24 மே 2013

கரந்தை மலர் 10


----- கடந்த வாரம் ------
கல்யாண மகால் சத்திரத்தின் சார்பில் 1881 ஆம் ஆண்டு வேத பாடசாலை ஒன்று தொடங்கப் பெற்றது. இங்கு வடமொழி கற்கும் மாணவர்களுக்கு விடுதி மற்றும் உணவு வசதிகள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப் பட்டன. இந்த வேத பாடசாலையால் பயனடைந்தவர்கள் பிராமணர்கள் மட்டும்தான் என்பதனைச் சொல்லத் தேவையில்லை.
இந்நிலையில் 1916 ஆம் ஆண்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் பெயரில் நீதிக் கட்சித் தோன்றியது.
---------------------
நீதிக் கட்சி 


     ஆங்கில ஆட்சி தென்னாட்டில் நிலை பெற்றபோது பிராமணரல்லாதாரே முதன் முதலில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். கிழக்கு இந்தியக் கம்பெனியார் தென்னாட்டில் வர்த்தகச் சாலைகளை அமைத்தபோது, அவர்களிடம் முதன் முதல் பழகியவர்கள் பிராமணர் அல்லாதாரே. துபாஷ்களாகவும், தரகர்களாகவும் ஆங்கில வர்த்தகர்களின் நட்பைப் பெற்ற பிராமணரல்லாதாருக்கு நாட்டிலே செல்வாக்கு பெருகலாயிற்று. வர்த்தகர்களாயிருந்த ஆங்கிலேயரின் தேச நிர்வாகத்தில் பிராமணரல்லாதாரே நிருவாகப் பணியில் அமர்த்தப் பட்டனர். பிராமணரல்லாதார் இயல்பாகவே நிருவாகத் திறமை உடையவராகையினால் ஆங்கிலேயரின் நன்மதிப்பைப் பெற்றனர்.

     ஆங்கிலேயர்களை மிலேச்சர்கள் என்றும், ஆங்கிலம் மிலேச்ச மொழி என்றும் கருதி ஒதுங்கி இருந்த பிராமணர்கள், அரசியலில் பிராமணரல்லாதார் ஆதிக்கமும், சமூக வாழ்வில் மதிப்பும் பெற்று வருவது கண்டு, மேற்கொண்டு ஒதுங்கியிருந்தால் தமது சமூகம் வீழ்ச்சி அடைவது உறுதி என்பதை உணர்ந்தனர்.

         எனவே ஆங்கிலம் கற்கவும், ஆங்கிலேயர் நட்பைப் பெறவும் அவர்கள் முன்வந்தனர். சென்னை அரசாங்க ராஜாங்கக் கல்லூரிக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அடிகோலப்பட்டது முதல், பிராமணர்கள் ஆங்கிலப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபடலாயினர். ஓதுதலையும், ஓதுவித்தலையும் குலத் தொழிலாகக் கொண்ட பிராமணர்கள் ஆங்கிலக் கல்விப் பயிற்சியில் வெகு விரைவாக முன்னேற்றமடைந்ததால், அரசும் அவர்களுக்குப் பல சலுகைகளை காட்டத் தொடங்கியது. அதுமுதல் அரசியல் துறைகளிலும், பொது வாழ்விலும் பிராமண ஆதிக்கம் பெருகலாயிற்று.

        அன்னி பெசண்ட் அம்மையார் அவர்கள் சுய ஆட்சி இயக்கத்தைத் தொடங்கி, இம்மாநிலத்தில் பாரப்பணர்களின் நிரந்தர ஆதிக்கத்திற்கு அடிக்கல் நாட்டுவதை உணர்ந்து, அம்முயற்சியை முறியடிப்பதற்காக, சென்னையில் வாழ்ந்த சிந்தனைச் சிற்பி பேரறிவாளர் சர் பி.தியாகராயச் செட்டியர் அவர்கள், நாட்டு மக்களைப் பார்த்து, பார்ப்பணீயத்துக்குப் பலியாகாதே, மதத்திலே அவன் தரகு வேண்டாம்,. கல்வியிலே அவன் போதனை வேண்டாம், சமுதாயத்திலே அவன் உயர்வுக்கு உழைக்காதே, அரசியலிலே அவன் சூழ்ச்சிக்கு இரையாகாதே, திராவிட வீரனே, விழி, எழு, நட, உன் நாட்டை உனதாக்கு என்று கூவியழைத்தபோது, அதற்கு நாடெங்கிலும் இருந்து நல்லதொரு எதிரொலி எழும்பியது.

     அன்று முதல் தியாகராயரின் உருவம் தென்னாட்டில் புரட்சியின் அறிகுறியாகிவிட்டது. அவர் சென்ற இடமெல்லாம் பார்ப்பணரல்லாத மக்கள் அலைகடலென அணிவகுத்து நின்றனர். இந்தப் பெரியாருக்கு உறுதுணையாக டாக்டர் டி.எம்.நாயர் நின்றார். இவர் கேரளத்திலே பார்ப்பணர்கள் பிறருக்குச் செய்யும் கொடுமைகளைக் கண்டு மனம் புழுங்கி, தன்னுடைய வலிமை மிகுந்த பேனாவினால், கருத்தாழத்தாலும், காரண காரியத்தாலும் படிக்கப் படிக்கத் தெவிட்டாத கட்டுரைகளை, ஆங்கிலேயரே வியந்து பாராட்டும் வகையில், ஆங்கிலத்திலேயே எழுதும் வல்லமை படைத்தவர்.

     மாநிலம் முழுவதிலும் இருந்து பார்ப்பணர் அல்லாதார் 1916 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 20 ஆம் நாள் சென்னையில் திரண்டனர். தங்கள் பிரச்சினைகளைப் பறைசாற்றச் செய்தித் தாட்கள் தொடங்குவது என்றும், தங்கள் நலம் பேண, புதிதாக ஓர் அரசியல் கட்சியைத் தொடங்குவது என்றும் முடிவு செய்தனர். இதன் விளைவாக அன்றே செய்தித் தாட்களை நடத்திட, தென்னிந்திய மக்கள் பேரவை என்ற அமைப்பும், அரசியல் இயக்கமாக தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற இயக்கமும் தொடங்கப் பெற்றது.

     சர் பி..தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி. நடேச முதலியார், கே.வி.ரெட்டி, சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், ஏ.இராமலிங்க முதலியார், பனகல் அரசர் பி.ராமராய நிங்கர், பொப்பிலி அரசர்,  பி.டி.ராஜன், சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், தமிழவேள் உமாமகேசுவரனார், செட்டி நாட்டரசர் முத்தையா செட்டியார், ஏ.பி.பாத்ரோ, எம்.சி.ராஜா, முகமது உஸ்மான் ஆகியோர் இப்புதிய கட்சியின் முன்ன்னித் தலைவர்களாவர்.




(நண்பர்களே, இன்று சென்னையில் தி.நகர் என்று சுருக்கமாகவும் , செல்லமாகவும் அழைக்கப்படும் தியாகராய நகர் என்பது சர் பி.தியாகராசயர் பெயராலும், சென்னை நடேசன் சாலை என்பது டாக்டர் சி.நடேச முதலியார் அவர்களின் பெயராலும், பனகல் பாரக் என்பது பனகல் அரசர் பி.ராமராய நிங்கர் பெயராலும், பாத்ரோ சாலை என்பது ஏ.பி.பாத்ரோ அவர்கள் பெயராலும், உஸ்மான் சாலை என்பது முகமத உஸ்மான் அவர்கள் பெயராலும் அழைக்கப்படுவதே, இப்பெரியோர்களின் தன்னலமற்ற சீரிய சேவையினைப் நன்குணர்த்தும்)

நீதிக் கட்சியின் குறிக்கோள்

     பார்ப்பணர் அல்லாதார் அனைவரின் நலமும், வளமுமே இதன் முதல் குறிக்கோள். மதச் சார்பின்மையே இதன் முக்கிய கோட்பாடு. அனைத்து மத்த்தினரிடையேயும் சகோதரத்துவத்தினை வளர்த்தல், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஒன்றாலேயே வாழ்வு பெற முடியும் என்பதே இக் கட்சியின் நம்பிக்கையாகும்.

      தென்னிந்தியராகவும், 21 வயது நிரம்பியவர்களாகவும், முக்கியமாக பார்ப்பணர் அல்லாதவர்களாகவும் இருக்கும் அனைவரும், இவ்வியக்கத்தில உறுப்பினராகத் தகுதி உரையவர்கள் ஆவாரகள்.

இதழ்கள்

     இவ்வியக்கத்தின் கொள்கைகளை எடுத்துச் செல்ல திராவிடன் என்னும் தமிழ்ச் செய்தித் தாளும், ஆந்திர பிரகாசனி என்னும் தெலுங்கு செய்தித் தாளும், ஜஸ்டிஸ் என்னும் ஆங்கிலச் செய்தித் தாளும் தொடங்கப் பெற்றது.



      இவ்வியக்கத்தின் பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று இருந்த போதிலும், ஜஸ்டிஸ் என்னும் இதழினை இவ்வியக்கத்தின் சார்பாக வெளியிட்டு வந்தமையால், இவ்வியக்கம் ஜஸ்டிஸ் கட்சி (நீதிக் கட்சி)  என்னும் பெயராலேயே அழைக்கப் படலாயிற்று.

முதல் பொதுத் தேர்தல்

     1919 ஆம் வருடத்திய இந்திய சீர்திருத்தச் சட்டப்படி அமைக்கப்படும் மாகாண, மத்திய சட்டசபைகளுக்கு 1920 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது.

     இதனைத் தொடர்ந்து, 22.2.1920 இல் தஞ்சையில் நீதிக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அக்கூட்டத்திற்குத் தலைமையேற்ற உமாமகேசுவரனார் அவர்கள், பார்ப்பணர் அல்லாதாரின் தொகைக்கு ஏற்ப, சட்ட மன்றத்தில் இந்துக்களுக்கு உரிய தொகுதிகளில் 66 விழுக்காடு வழங்கப்படல் வேண்டும், அதுபோன்றே அரசு நியமனங்களும் நடைபெற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தார்.

     நீதிக் கட்சியினைச் சார்ந்த தலைவர்கள் அனைவருமே வகுப்புவாரி பிரதிநிதித்துவமே இந்தியப் பிரச்சினைகளின் உயிர்நாடி என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.

      வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கை ஆங்கிலேயர்களால் ஒப்புக் கொள்ளப் பட்டதாயினும், பிராமணர் அல்லாதார் அதிக எண்ணிக்கையில் இருந்ததினால், அவர்களுக்கு தனித் தொகுதிகள் வழங்கப்படவில்லை. சட்ட சபையில் சில இடங்கள் மட்டுமே ஒதுக்கி வைக்கப் பெற்றன.

     1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் நாள் சென்னையிலும், மாகாணங்களிலும் தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 6 ஆம் நாள் முதல் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கின. நீதிக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

     நீதிக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கவர்னர் லார்டு வில்லிங்டன், நீதிக் கட்சித் தலைவரான தியாகராய செட்டியரை ஆட்சி அமைக்கும்படி அழைப்பு விடுத்தார்.

தியாகராயரின் தியாகம்

     தேர்தல் நேரத்தில், தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள், நீதிக் கட்சியினரை, ஆங்கிலேயருக்கு வால் பிடிப்பவர்கள் என்றும், ஆங்கிலேயர்களின் பூட்சு காலை நக்குபவர்கள் என்றும் பழி தூற்றினர்.

    இதன் காரணமாக, ஆளுநரின் அழைப்பினை ஏற்று ஆட்சி அமைக்க மறுத்த தியாகராயர், நாங்கள் பதவி நாட்டமற்ற, தொண்டு மனப்பான்மை மட்டுமே உள்ளவர்கள் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டும் விதமாக, சென்னை ஆளுநருக்கு ஓர் கடிதம் எழுதினார்.

     இந்திய வரலாற்றில் முன் எப்போதும் இல்லை என்னும்படி, அரசியல் ஞானமற்ற பாமர மக்களைத் தட்டியெழுப்பிய பாவத்துக்காக என்னையும், அகால மரணமடைந்த என்னருமைச் சக தலைவர் டாக்டர் டி.எம்.நாயரையும், வெள்ளையன் வால் பிடிப்பவர்கள் என்றும், வெள்ளையன் பூட்சு காலை நக்குபவர்கள் என்றும், பதவி வேட்டைக் காரர்கள் என்றும், சென்ட் பர்சென்ட் தேசபக்தர்களான காங்கிரஸ் தலைவர்களும், அவர்களுடைய பத்திரிக்கைகளும் தூற்றின. நான் இப்பதவியை ஏற்பேனேயானால், என் புனிதமான கட்சிக்குக் களங்கம் விளைவித்தவனாவேன். அதனால் நான் பதவி ஏற்க மாட்டேன். மன்னிக்க வேண்டும்.

    இவ்வாறு கடிதம் எழுதி, முதன் மந்திரி பதவியினையே துச்சமென எண்ணி தூக்கி எறிந்தவர்தான் தியாகராயர்.

     திவான் பகதூர் ஏ.சுப்பராயலு ரெட்டியார் அவர்களை முதன் மந்திரியாகவும், ராஜா ராமராய நிங்கர் (பனகல் அரசர்) அவர்களை இரண்டாவது மந்திரியாகவும், ராவ் பகதூர் கே.வெங்கட ரெட்டி அவர்களை மூன்றாவது மந்திரியாகவும் , நியமிக்கும்படி, தியாகராயர் கேட்டுக் கொண்டார்.

     தியாகராயரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆளுநர் இம்மூவரையும் மந்திரிகளாக நியமனம் செய்தார்.

வட்டக் கழகம்

  ஒவ்வொரு மாவட்டத்திலும், இப்பொழுதுள்ள ஊராட்சி மன்றங்கள், ஒன்றியங்கள் எல்லாம் ஏற்படுவதற்கு முன்னர், மாவட்டக் கழகம், வட்டக் கழகம் என்ற ஆட்சி முறை  இருந்து வந்த்து.

             1920 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் நீதிக் கட்சியின் முன்ன்னித் தலைவர்களான சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்கள், தஞ்சை மாவட்டக் கழகத் தலைவராகவும், உமாமகேசுவரனார் அவர்கள் தஞ்சாவூர் வட்டக் கழகத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.



      1920 ஆம் ஆண்டிலிருந்து 1932 ஆம் ஆண்டு வரை, தொடர்ந்து பன்னிரெண்டாண்டுகள் வட்டக் கழகத் தலைவராகப் பணியாற்றிய பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார்.

          உமாமகேசுவரனார் அவர்களையும் பன்னீர் செல்வம் அவர்களையும், இரட்டையர் என்றே அன்றைய தலைமுறையினர் அழைத்தனர். அந்த அளவிற்கு இருவரும் நண்பர்களாவார்கள்.

           மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு உயர் பதவிகளுக்கு வரும் பலர், பொது நலம் மறந்து, சுய நலமே குறிக்கோளாய் கொண்டு, தன் வீடு,  தன் பெண்டு, தன் பிள்ளை என தங்கள் குடும்பத்தை வளப்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பது இன்று பரவலாய் காணப்படும் காட்சியாகும்.

           ஆனால் பன்னிரெண்டாண்டுகள் வட்டக் கழகத் தலைவராய் பதவி வகித்தபோதும், சுய நலம் என்பதனையே முற்றும் துறந்த முனிவராய், தமிழ் நலம் ஒன்றினையே சுவாசமாகக் கொண்டு சுவாசித்து, தமிழ் மொழியினை வளப்படுத்திய, பலப்படுத்திய பெருமைக்கு உரியவர் உமாமகேசுவரனார் அவர்களாவார்.

