29 ஜூலை 2025

தன்னைத்தானே எழுதிக்கொண்ட கதை

 

     ஆண்டு 1852.

     அமெரிக்கா.

     அது ஒரு பதிப்பகம்.

     அன்று ஒரு புது நூல் அச்சாகி விற்பனைக்கு வந்தது.

     அச்சிடப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கை ஐயாயிரம்.

     பதிப்பகத்தாருக்கு, இப்புத்தகத்தின்மேல், பெரும் நம்பிக்கை ஏதுமில்லை.

     புத்தக அச்சாக்கச் செலவினங்களிலும், லாபத்திலும் பாதிக்குப் பாதி பதிப்பகத்திற்கு.

     நிபந்தனை விதித்தனர்.

     எழுத்தாளர் சற்றும் தயங்காமல் சம்மதித்தார்.

     புத்தகம் அச்சாகி வெளிவந்தால் போதும் என்று எண்ணினார்.

     பதிப்பகத்தாரே எதிர்பாராத அதிசயம் நிகழ்ந்தது.

     முதல் நாளே, மூவாயிரம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.

     புத்தகத்தை எடுத்துக் கொடுத்துக் கொடுத்து, அதற்குரிய தொகையினை சாரிபார்த்து வாங்கி, வாங்கி முதல் நாளே பணியாளர்கள் அசந்து போய்விட்டனர்.

     இரண்டாம் நாள் மீதமிருந்த இரண்டாயிரம் பிரதிகளும் பஞ்சாய் பறந்தன.

     புத்தகம் வேண்டும், புத்தகம் வேண்டும்.

     அமெரிக்கா முழுவதிலும் இருந்து, ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வந்து குவிந்தன.

     அவசர அவசரமாய் பத்தாயிரம் பிரதிகள் அச்சிட்டார்கள்.

     ஒரே வாரத்தில் பத்தாயிரமும் கரைந்து போனது.

     புத்தகம் வேண்டும், புத்தகம் வேண்டும்.

     ஒன்றல்ல, இரண்டல்ல, எட்டு அச்சகங்கள், அக்காலத்தில், மிகவும் நவீனமான எட்டு அச்சகங்கள், இரவு பகல் பாராது, ஓய்வு ஒழிச்சல் இன்றி, அச்சிட்டுத் தள்ளிக் கொண்டே இருந்தன.

     காகிதம் வேண்டும்.

     காகிதம் வேண்டும்.

     மூன்று காகித ஆலைகள், இப்புத்தகத்திற்காக முழுவீச்சில் செயல்பட்டு, தாள்களை மலை மலையாய் குவித்து அனுப்பிக் கொண்டே இருந்தன.

     புத்தகங்களை அச்சாக, அச்சாக விற்றுத் தீர்ந்து கொண்டே இருந்தன.

     முதலாண்டு முடிவதற்குள், மூன்று இலட்சம் பிரதிகள் அமெரிக்காவில் மட்டும் விற்றன.

     அமெரிக்காவில் படிக்கத் தெரிந்த அனைவரின் இல்லங்களிலும் இப்புத்தகம் நுழைந்தது.

     இரண்டே ஆண்டுகளில், அறுபது மொழிகளில் இந்நூல் வெளியானது.

     விரைவில் உலக மொழிகள் அனைத்திலும் அச்சாகி, உலகின் இண்டு இடுக்குகளில் எல்லாம் புகுந்து தனக்கென ஒரு தனியிடம் பிடித்தது.

     பதிப்புரைமைச் சட்டம் சர்வதேச அளவில், இயற்றப்படாத காலம் அது.

     உரிமை பெறாமலேயே, பல நாடுகளில் அவரவர் மொழிகளில் மொழிபெயர்த்து, ஏராளமாய் அச்சிட்டுப் பலப் பதிப்பகங்கள் பணம் சம்பாதித்துக் குவித்தன.

     நூலின் ஆசிரியரோ பணம் பற்றிக் கவலைப்படவே இல்லை.

     உலக மக்களைச் சென்றடைந்தால் போதும் என்று எண்ணினார்.

     இத்தனைக்கும் இது இவரது முதல் நூல்.


ஹெரியட் பீச்சர் ஸ்டோவ்

     சிறுவயதில் இருந்தே, அமெரிக்க நாட்டில் வாழும், கருப்பு இன மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் காண்ணாரக் கண்டும், காதாரக் கேட்டும் வளர்ந்தவர்.

     வெள்ளை எஜமானர்கள், கருப்பு அடிமைகளை துரத்தி, துரத்தி, நடுச் சாலைகளில் அடித்து நொறுக்கி, பிற அடிமைகளின் ஆழ் மனதில், அச்சத்தையும், பெரும் பீதியையும் ஆழமாய் விதைத்து வந்த காலம் அது.

     ஒரு தாய், தன் குழந்தையைக் கட்டாயப்படுத்தி விலைக்கு வாங்கி, அடிமைப்படுத்த வந்தவர்களிடம் இருந்து, தப்பிக்க எண்ணி, தன் குழந்தையை இறுக அணைத்தபடி, உறைந்து போய் பனி மண்டலமாய் காட்சியளித்த, நதியின் மீது, காலில் செறுப்புகூட இல்லாமல், வெறுங்காலுடன் ஓடிய செய்தியை, அறிந்த நாளில் இருந்தே, இவரது தூக்கம் தொலைந்து போனது.

     பாசமாய் வளர்த்த தன் குழந்தை, எதிர்பாராமல் இறந்து போனதால், பிரிவு என்றால் என்ன என்பதை முழுமையாய் இவர் உணர்ந்திருந்தார்.

     குழந்தைகளை அடிமைகளாய் இழந்த ஒவ்வொரு தாயும், தன்னைப் போலத்தானே துடித்திருப்பார்கள் என்று எண்ணி சிந்தனையில் ஆழ்ந்தார்.

     தெளிவு பிறந்தது.

     இதற்குமுன் இவர் ஏடெடுத்து எழுதியவர் இல்லை.

     ஆனாலும் எழுதினார்.

     இவரது உள்ளத்து உணர்வுகள் வார்த்தைகளைக் கொண்டு வந்து கொட்டின.

     உள்ளம் கிளர்ந்தெழ, கிளர்ந்தெழ, கொந்தளித்துப் பிறந்த வார்ததைகளை எல்லாம் ஏட்டில் இறக்கி வைத்தார்.

I could not control the story. It wrote itself.

கதையினை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

கதை, தன்னைத் தானே எழுதிக் கொண்டது.

     ஹேரியட் பீச்சர் ஸ்டோவ் தனது நூல் பற்றி, இப்படித்தான் கூறினார்.

இந்நூல்தான்


Uncle Dom’s Cabin

அங்கிள் டாம்ஸ் கேபின்.

ஆதிக்க நிறவெறிக்கு எதிராக,

ஒரு பெரும் போரினையே துவக்கி வைத்து, வெற்றியும் பெற்ற நூல்.

அங்கிள் டாம்ஸ் கேபின்

வாய்ப்புக் கிடைக்கும்பொழுது, படித்துத்தான் பாருங்களேன்.