05 ஏப்ரல் 2023

மாடசாமி     ஆண்டு 1911.

     ஜுன் மாதத்தில் ஓர் நாள்.

     வங்காள விரிகுடா கடல்.

     புதுச்சேரியின் கரையில் இருந்து புறப்பட்ட ஒரு சிறு கட்டுமரம், கடல் அலையின் ஏற்ற இறக்கங்களில், ஏறியும் இறங்கியும் தத்தளித்தவாறு, செல்கிறது.

     கட்டுமரத்தில் நால்வர்.

     இருவர் கட்டுமரத்தைச் செலுத்துபவர்கள்.

     பயணிகள் இருவர்.

     ஒருவர் பயணிக்க வந்தவர்.

     மற்றொருவர் வழியனுப்ப வந்தவர்.

     கட்டுமரத்தில் சென்று வழியனுப்புவதா? எப்படி என்னும் கேள்வி எழுகிறதல்லவா.

     நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும் கப்பலை வழி மறித்து, அதில் ஏறி, ஆங்கிலேயர்களிடம் இருந்து தப்பிச் செல்வதற்காகத்தான் இந்தக் கட்டுமரப் பயணம்.

     இதோ கப்பல்.

     கட்டுமரம் கப்பலை நெருங்கத் தொடங்கியது.

     அப்பொழுதுதான் கவனித்தார்கள்.

     சற்று தொலைவில் ஓர் இயந்திரப் படகு வருவதை.

     திடீரென்று நால்வரிடத்தும் ஒரு பரபரப்பு.

     காரணம், தொலைவில் தெரிந்த அந்த இயந்திரப் படகு, காவலர்களின் படகு.

     கட்டுமரத்தைக் காவலர்கள் கவனித்து விட்டார்களா? இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

     பார்த்துவிட்டால் அவ்வளவுதான்.

     நால்வரும், கம்பி எண்ண வேண்டியதுதான்.

     வழியனுப்ப வந்தவருக்கு ஒர் எண்ணம் உதித்தது.

     நடுக் கடலுக்குப் போ? என்றார்.

     கட்டுமரம் செலுத்துபவர்கள் இருவரும் வெகுவேகமாய், கட்டுமரத்தை நடுக்கடலுக்குச் செலுத்தினர்.

     காவலர் படகு மெல்ல மெல் மறைந்தது.

     ஒன்றரை நாள், நடுக்கடலிலேய காலத்தைக் கழித்தார்கள்.

     உறக்கம் இல்லை.

     உண்ண உணவும் இல்லை.

---

     ஆண்டு 1911.

     ஜுன் மாதம் 17 ஆம் தேதி.

     தொடர் வண்டிச் சந்திப்பு.

     திருநெல்வேலிக்கும், தூத்துக்குடிக்கும் இடையே உள்ள தொடர் வண்டிச் சந்திப்பு.

     மணியாச்சி சந்திப்பு.

     தொடர் வண்டி ஒன்று அப்பொழுதுதான் வந்து மணியாச்சி சந்திப்பில் நிற்கிறது.

     தொடர் வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருக்கிறார் ஆஷ் துரை.

     திருநெல்வேலி மாவட்டத்தின் தற்காலிக ஆட்சியாளர் மற்றும் நீதிபதி.

     திடீரென்று, அப்பெட்டிக்குள் நுழைந்த, வாஞ்சிநாதன் ஆஷ் அவர்களை சுடுகிறார்.

     ஆஷ் இரத்த வெள்ளத்தில் மிதக்கிறார்.

     காவலர்களிடம் இருந்து தப்பி ஓடிய, வாஞ்சிநாதன், தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறார்.

    


இந்நிகழ்வின்போது, வாஞ்சிநாதனுடன் இருந்தவர்கள் இருவர்.

     ஒருவர் சங்கர கிருஷ்ண ஐயர்.

     மற்றொருவர் மாடசாமி.

     ஆஷ் கொலைக்குப் பின் இருவருமே தப்பி ஓடிவிட்டனர்.

     ஓரிரு நாட்களில் சங்கர கிருஷ்ணன் காவலர்களால் பிடிக்கப்பெற்று, நீதி மன்றத்தால் தண்டிக்கப்படுகிறார்.

     ஆனால், மாடசாமி காற்றோடு காற்றாகக் கரைந்து விடுகிறார்.

     தூத்துக்குடி, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜான்சன் அவர்கள், தலைமறைவாகிவிட்ட மாடசாமியைப் பிடிக்கப் பலவாறு முயன்றும் முடியவில்லை.

     அவரது வீடு, நிலம், வீட்டில் இருந்தப் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப் படுகின்றன.

     சிலம்புச் செல்வர் மா.பொ.சி. அவர்கள் விடுதலைப் போரில் தமிழகம் என்னும் தனது நூலில் மாடசாமி குறித்துப் பின்வருமாறு எழுதுகிறார்.

