17 டிசம்பர் 2024

முருங்கு

 

     இயற்கை வளம் இல்லாமல் போதல்.

     விளைச்சல் இன்மை.

     மேய்ச்சல் நிலம் வளம் குன்றிப்போதல்.

     மக்கள் தொகைப் பெருக்கம்.

    தொற்று நோய்கள்.

     இனக் குழுக்களுக்கு இடையிலானப் போட்டிகள்.

     இனக்குழுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில், இரு பிரிவாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொள்ளுதல்.

     பருவ நிலைமாற்றம்.

     இவையெல்லாம் ஆதிக் காலத்தில் மனித இனக் குழுக்கள், ஓரிடத்தில் இருந்து அகன்று, வேறிடம் நோக்கிப் பரவுவதற்கான, இடப்பெயர்வுக்கானக் காரணங்களாகும்.

     இப்படித்தான் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த அன்றைய மனிதர்கள், இரண்டு பிரிவுகளாக, இரண்டு குழுக்களாகப் பிரிந்தனர்.

     ஒரு குழு கிழக்கு நோக்கி நகரந்து, எத்தியோப்பியா, கென்யா, தான்சான்யா, மலாவி, சாம்பியா, ஜிம்பாவே எனப் பரவி தென்னாப்பிரிக்கா வரை சென்றது.

     இன்னொரு குழு வடமேற்கு நோக்கி நகர்ந்து, வறண்ட பாலைவனாமான, சஹாரா பாலைவனம் வரை சென்றது.

     சஹாரா பாலைவனத்தைக் கடக்க இயலாததால், சஹாராவிற்கு அருகிலேயே வாழத் தொடங்கியது.

     இவர்கள் வாழத்தொடங்கிய பகுதியில் ஒரு மலை.

     மணலினால் ஆன ஒரு குன்று.

     மண்தூரா மலை.

---

     மசாய் இனம்.

     கென்யா, தான்சான்யாவை ஒட்டி இருக்கக்கூடிய சமவெளிப் பகுதியில் இன்றும் வாழும் ஒரு இனம்தான் மசாய் இனம்.

     இந்த இன மக்களுக்கு ஒரு கடவுள்.

     மூங்கு.

     இந்த மசாய் இன மக்கள், பண்டு என்ற பூர்வகுடியில் இருந்து வந்தவர்கள்.

     இவர்களது பட்டப்பெயர்கள் நமக்கு வியப்பைத் தரவல்லவை.

     முருங்கு.

     முராதா.

     முருக்க.

     இவர்கள் தங்களது பெயர்களுக்குப் பின், இந்த பட்டைப் பெயர்களுள் ஒன்றினை இணைத்துக் கொள்கிறார்கள்.

     இந்த மசாய் இனமக்களின் கடவுள், ஒரு மலைமேல் இருக்கிறார்.

     பொன்தான்யா லெங்காய்.

     இதுதான், இவர்களது கடவுள் வாழும் மலை.

     இன்றைக்கம் இந்த மசாய் இன மக்கள், தங்கள் வீடுகளை, இந்த மலை இருக்கும் திசையை நோக்கியே அமைக்கிறார்கள்.

     மசாய் இன மக்களின் மூல இனமாகிய பண்டு உருவான இடம்தான் நைஜல் சமவெளி.

     இங்கிருந்துதான் இரு இனக்குழுக்கள் பிரிந்து இருவேறு திசைகளில் பயணித்திருக்கின்றன.

     பண்டு இன மக்களின் மூல இடம் குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.

     நைஜல் சமவெளியைச் சார்ந்தவர்கள் என்று ஒருசாரரும், எத்தியோப்பியாவிற்கும் சோமாலியாவிற்கும் இடையில், பண்ட் நிலம் (BAND LAND)  என்றொரு இடம் இருக்கிறது. எனவே இந்த இடத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் பண்ட் இன மக்கள் என்று வேறொருசாரரும் தெரிவிக்கின்றனர்.

