டும்.
     பின் அடுத்த பத்தியை, மேல் வரியில் இருந்து படிக்கத்
தொடங்க வேண்டும்.
     மெய் கீர்த்தி நிறைவு பெற்றவுடன் இறுதியில் முற்றுப்
புள்ளி வைக்கப் பெற்றிருக்கும்.
---
     பலமுறை தஞ்சைப் பெரியக் கோயிலுக்குச் சென்றிருக்கிறேன்
     இக்கல்வெட்டுக்களை எல்லாம் வியந்து பார்த்திருக்கிறேன்
     ஆனால் ஒரு முறை கூட, படித்துப் பார்க்க முயன்றதே
இல்லை.
     நம்மால் முடியாது என்று பொதுப் புத்தியில் பதிந்து
போயிருப்பதுதான் காரணம்.
     ஆனால் உங்களால் முடியும்
     முயன்று பாருங்கள் என்று இம் மனிதர் பேசப் பேச,
நான் மட்டுமல்ல, அரங்கே, புத்துணர்வு பெற்ற உணர்ச்சியில் ததும்பிக் கொண்டிருந்தது.
     ஒன்றல்ல, இரண்டல்ல, கடந்த பத்து ஆண்டுகளாக, தஞ்சைப்
பெரியக் கோயிலை, அணு அணுவாக ஆராய்ந்து வருபவர் இவர்.
ஜகதிப்படை கல்வெட்டு
ஆய்வாளரும்,
கோயில் கட்டிடக் கலை ஆலோசகருமான
திரு தென்னன் மெய்ம்மன் அவர்களின்
தங்கு
தடையற்ற, தெளிந்த நீரோடை போன்ற
அற்புதப்
பொழிவில், அரங்கே தன்னிலை மறந்துதான் 
அமர்ந்திருந்தது.
    ஜகதிப்படை கல்வெட்டுகள், இன்று ஒரு சில இடங்களில்
மக்களின் அறியாமையால், கவனக் குறைவால் சிதைந்து போய்விட்டன.
     மீதமிருக்கும் கல்வெட்டுக்களைக் காப்பாற்றி,
எதிர்காலச் சந்ததியினரிடம், பத்திரமாய், பக்குவமாய் ஒப்படைக்க வேண்டியது நமது கடமையாகும்.
     எனவே, ஜகதிப்படை கல்வெட்டுகள் முழுமையையும்,
ரப்பர் பாகினை, உருக்கி, அச்செடுத்து, கல்லில் இருக்கும் கல்வெட்டை, ரப்பரில், மூலத்தைப்
போலவே, அச்சு அசலாய் உருவாக்க வேண்டும் என்பது இவரது கோரிக்கையாகும்.
     அரசு ஆவண செய்ய வேண்டும்
---
ஏடகம்
ஞாயிறு முற்றம்
கடந்த 9.6.2019 மாலை.
ஓய்வு பெற்ற
அரசு மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியர்
புலவர் மா.கோபாலகிருஷ்ணன் அவர்கள்
தலைமையில்
நடைபெற்றப் பொழிவிற்கு வந்திருந்தோரை,
சுவடியியல் மாணவி
திருமதி பி.மகேஸ்வரி அவர்கள்
வரவேற்றார்.
பொழிவின் நிறைவில்
சுவடியியல் மாணவி
செல்வி மா.தாரிணி அவர்கள்
நன்றி கூற
விழா இனிது நிறைவுற்றது.
விழா நிகழ்வுகளை
சுவடியியல் மாணவி
திருமதி செ.முத்துலட்சுமி அவர்கள்
திறம்படத் தொகுத்து வழங்கினார்.
ஏடகம்
தஞ்சை வாழ் மக்களின் நம்பிக்கையினையும். நல் மதிப்பினையும்
பெற்று நாளும் வளர்ந்து வரும் அமைப்பாகும்.
தஞ்சையின் மேனாள் சட்ட மன்ற உறுப்பினரும்.
மேனாள் அமைச்சரும்
சிறந்த இலக்கியவாதியுமான
குறள்நெறிச் செல்வர்
திரு சீ.நா.மி.உபயதுல்லா அவர்கள்
இந்நிகழ்விற்கு வருகை தந்துச் சிறப்பித்தார்.
திங்கள்தோறும் பொழிவு
பொழிவு ஒவ்வொன்றும்
தமிழின் தகவையும், தொன்மையையும்
உலகிற்கு உணர்த்தும்
உன்னதப் பொழிவு என
ஏற்பாடு செய்து
தஞ்சையினையே வியக்கச் செய்துவரும்
ஏடகம்
நிறுவுநர்
திரு மணி.மாறன் அவர்களின்
முயற்சி போற்றுதலுக்கு உரியது
போற்றுவோம், வாழ்த்துவோம்.












 
