30 ஜனவரி 2022

மணியான சேகரன்


A customer is the most important Visitor in our Premises.

He is not depending on us.

We are dependent on him.

He is not an interruption in our work.

He is the purpose of it.

He is not an outsider in our business.

He is part of it.

We are not doing him a favour by serving him.

He is doing us a favour by giving us an opportunity to do so.

    

  கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, வங்கிகளுக்குச் செல்லும் பொழுதெல்லாம், அறவழி நின்று போராடி, நம் நாட்டிற்குச் சுதந்திரத்தைப் பெற்றத் தந்த, மகாத்மா காந்தி, பொக்கை வாய் திறந்து சிரிக்கும் படத்தினையும், அவர் உதிர்த்த பொன்னான, மேற்கண்ட வரிகளையும் படித்துப் படித்து மகிழ்வேன்.

     பலமுறை மனதில் கேள்வி எழும்.

     மகாத்மா காந்தி உரைத்ததை, தங்கள் வங்கியின் சுவற்றில் தொங்கும் இந்தப் பொன்னான வாசகங்களை, அதே வங்கியில் பணிபுரியும் சிலர், பார்த்தே இருக்க மாட்டார்களோ? படித்தே இருக்க மாட்டார்களோ? எனத் தோன்றும்.

     வங்கியில் பலவிதமான கலவையான அனுபவங்களைச் சந்தித்திருக்கிறேன்.

     வருத்தத்தில் ஆழ்த்தியவை.

     மகிழ்ச்சியில் மிதக்க வைத்தவை.

     நெகிழ்ச்சியில் நனைய வைத்தவை எனப் பலப் பல அனுபவங்கள்.

     அவற்றுள் ஒன்றிரண்டைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என எண்ணுகிறேன்.

     ஒருமுறை, ஒரு வங்கியில், பணம் செலுத்துவதற்காக, வரிசையில் நின்றேன்.

     எனக்கு முன் ஏழு அல்லது எட்டுபேர் நின்றிருந்தார்கள்.

     காசாளர் ஒரு பெண்.

     வயது முதிர்ந்தவர்.

     வங்கி அனுபவம் மிக்கவர்.

     ஒவ்வொருவராகப் பணத்தினைப் பெற்று, வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துக் கொண்டிருந்தவர், திடீரென தலை நிமிர்ந்தார்.

     முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது.

     மின்சாரம் இல்லை, மின்விசிறி ஓடவில்லை, இப்படிக் காற்று வரும் வழியை அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களே, நீங்கள் எல்லாம் மனுசங்கள்தானா? நகருங்கள் எனக் கத்தினார்.

     எனக்கு முன் நின்றிருந்த இருவர், வயதில், அந்த வங்கி ஊழியவரையும் தாண்டிய முதியவர்கள்.

     கூனிக் குறுகிப் போனார்கள்.

     ஒரு முறை, ஒரு அவசரத் தேவைக்காக, என் ஊதியக் கணக்கு இருக்கும் வங்கியில், தனி நபர் கடன் பெறுவதற்காகச் சென்றேன்.

     எழுத்தர் ஒருவரை அணுகிக் கேட்டேன்.

     பின் வரிசையில் அமர்ந்திருந்தவரைக் காட்டி, அவரைப் பாருங்கள் என்றார்.

     அவர் எதிரில் சென்று, வணக்கம் சார் என்றேன்.

     தலை குனிந்து ஒரு கோப்பினைப் பார்த்துக் கொண்டிருந்தவர், தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.

     அடுத்த நொடி, தலை கவிழ்ந்து கோப்பில் மூழ்கிப் போனார்.

     அவர் எதிரிலேயே நின்றேன்.

     நிமிடங்கள் ஐந்து கடந்தன.

     நிமிடங்கள் பத்து கடந்தன.

     நிமிடங்கள் இருபது கடந்தன.

     தன் எதிரில் மனிதன் ஒருவன் நிற்கிறானே என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லை.

     முழுதாய் அறுபது நிமிடங்கள், ஒரு மணி நேரம் கடந்தபின், மெல்ல தலை நிமிர்த்தி, என்ன? என்றார்.

     சார், நான் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். எனது ஊதியக் கணக்கு, தங்கள் வங்கியில்தான் இருக்கிறது.

    தனி நபர் கடன் தேவைப்படுகிறது என்றேன்.

    அது என் வேலை இல்லை. லோன் செக்சன் பார்க்கிறவர் இன்று லீவு.

     வார்த்தைகள் வெடித்துச் சிதறி வெளிவந்தன.

     அடுத்த நொடி தலை குனிந்து, கோப்பில் கலந்தார்.

     உடலெங்கும் ஒரு அருவருப்பு பரவியது.

     உள்ளம் உடைந்து போனது.

     ஆனால், இதே வங்கியில், ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தையும் பெற்றிருக்கிறேன்.

     2010 ஆம் ஆண்டில், என் மகளுக்கு ஏற்பட்ட, இருமலுக்காக, மருத்துவரை அணுகியபோது, ஸ்கேன், இதயத்தில் துளை என அலைகழிக்கப் பட்டதும், சென்னை மருத்துவர் திரு பிரேம் சேகர் அவர்கள், என் மகளை, அறுவை சிகிச்சை அரங்கின் மேசை வரை அழைத்துச் சென்று, ஆய்ந்து, இதயத்தில் துளையே இல்லை, இல்லவே இல்லை என உறுதியாய் அறிவித்து, மகிழ்ச்சிக் கடலில் எங்களையெல்லாம் மிதக்கவிட்டதும், என் வாழ்வில் என்றென்றும் மறக்க இயலா நிகழ்வு.

     என் மகளுக்கான, இந்த சென்னை மருத்துவப் பயணத்தின்போது, புத்திசாலித்தனம் என்று எண்ணி, மருத்துவச் செலவினங்களுக்கு  உரிய தொகையினை, என் வங்கிக் கணக்கில் செலுத்தி, வங்கிப் பண அட்டையினை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டேன்.

      சென்னை சென்ற பிறகுதான், பண அட்டையினைப் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு ரூ.15,000 மட்டுமே எடுக்க முடியும் என்பதே தெரிந்தது.

     என்ன செய்வது என்று புரியவில்லை.

     என் வங்கிக் கணக்கு இருக்கும், தஞ்சாவூர், பரோடா வங்கிக் கிளையைத் தொடர்பு கொண்டேன்.

     மறுமுனையில் பேசிய, திரு சுப்பிரமணியன் என்பவர், என்னை உடனே, சென்னையில் இருக்கும், ஏதாவது ஒரு பரோடா வங்கிக்  கிளைக்குச் செல்லச் சொன்னார்.

     பண எடுப்புச் சீட்டின் மூலம் என் வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையை, வேறொருவர் கணக்கிற்கு மாற்றி, அவரது காசோலையினைப் பயன்படுத்தி, பதினைந்தே நிமிடங்களில், பெருந்தொகையினைப் பெறுவதற்கு  உதவினார்.

     தஞ்சை பரோடா வங்கி அலுவலர் திரு சுப்பிரமணியன் அவர்கள் காலத்தினால் செய்த உதவியாலும், அவ்வங்கியில் கணக்கு வைத்திருப்பரைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்து உதவிய எனது சென்னை வாழ் நண்பர் திரு எஸ்.பி.அனந்தராமன் அவர்களது உதவியாலும், நெஞ்சம் நெகிழ்ந்து போனது.

    ஒவ்வொரு துறையிலும், அப்படி, இப்படி என குணம் கொண்ட மனிதர்கள் கலந்தே இருக்கிறார்கள்.

     அண்மையில், எங்கள் உமாமகேசுவர மேனிலைப் பள்ளிக்கு அருகிலேயே, அமைந்திருக்கும், பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளரை, எனது நெருங்கிய நண்பர், ஆசிரியர் திரு அ.சதாசிவம் அவர்களால் சந்திக்கும் நல் வாய்ப்பு கிட்டியது.