        சென்னை தொடக்கப் பள்ளிச் சட்டத்தைப் பயன்படுத்தி, தஞ்சை வட்டத்தில் இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கையினை 40 லிருந்து 170 ஆக உயர்த்தினார்.

         தஞ்சை அரசர் அற நிலையங்களின் வருவாயிலிருந்து இரண்டு உயர்நிலைப் பள்ளிகள் இயங்கி வந்தன. ஒன்று ஒரத்த நாட்டிலும் மற்றொன்று இராசா மடத்திலும் இருந்தது. இவ்விரு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இலவச உணவும், இலவச விடுதி வசதியும் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் பிராமண வகுப்பினைச் சார்ந்த மாணவர்கள் மட்டுமே இச்சலுகைகளை அனுபவித்து வந்தனர். கடும் எதிர்ப்புகளுக்கு இடையிலே, உமாமகேசுவரனார் அவர்கள் பன்னிர் செல்வம் அவர்களின் துணைகொண்டு இந்நிலையினை மாற்றி, ஏனைய தமிழ் இன மாணவர்களும் இத்தகைய சலுகைகளைப் பெருமாறு செய்தார்.
ஒரத்தநாடு முக்தாம்பாள் சத்திரம்

       தஞ்சையில், கரந்தைக்கு அருகில், பழைய திருவையாற்று வீதியில் சுரேயசு சத்திரம் என்று ஒன்று உண்டு. சோம்பேறிகளின் தங்குமிடமாகச் செயல்பட்ட, இச்சத்திரத்தை ஆதி திராவிட மாணவர்கள் தங்குமிடமாகவும், இலவச உணவு பெறுமிடமாகவும் மாற்றி அமைத்தார்.

சுரேயசு சத்திரம்

         திருவையாற்றில் இராமச்சந்திர மேத்தா சத்திரம் என்று ஒன்று உண்டு. அதற்கென நிலங்களும் இருந்தன. இச் சத்திரமானது வடநாட்டில் இருந்து வரும் பைராகிகளுக்கு உணவு வழங்க ஏற்பட்ட சத்திரமாகும். அது சரியாக நடைபெறாமல் இருந்தது. பைராகிகளே இல்லாத போது சத்திரத்திற்கு ஏது தேவை. இதனால் சத்திரத்திற்குத் தொடர்பில்லாத பலர், அங்கு தங்கி உணவு உண்டு வந்தனர். இதனையறிந்த உமாமகேசுவரனார், அச்சத்திரத்திற்குக் கட்டுப் பாடுகளை விதித்து, அதன் மூலம் பெருந்தொகையினை வருவாயாக ஈட்டித் தந்தார். இந்தச் சேமிப்பினால் வளமான நிலங்கள் வழங்கப் பட்டன. இதன் பயனையும் ஏழை மாணவர்கள் அடையுமாறு செய்தார்.

        அடுத்ததாக, பல ஆண்டுகள் பலவாறு முயன்றும், தமிழைப் புகுத்த முடியாமற் போன, திருவையாற்று கல்யாண மகால், வேத பாடசாலையின் பக்கம் உமாமகேசுவரனாரின் முழுக் கவனமும் திரும்பியது.

..... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா



17 மே 2013

கரந்தை மலர் 9


---------- கடந்த வாரம் ---------

பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராய் பொறுப்பேற்றபின் அரசு விழாக்கள், தமிழ் மொழியினைச் சிறப்பிக்கும் பாடல் ஒன்றுடன் தொடங்கப்படுமேயானால், தமிழ் மொழியின் சிறப்பு பாமரர்களையும் சென்றடையும் என்று எண்ணினார். அதற்குரிய பாடலைத் தேர்ந்தெடுக்க எண்ணி, பல பாடல்களை ஆராய்ந்த பொழுது, இரண்டே இரண்டு பாடல்கள்தான் அண்ணாவின் கவனத்தையும், மனதையும் ஒருசேரக் கவர்ந்திழுத்தன.
-------------------------------

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்யப்பெற்ற பாடலையும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சொந்தப் பாடலையும், படித்துப் படித்து மயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள், கரந்தைக் கவியரசர் அவர்களின் பாடலையே, தமிழக அரசின் தமிழ்த் தாய் வாழ்த்தாக தேர்வு செய்ய விரும்பினார். எனினும், திராவிடத்தின் எழுச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் போராடிய போராளி அண்ணா அவர்களை, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலில் உள்ள
தெக்கணமும் அதிற்சிறந்த  திராவிடநற் றிருநாடும்
என்னும் வரியிலுள்ள திராவிட என்னும் வார்த்தை சுண்டி இழுத்தது.


     எனவே, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலையே தமிழ்த்தாய் வாழ்த்தாக, அரசு விழாக்களின் போது பாட வேண்டும் என அறிவுறுத்தும் வகையில் அரசு ஆணை வெளியிட எற்பாடு செய்தார். ஆனால் எதிர்பாராத வகையில் உடல் நலம் குன்றிய பேரறிஞர் அண்ணா அவர்கள் 3.2.1969 இல் இவ்வுலக வாழ்வைத் துறந்ததனால், அரசு அணை வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. அண்ணாவைத் தொடர்ந்து நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் சில நாட்கள் தமிழகத்தின் பொறுப்பு முதல்வரானார். 10.2.1969 அன்று டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழகத்தின் முதல்வராய் அரியணையில் அமர்ந்தார்.

     டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராய் பொறுப்பேற்ற அடுத்த வருடமே, 23.11.1970 ஆம் நாளன்று, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய நீராருங் கடலுடுத்த என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை, அரசு நிகழ்ச்சிகளில் பாட வேண்டும் என, அரசு பொதுத் துறையின் சார்பாக அரசாணை (மெமோ எண், 3584.70-4, 23 நவம்பர் 1970) வெளியிடப் பெற்றது.


      தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன் முதலில் மெட்டமைத்து இசையமைத்தப் பெருமைக்கு உரியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விசுவநாதன் அவர்களாவார். மெல்லிசை மன்னர் இசையமைத்த நீராருங் கடலுடுத்த பாடலினை உள்ளடக்கிய, ஒலித் தட்டு ஒன்றும், அரசு ஆணையுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்களுக்கும் அனுப்பப் பட்டது. இதன் பயனாக நீராருங் கடலுடுத்த பாடலானது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவியது.

பதிவும் நோக்கமும்

     புதிதாகத் தோற்றுவிக்கப்பெற்ற அமைப்புகளை, அரசின் பதிவுத் துறையின் பதிவு செய்தாக வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால்தால் மட்டுமே, அந்த அமைப்பு அல்லது சங்கம், முறையான சங்கமாக அரசினால் அங்கீகரிக்கப்படும்.

     உமாமகேசுவரனார் அவர்களால், கரந்தைத் தமிழ்ச் சங்கமானது, 1860 ஆம் ஆண்டின் 21 வது சட்ட விதிகளின் படி, 1.5.1914 அன்று பதிவு செய்யப்பெற்றது. கரந்தைத் தமிழ்ச் சங்கப் பதிவு எண். 1/ 1914  ஆகும்.

     சங்கத்தைப் பதிவு செய்தபோது, சங்கத்தின் நோக்கங்களையும், அவற்றை நிறைவேற்றுவதற்கான வழி முறைகளையும், உமாமகேசுவரனார் தெளிவாகப் பதிவு செய்தார்.

சங்கத்தின் பதிவுச் சான்றிதழ்


சங்கத்தின் நோக்கங்கள்

01.        தமிழின் நிலைமையும், தமிழரின் நிலையையும் சீர் பெறச் செய்வது, உயர்த்துவது,
02.        சங்க உறுப்பினர்களுக்குள் நட்புரிமையும், ஒருமைப்பாடும் உண்டாக்குவது.
03.        தமிழரின் அற நிலையங்களை மேற்கொண்டு காப்பது.
04.        உறுப்பினர்களின் உடல் நிலை, ஒழுக்க நிலை, சமூக நிலை, கல்வி நிலை, இவை செம்மையுறுவதற்கான வசதிகளை அமைப்பது.
05.        தமிழரின் தொழிலும், பொருளாதாரமும் வளம் பெறச் செய்வது.

    இந்நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு, சங்கம் மேற்கொள்ளவிருக்கும் பணிகளாவன.

01.       சொற்பொழிவுகளும், சொற்போர்களும் நடத்துதல்.
02.       படிப்பிடங்களையும், நூல் நிலையங்களையும், தஞ்சாவூரிலும், பிற இடங்களிலும் நிறுவி நடத்துதல்.
03.       தக்க ஆசிரியர்களைக் கொண்டு போதனை வகுப்புகள் நடத்துதல்.
04.       துண்டு வெளியீடு, நூல் வெளியீடு,  தாள் வெளியீடு முதலியன செய்தல்.
05.       தமிழ் நூல் ஆராய்ச்சிகள், தமிழர் நாகரிகம் பற்றிய ஆராய்ச்சிகள், இலக்கண, இலக்கிய அறிவு நூல் முதலிய பிற மொழி நூல்களையும் தமிழில் ஆக்குதல், வெளியிடல்.
06.       கைத் தொழில் கலா சாலைகள் அமைத்து நடத்துதல்.
07.       உடற் பயிற்சிக்கான உள்ளிட (Indoor), வெளியிட (Out door) விளையாட்டுக்களுக்கு வசதிகள் செய்தல்.
08.       தமிழ்க் கல்லூரிகளும், தமிழ்க் கலாசாலைகளும் வைத்து நடத்துதல்.
09.       தேர்வுகள் நடத்துதல், உதவிச் சம்பளங்கள், பரிசுகள். பதக்கங்கள், நற்சாட்சி பத்திரங்கள் முதலியன கொடுத்துப் படிப்போர்களை ஊக்குவித்தல்.
10.       கலாசாலைகளில் எளிமை, தூய்மை, விரிந்த மனம், நல்லொழுக்கம் முதலியன மாணவர்களிடம் படியப் பழக்குதல்.
11.       தமிழரின் முன்னேற்றத்திற்கான அற நிலையங்கள், கல்வி நிலையங்கள், புகலிடங்கள் ( Asylums), அனாதை இல்லங்கள், ஏழையில்லங்கள், மருத்துவ சாலைகள் முதலியன நடத்துதல்.
12.       கிளைச் சங்கங்கள், கல்வி நிலையங்கள் முதலியவற்றை நிறுவித் தாய்ச் சங்கத்துடன் இணைத்து அவற்றை நடத்துதல்.
13.       ஒப்புவிக்கப்படும் அறங்களை ( Trusts) மேற்கொண்டு காத்தல்.
14.       சங்கத்தின் நோக்கங்கள் நிறைவேறுவதற்கான காரியங்கள் பலவற்றையும் செய்தல். மகாநாடுகள், பொதுக் கூட்டங்கள் முதலியன நடத்துதல். பின்னும் அவசியமான தொண்டுகள் புரிதல்.

கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரி

     நமது நாட்டில் பண்டைக் காலத்து நின்று நிலவி இறந்து பட்ட சிறந்த கைத் தொழில்களையும், அவற்றிற்கு இன்றியமையாத சாத்திரங்களையும்
(Science)  கற்பிக்கும் பெரிய செந்தமிழ்க் கலா சாலையொன்று ஸ்தாபிப்பின், மாணவர்கள் தமிழ்ப் பயிற்சியோடு சீவனோபாய வழிகளிலும் தேர்ச்சி பெறுவாராகையால், நம்மனோர்க்குத் தமிழ்பால் இப்பொழுதுள்ள வெறுப்பு நீங்கிப் பெரிதும் விருப்பமுண்டாகும் என்பதில் ஐயமில்லை. இன்னும் பிள்ளைகள் பயிலும் கைத்தொழில்களுக்கு வேண்டும் சாத்திர நூல்களைப் புதிதாக மேல் நாட்டு மொழிகளினின்று மொழி பெயர்த்துக் கொள்ளும் கட்டாயம் ஏற்படுகிறமையின், நமது மொழியில் சாத்திர நூல்களும் இல்லாத குறையும் நிவர்த்தியாதல் கண்கூடாம் என்று கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு அறிக்கையானது எடுத்து இயம்புகின்றது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கிய இரண்டாவது ஆண்டிலேயே, உமாமகேசுவரனாருக்கு இவ்வெண்ணம் முகிழ்த்தெழுந்தாலும, சங்கத்திற்கு என்று சொந்த இடமோ, தேவையான பொருளாதார வசதியோ இல்லாத காரணத்தால், இவ்வெண்ணத்தை நடைமுறைப் படுத்த இயலவில்லை.

     உமாமகேசுவரனாரின் அயரா முயற்சியின் காரணமாக, 1916 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் ஆறாம் நாள், விஜயதசமியன்று, சங்கப் புரவலர் அரித்துவார மங்கலம் கோபாலசாமி இரகுநாத இராசாளியார் அவர்களால், வாடகைக் கட்டிடம் ஒன்றில், செந்தமிழ்க் கைத் தொழில் கல்லூரி தொடங்கி வைக்கப்பெற்றது. தொடங்கிய ஆண்டில் நாற்பது மாணவர்கள் இக்கல்லூரியில் சேர்ந்தனர். கைத் தொழில் ஒன்றினைப் பயிற்றுவிப்பது உமாமகேசுவரனாரின் முடிந்த நோக்கமென்றாலும், வருவாய் குறைவினால் தமிழ் மட்டுமே கற்பிக்கப் பெற்றது. இக்கல்லூரியின் பராமரிப்பிற்காக உமாமகேசுவரனார், தனது சொந்த வருவாயில் இருந்து, ஒவ்வொரு மாதமும் ரூ.25 வழங்கினார்.
 
முதன் முதல் கலாசாலை தொடங்கப் பெற்ற சிறிய இடம் இன்று
     தஞ்சைப் பகுதி வியாபாரிகள் பலரும், இக்கல்லூரியின் வளர்ச்சிக்காக தினந்தோறும், தங்களது வருவாயில் இருந்து, உண்டிகை தருமம் செய்து உதவினர். பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும், மாணவர்களிடமிருந்து கட்டணம் பெற்றிடாமல், இலவசமாகவே தமிழ் பயிற்றுவிக்கப்பெற்றது.

     1919-20 அம் ஆண்டில், இக்க்லலூரியின் ஆசிரியர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. மாணவர்களுக்குத் தமிழோடு ஆஙகிலமும், கணிதமும் கற்பிக்கப்பெற்றது.

      கோணார்பப் பட்டு கற்பக விநாயகா கலாசாலையில், தலைமையாசிரியராய் பணியில் அமர்ந்து, அப்பள்ளி மாணவர்களை மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்தும் தேர்விற்குத் தயார் படுத்தும் பணியினைச் செம்மையாகச் செய்து, தனது கல்வியாலும், ஒழுக்கத்தினாலும், உழைப்பாலும் அப்பகுதி மக்கள் விரும்பிப் போற்றும் நல்லாசிரியராய் உயர்ந்த அரங்க.வேங்கடாசலம் பிள்ளை அவர்கள், அக் கலாசாலையில் தனக்குக் கிடைத்த, அதிக வருவாயை விடுத்தும், வேறு பல இடங்களில் பெரு வருவாய் அளிப்பதாக உறுதியளித்துப் பிறர் அழைத்தமையை ஏற்க மறுத்தும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மீது இயல்பாக உள்ள அன்பினால், 1920 இல் செந்தமிழ்க் கைத் தொழில் கல்லூரியின் தலைமையாசிரியராகப் பொறுப் பேற்றார். இவரின் வருகைக்குப் பின்னர் கல்லூரியின் புகழும் பெருமையும் மேலும் பரவத் தொடங்கியது.

     எம்.எஸ். கல்யாண சுந்தரம் அய்யர் இக்கல்லூரியின் கண்காணிப்பாளராகத் திறம்படப் பணியாற்றினார். மேலும் இக் கல்லூரியின் பெருமையினை நன்குணர்ந்த, கரந்தைப் பகுதியில் அமைந்திருக்கும், பால் சுவாமிகள் மடத்தின் தலைவர் கிருட்டினமூர்த்தி அவர்கள், இக்கல்லூரி மாணவர்கள் சிலருக்கு இலவசமாகவே உணவளித்து உதவினார்.

     குறுகிய காலத்திலேயே இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இதன் காரணமாக வகுப்புகளின் எண்ணிக்கையும், ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 1923 ஆம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 410 ஆகவும், வகுப்புகளின் எண்ணிக்கை எட்டு ஆகவும், ஆசிரியர்களின் எண்ணிக்கை பதினொன்றாகவும் உயர்ந்தது.

     செந்தமிழ்க் கல்லூரியானது நாள்தோறும் வளர்ச்சி அடைந்து வந்தாலும், கல்லூரிக்கும், சங்கத்திற்கும் தனி இடம் இல்லாமையால் உமாமகேசுவரனார் பெரிதும் வருந்தினார். பிற்காலத்தில் சங்கத்திற்கென்று சொந்தமாக இடம் வாங்கப் பெற்றதும், இக்கல்லூரியானது, புதிய இடத்திற்கு மாற்றப் பெற்றது. மேலும தமிழ், ஆங்கிலம், கணிதம் முதலியவற்றை மட்டுமே கற்றிக்கப் பெற்று வந்த நிலை மாறி, மாணவர்களுக்கு நெசவு, நூல் நூற்றல், பாய் நெசவுத் தொழில், மர வேலைகள், நூற் கட்டு முதலியனவும் கற்பிக்கப் பட்டன.

கல்யாண மகால்

    சோழர்களின் தலைநகராய் கோலோச்சியத் தஞ்சையில், மூன்றாம் இராசேந்திர சோழனின் ஆட்சியோடு, கி.பி.1279 இல் சோழராட்சி முடிவுக்கு வந்தது. பிறகு தஞ்சாவூரானது பாண்டியர்களாலும், திருச்சி மாவட்டத்தின் கண்ணனூரைத் தலைநகராகக் கொண்ட போசளர்களாலும் ஆளப்பட்டது. போசளர்களுக்குப் பிறகு தஞ்சாவூர் விசயநகரப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.

       1535 இல் தஞ்சையில் நாயக்கர் அட்சி மலர்ந்தது. நாயக்கர்களைத் தொடர்ந்து, தஞ்சாவூரானது 1675 முதல் 1855 வரை மராட்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

       மராட்டிய மன்னர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் தஞ்சையில் 18 சத்திரங்களை நிறுவினர். இச் சத்திரங்களில் புனிதப் பயணம் மேற்கொள்ளும் யாத்ரிகர்களுக்கு, இலவசமாக தங்கும் வசதியும், இலவசமாக உணவும் வழங்கப்பட்டன. இச் சத்திரங்களில் மருத்துவர்களும் நியமிக்கப் பட்டிருந்தனர். பயணத்தின் போது உடல் நலக்குறைவு ஏற்படும் யாத்ரிகர்களுக்கு இலவசமாக மருத்துவ வசதியும் அளிக்கப் பட்டது. மேலும் இச்சத்திரங்கள் மூலம் கல்வியும் கற்றுத் தரப்பட்டது. இச்செயல்களை மேற்கொள்ளும் பொருட்டு, மராட்டிய அரசர்கள், இச்சத்திரங்களுக்கு அறக்கட்டளைகளாக, பலநூறு ஏக்கர் நிலங்களை எழுதி வைத்தனர்.

     இவற்றுள் ஒரத்தநாடு முக்தம்மாள் சத்திரம், நீடாமங்கலம் யமுனாம்பாள் சத்திரம் போன்றவை பெயர் பெற்ற சத்திரங்களாகும்.  இவ்வரிசையில் இரண்டாம் சரபோசி மன்னர் அவர்கள், தனது வாரணாசிப் புனிதப் பயணத்திற்குப் பிறகு, திருவையாற்றில் வளம் தரும் காவிரியின் வட கரையில், கண்கவர் மாட மாளிகைகளுடன் உருவாக்கிய சத்திரமே கல்யாண மகால் சத்திரமாகும்.

   
நாயக்க மன்னர்கள் தங்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கிய நூலகத்தினை விரிவுபடுத்தி, வளர்த்து மாபெரும் சரசுவதி மகால் நூலகமாக உயர்த்திய பெருமை இந்த இரண்டாம் சரபோசி மன்னரையேச் சாரும்.
 ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் போது, அனைத்துச் சத்திரங்களும், கோயில்களும், அவற்றிற்காக அறக் கட்டளைகளாக வழங்கப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப் பட்டன. நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பின், கோயில்களும், கோயில்களுக்கான நிலங்களும், மராட்டிய மன்னர்களின் வாரிசுகளிடம் ஆங்கிலேயர்களால் ஒப்படைக்கப் பட்டன. ஆனால் சத்திரங்கள் அனைத்தும், ஆங்கிலேயர்களின் வருவாய் துறையினரின் பொறுப்பிலேயே இருந்து வந்தன. 1871 ஆம் ஆண்டு சத்திரம் நிர்வாகமானது, உள்ளூர் ஆட்சிக் குழுவிடம் ஒப்படைக்கப் பட்டது. தமிழ் நாட்டிலேயே சத்திரம் நிர்வாகம் என்னும் பெயரில் ஒரு தனி நிர்வாகம்  நடைபெற்று வருவது தஞ்சாவூரில் மட்டும்தான்.

     கல்யாண மகால் சத்திரத்தின் சார்பில் 1881 ஆம் ஆண்டு வேத பாடசாலை ஒன்று தொடங்கப் பெற்றது. இங்கு வடமொழி கற்கும் மாணவர்களுக்கு விடுதி மற்றும் உணவு வசதிகள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப் பட்டன. இந்த வேத பாடசாலையால் பயனடைந்தவர்கள் பிராமணர்கள் மட்டும்தான் என்பதனைச் சொல்லத் தேவையில்லை.

     இந்நிலையில் 1916 ஆம் ஆண்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் பெயரில் நீதிக் கட்சித் தோன்றியது.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.


11 மே 2013

கரந்தை மலர் 8



------. கடந்த வாரம் -----

தேவாரம், திருவாசகம், திருவருட்பாவிற்கு இணையாக, உமாமகேசுவரனாரின் உள்ளத்தை உருக்கிய பாடல், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலாகும்.
-----------------------------
         
          நீராருங்  கடலுடுத்த  நிலமடந்தைக்  கெழிலொழுகுஞ்
          சீராரும்  வதனமெனத்  திகழ்பரத  கண்டமிதிற்
          றக்கசிறு  பிறைநுதலுந்  தரித்தநறுந்  திலகமுமே
          தெக்கணமு  மதிற்சிறந்த   திரவிடநற்  றிருநாடும்
          அத்திலக  வாசனைபோ  லனைத்துலகு  மின்பமுற
          எத்திசையும்  புகழ்மணக்க  விருந்தபெருந்  தமிழணங்கே

     எனவே, கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற இரண்டாம் ஆண்டிலேயே, நீராருங் கடலுடுத்த என்னும் இப்பாடல் சங்க மேடையில் கோலேச்சத் தொடங்கியது.

     சங்க விழாக்கள் அனைத்திலும், முதல் நிகழ்வாக நிராருங் கடலுடுத்த பாடல் பாடப் பெற்றது. நீராருங் கடலுடுத்தப் பாடலை, சங்க மேடையில் அரங்கேற்றியப் பெருமைக்கு உரியவர் கூடலூர் வே. இராமசாமி வன்னியராவார்.
 
கூடலூர் இராமசாமி வன்னியர்


     1938 ஆம் ஆண்டு நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் போது, வெளியிடப் பெற்ற கரந்தைக் கட்டுரை என்னும் பெயருடைய வெள்ளி விழா மலரில் இடம்பெற்றுள்ள முதல் கட்டுரை, நமது சங்கமும் தமிழ் வளர்ச்சியும் என்பதாகும். ,இக்கட்டுரையில் உமாமகேசுவரனார் குறிப்பிடுவதைப் பாருங்கள் சங்கத்தின் விழாக் காலங்களிலெல்லாம், கேட்போர் உள்ளம் கனிய, தமிழ்த் தெய்வ வணக்கத்தை இன்னிசையோடு, இருபத்து நான்காண்டுகளாக இடைவிடாது பாடி வந்த, உண்மைத் தமிழ்த் தொண்டர் கூடலூர் வே.இராமசாமி வன்னியரவர்களது இன்னிசையை இனி கேட்பதற்கில்லையே என்பதை எண்ணுந்தோறும் நம்மவருள்ளம் வருந்தாதிராது.

     சரி. இனி மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள் யாரென்று சிறிது காண்போமா? வாருங்கள் கேரளத்தின் திருவிதாங்கூர் துறைமுகப் பட்டினமான ஆலப்புழைக்குச் சென்று வருவோம்.

மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை

     மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள் நாஞ்சில் நாடு தந்த நற்றமிழர். 1855 முதல் 1897 வரை நாற்பத்தியிரண்டு ஆண்டு, குறை ஆயுளில் நிறை வாழ்வு வாழ்ந்தவர்.
 
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
     தனது நவீனக் கவிதை நாடகத்திற்கு மனோன்மணீயம் என்னும் அற்புதப் பெயர் சூட்டியவர். வரலாற்று ஆய்வு, நாடகம், கவிதை, ஆராய்ச்சி, உரைநடை, ஆங்கில நூலாக்கம் என பல துறைகளில் நூல்கள் பலவற்றை இயற்றிய பெருமைக்கு உரியவர்.

               அடியேன்  கடையேன்  அறியாச்  சிறியேன்
               கொடுமலையாளக்  குடியிருப்புடையேன்
               ஆயினும்  நீயே  தாயெனும்  தன்மையின்

என, மனோன்மணீயம் நாடகப் பாயிரத்தில் தழிழையேத் தனது தாயாகப் பாவித்துப் போற்றி, தான் பிறந்தது மலையாள நாடு என்பதையும் குறிப்பிடுகிறார் சுந்தரம் பிள்ளை.


                      ஊக்கம்  குன்றி  உரம்  குன்றி
                           ஓய்ந்த  தமிழர்க்  குணர்வூட்டி
                      ஆக்கம்  பெருக,  அறிவோங்க
                           ஆண்மை  வளரச்செய்து உலகியல்
                      மீக்கொள்  புகழைப்  பெற்றெழுந்த
                           வாரலோன்  நமது  சுந்தரனைப்
                      பாக்கள்  புனைந்து  மகிழ்ந்துநிதம்
                           பாடி  இனிது  போற்றுவமே

என்ற கவிமணியின் பாட்டிலிருந்தே மனோன்மணீம் சுந்தரம் பிள்ளையவர்களின் பெருமையினை நன்குணரலாம்.

     திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான்  என்று உரைப்பதிலே தனி இன்பம் கண்டவர் மனோன்மணீம் சுந்தரம் பிள்ளை அவர்களாவார். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வு, சுந்தரம் பிள்ளை அவர்களின் திராவிடப் பற்றையும், அச்சமென்பதை அறியாத தூய தமிழ் மனத்தினையும், தெளிவாக விளக்கும்.

     வீரத்துறவி  விவேகானந்தர் 1892 இல் திருவனந்தபுரம் வந்திருந்தபோது, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளைக்கு, விவேகானந்தரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. திருவனந்தபுரத்தில் ஒன்பது நாட்கள் தங்கியிருந்த விவேகானந்தருடன், சுந்தரம் பிள்ளை, மதப் பற்று, இன உணர்வு, தத்துவம் பற்றி வாதப் பிரதிவாதம் புரிந்துள்ளார். உண்மையைத் தேடும் ஞானியல்லவா சுந்தரம் பிள்ளை.


     திருவனந்தபுரத்தில் விவேகாநனந்தர் தங்கியிருந்த நாட்களில் ஒருநாள், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் விருந்தினராக அவரது இல்லத்திற்கு வருகை தந்தார்.

    விருந்திற்குப் பிறகு சுவாமி விவேகானந்தரும், சுந்தரம் பிள்ளை அவர்களும் மகிழ்வோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விவேகானந்தர், சுந்தரம் பிள்ளையைப் பார்த்து, தங்கள் கோத்திரம் என்ன? என்று கேட்டார். சுந்தரம் பிள்ளை ஒரு நிமிடம் மௌனமானார். பின் நிகழ்ந்தவற்றைத் தன் குறிப்புப் புத்தகத்தில் சுந்தரம் பிள்ளை அவர்களே எழுதியுள்ளார். வாருங்கள் அப்பக்கத்தைப் புரட்டிப் பார்ப்போம்.

    உவப்போடு என்னுடன் பேசி மகிழும் உத்தம நண்பர் விவேகானந்தர் தங்கள் கோத்திரம் என்ன என்று வினா எழுப்பினார். வேறு ஒரு தினமாகில், வினாவினைக் கேட்ட நான் வெகுண்டிருப்பேன். உறவென விருந்துக்கு வந்த அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில், எனக்கும் கோத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான், என ஆத்திரமின்றிக் கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்.

பார்த்தீர்களா, இவர்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. இனி சங்க நிகழ்ச்சிகளைப் பார்ப்போம் வாருங்கள்.

தமிழவள் கமழ் மொழி

     சங்க மேடையில் நீராருங் கடலுடுத்தப் பாடலைப் பாடினால் மட்டும் போதுமா? தரணியெங்கும் இப்பாட்டுப் பரவ வேண்டாமா? தமிழின் புகழ் தலை நிமிர வேண்டாமா? அதற்கு என்ன செய்வது என்று எண்ணிய உமாமகேசுவரனாரின் எண்ணம் செயலாக்கம் பெற்றதை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு அறிக்கை (1913) வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது பாருங்கள்.
சங்கத்தின் மூன்றாம் ஆண்டு அறிக்கை

     பழைய தமிழ் நூற்களைப் பரிசோதித்துப் பிரசுரித்து அவைகளை இறந்துபடாது காத்தலும், ஆங்கிலமாதிய பாஷைகளிலுள்ள பற்பல சாத்திர நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலும், பின்னும் நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு ஏற்றன நாடி எழுதி வெளியிடுதலும் யாம் கொண்ட நோக்கங்களுள் மிக முக்கியமானவாயினும், ஊதியக் குறைவால் இத்துணையும் யாம் இவ்வழியில் நெடிது சென்றிலம். எனினும், தமிழவள் கமழ் மொழி என்றோர் வரிசைப் பிரசுரம் தொடங்கி, அவ்வரிசையில் முதன் முதலாக திருவனந்தபுரம் காலஞ்சென்ற கனம் சுந்தரம் பிள்ளையவர்கள்,எம்.ஏ., எழுதியுதவியதூஉம், கல்லையும் உருக்கவல்லதூஉமாகிய அருமைத் தமிழ்த் தெய்வ வணக்கத்தினை அச்சிட்டு வெளியிட்டோம்.
சங்கத்தின் ஆறாம் ஆண்டு அறிக்கை

     இதுமட்டுமல்ல, இதோ இப்பக்கத்தைப் பாருங்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆறாம் ஆண்டு அறிக்கையே (1917), நீராருங் கடலுடுத்த என்னும் பாடலுடன்தான் தொடங்குகின்றது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தாய்ச் சங்கமாகக் கொண்டு பல ஊர்களிலும் , சங்கத்தின் கிளைகள் தோன்றி நடைபெற்ற காலம் அது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அக் கிளைச் சங்கங்கள் நடத்தும் விழாக்களிலும், நீராருங் கடலுடுத்த பாடலே தமிழ்த் தாய் வாழ்த்தாக முன்னிலைப் படுத்தப் பெற்று பாடப் பெற்றது.

      கரந்தைத் தமிழ்ச் சங்கத்து, ஆண்டு விழாக்களில் கலந்து கொள்ளாத தமிழறிஞர்களே இல்லை என்று கூறத்தக்க வகையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் சங்க விழாக்களில் பங்கு கொண்டனர். இவ்வாறு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்து, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் விழாக்களில் கலந்து கொண்ட தமிழறிஞர்கள், தங்கள் பகுதிகளில், தாங்கள் நடத்தும் விழாக்களிலும் நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடலை முதல் நிகழ்வாகப் பாடி விழாவினை நடத்தத் தொடங்கினர். இதன் விளைவாக நீராருங் கடலுடுத்த பாடலானது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது.

அரசு ஆணை

     1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. 6.3.1967 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராய் பொறுப்பேற்றார்.

     பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராய் பொறுப்பேற்றபின் அரசு விழாக்கள், தமிழ் மொழியினைச் சிறப்பிக்கும் பாடல் ஒன்றுடன் தொடங்கப்படுமேயானால், தமிழ் மொழியின் சிறப்பு பாமரர்களையும் சென்றடையும் என்று எண்ணினார். அதற்குரிய பாடலைத் தேர்ந்தெடுக்க எண்ணி, பல பாடல்களை ஆராய்ந்த பொழுது, இரண்டே இரண்டு பாடல்கள்தான் அண்ணாவின் கவனத்தையும், மனதையும் ஒருசேரக் கவர்ந்திழுத்தன.

     முதல் பாடல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால், தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்யப் பெற்ற, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய நீராருங் கடலுடத்த என்னும் பாடல்.

     இரண்டாவது பாடல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சொந்தப் பாடல். ஆம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர், கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிள்ளை இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல்தான் அது..

          வானார்ந்த  பொதியின்மிசை  வளர்கின்ற  மதியே
                மன்னியமூ  வேந்தர்கடம்  மடிவளர்ந்த  மகளே
          தேனார்ந்த  தீஞ்சுனைசால்  திருமாலின்  குன்றம்
                தென்குமரி  யாயிடைநற்  செங்கோல்கொள்  செல்வி
          கானார்ந்த  தேனே  கற்கண்டே  நற்கனியே
                கண்ணே  கண்மணியே  அக்கட்புலம்சேர்  தேவி
          ஆலாத  நூற்கடலை  அளித்தருளும்  அமிழ்தே
                அம்மே  நின் சீர்முழுதும்  அறைதல்யார்க்  கெளிதே?

....... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.

03 மே 2013

கரந்தை . மலர் 7


----------- கடந்த வாரம் ---------
உமாமகேசுவரனார் அவர்கள், சங்கம் தொடங்கப்பெற்ற முதலாண்டிலேயே, சங்கத்திற்கென்று தனியொரு நூல் நிலையம் அமைக்குள் பணியினைத் தொடங்கினார்.
-----------------------------------

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவிற்காகச் சேகரித்து வைக்கப் பெற்றிருந்த தொகையில் இருந்து, ஒரு பகுதி செலவிடப்பெற்று 20 புத்தகங்கள் வாங்கப்பெற்றன. கரந்தைக் கவியரசு என பின்னாளில் போற்றப் பெற்ற மோகனூர் வேங்கடாசலம் பிள்ளை அவர்கள், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பதிப்பில் ஏழு புத்தகங்களை வாங்கி, கரந்தைத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கென்று வழங்கினார். கரந்தை, மளிகை வீ. சுப்பராய பிள்ளை அவர்கள் 17 புத்தகங்களையும், கும்பகோணம் மண்டல அலுவலகத்தில், தலைமை எழுத்தராகப் பணியாற்றிய ஏ.பாலகிருட்டினன் அவர்கள் 4 புத்தகங்களையும், திருச்சி டி.என். சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் 10 புத்தகங்களையும், கரந்தை லேவாதேவி பா.நா. சிவகுருநாத பிள்ளை அவர்கள் 4 புத்தகங்களையும், கரந்தை முருகேசன் அவர்கள் 6 புத்தகங்களையும், கரந்தைத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினர்.

                   எங்கள்சங்க  மெழிலுடன்  வளருமா
                   றிங்கதன்  போஷகனாக  இயைந்துளோய்
                   தங்கு  கோபாலசாமியை  முன்னிய
                   துங்க  ரகுநாதப் பெயர்கொடுதோற்றியோய்
                   எங்கள்  புத்தகசா  லையைச்
                   செங்கமரமதுகொடு  திறக்க நீவருகவே

எனக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் வரவேற்க, கரந்தைத் தமிழ்ச் சங்க ஆதரிப்பாளர்களுள் ஒருவராகிய, அரித்துவார மங்கலம், பெருவள்ளல் திருவாளர் கோபாலசாமி இரகுநாத இராசாளியார் அவர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்க நிதியில் இருந்து வாங்கப் பெற்ற இருபது புத்தகங்கள், மற்றும் அன்பளிப்பாகப் பெறப்பெற்ற நாற்பத்தி எட்டு புத்தகங்கள் என, அறுபத்தி எட்டு புத்தகங்களுடன் கூடிய, கரந்தைத் தமிழ்ச் சங்கக் கலா நிலையம் என்னும பெயருடைய நூலகத்தைத் திறந்து வைத்தார்.



     சங்கத்திற்கெனத் தனியொரு இடம் இல்லாமையால், சங்கக் கூட்டங்களும் பிறவும், கந்தப்பச் செட்டியார் சத்திரத்திலேயே நடைபெற்று வந்தன. இச் சத்திரமானது திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு வாடகைக்கு விடப்படும் பொழுது, சங்கப் பணித் தொடர்பாக யாரும் சத்திரத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதுண்டு.

    மேலும் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவானது இச்சத்திரத்தில் மிகவும் சிறப்புடன் நடைபெறும். நவராத்திரி நாட்களில் ஆளுயர பொம்மைகளைக் கொண்டு ராமர் பட்டாபிசேகக் காட்சி, வனவாசம் செல்லல், மகாபாரதக் காட்சிகள், நல்லதங்காய் குழந்தைகளை கிணற்றில் போடும் காட்சிகள் என பல காட்சிகள், காண்போரைக் கவரும் வண்ணம் மிகவும் உண்மைத் தன்மையுடன் அலங்கரித்து வைக்கப் பட்டிருக்கும், தஞ்சை மக்கள் அனைவரும், இந்நாட்களில் இச் சத்திரத்திற்கு வருகை தந்து கொலு காட்சிகளைக் கண்டு மகிழ்வர்.  
 
நூலகம் முதன் முதலில் தொடங்கப் பெற்ற உமாமகேசுவரனார் இல்லம்
     இதனால் சங்கத்திற்கு என்று வாங்கப்பெற்ற மேசை, நாற்காலிகள் மற்றும் அலமாரிகளைக் கூட தொடர்ந்து சத்திரத்தில் வைத்துப் பாதுகாக்க முடியாத நிலை. இதனால் கரந்தைத் தமிழ்ச் சங்க நூலகமானது, கரந்தை சேர்வைகாரன் தெருவில் உள்ள, உமாமகேசுவரனார் அவர்களின் இல்லத்திலேயே செயல்படத் தொடங்கியது. இரண்டாம் ஆண்டில் புத்தகங்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது. 1913-14 ஆம் ஆண்டில் வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்கள், மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் பதிப்பிக்கப்பெற்ற நூல்களில் 38 நூல்களையும், செந்தமிழ் இதழ்களின் 11 தொகுதிகளையும் விலைக்கு வாங்கி, கரந்தைத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கு வழங்கினார்.

     1915 ஆம் ஆண்டில் உமாமகேசுவரனார் அவர்களின் முயற்சியின் பயனாக, கரந்தை கோவிந்தராஜுலு நாயுடு மற்றும் சுப்பராயலு நாயுடு அகியோரின் உதவியுடன், தர்மாபுரம் உதவி ஆட்சியர் வேங்கடசாமி நாயுடு அவர்கள், கரந்தைக் கடைத் தெருவில் அமைந்திருந்த, காலஞ்சென்ற வாசுதேவ நாயக்கருக்குச் சொந்தமாகிய சத்திரத்தை, சங்கத்தின் உபயோகத்திற்காக ஆறு ஆண்டுகளுக்கு, வாடகை ஏதுமின்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கி உதவினார். இதனைத் தொடர்ந்து கரந்தைக் தமிழ்ச் சங்கக் கலா நிலையமானது, இச்சத்திரத்திற்கு மாற்றம் செய்யப்பெற்றது. புத்தகங்களின் எண்ணிக்கையும் 929 ஆக உயர்ந்தது. நூலகம் செயல்பட தனித்த இடம் கிடைத்தமையைத் தொடர்ந்து, தஞ்சையில் புத்தக சாலைகள் இல்லாத குறையினை நீக்க வேண்டி, சங்கத்தின் உறுப்பினர் அல்லாதவரும், இந்நூலகத்தில் சந்தாதாரராகி நூல்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பெற்றது.

நூலகம் இயங்கிய வாசுதேவ நாயக்கருக்குச் சொந்தமான சத்திரம்

     மேலும் இவ்வாண்டிலேயே ஒரு இலவசப் படிப்பகம் ஒன்றும் தொடங்கப் பெற்றது. சங்கத்தின் அங்கத்தினர் மட்டுமல்லாது, அனைவரும் யாதொரு சந்தாவும் செலுத்தாமல், இலவசமாகவே இப்படிப்பகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பெற்றது. இப்படிப்பகத்திற்கென, சங்கத் தலைவர் உமாமகேசுவரனார் அவர்கள் தனது சொந்த செலவில், Justice, Mysore university Magazine, Furgusson College magazine முதலிய ஆங்கில பத்திரிக்கைகளையும், தமிழர் நேசன், சித்தாந்தம், கிருஷிகன் முதலான தமிழ் இதழ்களையும் தொடர்ந்து வாங்கி வழங்கினார்.

     சங்க அன்பர் அ. கந்தசாமி பிள்ளை அவர்கள், சைபச் பிரகாசம் இதழினை வழங்கியுதவினார். மேலும் சங்கத்தின் சார்பில் ஞானசாகரம், தமிழன், நல்லாசிரியன், விவேக சிந்தாமணி, மனோரங்சனி, செந்தமிழ் மற்றும் நாளிதழ்களான சுதேசமித்திரன், திராவிடன் மற்றும் Mysore Economic Journel, Madras Mail  இதழ்களும் வாங்கப்பெற்றன.

     1925 அம் ஆண்டு சங்கத்தின் சார்பில் தமிழ்ப் பொழில் என்றும் திங்கள் இதழ் வெளிவரத் தொடங்கியதும், மாற்றிதழ்களாக, செந்தமிழ்ச் செல்வி, தமிழர், தமிழர் நேசன், செந்தமிழ், தொழிற் கல்வி, ஸ்ரீராம கிருட்டின விசயம், புதுயுகம், மாருதி, கிராமப் பஞ்சாயத்து, அரிசமய திவாகரம், கலா சிந்தாமணி, தாருஸ் இஸ்லாம்,ஆரம்ப ஆசிரியன், ஆனந்த போதினி, ஒற்றுமை, நச்சினார்க்கு இனியன், இய்தியத் தாய், வைத்தியச் சந்திரா, குடியரசு, அகிலாபானு, தேச பக்தன், யதார்த்தவசனி போன்ற இதழ்கள் படிப்பகத்திற்குத் தொடர்ந்து தருவிக்கப்பட்டன. அ.பொன்னண்ணாக் களத்தில் வென்றார் என்பார் இப்படிப்பகம் மற்றும் நூல் நிலையத்தின் மேற்பார்வையாளர் பொறுப்பினை ஏற்றுச் சிறப்பித்தார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், இலவச படிப்பிடத்தின் உபயோகத்தைக் கண்டறிந்து மதித்து, இப்படிப்பகத்தை மேம்படுத்த விரும்பிய, தஞ்சை நகர் பரிபாலன சமையினர் (நகராட்சி நிர்வாகத்தினர்) 1917 அம் ஆண்டு முதல் வருடத்திற்கு நூறு ருபாய் அளித்து உதவத் தொடங்கினர். தஞ்சாவூர் நகராட்சி நிர்வாகத்தினர், கரந்தைத் தமிழ்ச் சங்கப் படிப்பிடத்திற்கு வழங்கும் உதவித் தொகைக்கு சென்னை அரசாங்கத்தாரும் அங்கீகாரம் வழங்கினர்.

நீராருங் கடலுடுத்த...

          கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோன்றிய நாளிலிருந்தே, தமிழின் பெருமையினைத் தமிழர்க்கு உணர்த்த உமாமகேசுவரனார் கையில் எடுத்த பேராயுதம் விழாக்களாகும். திங்கள் தோறும் விழாக்கள் நடத்தி, தமிழ்ப் பெருமக்களை அழைத்து, தமிழின் பெருமையினைக் கல்லாதவர்களும் உணரும்படிச் செய்தார்.

     ஆயினும் உமாமகேசுவரனாருக்கு ஒரு மனக்குறை நெஞ்சை நெருடிக் கொண்டே இருந்தது. அக்காலத்தில் கோயில் திருவிழாக்களின் போது, கதா காலேட்சபங்கள்  நடைபெறும். மகா பாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களையும், அரிச்சந்திரன் கதையினையும், உரை நடையும், பாட்டும் கலந்த நடையில் கதா காலேட்சபமாய் விளக்குவர். விடிய விடிய மக்களும் அயராது கண் விழித்து கதை கேட்டு மகிழ்வார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை பாட்டோடு ஒன்றிய இனமல்லவா நமது தமிழினம்.

     எனவே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் விழாக்களை, தமிழின் பெருமையினைப் பறைசாற்றும், ஓர் இனிய பாட்டுடன் தொடங்கினால் என்ன? என்ற எண்ணம் உமாமகேசுவரனாரின் உள்ளத்தே உரு பெற்றது.

     உமாமகேசுவரனார் தினமும் அதிகாலையில் தூய வெண்ணீறு துதைந்த பொன் மேனியராய் தேவார, திருவாசகத்தையும், இராமலிங்க அடிகள் அருளிய திருவருட்பாவையையும், உளமுருகப் பாடிக் களிப்புறும் நல் மனத்தினர்.

     தேவாரம், திருவாசகம், திருவருட்பாவிற்கு இணையாக, உமாமகேசுவரனாரின் உள்ளத்தை உருக்கிய பாடல், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலாகும்.

          நீராருங்  கடலுடுத்த  நிலமடந்தைக்  கெழிலொழுகுஞ்
          சீராரும்  வதனமெனத்  திகழ்பரத  கண்டமிதிற்
          றக்கசிறு  பிறைநுதலுந்  தரித்தநறுந்  திலகமுமே
          தெக்கணமு  மதிற்சிறந்த   திரவிடநற்  றிருநாடும்
          அத்திலக  வாசனைபோ  லனைத்துலகு  மின்பமுற
          எத்திசையும்  புகழ்மணக்க  விருந்தபெருந்  தமிழணங்கே

..... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.