22 டிசம்பர் 2020

உதிரம் உறைந்த பூமி

 


     கி.பி.,ஒன்பதாம் நூற்றாண்டு.

     காவிரிக்கும் மேற்கே தொடங்கி, திருவேங்கடத்தையும் தாண்டியப் பெருநிலப் பரப்பில் பல்லவப் பேரரசும், காவிரிக்கு தெற்கே தொடங்கி, குமரியின் அடிமுனை வரையிலானப் பெரும் பரப்பை பாண்டியரும் ஆண்டு கொண்டிருந்த காலம்.

     முத்தரையரிடம் போரிட்டு கைப்பற்றிய சிறு பகுதிகளை மட்டுமே, பல்லவர்களின் துணையோடு, சோழர்கள், குறு நில மன்னராய் ஆண்டு கொண்டிருந்த காலம்.

     எப்படியும் பல்லவர்களை அழித்தே தீருவது என்ற எண்ணத்தில் இருந்த, இரண்டாம் வரகுண பாண்டியன், சற்றேறக்குறைய ஒன்றரை இலட்சம் படை வீரர்களோடு புறப்பாட்டான்.

   

  பல்லவ மன்னன் நிருபதுங்க வர்மனோ முதுமையை எட்டியிருந்தான்.

     எனவே தன் மகன் அபராஜித வர்மனைப் போர் முனைக்கு அனுப்பினான்.

     மேலும் பல்லவப் படையானது, தொடர் போர்களால் வலிமை குன்றியிருந்ததால், கங்க மன்னன் பிருதுவீ பதியையும், சோழ மன்னன், விஜயாலயனையும் துணைக்கு அழைத்தான்.

     பல்லவனைப் போல் முதுமையைத் தொட்டிருந்த விஜயாலயன், தன் மகன் ஆதித்த சோழனை அனுப்பினான்.

     சோழர் படை சிறிதுதான் எனினும், திறம்படப் போர் செய்வதில் அனைவரையும் வல்லவர்களாய் மெருகேற்றியிருந்தான், அனைத்து அரசியல் தந்திரங்களையும், போர் நெறிகளையும், நன்கு கற்றுத் தேர்ந்திருந்த ஆதித்தன்.

     தொடக்கத்திலேயே ஆதித்தனுக்குத் தெள்ளத் தெளிவாய் புரிந்து விட்டது, இந்தப் போர், பாண்டியர்களுக்கும், பல்லவர்களுக்கும் இடையிலான இந்தப் போர், சோழர்களுக்குச் சாதகமாய் மாறும் என்பது தெரிந்து விட்டது.

     எனவே தன் படையில் இருந்த சொற்ப அளவிலான வீரர்களுக்கு, தங்களுக்கு இழப்பேதும் இல்லாமல், எதிராளிக்கு மட்டும் பெரு இழப்பினை ஏற்படுத்தி வெல்லும் கலையை, பயிற்சியை முழுதாய் அளித்திருந்தான்.

     கி.பி.880.

     தை மாதத்தில் ஒரு நாள்.

     காலை 9.00 மணி

    கொம்பு ஊதியது.

     பாண்டியப் படைகளும், பல்லவப் படைகளும் நேருக்கு நேராய் சந்தித்தன.

     போர் தொடங்கியது.

     தொடக்கத்தில் இருந்தே, பாண்டியர் படைகளுக்கு இழப்பு.

     கங்க மன்னன் வளைத்துத் தாக்கினான்.

     சோழப் படைகளோ, இடமும் வலமுமாய் மாறி, மாறி பாண்டியப் படைகளை ஊடறுத்துத் தாக்கி, பாண்டியர்களைக் கொன்று கூறு போட்டன.

     வெகுண்டு போன வரகுணன், களத்தினுள் புகுந்து, கங்க மன்னன் பிரதிவீபதி அமர்ந்திருந்த யானையின் மேல் தாவி ஏறி, அவனை வீழ்த்தினான்.

     ஆனால் அதற்குள், பாண்டியர் படை முற்றாய் அழிந்தே போய்விட்டது.

     மீதமிருந்த சில நூறு வீரர்களுடன் வரகுணன் தப்பியோடினான்.

     பன்னிரெண்டரை மணியளவில் போர் முடிந்தே விட்டது.

     மூன்றே மூன்று மணி நேரம்.

     சுமார் இரண்டு இலட்சம் பேர் வீர மரணம்.

     களம் நெடுகிலும் வெட்டுண்ட உடல்கள், எண்ணற்ற யானைகளின், குதிரைகளின் சடலங்கள்.

     ஓலக் குரல்கள்.

     அப்பகுதியே இரத்த வெள்ளத்தில் நனைந்து போனது, உறைந்து போனது.

     இப்போரில் பாண்டியர்க்கு மட்டுமல்ல, பல்லவப் படைக்கும் பேரிழப்பு.

     இனியும் தென்பகுதியைக் கட்டிக் காக்க இயலாது என்பதை உணர்ந்த அபராஜித வர்மன், பாண்டிய நாட்டின் வட பகுதியையும், தஞ்சையைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சோழருக்கு அளித்தான்.

     சோழர் பேரரசு புத்துயிர் பெற்றது.

     மீண்டு எழுந்தது.

---

     கி.பி.9 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற, இப்பெரும் போரின், எச்சமாய் இன்று ஒரு சிறு தோப்பு மீதமிருக்கிறது.

     பச்சை பசேல் என்று விரிந்து பரந்து, நெற்கதிர்கள் வளர்ந்து நிற்கும் வயல் வெளிகளுக்கு நடுவில், ஒரு சிறு தோப்பு.

     ஆலமரங்கள், மூங்கில் புதர்கள் மற்றும் கருவேல மரங்களால் அடர்ந்திருக்கும் ஒரு சிறு தோப்பு.

     அதனுள் ஒரு படை வீடு.

     தன் தந்தை விஜயாலய சோழனுக்கும், யானையின் மீது வீர மரணம் அடைந்த, கங்க மன்னன் பிரதீவிபதி மன்னனுக்கும், ஆதித்த சோழன் எழுப்பிய படைவீடு.

விஜயாலய ஐயனார் சன்னதியாய்

பிரித்திவிராஜ ஐயனார் சன்னதியாய்

போற்றப்பட்டப் படை வீடு,

இன்று

அருள்மிகு பகவதி ஐயனார் திருக்கோயிலாய்

நடுகற் கோயிலாய்

பழுதடைந்து காணப்படுகிறது.

மேற்கூறை எங்கும் செடிகள்.

இதுதான்

திருப்புறம்பியம்

பள்ளிப் படை.

---

     கடந்த 13.12.2020 ஞாயிறன்று காலை, நானும் நண்பர் திரு கா.பால்ராஜ் அவர்களும், இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டோம்.

     தஞ்சாவூர், கும்பகோணம் சாலையில் பயணித்து, திருவலஞ்சுழியில் இடது புறம் திரும்பி, சுவாமிமலையை அடைந்தோம்.

    


சுவாமிமலையில் இருந்து கொட்டையூர் பாதையில் பயணித்து, புளியஞ்சேரியில் இடது புறம் திரும்பினால், ஐந்தே ஐந்து கி.மீ தொலையில் திருப்புறம்பியம்.

     சிற்றூர்.

     ஐயனார் கோயில் எங்கிருக்கிறது? என ஒரு மீன் கடைக்காரரைக் கேட்டோம்.

     போர் நடந்த இடம்தானே, நேராய் போய், இடது புறம் திரும்பிச் செல்லுங்கள் என்றார்.

     சென்றோம்.

     சிறு தெரு.

     சிறிது தூரத்தில், தெரு முடிந்து போனது.

     வயல் வெளி தொடங்கியது.

     இரு சக்கர வாகனத்தைத் தெருவின் முனையிலேயே நிறுத்திவிட்டு, நடக்கத் தொடங்கினோம்.

    




       சுமார் ஒன்றரை கி.மீ., வயல் வரப்புகளில் நடந்தோம்.

     ஒரு தோப்பு.

     தோப்புக்குள், இதோ பள்ளிப்படை.

     இரத்தம் தோய்ந்த பூமியில் நின்றோம்.

     உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு.


    





பல்லவர் படைகளோடு இணைந்து, சோழர் படையும், கங்க படையும், பாண்டியர் படைகளை வேரறுத்த காட்சி, மனக் கண்ணில் திரைப்படமாய் ஓடியது.

     நேரம் நகர்வது தெரியாமல் நின்றோம்.

     சில்லென்ற காற்று முகத்தில் மோதி, சுய நினைவூட்ட, மீண்டும் வயல் வரப்புகளில் நடக்கத் தொடங்கினோம்.

     ஆயிரம் ஆண்டுகளாய், இலட்சக் கணக்கான வீரர்களின், ஆயிரக் கணக்கான யானைகளின், குதிரைகளின் உதிரத்தை, உரமாய் கொண்டு, தொடர்ந்து எழும் நெற்கதிர்கள், காற்றில் அசைந்தாடி, எங்களை வழி அனுப்பி வைத்தன.



பள்ளிப் படையைக் காண வாருங்கள்


29 கருத்துகள்:

  1. முக்கியமான பதிவு. நான் நிச்சயம் இங்கே வருவேன். உங்களை அழைப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா
      தங்களின் வருகைக்காகக் காத்திருக்கிறேன் ஐயா

      நீக்கு
  2. தமிழகத்தில் காணவேண்டிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் ஒன்று. உங்களின் பதிவு எங்களை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அழைத்துச் சென்றது. இதனைப் பார்த்தபோது பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் சென்றது நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சையில் இருந்துகொண்டே இவ்வளவு காலம் இவ்விடத்திற்குச் செல்லாமல் இருந்திருக்கிறேன் என்பதே பெரும் வருத்தமளிக்கச் செய்கிறது ஐயா.
      இவ்விடத்திற்குச் செல்ல, தங்களின் வழிகாட்டுதல்கள் பெரிதும் உதவின
      நன்றி ஐயா

      நீக்கு
  3. எத்தனை உயிர்கள்; சுமார் இரண்டு இலட்சம் பேர் குடும்பங்களின் நிலை... பச்சை பசேலென வயல்வெளி மனதை ஆற்றுப்படுத்தின...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போர்
      ஒரு அரசு வெல்கிறது
      ஒரு அரச தோற்கிறது
      ஆனால் மக்கள் மடிகிறார்கள்
      உண்மைதான் ஐயா, அந்த வயல் வெளிகள் மனதிற்கு பெரும் மகிழ்வினைத் தந்தன
      நன்றி ஐயா

      நீக்கு
  4. அன்பு நண்பருக்கு, சோழர் பேரரசு மீண்டும் எழுச்சி அடைந்ததற்கு காரணமான அந்த போரினை கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் ஆங்காங்கே விவரித்திருக்கிறார் என்பது அந்த நாவலை வாசித்தவர்களுக்கு தெரியும். அவ்வாறு வாசித்த அனைவருக்கும் இது போன்ற இடங்களுக்கும் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டிருக்கும். நீங்கள் அதனை சாத்தியபடுத்தி விட்டது அருமையான செயல். தங்களுக்கும் நண்பர் பால்ராசனாருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. வீரகடம்பகோபு, திண்டுக்கல்22 டிசம்பர், 2020

    சிறப்பு தோழர்.

    வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்

    வருவேன் உங்களின் நினைவோடு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா
      தங்களின் வருகையும்,
      கருத்துரையும் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன
      நன்றி ஐயா

      நீக்கு
  6. கோயிலுக்கான பாதையும் கோயிலும் மிக அழகு... சரித்திரக் கோயில்போலவே தெரியுது பார்க்க.. அதன் சூழலும் சுற்றுப் புறமும். சுவாமிமலையைச் சுற்றி இருக்கும் ஊர்களின் பெயர்கள் புதுமையானவையாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. அருமை. வரலாற்றை கண்முன் கொணர்ந்தமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. நானும் ஒரு சோழ வீரானாக போரிட்டு வந்த உணர்வு நண்பரே.

    பதிலளிநீக்கு
  9. அரிய வரலாற்று நிகழ்வுகளை கண்முன் நிகழ்த்தி காட்டி விட்டீர்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  10. எத்தனை முறை ' பொன்னியின் செல்வன் ' நூலில் இந்த 'திருப்புறம்பியம் பள்ளிப்படை' பற்றி படித்திருக்கிறேன்! இந்த வரலாற்று சிறப்பு மிக்க பள்ளிப்படையை நேரில் சென்று புகைப்படமெடுத்து, நாங்களும் இதைக்காண்பதற்கு இந்தப்பதிவேற்றிய உங்களுக்கு என் அன்பு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் கால் பதித்தபோது, உடலும் உள்ளமும் ஒருசேர சிலிர்த்துத்தான் போய்விட்டன.
      நன்றி சகோதரி

      நீக்கு
  11. கடந்த கால வரலாற்றை கண்முன்னே நிறுத்துகிறது தங்கள் பதிவு.வாழ்த்துகள்.
    ஆழ்ந்த உள் உணர்வோடு சில வரலாறுகளை படிக்கையில் நாமும் அந்த வரலாற்று நாயகர்களோடு தோள்மீது கைபோட்டுக்கொண்டு நடப்பது போன்ற உணர்வு ஏற்படுவது உண்மை.நான் அனுபவித்திருக்கிறேன்.காவிரிக்கரையில் இன்றும் சிலர் வந்தியத்தேவனைத்தேடிக்கொண்டிருக்கிறார்கள் .

    பதிலளிநீக்கு
  12. படங்களுடன் சிறந்த வரலாற்றுத் தொகுப்பு ஐயா!
    2021 இல் - தங்கள்
    தளத்திற்கு அடிக்கடி வருவேன்.

    பதிலளிநீக்கு
  13. ஒருவிதமான சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. இரண்டரை இலட்சம் வீரர்கள் யானை குதிரை மடிந்தபின் அவை எங்கு எவ்வாறு புதைக்கப்பட்டிருக்கும் ? அவற்றில் எதேனும் கிடைத்திருக்கின்றதா?
    2 இலட்சம் வீரர்கள் பாண்டியர்களுடையது எனில் அதே அளவு எதிர்ப் படையும் இருக்குமே . இது மிகைப்படுத்தப் பட்ட எண்ணிக்கையா? பள்ளிப்படை கட்டிடம் சோழர் காலத்ததா ? வ்ரலாற்றில் தொடக்க நிலையில் உள்ளதால் இந்த அய்யங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிற்காலச் சோழர்களின் வளர்ச்சிக்கு வித்திட்டப் போர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளார்கள் ஐயா.
      இலட்சக் கணக்கான வீரர்கள் மடிந்தது உண்மைதான்.
      போர் முடிந்தபின் அனைவரின் உடல்கள் மீதும், வண்டி வண்டியாய் பால் கொண்டு வந்து தெளிக்கப்பட்டு, நல்லடக்கம் செய்யப் பட்டிருக்கிறது. இவ்விடம் பால் படுகை என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
      இலட்சக் கணக்கான வீரர்களின் உதிரம் பட்ட தோப்பு என்னும் பொருளில், இங்கே ஒரு பகுதி உதிரம்பட்டி என்று இன்றும் அழைக்கப்படுகிறது. எனினும் இப்பகுதியில் எந்த தோப்பும் தற்போது இல்லை. இவையெல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அழிக்கப்பட்டு வயல் வெளிகளாக மாற்றப்பட்டுவிட்டன.
      இப்பகுதியைச் சுற்றிலும், ஆங்காங்கே, இப்போரில் ஈடுபட்டு உயிரிழந்த படைத் தளபதிகள், முக்கியப் போர் வீரர்கள், வியத்தகு வகையில் போர் புரிந்து இயற்துவிட்ட சாதாரண வீரர்கள் போன்றோர் பெரிதும் மதிக்கப்பட்டு, அவர்கள் நினைவாகவும், ஆங்காங்கே நடுகற்கள் எழுப்பப்பட்டு, நெடுங்காலம் வழிபட்டு வந்துள்ளதற்காக சான்றுகள் இன்றும் ஆஙகாங்கே நடுகற்களும், குத்திவைக்கப்பட்ட வேல்களுமாகக் காணப்படுகின்றன.
      திருப்புறம்பியத்தில் உள்ள சாட்சிநாதர் கோயிலை, ஆதித்தனால் பெரிதாக் கட்டி குடுமுழுக்கு செய்து, கல்வெட்டுகளைப் பதித்துள்ளான், இக்கல்வெட்டுகளில் திருப்புறம்பியப் போர் பற்றிய செய்திகள் இருப்பதாக கூறுகிறார்கள்.
      வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  14. சிறப்பான பதிவு. காணொளியும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கும் இங்கே சென்று பார்க்கும் ஆவல் உண்டு. பார்க்கலாம்! அடுத்த பயணத்தில் வரமுடிகிறதா என!

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு