31 டிசம்பர் 2021

கரந்தையின் கணிதக் கடவுள்

     இன்றைக்கு நாற்பத்து ஆறு ஆண்டுகளுக்கு முன், ஆறாம் வகுப்பு மாணவனாக, 1975 ஆம் ஆண்டு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், காலடி எடுத்து வைத்து நுழைந்தேன்.

    

மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, ஒன்பதாம் வகுப்பிற்குச் செல்ல, ஆவலுடன், கோடை விடுமுறையில் காத்திருந்தபோது, முதன் முதலாக, நண்பர்கள் அடிக்கடி இவர் பெயரை, உச்சரிப்பதைக் கேட்டேன்.

     எஸ்.எஸ்.,

     எஸ்.எஸ்.,

     எஸ்.எஸ்.,

     கையில் அணிந்திருக்கும், கை கடிகாரத்தைக் கழட்டி வைத்தார் என்றால், அவ்வளவுதான், அடித்துப் பிய்த்து விடுவார் என்றார்கள்.

     மனதுள் பயம் மெல்ல எட்டிப் பார்த்தது.

     எட்டாம் வகுப்புவரை, எந்த ஆசிரியரிடமும் அடி வாங்காமல், தப்பித்து வந்து விட்டோம்.

     ஒன்பதாம் வகுப்பில், மாட்டிக் கொள்வோமோ? என மனம் பதறியது.

     ஒன்பதாம் வகுப்பில் முதல் நாள், தயங்கித் தயங்கித்தான் பள்ளிக்குச் சென்றேன்.

     முதல் பாடவேளை.

     எந்தெந்தப் பாடத்திற்கு, எந்தெந்த ஆசிரியர்கள் வருவார்கள் என அறிவித்தனர்.

     மனமெங்கும் மகிழ்ச்சி பரவியது.

     எஸ்.எஸ்., நான் இருக்கும் வகுப்பிற்கு வரவில்லை.

     தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியது போன்ற ஓர் உணர்வு.

    தப்பிச்சிட்டோம்.

    தப்பிச்சிட்டோம் என மனம் ஆனந்தக் கூத்தாடியது.

    ஆனாலும், மற்ற வகுப்பிற்கு இவர் செல்லும்பொழுது, உற்றுப் பார்ப்பேன்.

     அலை அலையாய் சுருண்ட தலைமுடி.

     மூக்குக் கண்ணாடி வழி சிரிக்கும் கண்கள்.

     அவ்வப்போது நடையுடன் கூடிய, சிறு ஓட்டம்.

     இவரா மாணவர்களை அடித்துப்  புரட்டி எடுக்கிறார்?.

    நம்ப முடியவில்லை.

     ஏன் அடிக்கிறார்?

     கணக்கு  சரிவர செய்யாதவர்களைத்தானே அடிக்கிறார்.

     சரியாக கணக்குப் போட்டால், ஏன் அடிக்கப் போகிறார்?

     என்னுள் நானே கேள்வியும் கேட்டு, பதிலும் சொல்லிக் கொண்டேன்.

     ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, பத்தாம் வகுப்பிற்கு நான் சென்ற போதும், இவர் என் வகுப்பிற்கு வரவில்லை.

     ஆனால், என் வகுப்பு நண்பர்கள் பலர், இவரிடம் தனிப் பயிற்சிக்கு, மாலை வேளையில் சென்றார்கள்.

     என்னையும் அழைத்தார்கள்.

     நானும் சென்றேன்.

     கரந்தை இராஜ வீதியில் ஒரு பெரும் வீடு.

    வீட்டின் முன் அறையில், ஒரு பெரும் நீண்ட மேசை.

     இருபுறமும் மாணவர்கள்.

     மேசையின் தலைமாட்டில் ஆசிரியர் எஸ்.எஸ்.,

     கரும்பலகை இன்றியே, கணிதம் நடத்துவார்.

     எப்பொழுதும் சிரிப்பு, சிரிப்பு.

     யாரையும் திட்டியோ, அடித்தோ நான் பார்க்கவில்லை.

     தனிப் பயிற்சிக்கானக் கட்டணத்தைக் கூட வாய் திறந்து கேட்க மாட்டார்.

    தனிப் பயிற்சிக்கானக் கட்டணத்தை, ஒரு வெள்ளைத் தாளில் மடித்து, அதன் மேல், மாணவன் தன்  பெயரினை எழுதிக் கொடுக்க வேண்டும்.

     மாணவன் முழு கட்டணத்தையும் கொடுத்தனா?, அல்லது அதில் ஒரு பகுதியை மட்டும் கொடுத்தானா?, என்று கூட பார்க்க மாட்டார். கேட்கவும் மாட்டார்.

     ஒவ்வொரு மாதமும், கட்டணத்தை முழுமையாகக் கொடுக்காமல், வருடம் முழுவதும் படித்த, பல மாணவர்களை நான் அறிவேன்.

    


     இவர்தான் எஸ்.எஸ்.,

     இவரை எனக்குப் பிடித்துப் போனது.

     இவரால், கணிதமும் என் விருப்பத்திற்கு உரிய பாடமாக மாறிப் போனது.

     ஒரு வருடம் முழுவதும், ரசித்துப் படித்தேன்.

     இவரையும் முழுதாய் கவனித்தேன்.

     பல பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைத் தனிப் பயிற்சிக்கு, இவரிடம் சேர்க்க அழைத்து வருவார்கள்.

     நானும், சார் கிட்ட படித்தவன்தான். நீயும் ஒழுங்கா படிக்கனும் என தங்கள் பிள்ளைகளிடம் சொல்வதைப் பலமுறை கேட்டிருக்கிறேன்.

     தாத்தாக்கள், மகன்கள், பேரன்கள் என ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள், இரண்டு, மூன்று தலைமுறைகளாய் இவரிடம் படித்தவர்கள் என்பதை  அறிந்து வியந்து போனேன்.

     நான் படித்த காலத்தில், கரந்தையில் கணக்கு ஆசிரியர் என்றால், அது எஸ்.எஸ்., ஒருவர் மட்டும்தான்.

     கரந்தையின் கணிதக் கடவுள் இவர்.

     இன்று நானும் ஒரு கணித ஆசிரியன்.

     காரணம் எஸ்.எஸ்.,

     என்னை கணிதத்தைக் காதலிக்க வைத்தவர் இவர்.

     இவர் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், உதவித் தலைமையாசிரியராக இருந்த கால கட்டத்திலேயே, 1993 ஆம் ஆண்டு, நான் பயின்ற, அதே உமாமகேசுவர மேனிலைப் பள்ளியிலேயே, ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான ஒரு பெரு வாய்ப்பு கிட்டியது.

     தன் மாணவன்தானே என்று எண்ணாமல், கரம் பற்றிப் பாராட்டி, அரவணைத்து, தன் சக ஆசிரியராய் மகிழ்வோடு ஏற்று, என்னை வழி நடத்தினார்.

     வருடங்கள் நகர, நகர என்னைத் தன் தோழனாகவும் ஏற்றுக் கொண்ட உன்னத கணிதப் பெருந்தகை எஸ்.எஸ்.,

     இவர் ஒரு முழுமையான  கணித ஆசிரியர்.

     பள்ளி, பள்ளி விட்டால் வீட்டில் தனிப் பயிற்சி என கணிதத்தையே, தன் உலகமாகக் கொண்டு வாழ்ந்தவர்.

      இவர் வெளி உலகை அதிகம் அறியாதவர்.

     வெளி உலகில், அதிகம் பயணிக்காதவர்.

     கணிதம் இவரைக் கட்டிப்போட்டு, ஒரு சிறிய வட்டத்திற்குள் அடைத்து விட்டது.

     ஆனாலும், ஒரு சிறு வட்டத்திற்குள்ளேயே, சுழன்று, சுழன்று, என் போன்ற நூற்றுக் கணக்கான கணித ஆசிரியர்களை உருவாக்கியவர் இவர்.

     இவரிடம் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டும்.

     கணக்கு என்றால் எஸ்.எஸ்.,

     எஸ்.எஸ்., என்றால் கணக்கு.

   


     என் கணித ஆசான்,  என் வழிகாட்டி, என் நெறிகாட்டி திருமிகு எஸ்.எஸ்., அவர்கள், இன்னும் ஒரு நூறாண்டு வாழ, வாழ வைக்க இயற்கையை இறைஞ்சுகிறேன்.

___

(குறிப்பு : கரந்தையின் கணிதக் கடவுள் திருமிகு எஸ்.சத்தியசீலன் அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிறைவு, நன் நாளன்று, ஆசானைச் சிறப்பிக்கும் வகையில், சிறப்பு மலர் ஒன்றினை வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பெற்று வருகின்றன.

     எனது இப்பதிவினைப் படிக்கும், என் ஆசானின் பழைய மாணவர்கள், எவரேனும், ஆசானைப் பற்றிய நினைவலைகளை எழுதி அனுப்ப விரும்பினால், தாராளமாக எழுதி அனுப்பலாம்.

    எழுதி அனுப்ப வேண்டிய வாட்ஸ் அப் எண் 94427 14156 மற்றும் 82488 22418 )

 

 

   

 

 

13 கருத்துகள்:

 1. நீங்கள் சொன்ன எதுவும் மிகை இல்லை நண்பரே. அவரின் மாணவன் என்பதில் பலருக்கு பெருமை தான்

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்.எனக்கும் ஆசிரியர் அவர. அருமையான பதிவு. கணிதம் எனக்கு வராது. அவரிடம் ஒரு அறை வாங்கிப் பின் கணிதம் தேர்ச்சி பெற்றேன்.

  பதிலளிநீக்கு
 3. மிகவும் அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 4. போற்றுதலுக்கு உரியவர். போற்றுவோம்.

  பதிலளிநீக்கு
 5. இவரைப்பற்றி நான் அறிந்ததில்லை.  அதே காலகட்டத்தில் நான் தூய அந்தோணியார் பள்ளியில் பயின்றேன்.  அங்கும் ஒரு கணித நல்லாசிரியர் இருந்தார்.  அவர் அடிக்கக் கூட மாட்டார்.  திட்டுவார். ஆர் ஜெ எர்னஸ்ட் என்று பெயர்.

  பதிலளிநீக்கு
 6. போற்றப்பட வேண்டிய நல்ல ஆசிரியர்!

  இப்புத்தாண்டும் இனி வரும் ஆண்டுகளும் எல்லோருக்கும் இனிய நினைவுகளை வழங்கி நல்ல ஆரோக்கியத்தை வழங்கி மகிழ்ச்சி ஏற்படுத்திட இறைவனிடம் பிரார்த்தனைகளோடு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் அன்பான வாழ்த்துகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 7. மாமனிதர்தான் வாழ்க பல்லாண்டு.
  ஆசிரியருக்கு எமது வணக்கங்களும்...

  அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. போற்றப்பட வேண்டிய நல்லாசிரியர். அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்....

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. அறிவை நெருப்பாக பரவச் செய்யும் இது போன்ற ஆசிரியர்கள் பண்ணெடுங்காலம் வாழ்க.

  பதிலளிநீக்கு
 10. Long live sir Not only maths he will teach English through tamil easily to understand still I remember infinitives and gerunds munnal Ulla to and pinnall Ulla ing

  பதிலளிநீக்கு
 11. மாணவனை சக ஆசிரியராக......சிலரால்தான் இப்படி பழகமுடியும்..அப்பெருமை இவருக்கு ள்ளது.மிகவும் அரிய மனிதர்.வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. உங்கள் குருவுக்கு என் வணக்கம் உரித்தாகட்டும். முடிந்தால் அவர் குறித்த ஓர் ஆவணக் குறும்படம் தயாரித்து வலையொளியில் பதிவேற்றுங்கள்.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு