சோழ நாடு.
சேர நாடு.
பாண்டிய நாடு.
தொண்டை நாடு.
கொங்கு
நாடு.
பழந்தமிழகத்தின் ஐந்து நாடுகள் இவை.
இவற்றுள் கொங்கு நாட்டினை, நான்கு பகுதிகளாகப்
பிரிக்கலாம்.
தென் கொங்கு.
வட கொங்கு.
மேல் கொங்கு.
மழக் கொங்கு.
இந்த நான்கு கொங்கு பகுதிகளுக்குள், இருபத்தி
நான்கு நாடுகள் இருந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
கொங்கு நாட்டை, கொங்கு சோழர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள்.
கொங்கு சேரர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள்.
கொங்கின் ஒரு பகுதியை, கொங்கு பாண்டியர்கள் ஆட்சி
செய்திருக்கிறார்கள்.
ஆனால் சில காலகட்டங்களில், சிலச்சில ஆண்டுகள்
ஆண்டிருக்கிறார்கள்.
கொங்கு நாட்டிற்கு என்று தனித்த மன்னர்கள் கிடையாது.
குறுநிலத் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்.
நூற்றுக் கணக்கான இனக்குழுக்கள் இருந்திருக்கின்றன.
பல குடியினர் இருந்திருக்கிறார்கள்.
இருப்பினும், கொங்கு சமுதாயம் தனித்த சமுதாயமாக,
தனித்த பண்பாடு உடையதாக, தனித்த வரலாறு உடையதாக இருந்திருக்கிறது.
கொங்கு சோழர்களில் வீர ராஜேந்திரன் மற்றும் வீர சோழன்
இருவரும்தான் கொங்கை ஆண்ட வேந்தர்களாக வருகிறார்கள்.
ஐநூறுக்கும் மேற்பட்டக் கல்வெட்டுக்களில் வீரசோழனும்,
வீர ராஜேந்திரனும் குறிப்பிடப்படுகிறார்கள்.
இவர்களுக்கு முன்பும், இவர்களுக்குப் பின்பும்
தெளிவான வரலாறு கிடைக்கப் பெறவில்லை.
இவர்களும்கூட, எப்பகுதியைத் தங்களின் தலைநகராகக்
கொண்டு ஆட்சி செய்தார்கள் என்று தெரியவில்லை.
அவிநாசி, திருமுருகன் பூண்டி என்ற பகுதியைத்
தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கொங்கு என்பது பெரும்பாலும் காட்டுப் பகுதியாகத்தான்
இருந்திருக்கிறது.
ஆடு, மாடு மேய்ப்பதற்கான இடமாகத்தான் இருந்திருக்கிறது.
அங்கு கிடைத்த மணிகளை மனிதர்கள் அனிந்து மகிழ்ந்தனர்.
மேலும் மணிகளைக் கண்டெடுக்க, பூமியைத் தோண்டத்
தொடங்கினர்.
தோண்டியபோது அவர்களுக்குக் கிடைத்தது இரும்பு.
கொங்கு நாட்டில் எங்கு தோண்டினாலும் இரும்பு,
எஃகு இரும்பு கிடைத்தது.
இரும்பு ஏற்றுமதி தொடங்கியது.
சங்க இலக்கியம் பொன் என்று குறிப்பிடுவது இரும்பைத்தான்.
அலெக்சாண்டர் இந்தியாவிற்குள் நுழைந்தபோது, அவருக்குப்
பரிசாகக் கொடுக்கப்பட்டது, இந்த கொங்குப் பொன்தான்.
இரும்பு உலை பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னரே, சங்க காலத்தில், எகிப்தில் பிரமீடு
கட்டுவதற்குத் தேவையான, இரும்பு, உளி, சுத்தியல் போன்றவை கொங்கு நாட்டில் இருந்துதான்
சென்றிருக்கிறது.
இன்றும்கூட, கண்டுபிடிக்கப்பட்ட வாழ்வியல் இடங்களில்,
அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் இருக்கும் பெருங்கற்படைச் சின்னங்களைச் சுற்றிலும் அதிக
எண்ணிக்கையிலான இரும்புக் கசடுகளைப் பார்க்கலாம்.
இரும்புக் கசடுகள் மட்டுமல்ல, தொல் பழங்கால மனிதர்கள்
வாழ்ந்ததற்கானத் தடயங்களும் கொங்கு நாட்டுப் பகுதியில் கிடைக்கின்றன.
பழங்கற்காலக் கருவிகள் கிடைக்கின்றன.
குமிட்டிபதி மலை, வேட்டைக்காரன் மலை போன்ற மலைப்
பகுதிகளில் உள்ள குகைகளில், பண்டைய மனிதக் குழுக்கள் வாழ்ந்ததற்கானத் தடயங்கள் கிடைத்திருக்கின்றன.
குகைகளில் வாழ்ந்த மனிதர்கள், தங்கள் கருத்துக்களை,
உணர்வுகளை பிறருக்குக் கடந்த, வெளிப்படுத்தப் பயன்படுத்திய முதல் மொழி ஓவிய மொழி.
இந்தக் குறை ஓவியங்கள்தான், முதன் முதலில் ஒரு
தகவல் தொடர்வை உருவாக்கின.
வேட்டையாடும் காட்சிகள், கால்நடைகளை மேய்க்கும்
காட்சிகள், காடுகளில் அன்றைய மனிதர்கள் மேற்கொண்ட தொழில்கள் குறித்த ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
யானையை அங்குசத்தைக் கொண்டு அடக்குகின்ற காட்சியும் இடம் பெற்றுள்ளது.
மனிதர்கள் மலையில் இருந்து கீழிறங்கி, வேளாண்மையைக்
கண்டுபிடித்த காலத்தில், வேட்டையாடிய விலங்குகளை, வீட்டு விலங்காக மாற்றிப் பயிற்சி
அளித்துத் தங்களது பொருளாதார வளத்தைப் பெருக்கப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
கொங்கு பகுதியில் உள்ள, ஓரிடத்தின் பெயர் வேழத் தாவளம்.
வேழம் என்றால் யானை.
தாவளம் என்றால் வணிகப்பகுதி, அதாவது சந்தை.
வேழத் தாவளம்.
யானைச்
சந்தை.
யானைகளை விற்கும் சந்தை.
தமிழகத்திலேயே, அதிக எண்ணிக்கையிலான யானைகளைப்
பிடித்து, வளர்த்து, அடக்கிப் பழக்கி, பயிற்சி அளித்து, இந்த வேழத் தாவளத்திற்குக்
கொண்டு வந்துதான், மூவேந்தர்களுக்கும் விற்பனை செய்திருக்கிறார்கள்.
அலெக்சாண்டர் பெரும்படையுடன் இந்தியாவிற்குள்
நுழைந்தபோது, அவன் பார்த்து அதிர்ந்தது, இந்த யானைப் படையைத்தான்.
குகையில் இருந்த மனிதர்கள் சம தளத்திற்கு வந்து,
வாழத் தொடங்கிய காலம், பெருங்கற்படைக் காலமாகும்.
கொங்கு நாடு மிகச்சிறந்த பண்பாட்டுத் தளமுடைய
நாடாக விளங்கியிருக்கிறது. இன்றும் கொங்குப் பண்பாடு, தமிழகத்தின் பிறபகுதிப் பண்பாடுகளில்
இருந்து வேறுபட்டு விளங்குகின்றது.
இறந்தவர்களை அடக்கம் செய்யும் முதுமக்கள் தாழிகள், கொங்கு நாட்டில் பரவலாகக்
கிடைக்கின்றன.
அத்தகைய தாழிகளைப் புதைத்த இடங்களான மாண்டவர் குழிகள், இன்று பேச்சு வாக்கில்
திரிந்து, பாண்டவர் குழிகள் என்னும் பாண்டியர் குழிகள் என்றும் அழைக்கப்பட்டு
வருகின்றன.
பேரூருக்கு அருகில் இன்றும் பாண்டவர் குழிகள்
இருக்கின்றன.
மேல்பாகத்தில் பலகை கற்களால் மூடப்பட்ட மூன்று அறைகளுடன் இருக்கின்றன.
பலகைக்கல் ஒவ்வொன்றும் மூன்று அடி அகலமும், மூன்று
அங்குல கனமும் உடையது.
அவ்வறைகளுக்கும் கீழே மூன்று மண் தாழிகள்.
இது கோவை கிழார் பாண்டவர் குழி என்று அழைக்கப்படுகிறது.
மேட்டுப் பாளையம் அருகில் நூறு கல்லறைகள் கிடைத்துள்ளன.
மனிதப் பண்பாட்டில் குறிப்பிடத்தக்க பண்பாட்டுக்
கூறு வழிபாடாகும்.
வழிபாட்டின் தொன்மை வடிவம் நடுகல் வழிபாடு.
நடுகல்லைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்று உரைக்கிறது
புறநானூறு.
கொங்கு நாட்டில், மயிலாபுரிப் பட்டணத்திற்கு
அருகில், அந்தியூருக்குக் கிழக்கில் உள்ள ஊஞ்ச வனத்தில், சங்ககால நடுகல் கோயிலைக் காணலம்.
தாளவாடிக்கு மேற்கில், சிகக்கள்ளியில், சங்ககால,
இடைச்சங்க கால, பிற்கால நடுகற்கள் ஓரே இடத்தில் காணப்படுகின்றன.
பாகூர் மலையில் நூற்றுக்கணக்கான நடுகற்கள் உள்ளன.
நடுகற்களுக்கு அடுத்த நிலையில், எழுத்துக்கள்
என்று எடுத்துக் கொண்டால், முதலாவது குகை ஓவிய வடிவங்கள்தான் என்பதை முதலிலேயே பார்த்தோம்.
இதன் அடுத்த கட்டம் சித்திர வடிவ எழுத்து.
விலங்கு உருவம் பொறிக்கப்பட்டிருக்கும், அந்த
உருவத்தின்மீது, சில குறியீடுகள் இருக்கும்.
அடுத்ததாக ஓவியத்திற்குப் பதில் ஒரு குறியீடு.
இதன் அடிப்படையில், கொங்கு நாட்டின் வேட்டைக்காரன்
மலையில், குமிட்டி மலையில், பொன்பரப்பி மலையில் ஏராளமான குறியீடுகள் கிடைக்கின்றன.
இந்தக் குறியீடுகள்தான், தொல் தமிழ் பிராமி எழுத்தாக
மாறுகிறது.
இதனைக் கோட்டு எழுத்து என்றும் கூறுவார்கள்.
ஒரு படுக்கைக் கோடு, ஒரு குத்துக் கோடு.
இரண்டே கோடுகள்தான்.
குத்துக்கோட்டிற்கு அடுத்தது சாய்வெழுத்துக்
காலமாகும்.
நீதி இலக்கியங்கள் தோன்றிய காலமும் இதுதான்.
சாய்வெழுத்தில் இருந்து உருவானதுதான் வட்டெழுத்து.
வட்டெழுத்து காலம் பக்தி இலக்கியங்கள் தோன்றிய
காலமாகும்.
கொடுமணல் அகழாய்வில் ஏராளமான எழுத்துககள் கிடைத்துள்ளன.
அதிக எண்ணிக்கையிலான வட்டெழுத்துக்கள் கிடைத்தப்
பகுதியாக கொங்கு இருப்பதால், கொங்கு நாடானது கல்வியிலும், எழுத்தறிவிலும், படிப்பறிவிலும்
சிறந்து விளங்கி இருக்கிறது என்பதை அறியலாம்.
இங்கு ஓட்டில் கிடைத்த எழுத்தும், தாய்லாந்தில்
கிடைத்த, தங்கம் உரசிப் பார்க்கும் கல்லில் இருந்த எழுத்தும் ஒன்றாக இருக்கிறது.
எனவே, தங்கள் வணிகம் செய்பவர்கள், கொங்கில் இருந்து,
தாய்லாந்து சென்றிருக்கிறார்கள் என்பதை உணரலாம்.
அடுத்ததாக கல்வெட்டுகள்.
உலகத்திலேயே மிகவும் பழமையான இசைக் கல்வெட்டு
இருப்பது கொங்கு நாட்டில்தான்.
அறச்சலூர்.
அறச்சலூர்
இசைக் கல்வெட்டு.
ஐந்து எழுத்துக்கள் ஐந்து வரிசையில் உள்ளன.
இவை இடமிருந்து வலம், வலமிருந்து இடம், மேலிருந்து
கீழ், கீழிருந்து மேல் என எப்படிப் படித்தாலும் ஓரிசையாக வரும் கல்வெட்டாகும்.
தொடர்ந்து புகளூர் கல்வெட்டு.
தாஅமணன் யாற்றூர் செங்காயபன் உறைய கோ ஆதன்
செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ
மகன்
இளங்கடுங்கோ இளங்கோ ஆக அறுத்த கல்
கோ ஆதன் செல்லிரும்பொறை.
இவரது மகன்
பெருங்கடுங்கோ
இவரது மகன்
இளங்கடுங்கோ
என்று
மூன்று தலைமுறைகளைக் குறிப்பிடுகிறது இந்தப் புகளூர் கல்வெட்டு.
தனித்த சமுதாயம்.
தனித்த பண்பாடு.
தனித்த வரலாறு.
இதுதான் கொங்கு.
---
ஏடகம்
ஞாயிறு முற்றம்.
கடந்த
13.7.2025 ஞாயிற்றுக் கிழமை மாலை,
ஏடக
அரங்கில்
திருவாரூர்,
மத்தியப் பல்கலைக் கழக,
சமூக
அறிவியல் மற்றும் மொழிப் புலத் தலைவர்
சங்ககாலத்தில் கொங்கு
நாடு
என்னும்
தலைப்பில் உரையாற்றினார்.
தஞ்சை
மாவட்ட, வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலாளர்
தலைமையில்
நடைபெற்ற,
இப்பொழிவிற்கு வந்திருந்தோரை
ஏடகம்,
சுவடியியல் மாணவர்
வரவேற்றார்.
பொழிவின்
நிறைவில்
தஞ்சாவூர்,
தமிழ்ப் பல்கலைக் கழக,
அரிய
கையெழுத்துத் துறை,
முனைவர்
பட்ட ஆய்வாளர்
நன்றி
கூறினார்.
தஞ்சாவூர்,
பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
தமிழ்த்
துறை, உதவிப் பேராசிரியர்
விழா
நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.
சோழநாட்டு
ஏடக அரங்கில்
கொங்கு நாட்டுப் பெருமைகளைத்
தவழவிட்ட
ஏடக நிறுவனர், தலைவர்
போற்றுவோம், வாழ்த்துவோம்.