     இம்மக்கள் வியத்தகு வகையில் வானியல் அறிவைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

     இந்த பிரபஞ்சத்தில், சிறுநாய் கூட்டம் என்று ஒரு நட்சத்திரக் கூட்டம் உள்ளது. இந்த சிறுநாய் கூட்டத்தில் இருந்து வந்தவர்கள்தான், தங்களின் மூதாதையர்கள் என இவர்கள் நம்புகிறார்கள்.

     நைஜல் காங்கோ பகுதியில் இருக்கக்கூடிய ஒரு நிலம்தான் மாணி.

     இங்கு வாழ்பவர்கள் மானி இன மக்கள்.

     இவர்கள் இந்த நட்சத்திரம் இந்த இடத்திற்கு வந்தால் ஆபத்து, இந்த நட்சத்திரம் இந்த திசைக்கு மாறினால், நாட்டில் மழை பொழியும் என்ற அறிவு உடையவர்களாக இன்றும் இருக்கிறார்கள்.

     இன்றும் அரை ஆடைதான்.

     ஆனாலும் வானியல் அறிவில் சிறந்தவர்களாய் இருக்கிறார்கள்.

---

     ஆப்பிரிக்காவில் வாகும் மொத்த இனக் குழுக்களுக்கும், மொத்த இனத்திற்குமான ஒரு பெயர் இருக்கிறது.

     பெர் பெர் இன மக்கள்.

     BER BER.

     இந்த பெர்பெர் இன மக்களின் மொழி, பெர்பெர் மொழிக் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது.

     இவர்களது எழுத்தின் வடிவம், நமது தமிழ் மொழியின் முந்தைய எழுத்து வடிவமான, தமிழி எழுத்தை ஒத்து இருப்பதுதான் வியப்பிலும் வியப்பு.

     இவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் பொழுதெல்லாம், தங்களின் பழக்க வழங்கங்களுடன், தங்களின் எழுத்து வடிவத்தையும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

     எனவே எல்லா இடங்களிலும் சற்று வேறுபட்ட வடிவங்களில், சிற்சில மாற்றங்களுடன் தமிழி எழுத்துகள் தலைகாட்டுகின்றன.

     பெர்பெர் மொழிக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழியின் பெயர்.

     தமிழிட்.

     TAMKZIGHT.

---

     ஆப்கானிஸ்தானில் பிரபூய் என்றொரு மொழி இருக்கிறது.

இந்த மொழியின் உச்சரிப்பு தமிழ் மொழியை ஒட்டியே அமைந்துள்ளது.
---

     ஆப்பிரிக்கர்களின் ஒரு சில இனக்குழுக்களுடன் தமிழர்களை ஒப்பிட்டால, பல்வேறு ஒற்றுமைகளைக் காணலாம்.

     இந்த இனங்களை நெக்ராய்டு இனம் என்பர்.

     இருப்பினும் தமிழ்நாட்டிலேயே உருவத்திலும், நிறத்திலும் வேறுபட்ட மனிதர்கள் இருக்கிறார்கள்.

     காரணம் இடையிலே வந்த ஒரு இனம்.

     பெட்டாயிடு இனம்.

     பெட்டாயிடு இனம், மெக்ராயிடு இனத்திற்கும், காகசாயிடு இனத்திற்கும் கலப்பாக உருவானது.

---

     இங்கு ஒரு தீவு இருக்கிறது.

     கிரேட்டா தீவு.

     மத்தியத்தரைக் கடல் பகுதியைச் ஒட்டிய, இத்தீவில் வாழும் மெட்டாயிடு இனத்தைச் சார்ந்தவர்களுடைய உருவ அமைப்பும், நிறமும், நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது.

     இவர்களுடைய கடவுள்

     ZEUS.

     இந்தக் கடவுள் மலை மேல் இருக்கிறார்.

     இந்தக் கடவுளுக்கு இரு மனைவிகள்.

     அதில் ஒரு மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை.

     அந்த ஆண் குழந்தையின் பெயர் டெல் தாமுஸ்.

     குழந்தை வடிவிலானக் கடவுளுக்குத்தான் இந்தப் பெயர்.

     வளர்ந்து இளைஞராய் உயர்ந்த பின்,இந்தக் கடவுளின் பெயர்.

     குவெரெக்ஸ்.

     இதனை ஆய்வாளர்கள், இந்தக் கதை ஆப்பிரிக்காவில் இருந்து நம்மூருக்கு வந்த கதையா? அல்லது நம்மிடம் இருந்து ஆப்பிரிக்காவிற்குப் பயணித்த கதையா என்தை ஆராய்ந்து வருகிறார்கள்.

     இங்கு சிவன் கைலாச மலையில் இருக்கிறார்.

     இரண்டு மனைவிகள்.

     ஒரு மகனின் பெயர் குமரன்.

     இவரைத்தான் குவெரெக்ஸ் என்கிறார்களா?

     இங்கிருக்கும் ஒரு தீவில் நடைமுறையில் ஒரு வீர விளையாட்டு இருக்கிறது.

     ஏறு தழுவுதல்.

     தமிழர்களின் ஏறு தழுவுதல்.

---

     என்கி.

     ஆப்பிரிக்கா முழுவதும் பரவி இருக்கக்கூடிய பண்டு இன மக்களின் வழிபடு தெய்வம் இந்த என்கி.

     பெண் தெய்வம்.

     என்கி என்றால் என் கை என்கிறார்கள்.

     தான்சான்யாவில் பேசப்படும் மொழி சுவாஹிலி.

     இம்மொழி பண்டு மொழியில் இருந்து பிறந்த ஒரு நேரடிக் குழந்தை.

     இன்று ஆப்பிரிக்காவின் 18 நாடுகளில் பேசப்படும் மொழி, இந்த சுவாஹிலிதான்.

     இந்த சுவாஹிலி மொழியின் என்கி என்பதனை என் காய் என்கிறார்கள்.

     NGAI அல்லது ENGAI

     என் காய் என்பதை நம் மொழிக்கு மாற்றினால் பொருள் என்ன தெரியுமா?

     எட்டு கைகளை உடையவள்.

     கொற்றவை.

     ஆப்பிரிக்காவின் கொற்றவைதான் என் காய்.

---

     சுலு.

     தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு இனம்.

     இவ்வினத்தில் யாராவது இறந்துபோனால், நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுகிறார்கள்.

     எல்லா இனங்களிலும் இந்தப் பழக்கம் இல்லை.

---

     எத்தியோப்பியாவில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த மக்கள், தங்கள் இடுப்பில் தாயத்து கட்டிக் கொள்கிறார்கள்.

     தாயத்திற்குள் இருப்பது என்ன தெரியுமா?

     தொப்புள் கொடி.

---

     இதுமட்டுமல்ல, எத்தியோப்பிய மக்கள் நம்மைப் போன்ற உருவத்தையும், நம்மைப் போன்ற முடியினையும்உடையவர்கள்.

    



எத்தியோப்பியப் பெண்கள் பாவாடையும், புடவையும் அணிந்தால், அச்சு அசல், தமிழ்ப் பெண்களாகவே தெரிவார்கள்.

     உருவம் மட்டுமல்ல, அறிவியலும் இந்த உண்மையை உரத்து முழங்குகிறது.


ஆப்பிரிக்க மனிதருக்கும், மதுரைக்கு அருகில் இருக்கும் விருமாண்டித் தேவருக்கும் அமைந்திருக்கும், ஒரே டி.என்.ஏ, அமைப்பின் ஒற்றுமை அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கி இருக்கிறது.

---

     தான்சான்யா.

     ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்று.

     இந்நாட்டின் முந்தைய பெயர்

     தங்கனீக்கா. 

     தங்கனீக்கா என்னும் பெயரில் ஒரு ஏரியும் இருக்கிறது.

     ஏரியை ஒட்டிய மொத்தப் பகுதி, கென்யாவில் தொடங்கி, மொசாம்பிக் வரையிலும், எங்கு பார்த்தாலும் தென்னை மரங்கள்.

     தென்னை மரத்தின் பழைய பெயர், தொன்மையான பெயர்.

     தெங்கு கனிக்காய்.

     இதையே சிறிது மாற்றினால்

     தங்கனீக்கா. 

---

     ஆய்வாளர்கள், தமிழர்களின் மூல இனம் ஆப்பிரிக்காவில் இருந்துதான் தொடங்கியது என்கிறார்கள்

     மூல இனத்தின் பரவல் பகுதிதான் எகிப்து, ருமேனியா, சிந்து சமவெளி.

     தமிழர்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை, மொழி ஒற்றுமையை, உருவ ஒற்றுமையை, வழிபாட்டு ஒற்றுமையை, எழுத்து ஒற்றுமையை அனைத்து ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

     ஆனால்,

     இங்கிருந்து அங்கா?

     அங்கிருந்து இங்கா?

     என்பதில்தான் கருத்து வேறுபாடு.

     எப்படிப் பார்த்தாலும்,

     பண்டு இன மக்கள் தமிழர்கள்தான்.

     பண்டு என்றால் பழமையானது, தொன்மையானது என்பதுதானே பொருள்.

பண்டு இனம்.

நம் இனம்.

---

ஏடகம்

ஞாயிறு முற்றம்


கடந்த 8.12.2024 ஞாயிற்றுக் கிழமை மாலை,

ஆப்பிரிக்காவின், தான்சானியாவில் வாழும்,

தமிழ்ப் பெண் எழுத்தாளர், சொற்பொழிவாளர்,

ஆப்பிரிக்கா தமிழ்ச் சாரல் இதழின் பொறுப்பாசிரியர


திருமதி நாச்சியார் அவர்கள்

ஆப்பிரிக்கர்களும் தமிழர்களும்

எனும் தலைப்பில் சொற்பெருக்காற்றி அமர்ந்தபொழுது, ஏடக அரங்கில் இருந்த அனைவர் மனதிலும் ஒரு பெருமிதம் நிரம்பி வழிந்தது.

     55 நாடுகளை உள்ளடக்கிய ஆப்பிரிக்காவில், 40 நாடுகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக தென்ன்ப்பிரிக்கா, மொரீசியசு, பிஷல், தான்சான்யா, நைஜீரியா, அங்கோலா, ருவாண்டா, உகாண்டா, பலாவி போன்ற பத்து நாடுகளில், தமிழர்கள் சிறப்பான முறையில் சேவை செய்து கொண்டு, தொழிலிலும், தங்கள் பணிகளிலும் உயர்ந்து வாழ்நது வருகிறார்கள் என்பதை அறிந்தபோது, அரங்கு வியந்து போனது.

ஆப்பிரிக்காவில் நம்மவர்கள்

நம்மவர்கள்தான் ஆப்பிரிக்காவில்

எனும் உள்ளத்து உணர்வு மேலோங்கும் வகையிலான இப்பொழிவிற்கு,

தஞ்சாவூர், பணி ஓய்வு பெற்ற முதுநிலை தொலைபேசி மேற்பார்வையாளர்


திரு க.அய்யனார் அவர்கள்

தலைமையேற்றார்.

    பொழிவின் நிறைவில்

தஞ்சாவூர், டிஜிட்டல் சோஷியல் கிரியேஷன்ஸ்


கடம்பங்குடி இரா.தனசேகரன் அவர்கள்

நன்றி கூறினார்.

முன்னதாக

பொழிவு கேட்க வந்திருந்தோரை

தஞ்சாவூர்


கவிஞர் கே.ஆர்.சிவராமன் அவர்கள்

வரவேற்றார்.

தஞ்சாவூர், மருதுபாண்டியர் கலை அறிவியல் கல்லூரி

தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்


முனைவர் நா.கீதாராணி அவர்கள்

விழா நிகழ்வுகளை அழகுத் தமிழால்

தொகுத்து வழங்கினார்.

 

முருங்கும்

முருகனும் ஒன்னு

தமிழினமும

பண்டு இனமும்

ஆதி முதலே ஒன்னு –உணரவைத்த

ஏடகத்தையும்

ஏடக நிறுவனர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களையும்

போற்றுவோம், வாழ்த்துவோம்.