     இளம் வயது.

     சிரித்த முகம்.

     எனது நூல்கள் மூன்றினை வழங்கி என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.

     நூல்களைப் பார்த்ததும் மேலாளர், முகம் மலர்ந்தது.

     நான் எழுதிய நூல்கள் என்பதை உணர்ந்தபோது மேலும் மகிழ்ந்தார்.

     தனது தொடர் வங்கிப் பணிகளுக்கு இடையிலும், புன்னகையோடு பேசினார்.

    எனது தேவையைக் கேட்டார்.

    சொன்னேன்.

     அந்நிமிடம் முதல், என் தேவை, அவரது தேவையாய் மாறிப் போனது.

     ஒருசில நாட்கள்தான்.

     என் தேவையினை நிறைவேற்றி மகிழ்ந்தார்.

    நான் கொடுத்த நூல்களைப் பற்றிப் பேசினார்.

    எனது வலைப் பூ பற்றிப் பேசினார்.

     எனது யூ ட்யூப் காணொலிகள் பற்றி மகிழ்ச்சி தெரிவித்தார்.

    நெகிழ்ந்து போனேன்.

     வாடிக்கையாளர், மேலாளர் என்ற எல்லையைக் கடந்து, உறவாகவே மாறிப் போனார்.

இவர்தான்





திரு கு.மணிசேகரன்,

மேலாளர்,

பாரத ஸ்டேட் வங்கி, கரந்தை கிளை.

     இவரது பெயரே என்னுள் ஒரு வியப்பை ஏற்படுத்தியது.

     மணிவேல்

     மணியரசு.

     மணிகண்டன்.

     மணிசங்கர்.

 மணிரத்னம் என்றுதான், மணியோடு இணைந்த பெயர்களை அறிந்திருக்கிறேன்.

     ஆனால் இவர், மணிசேகரன்.

     மணியும் சேகரனும் இணைந்த பெயரை இதுவரை கேள்விப் பட்டதில்லை.

     எனவே அவரிடமே கேட்டேன்.

     இவரது தாய் ஜீவமணி.

     இவரது தந்தை குணசேகரன்.

     இவரது பெற்றோர், இவருக்கு உயிரும், உதிரமும், உணர்வும், உருவும் கொடுத்ததோடு நிறைவடையாமல், தங்கள் பெயரின் பாதியையும் கொடுத்திருக்கிறார்கள்.

     தாயிடமிருந்து மணியையும்

     தந்தையிடமிருந்து சேகரனையும் பெற்று, மணிசேகரன் ஆகியிருக்கிறார்.

     இவர், தன் தந்தையைப் பற்றிப் பேசும் பொழுதெல்லாம்,  நெகிழ்ந்து போகிறார், உள்ளம் கரைந்து போகிறார்.

     ஒவ்வொரு மனிதரும், தங்கள் உள்ளத்து மகிழ்ச்சியை மனதில் மறைத்து வைக்காமல், வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம், வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்னும் கொள்கை உடையவராக, இருக்கிறார்.

     பலமுறை, தன் தந்தையைக் கட்டிப் பிடித்து,  I love you, Daddy, I love you, Daddy,  என்று மகிழ்ந்து கூறியதை நினைவு கூறும் பொழுதே, இவரது கண்கள் பணிக்கின்றன.

உன்னத மனிதர்.

வாடிக்கையாளர் சேவையில்

பல விருதுகளைப் பெற்றவர்.

வாடிக்கையாளர்களை

நல் நண்பர்களாய்

மாற்றும்

வல்லமை வாய்ந்தவர்.

திரு கு.மணிசேகரன் அவர்கள்

தன் வாழ்விலும்.

தன் பணியிலும்

மேலே, மேலே

உயர,

உச்சம் தொட

வாழ்த்துவோம்.