18 ஆகஸ்ட் 2025

முதல் அரசியல் நாடகக்காரர்

 

     ஆண்டு 1940, டிசம்பர் 31.

     சென்னை, ராயல் நாடக அரங்கம்.

     ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆவலுடன் மேடையைப் பார்த்தவாரே காத்திருக்கின்றனர்.

     திரை விலகுகிறது.

மயிலாசனத்தில் முருகப் பெருமான்.

     முருகப் பெருமானாக அமர்ந்திருந்தவர், பெருங்குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறார்.

     மாயா பிரபஞ்சத்திலே

     பாடலில், பாடலின் இனிமையில், கம்பீரத்தில் அரங்கே மெய்மறந்து போகிறது.

     ஒரு சில நிமிடங்களில் பாடலின் ஒலி மெல்ல மெல்லக் குறைகிறது.

     பின் ஒலியடங்கிப் போகிறது.

     முருகனாக வேடமிட்டு அமர்ந்திருந்தவரின் தலை மெல்லச் சாய்கிறது.

     உடல் மயிலாசனத்தில் இருந்து சரியத் தொடங்குகிறது.

     ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்த, அவரது தம்பி ஓடிச்சென்று, தன் அண்ணனைத் தாங்கிப் பிடிக்கிறார்.

     உடல் மட்டும்தான் இருந்தது.

     உயிர் பறந்து விட்டது.

     தான் பெரிதும் நேசித்த நாடக மேடையிலேயே, தான் பெரிதும் விரும்பிய முருகன் வேடத்திலேயே, அதுவும் முருகனின் மயிலாசனத்தில் அமர்ந்திருககும்போதே, அவர் உயிர் பிரிந்து பறந்தது.

     அடுத்த நாள் மக்கள் வெள்ளத்தில் இறுதி ஊர்வலம்.

     அதே மயிலாசனத்தில் அமர்ந்தவாறே, யானை கவுனி, சைனா பஜார், சௌகார் பேட்டை தங்கச் சாலை வழியாக இறுதி ஊர்வலம், மூலக் கொத்தளம் மயானத்தை அடைகிறது.

     சென்னை நகரப் போக்குவரத்து ஏழு மணி நேரம் ஸ்தம்பித்துப் போனது.

---

     இவர் வாழ்ந்தது 54 ஆண்டுகள்தான்.

     கலைத்துறையில் இவரது வாழ்வு 40 ஆண்டுகள்,

     40 ஆண்டுகளில், சுமார் 20 ஆண்டுகள் சிறை வாழ்க்கை.

     நாடக மேடையில் 20 ஆண்டுகள், சிறைச் சாலையில் 20 ஆண்டுகள்.

     இப்படியும் ஒரு மனிதரா?

     வியப்பாக இருக்கிறது அல்லவா?

---

     1919 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி, இவரிடம் ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார்.

     தங்களுடைய கலைத் திறமையை, நாட்டு விடுதலைக்குப் பயன்படுத்துங்கள்.

     அந்நொடியில், இவரது வாழ்வு மாறிப்போனது.

     நாடகத்தில் அரசியலைப் புகுத்துகிறார்.

     பாமர மக்களிடையே, சுதந்திர உணர்வை ஊட்டுகிறார்.

     நாடகம் பார்த்தவர்களை எல்லாம், கிளர்ந்தெழச் செய்கிறார்.

     ஆங்கில அரசோ, தடை, தடை என தடைக்கு மேல் தடையாய் விதிக்கிறது.

     தடைக்கு அடங்க மறுக்கிறார்.

     கைது செய்கிறார்கள்.

     மாலை நாடகம்.

     இரவில் கைது.

     ஓராண்டு சிறை.

     மீண்டும் நாடகம்.

     மீண்டும் கைது.

     மீண்டும் நாடகம்.

     மீண்டும் கைது.

     இதுவே இவரது நாடக வாழ்க்கையின் வாடிக்கையாகிப் போகிறது.

     அதுநாள் வரை சேர்த்து வைத்த செல்வத்தை கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கிறார்.

     ஆசை ஆசையாய் கட்டிய வீடு, ஏலத்திற்குப் போகிறது.

     ஆனாலும் அசரவில்லை.

      கைது, கைது என இவரைக் கைது செய்து, அலுத்துப்போன ஆங்கில அரசு, இவர்மேல் தேச துரோகக் குற்றம் சுமத்துகிறது.

கப்பலோட்டியத் தமிழன், செக்கிழுத்தச் செம்மல்

வ.உ.சிதம்பரனாரே

நேரில் வந்து, இவருக்காக வாதாடி, இவரை மீட்கிறார்.

ஒரு முறை இவர் இராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்டபோது,

இவரை மீட்க முன்வந்தவர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

இத்தகு பெருமகனாரை,

நாட்டின் சுதந்திரத்திற்காகத்,

தன் உடல் , பொருள், ஆவி அனைத்தையும் இழந்த இந்த

முதல் அரசியல் நாடகக்காரரை,

அவர் மறைந்த 55 ஆண்டுகள் கடந்த நிலையில், அரிதின் முயன்று, செய்திகளைத் திரட்டி, நூல் வடியில் நமக்கு வழங்கியிருக்கிறார் ஓர் ஆசிரியர்.

     முதல் அரசியல் நாடகக்காரரைப் போலவே, தான் பெரிதும் விரும்பிய, ஆசிரியப் பணியின் போது, வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே, மயங்கி விழுந்தவர்தான், மீண்டும் எழவேயில்லை.

     வியப்பாக இருக்கிறது அல்லவா?

 

 நாம் அடிமை என்று நமக்கே தெரியாத

அந் நாளில்

வேற்று நாட்டவர்

நம்மை ஆண்ட கதையை

நாடகத்தோடு பாடிப் பாடி

விடுதலை உணர்வும்

வெள்ளையர் எதிர்ப்புணர்வும்

வளர்த்த நாடகக் கலைஞன்.

 

ஆங்கில அரசை அகற்றுதல் வேண்டி

ஆவேசமிக்க பாடல் பல பாடிக்

கூடியிருந்தோரர் நெஞ்சம் குமுறப்

பாடிப் பறந்த பாட்டுக் குயில்

 

வெள்ளை அரசாங்கம்

பாடாதே என்று சொல்லும்

பாடல்களைத்தான் பாடுவான்

பாடியதற்குப் பரிசாய்

வாய்த்தது சிறை வாசமும்

அடிக்கடி அவனுக்கு

 

இருபத்து ஒன்பது முறை சிறை சென்று

பொன்னான நாடக வாய்ப்புகள் போய்ப்

பொல்லாத வறுமையில் வாடியும்

விடுதலை உணர்வு மட்டும்

விலகவில்லை அவன் நெஞ்சை விட்டு.

 

நாடக மேடை – அவனுக்குத்

தேசியம் வளர்க்கும்

திறந்தவெளிப் பாடசாலை

தேச விடுதலை – அதில் அவன் கற்பித்த பாடம்.

 

தன் வீடு ஏலம்போனாலும்

தாய் நாடு ஏலம் போக விடேனென்று

வீர முரசம் கொட்டிய வீரத் தியாகி.

 

என முதல் அரசியல் நாடகக்காரரைத் தன் ஒரே பாட்டின் மூலம், முழுவதுமாய் அறிமுகப்படுத்தி நம்மை நெகிழ வைக்கிறார்.

இவர்தான்,

கோவில்பாட்டி அரசினர் பெண்கள் மேனிலைப் பள்ளியில்,

வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றிய.


திருமிகு மு.செல்லப்பன்.

இவரது நூல்,


வீரத்தியாகி விஸ்வநாததாஸ்

     இந்நூலினை இவர் வெளியிட்ட ஆண்டு 1996.

     அதாவது, வீரத்தியாகி, முதல் அரசியல் நாடகக்காரர் மறைந்து, 56 ஆண்டுகள் கடந்த நிலையில், அம்மாபெரும் மனிதரை, நூல் வடிவில் மீண்டும் நமக்கு வழங்கினார்.

     முதல் பதிப்பு வெளிவந்து, 29 ஆண்டுகள் கடந்த நிலையில், தன் கணவர் பெரிதும் பாடுபட்டு வெளியிட்ட நூலினை, தன் சொந்த செலவில், மறுபதிப்பு செய்து வெளியிட்டு இருக்கிறார்,

ஆசிரியர் மு.செல்லப்பன் அவர்களின் வாழ்க்கை இணையர்

திருமதி சாரதா அம்மையார்.

---

கடந்த 15.8.2025 வெள்ளிக் கிழமை மாலை,

தஞ்சை மாவட்ட, மக்கள் சிந்தனைப் பேரவையின்

சார்பில்,

மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநில துணைத் தலைவர்,

தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் ஐயா

மற்றும்

மக்கள் சிந்தனைப் பேரவையின் பொதுக்குழு உறுப்பினர்

திருமிகு க.அன்பழகன் ஐயா ஆகியோரின்

முயற்சியால் நடைபெற்ற

விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சியில்

வீரத்தியாகி விஸ்வநாததாஸ்

நூல் அறிமுகம்,


மற்றும்

விடுதலைப் பேராட்டத் தஞ்சைத் தியாகி

திருமிகு டி.ஆர்.வி.நாராயணசாமி நாயுடு

அவர்களின் வாரிசு


திரு என்.சுபாஸ் அவர்களுக்குப்

பாராட்டு விழாவும் நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது,

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் ஐயா

மற்றும்

திருமிகு க.அன்பழகன் ஐயா

ஆகியோரின் அன்பினால்,

வீரத்தியாகி விஸ்வநாததாஸ்

நூலினைப் பற்றி

அறிமுக உரையாற்றும் வாய்ப்பினை நான் பெற்றது, நான் பெற்றப் பேறு.

இந்நிகழ்வில்.

வீரத்தியாகி விஸ்வநாததாஸ்

நூலின் ஆசிரியர்




திருமிக மு.செல்லப்பன் அவர்களின்

அன்பு மகள்

திருமதி செ.கவிதா அவர்களும்,

இந்நூல் கிடைப்பதற்குப் பெரிதும் உதவிய

திரு கரிகாலன்

மற்றும்

திரு கார்த்திகேயன்

ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தது இந்நிகழ்விற்குப்

பெருமை சேர்த்தது.

 

வீரத்தியாகி விஸ்வநாததாஸ்.

வாமடை வெளியீடு,

11, சந்தான முருகன் தெரு,

ஈ.பி.காலனி விரிவாக்கம்,

பைகாரா, மதுரை

அலைபேசி

880 790 6660

விலை ரூ.130