ஹரணி.
பேராசிரியர், முனைவர்
க.அன்பழகன்.
பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும், நவீன இலக்கியங்களிலும் ஆழ்ந்த
புலமை பெற்றவர்.
அதிர்ந்து பேசாதவர்.
பாராட்டத் தயங்காதவர்.
கூக்குரல்களுக்குள்ளும், சச்சரவுகளுக்குள்ளும் அகப்பட்டுக் கொள்ளாதவர்.
வாழ்க்கைத் தந்த பேரனுபவங்களை கவிதைகளாக, சிறுகதைகளாக, நாவல்களாக இவ்வுலகிற்கு வழங்கிக்
கொண்டே இருந்தவர்.
எப்பொழுதும் நெருக்கமாக உணர வைக்கும் மனிதர்.
மிகமிக மென்மையான மேன்மையான மனிதர்.
வாசிக்காத நாள்களை எல்லாம், சுவாசிக்காத நாள்களாகவே கருதியவர்.
தஞ்சாவூர், கரந்தையில், திரு பொன்.கலியபெருமாள், திருமதி க.ஞானாம்பாள் தம்பதியினரின் மகனாக, 2.6.1961 அன்று பிறந்தவர்.
மூன்று சகோதரிகள்.
ஒரு சகோதரன்.
பள்ளிப் படிப்பை கரந்தை, உமாமகேசுவர மேனிலைப் பள்ளியிலும், புதுமுக வகுப்பு மற்றும் இளங்கலை
வேதியியலை,
தஞ்சாவூர் மன்னர்
சரபோசி அரசு கல்லூரியிலும் பயின்றவர்.
இளங்கலை வேதியியல் படித்து முடித்தபிறகு, ஹரணி அவர்களின் உள்ளத்தில்
ஓர் ஆசை.
மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை.
மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கு
என்று ஓர் ஒதுக்கீடு உண்டு.
அந்த ஒதுக்கீட்டின் அடிப்படையில் விண்ணப்பித்தார்.
மருத்துவக் கல்லூரியில் இடமும் கிடைத்துவிட்டது.
இருப்பினும், பொருளாதாரச்
சூழ்நிலையால் மருத்துவக் கல்லூரியில் சேர இயலாத நிலை.
வேறு வழியின்றி, முதுகலை தமிழ் இலக்கியத்தினை, அஞ்சல் வழியில் பயின்றவர்.
வருவாய் துறையில் சில ஆண்டுகள் அலுவலக உதவியாளராகப் பணியாற்றினார்.
பின்னர், 1982 ஆம்
ஆண்டு முதல்
1999 ஆம் ஆண்டு
வரை, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்
கழகத்தில்,
தட்டச்சராகத்
தினக் கூலி அடிப்படையில்,
தன் பணியினைத்
தொடங்கி, அலுவலக நிலையில் பல பொறுப்புகளில்
பணியாற்றியவர்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அலுவலக நிலையில் பணியாற்றிக்
கொண்டிருக்கும் பொழுதே,
கரந்தை, தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக்
கலைக் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் பா.மதிவாணன் அவர்களை, ஆய்வு நெறியாளராகக் கொண்டு, தி.ஜானகிராமன், பாலகுமாரன் ஆகியோரின் பெண்
மாந்தர் படைப்புகள் ஓர் ஆய்வு எனும் தலைப்பில் ஆராய்ந்து, ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்.
தொடர்ந்து, தமிழ்ப்
பல்கலைக் கழக,
மொழிப் புலத்
தலைவர், முனைவர் பெ.மாதையன் அவர்களின் வழிகாட்டலில், சங்க இலக்கியத்தில், ஒரு பொருட் பன்மொழிகள் என்னும்
தலைப்பில்,
ஆய்வு மேற்கொண்டு, முனைவர் பட்டம் பெற்றவர்.
இக்காலகட்டத்தில், தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர்
முனைவர் வ.அய்.சுப்பிரமணியம், முனைவர் ஔவை நடராசன் மற்றும்
முனைவர் கி.கருணாகரன் முதலிய துணைவேந்தர்களிடம், நேர்முக உதவியாளராகப் பணியாற்றி, துணைவேந்தர்களின் நன் மதிப்பைப்
பெற்றவர்.
1995 ஆம் ஆண்டு, தஞ்சையில் நடைபெற்ற, எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்
போது, முனைவர் க.இராசாராம் அவர்களின் உதவியாளராகப் பணியாற்றி, மாநாடு வெற்றிபெற கடுமையாக
உழைத்தவர்.
பதினெட்டு ஆண்டுகள், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், அலுவலக நிலையில் பணியாற்றியவர், தன் நிலையில் உயர்ந்து, 2000 ஆவது ஆண்டு சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
தமிழ் விரிவுரையாளராகப் பணியேற்றவர்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், தமிழ் விரிவுரையாளர், பேராசிரியர், தமிழ்ப் பிரிவுத் தலைவர் என
படிப்படியாக உயர்ந்து,
21 ஆண்டுகள் அயராப்
பணியாற்றி,
2021 ஆம் ஆண்டு
பணியினை நிறைவு செய்தவர்.
அண்ணாமலைப் பல்கலைக் கழக ,தமிழ்ப் பிரிவு, அஞ்சல் வழிப் பொறுப்பாளராக
அமர்ந்து,
தமிழகத்தின் பல்வேறு
ஊர்களில்,
தமிழ் இலக்கண, இலக்கியப் பாடங்களை நடத்திய
பெருமைக்கு உரியவர்.
அஞ்சல் வழி கல்விக்காகப் பல்வேறு நூல்களை எழுதியவர்.
குடும்பம்
ஹரணி அவர்கள், தன் தாய் தந்தையின் மீது அளவிடற்கரிய
அன்பு செலுத்தியவர்.
வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம், தன் தாயையும், தன்னை வளர்த்து ஆளாக்கிய தந்தையையும்
தன் எழுத்தில் போற்றிப் பாதுகாத்தவர்.
அம்மா
எதுவும் படிக்கவில்லை.
எல்லாம்
சொல்லிக் கொடுத்தாள்.
ஒரு வாழைக்காயில்
குடும்பம் நடத்தியவள்.
நாங்கள்
ஒரு சிம்ளி விளக்கில்
படித்தவர்கள்
---
சாவதற்கு
கொஞ்ச
நாள்களுக்கு முன்பு திடீரென
உறுத்தத் தோனியது.
அப்பா உங்களுக்கு
என்னப்பா பிடிக்கும்?
சட்டென்று சொன்னார்
எங்கள் கேள்வி முடிவதற்குள்…
நீங்க நல்லா இருந்தா …
அப்புறம்தான் செத்தும்
போனார் – சாகாத வாழ்வில்
எங்களை வைத்து
என்று தன் தாய், தந்தையினைப் போற்றியவர், இன்று தன் தாய், தந்தையினைத் தேடிப் போய்விட்டார்.
---
திருமதி கோமதி.
இவரது மனைவி.
தன் கணவரை மட்டுமல்ல, தன் கணவரின் எழுத்துக்களையும் உயிரினும்
மேலாய் நேசித்தவர்.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பியலில், பட்டயப் படிப்பினை நிறைவு செய்து, சோழன் போக்குவரத்துக் கழகத்தில், மூன்று வருடங்களாக இளநிலைப்
பொறியாளராகப் பணியாற்றிய இவர்,
தன் வாழ்க்கை
இணையரின் எழுத்துப் பணிகளுக்குத் துணை நிற்கும் வகையில் தன் அரசுப் பணியினைத் துறந்தவர்.
மேலும் தங்கள் வீட்டு மாடியில், தன் கணவர், தன் தாயின் பெயரில், அம்மா க.ஞானாம்பாள் நூலகம் அமைக்க, கட்டடம் கட்ட, சற்றும் தயங்காது, தன் நகைகளைக் கொடுத்தவர்.
குகன்.
ஜனனி.
தந்தைக்குப் பெருமை சேர்க்கும் பிள்ளைகள்.
மகள் திருச்சியில், தன் கணவருடன் வசிக்கிறார்.
மகன் குகன் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், விஞ்ஞானியாக, தன் மனைவியுடன் வசிக்கிறார்.
நல்லதொரு குடும்பம்,ஒரு பல்கலைக் கழகம் என்பதற்கு ஒரு நல்ல
எடுத்துக்காட்டு ஹரணி அவர்களின் குடும்பம்.
எழுத்துலகம்
ஹரணி அவர்களின் அன்புத் தந்தை திரு பொன்.கலியபெருமாள் அவர்கள், மருந்தாளுநராகப் பணியாற்றியவர்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் நன்கு அறிந்தவர்.
ஹரணி அவரகள், சின்னஞ்
சிறுவனாக இருக்கும் பொழுதே,
நூலகங்களுக்கு
அழைத்துச் சென்று,
நூல்களையும் திராவிட
இயக்கத் தலைவர்களின் பேச்சுக்களையும் அறிமுகப்படுத்தியவர்.
தினத்தந்தி, இராணி
என நாளிதழ்களையும்,
வார இதழ்களையும்
வீட்டிற்கு வரவழைத்து,
தன் மகனுக்குப்
படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியவர்.
இதன் விளைவாக, தன் நண்பரின் வீட்டிற்குச் சென்று ஆங்கில
இதழ்களைப் படிக்கத் தொடங்கிய ஹரணி அவர்கள், ஆறாம் வகுப்புப் படிக்கும் பொழுதே, சிறுகதைகள் எழுதத் தொடங்கிவிட்டார்.
11 வயதிலேயே, சிறுகதை
எழுதுதல் என்னும் பழக்கம்,
ஹரணியின் இரத்தத்திலேயே
கலந்துவிட்டது.
பார்க்கும் காட்சிகளிலெல்லாம், படிக்கும் செய்திகளிலெல்லாம், கேட்கும் வார்த்தைகளிளெல்லாம், ஒளிந்திருக்கும் கதைகளை அடையாளம்
கண்டு, எழுத்து வடிவம் கொடுக்கக் கற்றுக்
கொண்டார்.
எழுத்து இவர் வசப்பட்டது.
பதினெட்டு வயதிலேயே, ஹரணி அவர்களின் முதல் கவிதை அச்சு வாகனம்
ஏறி, இதழ் வழி வெளிவந்தது.
1983 ஆம் ஆண்டு, இவரது முதல் சிறுகதை வெளியானது.
தீபம், ஆரண்யா, கொல்லிப்பாவை, சுபமங்களா முதலான சிற்றிதழ்களில்
ஹரணியின் சிறுகதைகள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கின.
இதயம் பேசுகிறது இதழில் ஒரு சிறுகதை.
பறக்க மறந்த சிறகுகள்.
அனைவரின் கவனத்தையும் ஹரணியின் பக்கம் திருப்பியது.
தஞ்சையில் வாழ்ந்த, எழுத்துலக ஜாம்பவான், தஞ்சை பிரகாஷ் அவர்களின் தொடர்பானது, தஞ்சையில் வாழ்ந்த சமகால எழுத்தாளர்களுடன்
நெருங்கிப் பழகவும்,
அவர்களது படைப்புகள்
குறித்து உரையாடுவதற்குமான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது.
சுந்தர ராமசாமி, சுஜாதா, பாலகுமாரன், ஜெயமோகன் முதலான எழுத்தாளர்களுடன்
ஏற்பட்ட தொடர்பும்,
நட்பும், ஹரணியின் எழுத்துலகம் பரந்து, வளர்ந்து, விரிய காரணங்களாய் அமைந்தன.
க.அன்பழகன் என்ற பெயரிலும், ஹரணி என்ற பெயரிலும், உத்ரா என்ற பெயரிலும் சிற்றிதழ்களில்
இவரது சிறுகதைகள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கின.
குமுதம், ஆனந்த
விகடன், கல்கி, தாய், இதயம் பேசுகிறது, புதியபார்வை போன்ற வெகுஜன இதழ்களும்
ஹரணியின் சிறுகதைகளை வெளியிடத் தொடங்கின.
தமிழக இதழ்கள் நடத்தும் சிறுகதைப் போட்டிகளில் தொடர்ந்து
பங்கு பெற்று,
பரிசுகளை வென்றவர்தான்
ஹரணி.
இவரது சிறுகதைகளைப் படித்து மகிழ்ந்த, அன்றைய தமிழ்ப் பல்கலைக் கழகத்
துணைவேந்தர் ஔவை நடராசன் அவர்கள்,
தனது உதவியாளர்தானே
என்று அலட்சியமாய் எண்ணாமல்,
தொடர்ந்து பாராட்டி
உற்சாகப்படுத்தினார்.
பாராட்டியதோடு விட்டுவிடாமல், ஹரணி அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பு, நூலாக வெளிவரவும் காரணமாக இருந்தார்.
துணைவேந்தர் ஔவை நடராசன் அவர்களின் வழிகாட்டலில், 1993 ஆம் ஆண்டு, ஹரணி அவர்களின் முதல் நூல், சிறுகதைத் தொகுப்பு, அச்சு வாகனம் ஏறி நூல் வடிவில்
வெளிவந்தது.
உயிர்க்குடில்
ஔவை நடராசன் அவர்கள் அணிந்துரையும் வழங்கி மகிழ்ந்தார்.
ஆயிரம் கதைகளுக்கு மேல் எழுதி, அன்பழகன் அவர்கள் சிறுகதைச் செங்கதிராக மிளிர வேண்டும் என்று வாழ்த்தினார்.
ஔவையாரின் வாழ்த்து பலித்திருக்கிறது.
ஹரணி அவர்கள் எழுதிய சிறுகதைகளின் எண்ணிக்கை இன்று 1200 ஐ எட்டிப் பிடித்திருக்கிறது.
எந்த சிறுகதை எழுத்தாளரும் எட்டாத உயரத்தைத் தாண்டியிருக்கிறார்
ஹரணி.
இவரது படைப்புகளை ஆராய்ந்து ஐவர் முனைவர் பட்டமும், இருபதுக்கும் மேற்பட்டோர் ஆய்வியல்
நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளனர்.
சங்க இலக்கியம், இலக்கணம், மொழிபெயர்ப்பு, அகராதியியல், அறிவியல், உளவியல், அறிவியல் தமிழ், சிறுவர் இலக்கியம், நாடகம் என பலப்பல தளங்களில்
தொடர்ந்து செயல்பட்டவர் ஹரணி.
உயிர்க்குடில் (1993)
ஒவ்வொரு மழை நாளிலும் (2000)
மறுபடியும் நதி வரும் (2003)
வலை (2004)
புரண்டு படுக்கும் வாழ்க்கை (2011)
செல்லாத நோட்டு (2012)
காலம் தின்றவர்கள் (2014,)
அப்பா (2020)
மிட்டாய் வண்டி (2016)
காந்தியும் குமரேசனும் (2017)
மனிதர்கள் நடைபாதையில்
இருக்கிறார்கள் (2021)
செல்போன் வாங்கப்போன முயல்குட்டி (2021)
சதிகார நரியும் அதிகார ஓநாயும் (2021).
சான்றோர் இளமையியல் (2022)
தீம்பெயல் (2024)
நதியின் பிழையன்று (2024)
ரௌத்ரம் பழகு (1996)
பேருந்து (2014)
அப்பிராணி (2016)
வாழ்ந்தே தீருவேன் (2021)
கனையெரி (2021)
சரஸ்வதி (1995)
நெருப்பில் புதைந்த கனவுகள் (1997)
நிழல்கள் (1998)
பெரிதினும் பெரிது கேள் (1999)
சாபப் பட்சிகள் (1999)
காக்கை விருட்சம் (1999)
பெண் எனும் நல்லாள் (2021)
பிச்சைக்காரர்கள் (2024)
முல்லை (2024)
பூக்கள்
பூத்துக்கொண்டேயிருக்கின்றன (2024)
ஜால்ரா,
என்னமோ நடக்குது,
நத்தைகள் (2022)
கவிதைத் தொகுப்புகள்
உதிரிலைகள் (2017)
விழாத இடத்தில் விழுந்த மழைத்துளி
(2019)
வானம் விழுங்கும் வானவில் (2021)
வீசியெறியப்பட்ட சுள்ளிகளில்
கூடுகளாய் (2022)
மின்மினித்தடங்கள் (2004)
ஒருபொருட்பலசொற்கள் (2004)
வண்ணச்சிறகுகள் (2005)
தமிழ் நாவல்களில் பெண்கள் (2005)
சொல்லும்பொருளும் (2009)
திருப்பாணாழ்வார், மதுரகவியாழ்வார் (2015)
தண்டியலங்காரம் (2015)
இலக்கிய நிழல் (2024)
பெண்ணியல் கட்டுரைகள் (2004)
பன்முக ஆளுமையாளர் பேரறிஞர் அண்ணா
(2010)
நத்தையோட்டுத் தண்ணீர் (2012)
மாண்புமிகு வள்ளுவம் (2016)
விழையாமை என்னும் பேராண்மை – திருக்குறள் நூல் (2022)T
he Magnanimity called Non-interference (திருக்குறள் நூல் ஆங்கிலத்தில்)
செம்மொழி அறங்கள் – (2022)
தந்தையைக் காப்பாற்றிய மகன்
ஆட்டுக்குட்டியும் கடவுளும்
வண்ண வண்ணச் சிறகுகள்
திருவடி நீழலே
தீங்கூக்கல்
ஒட்டகச் சிவிங்கியும் அற்புத விளக்கும்
படைப்பாளுமை
ஈதொழிய வேறில்லை
ஆடிப்பாவை
உடைந்த பொம்மை
யாதெனக் கேட்டால்
எச்சில் கொள்ளி
குயில் ஏன் காக்கை கூட்டில் முட்டையிடுகிறது
சிங்கம்தான் ராஜாவா
தாய்மையின் நியாயம்
பெப்பா செப்பு
பாக்தி அகராதி
வாக்குண்டாம், நல்வழி
மாம்பூக்கள்
எல்லாரும் போய்விட்டார்கள்
இவைதவிர, கவிஞர் மீராவின் கவிதைத் தொகுதிகள் இரண்டினை, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தும் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறாக, சற்றேறக்குறைய நூறு நூல்களை எழுதி வெளியிட்டுச் சாதனை படைத்துள்ளார்.
பாட திட்டத்தில் ஹரணி
ஹரணி அவர்களின் சிறுகதைகள் மற்றும்
நாவல்கள் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பாடமாவ வைக்கப்ட்டுள்ளன.
இருளில்
இரு பறவைகள் என்னும் சிறுகதை மேனிலைப்பள்ளிப் பாடத்திட்டத்தில் 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை இடம் பெற்றிருந்தது.
இருளில் இரு பறவைகள் எனும் சிறுகதை, மற்றும் வண்ணச்சிறகுகள் என்னும்
இலக்கியக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுநூல் – (2006) கோபி கலை அறிவியல் கல்லூரியில்
பாடத்திட்டமாக இருந்துள்ளது
செல்லாத நோட்டு எனும் சிறுகதை வேலூர்
ஊரிஸ் மகளிர் கல்லூரி பாடத்திட்டமாக இருந்துள்ளது (2007),
மூக்குத்தி எனும் சிறுகதை மன்னர்
சரபோசி கல்லூரி பாடத்திட்டத்தில் இருந்துள்ளது) (2009),
செல்லாத நோட்டு சிறுகதை (நஞ்சப்பா
மகளிர் கலை அறிவியல் கல்லூரி பாடத்திட்டம், பொள்ளாச்சி)(2010),
காலம் தின்றவர்கள்
சிறுகதைத்தொகுப்பு –
தொலைநிலைக்
கல்வி, பாரதியார் பல்கலைக்கழகம், (2011 முதல் மூன்று ஆண்டுகள் )
பேருந்து நாவல் , திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகப்
பாடத்திட்டம் 2015
இலிருந்து
ஏழாண்டுகள் ,
பன்முக ஆளுமையாளர் பேரறிஞர் அண்ணா
(மொரிசியஸ் கல்வி நிறுவனத்தில் பார்வை நூல்) (2009),
மாண்புமிகு வள்ளுவம், வள்ளுவம் குறித்த ஆய்வு
நூல் (சரபோசி அரசு கல்லூரிப் பாடத்திட்டத்தில்) (2018 முதல் மூன்றாண்டுகள்),
அப்பா சிறுகதைத்தொகுப்பு (அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவுக் கல்லூரி பாடத்திட்டத்தில்) (2022-2023 முதல் மூன்றாண்டுகள்)..
வகித்த பொறுப்புகள்
தமிழ்ப்பிரிவுத் தலைவர்,
தேர்வுக்குழுத் தலைவர்,
பாடத்திட்டக்குழு உறுப்பினர்,
முனைவர் பட்ட ஆய்வுக்குழு
உறுப்பினர்,
வல்லுநர்க்குழு உறுப்பினர்,
வினாத்தாள் தயாரிப்புக்குழுத்
தலைவர்,
விடைத்தாள் மதிப்பீட்டுக்குழுத்
தலைவர்
உள்நாடு மற்றும்
வெளிநாடு.மானிட்டரிங் கமிட்டி உறுப்பினர்,
விடைத்தாள் தயாரிப்புக்குழு
உறுப்பினர்,
உள்நாடு மற்றும் வெளிநாடு – படைப்பிலக்கிய நூல்கள்
தேர்வுக்குழுத் தலைவர்
தஞ்சாவூர், உலகத் திருக்குறள் பேரவை, வாழ்நாள் உறுப்பினர்
தேசியக் கருத்தரங்குகள் ஒருங்கிணைப்பாளர்
எம்ஃபில் மற்றும் முனைவர் பட்ட
வாய்மொழித்தேர்வுகள் தொலைதூரத் தொடர்பு வகுப்புகள் புறநிலைத் தேர்வாளர்
இணைய வழித் தேர்வுகள் தலைவர்
என பல்வேறு பொறுப்புகளை வகித்து, பொறுப்புகளுக்குப் பெருமை சேர்த்தவர்
ஹரணி.
விருதுகள்
வைரமுத்து சமூக இலக்கியப்பேரவை
விருது (1995)
செழுந்தமிழ்ச் செம்மல் விருது (2009)
கரூர் சிகரம் விருது (2012)
தியாக துருகம் பாரதி தமிழ்ச்சங்க
விருது (2013)
மண்ணின் சிறந்த படைப்பாளி விருது (2014)
சென்னைக் கம்பன் கழகம் – தமிழ் நிதி விருது (2016)
வானதி விருது (2016)
உலகத் திருக்குறள் பேரவை – குறள்நெறிச் செல்வர்
விருது (2017)
திருப்பூர் இலக்கிய விருது (2022).
பொதிகை மின்னல் சிறந்த நூல்
இலக்கிய விருது மற்றும் பொற்கிழி (2023),
வண்டல் சிறுகதைப்போட்டி பரிசு (2023)
கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின்
சிறந்த நூல்விருது (2023)
சிறந்த எழுத்தாளருக்கான
திருக்கருகாவூர்,
அக்கினி
அறக்கட்டளை விருது (2024)
புதுச்சேரி பனுவல் நூல் போட்டி 2023 - க்கான விருது (2024)
அமெரிக்க மின்னிதழ் ஆனந்தச்
சந்திரிகை மற்றும் சென்னை நூலேணிப் பதிப்பக விருது.
நெய்வேலி இந்தியா நிறுவனம் நடத்திய 25 ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சியின், சிறந்த எழுத்தாளர் விருது
என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
நிறைவேறாத ஆசை
தனது மூதாதையர்களின் வாழ்க்கை முறையினையும், அவர்கள் வாழ்ந்த வரலாற்றினையும், ஒரு நூலாக எழுதி வெளியிட வேண்டும்
என்னும் உயர்ந்த உன்னத நோக்கத்தில், ஆய்வு
மேற்கொண்டு,
தரவுகளைத் திரட்டிக்
கொண்டிருந்த ஹரணி அவர்கள்,
ஏனோ அந்த நூலினை
எழுதி முடிக்கும் முன்பே,
தன் மூதாதையர்களைத்
தேடிப் போய்விட்டார்.
ஓயாமல் வாசித்துக் கொண்டே இருந்த ஹரணி, ஓய்வெடுக்கத் தொடங்கிவிட்டார்.
அசராமல் எழுதிக்கொண்டே இருந்த ஹரணியின்
கரங்கள், நிரந்தரமாய் இளைப்பாறத் தொடங்கிவிட்டன.
ஹரணி, தன் உருவத்தால் மறைந்தாலும், தன் எழுத்துக்கள் வழி, என்றும் என்றென்றும் வாழ்ந்து
கொண்டே இருப்பார்.
வாழ்க ஹரணி,
