கடன்
பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான்
இலங்கை வேந்தன்
இராமனிடம் போரிடும்போது, இராவணன் அடைந்த மனக்
கவலையையும், வேதனையினையும் வெளிப்படுத்த, கம்பர் பயன்படுத்திய உவமை இது.
கடன்
பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான்
இலங்கை
வேந்தன்
கடன் வாங்கியவர், அக்கடனைச் சொன்ன தேதியில் திருப்பிக்
கொடுக்க இயலாத, முடியாத நிலையில், கடன் கொடுத்தவர் வந்துவிடுவாரோ, என எந்நேரமும் அஞ்சி,
அஞ்சி, கலங்கிக் கலங்கி நிற்கும் மனநிலையை உவமையாகக் காட்டுகிறார் கம்பர்.
அப்படிப்பட்டக் கடனை, ஈடு செய்ய இயலாத மன உலைச்சலுக்கு
உவமையாய் வந்து நிற்கும் கடனை, அவ்வெண்ணத்தை முழுமையாய் புறம் தள்ளி, கடன் வாங்கு,
கடன் வாங்கு, திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என்னும் தவறானக் கருத்தை, சின்னஞ்சிறுவர்களிடம்,
நாம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறோமே? இதை என்று? எப்படி? எவ்வாறு? சரி செய்யப் போகிறோம்.
குழந்தையாய் பிறந்து, தவழ்ந்து, சற்று வளர்ந்து,
அன்ன நடைபோட்டு, கல்வி கற்பதற்காக, பள்ளிக்குள் வரும் சின்னஞ்சிறுவர்களுக்கும், சிறுமியர்க்கும்
சொல்லிக் கொடுக்கப்படும், அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை சற்று எண்ணிப் பாருங்கள்.
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்.
வாழ்நாள் முழுவதும் நாம் பயன்படுத்தும் கணிதச்
செயல்பாடுகள், இந்த நான்கும்தான்.
இவற்றுள் கூட்டல், பெருக்கல், வகுத்தலில் தவறில்லை.
சொல்லப்போனால், கழித்தலிலும் தவறில்லை.
ஆனால், கழித்தலை, நாம் சொல்லிக் கொடுக்கும் விதத்தில்தான்
பெருந்தவறு உள்ளடங்கி இருக்கிறது.
கழித்தலை, நம் தொடக்கப் பள்ளிகளில் எவ்வாறு கற்றுத்
தருகிறார்கள்?
உதாரணமாக, 6 இல் இருந்து 2 ஐக் கழித்தால் விடை
4.
இதில் பிழையில்லை.
வேறு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
25 என்ற எண்ணில் இருந்து, 9 என்ற எண்ணைக் கழிக்க
வேண்டும்.
இதை எவ்வாறு கற்றுத் தருகிறார்கள்.
25 இன் கீழ் 9 ஐ எழுத வேண்டும்.
அதாவது, 25 இன் முதல் இலக்கமான 5 ற்குக் கீழ்
9 ஐ எழுத வேண்டும்.
25
9
அடுத்து மேல் இருக்கும் முதல் இலக்கமான 5 இல்
இருந்து 9 ஐக் கழிக்க வேண்டும்.
5 என்பது 9 ஐவிடச் சிறிய எண்.
எனவே கழிக்க இயலாது.
இவ்விடம்தான்
முக்கியம்.
நாம் நம் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்?
5 இல் இருந்து 9 ஐக் கழிக்க இயலாது, எனவே பக்கத்தில்
இருக்கும் 2 என்ற எண்ணிடம் இருந்து கடன் வாங்கு என்று சொல்லித் தருகிறோம்.
இதுபோன்றக் கழித்தலுக்குக் கடன் வாங்கிக்
கழித்தல் என்று பெருமையுடன் பெயரும் வைத்திருக்கிறோம்.
இதுபோன்ற கழித்தல் கணக்குகளில், ஏதாவது ஒரு நிலையில்,
ஏதாவது ஒரு வரியில், வாங்கியக் கடனைத் திருப்பிக் கொடுப்பது போன்ற செயல்பாடு வருகிறதா?
என்றால் இல்லை, இல்லை, இல்லவே இல்லை.
படிப்பதற்காக பள்ளிக்கு வரும் பிஞ்சுகளுக்குக்
கடன் வாங்கச் சொல்லிக் கொடுக்கிறோம்.
வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கச் சொல்லித்
தருவதே இல்லை.
கடனில்லா வாழ்வு வாழ, நாம், நம் குழந்தைகளுக்குச்
சொல்லித் தர வேண்டும் அல்லவா?
கடன் வாங்கினால், நெஞ்சம் கலங்க வேண்டும் என்று
சொல்லித் தர வேண்டும் அல்லவா?
எப்பொழுது சொல்லித் தரப் போகிறோம்?
கழித்தல் கணக்கை இப்படித்த்தான் கற்றுக் கொள்ள
வேண்டும்.
கற்றும் கொடுக்க வேண்டும்.
இதில் எதுவும் ஐயமில்லை.
ஆனால், அதற்காக கடன் என்ற சொல்லைத்தான்
பயன்படுத்த வேண்டுமா?
கடன் என்ற சொல்லுக்கு மாற்றாக வேறு ஒரு சொல்லை
கண்டுபிடிக்கலாம் அல்லவா?
என்று கண்டுபிடிக்கப் போகிறோம்?