     மாடசாமி கோழைத்தனத்தால் தலைமறைவாகி விடவில்லை. தண்டனைக்குப் பயந்தும் தப்பி ஓடவில்லை. அந்நாளில், போலிசாரிடம் பிடிபடாமல் தப்பியோடி, புரட்சி செயல்களில் ஈடுபடுவது, புரட்சியாளரின் வேலைத் திட்டமாக இருந்தது.

     காந்தியின் சகாப்தம் பிறந்த பின்னர்தான், இந்த முறை போற்றத் தக்கது அல்ல என்று தேசபக்தர்களால் கருதப்பட்டது.

     மாடசாமி.

     தமிழ்நாடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியும் பிடிக்க முடியாத மாடசாமி, இதோ கட்டுமரத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்.

     கடற்படைக் காவலர்களின் கண்களில் படாமல் இருக்க, நடுக்கடலுக்குச் சென்ற கட்டுமரம், ஒன்றரை நாட்கள், நடுக்கடலிலேயே தவழ்ந்தது.

     பின்னர் அவ்வழியாக வந்த கப்பலை வழி மறித்து நிறுத்தினர்.

     அக்கப்பல் சைகோனுக்குச் செல்லும் கப்பல்.

     மாடசாமி கப்பலில் ஏறினார்.

     சைகோனுக்குச் சென்றார்.

     தன்னை வழியனுப்ப வந்தவருக்கு, காவலர்களின் கண்களில் இருந்து, தன்னைத் தப்பிக்க வைத்தவருக்கு, தன்னைக் காத்த அந்த வீரத் தமிழருக்கு, சைகோனில் இருந்து ஒரே ஒரு கடிதம் எழுதினார்.

     பின்னர் மாடசாமி என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியாது.

     வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறைந்து போனார்.

     தமிழ் நாடும் மறந்து போனது.

     வாஞ்சிநாதனைத் தங்கள் நினைவில் வைத்திருப்பவர்களும், மாடசாமியை மறந்துதான் போனார்கள்.

     ஆனால், மாடசாமியை, தன் உயிரினையும் துச்சமாய் மதித்து, கட்டுமரத்தில் எற்றி அழைத்துச் சென்று சைகோனுக்கு அனுப்பி வைத்தவர் யார் தெரியுமா?

     இந்நிகழ்வை அவரே பாடலாய் பாடியுள்ளார், கேளுங்களேன்.

ஆரும் அறியாமல் அன்பான நண்பரை நான்

சாரும் கடல்தாண்டிச் சைகோனில் சேரும் வண்ணம்

செய்ய ஒரு கட்டு மரம் சென்றேறினேன் கப்பல்

கைஎட்டும் எல்லையை நான் காணுகையில் – எய்தும்

உளவறிந்து தீயர் சிலர் நீராவி ஓடம்

மளமளவென ஓட்டி வருதல் – தெளிவுபடக்

காணாத் தொலைவினிலே கட்டு மரத்தை விடென்றேன்.

ஊணோ உறக்கமோ ஒன்றுமின்றிக் – கோணாமல்

நட்ட நடுக்கடலில் ஒன்றரை நாள், நான் கழித்தே

எட்டு மணி இரவில் என் வீட்டை கிட்டினேன்.

இவர்

குடும்ப விளக்கு

என்னும் தனது, உன்னத காப்பியத்தில்

முதியவர் ஒருவர் கூற்றாக

இந்நிகழ்வினைப் பதிவு செய்துள்ளார்.

மாடசாமியைக் காப்பாற்றிய

மாமனிதர்


பாவேந்தர் பாரதிதாசன்.

11 கருத்துகள்:

 1. சிறப்பான தகவல்கள் தந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. ஆச்சரியமான தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 3. மாடசாமியைக் காப்பாற்றிய மாமனிதர் பாவேந்தர் பாரதி தாசன்- கவிதை படைப்பவர் முக்கியமான மனிதரைக்காப்பாற்றிய நிகழ்வையையும் வெகு சுவையாக பதிவாக்கிய கரந்தை ஜெயக்குமாருக்கு பாராட்டுகள் !

  உடுவை.எஸ்.தில்லைநடராசா
  கொழும்பு- இலங்கை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்வினை அளிக்கிறது. நன்றி ஐயா

   நீக்கு
 4. கப்பலோட்டிய தமிழன் படத்தில் மாடசாமி என்ற பாத்திரம் வரும் போலீஸால் சுட்டு கொலை செய்யப்படுவார்.
  இந்த மாடசாமியை வைத்து தான் பாத்திரம் அமைக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.

  பாவேந்தர் பாரதிதாசன் மாடசாமியை காப்பற்றிய தகவல் தெரிந்து கொண்டேன்
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. சிறப்பான தகவல்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு