28 ஜூலை 2019

அஸ்தி




     நான் இந்த நாட்டின் குடிமகன்

     அரசுக்கு மற்றவர்களைப் போலவே வரி செலுத்துகிறேன்

     இந்திய அரசின் அமைப்பியல் சட்டத்தின் 51(அ) பிரிவு, குடி மக்களின் உரிமைகளைக் கூறிக் கடமைகளை வலியுறுத்துகிறது.
 
     அந்தப் பிரிவில், இந் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும், அறிவியல் முறையான அணுகுமுறை, மாந்த நேயத் தன்மை மற்றும் ஆராய்வு, ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பதற்கும், காப்பதற்கும் ஆவண செய்வதை, தன் கடமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

     எனவே, அச்சட்டப் பிரிவு கொடுத்த உரிமையில், நான் அரசின் செயலை, அறிவியல் உணர்வுடன் அணுகித் தவறு என்று கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

     1984 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில், தன் கருத்துக்களைத் தமிழில், தனித் தமிழில் எடுத்து, முன் வைத்திருக்கிறார் இந்தத் தமிழறிஞர்.

     சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழில் வாதாடி இருக்கிறார்.

     எதனை எதிர்த்து  தெரியுமா?

     இறந்துபோய்விட்ட ஒருவரின் அஸ்தியை, பொதுமக்கள் பார்வைக்காகவும், வணங்குவதற்காகவும் வைப்பதை எதிர்த்து வழக்கு.

     அஸ்தி என்று கூறப்படும் உடல் எலும்புச் சாம்பல், அறிவியல் தகுதியில், மற்ற பொருள்களின் சாம்பலைப் போன்றதே ஆகும்.

     அதற்கு ஏதேனும் தனிச் சிறப்போ, தனிக் குண நலன்களோ, பெருமைக்குரிய தன்மைகளோ இருப்பதாக, அறிவியல் முறையில், எந்த ஓர் அறிஞரும் ஆராய்ந்து கூறிவிட முடியாது.

      உயர் நீதி மன்றத்தில் இவர் பேசப் பேச, நீதி மன்றம் மட்டுமல்ல, தமிழ் நாடே வியந்துதான் போனது.

      யாருடைய அஸ்தியை பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் தெரியுமா?

       மெய்க்காவலர்களால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பெற்ற, பாரதப் பிரதமர் மாண்புமிகு இந்திரா காந்தி அவர்களின் அஸ்தியைப் பொதுமக்கள் பார்வையில் வைப்பதை எதிர்த்துத்தான் வழக்கு தொடுத்திருந்தார்.

      இந்திரா காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து அல்ல, இந்த வழக்கு, இந்திரா காந்தியின் பெயரால் நடத்தப்பெறும் மூடநம்பிக்கையை எதிர்ப்பதற்கே இந்த வழக்கு.

      அவரின் (இந்திரா காந்தி) சாம்பல் பற்றிய வழக்கு இது என்பதால், அவருக்குரிய பெருமையைத் தாழ்த்தியோ, இழித்தோ கூறுவதாக யாரும, பொருள் கொண்டுவிடத் தேவையில்லை.

     அவர் இந்நாட்டின் தலைமை அமைச்சர் என்பதிலும், பொறுப்பு வாய்ந்த ஒரு பணியை ஆற்றி மறைந்து போயிருக்கிறார் என்பதிலும் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

      அவருக்கென்று பல பெருமைகள் உள்ளன

      அவருக்கு அல்ல எதிர்ப்பு

       அவரது அஸ்திக்குத்தான்.

     தமிழாய்ந்த அறிஞரின் உரையைக் கேட்ட நீதியரசர், அற மன்றம் பொது மக்களின் நம்பிக்கையைத் தடுத்த நிறுத்த முடியாதே, அதை தங்களைப் போனற பொதுநலம் நாடுபவர்கள்தான், பொது மக்களிடன் சென்று, அறிவுக் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் என்றார்.

     விடவில்லை தமிழறிஞர்

     அந்த வேலையை நாங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

     ஆனால் அரசே, இத்தகைய மூட நம்பிக்கைகளை வளர்க்கின்ற செயல்களில் ஈடுபட்டால், நாங்கள் என்ன செய்வது என்றார்.

      கடைசிவரை விடாமல்தான் வாதாடினார்

     ஆயினும், இவ்வழக்கு, தேசத்தின்  புனிதத்தைக் குற்றப் படுத்துவதாகவும், காலம் கடந்த மேல்முறையீடு எனவும் தள்ளுபடியாகிவிட்டது.

     இருப்பினும், தனது கொள்கையில் இருந்த உறுதியின் காரணமாகவும், எவருக்கும் அஞ்சாத தனது குணம் காரணமாகவும், நெஞ்சம் நிமிர்த்தி, அழகுத் தமிழில், வழக்காடியவர், யார் தெரியுமா?

கெஞ்சுவ தில்லை பிறர்பால், அவர்தம் கேட்டினுக்கும்
அஞ்சுவ தில்லை, மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவ தில்லை, எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவ தில்லை, புவியில் எவரும் எதிர்நின்றே.


என முழங்கியவர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்



19 கருத்துகள்:

  1. சிறப்பு. சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
  2. தமிழில் உரை சிறப்பு... தமிழறிஞர் மிகவும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  3. போற்றுதலுக்குறியவர் அஞ்சாநெஞ்சனை வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வு. இதுவரை அறிந்திராத தகவல்.

    பதிலளிநீக்கு
  5. பாவலரேறு பெருஞ்சித்திரனார் பற்றிய தங்களின் படைப்பு மிகவும் அருமை ஸார்..வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. மிகவும் அறிய தகவல் நண்பரே. நன்றி

    பதிலளிநீக்கு
  7. அறியாத தகவல். தேடிப் பகிரும் உங்களின் முயற்சிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  8. கரடியாய்க் கத்தினாலும்சில கருத்துகளை மற்றமுடியாது ரத்தத்தில் ஊறிப்போனவை ஏனெனில்பெரும்பாலோர் அப்படித்தானிருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  9. அருமையான பகிர்வு. கருத்துக்கள் அதிரடியானவை என்றாலும் அதற்கான தீர்ப்பு அதிரடியாக இல்லாமல் போய் விட்டது! இது போன்ற அரிய அறிந்திராத தகவல்களை அடிக்கடி அறியக்கொடுப்பதற்கு அன்பார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
  10. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நியாயபூர்வமான கருத்துக்களை ஏற்றுக்கொண்டு துணிச்சலைப்பாராட்டுவதுடன் இதனைச் சிறப்பாகப் பதிவு செய்த திருமிகு கரந்தை ஜெயக்குமாருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்

    பதிலளிநீக்கு
  11. நீதி மன்றத்தில் தனித்தமிழில் வாதாடிய மாத்தமிழனைப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  12. சிறப்பு. அறிவியல் சிந்தனை இருந்ததனாலேயே அவரால் இவ்வாறு வாதாட முடிந்தது. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  13. புதிய தகவல் ...அருமை

    பதிலளிநீக்கு
  14. சகோதரா எனது வலது கை முறிவினால் கருத்துகள் இட முடியவில்லை.
    சுகமாக எழுதுவேன் பொறுத்தருளவும்.

    பதிலளிநீக்கு
  15. சில மாதங்களுக்குப் பிறகு தங்கள் தளத்திற்கு வருகிறேன். பலருக்கும் தெரியாத செய்திகளைத் தருகிறீர்கள். இளமையில் பெருஞ்சித்திரனாரின் தமிழ்ப் பெருமை மிக்க கருத்துக்களில் கவரப்பட்டவன் நான் என்பதால் சுவை கூடுகிறது.

    -இராய செல்லப்பா (தற்போது நியூஜெர்சியில்)

    பதிலளிநீக்கு
  16. இப்பொழுதுதான் அறிந்துகொண்டேன் இப்படியொரு வழக்கு நடைபெற்றதையும், தமிழ் அறிஞர் வாதத்தையும்..நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு
  17. இவரைப் பற்றி ஒரளவுக்குத் தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
  18. அன்று போல் இன்று இல்லை... படிக்காத பாமரன் வீட்டு பிள்ளைகூட ஆங்கில மோகத்தால் வீழ்த்தப்படுகின்றன்.... அடுத்து இந்தீ....

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு