சுமார் பதினான்கு வருடங்களுக்குமுன், இவர்தான்,
என்னை ஒரு வலைப்பூ தொடங்க அறிவுறுத்தினார்.
நானும் என் பெயரிலேயே ஒரு வலைப்பூவைத் தொடங்கினேன்.
Karanthaijayakumar.blogspot.com
இவ்வலைப்பூவின் மூலம், 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் நாள், இணைய உலகில், வலதுகாலை எடுத்து வைத்து நுழைந்தேன்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மாணவராய் படித்ததோடு, முப்பதாண்டுகள் ஆசிரியராய் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்ததால், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஒப்பிலா முதற்றலைவர் தமிழவேள் உமாமகேசுவரனாரை வணங்கி, என் வலைப்பூ பயணத்தைத் தொடங்கினேன்.
உமாமகேசனே
தமிழ் முனியே
என் இறையே
முதல் வணக்கம்.
உனை எழுதும்
பித்தன் எனக்கு
சொல்லெடுத்துத் தருவாய்
தனித்தமிழ் அருள்வாய்.
அன்று தொடங்கிய பயணம், இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
வலைப்
பூ தொடங்க அறிவுறுத்தியவர், ஊக்கப்படுத்தியவர்
அயோத்திதாசன் ஆதவன் விருதாளர்
பௌத்த ஆய்வாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம்
அவர்கள்.
---
வலைப்பூ தொடங்கிய புதிதில், மாதத்திற்கு ஒரு
பதிவு என எழுதத் தொடங்கினேன்.
ஒருசில மாதங்களிலேயே, என்னிடம் இருந்த சரக்கு
தீர்ந்துவிட்டது.
எதை எழுதுவது என்று புரியவில்லை.
இந்த நிலையில்தான், இந்தக் கவிஞரை, தினம் தினம்
அயராது எழுதிக் குவிக்கும் இந்த எழுத்தாளரைச் சந்தித்தேன்.
பார்த்ததை
எல்லாம் எழுதுங்கள்.
படித்ததை எல்லாம் எழுதுங்கள்
என
எழுத்துலகில் நான் தொடர வழிகாட்டினார். அன்று அவர் காட்டிய வழியில்தான் இன்றும் பயணித்துக்
கொண்டிருக்கிறேன்.
இவர்தான்,
எழுத்தாளர், கவிஞர் ஹரணி.
---
அண்ணாலைப் பல்கலைக் கழகத்தில், தமிழ்த் துறைப்
பேராசிரியராகப் பணியாற்றி பணி நிறைவு செய்திருக்கும், முனைவர் க.அன்பழகன் என்னும் ஹரணி
அவர்கள் 65 க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.
இவர் எழுதிய பல நூல்கள், பல பல்கலைக் கழகங்களில்
பாட நூல்களாக இருக்கின்றன.
உறவுகளின் உன்னதத்தை, நட்பின் மேன்மையை, படிப்போர்
மனம் நெகிழும்படி எழுத்தாக்கி, நூலாக்குவதில் வித்தகர்.
இவர் கே.ஜி.பப்ளிகேஷன்ஸ்
என்னும் ஒரு பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார்.
ஹரணி அவர்கள் என் மீதும், என் எழுத்தின்மீதும்
பெரும் பாசம் கொண்டவர்.
எனவே, வலைப்பூவில் நான் எழுதிய பயணக் கட்டுரைகளுள்
24 கட்டுரைகளைத் தொகுத்து, தனது பதிப்பகத்தின் மூலம், நூலாக வெளியிட முன்வந்தார்.
ஓடுகளால் ஒரு மேடு
தலைப்பினையும் அவரே தேர்ந்தெடுத்தார்.
இருப்பினும், புத்தக அச்சாக்கத்திற்கு முன்,
என்னிடம் ஒரு நிபந்தனையினையும் விதித்தார்.
---
ஓடுகளால் ஒரு மேடு என்னும் பெயரில், ஹரணி அவர்களின்
பதிப்பகத்தின் மூலம், எனது நூல் ஒன்று அச்சாகி வருவதை அறிந்த என் அத்தான், அரசு இலக்கிய முற்றத்தின் நிறுவனர், தலைவர்,
சிங்கப்பூர் மேனாள் விரிவுரையாளர், தமிழ்ப்பரிதி,
கவிஞர் ப.திருநாவுக்கரசு அவர்கள், தனது அரசு இலக்கிய முற்றத்தின் மூலம், எனது நூலின்
வெளியீட்டு விழாவினை நடத்த முன்வந்தார்.
இவரும் ஒரு நிபந்தனை விதித்தார்.
---
ஹரணி
அவர்கள் ஒரு நிபந்தனை விதித்தார்.
என்
அத்தான் அவர்களும் ஒரு நிபந்தனை விதித்தார்.
இருவர்
நிபந்தனைகளும் ஒன்றுதான்.
நிபந்தனை
என்ன தெரியுமா?
நான்
என் பையில் இருந்து, ஒரு பத்து பைசா கூட செலவு செய்யக் கூடாது.
இதுதான்
நிபந்தனை.
---
கவிஞர்
ஹரணி அவர்களின்
தேன்சிட்டுக் கூடு
என்னும்
சிறுவர் பாடல்கள் நூலினையும்
எனது
ஓடுகளால் ஒரு மேடு
நூலினையும்.
அரசு இலக்கிய முற்றத்தின்
சார்பில்
5.7.2025
சனிக்கிழமை காலை
வெளியிடுவது
என்று முடிவு செய்தோம்.
வெளியீட்டு விழா நடத்த அரங்க தேவை அல்லவா?
தஞ்சாவூர், ஜவுளி செட்டித் தெருவில் அமைந்திருக்கும்,
அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கக் கட்டடத்தில்
நடத்துவது என்று தீர்மானித்தோம்.
அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கக் கட்டடத்தை
நிருவகித்து வருபவரும், அச்சங்கத்தில் முக்கியமானப் பொறுப்பில் இருப்பவருமாகிய, தொழிற்
சங்கவாதி திரு க.அன்பழகன் அவர்களை அலைபேசி
வழி தொடர்புகொண்டு கேட்டபோது, ஒரு நொடிகூடத் தயங்காமல், தாராளமாய் நடத்துங்கள் என அனுமதி
அளித்தார்.
மகிழ்ந்து போனேன்.
இவர், வங்கி ஊழியர்கள் சங்கக் கட்டடத்திற்கு வண்ணம்
பூசுவது, மின் கட்டணம் செலுத்துவது, பராமரிப்புச் செலவுகள் என, அனைத்தையும், தன் சொந்த
வருவாயில் இருந்து செய்து வருபவர்.
நூறு பேர் அமரக்கூடிய விழா அரங்கு.
இருக்கைகள்.
ஒலி பெருக்கிச் சாதனங்கள் என அனைத்து வசதிகளையும்
உடைய அரங்கு.
ஆனால், அரங்க வாடகை என்று ஒரு சிறு தொகையினைக் கூட வாங்க மறுத்து வருகிறார்.
வாடகை பற்றிப் பேசவே கூடாது என்கிறார்.
கடந்தமுறை, கவிஞர் ஹரணி அவர்களின், சிறுவர் கதைகளான, விலங்குப் பூங்கா நூல்கள் வெளியீட்டு விழாவிற்கும் இதே அரங்கைக் கொடுத்தார்.
தஞ்சையின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒருவராய்
திகழும், காந்தியவாதி, பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம்
ஐயா அவர்களிடம் பேசியபோது, திரு க.அன்பழகன்
அவர்களிடம் கட்டட வாடகை எவ்வளவு என்று தயவு செய்து கேட்டுவிடாதீர்கள், மிகவும் வருத்தப்படுவார்
என்று கூறி, வியப்பில் ஆழ்த்தினார்.
நினைத்துப் பார்க்கிறேன்.
புத்தக அச்சாக்கச் செலவு இல்லை.
புத்தக வெளியீட்டு விழா செலவும் இல்லை.
அரங்க வாடகையோ, இல்லவே இல்லை.
யாருக்குக் கிடைக்கும் இப்படி ஒரு கொடுப்பினை.
எனக்குக் கிடைத்தது.
இவர்களுக்கு எல்லாம், எப்படி நன்றி சொல்வேன்,
என்ன கைமாறு செய்வேன் என்பதுதான் துளியும் புரியவில்லை.
---
கடந்த 5.7.2025 சனிக்கிழமை காலை, தஞ்சாவூர்,
ஜவுளி செட்டித் தெரு, அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கக் கட்டடத்தில், அரசு இலக்கிய
முற்றத்தின் சார்பில், நூல்கள் வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற்றது.
கரந்தைத்
தமிழ்ச் சங்கச் செயலாளர்
கலை
பண்பாட்டுத் துறையின் மேனாள் இணை இயக்குநர்
முன்னிலையில்,
தமிழ்ப்
பல்கலைக் கழகத்தின், இலக்கியத் துறை மேனாள் தலைவர்
விழா
தலைமையேற்று, இரு நூல்களையும் வெளியிட்டுத்
தலைமை
உரை ஆற்றினார்.
திருவையாறு
அரசர் கல்லூரியின் மேனாள் முதல்வர்
தேன்சிட்டுக் கூடு
நூலினையும்,
களப்பணியாளர்,
சமூகச் செயற்பாட்டாளர்
ஓடுகளால் ஒரு மேடு
நூலினையும்
பெற்றுக்
கொண்டு நூல் அறிமுக உரையாற்றினர்.
உமாமகேசுவர
மேனிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்
நன்றிகூற
விழா இனிது நிறைவுற்றது.
முன்னதாக,
அரசு
இலக்கிய முற்றத்தின் நிறுவனர், தலைவர்
விழா
ஏற்பாடுகளை முன்னின்று செய்து
விழாவிற்கு
வந்திருந்தோரை வரவேற்றார்.
கரந்தைத்
தமிழ்ச் சங்க, நிறைவேற்றுக் கழக உறுப்பினர்
விழா
நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.
தஞ்சைத் தமிழறிஞர்கள், தமிழன்பர்கள், எழுத்தாளர்கள்,
கவிஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் வருகையால் விழா அரங்கு நிரம்பித் ததும்பியது.
தங்களின் பல்வேறு அலுவல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு,
நிகழ்விற்கு வருகை தந்து, காலம் கடந்து விழா நீண்டதைத் துளியும் பொருட்படுத்தாது, மனச்
சோர்வின்றி, மகிழ்வோடு கலந்து கொண்டு சிறப்பித்த இப்பெருமக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள்
இன்றித் தவிக்கின்றேன்.
இந்த எளியேன் மீது இத்துணை அன்பா என நெகிழ்கின்றேன்.
அனைவருக்கும்,
என் இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து
நன்றி கூறுகின்றேன்.
நன்றி நன்றி நன்றி.
என்றும் வேண்டும் இந்த அன்பு.