07 செப்டம்பர் 2026

இராகத்தை அடகு வைத்தவர்

 


     அப்புராயர்.

     கும்பகோணத்தின் மிகப்பெரும் செல்வந்தர்.

     சமஸ்தான திவான் என்றும் போற்றப்பெற்றவர்.

     அவர் வீட்டில் ஒரு திருமணம்.

     வீடு என்று சொல்வது தவறு.

     அவரது மாளிகையில் ஒரு திருமணம்.

     திருமண விழாவினைச் சிறப்புடன் கொண்டாடும் வகையில் பல இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

     அக்காலத்தில் இருந்த புகழ்பெற்ற பாடகர்களை எல்லாம் அழைத்திருந்தார்.

     அவர்களுள் ஒருவர் நரசையர்.

     இவர் சங்கராபரணம் இராகத்தில் பாடத் தொடங்கினால், கேட்போர் அனைவரும் மெய்மறந்து போவார்கள்.

     இப்படித்தான் ஒருமுறை, சரபோசி மன்னர் அவர்கள், இவர் சங்கராபரணம் இராகத்தில் பாடப் பாட தன்னையே மறந்து போனார்.

     பரிசில்களை அள்ளி அள்ளிக் கொடுத்ததோடு, சங்கராபரணம் நரசையர் என்னும் விருதினையும் வழங்கி மகிழ்ந்தார்.

     இத்தகு பெருமை வாய்ந்த, சங்கராபரணம் நரசையரைத்தான், அப்புராயர் அழைத்திருந்தார்.

     மறுநாள் காலை, நரசையர் பாடவேண்டும்.

     முதல்நாளே, அப்புராயர் அவரிடம், தன் ஆசையை முன்வைத்தார்.

     தங்கள் நிகழ்வின் தொடக்கமே, சங்கராபரணம் இராகத்தில்தான் அமைய வேண்டும் என்றார்.

     நரசையர் முகத்தில் சங்கடத்தின் அறிகுறி தோன்றியது.

     பின் மெல்லத் தயங்கித் தயங்கிப் பேசினார்.

     மன்னிக்க வேண்டும். அதைப் பாட இயலாத நிலையில் இருக்கிறேன்.

     ஏன்?

     அதை ஒருவரிடம் அடமானம் வைத்துள்ளேன் என்றார்.

     ராயர் திடுக்கிட்டுப் போனார்.

     இராகத்தை அடகு வைத்தீர்களா? யாரும் இராகத்தை அடகு வைத்ததாக, இதுவரை நான் கேள்விப்பட்டதில்லையே? எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறீர்கள், சொல்லுங்கள், உடனே நான் அந்தக் கடனை அடைக்கிறேன் என்றார்.

     அந்நிமிடமே, ராயர் தனக்கு நம்பிக்கையான ஒருவரிடம், கடன் தொகையினையும், அதற்குரிய வட்டியினையும் கொடுத்து அனுப்பினார்.

     ராயர் அனுப்பியவர், கடன் கொடுத்த அந்தப் பெருநிலக்கிழாரைச் சந்தித்துக் கடனையும் வட்டியையும் கொடுத்தார்.

     பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்தப் பெருநிலக்கிழார், உடனே தானும் புறப்பட்டு, கும்பகோணம் ராயர் இல்லத்திற்கு வந்தார்.

     ராயர் கொடுத்த கடன் தொகை, அதற்குரிய வட்டியோடு, தானும் ஒரு தொகையினைச் சேர்த்து, அப்புராயரிடம் கொடுத்தார்.

     தான் கொடுத்தனுப்பிய பணத்தோடு, கூடுதல் தொகையும் சேர்ந்து, தன்னிடமே திரும்பி வந்தது கண்டு ராயர் வியந்தார்.

     கேள்விக்குறியோடு பெருநிலக்கிழாரை நோக்கினார்.

     பெருநிலக்கிழார் பேசினார்.

     ராயர் அவர்களும், சங்கீதசிகாமணியாகிய நரசையர் அவர்களும், என் செயலை மறந்துவிட வேண்டும். ஐயர் அவர்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் என்னிடம் கேட்க, கேட்டு வாங்க உரிமை உடையவர்கள். நான் செல்வம் படைத்தவனாய் இருப்பதே, இவர்களைப் போன்றவர்களுக்குக் கொடுப்பதற்காகத்தானே.

     பணம் வேண்டுமென்று கேட்டிருந்தால், எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும், சற்றும் தயங்காமல் மகிழ்வோடு கொடுத்திருப்பேன்.

     ஆனால், இவரோ கடன் வேண்டுமென்று கேட்டார்.

     கடன் என்னும் வார்த்தை என்னை மிகவும் வேதனைப் படுத்திவிட்டது.

     அதனால்தான், அடகு உண்டா என்று கேட்டேன்,

     இவரோ இராகத்தை அடகு வைக்கிறேன் என்றார்.

     சங்கராபரணத்தை அடகு வைத்தார்.

    அன்று முதல் இன்று வரை, அதனை எங்கும் இவர் பாடவே இல்லை.

     இதில் இருந்தே, இவருடைய உயர்ந்த குணமும், உண்மையும் புலப்படுகிறது.

    இந்தத் தொகை எனக்கு உரியது அன்று.

     அவருக்கே உரியது.

     தாங்களே அவரிடம் கொடுத்துவிடுங்கள்.

    இவ்வளவு நான், சங்கராபரணம் இராகத்தை சிறை செய்ததற்கு அபராதமாக, நான் கொடுக்கும் இந்தத் தொகையினையும், தாங்களே அவருக்குக் கொடுத்துவிட வேண்டும்.

     பெருநிலக்கிழாரின் அன்பையும், பெரு உள்ளத்தையும், நேர்மையினையும் கண்டு, திருமண விழா  அரங்கில் உள்ளவர்கள் அனைவரும் வியந்து, நெகிழ்ந்து மகிழ்ந்தனர்.

     மறுநாள் திருமணப் பந்தலில் சங்கராபரணம் ஆர்ப்பரித்து எழுந்தது.

     அப்பெருநிலக் கிழார் யார் தெரியுமா?

     கபிஸ்தலம், இராமபத்திர மூப்பனார்.