21 ஜனவரி 2023

ஓடுகளால் ஒரு மேடு

     பொ.ஆ.பி.12 ஆம் நுற்றாண்டு.

     கவிஞர்.

     இக்கவிஞருக்கு ஒரு வித்தியாசமானப் பழக்கம்.

     விசித்திரமானப் பழக்கம்.

அக்காலத்தில் சமையல் செய்வதற்கு மண் பாண்டங்களைத்தானே பயன்படுத்தினார்கள்.

     அந்த, மண் பாண்டங்களைப் பற்றியதுதான் இவரது விசித்திரமானப் பழக்கம்.

     ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும், இவருக்கு புது மண் பாண்டத்தில்தான் உணவு சமைக்க வேண்டும்.

     சமைத்த உடன், அந்த மண் பாண்டங்களை உடைத்துவிட வேண்டும்.

     எக்காரணம் கொண்டும், ஒரு முறை பயன்படுத்திய, மண் பாண்டங்களை மறு முறை பயன் படுத்தவே கூடாது.

     இந்த உத்தரவு கண்டிப்பாக கடைபிடிக்கப் பட்டே ஆக வேண்டும்.

     தெளிவாய், உறுதியாய் உத்தரவிட்டிருந்தார்.

     உத்தரவு கடைபிடிக்கப் பட்டது.

     உடைக்கப் பட்ட மண் பாண்டங்களின் ஓடுகள், இவரது வீட்டின் கொல்லைப் புறத்தில், கொட்டப்பட்டன.

      இதனால், ஓடுகளின் அளவு, ஒவ்வொரு வேளையும், ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டே வந்தது.

     நாள்கள் மாதங்களாகின.

     மாதங்கள் வருடங்களாகின.

     கொஞ்சம், கொஞ்சமாய் மண் ஓடுகள் சேர்ந்து, சேர்ந்து, உயர்ந்து, உயர்ந்து, வளர்ந்து கொண்டே வந்தன.

     கவிஞரின் வாழ்நாள் நிறைவுற்றபோது, அவரது வீட்டின் பின்புறம், ஒரு சிறு மலையே உருவாகி இருந்தது.

     அப்பகுதி மக்கள், இம்மலைக்கு, அக்கவிஞரின் பெயரினையே வைத்தார்கள்.

     இவர் யார் தெரியுமா?

     சிலையெழுபது.

     சடகோபர் அந்தாதி.

     சரசுவதி அந்தாதி.

     திருக்கை வழக்கம்.

     ஏர் எழுபது.

     மும்மணிக் கோவை.

     முதலிய கவி நூல்களின் ஆசிரியர்.

     இதுமட்டுமல்ல, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அறிந்த, ஒரு இதிகாசத்தையும் இயற்றியவர்.

     கம்பராமாயணம்.

     ஆம், இவர்தான்

     கம்பர்.

     இவர் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த ஊர்

     தேரழந்தூர்.

     இவரது வீட்டின் பின்புறம், பானை ஓடுகளால் வளர்ந்த மலையின் பெயர்,

     கம்ப மேடு.

---

    


கடந்த 8.1.2023 ஞாயிறு காலை, தமிழ்க் கடல், இலக்கிய மாமணி, பெரும்புலவர் இரா.கலியபெருமாள் ஐயா அவர்களுடனும், புலவர் மா.கந்தசாமி ஐயா அவர்களுடனும், சிங்கப்பூர், மேனாள் தமிழ் விரிவுரையாளர் என் அத்தான், கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்களுடனும், மகிழ்வுந்து ஓட்டுநர், நண்பர் திரு ரெங்கநாதன் அவர்களுடனும் இணைந்து, தேரழந்தூர் செல்வதற்கான ஒரு வாய்ப்பு கிட்டியது.

    



கம்பர் கோட்டம்
கண்டோம்.

    



     கம்பர் மேடு கண்டோம்.

     ஆனால் மேடு இன்று இல்லை.

     புதர்கள் மண்டி, காடுபோல் காட்சி அளித்திருக்க வேண்டும்.

     அண்மையில் புல் புதர்களை வெட்டி அகற்றி சுத்தம் செய்திருக்கிறார்கள்.

     ஆனாலும், அப்பகுதி முழுவதும் பானை ஓடுகள் சிதறிக் கிடந்தன.

    1958 ஆம் ஆண்டுமுதல், இப்பகுதி, இந்திய தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப் பட்டுவருகிறது.

     கம்பன் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, தன் கவி ஆற்றலால், கவிச் சக்கரவர்த்தியாய் உயர்ந்த, அந்த மண்ணில் மகிழ்வோடு நடந்தோம்.

     கம்ப மண்ணில், காலடி பதித்த அந்த நொடி முதல், உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு.

     உள்ளத்தில் ஒரு இனம் புரியா உணர்வு.

     கம்ப மேடு.

12 கருத்துகள்:

  1. கம்ப மேடு!

    எங்களூருக்கு அருகாமையில் அமைந்திருந்தாலும் அங்கு செல்வதற்கான வாய்ப்பு இதுவரையில் அமையவில்லை!

    இன்ஷா அல்லாஹ் செல்லவேண்டும்!

    பதிலளிநீக்கு
  2. கம்பர் பற்றிய பல அரிய தகவல்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான இடத்திற்கு சென்று வந்துள்ளீர்கள்... வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. நேரில் சென்று கம்பர் மேடு கண்டு அது குறித்த அரிய தகவல்களைப் பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
  5. சிறப்பு, நன்றி தோழர்

    பதிலளிநீக்கு
  6. ஓடு பற்றிய இந்தத் தகவல் முற்றிலும் புதிது.

    பதிலளிநீக்கு
  7. புதுமையான அரிய தகவல்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு.

    //கம்பன் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, தன் கவி ஆற்றலால், கவிச் சக்கரவர்த்தியாய் உயர்ந்த, அந்த மண்ணில் மகிழ்வோடு நடந்தோம்.//

    மகிழ்ச்சியாக இருக்கிறது படிக்கும் போதே!

    பதிலளிநீக்கு
  9. வித்தியாசமான தகவலுடன் ஒரு அழகிய பதிவு! மிகச்சிறந்த அறிஞர்கள் பலருக்கு இப்படி சில வித்தியாசமான பழக்க வழக்கங்கள் இருக்குமென முன்பே அறிந்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா23 ஜனவரி, 2023

    இப்படி ஒரு கவிஞரா . வித்தியாசமான தகவல். நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  11. 'கம்பர் மேடு ' சென்று எங்களுக்கும் காண தந்ததற்கு நன்றி.

    கம்பர் பற்றிய புதிய தகவல் அறிந்தோம்.

    பதிலளிநீக்கு
  12. அக் காலத்தில் இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பான அருமையான அரிய தகவல்களைத் தந்தீர்கள். நன்றி!

    உடுவை.எஸ்.தில்லைநடராசா
    கொழும்பு-இலங்கை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு