14 டிசம்பர் 2023

ஆன்பொருநை

     3000 ஆண்டுகளுக்கும் மேலானப் பழமையை, தொன்மையை, வரலாற்றினைத் தன்னகத்தே கொண்ட ஊர்.

     வஞ்சி.

     வஞ்சி முற்றம்.

     இவை இவ்வூரின் சங்ககாலப் பெயர்களாகும்.

     இதனாலேயே இவ்வூர் கோயில், வஞ்சியம்மன் கோயில்.

     காவிரி மற்றும் அமராவதி பாயும் ஊர்.

     அமராவதி.

     இதுதான் சங்ககால ஆன்பொருநை.

ஆநிரைகள் அதிக அளவில் மேயும் ஆறாக விளங்கியதால் ஆன்பொருநை.

     எனவே இவ்வூரின் மற்றொரு கோயில் ஆநிலையப்பர் கோயில்.

     இவ்வூர் கருவூர்.

     பெருங்கற்காலம் என்று அழைக்கப்படுகின்ற இரும்புகாலப் பண்பாட்டில் இருந்து, கருவூரின் தொன்மை வரலாறு தொடங்குகிறது.

     பெருங்கற்காலச் சான்றுகளாக விளங்கும், ஈமச் சின்னங்களான கல்வட்டம், கல்குவை போன்றவை, கருவூரைச் சுற்றியுள்ள புகளூர், காருடையாம் பாளையம், கொத்த மங்கலம், மலைக் கோயிலூர், வேட்ட மங்கலம், நெடுங்கூர், பவித்திரம், பரமத்தி, வெஞ்சாமக் கூடல் போன்ற பல இடங்களில் கிடைக்கின்றன.

     கருவூரைச் சுற்றிலும் பல ஊர்களில் நத்தமேடு என்றழைக்கப்படும் மண் மேடுகள் காணப்படுகின்றன. இம்மண் மேடுகளில் இருந்து கிடைக்கும் தொல் பொருள்கள் கருவூரின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன.

     சங்கர மலை, அய்யர் மலையில் காணப்படும் சமண சமயச் சான்றுகளும், கருவூரின் தொன்மைக்கு வலுசேர்க்கின்றன.

    


சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கு எல்லையாக இருந்ததாகக் கூறப்படும், மாயனூர் மதிற்கரை கருவூரின் தொன்மைக்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

     கருவூர்.

     சேரர்களால் மட்டுமல்ல, சோழ, பாண்டிய, கங்க மன்னர்களாலும், விஜய நகர நாயக்கர்கள், மைசூர் அரசர்களாலும் ஆளப்பெற்று, இறுதியாய் ஆங்கிலேயர்களால் ஆளப்பெற்ற நகரமாகும்.

     கருவூர் பண்டைய காலத்தில், முக்கியமான அயல்நாட்டு வணிகத் தலமாக விளங்கியுள்ளது.

     அகழ்வாராய்ச்சியில் எண்ணற்ற ரோமானிய நாணயங்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.

     தமிழ் (பிராமி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், ரோமானியப் பானை ஓடுகள், செங்கல் கட்டடத்தின் ஒரு பகுதி, மணிகள் கிடைத்துள்ளன.

     பண்டைய வணிகப் பெருவழியில் கருவூர் அமைந்திருந்ததால், பல மன்னர்கள் வெளியிட்ட காசுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன.

     சங்ககால மோதிரங்கள் கிடைத்துள்ளன.

     கொல்லப் பொறை, கொல்லிரும்பொறை, மாக்கோதை எனும் பெயர்களுடன் காசுகளும், தித்தன், பேர் அவதான், தாயன் ஓதலன் போன்ற பெயர்களைத் தாங்கிய தங்கம் மற்றும் வெள்ளி மோதிரங்கள் கிடைத்துள்ளன.

     கருவூர்.

     சேரன் செங்குட்டுவன் காலத்தில், கருவூர்தான் சேரர்களின் தலைநகராக இருந்திருக்கிறது.

     பின்னர், பிற்காலச் சேரர்கள், மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அப்பால், தங்களது தலைநகரை மாற்றியிருக்கிறார்கள்.

     கருவூர் கிழார்.

     கருவூர் கண்ணம்பாளனார்.

     கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்.

     கருவூர் கலிங்கத்தார்.

     கருவூர் கோசனார்.

     கருவூர் சேரமான் சாத்தன்.

     கருவூர் நன்மார்பனார்.

     கருவூர் பவுத்திரனார்.

     கருவூர் பூதஞ்சாத்தனார்.

     கருவூர் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார்

முதலிய பத்து சங்ககாலப் புலவர்கள் கருவூரில் வாழ்ந்திருக்கிறார்கள்.

     பிற்காலத்தில் 11 ஆம் நூற்றாண்டில் திருவிசைப்பா மற்றும் ஒன்பதாம் திருமுறை பாடிய கருவூர்த் தேவர்,

     16 ஆம் நூற்றாண்டில், பூசாவிதிப் பாடிய, கருவூரார் இங்கு வாழ்ந்திருக்கின்றனர்.

     பண்டைக்காலம் முதலே, தங்க ஆபரணங்களைச் செய்து, ஏற்றுமதி செய்யும் மையமாகவும் கருவூர் விளங்கியிருக்கிறது.

     அதேபோல் நெசவுத் தொழிலிலும் முதலிடத்தில் இருந்திருக்கிறது.

     காவிரி, அமராவதியோடு, காவிரியின் தென்கரையில் அமைந்துளள மாயனூர் கதவணை இன்றும், கருவூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகும்.

     பல்வேறு ஆழ்வார்களாலும, சங்ககாலப் புலவர்களாலும பாடிச் சிறப்பிக்கத் தலமான கரூவூர் இன்றும் பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்கிறது.

     கருவூர்.

     ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பெயர் சற்று மருவி கரூர் ஆனது.

     இன்றும் கரூர்.

---

ஏடகம்

ஞாயிறு முற்றம்

கடந்த 10.12.2023 ஞாயிற்றுக் கிழமை மாலை

தஞ்சாவூர், அரசர் மேனிலைப் பள்ளி முதுகலைத் தமிழாசிரியர்


முனைவர் பழ.பிரகதீசு அவர்கள்

தலைமையில் நடைபெற்றப் பொழிவில்,

கரூர் ஆய்வாளர் மற்றும் விவசாயி


திரு வீ.கோவிந்தராஜ் அவர்கள்

கரூவூர் தண்ணீரும் வரலாறும்

எனும் தலைப்பில் உரையாற்றினார்.

ஏடகப் புரவலர் மற்றும் பொறுப்பாளர்


திரு பி.கணேசன் அவர்கள்

நன்றி கூற பொழிவு இனிது நிறைவுற்றது.

முன்னதாக

ஏடக நிகழ்விற்கு வந்திருந்தோரை


கவிஞர் கூ.இரா.சிவராமன் அவர்கள்

வரவேற்றார்.

ஏடக நிறுவனர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்கள்

விழா நிகழ்வுகளை அழகுறத் தொகுத்து வழங்கினார்.

ஏடகம்

ஞாயிறு முற்றம்

சொற்பொழிவின்போது

இதுநாள்வரை இல்லாத

புது நிகழ்வாக,

நூல் வெளியீட்டு விழா ஒன்றும் சிறப்புடன் அரங்கேறியது.

தஞ்சாவூர், அரசர் மேனிலைப் பள்ளி முதுகலைத் தமிழாசிரியர்

முனைவர் பழ.பிரகதீசு அவர்கள்

எழுதியபெப்ரீசியசு வாழ்வும் பணியும்

நூலினை

ஏடக நிறுவனர், தலைவர்

முனைவர் மணி.மாறன் அவர்கள்

வெளியிட,

முதற்படியினை

ஏடகப் புரவலர், காந்தியவாதி

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் ஐயா அவர்கள்

பெற்றுக் கொண்டார்.

 

ஏடகம்

ஞாயிறு முற்றத்திற்கு

கருவூரை மட்டுமல்ல

பெப்ரீசியசையும்

அழைத்து வந்த

ஏடக நிறுவனர், தலைவர்

முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்